உள்ளம் உந்தன் வசம்_5_ஜான்சு

0
261

அத்தியாயம் 5

ஆதவன் அகிலாவை சந்திக்க திட்டமிட்டிருந்த அன்றைய நாளில்….

ஆதவன் திருமணத்திற்கான அழைப்பை மற்ற உறவினர்களுக்கு ஆதவனின் அம்மாவும், அப்பாவும் விடுத்து வந்திருந்தனர். தன் நெருங்கிய நட்புகளுக்கு மட்டும் திருமணக் கார்டுகள் சென்று கொடுக்கும் வேலையை ஆதவன் அன்று ஆரம்பித்து இருந்தான். மதிய சாப்பாட்டிற்குப் பின்னர்தான் அவனுக்கு நேரம் கிடைத்தது.

சுந்தரின் வீட்டிற்கு செல்லவும் ஆதவனுக்கு அந்நாளே வசதிப்படவும் அவனது வீட்டிற்கு சென்றான். சுந்தர் இரவு ஷிப்ட் செய்வதால் அன்றைய தினம் சுந்தரை சந்திக்கவும் முடிந்தது. அவனிடமும், அவன் மனைவியிடமும் தன் திருமணத்திற்கு வரச் சொல்லி அழைப்பிதழ் கொடுத்து புறப்பட்டான்.

எவ்வளவோ முயன்றும் சுந்தரால் தன் மனதில் எழுந்த நெருடலை ஆதவனால் அவனிடமே கூட வெளிப்படையாகக் கேட்டுத் தெளிவு படுத்த முடியவில்லை? பிறருடைய சொந்த விஷயங்களில் ஒரு அளவிற்கு மேல் தலையிடவும் முடியாதே?

அவனை சந்தித்து வந்ததாம் ஆதவனின் மனம் கல்லெறிந்த குளம் போல மறுபடி குழம்ப ஆரம்பித்து இருந்தது. இப்போது தான் முதலாவதாக செய்ய வேண்டிய வேலை ஒன்று உண்டென்றால், அது அந்தப் பெண்ணைப் பார்த்து, தான் எண்ணியிருப்பதை உறுதியாகப் பேசி விட வேண்டும். அவள் ஒருவேளை இதற்குச் சம்மதிக்கா விட்டால் அதற்கேற்ற முடிவு எடுத்து விட வேண்டியது தான் எனத் தன் போக்கில் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

இவ்வாறு பல்வேறு குழப்பங்களினூடே வழி தேடி, எப்படியோ அடையாளம் கண்டு, அந்த வீட்டினருகே தன் காரை பார்க் செய்தான். அகிலாவின் வீட்டைத் தேடி வாயிலில் சென்று நிற்கவும் அவர்கள் வீட்டுக் கதவோ பூட்டிக் கிடந்தது.

விசேஷித்த வரவேற்பு வேண்டாமென்று தான் வருவதைத் தெரிவிக்கக் கூடாது? எனச் சொல்லி இருந்தான் தான், ஆனால், இப்படித் தான் எதிர்பார்க்காத வண்ணம், அகிலாவின் வீட்டினர் வீட்டையே பூட்டிவிட்டுச் சென்று விட்டிருப்பார்கள் என்று அவன் எண்ணி இருக்கவில்லை.

இப்போது என்ன செய்வது? என்று யோசித்தவனுக்கு அங்கே பக்கத்து வீட்டின் கரகோஷம் திடீரென ஆர்வத்தைத் தூண்டியது. என்னவென்று எட்டிப் பார்த்தால் அங்கே பிறந்த நாள் விழா போலும், அவ்வீடு மிகவாய் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பாடல்கள் ஹை பிட்சில் ஒலிக்க, சிறுவர் சிறுமியர் ஒரே ஆட்டம் பாட்டமாக இருந்தது.

