உள்ளம் உந்தன் வசம்_7_ஜான்சி

0
288

அத்தியாயம் 7

அவள் அழுகை பொறுக்காமல் அவன் அவளை தன்னோடு சாய்த்துக் கொண்டிருக்க, அவளோ அவனிடமிருந்து விருட்டென விடுபட முயன்று திமிறினாள்.தன் முன் நெற்றிச் சுருங்க மனைவியை விடுவித்தவன் கண்களாலேயே என்னவென்று கேட்டான்.

‘நம்மளை அந்தத் தாத்தா பார்க்கிறாங்க…’

அவள் கை நீட்டிய இடத்தில் இருந்த வாட்ச்மேன் தாத்தா அவர்களைப் பார்த்துச் சினேகிதமாகச் சிரித்தார். ஜோடி சூப்பர் என அவர் தன் விரல்களால் இவர்களுக்குக் காண்பிக்க ஆதவன் பெரிதாய் புன்னகைத்தான். அவனது சிரித்த முகத்தைத் தன் வலக் கரத்தால் மறைத்தவள் அவன் கரத்திலேயே வெட்கத்தில் ஒளிந்தாள்.

அவளது செயலில் அவனுக்கு இன்னுமே சிரிப்பு வரப் பார்த்தது. அவர்கள் வீட்டில் இப்படிப் பட்டு பட்டென்று பேசும், ரியாக்ட் செய்யும் வழக்கம் யாருக்குமே கிடையாது. நிர்மலாவும் கூடக் கொஞ்சம் பதவிசாகத்தான் நடந்து கொள்வாள். இவள் என்னவென்றால்…

‘யார்மா அது அகிலா ஆதவன்? வாங்க…’

மாத்திரை பெற்றுக் கொள்ள மெடிக்கலில் இருந்து அழைக்கும் குரல் கேட்கவும் அவளை அங்கேயே விட்டுவிட்டு சென்று விபரம் கேட்டு வாங்கி வந்தான்.

அதிலிருந்து ஒரு டோசை எடுத்து அங்கிருந்த தண்ணீர் கேனிலிருந்து ஒரு கிளாஸ் எடுத்து அவளை மாத்திரையை விழுங்கச் செய்தான். வேறு வழியில்லாமல் அவனைக் கோபத்தில் முறைத்தவாறே அவள் மாத்திரைகளை விழுங்கி வைத்தாள்.

‘தூக்கட்டுமா? இல்ல நடந்துக்குவியா?’

அவன் சொன்னதைக் கேட்டதும் படீரென எழுந்து நின்றாள், ‘அதெல்லாம் நடந்துப்பேன்’ விருட்டெனக் காரை நோக்கிச் சென்றாள்.

‘மெதுவா போ’ என்றான்.

காது கேளாதவள் போல முன் சீட்டில் போய் அமர்ந்துக் கொண்டாள்.

‘என்ன அகிலா? கோபமா?’

‘எனக்கு மாத்திரையும் பிடிக்காது உவ்வேக்…’

‘ஹா ஹா…’

‘உங்களுக்கு ஜாலியா இருக்கில்ல?’

‘இல்லம்மா உனக்கு வலி சரியாகணும்ல…’

‘ம்ம்…’

அவள் அமைதியாக இருக்கவும் விட்டு விட்டான்.

சற்று நேரம் அமைதியாக இருந்தவள், ‘வீட்டுக்கு போகாம எங்க ரோட் ரோடா சுத்துறீங்க?’

‘ஒரு கடையைத் தேடிட்டு இருந்தேன்… ம்ம் கிடைச்சுடுச்சு…’

அந்த பட்டுச் சேலை கடை முன்னால் வண்டியை பார்க் செய்தான்.

‘நடக்க முடியும்ல அகிலா? உள்ளே வர்றியா?’

அவன் தனக்கு மாத்திரை தந்த கோபத்தில் இருந்தவள்,’ இல்ல எனக்குக் கால் ரொம்ப வலிக்குது நான் வரலை’

‘ஓகே…’ அதற்கு மேல் கொஞ்சாமல், கொஞ்சாமல் அவன் அவளைத் தனியே காரில் விட்டு விட்டுச் சென்றது அவளுக்கு இன்னும் கோபம் வந்தது.

