உள்ளம் உந்தன் வசம்_8_ஜான்சி

0
251

அத்தியாயம் 8

திருமணத்தின் அடுத்த நாள் காலை:

வழக்கமான நேரத்தில் கண் விழித்த ஆதவனின் உடலின் அலுப்புக் கொஞ்சம் மிஞ்சியிருக்கச் சோம்பலாய் நெளிந்தவாறு திரும்பிப் படுத்தான். திருமணத்திற்கான அலைச்சல், கால் மூட்டுகளில் அடிப்பட்டது மற்றும் இரவு சாப்பிட்ட வலி மருந்தின் தாக்கத்தில் அகிலா நன்றாகத் தூங்கி விட்டிருந்தாள், இன்னும் எழுந்திருக்கவில்லை.

தன்னருகில் ஒருக்களித்து படுத்தவாறு பெரிய தலையணை ஒன்றில் தன் கால்களைப் போட்டுக் கொண்டு, கைகள் வயிற்றில் போட்டவாறு அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்த மனையாளை அவன் கவனித்தான். அவளோ புதுமணப் பெண்ணின் மெருகு குறையாதவளாக தூக்கத்திலும் மஞ்சளும், வெண்மையுமான சரும நிறத்தில் அழகில் ஜொலித்துக் கொண்டு இருந்தாள். அவளது கைகளிலும் கால்களிலும் இட்ட மருதாணி அவன் கண்களைப் பறித்துக் கொண்டிருந்தது.

சில முடிக் கற்றைகள் அவள் முகத்தில் பரவி கிடந்தன அவளைச் சற்றே இரசித்தவன் முடிக்கற்றைகளைத் தன் விரல்களால் ஒதுக்கினான். சுந்தர் விஷயம் தெரியும் முன்னதான விட்டேற்றியான சிந்தனையில் இருந்திருந்தால் அவளை இயல்பாகவே தன் மனைவியாக ஏற்றுக் கொண்டிருந்து இருப்பான். இப்போது தன் அதீத எச்சரிக்கை உணர்வில் அவனால் ஒன்றையும் முழுமையாக இரசிக்க இயலவில்லை. சற்றே முள்ளின் மேல் நின்ற உணர்வு தான் இருந்தது.

முதல் இரவில் மனைவியிடம் தனிக்குடித்தனம் பற்றிப் பேசி அவளது கருத்து என்னவென்று கேட்டு, தன்மையாகத் தன்னுடைய நிலைப்பாட்டைச் சொல்ல எண்ணி இருந்தான். அவன் நினைத்ததற்கு மாறாக அவளுக்கு அடிப்பட்டு விட்டது. அதன் பின்னான பரபரப்பில் எதுவும் பேசவும் நேரம் அமையவில்லை.

அவள் கண்ணீரைக் கண்ட பின்னர் மூளையே வேலை செய்யவில்லையே? பின்னர் அதெல்லாம் எப்படி ஞாபகம் இருக்கும்?

பொதுவாக யாரொருவர் இல்லத்தில் அமைதி இல்லையோ அவர்களால் வெளி உலகத்தில் வெற்றி காண முடியாது என்பது அவனது தீர்க்கமான எண்ணம். தன் குடும்ப வாழ்க்கை சீராக அமைய வேண்டுமென்பது ஒன்றே அவனது ஆசை.

திருமணத்திற்கு அப்பால் தன் வாழ்க்கை எப்படி இருக்கும் எனப் பெண் மட்டும் தான் கவலை கொள்வாளா? ஆணுக்கும் அந்தத் தடுமாற்றங்கள் நிச்சயம் இருக்கத்தான் செய்யும்.

தன் நண்பன் வீட்டில் நிகழ்ந்தது தன் வீட்டில் நிகழ்ந்து விடக் கூடாது எனும் முன்னெச்சரிக்கையில் ஆதவன் நிகழ்காலத்தில் இலயிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருந்தான்.

மறுபடி மனைவியில் பார்வையை பதித்தான். முன் தினம் திருமணச் சேலையில் பெரிய பெண்ணாகத் தெரிந்தவள் இப்போது மிகக் குட்டிப் பெண்ணாகத் தெரிந்தாள். இவளை தன்ணோடு வெளியில் அழைத்துச் செல்லும் போது கட்டாயமாகச் சேலைக் கட்டிக் கொள்ளச் சொல்ல வேண்டும் என்று மனதில் தீர்மானித்துக் கொண்டான்.

