உள்ளம் உந்தன் வசம்_4_ஜான்சி

0
409

அத்தியாயம் 4

  திருமண வீடு களைக் கட்டிக் கொண்டு இருந்தது. ஊரில் இருந்து பெரியவர்கள் சிலர் குடும்பமாக வந்திருந்தனர். அனைவரும் பெண் வீட்டார் குறித்துக் குடைந்து எடுத்து விட்டனர்.உறவில் அல்லாமல் அசலில் பெண் எடுத்ததால் அனைவருக்குமே ஒரு விதமான ஒவ்வாமை உணர்வு.
தன் மகனுக்காகப் பெண் பார்த்து முடிவு செய்தது எல்லாமே ராஜிதான். ஒவ்வொரு முறையும் மகளையும் எல்லா விஷயத்திலும் அழைத்துக் கொள்வார். மற்ற படி இரு தரப்பு உறவினர்களையுமே அவர் இவற்றில் முதன்மைப் படுத்தி இருக்கவில்லை.

பல்வேறு திருமணங்களில் பொறாமை காரணமாகவும், கெட்ட எண்ணங்கள் காரணமாகவும் உறவினர்களே பிரச்சனைகள் பல உருவாகக் காரணிகளாக இருப்பதை அவர் கண்டு கொண்டிருந்தார். அதிலும் தங்கள் மகளுக்கு உறவுக்குள்ளேயே ரவி வீட்டினர் பெண் கேட்டு வந்தபொழுது, நன்கு தெரிந்த பையனாயிற்றே என்று மகிழ்ச்சியோடு விசாரிக்க ஆரம்பித்தனர்.
அலுவல் காரணமாகப் பெங்களூரில் வசிக்கின்றவனைப் பற்றி அவர்கள் உறவினர்களே எத்தனை புரளிகள் கூறினர்? ‘யோசிச்சு பொண்ணு கொடு பெங்களூர் நல்ல ஊர் இல்ல, பையனுக்கு ஏதாச்சும் தப்புத் தண்டா செய்யற பழக்கம் இருந்தால்?’ என ஆளாளுக்கு யூகங்களாக அள்ளி வீசிக் கொண்டிருக்க, ஆதவனே நேரில் சென்று சந்தித்து, ஆராய்ந்தறிந்து ரவி குறித்து உறுதி செய்த பின்னர் பெண் கொடுக்கச் சம்மதித்தனர்.
நிர்மலாவும், கணவன் குழந்தையோடு இப்போது மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கின்றாள். ரவியோ மனைவியின் பெற்றோர் ஏதாகிலும் விசேஷங்களில் அழைக்கும் நேரம் எல்லாம் தன்னால் அவளோடு ஊருக்கு செல்ல முடியாவிட்டாலும் மனைவி, மகனை முகம் சுணங்காமல் தாய் வீட்டிற்கு ப்ளைட் ஏற்றி விட்டு விடுவான். இதுவரை மருமகனைக் கொண்டு ஒரு பிரச்சனை என்று அவர்களுக்கு வந்ததில்லை. ரவி அத்தனையான அனுசரனையான குணம் கொண்டவன்.
தங்களது உறவினர்கள் பேச்சைக் கேட்டிருந்தால் இத்தகைய மாப்பிள்ளையைத் தவற விட்டிருப்பார் அல்லவா? அதிலிருந்தே தன் மகனுக்குப் பெண் பார்க்கும் போது உறவினர்களை எட்டவே நிறுத்தி விட வேண்டும் எனும் எண்ணம் அவர் மனதில் வேரூன்றி விட்டிருந்தது.
மகன் தன்னிடம் தன்னுடைய விருப்பம் என்று எதையும் குறிப்பிடாமல், அவரையே தனக்கேற்ற பெண்ணைப் பார்க்க சொன்னதும் இன்னும் அதிகமான பொறுப்பு கூடிவிட்டதென உணர்ந்தார். தன் மகனுக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும்? என்று எண்ணினாரோ அது போலவே பெண்ணைப் பார்த்ததும் கணவர், மகள், மருமகன் சகிதம் சென்று பேசி முடித்து நிச்சயத்திற்கு மட்டுமே தங்கள் இருவர் பக்க குடும்பத்தினரையும் அழைத்திருந்தார்.
இருவர் வீட்டுச் சொந்தங்களுக்கும் அதில் மனத்தாங்கல் இருந்தது. இவர்களைத் திருப்திப் படுத்த போய், தான் தன் மகன் வாழ்வில் பிரசனையை உருவாக்க அவர் விரும்பவில்லை. தான் பெற்ற பிள்ளைகளை விடவும், நல்லதுக்கும் கெட்டதுக்கும் வந்து அட்டெண்டன்ஸ் போட்டு விட்டுத் தங்களைப் பற்றியே முதுகுப் பின்னே விமர்சிக்கும் சொந்தங்கள் முக்கியம் அல்ல என்ற தெளிவு அவருக்கு வந்து விட்டிருந்தது.
ஆனால், என்னதான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் எதிர்பாராத நிகழ்வுகள் நிகழும் என்பது தானே வாழ்க்கை. மிகுந்த ஆர்வத்துடனே நிச்சயத்திற்கான ஏற்பாட்டைச் செய்த பிறகு மகன் வர முடியாமல் போனது சில வெறும் வாய்களுக்கு மெல்லுவதற்கு அவல் கொடுத்தாற் போல ஆயிற்று.
அதிலும் ராமானுஜத்தின் ஒன்று விட்ட அக்கா மரகதம் கிராமத்துப் பெண்மணி, அவரது லேசர் கண்களுக்கு ஒன்றும் தப்பாது. நல்ல வேலையிலிருக்கும் தம்பி மகனை தங்கள் கிராமத்தில் சொந்தத்திற்குள்ளான பெண் ஒருவளை கட்டி வைத்தால், தன்னுடைய மதிப்பு இருபக்கமும் வெகுவாகக் கூடும் எனக் கணக்கீட்டில் இருந்தவர். தம்பி மனைவியின் இந்த அதிரடி ஆட்டத்தை எதிர்பார்த்து இருக்கவில்லை.
