9. இந்திரனின் காதலி

0
875
Indranin Kadhali

அத்தியாயம் 9

நாட்கள் சில கலகலப்பாய் கடந்தன, தம்பதியராய் இருவரும் அருகாமையிலிருந்த உறவினர்கள் வீட்டிற்குச் சென்று வந்தனர். விருந்துகள் ஒவ்வொன்றாய் நிறைவுப் பெற்றன. இந்திரனின் லீவுகள் இன்னும் சில நாட்களே மீதமிருந்தன.

எழிலுக்குத் தன் கணவன் தன்னிடம் மனைவி எனும் உரிமை எடுத்துக் கொள்வதில்லையே? எனும் நெருடல் இருந்தது. தன்னோடு நாக்பூருக்கு அழைத்துச் செல்வதாகவும் அவன் சொல்லவில்லை. அவன் சென்ற பின்னர் என்ன செய்வது? மனதிற்குள் ஏராளமான குழப்பங்கள். ஆனால், எதையும் வெளிப்படையாக அவள் அவனிடம் கேடகவும் தயங்கினாள்.

அன்றுதான் சொந்த பந்தங்கள், உறவுகள் அன்புத் தொல்லைகள் தீர்ந்து, இருவருக்குமாய் செலவிட சிறிது நேரம் கிடைத்தது. அதனால் அவ்வூரின் ஆற்றங்கரைக்குச் சென்று, சிலுசிலுவெனும் காற்றில் சற்று நேரம் அமர்ந்து திரும்பி இருந்தனர். மனைவி முகத்தில் சில நாட்களாக இருக்கும் குழப்பத்தை அறிந்திருந்தவன் வீட்டிற்கு வந்ததும் உரையாட ஆரம்பித்தான்.

அஞ்சும்மா…

அத்தான்…சிணுங்கினாள் அவள்…

அவன் எதற்காக அவளை அஞ்ச்சும்மா என்று அழைக்கிறான் என்பது அவளுக்குத் தெரியும் என்பதாலேயே அந்தச் சிணுங்கல்.

இந்திரனின் அம்மா சரஸ்வதிக்கு பெண்குழந்தை இல்லாததால் எப்போதும் பக்கத்து வீட்டிலிருக்கும் எழிலை தூக்கிக் கொண்டு வந்து விடுவார். அவளும் சிறுவயதிலேயே மிகவும் சூட்டிகையாக இருப்பாள். 3 வயது இருக்கும் போது ஒரு முறை யாரோ நீ என்ன படிக்கிற பாப்பா? எனக் கேட்க, நான் அஞ்சாப்புப் படிக்கிறேன் என்பாள். பின் யார் கேட்டாலும் அதே பதில் தான். அதிலிருந்து தான் ‘அஞ்சாப்பு அஞ்சும்மா’ என்று இந்திரன் அவளை அழைப்பது.

இப்போதும் அவனது அந்த அழைப்பு நீடிக்க அவள் வெகுவாகக் கூச்சப் பட்டாள்.

சரி சரி என்ன ரெண்டு மூணு நாளா மூஞ்சு ஒருமாதிரி இருக்கு…

ஒன்னுமில்லையே திக்கினாள்.

சரி கொஞ்சம் கிட்ட வந்து உட்காரு , அழைத்தவன் அருகில் வந்து அமர்ந்தாள். இரவும் நெருங்கிக் கொண்டிருந்தது, ஈரக் காற்றின் குளுமை உடலை வருடி இனிமை சேர்த்துக் கொண்டிருந்தது. அவர்கள் தங்கள் வீட்டின் பின் வாசலில் அமர்ந்திருந்தனர். உயர்ந்த சுற்றுச் சுவர் தாண்டி பார்வை வான் பரப்பை நோக்கிக் கொண்டு இருக்க முழுநிலவும் கூட அவர்களோடு உரையாட காத்திருந்தது. தன் தண்ணொளியால் அவர்கள் கண்களுக்குக் குளுமை சேர்த்துக் கொண்டிருந்தது.

இத்தனை நாட்கள் கணவனோடு கழிந்ததைப் போல இனிமையான நாட்களை அவள் வெகுநாளாய் கழித்ததில்லை. இத்தனை நிம்மதியான தூக்கம் அவன் தந்ததே. கணவன் திரும்பப் பணிக்குச் சென்ற பின்னர் மறுபடியும் வசவும், அடிகளும், மட்டம் தட்டும் பேச்சுக்களும், தன் மேல் ஏற்பட்ட கழிவிரக்கமுமாய்க் கழிக்க நேர்ந்து விடுமோவென அவள் உள்ளுக்குள் பயந்தாள்.

