உள்ளம் உந்தன் வசம்_1_ஜான்சி

0
694

அத்தியாயம் 1

யூஎஸ்ஜார்ஜியாமாகாணம்அங்கிருந்தஇருந்தஒருஹோட்டல்அறையின்கடிகாரம்அதிகாலைநேரம்மணிஐந்துஎனக்காட்டியது. அந்த நவீன வகை அறையின் படுக்கையில்நீண்டநெடிய உருவம் ஒன்று ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. அது வேறு யாருமல்ல நம் நாயகன் ஆதி எனும் ஆதவன்தான். ‘நான் வளர்கிறேனே மம்மி’, என வெகுவாக வளர்ந்துஆறேகால்அடி வளர்த்தியில் இருந்தான். மாநிறத்தவன் எனினும் வசீகரன்,அழகன் எனும் வகைக்குள் வருகின்றவன் தான்நம்நாயகன்.

அவனுடைய அலைபேசியில் இருந்தஅலாரம்ஒலிக்கவே, சாவி கொடுக்கப் பட்ட பொம்மை போல உடனே துயில் கலைந்து கண்களைக் கசக்கிக்  கொண்டு எழுந்து அமர்ந்தான். அவனை அந்த அதிகாலை நேரத்துக் குளிர் வெடவெடத்துக் கொண்டு, மீண்டும் இழுத்துப் போர்த்திப்படுத்து, தூங்கச் சொல்லிய போதும் தன் கடமை அழைப்பதை உணர்ந்து தன்னைச் சுற்றியிருந்த அந்தக் கனத்த போர்வையை சரேலென எடுத்து தள்ளிப் போட்டான். உடனே, சுறுசுறுப்பாக காலைக் கடனை முடித்து வந்து அமர்ந்தான்.

முன் தினம் சாயுங்காலம் தன் அலுவலக நண்பர்களோடு வாக்கிங் செல்வதாக நினைத்து, அந்த அமெரிக்க வீதியில் சற்றுத் தூரம் வரையிலும் நடந்தது இப்போது அவனது உடலை சோர்வுறச் செய்து இருந்தது.

முன்பு யூ எஸ் பல முறை வந்திருந்தாலும் ஜார்ஜியா மாகாணத்திற்கு அவன் ட்ரான்சிஷனுக்காக (transition) வருவது இதுவே முதல் முறை. அது அவன் முன்பு வருகை தந்திருந்த மாகாணங்களைப் போல் அல்லாது ஒரு கிராமம் என்பதை முன்தினம் தான் உணர்ந்துக் கொண்டான்.

அவனோடு கூட இந்தியாவிலிருந்து பயணித்திருந்த பிரியங்கா மற்றும் ராகுலோடு நடைபயிலுகையில், ‘என்னடா நாம் மட்டுமே நடந்துக் கொண்டிருக்கின்றோம்? அக்கம் பக்கம் யாரும் அதிகமாகக் காணப்படவில்லையே?’ என அவர்கள் முதலில் எண்ணிக் கொண்டனர். பின்னர், சரேலென குளிர் அதிகமாக தாக்க ஆரம்பிக்கவும், அவர்கள் அவசர அவசரமாக ஹோட்டலுக்குத் திரும்பிய பின்னர் தான் தாங்கள் பேச்சின் சுவாரஸ்யத்தில் வெகுதூரம் நடந்ததை, அவர்கள் கால்வலி அவர்களுக்கு நினைவுபடுத்தியது.

இண்டர்காமில் காஃபிக்கு சொல்லிவிட்டு அங்கிருந்த அலைபேசி அருகில் தன் மடிக்கணிணியோடு அமர்ந்தவன் தன் அலைபேசியை எடுத்து ஒவ்வொரு தகவலாகப் பார்க்கலானான்.

தங்கையிடமிருந்து வாட்சப் தகவல் வந்திருந்தது. ஏதோ ஒரு போட்டோ அனுப்பிப் பார்க்கச் சொல்லி இருந்தாள். இது அம்மாவின் வேலையாகத்தான் இருக்கும். அவருக்கு இந்தச் சமூக வலைத்தளங்கள் பரிச்சயம் இல்லாததால் அந்தப் பொறுப்பைத் தங்கை நிர்மலா ஏற்றுக் கொள்வதுண்டு. தாய் ராஜியை நினைக்கையிலேயே அவன் இதழ்கடையோரம் அழகான புன்முறுவல் வந்து அமர்ந்தது. எப்போதும் அவன் அம்மாவிற்கு தன் மகன் ஞாபகமேதான். பெரும்பாலான தாய்மார்களைப் போலவே தன் மகன்தான் உலகத்திலேயே சிறந்தவன் எனும் எண்ணம் கொண்டவர் அவர்.

