உள்ளம் உந்தன் வசம்_10_ஜான்சி

0
301

அத்தியாயம் 10

ராமானுஜம் மகன் மருமகளை அழைத்து தன் அண்ணன் வீட்டிற்கு விருந்துக்குச் செல்ல வேண்டிய விபரம் சொல்லவும், இரவு உணவிற்காக அனைவரையும் நிர்மலா அழைக்கவும் நேரம் சரியாக இருந்தது. ஆதவன் வாஷ் பேசினில் கை கழுவச் சென்றவன் ஏதோ வேலையாகத் தனது அறைக்குச் சென்றான்.

அங்கேயோ அகிலா கண்ணாடி முன் எக்கி எக்கி பார்த்துக் கொண்டு நின்றாள். இவள் அறைக்குள் எப்போது வந்தாள்? என யோசித்தவாறே அவளை கவனித்தான். அவள் எவ்வளவு முயன்றும் அவளால் அந்தக் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்க முடியவில்லை… மிகக் கடுப்பானவள் கட்டிலின் ஓரம் அமர்ந்து தன் கைப்பையிலிருந்த கண்ணாடியைப் பார்த்து பொட்டு சரிபார்த்து வைத்துக் கொண்டாள். ஓ பொட்டு சரிபார்க்க அறைக்குள் வந்திருப்பாள் போலும்?

அவள் செய்கை கண்டு நம் புன்னகை மன்னனுக்குப் புன்னகை பூத்தது.

‘வா அகிலா சாப்பிடலாம்…’ அழைத்தான்.

‘நீங்க இங்க வாங்க…’ அவள் பதிலுக்கு அவனை அழைத்தாள்.

‘என்ன?’ என்றவனாய் அவளருகில் கட்டிலில் அமர்ந்தான்.

‘நான் உங்களை எப்படி அழைச்சுக்கட்டும்?’

‘எப்படின்னா?’

‘பெயர் சொல்லி அழைச்சா நம்ம வீட்டில திட்டுவாங்களோ?’

புரியாமல் திகைத்தான்… நீ பெயர் சொல்லியே கூப்பிடு’, என்று சொல்லவும் மனம் வரவில்லை.

தன் விரல்களை மடக்கியவாறு எண்ண ஆரம்பித்தாள்… ‘அத்தான், மச்சான், மாமா, பாவா, ஏஜீ ,வோஜீ சுனியேனா( ஏங்க கேளுங்களேன்) இன்னும் ஏதேதோ சொல்லும் முன்பாக…

ஓய் நிறுத்து என்பது போலக் கையைக் காட்டினான். ‘ஒரு மனுஷனுக்கு எத்தனை பேர் சொல்லுவ நீ?’

‘மத்த உறவுகளை விட… இந்த நம்ம உறவு ரொம்பவே ஸ்பெஷல் இல்லையா அதனாலத்தான்… பெயரும் ஸ்பெஷலா இருக்கணும்னு தேடறேன்…’ என உற்சாகமாகச் சொன்னாள்.

ஒரு நிமிடம் அவள் பேச்சில் அவன் மனதில் பனிமழை பெய்து ஓய்ந்தது… இனி சொல்வதெற்கென்ன இருக்கின்றது? உள்ளுக்குள்ளிருந்து வடிவேலு சப்தமிட்டார் ‘சாச்சுப்புட்டா மச்சா…’

‘உனக்கு என்னை எப்படி அழைக்கணுமோ அப்படி அழைச்சுக்க…. முதல்ல சாப்பிட வா… உன் முகம் ஏன் இப்படி வாடி இருக்கு?’

ஒரு கள்ளப் பார்வைப் பார்த்து‘ஒன்னுமில்ல’ சொன்னவள்…

‘நீங்க என்னை ஏன் அகிலா அகிலான்னு கூப்பிடுறீங்க… எனக்கு வேற பேர் யோசிக்கலையா?’ குனிந்தவாறே கேட்டாள்.