என்னை நீங்க அங்கே உங்க கூடக் கூட்டிட்டு போக மாட்டீங்களா? ஏக்கமாய் ஒலித்தது அவளது குரல்.

அவள் உள்ளங்கைப் பற்றித் தன் விரல்களைக் கோர்த்து இணைத்துக் கொண்டான். இதமான சூடு பரவியது அவள் கையில்… ஏன் அவள் மனதிலும் கூட.

சற்று நெருங்கி அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள். ஆசுவாசமாக உணர்ந்தாள், பிரிவை எண்ணிய போதே அவள் கண்கள் கரித்தன.

சட் சட்டென மழையாய் தன் சட்டையை நனைத்த அவள் விழி நீர் அவனை ஏனோ அமிலமாய்ச் சுட்டெரித்தது. அவனும் கலங்கிப் போனான், செய்வதறியாது திகைத்தான்.

அவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். அவன் அவளது தலையைக் கோதிக் கொண்டிருக்க, கட்டுப் படுத்த முடியாமல் அவளிடமிருந்து விம்மல் தெரித்தது. பலியாட்டைப் போலத் திருமணத்திற்கு நின்றவள் கடைசி நிமிடம் தப்புவித்து அவனைத் திருமணம் செய்து கொண்டிருந்த போது கூட, அழுது அவன் பார்க்கவில்லை. இப்போது கண்ணீரோடு தன்னைத் தஞ்சம் அடைந்திருந்தவளைப் பார்க்கின்ற பொழுது தான் அவள் எதிர்கொள்ளப் போகும் தன்னுடைய பிரிவு அவளை எவ்வளவு பாதித்திருக்கின்றது எனப் புரிந்து கொண்டான்.

[center]உன் இதழ்கள் சொல்லாவிடில் என்ன?[/center]

[center]உந்தன் கண்கள் சொல்லி விட்டன[/center]

[center]எனக்கான உன் நேசத்தை[/center]

[center]கண்மணியே![/center]

எதுக்குடா இந்த அழுகை?

சேலை தலைப்பை எடுத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டவள் அவசரமாய்த் தலையை இல்லையென அசைத்தாள். கூச்சத்தில் தலை நிமிரவும் இல்லை. அவளுக்கே தான் இத்தனை அதிகமாய் அழுததன் காரணம் தெரியாத போது அவள் அவனிடம் என்ன சொல்லுவாள்? இத்தனை நாட்கள் இருந்த உள்ளத்தின் அழுத்தங்கள் அவனோடு கழித்த இத்தனை நாட்கள் காரணமாய் நெகிழ்ந்துப் போய் வெளிப்பட்டன என்றா சொல்ல முடியும்?

மறுபடி தன் மௌனத்திற்குள் ஆழ்ந்தவளை கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தான் இந்திரன்.

முகத்தை நிமிர்த்தினான்…ஆனால் அவள் கண்கள் இவனைப் பார்ப்பதாயில்லை கவிழ்ந்திருந்த இமைகள் மேல் அவனுக்குக் கொஞ்சம் கோபமும், கொஞ்சம் சிரிப்பும் வந்து தொலைத்தது.

ஏ பொண்டாட்டி…

அவள் பக்கம் திரும்பி அவளது இரு கன்னங்களையும் தாங்கின அவனது கரங்கள்.

என் மேல கோபமா? இல்லையென அசைந்தது அவள் தலை.

‘பின்னே எதுக்கு இப்படி இருக்க? கேள்வி கேட்டவ பதில் கேட்க ரெடியில்லையா?

சொல்லட்டுமா?

அவளது நாசி விடைத்தது…உதடுகள் நடுங்கின. அதான் எனக்குத் தெரியுமே…, நீங்க என்னை உங்க கூடக் கூப்பிட்டு போக மாட்டீங்கன்னு சடாரெனக் கண்ணீர் கோடாய் இறங்கியது.

ஏண்டி அழற? கஷ்டமா இருக்குல்ல… மறுபடி முந்தானையை எடுத்து முகம் துடைக்க முயன்றவளை அதட்டினான்.

போய் நல்லா முகம் கழுவிட்டு வா…ஓடு

சற்று நேரத்தில் தன் அருகில் அமர்ந்தவளை கிட்டே இழுத்தான், அவளோ நகருவேனா என்பது போல் இருந்தாள்.