பெண்ணை முடிவு செய்து நேரடியாக நிச்சயத்திற்கா அழைக்கிறாய்? பொறு உன்னை என்ன செய்கிறேன் பார்? என்று சூளுரைத்தவராகத்தான் வந்தார். நிச்சயத்தன்று பெண் வீட்டிற்கும் வந்து இது சரியில்லை, அது சரியில்லை. நம்முடைய வழக்கத்தின் படி இப்படிச் செய்யக் கூடாது அப்படிச் செய்யக் கூடாது என்று ராஜியை ஒருவழியாக்கி இருந்தார்.
நான் இத்தனை வயதாகி மகள் வழிப் பேரன் பார்த்தாயிற்று. அவ்வப்போது வீட்டு விசேஷங்களுக்கு இங்கே வரும் பொழுதெல்லாம், என்னையே இந்த மதினி இந்தத் தொல்லைப் படுத்துதே? வருடம் முழுக்க இந்தப் பெண்மணியைச் சமாளிக்கும் இவர்கள் வீட்டு மக்களுக்கு விருது தான் கொடுக்க வேண்டும் எனத் தன் மனதில் பொருமிக் கொண்டாலும் கூட, ராஜி அமைதியாக இருந்து கொண்டார். மகன் திருமணம் முடியும் அளவும் கண்ணுக்குத் தெரியாத பூட்டொன்றை அவர் தன் வாய்க்கு அணிந்து கொண்டார்.
பல்வேறு அவசர வேலைகளை முடித்து அன்று காலையில் சென்னை ஏர்போர்ட்டில் வந்து இறங்கும் போது ஆதவனுக்கு அப்பாடா ஒருவழியாக வந்து விட்டோம் என்று தோன்றியது. அவனது வேலைக்கு விமானப் பயணம் மிக சாதாரணமான ஒன்று. விமான நிலையத்திற்கு அழைக்க வரவா? எப்போது வருகிறாய்?, ப்ளைட் தாமதமா? என்றெல்லாம் வீட்டினர் கேள்விகள் கேட்பது அவனுக்குப் பிடிக்காதென்பதால் அப்படி தொல்லை செய்யக் கூடாதென்று ஏற்கெனவே பெற்றோரை கண்டித்தே வைத்திருந்தான்.
எனவே, சகஜமாக தன்னுடைய பெட்டிகளை எடுத்துக் கொண்டு ட்ராலியில் நகர்த்திக் கொண்டு வெளியெ வந்து கால் டாக்ஸியில் அமர்ந்து வீட்டிற்கு பயணிக்கலானான்.
முன்பு திருமணம் குறித்துஒரு சதவிகிதம் கூடச் சிந்திக்காமல் வருகின்றவளோடு நன்றாகக் குடும்பம் நடத்தினால் போதும் என்று இருந்தவன் இப்போது தன் திருமணம் தவிர வேறி எதுவும் சிந்திக்க நேரமில்லை என்றே சொல்லும் அளவிற்கு மாறி இருந்தான். போகிற போக்கில், பேச்சோடு பேச்சாகச் சுந்தர் அந்த அளவிற்கு அவன் மனதை குழப்பிச் சென்றிருந்தான்.
வீட்டிற்குச் சென்று தாய் தந்தை முகத்தில் மகிழ்ச்சியைக் காணவும் முகம் மலர்ந்தான். அப்பாவோ அவர்கள் வீட்டை வெகுவாகப் பளிச்சென்று ஆக்கி இருந்தார்.
‘உங்களுக்கு ரொம்ப வேலை இல்லியாப்பா?’
‘என் பிள்ளைக்குக் கல்யாணம், நான் செய்யாம?’ அவர் முகத்தில் பெருமிதமான முறுவல் படர்ந்தது.
உறவினர்கள் இன்னும் தூக்கம் கலைந்து எழுந்து வந்திருக்கவில்லை.
அவசரமாய் அம்மா சுட்டுத் தந்த தோசைகளை சாம்பார், சட்னி, பொடி அதனோடு கூடத் தேங்காய் எண்ணை ஊற்றி வஞ்சனையில்லாமல் உண்டான்.
‘அம்மா, நான் பத்து மணி வரை தூங்கிக்கிறேன், அதுக்கப்புறம் எழுப்பி விட்டுருங்க. ஆபீஸ் போய்ச் சில வேலைகள் ஒப்படைச்சுட்டு வரணும்’, என்றான்.
மாலை கவிழ்ந்தது, காலையில் சென்ற புதுமாப்பிள்ளை இன்னும் அலுவலகத்திலிருந்து திரும்ப வந்திருக்கவில்லை. அன்று மதியம் நிர்மலா தன் கணவன் ரவி மற்றும் மகன் பிரணவுடன் தாய் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். மகளைப் பார்த்ததும் பெற்றோருக்கு இன்னுமாய் மகிழ்ச்சி உண்டாயிற்று.
சென்னை உறவினர் வீட்டிற்குச் சென்று சாயுங்காலம் திரும்பி வந்திருந்த மரகதத்திற்கு மாப்பிள்ளைப் பையன் வெளி நாட்டிலிருந்து வந்திருந்தும் கூடத் திரும்ப அலுவலகம் சென்று விட்டான் என்பதும், அவன் இன்னும் வீடு திரும்பாமல் இருப்பதுவும் மிகவும் தவறாகப் பட்டது.
தம்பி மனைவியிடம் சென்று அவர் குடைந்து குடைந்து கேள்வி கேட்கலானார்.
‘ராஜி,நீ உன் மகன் கிட்ட கல்யாணத்துக்கு விருப்பமா இல்லியான்னு கேட்டுத் தானே பொண்ணு பார்த்த?’
‘ஆமாம் மதினி, அவன் கல்யாணம் அவன் கிட்ட கேட்காமலா?’
‘எனக்கு என்னமோ நிச்சயத்தன்னிக்குப் பொண்ணைப் பார்த்ததிலருந்தே ஒரே யோசனை. இந்தப் பொண்ணுக்கு நம்ம பையன் எப்படிச் சரின்னு சொன்னான்னு?… ஒருவேளை பொண்ணு பிடிக்காமத்தான் நிச்சயத்துக்கு வரலியோ? இப்பவும் கூடக் கல்யாண நாள் கிட்ட இருக்கிறப்ப தான் வெளி நாட்டிலருந்து வந்திருக்கிறான். வந்ததும் வராததுமா ஆஃபீஸீக்கு போயிட்டான்னு சொல்லுற. வீட்டுக்கு இன்னும் திரும்பியும் வரலை. என்ன இருந்தாலும் கல்யாணத்தில அவனுக்கு இஷ்டமா இல்லியான்னு இன்னொரு தரம் கேட்டுக்கோ ராஜி.’

