உள்ளம் உந்தன் வசம்_9_ஜான்சி

0
222

அத்தியாயம் 9

‘மருமக வந்ததும் மகளை மறந்தாச்சு’ என்று உரிமைப் போராட்டத்தில் வீஞ்சிக் கொண்டிருந்த (கோபப்பட்டுக் கொண்டிருந்த) நிர்மலாவை அகிலாவும், அப்பா, ரவியும் சேர்ந்து சமாதானப்படுத்திக் கொண்டிருக்கக் கலகலவெனச் சிரித்துக் கொண்டிருந்த அம்மாவை ஆதவன் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இந்த அகிலாவோடு சேர்ந்து அம்மாவும் இவ்வளவு ஜாலியாகப் பேச ஆரம்பித்து விட்டார்களே? இவ ஒன்னாம் நம்பர் கேடி என அவன் முடிவிற்கு வந்த போது வாசலில் சப்தம் கேட்டது. பங்கஜம் பாட்டி வருகையைப் பார்த்து அனைவருக்கும் புல்லரித்து விட்டது. (பயத்தில் தான்).

வந்திருந்த வேறு யாரும் அல்ல ராமானுஜத்தின் ஒன்றுவிட்ட சித்தி. அவர் தன் கணவரை வெகு வருடங்கள் முன்னதாகவே இழந்தாலும் தன்னம்பிக்கை குறையாத தனிக்காட்டு ராணி. அவர் எங்குச் சென்றாலும் தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்டுவதிலேயே இருப்பார். அதனால் தான் ஒரு ஊரில் நில்லாமல் தன்னுடைய 5 மகன்களின் வீட்டிலும் மாற்றி மாற்றிப் போய்த் தங்குகின்ற சூழ்நிலை.

எந்த மகன் வீட்டிற்குச் சென்றாலும் முதலில் சில நாட்கள் இன்முகமாக உதவிகரமாக இருப்பார். நாளாக நாளாக அவர்களைக் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைப்பது, ஏதாவது பிரச்சனையைக் கிளப்புவது என ஆரம்பித்து விடுவார். அவருடைய மகனிடம் மருமகள், ‘ஐயா சாமி உங்க அம்மாவை கவனிக்க என்னால் முடியாது,’என்று சொல்லிய பின்னர் மகன்கள் அம்மாவிற்கும் மனைவிக்கும் இடையில் அல்லாட முடியாமல் சகோதரர்கள் ஒருவன் மற்றவனுக்குத் தகவல் சொல்லி அன்பாகவே அனுப்பி வைத்து விடுவர்.

அடுத்ததாக அடுத்த மருமகள் வீட்டிலும் சென்று சில நாட்கள் அமைதியாக இருப்பவர் கொஞ்ச நாட்களிலேயே தன்னுடைய குணத்தைக் காட்டி விடுவார். ஆனால் மருமகளிடம் ஆரம்ப நாட்களில் அதாவது கொஞ்ச நாட்களாவது கனிவாகப் பணிவாக நடந்து கொள்வார். ஆனால், மருமகள்களிடம் காட்டும் கனிவு கூட ராஜியிடம் காட்டுவதில்லை, தம்பி மனைவியை கண்டால் அவருக்கு மிகவும் கொண்டாட்டம்.

ராஜி பிரச்சனை வேண்டாம் என்று ஒதுங்கி போகப்போக அவரைத் துரத்தி துரத்தி கடுப்பாக்குவதைத் தன் வேலையாகவே வைத்திருந்தார்.

‘வாங்க வாங்க பங்கஜம் அத்தை எப்படி இருக்கீங்க? நேத்து நீங்க நம்ம ஆதவன் கல்யாணத்துக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தோம். வரலைன்னதும் ரொம்பக் கஷ்டமா போச்சு’

என்றவராக ராஜி வரவேற்றார்.அவர் கையில் இருந்த பெட்டியை வாங்க முயன்றார். அவரோ பெட்டியை ராஜியிடம் கொடுக்காமல் வெடுக்கெனப் பின்பக்கம் இழுத்துக் கொண்டார்.

உள்ளே நிமிர்ந்து கம்பீரமாக நடந்து வந்து, ராஜ தோரணையில் அமர்ந்ததும் அங்கு இருந்தவர்களைச் சுற்றி ஒரு பார்வை பார்த்து வைத்தார். அகிலா சட்டென்று தன் அருகில் அமர்ந்து இருக்கும் கணவனின் கைக்குள் தன்னுடைய உள்ளங்கையைச் சேர்த்து கோர்த்துக் கொண்டாள். ஏதோ சிந்தனையில் இருந்த ஆதவன் திடுக்கிட்டு என்னவென்று அவளைத் திரும்பி பார்த்தான்.

