உள்ளம் உந்தன் வசம்_2_ஜான்சி

0
278

அத்தியாயம் 2

யூ எஸ்ஸில் மற்றொரு நாள்:

“அம்மா…எப்படி இருக்கீங்க?” தூக்ககலக்கத்தில் கொட்டாவி விட்டவாறே பேசிக் கொண்டிருந்தான் ஆதவன்.

“நல்லாயிருக்கேன் கண்ணா…ரொம்ப அசதியோ? தூங்குடாம்மா நாளைக்குப் பேசலாம். ‘

“அதெல்லாம் ஒன்னுமில்லம்மா, இனி தூங்கதான் வேணும். நீங்க சொல்லுங்க?’

“அங்க குளிர் அதிகமோ? உடம்ப நல்லா பார்த்துக்க, என்ன சாப்பிட்ட?’

“அதெல்லாம் சாப்பிட்டாச்சும்மா?”

“என்னத்த சாப்பிட்டிருப்ப? பாக்கெட் பாக்கெட்டா அந்த மேகியை தான கொண்டு போன?” ஆதங்கப்பட்டார் அம்மா.

“இங்க அதில்லன்னா உயிர் வாழ முடியாது அம்மோய்” என்று மனதிற்குள் எண்ணியவன் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை.

அப்பா லைனில் வந்தார், “ஆதி எப்படியிருக்க? ‘

“நல்லாயிருக்கேன்பா, நீங்க எப்படி இருக்கீங்க, மாத்திரை சரியா சாப்பிடுறீங்களா? அம்மாவையும் ஒழுங்கா மாத்திரை சாப்பிட வைங்க.”

“அவ என்னிக்கு என் பேச்சைக் கேட்டிருக்கா?”, பக்கத்தில் மனைவி முறைப்பதைப் பார்த்துப் பேச்சை மாற்றினார்.

“சரி சரி அவளுக்கும் நானே மாத்திரை எடுத்துக் கொடுக்கிறேன். நான் சொல்லுற நேரத்தில அவளை ஒழுங்கா சாப்பிடச் சொல்லுடா…”

சட்டென்று போன் இழுபட்டது.

“ஏன்டா ஆதி, எதுக்கு இவர்ட இதெல்லாம் சொல்லிட்டு இருக்க, இனி பாரு என்னைத் துரத்தி, துரத்தி மாத்திரை சாப்பிடச் சொல்லி டார்ச்சர் செய்வார்டா?’

“புள்ள கிட்ட பேசுனா, அத்தோட நிக்கணும், என்னை வம்பிழுக்கக் கூடாது.’

கோபத்தில் மறுபடி போன் அப்பா கையில் சென்றிருந்தது. மௌனச் சிரிப்பில் இருந்தான் ஆதவன். ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொள்வார்கள். மறுநிமிடம் மறந்து, சிரித்துப் பேசிக் கொள்வார்கள். அதைப் பார்க்கவே மிக இரசனையாக இருக்கும். இன்றைக்குப் போனில் அத்தனையும் கேட்க கிட்டியதும் மனம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.

‘என் பெற்றோர்களைப் போல இல்லாவிடினும், இதில் பத்திலொரு பங்கு அந்நியோன்யம் எனக்கும் என் மனைவிக்கும் இருந்தாலே போதும்’ என எண்ணிக் கொண்டு இருந்தான்.

உள்நாட்டுப் போர்முடிந்து அப்பா போனில் பேச வந்திருந்தார்.

“ஆதவா…’

“சொல்லுங்கப்பா… ‘

“பொண்ணு விபரம் பார்த்தில்ல?…உனக்குத் திருப்தி தானே?”

“ஆமாம்பா…”

“உங்க அம்மாவுக்கு அந்தப் பொண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கு, நான் எவ்வளவோச் சொல்லியும் அந்தச் சின்ன விஷயத்தைப் பெரிசுபடுத்த வேண்டாம்னு சொல்லிட்டா… எதுக்கும் நீ கொஞ்சம் யோசிச்சுக்கோ. வாழ்நாள் முழுக்க வரக்கூடிய உறவு, நீ ஒரு போதும் பின்னாடி வருத்தபடக் கூடாது. என்ன நான் சொல்லுறது புரிஞ்சதா?”

