உள்ளம் உந்தன் வசம்_11_ஜான்சி

0
279

அத்தியாயம் 11

பெரியப்பா வீட்டிலும் கூடத் தன் மனைவி உரிமையாய் எல்லோரிடமும் பேசி வளைய வருவதை ஆதவன் அதிசயித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதெப்படி அவள் மிக உரிமையாய் எல்லா இடத்திலும் ஒன்றி விடுகிறாள்? ஆனால், வெளியில் பழகுவதற்கும் அவனோடு தனிமையில் இருப்பதற்கும் ஏராளமான வித்தியாசங்கள் அவளிடம் உண்டு என்பதையும் இந்த இரண்டு நாட்களில் அவன் கண்டு கொண்டு இருந்தான்.

‘நிர்மலாவிடம் நாங்க ரெண்டு பெரிய மனுசங்க’ என உதார் காட்டியவள்தானே என்னுடன் தனிமையில் இருந்த போது மருத்துவமனையில் ஊசிப் போட்டதற்காக அழுதாள்.

பங்கஜம் பாட்டியிடம் எப்படிப் பேச வேண்டுமென்ற பாடத்தைத் தன் நாத்தனாருக்கு விளக்கியவள் தான் அவனிடம் மாத்திரை சாப்பிடாமல் இருந்ததை மறைக்கத் திருட்டு முழியோடு பயந்தாள்.

அவள் அண்ணன் அழைக்க வந்ததால் அவன் அவளை எழுப்ப முனைந்த போது தன் தோளில் சில நிமிடங்கள் தலை வைத்து படுத்து இருந்த போதும் அகிலா இவன் சிரித்ததற்கு முறைத்தாளே தவிர அதைத் தவறாய் கொள்ளவில்லை.

அதை விடவும் முன் தினம் இரவு மின்சாரம் இல்லாத வேளை இருட்டில், தூக்கத்தில் வந்த கனவால் பயத்தில் தன்னை இறுக்க அணைத்து உறங்கிய போதும் அதை உணராமலா இருந்திருப்பாள்? ஆனால், அதனைக் குறித்து அவள் பெரிது படுத்தவில்லையே?

அவள் என்னை ஆரம்பத்தில் இருந்தே முழுமையாய் ஏற்றுக் கொண்டு விட்டாள். அதனால் தான் அவளால் என்னிடம் உரிமையாக நெருங்கிப் பழக முடிகின்றது. நான் தான் அவளது அருகாமையில் தவித்துப் போகின்றேன்.ஆனாலும், என்னால் அவளிடம் உரிமை எடுத்துப் பழக முடியவில்லை, அவளை நெருங்க முடியவில்லை.

தன்னுடைய குழப்பங்களை அவளிடம் மனம் விட்டுப் பேசாமல் எனக்குத் தெளிவு கிடைக்காது. முன் தினம் இரவும் அவளிடம் பேச வேண்டும் என்றிருக்க ஐயோ பரிதாபம் தங்கள் உயர வித்தியாசத்தைக் குறித்துப் பங்கஜம் பாட்டி குறிப்பிட்டதற்காக அகிலா அவனிடம் சண்டைக்கு வர தான் யோசித்து வைத்திருந்ததெல்லாம் அவனுக்கு மறுபடியும் மறந்தே போயிற்று.

‘நீங்க எனக்குச் சப்போர்ட்டா ஏதாவது பேசினீங்களா இல்லை. என் அத்தைதான் பேசினாங்க… ‘நான் அவளுக்கு ஆதரவாய் பேசவில்லையேன்று என் மேல் கோபமாம்? எனக்குச் சட்டென்று அலுவலகத்தில் வேலை விஷயமாக மட்டும் கோர்வையாகப் பேச வருவது போல எல்லோரிடமும் பேச வராதுடி புரிஞ்சுக்கோ… எனச் சொல்ல நினைத்தான்தான்.ஆனால், மனதில் எண்ணியதை எங்கே சொல்வது?

