உள்ளம் உந்தன் வசம்_3_ஜான்சி

0
308

அத்தியாயம் 3

ஒரு வாரம் கழிந்திருந்தது. ஆதவன் தனக்கான ஹோட்டலறையில் கட்டிலின் மேலே முதுகுக்குத் தலையணைக் கொடுத்து தனது கால்களை ஆசுவாசமாய் நீட்டி அமர்ந்தவன் நிர்மலா அனுப்பியிருந்த போட்டோக்களை ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவன் இல்லாமலேயே அவனுடைய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தது.
அம்மாவிடம் தனக்கு யூ எஸ்ஸில் செய்து கொண்டிருந்த அலுவலக வேலையில் இன்னும் சில வாரங்கள் நீட்டிப்புச் செய்ய வேண்டுமென்றும், தான் இப்போது தாயகம் வர முடியாத சூழல் என்றும் விபரம் சொன்னதும், அடுத்த நாள் மகன் வருவான் என வெகு ஆர்வமாய் இருந்தவருக்கு மிக வருத்தமாக இருந்தது.
ஆதவன் தன்னுடைய நிச்சயதார்த்தத்தைத் தான் இந்தியா வந்த பின்னர் வைத்துக் கொள்ளலாம் எனக் கூறவே, அம்மாவும் பெண் வீட்டாரிடம் இது குறித்துக் கலந்துப் பேசி விட்டுச் சொல்வதாகக் கூறியிருந்தார்.
இரண்டு நாட்கள் கழித்து மகனிடம் பெண் வீட்டில் நிச்சயதார்த்தத்தைக் குறிப்பிட்ட தினத்திலேயே நடத்தும் படி கூறியதாகச் சொன்னார். தான் இல்லாமல் எப்படி நிச்சயதார்த்தம்? என வியந்தவனுக்கு அவரே விளக்கமும் கொடுத்தார்.
பெரும்பாலும் வெளி நாடுகளில் பணி புரியும் மணமகன்கள் நிச்சயதார்த்தம் இந்த முறையிலேயே நடைபெறும் என்றும், நிச்சயத்தன்று மாப்பிள்ளையின் தாயார் பெண்ணின் தலைக்குப் பூச்சூடி ‘இவள் என் வீட்டு மருமகள்” என்று நிச்சயப்படுத்தி வருவார்களாம்.
இதனைப் ‘பூ வைத்தல்’ என்றும் சொல்வார்கள் என்று கூறினார். அதிலும், இந்த நிச்சயத்தில் ஏற்கெனவே இருவர் வீட்டு நெருங்கிய சொந்தங்கள் மட்டும் தான் பங்கு கொள்வதாக இருந்ததால், மாப்பிள்ளையான ஆதவன் வராதது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை என்று கூறினார். அதனைக் கேட்டு அவனுக்கு ஆச்சரியமாக இருந்தாலும், சரி என்று ஏற்றுக் கொண்டான்.
இதற்குத்தான் திருமணங்களில் கலந்து கொள்ளும் போது அது குறித்த மற்ற விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பது? எனத் தன் மனதில் எண்ணிக் கொண்டான்.
அந்த நிச்சய புகைப்படங்களை யார் எடுத்ததார்களோ? ஒரு போட்டோவிலும் கூடப் பெண்ணின் முகம் முழுமையாகத் தெரியவில்லை. பெண்ணின் உருவம் தெரியும் போட்டோக்களில் எல்லாம் பெண் தலைக் குனிந்து அமர்ந்திருந்தாள், இந்தக் காலத்தில் இப்படி ஒரு அடக்கமான பொண்ணா? அவனால் நம்பவே முடியவில்லையே?
ஒவ்வொரு போட்டோவிலும் அவளைச் சுற்றி இவனின் சொந்தம் பந்தம், உறவினர் குழந்தைகள் எல்லாம் கசகசவென்று இருந்தவாறே எடுக்கப் பட்டிருந்தது. வீட்டிற்குள் நிகழ்ந்த விழா என்பதால் அவ்வளவு வசதியாகப் போட்டோக்கள் எடுக்க முடியவில்லை போலும்?
ஒரு புகைப்படத்தில் அம்மா அவள் முன் குனிந்திருக்க, அவள் முகம் மறைந்து கண்கள் மட்டுமே பளீரிட்டுக் கொண்டு இருந்தது. வெகு நேரம் அந்தப் போட்டோவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் கண்கள் வெகுவாக உணர்வை வெளிப்படுத்தும் கண்களாகத் தோன்றிற்று.முழு முகத்தையும் பார்க்க மனம் தூண்டினாலும் சரி, என்ன இருந்தாலும் திருமணத்தில் சந்தித்துக் கொள்ளத்தானே போகிறோம், பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணினான்.