‘நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத, இந்தக் காலத்துப் புள்ளைங்களை நம்ப முடியாது. நம்மக்கிட்ட ஒன்னும் சொல்லாம கொள்ளாம இருந்திட்டு திடீர்னு கல்யாணத்தன்னிக்கு வெள்ளைக்காரியோட ஓடிட்டான்னு வச்சுக்க நமக்குத்தான் மானம் போயிடும்.’
… இப்போது ராஜி அழுது விடும் நிலையில் இருந்தார். இந்தப் பெண்மணியின் வாயில் நல்ல வார்த்தை வராதா? என்ன சொல்வதெனப் புரியாமல்,
‘இப்ப நம்ம ஆதி வந்திடுவான் மதினி, நீங்க வேணும்னா அவனுக்கு இந்தக் கல்யாணத்தில விருப்பம் இருக்கா இல்லியான்னு கேட்டுத் தெரிஞ்சுக்கோங்களேன்…’ என்று ஒரு வழியாக அவரிடமே பிரச்சனையை விட்டுவிட்டு கணவரை தேடிப் போனார்.
அழகான அந்த மாலைப் பொழுதில் திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த அவர்கள் இல்லம் ஒளி வெளிச்சத்தில் இன்னும் அழகாயிருப்பதை ரசித்துக் கொண்டே வீட்டின் வெளியே வந்த ராஜி கணவரை தேடினார். ராமானுஜம் சற்று தூரத்தின் அவர்கள் வீட்டின் வாயிலருகே நின்று கொண்டு காண்டிராக்ட் வேலை செய்பவர்களுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அவர் அருகே நெருங்கவும் அவர் அவர்களிடம் என்ன சொன்னார் என்பதைக் கேட்க முடிந்தது.