அவளைப் பார்த்த நொடியிலிருந்து எப்போதும் தான் பேச்சிழந்து போவதாகவே இருக்கின்றோமே? என்று அவன் மனசாட்சி குட்டத்தான் செய்கின்றது… ஆனால், அவன் திருந்த காணோம்.

இவ வாய்ல ஒரு நாள் ப்ளாஸ்டர் ஒட்டிய பின்னர் முயற்சி செய்தால்தான் தன் மனதில் இருப்பதைச் சொல்ல முடியும் போல? என்னா வாய்?

பெரியப்பாவிடம் அதுவரை பேசிக் கொண்டிருந்தவன் சிறிது நேரம் அவர் எழுந்து சென்றிருக்கத் தன் யோசனையில் மனைவியை நிரப்பியவாறு இவ்வாறெலாம் சிந்தித்து அமர்ந்திருந்தான். மறுபடி முன்னிரவு நிகழ்வுகளுக்குள்ளாக அவன் எண்ணம் இழுத்துச் சென்றது.

என் உள்ளங்கைக்குள் தன் உள்ளங்கை வைத்து உறங்கியவள் இரவு என் தூக்கத்தைப் பறித்து விட்டாளே…?

அவள் இவன் கையைப் பற்றிக் கொண்டு தூங்கவும், சிறிது நேரம் இவனும் தூங்கி விட்டிருந்தான். ஆனால், அருகாமையில் ஏதோ சப்தம் கேட்க இரவில் முழிப்பு வந்தது.

தன் அருகில் இருந்தவள் கண்களை விழிக்காமலேயே, தூக்கத்தின் நடுவே ஏதேதோ பிதற்றிக் கொண்டிருப்பதைக் கண்டான். தூக்க கலக்கத்தில் அவனுக்கும் என்னவென்று புரியவில்லை.

கால்வலி அதிகமாகி காய்ச்சல் வந்து விட்டதோ? எனும் கவலையில் அவள் நெற்றியில் கை வைத்து சூடு பார்த்தான். ஒன்றும் புரியாததால் கழுத்துச் சூட்டை சரி பார்த்தான். காய்ச்சல் இல்லை எனத் தெரிந்ததும் கையை எடுக்க முயல அவளோ அவன் கையைப் பிடித்தவாறே ‘…பேய் பேய்’ என்று ஏதேதோ முனகிக் கொண்டு இருந்தாள்…ஓ பேய்க் கனவா?

அதுக்கு என் கையைப் பிடித்து எதற்குப் பேய் பேய்னு சொல்லணும்?
இவ அக்கப் போருக்கு கணக்கில்லாமப் போச்சு என எண்ணியவன் அவள் பயத்தைப் போக்க, அவளைத் தன் அருகாமையில் இழுத்து கைக்குள் கொண்டு வரவும், அவளும் அவனிடம் முழுதுமாய் ஒன்றினாள்.

சற்று நேரத்தில் அம்மாவென அழைத்து அவன் கழுத்தைச் சுற்றி தன் கைகளைக் கோர்த்துக் கொண்டு மார்பில் தலை வைத்து, அவனை இறுக்கக் கட்டிக் கொண்டாள்.

‘கொஞ்ச நேரம் முன்னாடி நான் உனக்குப் பேய் இப்ப அம்மாவா?’

ரொம்ப நல்லது என்றதோடு அவள் கால்களை இவன் தான் பத்திரமாகத் தன் கால்கள் மேல் போட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று.

ஏறத்தாழ முழுமையாய் தன்னைக் கட்டிக் கொண்டு கிடந்தவளின் அருகாமையில் ஆதவன் இப்போது வெகுவாகத் தடுமாறிப் போனான். அவள் அணிந்திருந்த பூச்சரங்களின் வாசம் அவளில் இன்னும் மிச்சம் இருந்தது. அந்த மென்மையான சருமம் அவனைத் தீண்டி தீண்டி நெருப்பைப் பற்ற வைத்துக் கொண்டிருந்தது.