ஆதவன் நிச்சய விபரம் யார் மூலமோ தெரிந்திருக்க, பள்ளித் தோழர்களின் வாட்சப் க்ரூப்பில் கங்கிராட்ஸ் என ஒருவர் மாற்றி வாழ்த்த தொடங்கினர். எல்லோரும் அவனிடம் ட்ரீட் கேட்டுக் கொண்டிருந்தனர்.
புன்னகையோடு பார்த்திருந்தவன் Thanks to all (எல்லோருக்கும் மிக்க நன்றிகள்) எனச் செய்தியை தட்டி விட்டு அம்மாவிற்கு அழைத்தான். புகைப்படங்கள் எல்லாம் நன்றாக இருந்தனவா? எனக் கேட்ட அம்மாவை ஏமாற்றாமல் ‘ஆமாம் அம்மா’ எனச் சொன்னான்.
திருமணத் தேதியைச் சொல்லி செய்ய வேண்டிய வேலையெல்லாம் பட்டியலிட்டு, ‘உனக்கு எப்படிச் செய்யணும்டா கண்ணா?’ … என அம்மா வெகு ஆர்வமாக ஒவ்வொன்றையும் பேசிக் கொண்டிருந்தார்.
சில விஷயங்களுக்குத் தன் கருத்தை தெரிவித்தவன், அப்பா கிட்ட போன் கொடுங்க, நான் விபரம் சொல்லிடறேன் என்று அவரிடம் விபரங்களைப் பகிர்ந்து கொண்டான்.
‘நான் பார்த்துக்கிறேன் ஆதவா, நீ உன் வேலையைச் சீக்கிரம் முடிச்சிட்டு வரப்பாரு’, என்றார். சரிப்பா என்றான்.
அவனே இந்தியா திரும்ப விரும்பினாலும் அவனது சேல்ஸ் டீம் அதாவது வியாபார ஒப்பந்தங்களை இடும் குழு செய்த சொதப்பல்களினால் இவன் வேலை ஆரம்பிப்பது தாமதமாகிக் கொண்டிருந்தது.
இதற்கு ஆதவன் தன் நிச்சயத்திற்கு இந்தியாச் சென்று விட்டு, திரும்ப வந்திருக்கலாம். இந்தியா போக, யூ எஸ் திரும்ப வர என்று அவனுக்கான இரண்டு ப்ளைட் டிக்கெட் செலவை சேமிப்பதற்காக அவனுடைய அலுவலகத்தினர் இப்படிச் செய்திருக்க வேண்டாம் எனக் கடுப்பாகத் தோன்றியது.
முன்பாகிலும், அவனோடு கூட நேரம் போக்க அவன் அலுவலகத் தோழமைகள் இருந்தனர். இப்போது காலையில் இந்தியாவிலிருந்து வரும் queries சந்தேகங்களை நிவர்த்திச் செய்யும் கான்கால்கள், அவ்வப்போது அவற்றின் காரணமாகச் சில மணி நேரங்கள் க்ளையண்ட் அலுவலகம் சென்று வருவது தவிர, மீதி நேரங்களின் செய்வதற்கு ஒன்றுமில்லாத வெட்டி நேரம், பழக்கமில்லாத அந்தக் கடும் குளிர், கூடவே தனிமை என மிகவும் சலிப்பாக இருந்தது. ஹோம் சிக் எனும் தனிமையின் வாட்டம் என்பது அவனையும் சேர்த்து எல்லோருக்கும் பொதுவானதே.
திருமணத்திற்கான தேதி தெரிந்து விட்டதால் உடனே விடுமுறைகளுக்காக அனுமதி கேட்டு வைத்தான். நிச்சயதார்த்தம் போலத் திருமணம் இவனின்றி நடக்கவியலாதே? முன்பாகத் தெரிவிக்காவிட்டால், திருமணத்திற்கு லீவுகள் எடுக்க முடியாதபடி, மறுபடி ஏதாவது ஒரு வேலையை இவன் தலையில் கட்ட தயாராக இருப்பார்கள். எனவே முன்னெச்சரிக்கையாக விடுமுறைக்கு கேட்டு வைக்க அதற்கும் உடனேயே அனுமதி கிடைத்து விட்டிருந்தது.
திருமணத்திற்குப் பத்து நாட்கள் முன்பிருந்தே விடுமுறைக்காக கேட்டிருந்தான். அம்மாவும் , அப்பாவும் அவன் திருமணத்திற்காக ஓடிக் கொண்டிருப்பது அவனுக்குச் சிரமமாக இருந்தது. தங்கை திருமணத்தின் போது அவர்களுக்குச் சிரமம் கொடுக்காமல் எல்லாவற்றையும் தானே பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது தன் திருமணத்தில் வயதில் பெரியவர்களை வருத்துவது அவனுக்குப் பிடிக்கவில்லை.