அவர்களுக்குப் பரபரப்பாக ஆணைகள் பிறப்பித்தவாறு நின்று கொண்டிருந்தார்.

‘திருமணத்துக்கு முந்தின நாளே இதோ இங்கே ஆதவன் வெட்ஸ் அகிலான்னு அழகா பொருத்திடுங்க சரியா?’

‘சரிங்க சார்…’

மனைவியின் அழைப்பு கேட்கவே அவரிடம் விரைந்தார்.

‘என்ன ராஜி? ஏன் இவ்வளவு பதட்டமா இருக்க?’

‘ஏங்க உங்க பையனை இன்னும் காணோம், காலையிலதானே யூ எஸ்ஸிலிருந்து வந்தான்.ஆஃபீஸ் போய் லீவ் எடுக்கும் முன்னால வேலை எல்லாம் ஒப்படைச்சிட்டு வாறேன்னு சொன்னவனை இன்னும் காணலையே?’ …

‘வந்துடுவான் ராஜி ..நீ கவலைப்படாதே அவன் வேலை பற்றி உனக்குத் தெரியாதா என்ன?’

‘எனக்குத் தெரியும்ங்க ஆனால் உங்க அக்கா கேட்கிற கேள்விக்குத் தான் என்னால பதில் சொல்ல முடியல. நிச்சயத்துக்குத் தான் அவனால வர முடியல சரி பூ வச்சி நிச்சயம் செய்து வந்தோம். இன்னும் 10 நாள்ல கல்யாணம் இருக்க, காலையில வந்துட்டு ஆபீஸ் போனவன் இன்னும் வீட்டுக்கு வரல ஒரு வேளை அவனுக்குக் கல்யாணத்தில விருப்பம் இல்லையா?ன்னு கேட்கிறாங்க…’வெள்ளைக்காரியை இழுத்து விட்டு ஓடி விடுவான் என்று சொன்னதை மறைத்தார்.

‘என்ன ராஜி இது உனக்கு மரகதம் அக்கா பற்றித் தெரிஞ்சும் இப்படிப் புலம்பலாமா? அவ எப்பவுமே அப்படித்தானே?’

மனைவியின் மனதை மாற்றும் பொருட்டுச் சீண்டலானார்.