கடந்த சில மாதங்களாகவே அவனுக்கான பெண் தேடும் படலம் வெகு தீவிரமாக நடைப்பெற்றுக் கொண்டிருந்ததும் அவனுக்குத் தெரியும். அவனுக்கு இருந்த வேலை அழுத்ததில் அதையெல்லாம் குறித்துச் சிந்திக்கவும், அவர்கள் அனுப்பும் பெண்களின் நிழற்படங்களைப் பார்க்கவும் கூட அவனுக்கு நேரமில்லை என்பதை எத்தனை முறைகள் தான் சொல்வது? இந்தப் பெண் பார்க்கும் படலம் குறித்தெல்லாம் சலிப்பாகத்தான் இருந்தது.

அவன் பெற்றோர்கள் ராமானுஜம் மற்றும் ராஜி எனும் ராஜேஸ்வரி தம்பதியர் பெரியவர்கள் பார்த்து வைத்த திருமணத்தில் இணந்தவர்கள்தான். ஆனால், அவர்களது அந்நியோன்யம் காதல் திருமணங்களைத் தோற்கடித்துவிடும் அளவிற்கு அழகானது. இப்படி இருக்க பின்னர் எதற்காக அவனுக்கு காதல் திருமணம், என்றெல்லாம் சிந்தனை வரப் போகின்றது? வேலை சுய முன்னேற்றம் என்று இருப்பவனுக்கு இந்த விஷயங்கள் சற்று தேவையற்றவை போன்ற எண்ணங்கள் உண்டு. இப்போது என்னவாம்? தன்னை திருமணம் செய்துக் கொள்ளப் போகின்றவளை மனமார காதலித்தால் ஆயிற்று என தனக்கானவளை காதலிக்க தன் மனதை கருப்பு ஸ்லேட்டைப் போல ஒற்றைச் சாக்பீஸின் தீற்றலும் இல்லாமல் பத்திரமாக வைத்திருக்கின்றான்.

அதனால் தான் தாயிடம் அவருக்கு எந்தப் பெண்ணைப் பிடித்திருக்கின்றதோ அதே பெண்ணைப் பார்த்து தனக்காக முடிவு செய்யச் சொல்லி விட்டிருந்தான். இருந்தாலும் கூட தன்னுடைய விருப்பம் அறிய தங்கை மூலம் அடிக்கடி ஏதாவதொரு போட்டோ அனுப்பி வைப்பதே அம்மாவிற்கு வேலையாயிற்று என எண்ணியவனாக, அசுவாரஸ்யமாகத் தங்கை தெரிவித்த ஏனைய தகவல்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பெண்ணிற்கான விபரங்கள் தங்கை அனுப்பிய அதே தகவல்களுல் ஒன்றாக ஒரு கோப்பில் இருக்க, அதை அவன் திறந்தும் பார்க்காததைத்தான் விதி எனச் சொல்வதோ? அதைப் பார்த்திருந்தால் திருமணத்திற்குச் சரியெனச் சொல்லி இருப்பானோ? மாட்டானோ?

தங்கை அதிலிருந்து அனுப்பியிருந்த சில தகவல்களை வாசித்தான். ‘பொண்ணோட பெயர் அகிலா, குறிப்பிட்ட அலுவலகத்தில் ஹெச்ஆர் ஆக பணிபுரிகின்றாள். அவளுக்கு இரண்டு அண்ணன்கள் அவர்கள் பெயர்கள், அவளது அம்மா அப்பா பெயர்கள் இதர விபரங்கள் இருக்க தன்னுடைய கான்காலு(conference call)க்கான நேரம் நெருங்கவே, இனி இதையெல்லாம் பார்க்க நேரமிராது என உணர்ந்தவனாக அசுவாரஸ்யமாய் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை அரைகுறையாகப் பார்த்து தங்கைக்குப் பதில்அனுப்பினான்.