அப்பா அவனிடம் என்னச் சொல்ல வருகிறார்? எதைக் குறித்துப் பேசுகிறார்? என்று அவனுக்குப் புரியவில்லை. அவர் பெண்ணின் தகவல்கள் அடங்கிய கோப்பு (file) அவன் வாசித்திருப்பான் என்று எண்ணிப் பேச, அவனோ எதையும் கேட்கும் நிலையில் இல்லை, தூக்கம் அவன் கண்களைச் செருக ஆரம்பித்திருந்தது.

வழக்கமான டயலாக்கை எடுத்துவிட்டான், “அம்மாக்கு சரின்னா எனக்கும் ஓகேப்பா, எனக்கென்ன வேணும்னு அவங்களுக்குத் தெரியாதா என்ன?”

சில நிமிடங்கள் பேசி அலைபேசியை வைக்க அவசரமாய் தூக்கம் அவனை இறுக்கத் தழுவிக் கொண்டது.

பிரியங்கா, ஆதவன், ராகுல் நாயர் ரெஸ்டாரெண்டில் அமர்ந்திருந்தனர். அன்றைய தினத்தின் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு சின்னச் சின்னச் சிரிப்புகளோடு பேச்சுக் கடந்துக் கொண்டிருந்தது.

தங்கள் மேலதிகாரிகளைக் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள்.

“ஓயே ஆதவா, ட்ரெயினிங்க் டீம்லருந்து ஒரு ஆள் உன் மேல ரொம்ப இன்ட்ரெஸ்ட் காட்டுறாப்ல?” பிரியங்கா சீண்டினாள், ராகுல் சிரிக்க

ஆதவன் வெட்கமாய் புன்னகைத்தான்…

“ஹே ஷீ இஸ் கிட்டிங்க்யா” (பிரியங்கா பேசுவது விளையாட்டுப் பேச்சுப்பா நீ வேற தப்பா எடுத்துக்காதே என்பதாக) ராகுலுக்கு ஆதவன் பதிலளித்தான்.

“அதுக்கு ஏன்டா உன் முகம் இப்படிச் சிவக்குது?”

“உன்னை சாமியார்னு சொல்லி கிண்டலடிக்கிறாளாம்…அர்ச்சனா சொல்லிட்டு இருந்தா… ‘

“சொல்லிட்டுப் போகட்டும், இப்ப என்ன குறைஞ்சுப் போச்சு? ‘

“யோசிச்சுக்கோடா…உன் ஹைட்ல பொண்ணு கிடைக்கிறது கஷ்டம். இந்தப் பொண்ணு உன் அளவுக்கு வளர்த்தி. அவளுக்கும் நீதான் சரியான ஜோடின்னு தோணியிருக்கும். அதனாலத்தான் உன் கிட்ட க்ளோஸா பேச முயற்சி செஞ்சுட்டு இருக்கிறா?”என்றான் ராகுல்.

ராகுல் எதையும் யோசித்துத் தான் பேசுவான், அதனால் அவன் கணித்தது சரியாக இருக்குமோ? என ஆதவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. அந்த கவிதா வந்த நாள் முதலாக அவனையே அடிக்கடி தேடி வந்து பேசுவதையும் கவனித்து இருக்கின்றானே?

“அப்படியா சொல்லற ராகுல்?, என்னோட மேரேஜீக்கு வீட்ல பார்த்துட்டு இருக்கிறாங்க, என் வருங்கால மனைவி நிச்சயம் அம்மாவோட சாய்ஸாதான் இருக்கும்…இருக்கணும்னு நினைச்சிருக்கிறேன். நானா கவிதாக்கு எதுவுமே பாசிடிவா தூண்டுதல் கொடுத்ததில்லையே? நீங்க யாராவது அவள் மனசில அப்படி இருந்தா பேசி மனசை மாத்திக்கச் சொல்லுங்கப்பா…”

“புல்ஷிட்…”பிரியங்கா முனகினாள்.

இரண்டு ஆண்களும் புதிராய் பார்த்தனர்.

“நீ எந்தக் காலத்தில இருக்க ஆதவா? உன் மேரேஜ் உன் சாய்ஸ் இல்லையா? அம்மா ஆட்டுக்குட்டின்னு…ஸாரி டு சே திஸ்…ஆனா நீ ரொம்ப பிற்போக்குத்தனமா யோசிக்கிற… “

ஆதி முகம் கருத்துப் போவானென எண்ணியிருக்க, அவள் கூறியதை அவன் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை என்பதை இருவரும் கண்டனர். சண்டை மூழுமோ? எனப் பயந்துப் பார்த்த ராகுலுக்கு நிம்மதியாகவும், சண்டை வரட்டுமே இவனை இன்று திருத்தி விட்டு தான் வேறு வேலை என்றெண்ணி இருந்த பிரியங்காவிற்கு எரிச்சலாகவும் இருந்தது.