‘அது சரி இப்போ எனக்கு ஒரு சந்தேகம் …’

‘என்னங்க? என்ன சந்தேகம்?…’

‘இல்ல ஆதி க்ளாஸ் ஃபர்ஸ்ட் வர்றப்போ எல்லாம் என்ன சொல்லுவ?’

‘என்ன சொல்லுவேன்?’

‘என் மகனை பார்த்தீங்களா? எப்படி மார்க் எடுத்திருக்கான்னு பெருமை பேசுவே…’

‘ஆமா பேசுவேன்தான் இப்ப அதுக்கென்ன? …’

‘நம்ம நிர்மலா கல்யாணத்தப்போ கூட பார்த்தீங்களா என் மகன் அவன் தங்கச்சி கல்யாணத்தை எவ்வளவு பொறுப்பா நடத்திட்டான்னு சொன்னில்ல?’ …

அவர் என்ன சொல்ல வருகிறாரென்று புரியாமல் ராஜி அமைதி காக்க,

‘இப்போ கல்யாண பேச்சு நடக்கிறப்போ கூட, ‘அம்மா, நீங்க யாரை சொல்றீங்களோ அந்தப் பெண்ணைக் கட்டிக்கிறேன் நீங்க பார்த்து முடிவு சொன்னா போதும்’னு சொல்லிட்டான், என் மகனை மாதிரி ஊர் உலகத்தில ஒரு பிள்ளை உண்டான்னு” பெருமை பேசினேயில்லே? ….’

‘ஆமாங்க இப்போ அதுக்கென்னவாம்?’ சிடு சிடுப்பு மாறி குரலில் கொஞ்சல் வந்திருந்தது.

‘ஆனா இப்போ குறை சொல்லும் போது மட்டும் உங்க மகனைன்னு சொல்றியே அது எப்படி?’ என்று சொல்லி சிரிக்க ஆரம்பித்தார்.

‘போங்க உங்க கிட்ட வந்து சொன்னேன் பாருங்க’ பொய்யாகச் சலித்தவாறு வீட்டினுள்ளே சென்று விட்டார்.

வாசலில் காரின் சத்தம் கேட்டதும் நிர்மலா தன் அண்ணனை வரவேற்க விரைந்தாள். ‘ஆதி அண்ணா’ என்றவளை காரை பார்க் செய்து விட்டு வரவேற்றவாறு இறங்கினான் ஆதி.

‘நிம்மி எப்போ வந்தே காலையிலே உன்னைக் காணலியே? …’

‘நான் மதியம் வந்தேன் அண்ணா. அவருக்கு லீவ் கிடைக்கல இல்லன்னா 2 நாள் முன்னேயே வந்திருப்பேன்…’

‘ஓ சரி சரி, உன் குட்டி வாலு பிரணவ் எங்கே?’

அப்போது ‘மாமா’ என்றபடி ஓடி வந்தான் 3 வயது பிரணவ்…

‘வாடா மருமகனே, கையிலே என்ன வச்சிருக்கே? ம்ம்…’

‘மார்பில்ஸ் மாமா நாங்க விளையாடித்து இருக்கோம்’

என்று தன்னுடன் இருந்த மற்ற குட்டிப் பிள்ளைகளைக் காட்டினான்.

‘ஓ விளையாடுங்க நான் உங்களுக்கு நிறையச் சாக்லேட் வாங்கிட்டு வந்திருக்கேன்’
.
‘மாமா சாக்லேட்…’ என்று உற்சாகத்தில் துள்ள ஆரம்பித்தவனைக் கைகளில் தூக்கிக் கொண்டான்.

எதிரே வந்த மரகதம் அத்தை ஆதியிடம், “என்னடா இதுதான் வீட்டுக்கு வர்ற நேரமா? இப்படி வேலை வேலைன்னு அலைஞ்சா எப்படி? அதான் முகத்தில புதுமாப்பிள்ளை களையையே காணோம்” என்றார் அதிகாரமாக…