சற்று நேரத்தில் கையில் பையோடு காரில் வந்து அமர்ந்தான்.

அது என்னவென்று கேட்க எண்ணினாலும் கேட்க அவளுக்கு நாவெழவில்லை. அவள் தான் அவன் மேல் மிகுந்த கோபத்தில் இருக்கிறாள் அல்லவா?

அவளது கையில் அந்தப் பார்சலை வைத்தவன், ‘உனக்குப் பிடிச்சிருக்கா பாரு’என்றான்.

பார்சலை பிரிக்கும் ஆர்வம் எழ சுறுசுறுப்பாய் முதலில் அந்தத் துணிப்பையினின்று அட்டைப் பெட்டியை வெளியே எடுத்தாள், பின்னர் அட்டைப் பெட்டியை திறந்தாள்.

‘ஓ’ அவளது திறந்த வாய் மூடவில்லை, என்ன அழகு?! அவளது கை விரல்கள் அதனை வருடின.

அது எந்தப் பச்சை நிறத்தில் சேரும்? என்று தெரியவில்லை, அவ்வளவு பசுமையாய் அழகாய், மென்மையாய் அவள் கையில் இருந்ததொரு பட்டுச் சேலை. அதனை புரட்டிப் பார்க்கையில் விலையைப் பார்த்து ஜெர்க் ஆனாள்.

‘என்னாச்சு உன் கண்ணு ஏன் இவ்வளவு பெரிசாகுது?’

‘ரெண்டு விஷயம் கேட்கணும்னு தோணுச்சு, ரெண்டு இல்ல மூணு…’ விரல்கள் இரண்டிலிருந்து மூன்றாகின.

முறுவலித்தான்… ‘கேளு..’

‘இப்ப எதுக்கு இந்தச் சாரி?’

‘கல்யாணமாகி முத நாள் உன்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போய் உனக்கு மாத்திரை வாங்கிக் கொடுத்ததா இருக்கக் கூடாதில்ல? அதனால ஏதாவது மாற்றி வாங்கிக் கொடுக்க நினைச்சேன்.’

‘வாவ்…’ அவன் கையைப் பற்றிக் குலுக்கினாள். ‘நீங்க சூப்பர் போங்க…’ ஆதவனின் முகத்தில் புன்னகை விகசித்தது.

;சரி ரெண்டாவது…’ அவனே எடுத்து கொடுத்தான். அவளிடம் பேச அவனுக்கு சுவாரஸ்யமாக இருந்தது.

‘சும்மா வாங்குற சேலையே இவ்வளவு காஸ்ட்லியா? நீங்க பெரிய அப்பா டக்கர் போலவே? உங்க சாலரி எவ்வளவு?’

‘சொன்னான்… ‘ஓ’ திறந்த வாய் மூடவில்லை.

‘ஏன் உனக்குத் தெரியாதா?’

‘இல்லையே, இதெல்லாம் கேட்டுக்கலை. நல்ல பையன்னு சொன்னாங்க அதான் சரின்னு சொன்னேன்.’

‘ஹா ஹா’ சிரித்தான்.

‘உங்களுக்குத் தெரியாது… எங்க வீட்டு நாலு டிடெக்டிவும் அதான் அம்மா அப்பா பெரியண்ணன் கண்ணா ரெண்டாவது அண்ணா பிரசன்னா இவங்க எல்லாம் உங்களைப் பற்றி ரொம்ப விசாரிச்சுத்தான் சொன்னாங்க.. அதுக்கப்புறம் நான் எதுக்கு டென்ஷன் எடுக்கணும்? சரின்னுட்டேன்.’

‘மூணாவது கேள்வி கேளு…’

‘இவ்வளவு அழகா சாரி சாய்ஸ் பண்ணியிருக்கீங்க, எனி எக்ஸ்பீரியன்ஸ்? ம்ம்… ம்ம்’

‘ஹா ஹா ஹா’, சத்தமிட்டு சிரித்து விட்டான்.

பதில் சொல்லாது இருப்பவனிடம் ‘ஓ அத்தைக்கும், நிர்மலா அண்ணிக்கும் எடுத்திருப்பீங்க? அந்தப் பழக்கம் அப்படித்தானே?’