வேலையே உலகமாய் இருந்தவனை, அலுவலகத்தில் சாமியார் எனும் பட்டப் பெயரால் அழைக்கப் பட்டவனை அவள் கடந்த இரண்டு நாட்களாக வெகுவாய் சோதித்துக் கொண்டிருந்தாள்.

சொந்த மனைவியிடம் அவன் சாமியாராக இருக்கத் தேவையும்தான் என்ன? ஏன் இப்பொழுதே கூட அவன் அவளிடம் உரிமை எடுத்துக் கொள்ளலாம்தான். ஆனால், அவனுக்கே அவன் வைத்திருந்த கெடுவோடு கூட அவளின் கால் முட்டிக்காயங்களும் அவனைத் தாமதிக்கச் செய்தன.

எனக்குச் சொந்தமானவள் தானே? என்ன அவசரம்? எனும் உரிமை உணர்வால் கூட அவன் அவளிடம் விலகியே இருந்தான்.

முன் தினம் பாராமல் விட்ட கால் காயங்களை இப்போது மெதுவாய் வருடி விட்டான். முழங்கால் அருகாமை வரையிலும் மெஹந்தி அலங்கரிக்கப் பட்ட அந்த அழகான கால்கள் அவற்றில் திருஷ்டிப் பட்டது போல இரண்டு முட்டிகளிலும் இருந்த காயத்தில் இப்போது மேல்தோல் கருமை நிறம் அடைந்திருந்தது.

அவன் வருடலில் அவளோ தூக்கத்திலேயே வலியில் மெதுவாய் முனகினாள்.

தன் கரத்தை அவள் கால்களினின்று எடுத்துக் கொண்டவன், முதலில் இவளை மாத்திரைகளை ஒழுங்காகச் சாப்பிட வைக்க வேண்டும்.இவளாகச் சாப்பிடுவாள் என்று நம்ப முடியாது என்று முடிவெடுத்துக் கொண்டான்.

உங்களை நான் தான் கவனிக்கணுமா? நீங்களா மாத்திரை சாப்பிட மாட்டீங்களா? நீங்க என்ன சின்னப் பப்பாவா?

என மனதிற்குள் பேசிக் கொண்டவனாக அவளைப் பார்த்தான். சற்று முன்னர்ப் பயந்து அரற்றியவள் இப்போது அவன் மாரில் முகம் புதைத்து நிம்மதியாய் எவ்வித பயமோ அலட்டலுமோ இல்லாதவளாய் தூங்கிக் கொண்டிருந்தாள்.

ஆம் நான் சின்னப் பப்பாதான்

என்பது போல அவள் அப்பாவியாய் இதழ்கள் விரித்தவளாய் தூங்கிக் கொண்டிருந்தாள். அந்த விரிந்த உதடுகளை இணைத்தவன் மிக லேசாய் அவற்றை வருடிக் கொடுத்தான். தன் மார் சேர்ந்த அந்த இன்பச் சுமையின் பழக்கம் முன்பின் இல்லாதிருந்ததால் வெகு நேரம் விழித்திருந்தான். நள்ளிரவு மூன்று மணி அளவில் மின்சாரம் மறுபடி வந்திருந்தது.அதன் பின்னர் எப்போது மறுபடி உறங்கினான் என அவனுக்குத் தெரியாது.

காலையில் விடிந்த பின்னர்ச் சுறுசுறுப்பாய் எழுந்தவன் மனையாளைத் தேட, அவளோ கட்டிலின் ஓரம் தலையணையில் முகம் புதைத்து தூங்கிக் கொண்டிருந்தாள். ஏனோ எதையோ எதிர்பார்த்திருந்து ஏமாந்தவன் போல அவன் மனம் ஒரு நொடி சோர்வடைந்தது.