அகிலா ஏதோ குறிப்பு காட்டுகிறாள் ஆனால், அது என்ன? என்று ஆதவனுக்குப் புரியவில்லை. அடுத்த நிமிடம் சட்டென்று அவள் எழும்பி நின்றாள். அவள் கைப்பிடியில் நின்றதால் ஆதவனும் கூடவே எழும்பி நின்றான்.

உடனே அகிலா பங்கஜம் பாட்டி அருகில் சென்று அவர் பாதம் பணிந்தாள். அவனுக்கும் சட்டென்று டியூப்லைட் பிரகாசிக்க அவனும் அவளோடு சேர்ந்து காலில் பணிந்து எழுந்தான். சிடுசிடுவென்று இருந்த பங்கஜத்தின் முகம் திடீரெனப் பிரகாசித்து விட்டது.

‘நல்லா இருங்க, நல்லா இருங்க. பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க’
என்று வாழ்த்தினார்.இப்போது ஆதவனின் கையை விட்டவள் மறுபடியும் சமர்த்தாகக் கணவனோடு சென்று சோபாவில் அமர்ந்து கொண்டாள். பங்கஜமோ,

‘சின்னப் பிள்ளைகளுக்குக் கூட எவ்வளவு அறிவு இருக்கு? என்று ஆரம்பித்தார். அவர் சொன்னதிலேயே இங்கு யாருக்கோ அறிவு இல்லை என்று அவர் சொல்ல வருவது நிரூபணம் ஆனது.

தம்பியை கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டு ராஜியிடம் பொழிய ஆரம்பித்தார்.

‘ஒருத்தி வீட்டுக்கு விசேஷத்துக்கு வரலையே ஏன் வரலை? எதுக்கு வரலை? அவளுக்கு என்ன ஆச்சு? என்று விசாரிச்சியா? குறைஞ்சபட்சம் ஒரு போன் போட்டு அண்ணி எப்படி இருக்கீங்கன்னு நீ கேட்டியா? அவ்வளவுதான் உன்னுடைய அக்கறை’அத்தோடு உம்மென்று பேச்சை முடித்துக் கொண்டார் அவர்.

முன்தினம் திருமண வேலையில் தான் எவ்வளவு வேலைகளிலும், அலைச்சல்களிலும் இருந்திருக்க, அன்று திருமணத்திற்கு வராமல் அடுத்தநாள் வந்து தன்னையே திட்டிக் கொண்டிருக்கும் இந்தப் பெண்மணியை என்ன சொல்வது? என்று ராஜிக்குப் புரியவில்லை.

‘சரி சரி பொண்ணு வீட்ல சீரா வந்த பாத்திர பண்டங்கள் எல்லாம் எங்கே? எல்லாத்தையும் கொண்டா ஒரு தடவை சரியான்னு பார்த்திடணும். என் தம்பி ஒரு வாயில்லா பூச்சி, பொண்ணு வீட்டுக்காரங்க அவனை ஏமாத்தினாலும் ஒன்னும் செய்ய முடியாது. அதனாலத்தான் நான் எல்லாம் சரியா இருக்கா இல்லையான்னு பார்க்க இன்றைக்கு அவசரமா வந்தேன்.

அந்த வெள்ளிச் சாமான்? என அடுக்கத் தொடங்க… அகிலாவை வைத்துக் கொண்டே அவர் அவ்வாறு பேசுவது எல்லோருக்கும் தர்ம சங்கடமாக இருந்தது.

அதெல்லாம் சரி… பொண்ணுக்கு எத்தனை பவுன் போட்டாங்க? தங்கம் தானா? இல்லை வைரமும் உண்டா? தங்க ஆசாரியை அழைச்சுட்டு வந்து தங்கம் தானான்னு தேய்ச்சுப் பார்த்தியா? இல்லையா?

….

இந்த காலத்தில யாரையும் நம்ப முடியாது பார்த்துக்க…

வீடே நிசப்தமாகி விட்டிருக்க, அவர் மட்டும் மேலும் மேலும் பேசிக் கொண்டிருந்தார்.

கிடைத்த சின்ன இடைவெளியில் ராஜி ஆதவனிடம். ‘ஆதவா ரெண்டு பேரும் களைச்சுப் போயிருப்பீங்க, போய் உடை மாத்திக்கோங்க.’

