1. காதலும் வசப்படும்

0
1034
Kadhalum Vasapadum

வணக்கம் நட்புக்களே,

காதலும் வசப்படும் எனது இரண்டாவது நாவல்.

ஒரு நிஜ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட கதை.

கதையின் நாயகன் கதிர், நாயகி சத்யா, முக்கியமாக நாயகனின் பெற்றோர் உங்கள் மனம் கவர்வார்கள் என நம்புகின்றேன்.

இக்கதையின் அமைப்பு இரெண்டாவது அத்தியாயத்திலிருந்தே Past & Present என மாறி மாறி வரும்.

வாசிப்பதில் அல்லது புரிந்துக் கொள்வதில் பிரச்சனை இருந்தால் தெரிவிக்கவும் நன்றிகள்.

இந்த நாள் இனியதொரு நாளாக மலர வாழ்த்துகள்.

-ஜான்சி

அத்தியாயம் 1

காதல் காதல் காதல்
காதல் போயின்…
காதல் போயின்…


மீண்டும்

காதல் காதல் காதல்.

ஏனென்றால்,


போவது அனைத்தும்

மறு சுழற்சியில்
வருவது தானே முறைமை?

வெகு சிரமப்பட்டுக் கண்களை விழித்தாள் சத்யா. அவளது மெல்லுடல் கடந்த சில மணி நேரங்களாக மயக்க நிலையில் குண்டும் குழியுமான பாதையில் நெடும் தொலைவு பயணத்தைக் கடந்து வந்ததால் வெகுவாகக் களைத்துப் போயிருந்தது.

பலமுறை முயன்றது போல இப்போதும் தன் கைகளை அவிழ்க்க முயன்றுப் பார்த்தாள். என்ன அதிசயம்! கைகள் விடுபட்டன. குறுகிப் படுத்திருந்தவள் நிமிர முயற்சி செய்யவும் …ஹப்பாடா என்ன ஒரு இலகு உணர்வு… நன்றாக மல்லாக்க படுத்து முதுகிற்கு ஓய்வு கொடுத்தாள். மனதில் எழுந்த சுதந்திர உணர்வில் கைகள் தான் படுத்திருக்கும் மெத்தையைத் துழாவ, அந்தப் படுக்கையின் அதீத மென்மை புலப்பட்டது. சட்டென்று அந்த அரை மயக்கத்திலும் திடுக்கிட்டாள் அவள்.

“ஐயோ என்னைக் கடத்தி வந்தது யார்? பதற வேண்டிய நேரத்தில் நான் இந்தப் படுக்கையை ரசித்துக் கொண்டிருக்கிறேனே? என் பெண்மைக்கு ஏதேனும் சேதாரம் ஏற்பட்டால் நான் எப்படி உயிர் வாழ்வேன்? தன் அரை மயக்க நிலையிலும் உணர்வின் தாக்கத்தால் கண்ணில் சில துளி கண் நீர் பூ பூத்து வழிய, தன் உடலை சோதிக்க முயன்று தோற்றவளாய், தன்னையறியாமல் மறுபடியும் தூக்கத்தில் ஆழ்ந்தாள் அவள்.

அவளின் கண்ணீர் அவளெதிரில் நின்றுக் கொண்டிருந்தவன் இதயத்தில் அமிலமாய்ச் சொரிய, தன்னையறியாமல் அவனும் கண் கலங்கினான். மேலாடை விலகி அலங்கோலமாய்க் கிடந்தவளை போர்வையால் மூடி, பதட்டத்தில் வியர்த்திருந்தவளுக்காக இயற்கை அன்னையின் காற்றை வரவிடும் படி சாளரங்களை இன்னுமாய்த் திறந்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான் அவன்.

இவ்வுலகத்தில் என்ன நிகழ்ந்தாலும், நான் நொடி நேரம் கூட நின்றிலேன் எனும் விதமாக அன்றைய இரவின் இருள் மறைந்து, பொழுதும் புலர்ந்தது. திறந்திருந்த சாளரங்களின் வழியாகக் கற்றையாய் அவள் முகம் படர்ந்திருந்த சூரிய ஒளி அந்த மாசற்ற எழில் முகத்தைச் சற்றாய் தொல்லை செய்ய, தூக்கம் கலைந்து அவள் முகம் சுணங்கலானாள்.

காற்றின் வழியில் உள்ளே நுழைந்த பலவகைப் பூக்களின் நறுமணம் நாசி தொட, கண்கள் விழிக்கும் முன்னதாகவே அவளின் புலன்கள் விழித்துப் புத்துணர்வு கொண்டது. குட்டிக் குட்டியான தன் நீள விழிகளை மலர்த்தி, குண்டுக் கன்னங்கள் குவிய, புன்னகையோடே விழித்தாள் அவள்.

மறுபடியும் நிஜம் அவளது சிந்தையை அறைய, சட்டென்று எழுந்து உட்கார்ந்தவளாக அந்த அறையைச் சுற்றிப் பார்த்தாள். இயற்கை வெளிச்சம் தவிர்த்து ஒரு குண்டு பல்ப் மட்டுமே அந்த அறையில் வெளிச்சம் தந்து கொண்டு இருந்தது.

தான் துயில் கலைந்து எழுந்த கட்டிலின் ஒயிலும் அழகும், அந்த அறையிலிருந்த பொருட்கள் எல்லாமும் பார்க்கையில் அது மிகவும் வசதியானவர்கள் வீடு போல என எண்ணிக் கொண்டாள். இது யார் வீடு? என யோசித்தவாறு கண்களை அறையின் இட வலமாய்ச் சுழற்ற, வலப்பக்கம் இருந்த பெரியதொரு புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தான் அவன்.

கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்து உடைத்து போட்டு விடலாமா? என்று அவளுக்கு வந்த ஆத்திரத்துக்கு மயக்கம் முழுமையாய் தீராத அவள் உடல் நிலை ஒத்துழைக்கவில்லை.
‘ஏய் கருவாயா? கொஞ்ச நாளா நீ என்னைத் தொல்லைப் பண்ணலியே, திருந்திட்டியோன்னு நினைச்சேன். நீ என்னைக் கடத்திட்டு வர்ற வரைக்கும் வந்துட்டியா? உன்னைப் போலீஸ்ல பிடிச்சுக் கொடுக்கலைன்னா பாரு’ கோபத்தில் அவளுக்கு முக்கு விடைத்து மூச்சிரைத்தது.

அதே நேரம் அறையின் கதவு க்ளிக் எனும் சப்தத்தோடு திறக்கப் பட, பயத்தில் வெகுவாய் வியர்த்தாள் அவள்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here