அதன் பின் தம்பதிகளாக இருவரும் பெரியப்பா வீட்டிற்கு விருந்திற்காகப் புறப்பட்டு வந்ததிலிருந்து அவர்களோடு அவள் வெகுவாய் கலந்து விட்டாள். அப்பாவின் சொந்த அண்ணன் குடும்பம் தான் அது. பெரியம்மா பெரியப்பா இருவருமே மிகவும் நல்ல குணம். அவர்களுக்கு அருண், தருண் என்று இரு பிள்ளைகள். இருவருமே ஆதவனை விடப் பெரியவர்கள்.

வெளி நாட்டிலேயே குடும்பத்தோடு இருவரும் தங்கி விட்டனர். பிள்ளைகள் அழைத்தும் அங்கே போய்த் தங்க விரும்பாத பெரியவர்கள் அவ்வப்போது சில நாட்களுக்குக் குவைத்தில் இருக்கும் அருண் வீட்டிற்கும், யூ கே விலிருக்கும் தருண் வீட்டிற்கும் சென்று வருவார்கள். லீவில் அவர்களும் மனைவி குழந்தைகளோடு வந்து செல்வதுண்டு.

முழுவதுமாக பிள்ளைகள் கூடவே சென்று இருக்க முடியாமல், தாய் நாட்டில் இருப்பது பிடித்திருந்தும் வெகுவாக அப்பெரியவர்களைத் தனிமை வாட்டி வந்தது. ஆதவனும் வருடத்தில் பல மாதங்கள் இந்தியாவில் இருப்பதே இல்லை. எப்போதாவது பெரியவர்களை வந்து பார்த்து செல்வான் அதுவும் அப்பா அவனிடம் போகச் சொன்னால் தான் பெரியபா வீட்டிற்கே செல்வான், தானாக ஒருபோதும் வந்ததில்லை.

அப்படியே வரும் போதும் கூட யாரிடம் என்ன பேசுவது என்று புரியாமல் அமைதியாக இருந்து விட்டு, பெரியம்மா கொடுப்பதை உண்டு விட்டு, அவர் கேட்கும் கேள்விகளுக்கு அரைப்பதில்கள் கொடுத்து விட்டு சென்று விடுவான்.

திருமணத்திற்கு முன்பு வரை அடிக்கடி வந்து செல்லும் நிர்மலா தற்போது தாய் வீட்டிற்கு வரும் போது மட்டுமே இங்கு வருவாள். ராஜி அவ்வப்போது வந்து செல்வார். அது போல அவர்களும் அவ்வப்போது அவர்கள் வீட்டிற்கு வந்து செல்வர். எண்ணி 15 நிமிட தூரத்தில் தான் அவர்கள் வீடு. ஆனாலும், இன்றைய காலக்கட்டத்தில் உறவுகள் இவ்வாறுதான் பேணப்படுகின்றன.

பெரியவர்கள் மேல் அதிக எதிர்பார்ப்பு இல்லாத போதிலும் பிள்ளைகள் தங்களைப் பார்க்க வரவேண்டுமென்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் ஏராளமாக இருந்தது. எதிர்பார்ப்பினால் வந்த ஏமாற்றம் ஆற்றாமையாய் அவனிடம் இன்று வெடித்து விட்டிருந்தது.

ராஜிக்கு கணவனின் அண்ணன் குடும்பம் மீது தனிப்பட்ட விதமாக எந்த வருத்தங்களும் இல்லை. ஆனால், தன் மகனுக்குப் பெண் பார்ப்பதிலிருந்து யாரையும் கலந்து கொள்ளாமல் விட்டவர் மற்ற சொந்தங்களை நிச்சயத்திற்கு மட்டுமாக அழைத்திருந்தது போலவே கணவனின் அண்ணன் அண்ணியையும் அவ்வாறே அழைத்திருந்தார்.

சொந்தத்தில் ஒருவரை அரவணைத்து இன்னொருவரை விலக்கி என்று முடியாது என்பதால் அனைவரையுமே விலக்கி வைத்திருந்தார். அதனால் தான் ஆதவன் திருமண விஷயத்தில், ராஜியின் செயலில் ஆதவனின் பெரியம்மா வெகுவாகக் காயப்பட்டிருந்தார்.