இங்க பாரு எழில்…

சற்று முன்பு அவன் தன்னை அஞ்சுமா என அழைத்ததும் தான் விரும்பாததாய் காட்டியதை மறந்து, இப்போது தன் கணவன் தன்னை அஞ்சும்மாவெனக் கூப்பிடவில்லை எனக் கோபம் துளிர்த்தது.

முறைத்தவளை கண்டு கொள்ளாமல் தொடர்ந்தான்.

உனக்கே தெரியும் நம்ம கல்யாணம் எதிர்பார்க்காம நடந்துச்சு, அதுக்கு நான் எந்த ஏற்பாடும் செய்யலைனு…

நீங்க என்னை அழைச்சிட்டு போறீங்களா? இல்லையா? அது மட்டும் சொல்லுங்க? வளவளான்னு பேசிக்கிட்டு ம்க்கும் முகத்தை வெட்டினாள்.

அடியே… நீ இவ்வளவு பேசுவியா? என்றவனாய் பார்த்துக் கொண்டு இருந்தான்.

எதிர்பார்க்காம நடந்திருந்தோ இல்லை எதிர்பார்த்து நடந்துச்சோ அது கல்யாணம் தான், நான் உங்க பொண்டாட்டி தான்.

அடிங்க… அது யார் இல்லைனு சொன்னா? இந்த ஜென்மத்துல நீதான் நீ மட்டும் தான் என் பொண்டாட்டி. ரொம்ப முறைக்காத ரெண்டு கண்ணும் தெரிச்சு விழுந்திடும் போலிருக்கு…

கிண்டலடித்தவனிடம் சண்டையிடப் பாய்ந்தாள். தன் அத்தனை முயற்சியும் தோல்வியுற்று அவனது இறுக்கமான அணைப்பில் இருப்பதை உணர்ந்து திமிறினாள்.

என்னடி? சாம, தான, பேத, தண்டமா?

முறைத்த அவள் கண்களுக்கு முத்தமிட்டான்.

இப்ப என்னவாம்? நாக்பூர் ஒன்னும் நிலையான போஸ்டிங்க் இல்ல…இன்னொரு பரிட்சை எழுதிட்டு வந்தேன். பதவி உயர்வு கிடைச்சதுன்னா வேற இடம் போக வேண்டி இருக்கும். போகிற இடங்களில் எல்லாம் அவ்வளவு வசதிகளும் இருக்கிறதில்லை .

நான் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன் இறைஞ்சும் குழந்தையை ஒத்திருந்தது அவளது குரல்.

என்ன சொல்வதெனப் புரியாமல் இருந்தான் இந்திரன்.

எனக்கு உங்க கூடவே இருக்கணும், இங்க தனியா இருக்கப் பயமா இருக்கு.

….

நீங்க என்னை ஒதுக்கி வைக்கப் பார்க்கிறீங்க, அதனாலதான் விட்டுட்டு போறீங்க, எங்கேயாவது புதுசா கல்யாணம் பண்ணிட்டு பொண்டாட்டியை விட்டுட்டு போவாங்களா?

உனக்கு எவ்வளவு வயசாச்சு அஞ்… எழில்மா…

தன் வயது இவனுக்கா தெரியாது என்பது போல கண்களை விரித்துப் பார்த்தவாறு…

பத்தொன்பது….

ம்ம் அப்ப எனக்கு எத்தனை வயசு?

அவளை விட அவன் எவ்வளவு வயது பெரியவன் என்பது தெரியுமாகையால் கணக்கிட்டுப் பதில் சொன்னாள்… இருபத்தி மூணு…

நம்ம கல்யாணத்துக்கு வந்த எல்லோரும் என்ன சொல்லிட்டுப் போனாங்க?

அடுத்த வருஷமே பிள்ளைப் பெத்துக்கணும்னு ….அது தானே?

தலைக் குனிந்து அமர்ந்திருந்தாள்.

அவள் தோளில் தன் கையைப் போட்டு தன்னோடு இணைத்து, இறுக்க அணைத்தவன்.

அப்படின்னா நீ இப்ப குழந்தைப் பெத்துக்கிட்டா வளர்த்துக்குவியா?

அவன் முகத்தையே பார்த்தாள் எழில், அவர்கள் ஊரில் அவளை விடச் சிறிய வயது பெண்கள் எல்லாம் ஏற்கெனவே பிள்ளைப் பெற்றிருக்க, அவன் கூறியது அல்லது என்ன கூற வருகிறான் என்பது அவளுக்குப் புரியவில்லை.

குழந்தைப் பெத்துக்கச் சரியான வயசு 21 ம், நாம அப்ப பெத்துக்குவோமா?