‘களையா? அது மூஞ்சிலே எப்படி வரும்?, களை வந்ததும் முகம் பார்க்க எப்படி இருக்கும்? அது என்ன மாதிரி கலர்ல இருக்கும்? சரி உடனே கூகிள்ல ஸர்ச் பண்ணிப் பார்த்துடனும்’ என்று யோசிக்க ஆரம்பித்தான். இது ஆதி மைன்ட் வாய்ஸ்ங்க (பயபுள்ள இப்படியெல்லாம் மனசில இருக்கிறத உடனே பேசுறதா இருந்தா மழை பெஞ்சு ஊரெல்லாம் செழிப்பாகிடாது )

அத்தையின் பேச்சுக்கு ஒரு புன்னகையோடு ரேமண்ட்ஸ் கடை பொம்மை மாடல் போலவே நின்றவன் அருகே நெருங்கிய மரகதம் அத்தை…

‘ஏண்டா, உனக்கு உங்க அம்மா பார்த்திருக்காளே அந்தப் பொண்ணை உனக்குப் பிடிச்சிருக்கா இல்லை….’ என்று தொடரும் முன்

‘பிடிச்சிருக்கு அத்தை…’ என்றான் அவசரமாக,

‘அப்படின்னா சரி, ஆனால் உனக்கு மட்டும் எதுவும் பிரச்சினைன்னா அத்தை கிட்ட சொல்லிடு என்ன? நம்ம சொந்ததில இத்தனை பொண்ணுங்க இருக்க, உங்க அம்மா அசல்ல போய் எதுக்குத் தேடினா?’, என்ற அவரது தொண தொணப்பிலிருந்து காப்பாற்ற யாராவது வரமாட்டார்களா? என்று ஆதி தேடியபோது,

‘என்னடா புது மாப்பிள்ளை, எப்படி இருக்க?’ என்ற தங்கை கணவன் ரவியின் குரல் கேட்டு நிம்மதியானான்.

‘ஹாய் ரவி எப்படி இருக்கே?’ என்றவாறு அவனிடம் உற்சாகமாகக் கரம் குலுக்கி கொண்டான். அவன் மனம் விட்டுப் பேசும் உறவுகளில் ஒன்று தங்கையின் கணவன் ரவி, அவர்களுக்கிடையே அழகான நட்புணர்வு உண்டு.

‘ரவி உன்கிட்ட ஒரு விசயம் பேசணும், கொஞ்சம் பொறு இந்தப் பொடியனுக்குச் சாக்லேட் கொடுத்துட்டு வரேன்’.

மருமகனை தூக்கிப் பிடித்துப் போட்டு விளையாடியவனாக அம்மாவிடம் சென்றான்.

ஏன்டா, இதுதான் வீட்டுக்கு வர்ற நேரமா? அம்மாவின் சிடுசிடுப்புக் கண்டு சமாதானப் படுத்தினான்.

சாக்லேட்டுகளைத் தேடி மருமகனிடம் கொடுத்து அம்மாவிடம் அருகே அமர்ந்து பேச ஆரம்பித்தான்.

‘என்னம்மா? ஏன்மா கோபப்பட்டுக்கிட்டு? நான் என்ன வேணும்னா செய்யறேன்? வேலை அப்படிம்மா… புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்மா.’

‘உனக்கென்ன நிச்சயத்துக்கு வராம இருந்திடுவ, கல்யாணத்துக்குக் கொஞ்ச நாள் முன்னாடி வந்து நிப்ப, பேச்சு வாங்கிறது யாரு? நான் தான?’

‘ஐயோ அம்மா….’

‘போடா, நான் என்ன உன்னைக் கேட்காம, உன் விருப்பம் இல்லாமலாடா கல்யாணம் செஞ்சு வைக்கிறேன். உன் கிட்ட கேட்டுட்டு தானே எல்லாம் செஞ்சிட்டு இருக்கிறேன்?’

‘ஆமாம்மா… இப்ப யார் இல்லைன்னு சொன்னா?’

ஆறுதலாக அம்மா கரத்தைப் பிடித்துக் கொண்டான்.

‘உங்க அத்தை வந்து என் கிட்ட என்னவெல்லாம் கேள்வி கேட்குறாங்க தெரியுமா? உனக்கு விருப்பம் இல்லாம நான் பொண்ணு பார்த்துட்டேனாம். நீ கல்யாணத்து அன்னிக்கு ஓடிப் போய் வேற யாரோ வெள்ளைக்காரியை கட்டிப்பியாம்…’

உர்ரென இருந்த அம்மாவைப் பார்த்து கப கபவெனச் சிரித்து வைத்தான் ஆதவன்.