காலையில் வந்த புது மண மக்களுக்கான விருந்தெல்லாம் சிறப்பாக நடந்து முடிந்திருந்தது. உறவினர்கள் சிலரும் சமைக்கப் பறிமாற உதவ வந்திருந்தனர். விருந்தாளி போல முன்னறையில் சொகுசாய் அமராமல் ஏதேனும் உதவி தேவையா? என அவர்களிடம் கேட்டு, பேச்சை வளர்த்துக் கொண்டு கணவனை முன்னறையில் விட்டு விட்டு சமையலறைக்குள் கலகலத்துக் கொண்டிருந்தாள் அகிலா.

அவள் அணிந்திருந்த வழவழப்பான சேலை அடிக்கடி இடுப்பை விட்டுக் கீழே இறங்கி அவளைக் கலவரப் படுத்திக் கொண்டிருந்தது. சாப்பிட்டு முடித்ததும் உள்ளறை சென்று மறுபடியும் தன் சேலையைச் சரி செய்து வந்தவளுக்குத் தன் கணவனிடம் அவன் பெரியம்மா பேசுவதைக் கேட்க நேர்ந்தது.

‘மத்த நாள்ல எல்லாம் பெரியம்மா பெரியப்பா கண்ணுக்கு தெரிய மாட்டாங்க? என்னிக்காவது எங்களைப் பார்க்க வந்திருக்கிறியா ஆதவா? உங்கம்மாவும் பொண்ணு பார்க்க முதலா எங்களைக் கலந்துக்கலை. நாங்க அவளுக்கு என்ன செஞ்சுடுவோம்னு அவளுக்குப் பயமாம்?’

இவ்வளவு நேரம் தன்னிடம் அவ்வளவு அன்பாய் பழகியவரா இப்போது தன் கணவனிடம் இப்படிப் பொரிகிறார்? என அதிர்ந்தாள்.

அவளைப் பார்த்ததும் அவளை அருகில் அழைத்தவர்,

‘நீயே சொல்லு மருமகளே, நிர்மலா கல்யாணத்தில எல்லாமே நாங்க தான் முன்னெடுத்து செஞ்சோம். இவன் கல்யாணத்துக்கும் எங்களுக்கு அப்படிச் செய்யணும்னு ஆசை இருக்குமா? இருக்காதா? உங்க இரண்டு பேருக்கும் நிச்சயம் முடிவான பின்னாடி வந்து அழைக்கிறா இவன் அம்மா? எனக்குக் கோபம் வருமா? வராதா?’

ஓ ஏதோ உள் நாட்டு நிலவரம் என்று புரிந்தவள், இனி தானும் அந்த உள் நாட்டுச் சிப்பாய்தான் என உணர்ந்துக் கொண்டவளாகக் கணவனைப் பார்த்தாள். அவனோ என்ன சொல்வதெனப் புரியாமல் அமர்ந்திருந்தான்.

இப்படி சிலையா உக்கார்ந்திருக்கிறதைப் பாரு, இந்த மனுசனுக்குச் சேர்த்து நான் தான் பேசணும் போலிருக்கு என முடிவுக்கு வந்தவளாக அவர் கரங்களைப் பற்றிக் கொண்டாள். அதிலேயே அவள் பெரிய மாமியார் அவுட்…

‘அதெல்லாம் இல்லை அத்தை… நான் என்ன நினைக்கிறேன்னா… எங்க அத்தை ஏதோ கவனமில்லாம செஞ்சிருப்பாங்க… நீங்க எவ்ளோ ஸ்வீட் உங்களையப் போய் யாரும் தப்பா நினைச்சு சொல்லாம இருந்திருப்பாங்களா?’