“ஹாய் நிம்மி, ஹவ் ஆர் யூ? ரவி எப்படி இருக்கார்? ( நிம்மி அலையஸ் நிர்மலாவின் கணவர்தான் இந்த ரவி)

“குட்டிப் பையன் பிரணவ் எப்படி இருக்கிறான்?”

“நீ அனுப்பிய விபரங்களைப் பார்த்துவிட்டேன். அதுதான் ஏற்கெனவே அம்மாவிடம் சொல்லிவிட்டேனே, அவர்களுக்கு யாரைப் பிடித்திருக்கின்றதோ அந்தப் பெண்ணையே பார்க்கச் சொல்லிவிடு. எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. நான் இந்தியாவர இன்னும் சில வாரங்களாகும்” தங்கை கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் சிக்கனமாகப் பதிலளித்து விட்டுப் போனை தூக்கி தூரப் போட்டான்.

இதோ இன்னும் சற்று நேரத்தில் இந்திய அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்து விடும் என்று எண்ணியவனாகத் தன்னுடைய கணிணிக்கு உயிர் கொடுத்துக் கொண்டே, கலைந்து கிடக்கும் தன் தலைமுடியை விரல்களால் கோதி பின்னே தள்ளினான். தன் இரு கைகளால் முகத்தைத் தேய்த்து விட்டுக் கொட்டாவி விட்டான். ஒருநாள் தாடி முகத்தில் சொரசொரப்பு கொடுக்க, இன்று ஷேவ் செய்ய வேண்டும்என மனதில் குறித்துக் கொண்டான்.  

நவீன கால ஆண்மகன் ஆயினும் நான் தமிழன் என்றுச் சொல்லும் விதமாக மீசை வைத்திருந்தான். அது அவனுக்கு மிகவும் கம்பீரமான அழகு தந்து கொண்டிருந்தது. தனது 28வது வயதை சமீபத்தில் தான் தாண்டி இருந்தான்.

தனது வேலையில் கடுமையான ஈடுபாடு மற்றும் நிர்வாக மேலாண்மைக் கொண்டவனாய், ஆளுமை மிக்கவனாய், அதே நேரம் அநாவசியமாக வழவழக்காதவனாக, வேலை நேரத்தில் தனிப்பட்ட கோபதாபங்களை ஒரு போதும் வெளிப்படுத்தாதவனாக, இனிமையான குணத்தோடு வேலைக்கு எது தேவையோ அதை மட்டும் முன்னெடுப்பவனாக தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பதால் தான் பணிபுரியும் அலுவலகத்தில் மிகக்குறைந்த வருடங்களிலேயே Transition Manager ட்ரான்சிஷன் மேனேஜர் எனும் பெரிய பதவியில் வந்து அமர்ந்து விட்டிருந்தான்.

அவர்களுடைய இந்திய அலுவலகம் யூஎஸ் மருத்துவர்களுக்கு உதவும் வண்ணம் பணிபுரியும்அலுவலகமாகும். யூஎஸ் மருத்துவர்கள் அந்த நாட்டின் அமைப்பின் படி மருத்துவம் அளித்த பின்னர் நோயாளிகளின் இன்சூரன்ஸுகளுக்கு க்ளைம் அனுப்பி தங்கள் பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஆதி பணிபுரியும் அலுவலகமானது யூ எஸ் மருத்துவர்களுக்கு பதிலாக தாங்கள் க்ளைம்(claim)களை அனுப்பி மருத்துவர்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு இன்சூரன்ஸிடமிருந்து பணத்தை பெற்று தருவதில் நிபுணத்துவம் வாய்ந்தது.

இந்திய அலுவலகங்கள் யூ எஸ் மருத்துவர் அல்லது மருத்துவமனைகளுக்கு உதவுவதாகச் சொல்லி குறிப்பிட்ட வேலைகளை மருத்துவர்களிடம் அவுட்சோர்ஸ் செய்து வாங்கித் தாங்களே செய்து கொடுப்பார்கள். இந்திய கம்பெனிகளிடம் ஒப்பந்தம் செய்துக் கொள்ளும்.

யூஎஸ் மருத்துவர்/மருத்துவமனை தங்களது வேலைகளைச் செய்யக் குறிப்பிட்ட சதவிகிதம் வருவாயை இந்திய கம்பெனிகளுக்கு அளிக்கும். ஒரு யூஎஸ் எம்ப்ளாயியின் ஒருநாள்சம்பளமே இந்தியஎம்ப்ளாயியின் ஒருமாதசம்பளத்திற்கு இணை என்பதாலும், இந்தியாவில் இருக்கும் குறிப்பிட்ட அளவு வேலைக்கான தேவையை இந்நிறுவனங்களே நிறைவுப்படுத்தி வருகின்றன.