ஸ்கர்டோ, த்ரீ போர்த்தோ அணிந்து இவள் என்னோடு வந்தாளென்றால் யாராவது என்னிடம் ‘இந்தப் பாப்பா யாரு?’ என்று கேட்டு வைக்கப் போகிறார்கள்… அப்புறம் என் மானமே போச்சு… என்று எண்ணியவனின் மனதிற்குள் வடிவேலு ‘அவ்வ்வ்’ எனப் புலம்பிக் கொண்டு இருந்தார்.

தனக்கான தாயின் தேர்வை நினைத்து மறுபடியும் மனதில் சுணக்கம் எழுந்தது. அதனால் அவனுக்கு அகிலாவை பிடிக்கவில்லை என்பது பொருளல்ல. ஒல்லியாக இருந்தால் குண்டாக்கி விடலாம். குண்டாக இருந்தால் ஒல்லியாகலாம். ஆனால் உயரம்? அதை என்ன செய்வது? ம்ம்ஹீம்…

அவள் காயத்தைப் பரிசோதிக்க அவளருகே அவன் நெருங்கினான். தன் முன்னே தூங்கிக் கொண்டிருந்தவளின் வழவழப்பான கால்களில் எல்லாம் ஏனோ அவன் மனம் செல்லவில்லை. அப்போது அவனது தொலைபேசி ஒலித்தது.

‘என்னம்மா?’

‘ஓ கண்ணன் வந்திருக்கிறாங்களா?’

‘சரி, அவளை எழுப்பி அழைச்சிட்டு வரேன்.’

‘ம்ம்’

படுத்த வாக்கில் அவளைத் தோள் தொட்டு லேசாய் உலுப்பினான். அவளோ தூக்கத்தில் அவன் கையைப் பிடித்து இழுத்தவள் அவன் தோளில் தலை சாய்த்துத் தூக்கத்தைத் தொடரலானாள். அவள் செய்கையில் ஒரு நிமிடம் திகைத்தாலும் ஆதவனுக்குச் சிரிப்பு வந்து விட்டிருந்தது.

காதுக்கருக்கே கேட்ட சிரிப்புச் சத்தம் அதுவும் ஆணின் குரல் தூக்கத்தில் திடுக்கிட்டவளால் தன் கண்களை இன்னும் திறக்க இயலவில்லை. கைகளால் அருகில் இருப்பவனின் முகவடிவை அளந்தாள். அவனும் அவள் என்னதான் செய்கிறாள்? என்று பார்க்க முகத்தைக் கொடுத்துக் கொண்டு இருந்தான். சிரிப்பை அடக்கிக் கொண்டதில் அவன் உடல் சன்னமாய்க் குலுங்கிக் கொண்டு இருந்தது.

முன் நெற்றி, புருவங்கள், கண்கள் எனப் பயணித்த அவளது விரல்கள் அவன் மீசையில் வந்து நின்றதும் உதறியது.

‘ஐயோ’, அவள் எழுந்து அமர்ந்து மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள். அறையைச் சுற்றி முற்றிப் பார்த்தாள், முன்தினம் தனக்கு திருமணம் ஆனது எல்லாம் நினைவிற்கு வர சில நிமிடங்கள் எடுத்திருக்கும் வரையிலும் ஆதவன் அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே தான் இருந்தான்.

ஒரு விரலை நீட்டி அவனை அவள் மிரட்டினாள் வாயில் விரலை வைத்து அவனைச் சும்மாயிருக்கச் சொன்னாள்.

சிரிப்பை அடக்க முடியாதவனாக, ‘உங்க அண்ணன் வந்துட்டாங்க, போ போய் ரெடியாகு’… ‘ஹா ஹா ஹா’ இன்னும் சிரித்தான்.

‘அண்ணனா?’ அவள் கவனம் திசைத்திரும்பி விட்டது

‘ம்ம்… உன் பெரிய அண்ணா… நம்மளை மறுவீட்டுக்கு அழைச்சுட்டுப் போக வந்திருக்காங்க’

‘இதோ…’ துள்ளிக் கொண்டு இறங்கினாள்.