‘அதென்னன்னா இவங்க வேற வேலையா யூ எஸ்ல இருந்தாங்க, லீவ் கூடக் கிடைக்கலை… அப்பவே ரொம்ப டென்ஷனா இருந்தாங்க. நிச்சயம் லேட்டா வைக்கலாம்னு கூடப் பேசினாங்க. அந்தப் பூ வைக்கிற பங்க்ஷன் எல்லாமே கடைசி நேரம் தான் முடிவாச்சு, ரொம்பக் குழப்பமா வேற இருந்துச்சு. நிர்மலா வேற இங்கே பக்கத்தில இல்லை… குழப்பத்தில் உங்களை முதலில் அழைச்சுக்காம இருந்திருப்பாங்க…’ எனத் தனக்குத் தெரிந்த எதையோ சொல்லி, மெழுகி பூசினாள். அவள் பேசிய விதத்தில் அவருக்கு ராஜி மேல் இருந்த கோபம் பறந்து பரிதாபம் ஒட்டிக் கொண்டது.

‘ஆமா, பாவம் ராஜி…’

‘அட இந்த பெரியம்மா தான் பேசினதையே மாற்றி பேச வச்சிட்டாளே?’

மனைவி ஹெச் ஆர் ஆக ( மனித வளத்துறை) யில் இருப்பதை நினைவுக் கூர்ந்தவன் இவ இப்படித்தான் ஆஃபீஸில் எல்லாக் கேண்டிடேட்ஸையும் ( அலுவலக நேர்முகத் தேர்விற்கு வருகை தருபவர்கள்) பேசி வழிக்குக் கொண்டு வருவா போலிருக்கு! என ஆ…வென வியந்து இருந்தான்.

‘சரி அதை விடு மருமகளே இப்ப இந்த நியாயத்தைக் கேளு’

பெரியம்மா மனைவியிடம் முறையிடுவதை இரசனையாகப் பார்த்தான்.

‘நான் பெத்ததுங்க ரெண்டும் தான் வெளி நாட்டுல போய் இருந்துடுச்சுங்க. இவனும் நிர்மலாவும் எங்க வீட்டுப் பிள்ளைங்க தானே? இவங்க எங்களை வந்து பார்க்கணுமா? வேண்டாமா? நிர்மலா வரும் போது எல்லாம் இங்கே வந்து எட்டிப் பார்த்துட்டு தான் போவா? ஏன் நேத்து கூட வந்திருந்தாளே. உன் புருசன் இதுவரை எங்களை எத்தனை நாள் வந்து பார்த்திருப்பான்னு கேளு.’

மறுபடியும் ஏதோ சமாதானப்படுத்தினாள். இனி நான் வாரத்துக்கு ஒன்னு ரெண்டு நாள் இங்கே கட்டாயம் வருவேன் அத்தே சரியா? என உடன்பாட்டுக்கு வந்தாள். கோபமும் ஆற்றாமையுமாய் இருந்தவரின் முகம் இப்போது பளிச்சிட்டுக் கொண்டு இருந்தது.

ஆதவனின் பெரியப்பாவும் மருமகளை வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தார். என்ன செய்வது வயதான பெரியவர்களுக்குத் தேவையானது பணமும், வைரமும், தங்கமுமா? அன்பான சில விசாரிப்புகள் மட்டும் தானே.

அதன் பின்னர் வெகு நேரம் பேச்சுத் தொடர்ந்தது இடையிடையே அலுவலகத்திலிருந்து வந்த அலைபேசி அழைப்புக்களில் ஆதவன் பேசிக் கொண்டு இருந்தான்.

இரவு சாப்பாட்டையும் அங்கேயே நிறைவு செய்த பின்னர்தான் வீட்டுக்கு திரும்பினார்கள்.

வீட்டிற்கு வந்து சுத்தம் செய்து கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தவன் அருகில் அமர்ந்த அகிலாவின் கையில் அவனது போன்.

‘உங்க போன் பாஸ்வர்ட் என்ன? ….’

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here