‘அதெல்லாம் வச்சிருக்கேன்…’

‘அப்படியா… சொல்லுங்க;, என்றவளின் முகம் இப்போது களைப்பையும் தாண்டி மின்னியது.

‘அதெல்லாம் நேரம் வரும் போது சொல்லுறேன்… அதென்ன கள்ளத்தனமா ஒரு பார்வை? என்னாச்சுன்னு கேட்டா மழுப்பற? ஒழுங்கா பதில் சொல்லு…’

என்னோட கள்ளப்பார்வை எல்லாம் தெரியுது… இது சரியில்லையே? எங்கம்மா ட்ரெயினிங்கா இருக்குமோ? சுமதிம்மா இது ரொம்பத் தப்பும்மா மனதுக்குள் உளறிக் கொட்டினாள்.

‘சொல்லுங்கிறேன்ல…’

‘ம்ம்… நான் காலையிலருந்தே மாத்திரை எடுத்துக்கலையா… அதான் கால் ரொம்ப வலிக்குது’ சொல்லிவிட்டுத் திட்டுவான் என எண்ணி குனிந்துக் கொண்டாள்.

தான் முன் தினம் மாத்திரைகள் வைத்திருந்த இடத்தை ஆதவன் அவசரமாய்ப் போய் பார்த்தான். முன்னிரவு ஒரு டோஸ் எடுத்ததோடு சரி அதன் பின் குறையாமல் இருந்தது.

பயந்தவளாய்(!) தலை குனிந்து அமர்ந்திருந்தவளிடம் வந்தான்.

‘மறுவீட்டுக்கு போகும் போது இதை எடுத்துப் பையில் வைக்கச் சொல்லியிருந்தேன்ல? ஏன் இப்படி அஜாக்கிரதையா இருக்கே? சரி வா சாப்பிடலாம்… இனி உன்னை நம்ப முடியாது எல்லா வேளையும் நானே உனக்கு மாத்திரை எடுத்து தந்திடுறேன்.’

‘நீ டாக்டர் கொடுத்த எல்லா மாத்திரையையும் சாப்பிட்டு முடிச்சிருப்ப, இன்னிக்கு மறுபடியும் செக் அப்க்கு அழைச்சுட்டுப் போகலாம்னு நினைச்சிருந்தேன்…’

இந்த ஆதவனுக்கு சுமதி அளவுக்கு இல்லன்னாலும் கொஞ்சமாச்சும் கோபம் வரத்தான் செய்யுது’ … என்று அவன் சொல்வதற்குப் பதில் பேசாமல் இருந்தாலும் மனதிற்குள் தாயையும், கணவனையும் ஒப்பிட்டு கவுண்டர் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

‘வா சாப்பிட வா’ அவள் வலக்கையைப் பிடித்தவன் எழுப்பித் தன்னோடு அழைத்துச் சென்றான். அவள் வலி புரிந்து அவளோடு இணைந்து மெதுவாகவே நடந்தான்.

பங்கஜம் பாட்டியின் கதைகள் இன்னும் ஓய்ந்து இருக்கவில்லை. முதல் மருமகளில் இருந்து இப்போது மூன்றாம் மருமகள் குறித்த செய்திக்கு முன்னேறி இருந்தார்.

நிர்மலா அகிலாவைக் கண்டதும் பங்கஜத்தையும் தன் காதையும் சைகையால் காட்டி ‘மிடியல’ என்று அழுகை ரியாக்ஷன் காண்பித்தாள்.

ஆதவனோ தங்கைக்கும் மனைவிக்கும் இடையே நிகழும் பார்வை பரிமாற்றங்களைக் கண்டு கொள்ளாதவன் போலிருந்தான். ;கேடி கேடி’ மனதிற்குள் சொல்லிக் கொண்டான். தான் அவளுக்கு வைத்த பெயர் கேடி என்று தெரிந்தால் என்ன சொல்வாள்? என நினைத்து முகம் மலர்ந்தது.