‘ஏய் மெதுவா போ, உனக்குக் கால் வலிக்கலியா?’

‘இல்லியே, நல்லா ஆகிடுச்சு’ சற்று துள்ளி காண்பித்தவள் வேகமாய்ச் சென்று பாத்ரூம் கதவில் மோதி நிற்க ‘ஷ்ஷ்’ என்றாள்.

‘என்னாச்சு?’ சிரிப்பை விட்டுவிட்டு பதற்றமாய் எழுந்தவனுக்கு ஒன்றுமில்லை என்று சொன்னாள்.

‘வலிக்காம தான் இருந்துச்சு. எதுவும் பட்டதுனா வலிக்கும் போல இப்ப கொஞ்சம் வலிக்குது’ வலியை மறைத்து முகத்தைச் சுளித்துப் புன்னகைத்தவள் புறப்பட்டு வந்து அறையினின்று வெளியே சென்றாள்.

மறுவீட்டிற்காகத் தங்கையை அழைத்துச் செல்ல, அகிலாவின் பெரிய அண்ணன் கண்ணன் காலையிலேயே வந்துவிட்டிருந்தான். தங்கைக்கு அடிப்பட்டது அறிந்ததிலிருந்து இருந்த பரிதவிப்பில் இரவு முழுக்க எப்படியோ கடத்தி காலை ஆனதும் முதல் ஆளாக வந்து நின்றவனை ராஜியும் ராமானுஜமும் உபசரித்துக் கொண்டிருந்தனர். ஆதவனும் விரைவில் புறப்பட்டு ஹாலிற்கு வந்து விட்டிருந்தான்.

‘கால் வலிக்குதா அகி?’

தங்கையைப் பார்த்ததும் முதல் கேள்வியாக விசாரிக்க, ‘அதிகம் இல்லேண்ணா கொஞ்சம் தான்’ பதிலளித்தாள்.

கண்ணனை புதுத் தம்பதியர் நலம் விசாரித்தனர். அவனோடு புறப்பட்டுச் சென்றனர் மறுவீடு உபசரிப்பில் கலகலப்பாக அன்றைய நாள் கழிந்தது. காலையும், மதியமும் உணவுண்ட பின்னர் வந்திருந்த உறவினர்கள் சிலரும் விடைப் பெற்றுச் சென்றிருந்தனர்.

பிரசன்னா வழக்கம் போலவே தங்கையிடம் வம்பிழுக்க ஆரம்பித்தான்…

‘என்ன அத்தான் இவ வந்த அன்னிக்கே உங்க வீட்டு டைல்ஸ்லாம் உடைச்சிட்டாளாமே?’ …

‘டேய் சும்மா இருடா’ மகனை அதட்டிய அகிலாவின் அம்மா சுமதிக்கு மருமகன் முன் இருவரும் சண்டை போட்டுவிடக் கூடாதெனப் பயம்.

வாயால் திட்டிக் கொள்ளாமல் சைகையும் வாயசைப்புமாய் இருவரும் சண்டைப் போட்டுக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

‘வெட்டுவேன், குத்துவேன், சுடுவேன்’, என்றே அத்தனை சைகையும் இருக்க ஆதவனுக்கு அதைப் பார்த்து இன்னும் சிரிப்பாக இருந்தது.

சடாரென எழுந்தவள் கணவனிடம் ‘வாங்களேன் நம்ம கார்க்கு போவோம்’ என ஆதவனை எழுப்பினாள். அவனும் எழுந்துச் செல்ல,

அவள் குடும்பத்தினர் திகைத்து விழித்தனர்…

‘ஏ பாப்பா எங்கே போற? விளையாட்டுக்குத்தானே பேசிட்டு இருந்தோம்’, பிரசன்னா பதறிச் செல்ல அவள் கையில் பையோடு திரும்பி வந்து கொண்டு இருந்தாள். அது என்ன பை? என்று ஆதவனுக்கும் தெரியவில்லை. அண்ணனுக்கு நாக்கை துருத்தி அளவம் காட்டியவள் மற்றவர்களிடம் சிரித்தாள்.

‘எனக்கு இவங்க நேத்து இந்தச் சேலை வாங்கித் தந்தாங்க பாரேன்’, அதுவரை சண்டையிட்டவனிடமே நீட்டினாள்.