சமீபத்திய ஹிட் பாடல்கள் எல்லாம் ஒன்று மாற்றி ஒன்றாக ஒலிக்க, இஷ்டத்திற்கு வாண்டுகள் துள்ளித் துள்ளி ஆடிக் கொண்டிருந்தன. ஆட்டம் முடிந்து விட்டது போலும், அடுத்ததாக அவர்களுக்குள்ளேயே ஓர் சலசலப்பு, அவர்கள் பெரிய வட்டமாக நின்றார்கள். அந்தக் குழுவிலேயே சின்னப் பையனை நடுவில் நிற்க வைத்து, ஒருவர் மற்றவர் கைகளைப் பிடித்தவராகச் சுற்ற ஆரம்பித்தார்கள்.

“ரிங்கா ரிங்கா ரோஸஸ், பாக்கெட் புல் ஆ போஸஸ்
அஸ்ஸா, புஸ்ஸா ஆல் ஃபால் டவுன்.”

சுற்றிக் கொண்டிருந்த எல்லோரும் ஒன்று போல அமரவும், நடுவில் இருந்த குட்டிப்பையனுக்கு மகிழ்ச்சி கரை புரண்டோடியது. ஒருவர் மாற்றி ஒருவர் நிற்க, கடைசியாக யாரையோ நிற்க கட்டாயப்படுத்தி நடுவில் நிற்க வைத்தனர். அந்தப் பெண் தான் அவர்களில் பெரியவள் போலும்.

அவள் சற்றே பெரிய குழந்தையாக, ரெட்டை பின்னலும் த்ரீ போர்த் & டீ ஷர்டில் விளையாடிக் கொண்டிருக்க, ஆதவனுக்கோ அந்த முகத்தை எங்கோ பார்த்த மாதிரி… “ஓ மை காட்” ஆதவன் ஒரு நிமிடம் அதிர்ந்தான்.

“ரிங்கா ரிங்கா ரோஸஸ், பாக்கெட் புல் ஆ போஸஸ்
அஸ்ஸா, புஸ்ஸா ஆல் ஃபால் டவுன்.” அவளைச் சுற்றி வந்து குழந்தைகள் கீழே தொப்பென அமரவும் நடுவில் இருந்தவள் பெரிதாய் புன்னகைத்தாள்.

‘இனி உன் டர்ன் டா…’ என்றவளாகப் பிறந்த நாள் உடையில் இருந்த பையனைச் சுற்றி ரிங்கா ரிங்கா ரோஸஸ் சுற்ற ஆரம்பித்தனர். அவளும் மற்ற குழந்தைகளோடு உற்சாகமாகக் கைக் கோர்த்துச் சுற்றிக் கொண்டு இருந்தாள்.

இது அகிலாதானே? இல்லை ஒரு வேளை அவள் தங்கையோ?

இல்லையே அம்மா சொன்னது ரொம்ப நன்றாக ஞாபகம் இருக்கின்றது. அவங்க வீட்டில அவள் ஒரே பொண்ணு, அவளுக்கு ரெண்டு அண்ணனுங்க என்று அப்போ இது அவளேதானா?

அடக் கடவுளே, இந்த ரிங்கா ரிங்கா ரோஸஸ் விளையாடுற குட்டிப் பொண்ணை எனக்குக் கட்டி வைக்கிறாங்களே? தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஆதவனின் கண்கள் தெறித்து விடும் போலிருந்தது. அவளது உயரம் ஐந்தடி அல்லது ஐந்தேகாலடி தான் இருக்கும் போலும்.

போட்டோ நல்லா பார்த்தியா? உனக்குப் பிடிச்சிருக்குத்தானே? அப்பா, தங்கை ஏன் அன்று மரகதம் அத்தை இவர்கள் எல்லோரும் இந்த ஒரே கேள்வியைத்தானே அவனிடம் கேட்டு வைத்தனர். அதன் அர்த்தம் இப்போதுதான் அவனுக்கு விளங்கிற்று.

