உள்ளம் உந்தன் வசம்_6_ஜான்சி

0
226

அத்தியாயம் 6

அகிலாவை சந்தித்து வந்திருந்ததில் இருந்து அவனது மனச் சஞ்சலம் குறைவு பட்டிருந்தது. அவள் தான் தன் பெற்றோரை அந்த அளவு அன்பாய் விசாரித்து இருந்தாளே?

அவள் தனது உயரம் கண்டு கிலேசப்படுகிறாள் என்று உணர்ந்ததும் அவளது குறைவான உயரம் கண்டு தனக்குத் தோன்றியதெல்லாம் மறந்தே போயிற்று.

ஓ நான் உயரமாய் இருப்பதால் என்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லப் போகிறாயா? சொல்லித்தான் பாரேன் எனும் வீம்பு எழ அங்கிருந்து வந்து விட்டிருந்தான்.

தன்னைப் போல அவளும் தன்னை நேரில் முதன் முறை பார்ப்பதால் வந்த சிந்தனை தானே அது, அதில் தவறென்ன? என அவன் இலகுவாய் உணர அன்று இரவாயிற்று.

அதன் பின்னர் அவளை மணமகளாக மணமேடையில் தான் சந்தித்தான். அவள் வருகின்றாள் என்றதும் சாதாரணமாகத்தான் திரும்பிப் பார்த்திருந்தான். ஆனால், அதன் பின்னர் அவனது கண்களை அவளினின்று அவனால் அகற்ற முடியவில்லை.

அன்று நர்த்தனம் ஆடிய கால்கள் பொன்னே பூவே எனப் பதவிசாய் நடந்து வர, தரை நோக்கி குனிந்திருந்த அவளது பார்வை மேலே எழவேயில்லை. அன்றைய இரெட்டைச் சடை இன்று பூக்கள் சூடி நீள் பின்னலாய் அலங்கரிக்கப் பட்டிருந்தது. அன்று ஒற்றைப் பொட்டோடு பளீரெனத் துலங்கிய அந்த முகம் இன்றோ கண்களுக்குக் கண்மை இட்டு உதடுகள் முகத்தின் ஒரு பாகமும் விடாமல் அழகுப் பூச்சுக்களால் அலங்கரிக்கப்பட்டு நிறமிகளால் அழகுப் படுத்தப்பட்டு இருந்தன.

இவள் அன்று ஒப்பனையில்லாது சும்மாவே அவ்வளவு அழகாயிருந்தாள், இப்போது எதற்கு இத்தனை ஒப்பனைகள்? என அவன் மனம் விரோதமாய் முனகியது.

பெண் வீட்டுச் சொந்தமான அந்தப் பெண்மணி அகிலாவிடம் கூறிய,

“அகிலா நீ முதலிலேயே மாப்பிளையை முந்தானையில முடிஞ்சு வச்சிரு இல்லன்னா அம்மா பேச்சை கேட்டு ஆட ஆரம்பிச்சிடுவார் பிறகு என்னை மாதிரி கஷ்டப்பட வேண்டியதுதான் சொல்லிட்டேன்”

என்றதைக் கேட்கும் வரையில் மனைவியை குறித்த மயக்கமான எண்ணங்களிலேயே இருந்திருந்தான். இப்போதோ மயக்கம் தெளிவடைந்து விட்டதே?

அவன் அந்த பக்கம் வரும் முன்பாக அகிலாவின் பெற்றோர் அவளிடம்,‘ உன் கணவரோட பெற்றோரும் உனக்குப் பெற்றோர் போலத்தான். அவங்களோட கூட எப்போது அன்பா, மரியாதையா பழகணும் பேசணும்’ என்று சொன்னதை அவன் கேட்க நேராததை என்ன சொல்வது?

அகிலா அந்தப் பக்கத்து வீட்டு அக்கா சொன்ன அத்தனை அறிவுரைக்கும் வெறுமனே அமைதியாயிருந்தாள். வருவோர் போவோர் சொல்வதெற்கெல்லாம் தலையாட்டும் வயதை அவள் கடந்திருந்தாளே?

