11. காதலும் வசப்படும்

0
528
Kadhalum Vasapadum

அத்தியாயம் 11

[center]பெண்ணே…….[/center]

[center]உன் புன்னகைக் கண்டோ[/center]

[center]உன் மலர்ந்த முகம் பார்த்தோ[/center]

[center]காதல் வந்ததென்று – என்னால்[/center]

[center]பொய் சொல்ல முடியாது[/center]

[center]நான் கண்டதெல்லாம் – உந்தன்[/center]

[center]கண்டனப் பார்வைகளும்[/center]

[center]கோப முகமும் தானே…[/center]

அன்று…

ஒரு வருடம் முன்பு…

தன் கல்லூரிக்கு ஒரு வாரம் கழித்தே வந்து சேர்ந்திருந்தான் கதிர். ஊரில் சில வேலைகள் முடிக்க நாளாயிற்று. விபரம் தெரிந்த நாள் முதலே வீட்டில் தன் தந்தைக்கு உதவியாக இருப்பான். தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்கும் நேரம், விவசாய வேலைகள் எல்லாவற்றிலும் முன் நிற்பான். சிறு வயதிலேயே தந்தைக்கு உதவியாகக் கணக்கு வழக்குகள் பார்க்கவும், கம்ப்யூட்டர் வந்த நாள் முதலாய் கணக்குகள் பதிவிடவும் உட்கார்ந்து அவரிடம் வரவு செலவு பேசவும் செய்வது அவன் வழமை.

ஒற்றைப் பிள்ளையானாலும் இவ்வளவு பொறுப்பாய் இருக்கிறான் என்பதில் அவர்கள் பெற்றோருக்குப் பெருமைதான். அவனே கேட்காவிட்டாலும் அவன் வேலைக்குச் சம்பளமெனச் சுந்தரம் தொகையை அவனுக்குக் கொடுத்து விடுவார். வேலைப் பார்க்க சலிப்பு வராதிருக்க இதுவும் ஒரு வழி என்பது அவரது மனக்கணக்கு.

அப்படித்தான் அப்போதும் ஊரில் பல முக்கியமான வேலைகள் இருக்க, அவசரம் என்று சொல்லி லீவு கேட்டுக் கொண்டு வகுப்பிற்கு வந்து சேர கதிருக்கு ஒரு வாரமாகிற்று. கல்லூரியில் எல்லோருக்கும் வலது, இடதுகைகள் இருப்பது போல அவனுக்கும் அங்கு ஏராளமான கைகள் வந்து சேர்ந்து விட்டன எல்லாம் தானாய் சேர்ந்த கூட்டம். ஆனால், அவற்றால் அவனுக்குத் தொல்லையே அன்றி ஐந்து காசுக்கும் பிரயோஜனம் இல்லை என்பதுதான் உண்மை.

சச்சின் என்னும் வளர்ந்த வால் தான் அவனது முதல் கைப்பிள்ளை, தேடாமல் தானாக வந்து சேர்ந்த வெள்ளிக்கு அடுத்தக் கிழமை அவன். பெண்களைப் போன்று கையை அசைத்து பேசுவதால் அவனைப் பின்னால் எல்லோரும் மோசமாகக் கிண்டலடிக்கிறார்கள் என்று தெரிந்தும் அவன் அதனைக் கண்டு கொள்ள மாட்டான். சச்சினைக் கண்டுதான் மற்றவர்கள் ஓடுவார்கள். என்னடா? என்று இழுத்தவாறே அவன் பிறர் தோள்களில் கைப் போட்டுக் கொஞ்ச ஆரம்பித்ததும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு ஓட்டம் எடுத்து விடும்கள். வேறென்ன? அவன் கொஞ்சலுக்கு அப்படி ஒரு பயம்.

அப்படியும் அவனிடம் அவர்கள் பேசுகிறார்கள் என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம் அவனிடமிருந்து சுடச் சுடக் கிடைக்கும் ஊர் வம்புகள் தான்.