‘அம்மா யாரோ, எதுவோ சொன்னாங்கன்னு எதுக்கு உங்க மூளையைச் சூடாக்கிட்டு இருக்கிறீங்க? நான் என்ன அப்படிப்பட்டவனா? அப்படியே வெள்ளைக்காரியை கட்டிக்கிட்டாலும் உங்களுக்குத் தெரியாமலா கட்டிப்பேன்.’

‘உண்மையா சொல்றேன்மா, உன் பையனுக்கு அந்த அளவுல்லாம் சாமார்த்தியம் கிடையாது. கொஞ்சம் சோம்பேறியும் கூட, அதனாலத்தான் பொண்ணு பார்க்கிற வேலையைக் கூட உங்க தலையில கட்டிட்டு நான் ஜாலியா இருந்தேன்.’

‘… அடேய் வாலுப்பையா மகனின் காதை திருகியவர், போடா டேய்’ சிரித்து விட்டிருந்தார்.

‘இதுதான் எங்க அம்மா… எப்பவும் கூலா, சிரிச்சுட்டே இருக்கணும். இன்னும் எத்தனை பேர் வந்து குழப்பினாலும், ஸ்டெடியா இருக்கணும் ஓகே…’

‘சரிடா…’ அம்மா முகம் தெளிந்திருந்தது.

‘அம்மா இதோ வரேன், ரவி கிட்டே இன்னும் நல்லாவே பேசலை. அவனைப் போய்ப் பார்க்கிறேன்’ என்று சொல்லி சென்றான்.

ரவியைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றான். முதலில் சாதாரண விசாரிப்புகளில் ஆரம்பித்தவன்

‘ரவி எனக்கு ஒரு உதவி செய்வியா?’ என்று மனதில் இருந்ததை’ கேட்டே விட்டான்.

‘என்னடா?…’

‘அது ….அது வந்து…….’

‘என்ன ஆச்சு உனக்கு?’ ………

‘எனக்குக் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரே ஒரு தடவை பொண்ணை நேரில பார்க்கணும்டா. பொண்ணு எப்படியிருப்பான்னு கூட எனக்குத் தெரியாது.’

‘ஏய் கல்யாண கார்டுல உங்க ரெண்டு பேரு போட்டோவும் இருக்குதே?…பூ வச்ச அன்னிக்கு கூட உனக்குப் போட்டோ அனுப்பி இருந்தாங்களேடா? …’

‘கல்யாண கார்டுலயா? அது இத்தானூண்டு போட்டோ… நிச்சயதார்த்த போட்டோல அவ முகமே தெரியல… சுத்தி எல்லோரும் நின்னுகிட்டு…’

அவனது கூற்றில் சட்டென்று ரவிக்கு சிரிப்பு வந்து விட,

‘ஏண்டா கல்யாணத்துக்கு நாங்க எல்லோரும் உங்களைச் சுத்தி நிக்கலாமா? இல்ல…’

‘ச்சு சும்மாயிருடா …’

‘அத்தை என்னடான்னா என் மகன் நீங்க பொண்ணு பார்த்தா போதும்னு சொல்லிட்டான்னு ஊரெல்லாம் பெருமை பேசிட்டு இருக்காங்க. நீ என்னன்னா என் கிட்ட வந்து இப்படி ஐடியா கேட்டுட்டு இருக்கே… ஏய் உன்னை எல்லாம் உலகம் நல்லவன்னு நம்புதேடா…’

‘அதெல்லாம் எனக்குத் தெரியாது… இது உன்னால மட்டும் தான் செய்ய முடியும் ப்ளீஸ் ரவி… ஆனால், ஒரு விஷயம் நான் அங்க போறது அவங்களுக்கு முன்னமே தெரியக் கூடாது. எனக்காக அவங்க தடபுடல் செய்றது எனக்குப் பிடிக்காது அதுதான்…’ என்றவனை…

‘என்னடா இவ்வளவு தீவிரமா பேசிட்டிருக்கே? அப்படின்னா கொஞ்ச நாள் முன்னேயாவது வந்திருக்கலாமில்ல? இப்போ கல்யாணத்துக்கு 10 நாள் முன்ன வந்து சந்திககணும்னா நான் என்ன செய்றது? அதுவும் அவங்களுக்கு நீ வர்றன்னு சொல்லவும் கூடாதுன்னா அது எப்படி?’
….