‘நீ ரொம்ப அழுதுருப்ப, பயந்து உனக்கு வாங்கிக் கொடுத்திட்டார் அதுதானே உண்மை. சொல்லு சொல்லு?’ மறுபடி கிண்டல் செய்தவனிடம் இருந்து சேலையைப் பிடுங்கியவள் மற்றவர்களுக்குக் காண்பிக்க ஆரம்பித்தாள்.

அவளது அந்த சேலை விளம்பரத்தில் அவள் வீட்டினர் அனைவரும் மருமகன் மகளுக்கு முதல் நாளே பரிசளித்திருக்கிறாரே? என அவனைப் புன்னகைத்தவாறு பார்க்க ஆதவனுக்குத்தான் கூச்சமாகப் போயிற்று.

வீட்டிற்குத் திரும்பி வருகையில் அலுவலக நட்புகள் சந்திக்க வந்திருப்பதாகத் தகவல் வந்தது.

ஆதவனின் டீம் மட்டுமல்லாது, ஹெச் ஆர், ட்ரெயினிங்க் மற்றும் குவாலிடி டீமிலிருந்தும் வந்திருந்தனர். கவிதா கணவனும் மனைவியுமாக காரிலிருந்து இறங்கியவர்களைப் இகழ்ச்சியாய் பார்த்திருந்தாள். இதென்ன பொருத்தமில்லாத ஜோடி? என்று அவளுக்குத் தோன்றி இருந்தது. எனக்கு என்ன குறை? என்று இவன் என்னைத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்கின்ற காழ்ப்புணர்ச்சி எழுந்தது.

ஆதவன் எப்போதுமே அவளிடம் அநாவசியமாகப் பேசியதில்லை. அவளுக்கு நம்பிக்கை கொடுத்ததும் இல்லை.அவளாகவே ஆசையை வளர்த்துக் கொண்டு இப்போது வெம்பிக் கொண்டிருந்தாள். அவன் சேலை கொண்டு வந்து கொடுத்தான் என்று தெரிந்த போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கடுத்த வாரம் தான் அவனுக்குத் திருமணம் என்று தெரிந்துக் கொண்டிருந்தாள். அதெப்படி ஒரு பக்கம் எனக்கு சேலை வாங்கி கொடுத்து ஆசையை வளர்த்து விட்டு இப்படி செய்யலாம்? என மனம் கொதித்தது.

அப்படி எந்த உலக அழகியைதான் திருமணம் செய்து கொண்டிருக்கின்றான் என்று பார்ப்போமே? எனும் எண்ணத்தில் தான் வேண்டா வெறுப்பாக இன்று ஆதவனின் வீட்டிற்கு வந்திருந்தாள். இந்த வீட்டில் நான் மருமகளாக வந்திருந்தால் எவ்வளவு நல்லாயிருந்து இருக்கும் அவள் மனம் பொருமியது.

தம்பதியர் வீட்டினுள்ளே வந்ததும் வாழ்த்தொலிகளும் பரிசுப் பொருட்களும், பூங்கொத்துமாய் அமளிதுமளிப் பட்டது. தம்பதியரிடம் ஒவ்வொருவராக வந்து அவர்களை வாழ்த்திச் செல்ல…

அடுத்ததாக அருகில் வந்த கவிதாவோ ஆதவனிடம் தான் அணிந்திருந்த கேரள செட்டுப் புடவையைக் காண்பித்து,

‘பாருங்க ஆதி நீங்க எனக்கு வாங்கித் தந்த இந்தச் சாரி இன்னிக்கு உடுத்தி இருக்கேன். எனக்கு ரொம்ப அழகாயிருக்கில்ல?’ எனக் கேட்டாள்.

அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து திகைத்து நின்றனர்.ஆதவனுக்கும் ஒன்றும் புரியவில்லை. அகிலாவோ அந்த பேச்சில் பாதிக்கப் படாமல் சாதாரணமாகத்தான் நின்றுக் கொண்டிருந்தாள்.

ஏதேச்சையாக அங்கே வந்த ராஜி,

‘ஆமாம் இந்த சேலை நல்லாயிருக்கே, எப்ப வாங்கின ஆதவா அம்மாக்கும் இப்படி ஒன்னு வாங்கிட்டு வா’ என்றார். இதென்னடா வாங்காத சேலைக்கு இத்தனை டிமாண்டா? ஆதவன் முழித்தான்.