சாப்பிட்டு முடித்ததும் வலுக்கட்டாயமாகச் சாப்பாட்டு மேஜையிலேயே அவளுக்கான மாத்திரைகளை நீட்டினான்.

முகத்தை அஷ்டகோணலாக்கியவளிடம் குனிந்தான்.

‘ஏற்கெனவே ரொம்ப லேட்டாகிடுச்சு… இப்ப மாத்திரை எடுத்துக்கலைன்னா வலி அதிகமாகி டாக்டர் கிட்டே போக வேண்டியதா போயிடும். இன்னிக்கும் உனக்கு டாக்டர் ஊசி போட்டா ஓகேவா?’

அவன் கேட்டதில் பயந்து உடனே மாத்திரைகளை விழுங்கி வைத்தாள்.

‘என்னதான் சொல்லு ராஜி உன் மருமக பொண்ணு இருக்காளே…’

பங்கஜம் பாட்டி இவளைப் பற்றி ஏதோ சொல்லப் போகிறார் எனப் புரிந்ததும் உள்ளே சென்ற மாத்திரை வெளியே வந்துவிடுமோவெனப் பயந்தவளாய் கேட்டிருந்தாள், அருகில் இருந்தவன் அவள் முகப் பாவனைகளை இரசித்தான்,

‘ம்ம்…’ உம் கொட்டியது வேறு யார் ராஜிதான் மருமகளுக்குக் கிடைக்கும் சர்டிபிகேட்டை ஏந்த தயாராக இருந்தார்.

‘நல்ல அழகான பிள்ள…’

ம்ம்ம்… இதைச் சொல்லத்தானா? ம்ஹீம் இழுத்துப் பிடித்து வைத்த மூச்சை வெளியேற்றியவளாய் திரும்பவும் கணவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது கண்டு கண்ணைப் பெரிதாய் விரித்தாள்.

அழகிதான்... பாட்டியின் சர்டிபிகேட் அவனால் அங்கீகரிக்கப் பட்டுக் கொண்டு இருந்தது. சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

‘ஆமா, என் மருமகளுக்கு அழகுக்கு என்ன குறை?’

‘ஆமா, தங்கமான குணம்… என்ன பொறுமை பார்த்தியா? பெரியவங்களை மதிக்கிற மாதிரி புள்ளைய நீ ஆதவனுக்குப் பார்த்திருக்க…’

‘அம்மாடியோ இவ்வளவு ஐஸ் வச்சா எனக்குச் சுரம் வந்திடாது’ அகிலா மிரண்டாள். நிர்மலா அவளைக் கிண்டலாய் பார்த்து வைக்க, இவளோ பதிலுக்கு கண்ணால் எச்சரித்து நாக்கை லேசாய் துருத்தினாள். அருகில் இருந்தவனுக்கு அத்தனையையும் பார்த்துச் சிரிப்பை அடக்குவது சிரமமாக இருந்தது.

‘ஆனா பாரு…’

‘வச்சுட்டாங்களே செக் பாயிண்டு… என்ன சொல்லப் போகுதோ?’ எனும் மிரட்சியில் அனைவரும் இருந்தனர்.

‘அத்தனை வளர்த்தியான பிள்ளைக்கு இப்படிக் குள்ள கத்தரிக்கா மாதிரியா பொண்ணு பார்ப்ப நீ?’

காதே கேளாதது போல எழுந்தவள் சாப்பாட்டுத் தட்டை எடுக்கப் போக நிர்மலா வந்து தடுத்தாள்.

அங்கு யாரும் எதையும் சொல்கிற மாதிரி இல்லை. ஏனென்றால், முன் தினத்திலிருந்தே பலர் பார்வைகளும் திருமணத்திற்கு வந்திருந்தோர் சிலர் இவர்கள் உயர வித்தியாசத்தைக் குறித்துத் தங்களுக்குள் பேசுவதுமாக இருந்ததைக் கவனித்து இருந்தார்களே?