“சீ(see) பிரியங்கா…நான் ஆபீஸில் என் பர்சனல் விஷயங்களை விவாதிப்பதில்லை. அவை என்னுடைய முடிவுகள், என் வாழ்க்கையில் யார் என்ன முடிவு எடுக்க வேண்டும்? எனத் தீர்மானிக்க வேண்டியது நான்தான். ராகுல் தன் கணிப்பைச் சொன்னபோது, என்னால் ஒரு பெண் தவறான முடிவிற்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவே அந்த விளக்கம் சொன்னேன். இல்லையென்றால் என் திருமண அழைப்பு வரும் வரையில் கூடயாருக்கும் எதுவும் சொல்லும் எண்ணம் எனக்குக் கிடையாது.”

“…”

“அலுவலகம் வேறு, பர்சனல் வேறு இரண்டிற்கும் இடையில் பெரியகோடு கிழித்து வைத்திருக்கிறேன். நீ சொன்னது உன்னுடைய ஒபீனியன்…அதைக் குறித்து நான் எதையும் சொல்வதாக இல்லை. நாம் அலுவலக நண்பர்கள் அவரவர் எல்லைக்குள் இருப்பதே சிறந்தது என எண்ணுகிறேன்”,எனச் சொல்லி முடித்தான்.

சற்று நேரம் அங்கு அசைவே இல்லை. ஆதவனைப் பற்றி எல்லோருக்குமே தெரியும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் மூக்கை நுழைக்க மாட்டான். தான் உண்டு தன் வேலை உண்டு எனும் குணம் அவனுடையது. தான் பேசியது தனக்கே தவறு எனத் தோன்றிவிட பிரியங்கா “ஸாரி” என்றாள்.

“தேட்ஸ் ஓகெ” என அதை புறம் தள்ளினான் ஆதவன்.

மறுபடி கலகலப்பாக பேச்சுத் தொடர்ந்தது.

“நேத்து போன இடத்துக்கு சாப்பிட போவோமா?” என ராகுல் சீண்ட இடம் கலகலத்தது.

“வேண்டாம்பா…நேத்து டாய்லெட்டில் தான் பாதி நேரம் கழிந்தது…” வாய்ப் பொத்தி சிரித்து வைத்தார்கள் அவர்கள். இந்தியன் புட் எனவும் ஆர்வமாக ஒரு ரெஸ்டாரெண்டுக்குச் சென்றிருக்க, உணவு உரைப்பில்லாமல் இருந்தது.

நம்மூரில் ஸ்பைஸி என்றால் மிளகாய்த்தூள் சேர்ப்பார்கள் என்ற விதத்தில் கொஞ்சம் ஸ்பைஸியாக வேண்டும் என இவர்கள் கேட்க, அவர்களுடைய ஸ்பைஸியின் அர்த்தமாக கரம்மசாலாவை போட்டு கொடுத்து விட்டனர்.

அதனைச் சாப்பிட்டு உள்ளும் புறமும் எரிய ஆரம்பித்தது, முன் தினம் வெகு சிரமப்பட்டுப் போனார்கள் அதை எண்ணியே அந்தச் சிரிப்பு.

‘ஈஸ்ட் ஆர் வெஸ்ட் மேகி இஸ் த பெஸ்ட்” என்றாள் பிரியங்கா…”தேட்ஸ்ட்ரூ”,என்றவர்களாக ராகுலும், ஆதவனும் புன்னகைத்தனர்.

மூன்று வாரங்கள் கழிந்திருந்தன…

நாளைக்கு ப்ளைட் என தாயகம் செல்ல அவரவர் பெட்டிப்ப டுக்கையைக் கட்டிக்கொண்டு இருந்தனர்.

அங்கே சென்னையில் அம்மா அந்தப் பெண்ணோடு இவனுக்கான நிச்சயதார்த்தத்திற்கான நாளை குறித்துவிட்டிருந்தார்.

அம்மா மிகவும் சந்தோஷமாக இருப்பதாகத் தோன்றியது. ஆனால், எதற்காக அப்பாவும், தங்கையும் அவனிடம் நல்லா யோசிச்சுக்கிட்டியாடா? நல்லா யோசிச்சுக்கிட்டியா? உனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம்தானே?என்று கேள்வி கேட்டு குடைந்தார்கள் என்று அவனுக்குப் புரியவே இல்லை.