சில வாரங்கள் கடந்திருந்தன, அவன் செய்ய வேண்டிய வேலைகள் ஏற்கெனவே ஆரம்பித்து, அவை தற்போது முடியும் தருவாயில் இருந்தன. கவிதா இப்போதெல்லாம் தினசரி கான்காலில் அவனிடம் அநாவசியமாக எதையுமே பேசுவதில்லை. ஆதவன் சொன்னப் படியே பிரியங்காவோ, ராகுலோ அவளுக்குத் தெளிய வைத்திருக்கலாம், அவனது திருமண விபரம் தெரிய வந்திருக்கலாம் எதுவாயினும் அது நல்ல விஷயம் தான்.
இன்னும் ஒருவாரத்தில் ஊருக்கு புறப்பட வேண்டும் என்றிருக்க, வேலை ஜவ்வாய் இழுத்தது. இப்போது தான் விபரம் சேகரிக்க வேண்டிய நபராகிய டோனி ஏதோ ஒரு அவசர வேலையாய் லீவில் இருந்தான். அவன் வந்த பின்னரே தகவல்கள் சேகரிக்க முடியும்.
ஆதவனிடம் அவன் அம்மா ‘எப்போ வருவ? எப்போ வருவ?’ எனக் கேட்டு களைத்துப் போய் விட்டார். திருமணத் தேதி நெருங்கிக் கொண்டிருக்க, பலரும் பல கேள்விகள் அவரைக் கேட்டுத் துளைக்க, மகன் வராமல் அவர் பரிதவித்தார். ஆதவனுக்கோ அம்மாவிற்குத் தன்னுடைய அலுவலக விபரங்கள் சொன்னாலும் புரியாது என்பதால் சீக்கிரமே வருவதாகச் சுருக்கமாகச் சொல்லி அழைப்பை வைத்தான். பொதுவாகவே யாரிடமும் நீளமாகப் பேசுவது, விளக்கங்கள் கொடுப்பது அவனுக்கு ஒவ்வாத ஒன்று.
தனிமையில் இருந்தவனுக்கு அரட்டை அடிக்க ஏதுவாக அன்றைய தினம் சுந்தர் அவனுக்குப் போன் செய்திருந்தான்.
‘ஹலோ சுந்தர், எப்படி இருக்க?’
‘நல்லா இருக்கேன் ஆதவா, திருமணம் நிச்சயமாகிடுச்சாமே வாழ்த்துகள்.’
‘நன்றிடா …’
‘நான் இப்ப நம்ம க்ரூப்ல இல்ல, அதனால எனக்கு தாமதாகத்தான் தெரிய வந்தது. தப்பா நினைச்சுக்காத…’
‘அதுக்கு ஏன்டா நான் தப்பா நினைக்கப் போறேன்? ஒன்னும் பிரச்சனை இல்ல வீட்டுக்கு வந்ததும், நம்ம ப்ரெண்ட்ஸ் எல்லோர் வீட்டுக்கும் வந்து கார்ட் கொடுக்க வருவேன். அப்ப நாம மீட் செஞ்சுக்கலாம்.’
‘ம்ம்…’ சுந்தர் ஏதோ தயங்கவே…
‘என்னாச்சு சுந்தர்?’
‘நான் இப்ப அந்த அட்ரஸ்ல இல்லடா ஆதவா..’
‘ஏன் எல்லாரும் வீடு மாறிட்டீங்களா?’
‘இல்லடா நான் மட்டும் தான்…’
‘என்னது?’ ஆதவன் அதிர்ச்சியடைந்தான்.
…………..
‘அப்படின்னா அம்மா, அப்பா அண்ணா அண்ணில்லாம்…?’
‘அவங்க அங்கேயே தான் இருக்கிறாங்க…’
‘ஓ…’ ஏதோ புரிவது போலிருக்க, இதற்கு மேல் கேட்பது நாகரீகம் இல்லையென்று மேலும் தூண்டி துருவி கேட்காமல் விட்டான் ஆதவன்.
‘அதொன்னுமில்லடா, அம்மாவுக்கும், என் பொண்டாட்டிக்கும் வள்ளுசா (முற்றிலும்) ஆகல, எந்நேரமும் சண்டை சச்சரவு. அதனால தனிக்குடித்தனம் வந்துட்டேன். இப்பதான் நிம்மதியா இருக்கு… இந்தப் பிரச்சனையிலதான் வாட்சப் க்ரூப்லாம் எக்ஸிட் பண்ணினேன்.’
‘ம்ம்…’
‘நான் என் புது அட்ரஸ் உனக்கு அனுப்பி வைக்கிறேன், அங்கே வாடா சரியா?’
‘சரிடா… மீட் பண்ணலாம்.’
‘சரி, சரி பை(bye)டா…’
ஆதவன் மனதில் தான் அறியாமலேயே பெரும் புயலை கிளப்பி விட்டுவிட்டுப் போனை வைத்திருந்தான் சுந்தர்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here