‘அமிதாப் ஜெயாபாதுரிக்கு அப்புறம் நாங்க தானா? ஆனாலும், எங்க அம்மாவிற்கு இப்படி ஒரு ஆசை இருக்கக் கூடாது’என அவன் தலை சுற்ற ஆரம்பித்தது. அவளின் வளர்த்தி மட்டுமே மண்டைக்குள் உழல, சுந்தர் விஷயம் எல்லாம் இப்போது மூளைக்கு வெளியே எங்கோ போய் விட்டிருந்தது.

அவன் தன் வீட்டின் வாயிலில் நின்றது யார் சொல்லி தெரிந்ததோ? அவள் பக்கத்து வீட்டினின்று மான் குட்டி போலத் துள்ளி, ஓடி வந்தாள்.

‘வாங்க வாங்க நீங்க ஆதவன் தானே? உங்க போட்டோ பார்த்திருக்கேன்’ என்று சற்றும் தயக்கம் இல்லாமல் பேசியவளை பதில் சொல்லாமல் பார்த்திருந்தான்.

‘அம்மா அப்பா கார்ட் கொடுக்கப் போயிருக்காங்க? நீங்க இன்னிக்கு வருவீங்கன்னு தெரியாது’, பெரிதாய் புன்னகைத்தாள். அவனை வீட்டினுள்ளே வரவேற்றவள் அவசரமாய்ப் ஃபேனை தட்டிவிட்டு விட்டு, ஏசியையும் ஆன் செய்தாள்.

சற்றே பெரிதான வரவேற்பறை அது. சில வாரங்கள் முன்பு நிகழ்ந்த நிச்சயத்தின் எதிரொலியான அலங்காரங்கள் அங்கு இருந்தன. யாரோ அவனது புகைப்படத்தையும், அவளது புகைப் படத்தையும் சேர்த்து என்லார்ஜ் செய்திருந்தனர். கீழே இருவர் பெயர்களும் இருந்தது.

ஆதவன், அகிலா மனதிற்குள்ளாகப் பெயர்களை வாசித்தான். முதன் முறை அவளையும் தன்னையும் பொருத்திப் பார்த்துக் கொண்டவனுக்கு, பெயர் பொருத்தம் பிரமாதம் என மனம் ஷொட்டுக் கொடுத்தது. பெயர் பொருத்தம் மட்டும் போதுமா என்ன? என இன்னொரு பக்கம் அதே மனம் முரண்டியது. ஏதுடா ஒரு மாதிரி பேசித் தொலைங்க… குழப்பாதீங்க தன் மனதை திட்டினான் அவன்.

அவனை அகிலா இருக்கையில் அமரச் செய்தாள். அவனிடம் பேசுகையில் என்னமோ வருடங்களாகப் பேசிப் பழகுகின்றவள் போல வெகு இயல்பாக இருந்தாள். அவனுக்குத்தான் அவளிடம் பேச தடுமாறிற்று. பொதுவான விசாரிப்பிற்குப் பின் உள்ளறைக்குச் சென்று வருகையில் அவள் கையில் அவனுக்காகத் தண்ணீரும் குளிர் பானமும் இருந்தன.

அடிக்கின்ற சென்னை வெயிலுக்கு இதமான அந்த வரவேற்பு அவனுக்குப் பிடித்தது. அவளது உடையில் பள்ளிப் பெண் போலத் தோற்றம் தருவதைக் கவனித்தான். காதில் ஒரு பொட்டு அளவே ஏதோ அணிந்திருந்தாள். முகத்தைப் பார்க்கையில் நெற்றியில் பொட்டு மட்டுமே அணிந்த, துளி அலங்காரமில்லாத, பளிச்சென்று திகழ்ந்த எந்த மாசு மருவுமற்ற களங்கமில்லாத தோற்றம். சிரிக்கும் அவளது அந்தக் கண்கள் தான் அவனை வெகுவாகக் கவர்ந்து கொண்டிருந்தது.