தன்னுடைய தனிப்பட்ட வாழ்வின் நிகழ்வை ஒட்டியே சிந்தித்து, அது போலவே கற்பனை செய்து அகிலாவின் காதை ஓட்டைப் போட்டுக் கொண்டிருந்த பெண்மணி அங்கிருந்து நகரவும் ‘அம்மாடியோ’ என அகிலா பெருமூச்சோடு ஆசுவாசமானாள்.

நல்லவேளை இந்த அக்கா சொன்னதை இங்கே யாரும் கேட்கவில்லை, கேட்டிருந்தால் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வார்கள்? சிலருக்கு எங்கே என்ன பேச வேண்டும் என்பதே புரிவதில்லையே என எண்ணினாள்.

யார் காதில் விழக்கூடாதோ அங்கே சரியாக இந்த விஷயம் சென்று விட்டது என்பது அப்போது அவளுக்குத் தெரியவில்லை.

அடுத்த நாள் மணமக்களை மறுவீட்டிற்காக அழைப்பதாகப் பேசிக் கொண்டனர். பெண் வீட்டினர் அனைவரும் சற்று நேரம் கழித்து அவளை விட்டு விட்டுப் புறப்பட்டுச் சென்றனர்.

முன் பின் தெரியாத வீடு, சுற்றிலும் தெரிந்தவர்கள் யாருமில்லை. அகிலாவிற்குத் திடும்மென எங்கே வந்திருக்கின்றோம்? என வெகு திகைப்பாக இருந்தது.

தனியே ஹாலில் அமர்ந்திருந்தவள் மடியில் ஏறி அமர்ந்த பிரணவ், அவளது நாடியை திருப்பி… ‘அத்த’ என்றான்.

அவனது அருகாமையில் அவளுக்கு சென்ற சுவாசம் திரும்பி வந்த உணர்வு எழுந்தது. பிரணவ் தன் கையில் இருந்த சாக்லேட்டில் ஒன்றை பாதியாக்கி அகிலாவின் வாயில் வைத்தான். அவர்களுக்குள்ளே சகஜமாகப் பேச்சு வார்த்தைகள் நடக்க ஆரம்பித்தது. இருவரும் வெகுவாய் மலர்ந்து ஏதேதோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த ஆதவன் தூரத்தில் நின்றே மிகவும் ரசித்தான்.

அம்மாவை எங்கெங்கு தேடியும் இன்னும் காணவில்லை. பெண் வீட்டார் விடைபெறும் சமயம் வெளியில் வந்து விடைக் கொடுத்தவர் தான் மறுபடியும் ஏதோ வேலையாகச் சென்று விட்டிருந்தார். மகன் திருமணத்திற்குக் கணவனின் சகோதரிகளுக்குக் கொடுக்க வேண்டிய அரிசிப்பெட்டி எனும் சம்பிரதாயத்தில் அவர் சுழன்று கொண்டிருந்தார்.

அவனது அத்தைகள் ஒவ்வொருவராய் தங்கள் சகோதரன் மனைவி தந்த ஸ்டீல் பாத்திரத்தில் இருந்த அரிசி தேங்காய் இன்னபிற… எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு நாளை மறுவீட்டிற்கு வருவதாகச் சொல்லிப் புறப்பட்டுக் கொண்டு இருந்தனர்.

அகிலா அங்கே தனியாக இருக்கிறாள் என்று அம்மாவை அழைத்து ஏதோ சொல்ல அவன் நெருங்கவும் இப்போது அம்மா தங்கள் மரகதம் அத்தைக்காக அந்த ஸ்டீல் பானையில் ஒவ்வொரு பொருளாய் எடுத்து வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டான். சரி இது முடிந்ததும் அம்மா தனியாக வரட்டும் பேசலாம் என்று அவன் காத்திருந்தான்.