‘உயரம்லாம் ஒரு விஷயமா அத்தை, அவதான் என் மருமகன்னு பார்த்ததும் தோணிடுச்சு…தங்கப்பிள்ளையை அதுக்காக வேண்டாம்னு சொல்ல மனசு வரலை பின்ன எப்படி?’

‘ம்ம்…’ இன்னும் ஏதேதோ பேச்சுக்கள் அவள் காதில் விழாமல் தேய்ந்தன.

‘கையில் ஆப்பிள் பழத் துண்டுகளோடு அவள் பின்னாலேயே ஆதவன் வந்து நின்றான். மாத்திரை சாப்பிட்டல்ல… தொண்டைக்குள்ளேயே நிக்கிற மாதிரி இருக்கும்… பழம் சாப்பிடு’

அவனை முறைத்தவாறே வாங்கிச் சாப்பிட்டாள்.

‘என்னாச்சு? அந்தப் பாட்டி சொன்னதை மண்டைக்குள்ள போட்டுக்காதே…’

‘அந்த பாட்டி மட்டுமா?’

‘பின்னே?’

‘நம்ம கல்யாணத்துக்கு வந்தவங்க பாதிப் பேர் அப்படித்தான் பேசினாங்க முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள்.’

‘உங்க ஆபீஸ் பிரண்ட்..’

‘யார்?’

‘நீங்க யாருக்கு சேலை வாங்கிக் கொடுத்தீங்களோ அவங்க தான்..’

‘ஏய்…’ஆதவன் தன் தலையில் கை வைத்து விட்டிருந்தான்.

‘தெரியும் நீங்க வாங்கிக் கொடுக்கலை…சும்மா அடையாளத்துக்குச் சொன்னேன்.’

‘அவங்களும் என்னை ஒருமாதிரி பார்த்தாங்க…’

இது எப்போ? மனதிற்குள் நொந்து கொண்டான். அடுத்தவர்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்க முயல்வதில் சமுதாயத்தை வெல்ல எவராலும் முடியாது.

‘விடு எப்படி இருந்தாலும் யாராவது ஒரு குறை சொல்லிட்டே இருப்பாங்க?’

‘அது எனக்குப் புரியுது அது ஏன் என்னை எல்லோரும் ‘குள்ள கத்தரிக்கா’ கட்டச்சி, குட்டச்சின்னு யாரும் சொல்லணும். ஏன் உயரம்னா ப்ளஸ்ஸா? குட்டைனா மைனஸா?’

‘ஐயோ இந்தப் பையன் ஏன் இவ்வளவு வளர்த்தியா இருக்கான்னு ஏன் குறையா சொல்ல மாட்டேங்கிறாங்க?’

… என்னாமா யோசிக்கிறா? மனைவியின் பேச்சில் மறுபடி அவுட்டானான்.

‘எல்லாம் உங்களாலத்தான்…’

‘என்னது என்னாலயா?’

‘எதுக்கு நீங்க இவ்வளவு உயரமா வளரணும்? உங்களால எல்லோரும் என்னைதான் குறை சொல்லுறாங்க… நான் ஒன்னும் குட்டச்சி இல்ல… எங்க அம்மாவை விடவும் வளர்த்திதான். நீங்கதான் ரொம்ப வளர்த்தியா இருக்கீங்க எல்லாம் உங்க ப்ராப்ளம் தான்…’ முணுமுணுவென்று சென்றவள் முகம் கழுவி வந்தாள்.

அவனுக்கு முகம் திருப்பினாள்… ஓ கோபமோ?

‘அந்த பாட்டி அப்படி சொன்னாங்கள்ல அப்ப நீங்க எனக்குச் சப்போர்ட்டா ஏதாவது பேசினீங்களா இல்லை. என் அத்தைதான் பேசினாங்க…’ என்றவள் மறுபடி அவனுக்கு முகம் காட்டாமல் திரும்பி படுத்துக் கொண்டாள்.