உங்களுக்குச் சாப்பிட ஏதாச்சும் கொண்டு வரட்டுமா? என்று கேட்டு ஏதோ ஒன்றை கொண்டு வந்தாள். யூ ட்யூபில் பார்த்துச் செய்தாளாம். ருசியாகவே இருந்தது, உன் சமையலுக்கு நான் சோதனை சுண்டெலியா? என டைமிங்காக ஜோக் செய்யலாம் தான், சொல்ல முயற்சியும் செய்து பார்த்தான். அந்த டிஷ்ஷைப் போல ஜோக்கும் அவன் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டு விட்டதே?

இனி வாழ் நாள் முழுக்க அவள் செய்கிற எல்லாச் சமையலுக்கும் அவனே தான் சோதனைச் சுண்டெலியாக இருக்கப் போகிறான் என்பதை அறிந்தப் பின்னரும் அவனால் அதைச் சொல்லத்தான் முடியுமா?

ஏற்கெனவே, அமைதியாக இருப்பவன் இப்போது திணறுவதைக் கண்டு இன்னொரு கிளாஸ் தண்ணீர் கொண்டு வந்து அவனைக் காப்பாற்றினாள் அகிலா.

அடுத்து ஆதவன் வீட்டில் அம்மா அப்பா முதல் நாய் குட்டியிலிருந்து கிளி வரை எல்லாவற்றையும் அவனிடம் ஐந்தே நிமிடத்தில் விசாரித்து முடித்து விட்டாள்.இவளுக்கு மட்டும் எல்லாம் தெரிந்திருக்கிறதே எப்படி? ..என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, தன் வேலை பார்க்கும் நிறுவனம் குறித்தும் தன் படிப்பு குறித்தும் சொல்லி முடித்தாள்.

தான் செய்த பஃப் நன்றாக இருந்ததா? எனக் கேட்கலாமா என்றெண்ணி அமைதியானாள்.

‘உங்களுக்கு எத்தனை நாள் லீவு?’

‘மூணு வாரம் போட்டிருக்கேன், உனக்கு?’ ஆதவனுக்கு அவளிடம் பேசுகையில் தானாகவே ஒருமை வந்து தொலைத்தது கால் படி அளவே இருந்ததால் இருக்குமோ? சொன்னப் பின்னர் அது குறித்து அவன் யோசித்தாலும், சரி அவள் என்னை விடவும் சிறியவள் தானே? எனச் சப்பைக் கட்டுக் கட்டிக் கொண்டான்.

‘எனக்கு ஒரு மாசம் லீவு, என் கிட்ட நிறைய லீவ் பேலன்ஸ் இருந்ததா? அம்மாவும் சீக்கிரமே லீவு போட சொல்லிட்டாங்களா? அதனால லீவு போட்டுட்டேன். இன்னியிலிருந்துதான் லீவு ஆரம்பமாச்சு….’

அவள் தான் கேட்ட கேள்வியோடு கேட்காத கேள்விக்கெல்லாம் பதில் சொல்வதை அவன் இமைக்காது பார்த்திருந்தான்.

ஒரு கேள்வியில் கால் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லும் தனக்கும், கேட்காத இரண்டு கேள்விக்கும் சேர்த்துப் பதில் சொல்பவளுக்கும் ஜோடிச் சேர்த்த அம்மாவை எண்ணி உள்ளுக்குள் புல்லரித்தது.

ஆனால், போலித்தனமில்லா அவள் வெளிப்படையான குணம் வசீகரித்ததும் கூட உண்மைதான்.

வேறு என்ன பேச? என்று தயக்கம் நிலவியப் போது அம்மா உன்னோட அளவு வளையல் வாங்கி வர சொன்னாங்க என்று அவன் சொல்லவும், தன் வளையல் ஒன்றை கொண்டு வந்து அவனிடம் தந்தாள். மறுபடி மௌனம் அவர்களைச் சூழ்ந்து கொண்டது. ஆனால், அவள் ஏதோ கேட்க விரும்புவது மட்டும் அவனுக்குப் புரிந்தது.