வினிதாவின் பாய்பிரண்ட் யாரு? அவர்கள் சென்ற வாரம் காலேஜிக்கு கட்டடித்து விட்டுச் சென்றது எங்கே? என்றெல்லாம் கலர் கலராய் கதைச் சொல்வதில் வித்தகன். அவன் சொல்லும் கதைகள் பாதி உண்மையென்றால் மீதி பொய்யாக இருக்கும். என்ன செய்வது? பொதுவாக உண்மைகளை விடவும் அலங்காரமான பொய்களுக்குத் தானே அதிகமான மதிப்புக் கொடுக்கப்படுகின்றது.

அன்று அவன் கல்லூரியின் அந்த விஸ்தீரணமான வளாகத்தில் தன் நண்பர்களோடு அமர்ந்து தீவிரமாக அவன் வருகை தராத போது நடத்தப்பட்ட கடந்த வாரத்தின் பாடம் குறித்துக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க,

வந்துட்டான்யா வந்துட்டான்.வந்ததும் வராததுமா பாடத்தைப் பத்தி கேட்டு கடுப்பாக்குறதே இவன் வேலை. காலேஜ் வந்தா ஃபிகருங்களைப் பார்த்தோமா? ஊர் சுத்தினோமான்னு இல்லாம ஒரே படிப்பு படிப்புன்னு. ஏண்டான்னு கேட்டா எங்க அப்பா கஷ்டப்பட்ட காசுடா அதை வீணாக்கலாமான்னு வியாக்கியானம் பேசுவான். கதிரை குறித்துச் சலித்தவாறே அவனிடம் வந்து நின்றான்.

என்னடா எப்ப வந்த? அம்மா அப்பா எல்லோரும் நல்லா இருக்காங்கல்லியா? நலம் விசாரித்தான் சாரதி.

அவனது நல விசாரிப்புக்குப் பதில் கொடுத்தவாறே கைக் குலுக்கி தோளணைத்து விடுவித்து அமைதியாய் சிரித்தான் கதிர்.

சச்சின் சாரதியிடம், “சாரதி நம்ம கதிர் இந்த வருஷம் காலேஜ் முடிக்கிறதுக்குள்ள லவ் மேட்டர்ல சிக்கப் போறான்னு நான் பெட் கட்டுறேன், நீ என்ன சொல்ற?

இவன் ஒரு சாமியார் பையன். கருப்பா இருந்தாலும் களையா இருக்கான்னு இவனைப் பார்க்கிற பொண்ணுங்களை எல்லாம் எட்டியும் கூடப் பார்க்கவே மாட்டேங்கிறான். இவனாவது லவ்வுல மாட்டுறதாவது………நீ வேற என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்தக் கல்லூரியின் வளாக வாயிலில் கதிரின் கண்கள் நிலைத்தன.

சத்யா எளிமையான உடையில் தன்னோடு வந்து கொண்டிருக்கும் தோழியுடன் பேசியவாறு,சற்றுக் கூச்சத்தோடு வந்து கொண்டிருந்தாள். அந்தக் கல்லூரியில் பல்வேறு துறைகளின் கல்விகள் உண்டு. அவள் சேர்ந்திருந்தது கலைப் பிரிவில் இளங்கலை பயிலுவதற்காக அதனையடுத்து வழக்கறிஞராக ஆக வேண்டும் என்பது அவளது விருப்பம் அறிந்து ஹரீஷ் அந்தக் கல்லூரியில் சேர்த்திருந்தார்.

அவளைக் குறித்து ஏற்கெனவே எழும்பி இருந்த மதிப்பிற்குரிய பிம்பம் மற்றும் சில மாதங்கள் முன்பு அவளை நேரில் சந்தித்த போது அவள் அவனிடம் அதட்டிப் பேசியது என ஒவ்வொன்றாக நினைவுக்கு வர, தானாகவே புன்முறுவல் வந்து அவன் முகத்தில் அமர்ந்து கொண்டது.

அதை சச்சினும், சாரதியும் கண்டு ஒருவரை ஒருவர் பார்த்து கண்சிமிட்டிக் கொள்ள இதை அறியாதிருந்தான் கதிர்.

ஒரு வாரம் கழித்துக் கதிர் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் என்று அந்தக் கல்லூரி முழுவதும் பரவிய போது அதைக் கேட்டு அவன் அதிர்ந்தானென்றால், உக்கிரமாய்க் காளி அவதாரமெடுத்து , நவீன கண்ணகியாய் கையில் சிலம்பெடுத்து வராத குறையாக அவன் எதிரில் சத்யா வந்து நின்றபோது யார் பார்த்த வேலைடா இது என்று? என அவன் மைண்ட் வாய்ஸ் கேட்க, இவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் இன்னுமாய்த் திகைத்தான்.

:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:

இன்று…

[center]வாழ்வில்[/center]

[center]இழந்தது மறுபடி கிடைக்குமாம்[/center]

[center]என்ன ஆச்சர்யம்?![/center]

[center]எனக்கோ[/center]

[center]நான் ஒருபோதும்[/center]

[center]அறிந்திராதது[/center]

[center]முன்பொருபோதும்[/center]

[center]அடைந்தே இராதது[/center]

[center]கிடைத்ததே![/center]

[center]அன்பும் துள்ளலுமான[/center]

[center]எந்தன் பால்யம்[/center]

கடந்த சில நாட்களில் சத்யா அந்த வீட்டின் செல்லப் பிள்ளையாகவே மாறி விட்டிருந்தாள். விதவிதமாக அவளை உடுத்த வைத்து அலங்கரித்துப் பார்ப்பதும், சுவை சுவையான உணவுகளைத் தொண்டை வரை திணிப்பதுவுமாகச் சந்திராம்மாவுக்கு முழு நேரமும் சத்யாவை கவனிப்பதே வேலையாயிற்று.

கதிர் சொன்னதால் சல்வார்களாக வாங்கியிருந்தவர், அவளிடம் விருப்பம் கேட்டு ஊரில் மற்ற வாலிப பெண்கள் உடுத்தும் விதமாக உடுத்த பாவாடை தாவணிகள் வாங்கினார். சத்யா அதனை மறுக்கவே வாய்ப்பில்லாமல் அவளை அன்பால் திணறடித்தார். ஒரு பக்கம் மனம் முழுக்க மகிழ்ச்சியாகவும், இன்னொரு பக்கம் அந்த அன்பு பிரவாகத்தில் திக்கு முக்காடவும் செய்தாள் அவள்.

இத்தனை காலமும் கிடைக்காத அத்தனையும் ஒட்டு மொத்தமாகப் பிரவகித்த உணர்வு அது. கூடவே கதிரை ஒரு வருட காலமாக அவள் திட்டி தீர்த்திருப்பதுவும் உள்ளுக்குள்ளாக நெருடிக் கொண்டிருந்தது.

அவன் செய்ததுக்கு அவனைத் திட்டியது சரிதான். இவ்வளவு அன்பான அம்மாவுக்கு இப்படி ஒரு பிள்ளையா? மனதிற்குள் அவனை நேரில் காணாததால் சில நாட்கள் திட்டாமல் இருந்த திட்டுக்கள் சேர்ந்திருக்க ஆசை தீர அவனைத் திட்டிக் கொண்டாள் அவள்.

ஊரார் அவர்கள் வீட்டின் விருந்தாடிக் கொண்டிருக்கும் சத்யாவை யாரென்று கேட்க சுந்தரம் வெகு இயல்பாக,

“அது நம்ம தூரத்துச் சொந்தம் மச்சான் முறையாகணும் அவனோட பொண்ணு, அம்மா அப்பா இல்லை. அதனால லீவில நம்ம வீட்டுக்கு நான் தான் கூட்டியாறச் சொன்னேன்” என்றார்.

அவர் சொல்லியும் சி ஐ டிக்கே சவால் விடும் ஒரு முதிர் பெண்மணி இது என்னய்யா புதுசா சொல்லுறீங்க? இப்படி ஒரு உறவை பத்தி நான் முன்னப் பின்ன கேட்டது இல்ல. இது வரை இந்தப் பொண்ணை நம்ம ஊருல நான் பார்த்ததே இல்ல என முரண் பேச,

அவரு சென்னைப் பக்கம் அதனால உங்களுக்குத் தெரிஞ்சிருக்காது ஆத்தா. வயசுப்பையன் இருக்க வீட்டுல எதுக்குன்னு தான் இத்தனை வருஷமும் பிள்ளைய கூட்டிட்டு வரல, இந்த வருஷம் கதிரு ஊருக்கு போயிட்டான்ல அதான் கூட்டிட்டு வந்தேன் என்று ஒரே போடாகப் போட அதன் பின்னர் ஒருவரும் ஒன்றும் கேட்கவில்லை.