என்னாங்கடா இது? கல்யாணமாகி ரெண்டு நாளாச்சு இந்தப் புள்ளக்கிட்ட ஒழுங்கா பேசலை. ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வீட்டுக்கு வந்து ஆப்பு வைக்கிறாங்களே? என நொந்தான்.

ஆனாலும் கூட நீ ஏன் உயரமாக இருக்கிறாய் என்று தன்னை குறை கூறினாளே ஒழிய என்னைத் தவிர அவள் சிந்தனையில் எதுவுமே இல்லை…தன்னை தவிர வேறு யாரையும் மணந்திருந்தால் நன்றாக இருக்கும் என்பதான எந்த சிந்தனையும் துளி கூட இல்லை. தாங்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பாக பார்த்துக் கொள்ளவில்லைதான். இதுவரையிலும் அவள் பேசியதில் எல்லா நேரமும் பாசமும் குழைவும் இல்லைதான். ஆனாலும், என்னை தன்னுடைமை என்று விட்டுக் கொடுக்காமல் ஏற்ருக் கொண்டு இருக்கிறாள். இவள் அளவுக்கு நான் அவளை உரிமையாக ஏற்றுக் கொள்ளவில்லையோ? ‘எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் தேவை’ அவன் மனம் முனகியது.

சட்டென்று மின்சாரத்தடை… அறையில் இருள் பரவியது. ஆதவன் இன்னும் தூங்கி இருக்கவில்லை. கொசுவலை தடுப்போடு இருந்த ஜன்னல்களைத் திறந்து விட்டான் மரங்கள் சூழ்ந்த அவர்கள் வீட்டின் பின்பக்க பகுதியிலிருந்து வந்த இதமான காற்றுத் தாலாட்டியது. நிலவும் அவர்கள் அறைக்குள் எட்டிப் பார்த்தது.

ஐந்து நிமிடங்களிருக்கும் அருகில் அரைத் தூக்கத்தில் உருண்டு புரண்டு படுத்தவள் சட்டென்று இருள் உணர்ந்து, திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள் ஆதவனும் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் மறுபடியும் அமைதியாகப் படுத்துக் கொண்டாள். அவள் வலக்கரம் அவன் பால் நீண்டது.

‘ஒரு கை தாங்களேன்…’

‘ம்ம்…’ புரியாமல் நெற்றிச் சுருங்கினான்.

‘எனக்கு இருட்டுனா பயம்… உங்களோட ஒரு கை தாங்களேன்.’

கரம் நீட்டினான்… அவன் உள்ளங்கையில் தன் உள்ளங்கை சேர்த்து கோர்த்தவள் உறங்கியே போனாள்.

அடுத்த நாள் மதியம் பெரியப்பா வீட்டில் சாப்பாட்டிற்குப் பின்னர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, சேலை அதிகமாய் அணிந்திராதவள் மறைவிடம் சென்று சரிப்படுத்தச் சென்றிருக்க ஆதவனின் பெரியம்மா நேரம் கிடைத்ததென்று அவனிடம் பொரிந்தார்.

‘மத்த நாள்ல எல்லாம் பெரியம்மா பெரியப்பா கண்ணுக்கு தெரிய மாட்டாங்க? என்னிக்காவது எங்களைப் பார்க்க வந்திருக்கிறியா ஆதவா? உங்கம்மாவும் பொண்ணு பார்க்க முதலா எங்களை கலந்துக்கலை. நாங்க அவளுக்கு என்ன செஞ்சுடுவோம்னு அவளுக்கு பயமாம்?’

சேலையைச் சரிப்படுத்தி விட்டு முன்னறைக்கு திரும்பியவள் அந்தப் பேச்சைக் கேட்டு திகைத்து நின்றாள்.

தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here