பதிலே சொல்லாமல் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

‘ஓயே? மிஸ்டர் ஆதி என்ன பதிலே காணோம்?’

‘ம்ம்ம்…’ ஏனோ அவளைச் சீண்ட தோன்றிற்று, ‘அப்படில்லாம் இல்ல நான் எங்க ஆபீஸ்லயும் சில பொண்ணுகளுக்குச் சாரி எடுத்துக் கொடுத்திருக்கேன்.’

அடுத்து வண்டி நின்ற இடத்தைப் பார்த்து தான் கேட்ட கேள்விக்கான பதிலையும், கால்வலியையும் மறந்தவளாய் கதவை திறந்து எழுந்து விறுவிறுவெனச் சென்றாள். அது ஒரு ஐஸ்கிரீம் பார்லர்.

‘ஓ …..’

அவர்கள் டேபிளில் அமரவும் அவன் போன் ஒலித்தது.

‘நாங்க இன்னும் 10 நிமிஷத்தில வீட்டில இருப்போம் மா… சீக்கிரம் வர்றோம்.

அவளுக்குப் பிடித்த ஐஸ்கிரீம்களை வாங்கிக் கொடுத்தான். வீட்டிற்கும் சிலவற்றை ஆர்டர் செய்தான்.

‘நீங்க சாப்பிடலையா? …’

‘எனக்கு அவ்வளவா இனிப்பு பிடிக்காது…’

‘ஓஓ…’

வண்டிக்கு திரும்ப வருகையில் நின்று நின்று நடந்து வர,

என்னாச்சு?

‘நடக்கும் போதெல்லாம் இந்த சேலை மூட்டுல அடிப்பட்ட இடத்தில உராயுதா? அதான் ஒரு மாதிரி வலிக்குது…’

‘கொஞ்சம் முன்னாடி ஐஸ்க்ரீம் பார்லருக்கு வரும் போது வலி மறந்து, அப்படி ஓடி வந்த?’

‘ஹி ஹி அசடு வழிந்தவள், அது அப்ப ரொம்ப எக்ஸைடடா இருந்தேனா? வலியே தெரியலை.’

சிரிப்பை அடக்கிக் கொண்டவன் அவளை அழைத்துக் கொண்டு காரில் வீட்டிற்கு வந்து சேர, வண்டியை விட்டு இறங்காமல் அவள் உள்ளேயே அமர்ந்திருந்தாள்.

‘இப்ப என்ன பிரச்சனை? மெதுவா நடந்து போ… பார்க் பண்ணிட்டு வரேன்.’

‘ஒரு தப்பு நடந்து போச்சு…’

‘நான் உங்க கூட அந்தப் பட்டுச் சேலை கடைக்கு வந்திருக்கணும்..’

‘ஏன் இப்ப என்னாச்சு?’

‘எனக்கு மட்டும் சேலை எடுத்திருக்கீங்க, அத்தைக்கு, நிர்மலாக்கு எடுக்கலை? அப்ப எனக்கு ஒன்னுமே தோணலை… இப்ப சங்கடமா இருக்கு.. வேணும்னா மறுபடி போயிட்டு வருவோமா?’

அவள் என்ன நினைத்துச் சொன்னளோ தெரியாது? அவன் மனதிற்குச் சாமரம் வீசியது போல உணர்ந்தான்.

‘அதெல்லாம் அவங்க ஒன்னும் நினைச்சுக்க மாட்டாங்க, இன்னொரு நாள் அவங்களுக்கு வாங்கிக்கலாம்.’

தயங்கியே இறங்கினாள், ஐஸ்கிரீம் மற்றும் சேலை பார்சலை அவள் கையில் திணித்தான். வண்டியை பார்க் செய்து விட்டு வந்தவன் மெதுவாய் நடந்து கொண்டிருந்தவளோடு இணைந்து உள்ளே சென்றான்.அவன் அப்பா மற்றும் பெரும்பாலானவர்கள் உறங்கியிருக்க ரவியும், நிர்மலாவும் பிரணவும் கூடவே அம்மாவும் விழித்திருந்தார்கள்.