மறுத்து ஏதோ சொல்ல வந்த பங்கஜத்திடம்,

பிள்ளைங்க இப்பதான் மறுவீட்டிலிருந்து வந்தாங்க அத்தை, கசகசன்னு இருக்கும். உடை மாத்திட்டு இப்ப வந்திடுவாங்க… மகனிடம் காட்டிய சைகையில் ‘ஓடு தப்பிச்சுக்கோ’ எனும் சைகை இருந்தது. மருமகளுக்குக் காட்டிய முகபாவத்தில், ‘தப்பா நினைச்சுக்காத மருமகளே’ என்று இருந்தது.

இப்போது ஆதவன் அகிலாவின் கரம் பிடித்து எழுப்பினான். அவளை முன்னே செல்ல விட்டு விட்டு, பின்னே நின்றான். கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் சேர்ந்தே அறைக்குள் சென்றாலும் அதற்கும் இந்தப் பாட்டி ஏதாவது நக்கல் அடிக்கும் என்பது தெரியாதவனா என்ன?

அறைக்குள் நுழைந்த அகிலாவின் பின்னே அவசரமாய் நிர்மலா சென்று விட்டிருந்தாள். என்னடா நடக்குது இங்கே? என ரவியும் ஆதவனும் ஒருவரையொருவர் பார்த்தவாறு பின்னே சென்றனர்.

பங்கஜம் தன்னுடைய அத்தனை அறிவாளித்தனத்தையும் நடு ஹாலில் இருந்து கொட்டிக் கொண்டு இருந்தார். அவருக்கு யார் எங்கே சென்றார்? என்பதைக் கண்டுக்கொள்ளும் கவனம் இல்லை.

‘ஏ அகிலா…’ அழைப்பில் திரும்பியவள்

‘ஓ நிர்மலாவா… சொல்லு சொல்லு…’

‘தப்பா எடுத்துக்காத… அந்தப் பாட்டி எப்பவும் அப்படித்தான்…’

‘அதெல்லாம் தப்பா எடுத்துக்க மாட்டேன்… இப்படிப் பாட்டி எங்க வீட்ல 3 பேர்…’

‘ஓஓஓஓ… ஒன்னை வச்சே அஞ்சு நிமிஷம் பக்கத்துல உட்கார முடியலை மூணு பேரா?’ …என வாயைப் பிளந்தாள்.

‘ஆமா… ஆனா என்ன? மூணும் மண்டைய போட்டுடுச்சு… அதனால நீ பயப்படாதே…’

வாசலில் திரைக்கு அப்பால் நின்று கொண்டிருந்த ஆண்கள் முகத்தில் புன்முறுவல்.

‘இல்லாத பாட்டியையா பெருமை பேசிட்டு இருந்த நீ?’ கேட்டவளாக அண்ணன் மனைவியின் தலையில் இருந்த பூக்களைக் களைய உதவி செய்து கொண்டிருந்தாள் அவள்.

‘தேங்க்யூ பா….ஹப்பாடா ஒரு கூடை பூ… சுமந்து சுமந்து தலை வலிக்குது’, எனப் பூக்களைக் கழற்றி பத்திரப் படுத்தியவள்.

‘இங்கே பாரு நிர்மலா… இந்த வயசானவங்களுக்கு ஒரே விஷயம் தான் வேணும். யாராவது அவங்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கணும் இல்ல மரியாதை கொடுக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. அவங்க சொல்றதை கேட்கணும்னு நினைப்பாங்க. காது கொடுத்து கேட்காவிட்டாலும் அட்லீஸ்ட் அவங்க பேசறதை கேட்கிற மாதிரி அதான் எங்க அத்தை இப்ப செஞ்சுட்டு இருக்காங்கல்ல அது மாதிரி இருந்தாலே போதும் கொஞ்ச நேரத்துல அப்படியே கூலாகிடுவாங்க.’

‘ஏய் எங்க அம்மாவையா கிண்டல் பண்ணுற?’

‘நோ நோ என் அத்தையாரை நான் கலாய்ப்பேனா? ஏல டோண்ட் வொர்ரி பீ ஹாப்பி’ விவேக் மாடுலேஷனில் அகிலா பேச, நிர்மலா சிரித்து விட்டிருந்தாள்.

‘இன்னொரு விஷயம் இங்க உட்காரேன்.’

இருவர் அவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டு இருப்பதை அறியாமல் தொடர்ந்தாள்.