இதில், ஆதவன் போன்ற ட்ரான்சிஷன் மேனேஜர்களின் பங்கு எப்போது வருகின்றதென்றால் அவனுடைய கம்பெனிக்கும் யூஎஸ்ஸிலிருக்கும் மருத்துவமனைக்கும் இடையிலான ஒப்பந்தம் முடிவான பின்னர் அவர்களது எதிர்பார்ப்புகள் என்ன? அவர்கள் வேலை செய்யும் முறைகள் எப்படி? என எல்லா விஷயங்களையும் தங்கள் கம்பெனி சார்பாகத் தெரிந்துக் கொண்டு இந்தியாவில் இருக்கும் தங்கள் குழுவினருக்கு தெரியப்படுத்தி அதன் படியே செயல்படுத்த வைக்க வேண்டும்.

 அந்த ஒப்பந்தத்தை முற்றிலும் வெற்றிப் பெறச்செய்ய இரண்டு தரப்பினருக்கும் நடுவில் பாலமாக இருந்து ஆவணச் செய்வதேஆகும். ஏற்கெனவே, அவன் செய்து முடித்த வேலைகளின் தரம் அவன் மதிப்பை உயர்த்தி இருக்க, இம்முறை மறுபடியும் அவனையே அனுப்பி இருந்தது அவன் அலுவலக நிர்வாகம்.

பொதுவாக தான் செய்யும் வேலையை இன்னும் எவ்வாறு திறம்படச் செய்வது என்பதிலேயே அவனுடைய கவனம் இருக்கும், வேறு எதிலும் மனம் இலயிக்காது. வெளிநாட்டில் இருக்கும் தருணம் நாட்டிற்கு நாடு நேரம் மாறுபடுவதால் வீட்டிற்கு அவனாக போன் செய்தால் தான் உண்டு. ராஜியும் மகன் குணம் அறிந்து அவன் போன் வரும் வரையிலும் காத்திருப்பார். எப்படியாகினும் தினமும் தன் இரவு அதாவது இந்திய பகல்(அதிகாலை) நேரத்தில் போன் செய்து தாய் தந்தையிடம் பேசுவதை அவன் வழக்கமாக வைத்திருந்தான்.

முந்தைய தினம் தான் அந்த மருத்துவமனை ஊழியர் ட்ரேஸியிடமிருந்து பெற்றுக் கொண்ட விபரங்களை வரிசையாக அடுக்கி எழுத ஆரம்பித்தான்.

ட்ரேஸிக்கு தன்னுடைய வேலை இந்தியாவிற்கு அவுட்சோர்ஸ் செய்யப்பட உள்ளது, தன் வேலை சில மாதங்களில் பறிபோக உள்ளது எனப் புரிந்த நேரத்திலிருந்து ஆதவனுக்கு சரிவரப் பிடிக்கொடுக்காமல் அரைக்குறையாகத்தான் கற்றுக் கொடுத்தாள்.

அவர்களுடைய வேலைகளைப் பறிப்பவர்களாக இந்தியர்கள் இருக்க, அவள் கோபம் கொள்வதிலும் தவறில்லையே? ஆனால் என்னச் செய்வது? குறைந்த விலையில் நிறைந்த சேவை கிடைக்கும் பட்சத்தில் யார்தான் அதைத் தவறவிடுவார்? இதனால் தான் இது போன்ற அமெரிக்க வேலைகள் எல்லாம் இந்தியா மற்றும் இன்ன பிற ஆசிய நாடுகள் மூலமாக செய்யப் படுகின்றன.

அலுவலகத்திலிருந்து வரும் கான்காலில் பேசும் முன்பாக தான் சேகரித்த தகவலில் எதை முதலில், எதைக் கடைசியில், எவ்வாறு சொல்லவேண்டும்? என்று மனதிற்குள்ளாக வரிசைப்படுத்திப் பார்த்தான் தயாரித்திருந்த ஒரு சில டாக்குமென்டுகள் எல்லாம் தான் சேமித்த இடத்தில் இருக்கின்றனவா? என்றும் சரிபார்த்துக் கொண்டான்.