‘ராஜி, இனிதான் நீ ரொம்பக் கவனமாயிருக்கணும் பார்த்துக்க. இந்த மருமகளுங்க இருக்காங்களே நம்ம மகனுங்களை அப்படியே சுருட்டி தன் முந்தானையில சுருட்டி வச்சிருவாளுங்க. என் மவனும் கல்யாணத்துக்கு முன்னாடி என் கிட்டே எவ்வளவு பாசமா இருப்பான் தெரியுமா? இப்ப என்னன்னா அம்மா நல்லாயிருக்கியா? சாப்பிட்டியா? ன்னு கூட ஒரு வார்த்தை என் கிட்டே கேட்கிறதில்ல… என்னை மாதிரி நிலைமை உனக்கு மட்டும் வந்திரவேக் கூடாது’, மூக்கை உறிஞ்சினார்.

‘அடக்கடவுளே’, ஆதவனுக்குத் தலைச் சுற்றியது. இதென்னடா இது கொடுமையா இருக்கு. அங்கே என் பொண்டாட்டிக்கு ஒருத்தர் அறிவுரைன்னு சொல்லி கொன்னு எடுத்தாங்கன்னா இங்க என் அம்மாவுக்கு ஒருத்தர் அறிவுரையா கொட்டுறாங்க. ஆக மொத்தம் ஒரு குடும்பம் நல்லா, ஒற்றுமையா இருக்கணும்னு யாரும் நினைக்க மாட்டாங்க போலிருக்கு.

மரகதம் அத்தையின் பேச்சைக் கேட்க விரும்பாதவனாக மறுபடி ஹாலிற்கு திரும்பினான். தனியாக இருக்கிறாள் அருகில் இருப்போம் என்றெண்ணி அகிலாவின் அருகில் சென்றான்.

அவள் முகத்தில் சில சாக்லேட் தீற்றல்கள், எல்லாம் பிரணவின் கைவண்ணமாகத்தான் இருக்கும். அவளைப் பார்த்துப் புன்னகைத்தான், பதிலுக்குப் புன்னகைத்தவளிடம்,

‘முகத்தைக் கழுவிக்கோ அகிலா…’

தன் முகத்தை தடவியவள் சாக்லேட் பிசுபிசுப்பு ஒட்டி இருக்கவும், அதைப் பார்த்து பெரிதாய் புன்னகைத்தாள்.

‘சரிங்க…’ எழுந்தவளிடம் ஆதவனின் பின்னாலேயே வந்திருந்த ராஜி

‘சேலை மாத்திக்கிறியாடா அகி…’

‘சரித்த…’

‘முதல்ல இந்த ஹேர்ஸ்டைல் கழற்றிடுவோமா?’ அவளது தலையில் கைவைக்க,

‘நான் செஞ்சுக்கறேன் அத்த…’

‘பரவாயில்ல உனக்குக் கஷ்டமா இருக்கும்.’

முன்பு நிர்மலா உபயோகித்துக் கொண்டிருந்த கீழே இருந்த அறையில் ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் அகிலாவை அமர்த்தி முடியை கலைக்க ஆரம்பிக்கவும், தாயுடன் நிர்மலாவும் சேர்ந்தாள். மணமகளின் முடி அலங்காரத்தைப் பிரிக்க அரை மணி நேரம் ஆயிற்று.

பிரணவ் அங்குக் கழற்றி வைத்திருந்த ஹேர் பின்களையும், கொண்டை ஊசிகளையும் கையில் அள்ளிக் கொண்டு வந்து நின்றான்.

‘தாத்தா… அத்த தலையில்…இவ்ளோ முள்ளு!’ என அபிநயம் பிடித்தான். அதைப் பார்த்த ஆதவனுக்கு சிரிப்பாக வந்தது.

ரவியோ… ‘ஆமாடா இனி இந்த எல்லா முள்ளையும் உன் மாமா தலையில் வச்சி விடு’, எனச் சொல்லவும், அதை சீரியஸாக எடுத்துக் கொண்டவன் ஒற்றைத் தாவலில் ஆதவன் மடியில் ஏறி நின்று அவன் தலையில் அந்தப் பின்களை மாட்டிக் கொண்டு இருந்தான்.