‘நீ என்னை விட ரெண்டு வருசம் பெரிய பிள்ளைனு தான் பேரு. ஆனா பாரு பாவம் சூதுவாதில்லாம வளர்ந்திருக்கப் த்சோ த்சோ…’ என அகிலா நிர்மலாவின் நாடியை பிடித்து ஆட்டினாள். நிர்மலா அவள் செய்கையில் இப்போது மிகவும் கடுப்பானாள்.

‘ஓய்…’

‘கூல் பேபீ கூல்…’

‘சரி நாங்க தான் ரெண்டு பெரியவங்க…’

‘யார் நீங்க ரெண்டு பெரியவங்க?’

‘நானும் என் மாமியாரும்…’

‘ஆங்க்…’

‘டோண்ட் டிஸ்டர்ப்.. கோர்வையா சொல்ல வர்றப்ப சொல்ல விடணும் ஓகே. நான் இப்ப என்ன சொன்னேன்? … ம்ம்ம் சரி நாங்க தான் ரெண்டு பெரியவங்க அந்தச் சேலை விஷயத்தை நல்லா பேசி முடிச்சோமே. அதை புரிஞ்சிக்காம எங்க மேல பிராது கொடுக்கிறது எல்லாம் சரியா? என்ன இது சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு…’

‘ஓய்…’

‘என்ன?’

‘நான் சின்னப்புள்ளத்தனம்?’

‘ம்ம்… ஆமா சின்னப்புள்ளத்தனம்…’

‘நீங்க பெரியவங்க?’

‘அப்கோர்ஸ், டெபினட்லி..’

‘உனக்குள்ள விவேக், வடிவேலு சார் ஆவி நுழைஞ்சிடுச்சா என்ன?’

‘நுழைஞ்சிருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்….’

‘சரி மொக்கைப் போடாத… நீயும் உன் மாமியாரும் அப்படி என்ன சால்வ் பண்ணினீங்க?’

‘சரி சேலை மேட்டர் எப்ப? எதுக்கு ஆரம்பிச்சுன்னு சொல்லு?’

‘எப்ப? எதுக்கு?’

‘உங்க அண்ணன் மேல அந்தப் பொண்ணுக்கொரு கண்ணு இருந்ததால… அந்தப் பொண்ணு உங்க அண்ணன் கிட்டே வந்து, நீங்க தந்த சாரி எப்படி இருக்குன்னு கேட்டுச்சுதா அப்பதான ஆரம்பிச்சது’

வெளியே ஆதவனுக்குத் திக்கென்றது. என் பொண்டாட்டி நேர்ல பார்த்த மாதிரி ஒவ்வொன்னா பிட்டு பிட்டு வைக்கிறாளே? எண்ணியவனாக திகைத்திருந்தான். தன் அருகில் இருந்த ரவியை எட்டிப் பார்க்க அவன் இவனையே சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

‘எந்தப் பொண்ணு?’

‘அதான் அந்த ஒட்டக சிவிங்கி?’

‘ஓ அவங்க ஆபீஸ் பிரெண்ட்…ஆமா அவதான் அண்ணன் கிட்ட வந்து கேட்டா, அதனால அவளுக்கு எங்க அண்ணன் மேல கண்ணுன்னு எப்படிச் சொல்லுற?’

‘அப்படி இல்லேன்னா எப்படி இன்னிக்கு அதுவும் எங்க கல்யாணம் ஆன மறு நாள் கரெக்டா வந்து எல்லோர் முன்னாடியும் இது நீங்க வாங்கிக் குடுத்த ஸாரின்னு அவ சொல்லுவா? …’

‘ஓஓஓ…’

‘எதுக்கு வீட்டுக்கு வந்தவங்க மனசை நோகடிக்கணும்னு நானும் அத்தையும் விஷயத்தை பெரிசாக்காம நல்லாயிருக்குன்னு சொல்லி பேச்சை மாத்தினோம்… நடந்தது என்னன்னு புரியாம அதில உனக்குக் கோபம் வேறயா?’

‘ஓ…’

‘என்ன மறுபடி ஓ? இந்த ஔ ஃ இதெல்லாம் வராதா?’

‘அட ஆமால்ல… ஏன் அகிலா அது அவளுக்கு என் அண்ணன் மேல கண்ணுன்னு சொல்லுற? ஒருவேளை அவ மேல அண்ணனுக்குக் கண்ணு இருந்திருந்தா?’