அவர்கள் அனைவருக்கும் அப்போது தான் மூச்சு சீரானது.

பின்னாலிருந்து அர்ச்சனா கவிதாவிடம் பேசினாள்.

‘கவி அந்தச் சேலை ஆதவன் வாங்கினது இல்லை…’

‘பின்ன நீ தானே சொன்ன?’ கவிதா அதிர்ந்தாள்.

அந்த மகிழ்ச்சி சூழலுக்கு பொருந்தாத வகையிலான விரும்பத் தகாத பேச்சுக்கள் நடக்க ஆரம்பிக்க அதைக் கண்டுக் கொள்ளாதவளாக புன்னகை மாறாமல் அகிலா ராஜியுடன் சேர்ந்து அவர்களுக்குக் குடிக்கக் குளிர்பானம் பரிமாற ஆரம்பித்தாள். அப்போது வெளியிலிருந்து வந்த நிர்மலா அகிலா கையிலிருந்த ட்ரேயை வாங்கிக் கொண்டு அமரச் சொன்னாள்.

உபசரிப்பு நடந்து கொண்டிருந்த போதே சேலை விவரம் பேசிக் கொண்டிருக்கப் பட, ஆதவன் தன்னை எதற்காக உள்ளே இழுத்தார்கள்? என்ற குழப்பத்தில் என்னவென்று விசாரித்தான். அர்ச்சனா விளக்கம் கொடுக்க முன் வந்தாள்.

‘யூ எஸ்லருந்து திரும்பி வந்த அன்னிக்கு நீங்க ஆபீஸ்ல என் கிட்ட வந்து கொடுத்த பார்சல்ல இந்தச் சாரீஸ் தான் இருந்தது…’ என்று சுருங்கச் சொன்னாள்.

‘ஓ’ என்றவனுக்கு விஷயம் புரிபட்டிருந்தது.

‘ஆக்சுவலி கவி அது ராகுல் நாயர் கேரளா போகும் போது நான் அவர் கிட்ட சில சேலைகள் வாங்கிட்டு வரச் சொல்லி இருந்தேன். அவர் ஊரிலருந்து திரும்பி வரும் போது நான் கேட்ட மாதிரியே சேலைகள் வாங்கிட்டு வந்ததா சொன்னார். ஆனால் அவரால் ஆபீஸீக்கு சேலைகள் கொண்டு வந்து தர முடியவில்லை. கொண்டு வந்த பார்சல் அவர் வீட்டிலயே இருந்துப் போச்சு. உடனே ட்ரான்ஸிஷனுக்காகச் சிகாகோ போய்ட்டார்.’

அனைவரது கவனமும் அவள் பேச்சில் இருந்தது.

‘அவர்தான் ஆதவன் கிட்ட சொல்லி பார்சல் கொண்டு தரச் சொல்லி இருந்திருக்கிறார். எதிர்பார்த்ததை விட குறைவான விலைக்குக் கிடைச்சதுனால எங்க டீம்ல எல்லோருக்கும் போக ஒரு சேலை அதிகமா வாங்கி இருந்தாங்க. அதனாலத்தான் நான் உன் கிட்ட கொடுத்தேன். நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட…’

‘ஓ’ உண்மை தெரிந்ததும் கவிதாவின் சுருதி இறங்கி விட்டிருந்தது.

‘உங்க சேலை ரொம்ப அழகா இருக்கு’ இப்போது பேசியது வேறு யார் அகிலாவே தான்.

‘ஆமால்ல அகிலா நாமளும் இதே மாதிரி ஆளுக்கு ஒவ்வொன்னு வாங்கிக்கலாம்’

அத்தையார் மருமகள் கூட்டணியைப் பார்த்து ரவிக்கும்,ஆதவனுக்கும் ராமானுஜத்திற்கும் சிரிப்பு வர, நிர்மலாவோ கோபத்தில் இருந்தாள்.

கவிதா அதன் பின்னர் அவர்களோடு சகஜமாக உரையாட ஆரம்பித்தாள். குழுவாய் பேச்சு அரட்டை, சிரிப்பு என நேரத்தை கழித்து விட்டு அங்கிருந்து விடைப் பெற்றுச் சென்றனர்.