‘என்னடா இது சேட்டை? எனக்கு ஏண்டா இந்த முள்ளுல்லாம்?’ தங்கை மகனை கன்னங்கள் பிடித்து ஆட்டியவனுக்கு ஏதோ குலுங்கும் சப்தம் கேட்க என்னவென்று பார்த்தால் பிரணவின் சட்டைப் பையில் கோலிக் குண்டுகள் இருந்தன.

‘இதைப் பையில் வச்சிட்டே அலைவியா?’ அந்த கோலிக்குண்டுகளை பார்க்க பிரணவின் சட்டைப் பை நோக்கி கை நீட்டியவனிடம் தன் இரண்டு கைகளால் பையை மறைத்தவன்…

‘மாமா இது என் மார்பிள்ஸ்…’ முறைத்தான்.

‘தூங்குற வரைக்கும் இதெல்லாம் பையில வச்சிட்டே அலையுறான் ஆதி, ஒரு பேச்சு கேட்கிறதில்ல… சின்னப் பிள்ளைங்க வச்சுக்கக் கூடாது, தெரிஞ்சும் தெரியாமலும் வாயில போட்டுக்குவாங்கனு பயமா இருக்கு… இவன் கேட்டாத்தானே?…’ ரவி சொல்ல,

‘அப்பா பிரணவ் குத் பாய், நோ ஈத்திங்க் மார்பில்ஸ் (no eating marbles)’ அவன் விரலை அசைத்துப் பேசியதை இரசித்துச் சிரித்தனர்.

ஒரு வழியாக மருமகளின் தலை அலங்காரத்தைக் கலைத்து, எளிமையாய் அவள் முடியை சீவி பின்னலிட்ட ராஜி, உன்னோட எல்லாப் பொருளையும் மாடியில கொண்டு போய் வச்சுட்டாங்க அகிலா. இப்ப அங்கே போய்த் துணி மாத்திக்கோ. நாளைக்கு ஆதியை உன் பெட்டில்லாம் அவன் அறைக்கு மாத்த சொல்றேன் சரியா? மருமகளை முகத்தை ஆசையாய் தடவி நெட்டி முறித்தார்.

‘நிம்மி உன் அண்ணி கூடத் துணைக்குப் போ’

‘சரிம்மா…’ என்றவளாய் பின் தொடர

‘அண்ணி இங்கே வாங்க’, என முன் செல்ல,

‘அச்சோ, நான் வயசில சின்னவ தானே? நீங்க வாங்க எல்லாம் வேண்டாம் நிர்மலா அண்ணி ப்ளீஸ்’

‘ஓ அப்படியா சரி சரி அப்ப எனக்கும் ரொம்ப மரியாதை எல்லாம் வேண்டாம்… நிர்மலா போதும் சரியா?’ தலையாட்டியவாறு இருவரும் புன்னகைத்துக் கொண்டனர்.

சேலையின் உபயத்தில் படிப்படியாக மெதுமெதுவே காலடிகள் எடுத்து வைத்து மாடி ஏறிய போது அப்படிக்கட்டு ஓரம் இருந்த டிசைன்கள் அவளை மிகவே கவர்ந்தது. மெதுவாக மாடியேறிக் கொண்டிருந்தவள் அதனை இரசனையாக வருடிக் கொடுத்தாள்.

‘என்ன அகிலா உங்க வீடு நல்லா இருக்கா?’

வியப்பாய் அவளை அகிலா ஏறிட்டாள் … என் வீடு என்றோ, நம் வீடு என்றோ தான் சொல்வாள் என நினைத்திருக்க, இந்த வீட்டில் பிறந்து வளர்ந்தவள் ‘உங்க வீடு’ என மணமான முதல் நாளே தன்னிடம் பேசவும் திகைத்திருந்தாள். அவ்வீட்டில் ஒவ்வொருவரும் அவளைத் தங்கள் வீட்டினளாக அரவணைத்து ஏற்றுக் கொண்ட விதம் மனதை கவர்ந்தது.