ஊரில் லீவு நாட்களில் பூட்டிக் கிடந்த பள்ளியின் வளாகத்திலேயே கராத்தே பயிற்சிகள் ஆரம்பித்திருந்தன. ஆணும் பெண்ணுமாகச் சிறு பிள்ளைகள் ஒரு குழுவாகவும், வாலிப பெண்கள் ஒரு குழுவாகவும் கராத்தே கற்றுக் கொண்டிருந்தனர்.

அனைவரும் ஆர்வமாக டீச்சரக்கா என அவளைக் கூப்பிட்டு பழகுவதோடு நில்லாமல் வீட்டிலிருந்து அவளுக்குச் சாப்பிட ஏதாவது கொண்டு வருவதும் , மாலை வகுப்புகள் நிறைவேறியதும் ஒவ்வொருவராக அவளைத் தன் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு செல்வதாகவும் அவளுக்கு நாட்கள் ஒவ்வொன்றுமே வண்ணமயமாகின.

அந்த ஊரின் வடிவமைப்பு அவளுக்கு எப்போதுமே கொஞ்சம் குழப்பம் தான். எல்லாத் தெருக்களும் ஒரே அமைப்பில் இருக்கும். எப்போதும் பயந்து பயந்தே வழி தேடிப் பார்த்து வீடு வருவாள். பல நேரம் அவளை அழைத்துச் செல்லுபவர்கள் வீடு வரை பத்திரமாக அவளைக் கூட்டிச் சேர்த்து விட்டுச் சந்திராம்மாவிடம்

“பெரியம்மா, உங்க பச்சப் பிள்ளையை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்துட்டோம்”

என அவளைக் கிண்டல் செய்யவும் மறப்பதில்லை. இவ்வளவு நாட்களில் கதிரின் தந்தை சுந்தரத்தைப் பார்த்துப் பயப்படாமல் இருக்கக் கற்றுக் கொண்டாள். ஆனாலும் அவ்வளவாய் பேசுவதில்லை. தயங்கி, தயங்கி எப்போதாவது அவரைப் பார்த்து புன்னகைப்பதோடு சரி. அவலது மொத்த ராஜாங்கமும் சந்திராம்மாவை சுற்றியே இருந்தது.

அன்றும் அப்படித்தான் வகுப்பு முடிந்த பின்னர்ச் சாவித்திரி என்னும் குழந்தையின் வீட்டுக்குச் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தாள். வழி தெரியாததால் சற்றே இருள ஆரம்பித்திருந்த அந்த வளைவில் சென்றவள் எப்படிச் செல்வது என யோசிக்கும் போது, மெலிதான ஒரு சப்தம், அந்தச் சப்தம் தவறாய் எங்கோ ஏதோ நடந்து கொண்டிருக்கின்றது என அவளுக்கு உணர்த்தியது.

தன் உள்ளுணர்வு வழி நடத்த முன்னேறிச் சென்றவளுக்கு ஆளரவமற்ற அந்த வீதியின் ஓரத்தில் இரண்டு வயது குழந்தையொன்று மலங்க மலங்க விழித்துக் கொண்டு பயந்து நிற்க, அதன் ப்ராக்கை தூக்கியவனாய் ஜீன்ஸ் பேண்ட் அணிந்த இளைஞன் ஒருவன் கண்ணில் பட்டான்.

உடல் வெலவெலக்க, கற்ற கராத்தே எதுவும் கை தராமல், மூளை செயல்படாமல் எப்படி அந்தக் குழந்தையைக் காப்பாற்றுவது? என்றே புரியாமல் நின்றவளைத் தாண்டிச் சென்றது ஒரு உருவம்.

பொளேர் பொளேரென்று கன்னம் கன்னமாய் அறைந்து அந்த வாலிபனின் காலரைப் பிடித்து அவனைத் தர தரவென்று இழுத்துக் கொண்டு அவளருகே நின்று,

சக்தி … அந்தப் பாப்பாவ கூட்டி கிட்டு என்னோட வா… என்றவராய் நகர்ந்தார் சந்திராம்மா.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here