8. இந்திரனின் காதலி

0
880
Indranin Kadhali

அத்தியாயம் 8

திருமணம் நிகழும் முன் எல்லாமே ராசு ஏற்பாடு செய்திருக்க ஊருக்கு ஒதுக்கமான அந்தக் கோயிலில் திருமணம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ராசுவோடு நெடு நாட்களாய் பழக்கத்தில் இருந்த வசந்தி எப்படியோ விபரம் தெரிந்து, ராசு எழிலுக்குத் தாலிக்கட்டும் முன் வந்து ஒருப்பாட்டம் ஆடி விட்டாள். அவள் செய்த ஆர்ப்பாட்டத்தில், அழைத்து வந்திருந்த மகளிர் போலீஸ் உதவியில் ராசுவின் திருமணம் நின்று விட்டிருந்தது.

முன் தினம் இரவு தன் அலுவலக லீவில் ஊருக்கு வந்திருந்த இந்திரன், அதிகாலையே குளித்து, புறப்பட்டு அவனுக்குப் பிடித்த அந்தக் கோவிலுக்கு ஏதேச்சையாக அன்று காலை சென்றிருக்க, திரும்ப வருகையில் எழிலின் மணவாளனாகத் திரும்பி இருந்தான். நன்றி உணர்வை பிரதிபலித்த எழிலின் தகப்பனார் முகத்தை அவன் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. எழிலை சிறுவயது முதலே அறிவான் என்பதால் அவளைத் திருமணம் செய்தது எல்லாம் என்னவோ பெரிய தியாகம் எனும் விதத்தில் வராது என்பது அவன் கருத்து.

இந்திரனின் ஏற்பாடு படி, ஊர்ப் பெரியவர் ஒருவர் ஆலம் கரைத்து தம்பதியரை வீட்டிற்குள் அவன் வீட்டிற்குள் அழைத்துக் கொண்டார். அவன் வீடு மாடியில்லாத ஒற்றை வீடு தான் ஆனால் முன் அறை, சமையலறை, அரங்கு அறை ( பாத்திர பண்டங்கள், அலமாரி வைக்கும் அறை), பின்னறை என்று கட்டப்பட்ட அழகான வீடு. அவனது தாயார் ஆசிரியராக இருந்தவர், தகப்பனார் அரசு அலுவலில் இருந்தவர். அதனால், தேவையான அத்தனை பொருட்களும் அவ்வீட்டில் இருந்தன. அதிகப் பொருட்கள் இல்லாவிட்டாலும் கூட நறுவிசாகப் புழங்கப்பட்ட வீடு அவர்களுடையது.

சில வருடங்களுக்கு முன்பாகத் தன் பெற்றோரை விஷக் காய்ச்சலுக்குப் பறிகொடுத்த பின்னர்த் தான் முழுமூச்சாக வெளியூரில் படிப்பு, வேலை என இருந்தாலும் அவ்வப்போது வந்து கவனித்துக் கொள்வான். தனக்கு நெருக்கமான பெரியவர் ஒருவரிடம் வீட்டின் மற்றொரு சாவியைக் கொடுத்து வைத்திருந்தான். அவர் எப்போதாவது அவன் வந்து செல்கையில் ஆள் வைத்து வீட்டை சுத்த படுத்துவது அவனைப் பொருத்த வரையில் வழமையான ஒன்றே.

இப்போதோ வீடு அலங்கார மின்விளக்குகளால் ஜெக ஜோதியாய் மின்னிக் கொண்டிருந்தது. ஊர் மக்கள் ஒவ்வொருவராக அந்த வீட்டின் முன் வளாகத்தில் வந்து அமர ஆரம்பித்தனர். ஸ்பீக்கரில் உற்சாகமாகப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. தான் வருவித்த சேலையையும் ரெடிமேடு ஜாக்கெட்டையும் மனைவியிடம் கொடுத்தவன் அதை அணியச் சொன்னான். தானும் புதுப் பேண்ட் ஷர்டுக்கு மாறினான். இருவரும் சாமி அறைக்குள் சென்று சாமி படங்களோடு இருந்த அவனது பெற்றோர்கள் படத்தையும் வணங்கி வந்தனர்.