‘ஓ…’

தயக்கமாய் பிரணவ் அவள் அருகில் வந்தான் ‘ஸாரி அத்த…’ சொன்னான். அநேகமாய் சாரி கேட்க சொன்னது நிர்மலாவின் வேலையாய் இருக்கலாம்.

வசதியாய் அமர்ந்தவள் அவனிடம் குனிந்து பேசினாள்,

‘அதெல்லாம் ஒண்ணுமில்ல செல்லம், இதோ பாரு அத்தைக்கு இப்ப வலி குறைஞ்சிடுச்சு. நான் சரியாகிட்டேன்… நாம ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா? ஐஸ்கிரீம் பார்சலை அவனிடம் கொடுக்க அவன் உற்சாகமானான்.

களைப்பாக இருந்த ராஜி டாக்டர் என்ன சொன்னார்? என அவர்களிடம் விசாரித்து விட்டு இளைப்பாறச் சென்றார்.

வா என்றழைத்தவனாகத் தன் அறைக்கு அவளை அவன் அழைத்துச் சென்றான். அவளுக்கு அடிப்பட்டிருந்ததனால் சம்பிரதாயமாக எதையும் செய்ய யாரும் முற்படவில்லை.

அவனது அறையிலிருந்த தனது ஹேண்ட் பேகை எடுத்து அமர்ந்தாள்.

ஆதவன் எதிரில் வந்து நின்றான்.

‘அகிலா நீ கொண்டு வந்திருக்கிற பேக்கேஜில் உன்னோட த்ரீ போர்த் மாதிரி ட்ரெஸ்லாம் கொண்டு வந்திருக்கியா?’ என்றான்.

‘எதுக்கு?’ என விழித்தவள்… ‘ஆமா சின்னப் பேக் ஒன்னு இருக்கும் அதில் வச்சிருந்தேன்.’ உடனே மாடிக்குச் சென்று அந்தப் பையை எடுத்து வந்தவன் அவளிடம் நீட்டினான்.

அப்போதுதான் அவள் தன் ஹேண்ட் பேகில் இருந்த போனை எடுத்து வீட்டினரின் மிஸ்ட் கால்களை பார்த்திருந்தாள். பையை வாங்கி வைத்தவள் தாய்க்கு போன் போட்டாள்.

‘ஆ அம்மா… அதெல்லாம் ஒன்னுமில்ல’

‘ம்ம் அவங்க தான் அழைச்சுட்டுப் போனாங்க…’ எல்லாக் கதையும் சொல்லி முடிக்கும் வரை காத்திருந்தவன்

‘உனக்கு சேலை கட்டி இருக்கிறது கால்ல உராயுதுன்னு சொன்னீல்ல… இப்ப இதை மாத்திக்கோ, உனக்குக் கொஞ்சம் வசதியா இருக்கும். நம்ம ரூம்ல இருக்கிறப்ப என்ன ட்ரெஸ் வேணா போட்டுக்கோ பிரச்சனையில்ல… வெளில போறப்ப எல்லாம் கொஞ்ச நாளைக்குச் சாரி கட்டிக்கோ…’

சரி என தலையசைத்தவள் உடை மாற்றி வரும் முன் அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

அடுத்த நாள் மறுவீடு சென்று திரும்பி வந்த போது அவர்கள் வீட்டில் அலுவலக நட்புக்கள் எல்லாம் குழுமி இருந்தனர். பரிசுப் பொருட்களும், பூங்கொத்துமாய் அமளிதுமளிப் பட்டது. தம்பதியரிடம் ஒவ்வொருவராக வந்து அவர்களை வாழ்த்திச் செல்ல…

அடுத்ததாக அருகில் வந்த கவிதாவோ ஆதவனிடம் தான் அணிந்திருந்த கேரள செட்டுப் புடவையைக் காண்பித்து,

‘பாருங்க ஆதி நீங்க எனக்கு வாங்கித் தந்த இந்தச் சாரி இன்னிக்கு உடுத்தி இருக்கேன். எனக்கு ரொம்ப அழகாயிருக்கில்ல?’ எனக் கேட்டாள்.

அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து திகைத்து நின்றனர்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here