‘ஏம்மா தங்கச்சி நீ அண்ணனுக்குச் செய்ய வேண்டிய நல்லதெல்லாம் செஞ்சுட்டு இருக்கிற. என் வாழ்க்கையில் விளக்கை ஏத்தி வைக்கா விட்டாலும் பரவா இல்லை. எரியுற தீபத்தில தண்ணி விட்டு அணைச்சிராத தாயீ’

ஆதவன் மனக்கதறல் ரவிக்குக் கேட்டதோ என்னமோ அவன் சிரிப்பை அடக்கிய வண்ணம் இவன் முதுகை ஆறுதலாகத் தட்டி விட்டுக் கொண்டு இருந்தான்.

அகிலா நிர்மலாவின் கேள்விக்கு பதில் சொல்ல நொடிப்பொழுதும் தாமதிக்கவில்லை

‘அந்தப் பொண்ணு மேல உங்க அண்ணனுக்குக் கண்ணா? நோ நோ சான்ஸே இல்ல? உதட்டை பிதுக்கினாள். உங்க அண்ணனுக்கு அவ்வளவு கூறு காணாது…’

‘அடியே, கல்யாணமாகி ஒரு நாள் ஆகலை அதுக்குள்ள எனக்கு கூறு காணாதுன்னு என்னைக் கூறு போடுறா இவ’ இவன் மனதிற்குள் கதறியதை பிரணவ் கேட்டிருப்பான் போலும்…ரவியிடம் அம்மா எங்கேப்பா? என்று கேட்டவனாக அறைக்குள் தாவி நுழைந்து விட்டிருந்தான்.

நிர்மலா மகனை தூக்கிக் கொண்டு வெளியே வரும் முன் அடக்கப் பட்டச் சிரிப்போடு ரவி அங்கிருந்து நகர்ந்து விட்டிருந்தான்.

ஆதவன் ஒன்றும் தெரியாதவன் போல அறைக்குள் செல்ல, அதற்குள்ளாக அகிலா உடை மாற்ற சென்றிருந்தாள். அவள் கழற்றி வைத்திருந்த மல்லிகை மொட்டுக்கள் மலர ஆரம்பித்து அறையில் மணம் வீசிக் கொண்டு இருந்தன.

எத்தனையோ நாட்கள், மாதங்களாகப் பழகியவள் பொல அவள் தன் வீட்டில் வளைய வருவதை எண்ணிக் கொண்டு அந்தப் பூக்களை வருடினான். அந்த மலர்களுக்குப் போட்டியிடும் வண்ணம் மலர்ந்த முகத்தோடு குளியலறையிலிருந்து இலகுவான சேலையொன்றில் அவள் வெளி வந்து கொண்டிருந்தாள். சின்னச் சின்ன நீர் திவலைகள் அவள் முகத்தில்,முன் நெற்றி முடிகளில் ஒட்டிக் கொண்டு இருந்தன. அவள் வந்ததும் இவன் உடை மாற்றச் சென்றான்.

வெளியே வந்தபோது அவள் மறுபடியும் ஹாலில் சென்று அமர்ந்திருந்தாள். ஆதவனுக்கு இன்று என்னவோ பங்கஜம் பாட்டி முன்பை விட அமைதியாகப் பேசுவதாகத் தோன்றியது. காரணம் என்னவாக இருக்குமென்று சொல்லவும் வேண்டுமா? அகிலா அவர் பேசுவதையெல்லாம் வெகு கவனத்தோடு மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டு, இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டவளாக, இருந்தாளே.

ஆளுக்கேற்ற மாதிரி பேசுகிறாள், பழகுகிறாள் மாய வித்தைக்காரி மனதிற்குள்ளும் அவள் மேல் கோபம் கொள்ளாமல் அவனால் செல்லமாய் மட்டுமே கொஞ்ச முடிந்தது.

‘இங்கே வா ஆதவா’ என அப்பா அவனை அழைத்தார்.

‘வாம்மா மருமகளே…’

‘என்ன மாமா?’

இருவரையும் எதிரில் அமர்த்தினார்.

‘ஆதவா உனக்கோ கொஞ்ச நாள் தான் லீவு இருக்கு. என் அண்ணா வீட்டில உங்களை நாளைக்கு விருந்துக்கு அழைச்சிருக்காங்க. நாளைக்கு காலை நேரமே இரெண்டு பேரும் போயிட்டு வாங்க சரியா?’

இருவரும் அடுத்த விருந்துக்கு ஆயத்தமானார்கள்.

மந்திரங்கள் அத்தனையும்
புன்னகையில் தூவுகிறாள்

மாயக்காரியவள் – எந்தன்
மனதை திருடுகிறாள்

காதலெனும் மாயாஜாலம்
கண்முன்னே காண்பிக்கிறாள்

கட்டுண்டு நானும் -அவள்
பிடியில் சிக்குண்டு போவேனோ?!

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here