12. காதலும் வசப்படும்

0
569
Kadhalum Vasapadum

அத்தியாயம் 12

அனறு…

[center]உன்னை அறிந்ததில்லை[/center]

[center]உன் பெயரும் தெரியவில்லை[/center]

[center]நமக்குள்[/center]

[center]இனிமை பேச்சும் இல்லை[/center]

[center]கனிவு பார்வையும் இல்லை[/center]

[center]ஆனாலும் வந்தே விட்டது காதல்[/center]

[center]பாழாய் போன[/center]

[center]இந்தக் காதலுக்கு[/center]

[center]கண் மட்டுமா இல்லை[/center]

[center]மூளை கூட இல்லை.[/center]

வழக்கம் போலவே சீக்கிரமாய் எழுந்து புறப்பட்டுக் கல்லூரிக்கு வந்துவிட்டிருந்தான் கதிர். காலத்தின் முக்கியத்துவத்தைச் சிறுவயதிலிருந்து அறிந்திருந்ததாலோ என்னவோ எப்போதும் சற்று நேரம் முன்பாகவே செல்லும் இடம் போய்ச் சேர்ந்து விடும் வழக்கம் அவனுக்கு உண்டு.

அந்தக் காலை நேரம் வெறிச்சோடியிருக்கும் அந்த மிகப் பரந்த கல்லூரி வளாகத்தையும், அதில் இருக்கும் வகை வகையான மரங்களையும், அவற்றில் இருக்கும் பறவைகள் எழுப்பும் விதவிதமான ஒலிகளையும் அங்கு அமர்ந்து ரசிக்கலானான்.

அது ஒரு பூங்கா போன்று அலங்கரிக்கப் பட்டிருந்த பகுதி, சுற்றிலும் அழகழகான செடிகள், புதர்களாக இருக்கத் தனிமையாக இருந்தது அவ்விடம்.

ஏகாந்தத்தின் அழகே தனிதான். காலை நேர இனிமையான காற்று வருடலை கண்களை மூடி ரசித்துக் கொண்டிருந்த போது தான் இலைச் சருகுகள் மென்மையாய் மிதிபடுவதன் சப்தம் கேட்க கண்களைத் திறந்து யாரெனெப் பார்த்தான்.

ஏனென்றால், அவன் நட்புக்கள் யாருக்கும் இத்தனை சீக்கிரமாய் வரும் பழக்கமில்லை. கல்லூரி ஆரம்பிக்கச் சற்று நேரம் முன்பு தூங்கி எழுந்து குளிக்க நேரமில்லாமல் வாசனை திரவியம் தெளித்துக் கொண்டு , தலை வாராமல், அரக்கப் பரக்க ஓடி வரும் நட்புக்கள் தான் அனேகம். அப்படியே அவர்கள் சீக்கிரமே வந்தாலும் கூட அவர்கள் இத்தனையாய் மென்மையாய் நடந்து பூமிப் பந்தோடு அன்பு உறவாடுபவர்கள் அல்லர். போருக்குப் புறப்படும் அவசரத்தோடு தரை அதிரும் விதமாக அல்லவா வருவர்.

கண்களை உயர்த்திப் பார்த்தவன் கண்களில் எதிரில் வந்து கொண்டிருந்த சத்யா விழுந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் முகம் நன்கு தெரியும் தூரம் வந்து பார்த்தபோது தான் கதிர் தன் எதிரில் நின்று கொண்டிருக்கும் அவளின் முக மாறுதலை கவனிக்கலானான். முதலில் ஏதோ ஒரு தயக்கத்தில் வந்து நின்றவள் இவனைப் பார்த்ததும் முகம் கோபச் சிவப்பு பூசிக் கொண்டதை உணர்ந்தான். இன்னும் கூட அவன் பெயர் அறிந்திராத அந்தச் சின்னப் பெண்ணின் கண்களில் எப்போதும் அவனைக் காண்கையில் மட்டும் ஏன் இத்தனை ஆவேசம்? என எண்ணினான்.

அவள் கோபம் கொள்ளுமளவும் அவளுக்கு அவன் என்ன செய்தான்? என்பதே அவனுக்கு நினைவில்லை. தான் செய்தது தவறேயில்லை எனும் போது அவன் மனதில் அவர்களது முதல் சந்திப்பில் குழந்தை குழலியின் உடையிலிருந்த எறும்புகளைத் தட்டி விட்டது மனதில் பதியவே இல்லை. தான் அன்று கண் இமைக்காமல் அவளைப் பார்த்ததால் தான் தன் மேல் அவள் கோபமாக இருக்கிறாள் போலும் என அவன் நினைத்துக் கொண்டிருந்தான்.