‘அம்மாடியோ, வர்றது எல்லாம் சகுனியாட்டமே இருக்குங்க, என் வீட்ல கும்மியடிக்காம, சண்டை இழுத்து விடாம போகாதுங்க போலிருக்கு’ அலுவலக நட்புகள் சென்றதும் ஆதவனுக்குக் கண்ணைக் கட்டியது.

யோசனையில் இருந்தவன் அருகில் நிர்மலா தொம் தொம்மென்று வந்து அருகில் அமர்ந்தாள்.

‘அண்ணா இங்கே என்ன நடக்குதுன்னு பார்த்தில்ல நீயே நியாயத்தைக் கேளு’

‘இதென்னடா இப்ப புது பஞ்சாயத்து? என்ன நடந்திருக்கும்? ஒரு மனுஷனை நிம்மதியா இருக்க விட மாட்டாங்களா?’ மனதில் நொந்துக் கொண்டான்.

‘இப்ப பஞ்சாயத்தைக் கூட்டியாகணும்’மறுபடியும் வெடவெடத்தவளிடம்

‘ஏய் என்னாச்சு நிம்மி?’ ரவி கேட்டான்.

‘எல்லோரும் இங்கே வாங்க’, ஹாலிற்கு அழைத்தவள் அம்மாவையும் அண்ணியையும் ஒரு பக்க சோபாவில் அமர வைத்து விட்டு அமர்ந்தாள்.

‘இவங்க ரெண்டு பேர் மேல தான் பிராது கொடுக்கணும்…’

என்னவென்று மற்றவர்கள் விழிக்க, பிரணவ் அவளைக் கோபப்படுத்தவே ராஜியின் மடியில் சென்று அமர்ந்தான்.

‘என்னாச்சு இப்ப?’ ஏதோ விளையாட்டு என்றே புரிந்தாலும் விபரம் தெரியாமல் ஆதவன் கேட்டு வைத்தான்.

‘அம்மாவும், அகிலாவும் அவங்க ரெண்டு பேரும் சேலை வாங்கிறதைப் பற்றிப் பேசினாங்களே? எனக்குச் சேலை வாங்குறதைப் பத்தி எதையாச்சும் சொன்னாங்களா? மருமக வந்ததும் மகளை மறந்தாச்சு’ தாயிடம் முகத்தைத் திருப்பினாள்.

இதுதான் விஷயமா? என அனைவரும் முறுவலோடு இருக்க… சேலை விஷயம் சுற்றி சுற்றி சூறாவளியா அடிக்குதே ஆண்டவா… என்றிருந்தான் நம் நாயகன்.

‘அதுக்கென்ன நிர்மலா, நாங்க ரெண்டு பேரும் சேலை வாங்கும் போது விலை குறைவா இருந்தா எப்படியும் ஒரு சேலை எக்ஸ்ட்ரா வரும்ல அதை உனக்குக் கொடுத்துருவோம்’, என மகளை ராஜி சீண்ட, கொல்லெனச் சிரிப்பு பரவியது. வீஞ்சிக் கொண்டிருந்த நிர்மலாவை சமாதானப் படுத்தி முடிக்கவும் வாசலில் யாரோ வந்த சப்தம் கேட்டது.

யாரென பார்த்தவர்கள் திகில் படம் பார்த்தது போல திகைத்தார்கள்.

ஐயோ இந்தப் பாட்டி மரகதம் அத்தையை விடப் பெரிய டார்ச்சராச்சே? என்ன வம்பு இழுத்து வைக்குமோ? என பாட்டி குறித்து அறிந்தவர்கள் மனதிற்குள்ளாக அலற அவற்றுள் ஆதவன் மட்டுமல்ல ராஜியும் சிரிப்பை மறந்து திகிலோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

வந்த பின்னர் எல்லாம் பிரச்சனை ஆரம்பிக்கும் நபர் அல்ல இவர், வாசலில் வந்த உடன் வாருங்கள் என்று அழைக்காவிட்டால் அங்கிருந்தே பிரச்சனை ஆரம்பிக்கும் வல்லமை வாய்ந்தவர் என்று ஞாபகம் வந்ததும் ராஜி சட்டென்று சீரியஸ் மோடுக்கு மாறி,

‘வாங்க அத்தை வாங்க வாங்க’ வரவேற்க வாசலுக்கு விரைந்தார்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here