‘நம்ம வீடு அழகாயிருக்கு நிர்மலா?’

அண்ணன் மனைவியின் பேச்சில் நிர்மலாவின் மனமும் கனிந்தது.

மாடியின் அந்த அறையைக் காட்டிய நிர்மலா, ‘பெட்டியோட சாவி உன் கிட்டே இருக்கில்ல?’

‘ம்ம் இருக்கு’ தன் கைப்பையிலிருந்து எடுத்த சாவியைக் காட்டினாள்.

‘உடை மாத்திட்டு வா… நான் வெளியே தான் இருக்கேன். பயப்பட வேண்டாம்.’

‘சரி’, என்று உள்ளே சென்று அறையினுள்ளே தாளிட்டவள் இலகுவான அந்தச் சேலையை அணிய ஆரம்பித்தாள்.

‘அம்மா….’

‘டேய் பிரணவ்… இங்கேயும் வந்திட்டியாடா வாலு…’

‘நான் மாமா தலையில அந்த முள்ளு குத்திட்டேன்…’

‘அப்படியா? எந்த முள்ளுடா?’

அம்மாவும் பிள்ளையும் கொஞ்சித் தீர்க்க…

கதவை உள்ளிருந்து திறந்துக் கொண்டிருந்தாள் அகிலா.

கதவு சத்தம் கேட்க, அம்மாவின் மடியினின்று துள்ளி இறங்கிய பிரணவின் சட்டைப் பையிலிருந்த கோலிக்குண்டுகள் சிதறின.

கதவைத் திறந்து வெளியே ஒரு எட்டு தன் காலை வைத்தவள் சரியாகச் சில கோலிக் குண்டுகளில் கால்பதிக்க அது அவளை இடறி விழச் செய்தது. சம நிலைக்கு வர முயன்று தோற்றவள் அருகிலிருந்த தூணைப் பிடிக்க முயன்றாள். அவள் கரங்கள் தூணைப் பிடித்து இருந்தும் கூட வழுக்கிக் கொண்டு வந்தவள் சர்ரென இறங்கி இரண்டு முட்டுக்களும் சிதறி இருந்த கோலிக்குண்டுகளிலேயே வந்து மோதி நிற்க ஆவென அலறினாள்.

வீட்டில் குடும்பத்தினர் தவிர்த்து சில உறவினர்கள் மட்டுமே இருந்தனர். அத்தனை பேரும் அவள் குரலில் படியின் கீழே சேர்ந்து விட்டிருக்க, தன் மகனால்தான் இவ்வளவும் என அவனை அடிக்கக் கையோங்கினாள் நிர்மலா.

‘அச்சோ, அவனை அடிக்காத நிர்மலா, அவனுக்கு என்ன தெரியும்? நான் தான் கவனமாக இருந்திருக்கணும்’ என்றவளாய் தன் வலியை பற்களைக் கடித்து அடக்க முயற்சித்தாள்.

மகனை விட்டு விட்டு அவளருகில் வந்தவள் அவளை எழுப்ப முயற்சித்தாள். அகிலாவால் சட்டென எழ முடியவில்லை. அப்படியே அமர்ந்த வாக்கில் இருந்தாள்.

தன்னெதிரே நின்றவனை எட்டிப் பார்த்தாள், இவர் எப்போ வந்தார்? மனதுக்குள் எண்ணிக் கொண்டிருக்க ஆதவன் அவளருகே குனிந்தான்…

‘என்னாச்சு அகிலா எழ முடியலியா?’

கொஞ்ச நேரத்தில எழுந்துக்கறேனே… இப்ப முடியல… கண்ணீர் சேர்ந்த அவளது விழிகள் அவனைப் பாடாய்ப் படுத்தியன. பரவாயில்ல நான் கீழே வரை உன்னை தூக்கிக்கிறேன்.