ஒரு வேளை அவளுக்கும் ஏதேனும் குழப்பம் இருக்குமோ என்று எண்ணியவன் ‘என்ன?’ என்றான்.

‘நீங்க என்னோட வாட்சப் மெசேஜ், ஃபேஸ்புக் ரிக்வெஸ்ட் எதையும் பார்க்கலியா?’

‘ஓ…’ திகைத்தான்.

‘ஸாரி, நான் இதெல்லாம் சும்மா அஃபிஷியல் யூஸ்காக வச்சிருக்கேன், அடிக்கடி யூஸ் செய்யறது இல்ல, நேரமும் இல்லை. தப்பா நினைச்சுக்க வேணாம்; சமாளித்தான்.

‘ம்ம்…’

‘இன்னும் என்ன?’

‘இல்லை… நீங்க ஏன் இவ்வளவு ஹைட்டா இருக்கீங்க… அதான்…’

‘ஆங்க்…’ மறுபடி திகைத்தான். எனக்கு மட்டும் தான் அவள் உயரத்தைக் கொண்டு குழப்பம் என்றால் அவளுக்கும் அதற்கு மேல் இருக்கும் போலிருக்கின்றதே?

ஏனோ அமிதாப் பச்சன் பற்றிய செய்தி ஒன்று சம்பந்தமேயில்லாமல் நினைவிற்கு வந்து தொலைத்தது. அவர் ஆரம்பக் காலத்தில் சினிமா வாய்ப்புகளைத் தேடிப் போகையில் எல்லாம் ‘உன் காலை கொஞ்சம் வெட்டி குள்ளமாகி விட்டு வா பார்க்கலாம்’ என்று அவரைக் கிண்டலாகச் சொல்வார்களாம். இந்த அகிலாவும் கொஞ்சம் இடம் கொடுத்து விட்டால் அப்படிச் சொல்லி விடுவாள் போலிருக்கிறது… ம்ம் என் உயரத்தை ஒன்னும் செய்ய முடியாது உனக்கு நான் தான் எனக்கு நீ தான் என்றெண்ணியவன் இதற்கு என்ன முக பாவனை காட்டுவது எனப் புரியாமல் வந்த விஷயத்தையும் பேச முடியாமல் ‘நான் வர்றேன்’ என்று சொல்லி புறப்பட்டான்.

குறித்த நாளில் திருமணம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. பெண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு விட்டுவிட்டுப் பெண் வீட்டினர் விடைபெற போகும் சமயம் அகிலாவின் முகத்தில் தெரிந்த சோகம் ஆதவனுக்கு இந்த ஏனோ மிகவும் வருத்தம் தந்தது. இந்தப் பெண்கள் வாழ்வு எவ்வளவு மாற்றங்கள் கொண்டது? பிறந்த வீட்டை அறவே மறந்து விட்டு கணவன் வீட்டை சொந்தம் கொள்ள வேண்டும். தன் தங்கை நிர்மலாவும் அப்படித்தானே? என ஒப்பிட்டு பார்க்க தோன்றியது.

அப்பொழுது அவன் ஏதோ வேலையாக நகர்ந்து தாயைத் தேடிச் செல்லவும், அகிலாவிடம் பெண் வீட்டிலிருந்த ஒருவர் பேசியது காதில் விழுந்தது.

“அகிலா நீ முதலிலேயே மாப்பிளையை முந்தானையில முடிஞ்சு வச்சிரு இல்லன்னா அம்மா பேச்சை கேட்டு ஆட ஆரம்பிச்சிடுவார் பிறகு என்னை மாதிரி கஷ்டப்பட வேண்டியதுதான் சொல்லிட்டேன்”

கேட்டவன் நின்றவண்ணமே உறைந்தான்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here