ஊர்க்காரர்களும்,உறவினர்களும் வந்து ஒவ்வொன்றாய் பொறுப்பேற்றுக் கொள்ள, அந்தப் புதுமணத் தம்பதியரின் இரவு உணவோடு சேர்ந்த ரிசப்ஷன் விழா களைக்கட்டியது. ஏதோ அவசரத்தில் நிகழ்ந்த திருமணம் போல இல்லாமல் மிக விமரிசையாக அந்த விழா அமைந்து இருந்தது.அதைப் பார்த்ததில் இளம்பரிதி மனம் நிறைந்துப் போய் அமர்ந்திருந்தார்.

வைரக்கல்லான தன் மகளை அதற்கேற்ப கிரீடத்தில் அலங்கரித்த நிறைவில் இருந்தார். ஒருவருக்கொருவர் இணைவாய் இளமையான அந்தத் தம்பதிகள் மனதை நிறைத்தனர்.

குமுதா செஞ்ச நினைச்ச அக்கிரமத்தை கடவுளாலேயே பொறுத்துக்க முடியலை. இந்தப் பிள்ளையைக் காப்பாத்திட்டாரே.

என ஒவ்வொருவரும் பேசிச் செல்ல தன்னைப் பலரும் செருப்பால் அடித்தது போல உணர்ந்தாள் குமுதா. ஒதுங்கியே நின்றிருந்தாள்.

அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தன் வீட்டிலும் வந்து மனைவியை அதிகாரம் செய்து விடுவாள் என எண்ணி தன் மாமியாரை இந்திரன் அவ்வளவாய் கண்டு கொள்ளவில்லை.

இரவு தங்கள் அறைக்குச் சென்றனர் தம்பதியர், அழகான படுக்கையறை.சுத்தமாய் இருந்தது.

என் அம்மா, அப்பா அறை இது அஞ்சும்மா…

சற்று உணர்ச்சிவசப் பட்டு இருந்தான் இந்திரன். ஆறுதலாக அவன் கையைப் பற்றி இருந்தாள் எழில். இவ்வளவு நேரம் அவனோடு அருகில் நின்றதில், அவன் காட்டிய நெருக்கத்தில், புன்னகையில் பல காலமாய்ச் சேர்ந்து வாழ்ந்த நிறைவு அவள் உள்ளத்தில் வந்திருந்தது.

மனைவியின் கைப்பற்றுதலில் தெளிந்தவன்,

‘இந்த லீவில் நான் வெட்டு வெட்டுன்னு இந்த வீட்டில இருக்க வேண்டாம் இல்ல, அதான் என் கூட என் பொண்டாட்டியும் இருக்காளே. இன்னிக்கு நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கேன். எல்லாம் உன்னாலத்தான்’

என்றவாறு அவள் கையை உயர்த்தி முத்தமிட்டான். அவள் கன்னங்களை இரண்டையும் மெதுவாய் தன் இரு கரங்களாலும் கிள்ளியவன் ஆட்டினான். அவள் கிளுக்கெனச் சிரித்தாள்.

சிறுவயதிலிருந்தே இப்படித்தான் அவன் அவளுடன் விளையாடுவான். அவளுக்கு அது ஞாபகம் வந்து விட்டது.

‘உன் ரெண்டுக் கன்னமும் பஞ்சு போல இருக்கு என் பொண்டாட்டி’…

கொஞ்சினான். பலவருடங்களாக வீட்டில் வேண்டாத பொருளாகவே பார்க்கப் பட்டவள் அவன் கொஞ்சலில் மிகவும் மகிழ்ந்தாள்.

‘சாப்பிட்டல்ல, வா தூங்கலாம்…ரொம்பக் களைப்பா இருக்கு’,

என்று சொன்னவனைத் தடுத்து அம்மா கொடுத்து விட்டிருந்த பாலைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

அவளை அமரச் சொல்லி ஒரு கிளாஸில் பாதிப் பாலை குடிக்கக் கொடுத்தவன் மீதியை தான் குடித்தான். அவளைத் தன் அருகில் படுக்கச் சொல்லி விட்டுக் கண்ணயர்ந்தான்.

பல நாட்களாய் கவலையில் தூக்கம் இழந்து இருந்தவளும் அவனருகில் இயல்பாய் கண் தூங்கினாள்.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here