போன் கேலரியை க்ளியர் செய்யும் போது வாட்சப்பில் வந்திருந்த அந்தப் பெண்ணின் புகைப்படமும் டிலிட் ஆகிவிட்டிருந்தது. அதுதான் சென்னைச் சென்ற அடுத்த வாரமே நிச்சயதார்த்தம் இருக்க,நேரில் போய்ப் பார்த்துக் கொள்ளலாம், என்ன அவசரம்? என அவன் அதைக் குறித்து அலட்டிக் கொள்ளவில்லை.

அம்மா அவன் அன்று புறப்படவிருப்பதை அறிந்து இரண்டு மூன்று முறைகள் அவனுக்கு அழைத்துவிட்டிருந்தார். அவனைப் பாராமல் இருப்பது அவருக்கு கஷ்டமாக இருக்கும் என்பது தெரியும். ஆனால், வேலையும் முக்கியமாயிற்றே?

அம்மாவிற்காக வாங்கிய பொருட்களைப் பத்திரப்படுத்தி இருந்தான். பொதுவாக வெளிநாடுகளில் அடிக்கடி பயணங்கள் செய்தாலும் அவன் அதிகமாய் எதையும் வாங்குவதில்லை. லக்கேஜ் எடை அளவிற்கு அதிகமாகக் கூடினால் அதற்கான தொகை அவன்தானே கட்டியாக வேண்டும்? அதனை ஆபீஸிலிருந்து பெற்றுக் கொள்ள முடியாதே?

நல்ல சம்பாத்தியத்தில் இருந்தாலும் தாய் தகப்பன் போலவே எல்லாவற்றிலும் கோடு போட்டு வாழுவது அவனுடைய குணம். அவனுடைய வாழ்க்கையில் அம்மா அப்பாவிற்குத்தான் எப்போதுமே முதல் இடம். இவ்வளவு அருமையான பெற்றோர்கள் யாருக்கு கிடைப்பர்?, நான் மிகவும் ஆசீர்வதிக்கப் பட்டவன் என்று பெருமிதம் கொள்வான்.

விமான நிலையத்திற்கு புறப்படடாக்ஸிஅழைக்கும் முன்பே, கடைசி நேரத்தில் அவனுடைய பாஸின் போன் வந்தது.

‘ இந்நேரம் இவர்போன்செய்கிறாரா? என்ன விஷயமாக இருக்கும்?” கேள்வியோடே அழைப்பை ஏற்றான்.

தற்போது ஜார்ஜியாவில் அவர்கள் எந்த வேலைக்காக வந்தார்களோ அந்த கிளையண்டின் இன்னொரு குறிப்பிட்ட வேலையையும் கூடுதலாக அவுட்சோர்ஸ் செய்யக் கேட்டிருக்கிறார்களாம். அதற்கான ஒப்பந்தங்கள் பதிவானதும் உடனே ட்ரான்சிஷன் ஆரம்பித்து விடும் என்பதால்அதற்காக அவனைமட்டும் தொடர்ந்து மூன்றிலிருந்து, நான்கு வாரங்கள் வரை யூஎஸ் ஸிலேயே தங்கச் சொல்லி கேட்டுக் கொண்டார்.

நிச்சயதார்த்தம் ஒருபக்கம் இருந்தாலும், இவன் மேல் உள்ள நம்பிக்கையால் அல்லவா இவனுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது? அந்த சந்தர்ப்பத்தை விட்டு விடாமல் பயன்படுத்தவே அவன் எண்ணினான். தாயிடம் கேட்டால் நிச்சயதார்த்தத்தை அவர் தள்ளி வைத்து விடுவார் என்று எண்ணினான். அவனது எதிர்கால திட்டங்கள் நிறைவேறக் கிடைக்கும் வாய்ப்புக்களை விடவும், அவனுடைய திருமண வாழ்க்கை மிக முக்கியமாக அப்போது தோன்றவில்லை.

பிரியங்காவும், ராகுல்நாயரும் விடைப்பெற்றுச் சென்றனர். தன்னை எதிர்பார்த்திருக்கும் அம்மா வருத்தப்படுவாரே எனநினைத்துக் கொண்டே தகவல் சொல்ல போனை அழுத்தினான்.

‘ஹலோ, அம்மா…’

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here