சட்டென்று அவன் அப்படிக் கேட்பானென எண்ணி இராததால் ,முகம் செம்மை பூசிக் கொள்ளத் தலைக் குனிந்தாள் அவள்.

எனக்கும் உனக்கும் இப்ப அப்பா, அம்மா ஆகிற வயசு இல்லடா எழில். நான் இப்பதான் சாதாரணப் போஸ்ட்ல இருக்கிறேன். அரசாங்க வேலையில இன்னும் பல படிகள் இருக்கு, அடுக்கடுக்கா பல பரீட்சைகள் எழுதி மேல் பதவிக்குப் போய் ஒரு இருபத்தெட்டு வயசுல தான் கல்யாணம் செஞ்சுக்கணும்னு நினைச்சிருந்தேன் என்றவனைக் கலவரமாகப் பார்த்தாள் எழில்.

நாம ரெண்டு பேரும் இப்ப ஏண்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு எல்லாம் நான் நினைக்கவே இல்லை… நீ பதறாத… புரியுதா? அவள் மண்டையை ஆட்டினான்.

புரிந்ததென அவளும் பதிலுக்கு தலையசைத்தாள்.

உன்னைக் கட்டிக்கிட்டதில எனக்கு ரொம்ப சந்தோஷம். சும்மாவே எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும், இப்ப என் பொண்டாட்டியா வேற ஆகிட்ட எனக்கு உன்னை பிடிக்காம போகுமா?

மகிழ்ச்சியோடு அவன் கண்ணோடு கண் கலந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

அம்மா அப்பா இல்லாத எனக்கு நீ வரம், அது போல நானும் உனக்கு வரமா இருக்கணும்னு நினைக்கிறேன்.

என் அம்மா, அப்பா துணையும் இல்லாத நிலையில… உன்னோட வீட்டிலேயும் சுமூகமா இப்ப நிலைமை இல்லை… இப்படி இருக்கிறப்போ அதிகமான பொறுப்புகளை உருவாக்குகிறதில எனக்கு விருப்பமில்லை.

….

அதனால நாம ஒரு நல்ல நிலைமைக்கு வரும் வரையிலும், அதாவது மற்றவங்களை எதிர்பார்க்காம நம்மளோட பொறுப்பை நாமளே ஏத்துக்கிற மனமுதிர்ச்சி வரும் வரையிலும் கொஞ்ச நாள் நேரம் எடுத்துக்குவோமே?

………

எனக்கென்னவோ இது நம்ம கல்யாணம் இல்லை. காதல் செய்யக் கிடைச்ச லைசென்ஸ்னு தான் நான் நினைச்சிருக்கேன். நீ என்ன சொல்லுற? முகம் மலர சிரித்தவனை

‘அடப்பாவி தாலிக் கட்டிட்டு பேசறப் பேச்சைப் பாரு’மனதிற்குள்ளாக எண்ணீயவாறு வியந்து வாயில் கைவைத்தாள் எழில்.

கொஞ்ச நாளைக்கு நாம கல்யாணம் பண்ணிக்கலை காதலிக்கிறோம்னு நினைச்சுக்க என்ன? கண்ணடித்தான்.

அவன் சொன்ன விதத்தில் எழில் சிரித்தாள்… சாகசக்காரன் கணவனை மனதிற்குள் கொஞ்சிக் கொண்டாள்.

ஆமா இந்த எழில் பொண்ணை நான் இப்பதான் சைட் அடிச்சிட்டு இருக்கிறேன். இனிமேதான் லவ் சொல்லணும், வழியணும் அதுக்கப்புறம் வருஷக்கணக்கா காதலிக்கணும். அதுக்கப்புறம் தான் கல்யாணம் பண்ணிக்கணும் அவளருகே சென்றவன் காதில் ‘மறுபடி கல்யாணம் பண்ணிக்கணும்’ எப்படி எனக் கண்ணடித்தான். அதுக்கப்புறம் தான் மத்ததெல்லாம் என விஷமமாய்ச் சிரிக்க.

அடப்பாவி வாய் பிளந்தாள் எழில்.

டோர் க்ளோஸ் பண்ணு அவள் உதடுகளை இணைத்தவன் சிரித்தான்.

இன்னிக்கு பரபோஸ் செஞ்சே ஆகணுமே? கொஞ்சம் பொறு… என்றவன் அவசரமாய் வீட்டினுள் சென்றான். அங்கே அவளுக்காக வாங்கி இருந்த மல்லிச்சரம் ப்ரிட்ஜில் இருக்க எடுத்துப் பின் கட்டிற்கு விரைந்தான்.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here