சற்று நேரத்தில் போனில் அனைவரும் தொடர்பிற்கு வந்தார்கள். அவன் தங்கி இருந்த ஹோட்டலின் பக்கத்து அறைகளில் இருந்த பிரியங்காவும், ராகுலும் கூட அந்த கான்ஃபெரன்ஸ் காலில் இணைந்தார்கள். அவர்கள் இருவரும் அவனைப் போலவே அதே க்ளையண்ட் வேலைக்காக வருகை தந்திருந்தவர்கள்.

சென்னையில் இருந்த கான்ஃபெரன்ஸ் அறையில் அர்ச்சனா யூ எஸ் சென்றிருக்கும் தங்கள் குழுவுடனான பேச்சிற்காக எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திக் கொண்டு இருந்தாள். ஆயத்தம் எனப்படுவது அனைவரையும் ஒன்றிணைப்பது, ப்ரொஜெக்டர், லாப்டாப் எல்லாம் சரியான நிலையில் (condition) இருக்கின்றதா என சரிப் பார்ப்பது. போன் இணைப்பில் எதுவும் பிரச்சனை இல்லையே? என பார்த்துக் கொள்வது.

ஏனென்றால், இத்தகைய கான்ஃபெரன்ஸ் கால்களில் சம்பந்தப்பட்ட குழுக்கள் மட்டுமல்லாது உயர் பதவிகளில் இருப்பவர்கள் அனைவருமே தொடர்பில் இருப்பார்கள். ஏதேனும் ஒரு ஏற்பாடு குளறுபடியாகி, அதனால் அன்றைய மீட்டிங்க் தடைப்பட்டால் எல்லோரிடமும் பேச்சு வாங்க நேரிடும். யூ எஸ்ஸில் வேலையாக சென்று இருப்பவர்கள் வேலைகளும் குறிப்பிட்ட அட்டவணைப்படி முடிக்க இயலாது. இப்படிச்ச் சின்ன சின்ன பிரச்சனைகளால் பல பெரிய பிரச்சனைகள் உருவாகி விடக் கூடும் இப்படி அநேக காரணங்கள் உண்டு.

இப்போது ஆதவன் மற்றும்குழுவினற்குஅழைப்பு விடுக்க ஆயத்தமாக அனைவரும் கான்ஃபெரன்ஸ் அறையில் வந்து குழுமி இருந்தார்கள். ஆபரேஷன்டீம் (புது க்ளையண்ட் வேலையை சிரமேற்று நடத்தப் போகும் குழு), குவாலிட்டி டீம் (சிறப்பாக வேலை செய்கின்றார்களா? என்று அவர்களை கண்காணிக்கப் போகும் குழு), ட்ரெயினிங்க் டீம் ( ஆதவன் & கோ கற்றுக் கொடுப்பதை முழுவதும் அறிந்துக் கொண்டு குழு ஆபரேஷன் டீமுக்கு கற்றுக் கொடுக்கப் போகும் குழு) எனஅனைவரும்இணைந்தனர்.

போன் ம்யூட்டில் (mute) இருந்தது. ஒவ்வொருவராக அந்த அழைப்பில் இணைந்துக் கொண்டிருந்தனர். அவ்வப்போது பீப் சப்தம் எழவும், இப்போது அழைப்பில் இணைந்தது யார்? என்று தெரிவித்து விட்டு மறுபடியும் அனைவரும் அழைப்பை மௌனமாக்கி(mute) இன்னும் ஐந்து நிமிடங்கள் இருக்க மீட்டிங்க் ஆரம்பிக்கக் காத்திருந்தனர்.

அப்போது அங்கே ஆர்ப்பாட்டமாக உள்ளே வந்த ட்ரெயினிங்க் டீம் கவிதா ‘ஏய் நம்ம சாமியார் லைன்ல வந்திட்டானா?” என அர்ச்சனாவிடம் கிண்டலாகக் கேட்டாள்.

“ஸ்ஷ்…” அர்ச்சனா கவிதாவிடம் பேசாதே என்று சொல்லி தன் வாயில் ஒற்றை விரல் வைத்தாள்.