அதற்குள்ளாக நிர்மலா அங்கிருந்த கோலிக் குண்டுகளை வாரி ஒதுக்கியிருக்க, அகிலாவின் முதுகில் மற்றும் அவள் கால்களுக்குள் கைக்கொடுத்து சுலபமாய் அவளை ஆதவன் ஏந்திக் கொண்டிருந்தான்.
அத்தனை பேர் பார்க்க அவன் தன்னைத் தூக்கிக் கொண்டு நடப்பது கூச்சத்தில் நெளிந்தாள் அவள்.

‘என்னாச்சு?’

‘நான் இறங்கிக்கிறேன்… நடந்துப்பேன் …’

சரி படி இறங்கும் வரைக்கும் மட்டும் தானே… சமாதானப்படுத்தியவன் ஹாலின் இருக்கையில் அமர வைத்தான்.

ராஜி அவளுக்குக் குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்தார்.

குடித்து முடித்தவளிடம் ராமானுஜம், ‘ரொம்ப வலிக்குதாம்மா, க்ளினிக் போயிட்டு வர்றீங்களா? ஆதி அழைச்சுட்டுப் போடா”

அதான் பா புறப்பட்டேன், அதற்குள் உடை மாற்றி வந்திருந்தான்.

‘பொறுங்க பொறுங்க… நீ பொறுடா ஆதவா’ ராஜி அருகில் வந்தவர்.

‘யாரோ என் மருமகளுக்குக் கண்ணு வச்சிட்டாங்க, அதனாலத்தான் முத நாளே இப்படி ஆகிப் போச்சு’ என்றவராய் அவளுக்கு முதலில் திருஷ்டி கழித்தவர் பார்வை மரகதம் அத்தையிடமே இருப்பதைக் கவனித்தவன் மனதிற்குள் சிரித்துக் கொண்டான். அம்மா இந்த அத்தைப் பேச்சைக் கேட்டு எல்லாம் நடந்துக்க மாட்டாங்க எனும் ஆசுவாசம் வந்தது.

அதன் பின்னர் இருவரையும் ஜோடியாக அமர வைத்து திருஷ்டிக் கழித்தார். அத்தனையும் முடித்து திருமணத்தின் இரவு மருத்துவமனை தேடி புதுமணத் தம்பதியர் புறப்பட்டனர்.

க்ளினிக்

செக் அப் முடித்து மருந்து மாத்திரை வாங்க அமர்ந்திருந்தனர். மற்றெல்லா க்ளினிக்குகளும் அடைப் பட்டிருக்கச் சற்றுத் தூரத்தில் இருந்த அந்த டாக்டரிடம் ஆதவன் அகிலாவை அழைத்து வந்திருந்தான். முதன் முறை மனைவியை அழைத்து வரும் இடமா இது? எனச் சலிப்பாக உணர்ந்தான்.

லேசான சிராய்ப்புகள் மற்றும் எல்லாம் உள்காயம் தான். வலி சரியாக ஒருவாரம் ஆகும் என மருத்துவர் கூறி இருந்தார்.

விசும்பல் சத்தம் கேட்டதும் அவள் அருகில் அமர்ந்தான்.

‘என்னாச்சு அகிலா?’

‘ரொம்ப வலிக்குதா?’

… தலையை மட்டும் ஆமென அசைத்தாள்.

அவள் கரத்தைப் பற்றினான்.

.. தேம்பியவள், ‘எனக்கு ஊசிலாம் பிடிக்காது, உங்க டாக்டர் எனக்கு ஊசி குத்திட்டாங்க’எனவும் ஆதவனுக்கு மெலிதாய் புன்னகை மலர்ந்தது.

‘இது என் டாக்டரா?’

‘ம்ம்’ தலையசைத்தவள்… ‘நீங்க அழைச்சுட்டு வந்திருக்கீங்க, அப்ப உங்க டாக்டர்தான்.’

‘ஓ…’ அவள் கண்ணில் சட்டென்று கண்ணீர் வழிய தன் கைக்குட்டைக் கொண்டு ஒற்றியவன் தன்னோடு சாய்த்து அணைத்துக் கொண்டான்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here