‘சரி சரி நான் ஏதாவது ஏற்பாடு செய்றேன்’ என்று ரவி சென்று விட்டான்.

அவன் சென்றதும் ஓய்வெடுக்கப் படுக்கையில் சரிந்தவன் மறுபடி சுந்தரைக் குறித்தே சிந்திக்கலானான்.

சுந்தர் அம்மா பற்றி இவனுக்கு நன்கு தெரியும். அடிக்கடி அவர்கள் வீட்டிற்குச் சென்று வந்திருக்கிறானே? அவர் அவ்வளவு அமைதியான குணம் கொண்டவர். சில மாதங்கள் முன்பு சுந்தரின் ரிசப்ஷன் போது அவன் மனைவியைப் பார்க்கையில் மிகவும் நல்ல மாதிரி தான் தோன்றியது. ஆனால், அவர்கள் வீட்டில் என்ன பிரச்சினையோ?

சுந்தருக்கு மூத்தவன் அண்ணன் இருக்க, தவறே ஆயினும் தாய் தந்தையைப் பிரிந்து தன் அண்ணன் பொறுப்பில் விட்டுவிட்டு சட்டென்று அவன் தனிக்குடித்தனம் செல்லவும் யோசிக்கவில்லை. அவனைப் போலவே சூழ்நிலையில் தான் மாட்டிக் கொண்டால் என்னாவது?

அம்மாவை மட்டும் போய்ப் பெண் பார்க்க சொன்னது தப்போ? ஒரு வேளை தானும் கூடவே சென்று, பெண்ணைச் சந்தித்து, முதலிலேயே கல்யாணத்துக்குப் பிறகு தனிக்குடித்தனம் எல்லாம் வர முடியாது, என்று பேசி முடிவு செய்திருக்க வேண்டுமோ? என்ற சிந்தனையில் தவித்திருந்தான்.

அதனால்தான் எப்படியாவது அந்தப் பெண்ணை அவள் பெயர் என்ன அகிலாவா? பார்த்து பேசி விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு யூ எஸ்ஸிலிருந்து திரும்பி வந்தான். அதற்காகத் தான் ரவியிடம் உதவியும் கேட்டுக் கொண்டான்.

அடுத்த நாள் ரவி ஆதியிடம், “ஏய் மாப்பிள்ளை உனக்கு ஒரு சான்ஸ் இருக்குடா, பொண்ணுக்கு மாமியார் அதாவது உங்கம்மா கல்யாணத்தன்னிக்கு தங்க வளையல் போடணும்ல அதுக்காக அளவு வாங்கறதுக்கு அவங்களோட வளையல் சைஸ் வாங்கிட்டு வரணுமாம். அதான் நாளைக்கு நீ உன் ப்ரெண்ட்ஸ்க்கு கார்ட் கொடுக்கப் போய்ட்டு வர்றப்போ, அங்கே போய் வாங்கிட்டு வருவேன்னு சொல்லிட்டேன்.’

‘சூப்பர் ரவி’

‘பொண்ணு வீட்டுக்கு நீ எத்தனை மணிக்குப் போக முடியும்னு குறிப்பிட்டுச் சொல்ல முடியாததால அவங்க கிட்ட நீ வர்றதை தெரிவிக்க வேண்டாம் சொல்லிட்டேன். சரியா?”’

என்று சொன்ன ரவியிடம் ‘ரொம்ப ரொம்பச் சரி தாங்க்ஸ்டா’ என்று கூறியவன் அகிலாவை பார்க்க எப்போது போகலாம்?, அவளிடம் தன்னால் ஒருபோதும் தனிக்குடித்தனம் வர முடியாது என்பதை எப்படிப் பேச வேண்டும் என்று மனதிற்குள்ளாகத் திட்டமிட ஆரம்பித்தான்.

முஸ்தீபுகளைச் செய்து அடுத்த நாள் மாலை ஐந்து மணியளவில் அகிலாவின் வீட்டை அடைந்தவனை அவ்வீட்டின் பூட்டு வரவேற்றது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here