கவிதாவோ “அதுதான் போன் ம்யூட்டில் தானே இருக்கின்றது” என அலட்சியமாகப் பேசியவள் தன் லேப்டாப்பை வைத்து ஏதோ தகவல்கள் சரிபார்த்தாள். கான்கால்ஆரம்பித்தது.(G Suite) ஜிஸ்யூட்டில் (கோப்புகளைக் காட்சிப் படுத்தி விளக்க உதவும் இணைய வசதி) கோப்புகளைக் காண்பித்து ஆதவன் ஒவ்வொன்றாக விளக்கத் தொடங்கினான்.

அவனுக்கடுத்து பிரியங்காவும், ராகுலும் தாங்கள் சேகரித்த தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர். அங்கே தொடர்ந்து பல்வேறு கேள்விகளும் பதில்களுமாக ஒன்றரை மணி நேரங்கள் பரபரவென்று கழிந்தன.

கேள்விக்கு மட்டும் பதில், குறிப்பிட்ட விஷயங்கள் தவிர வேறு எதுவும் பேசாமல் இருந்த ஆதியின் பேச்சு கவிதாவிற்கு எரிச்சலாக இருந்தது. அவன் குணமே அதுதான் அதிகமாக யாரிடமும், குறிப்பாகப் பெண்களிடம் பேசுவதில்லை என மற்றவர்கள் புரிந்துக் கொண்ட அளவு புதிதாக அவ்வலுவலகத்தில் சேர்ந்திருந்த கவிதாவால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஜோக்காக எதைப் பேசினாலும் அவனிடமிருந்து கிடைப்பது மௌனமே. உடனே அடுத்த விஷயத்திற்கு தாவி விடுவான். அதனால்தான் அவன் சாமியார் எனும் பெயரை அவளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு இருக்கின்றான்.

கான்கால் முடிந்ததும் அந்தக் காலை வேளையிலேயே தனது மூளையை கசக்கி பிழிந்தது போன்று ஆதவன் களைப்பாகஉணர்ந்தாலும் கூட அடுத்தாகச் செல்ல வேண்டிய மருத்துவமனை அலுவலகத்திற்கு தயாரானான்.

அவசரமாகக் காலை எட்டுமணிக்கு அந்த மருத்துவமனையின் அலுவலகத்தில் நுழைந்தான். டெய்சியிடம் இன்னும் சில விஷயங்களோடு அவன் சென்னை டீம் விடுத்த கேள்விகளுக்கான பதிலையும் வாங்க வேண்டி இருந்தது. முகமன் கூறி அவள் அருகில் அமர்ந்தான். அவர் அவனிடம் அவ்வளவு நேசமாகவெல்லாம் புன்னகைக்கவில்லை. ஆயினும், தன்னுடைய வேலையைக் கவனமாகச் செய்யஆரம்பித்தார்.

நம்முடைய இந்திய நாட்டினர் போல இவர்கள் இல்லை என ஆதவன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். எந்த ஒரு நேரப்போக்குகளுமின்றி, அவர்கள் பணிபுரியும் அந்தப் பணிநேரங்களில் அவர்களுடைய முழு அர்ப்பணிப்பையும் காட்டுபவர்களாக அவர்கள் இருந்தனர். டெய்சி புறக்கணித்த போதிலும் இலகுவாகப் பேசி பேசி விஷயங்களை கோர்க்க தொடங்கினான் ஆதவன். நேரம் செல்லச் செல்ல அவனுடைய பணி மேலும் அவனை முற்றிலுமாய் உள்ளிழுத்துக் கொண்டது.

இரவு ஓய்வெடுக்கத் தனது ஹோட்டல் அறைக்குத் திரும்பிய பின்னர்ச் சாப்பிட்டு முடித்துத் தன் வீட்டினரை அழைத்துப் பேசினான்.அதன் பின்னர் சற்று நேரம் வாட்சப்பில் உலாவ ஆரம்பித்தான். தனது பள்ளித் தோழர்கள் க்ரூப்பில் திடீரெனச் சலசலப்பு எழுந்திருக்க என்னவென்று பார்த்தான். அவர்கள் தோழன் சுந்தர் சற்று நேரம் முன்பு குழுவிலிருந்து வெளியே சென்றிருந்தான்.

“ச்சே இதுவா? இதுக்காடா இத்தனை அலப்பறை?” எண்ணியவாறு போனை தள்ளி வைக்க, நித்திரா தேவி சுகமாக அவனை அணைத்துக் கொண்டாள்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here