அதையும் கூட அவளை மறுபடி தன் கல்லூரியிலேயே பார்க்கும் வரைக்கும் மறந்து போயிருந்தான். ஒரு சில உருவங்கள் வியப்பாய் சில நேரங்களில் நம் மூளையில் தங்கி விடும். அது போலவே எண்ணிக்கையிலடங்காத மூளையின் அணுக்களில் ஒன்றில் அவள் வீரமான பெண்ணாக அவன் நினைவடுக்குகளில் பதிந்து போயிருந்தாள். அவளைக் குறித்த அந்தப் பிரமிப்பு மட்டும் தான் இப்போது அவனிடத்தில் இருந்தது………….

அவனருகே வந்தவள், வெகு துணிச்சலாக

ஓ அப்ப அந்தக் கதிர் நீதானா? என்றாள் தெனாவெட்டாக,

என்னவோ நீர்தான் வீரபாண்டிய கட்ட பொம்மனோ? என்பது போல இருந்தது அவளது பேச்சு.அவனுக்கு அவள் பெயர் தெரியவில்லை. இல்லையென்றால் அவனும் பதிலுக்கு நீர்தான் ஜாக்சன் துரை என்பவரோ? என்னும் விதத்தில் கேட்டிருப்பானோ என்னவோ?

இந்தக் காலை வேலையில் இவள் என்னை எதற்குத் தேடி வர வேண்டும்? என்கிற எண்ணத்தில் அவன் முகம் சுளித்தான். காரணம் என்னவென்று சொல்லவே தேவையில்லை. எல்லோர் முன்பும் கல்லூரி நேரத்தில் ஆண்களும் பெண்களுமாகப் பழகுவதை யாரும் விகல்பமாக எண்ணமாட்டார்கள் தான். அதே நேரம் தனிமையில் ஆணும் , பெண்ணுமாக இருவர் பேசிக் கொண்டிருப்பதை யாரும் கண்டால் அதைத் திட்டமிட்ட சந்திப்பாகவே எண்ணி கிண்டல் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். எதற்காக இந்தப் பெண் தேவையில்லாமல் என்னுடன் வந்து பேசிக் கொண்டிருக்கிறாள்? என்றெண்ணி குழம்பினான். தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தவன்,

நான் கதிர் தான், நீ யாரு? என்று அவளழைத்த ஒருமையிலேயே சற்றுக் கடுமை ஏறின குரலிலேயே பதிலிருத்தான் அவன்.

எழுந்து நின்று கடுமையாகப் பேசியவனைக் கண்டதும் மனதுக்குள் சட்டென்று எழுந்த பயத்தை வெளிக்காட்டாமல்,

எப்போதும் தைரியமாக இருக்க வேண்டும், தைரியமாகப் பேசவேண்டும். எந்தப் பிரச்சனை வந்தாலும் நேரடியாகப் பேசி தீர்வு காண வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் பயப்படக் கூடாது……… கல்பனாம்மா சொன்னவைகளை மந்திரம் போலத் தனக்குள்ளே உச்சரித்துக் கொண்டிருந்தவள் நிமிர்ந்தாள்.

உனக்குப் பொண்ணுன்னா அவ்வளவு இளக்காரமா போயிடுச்சா? அதெப்படி உன்னையும் என்னையும் சேர்த்து வச்சு கல்லூரி முழுக்கவே பேச வச்சுட்டு ரொம்ப நல்ல பிள்ளையா உட்கார்ந்துட்டு இருக்க, ரொம்ப ஆடின கொன்னுடுவேன் பாரு குட்டியான தன் விரல்களை ஆட்டிப் பேசுபவளைக் கண்டால் எரிச்சல் வந்தட்தே ஒழிய கோபம் வரவில்லை கதிருக்கு.

ஏய் நீ யாருன்னே எனக்குத் தெரியாது, இதில காலங்கார்த்தால என்னைய தேடி வந்துட்டு உன்னையும் என்னையும் சேர்த்து வச்சு பேசுறாங்கன்னு சொல்லுற. அமைதியான குரலில் சீறினான் கதிர்.

எல்லாம் உன்னோட அல்லக்கைங்க தான், நான் எங்க போனாலும், வந்தாலும் கதிர் கதிர்னு சத்தம் போடுறதும், என்னைக் கவனிக்கிறதும், ஏதாவது சொல்லி கிண்டலடிக்கிறதும்… தன் கோப முகம் மாறாமல் சிடு சிடுத்துக் கொண்டிருந்தவள்……அதான் உன்னைய நேர்ல பார்த்து இனி இப்படில்லாம் நடந்துக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.

அவள் கூறியதைக் கேட்டதும் இது என்ன புதுக் குழப்பம் என்று திகைத்தான் கதிர் அவனுக்கு அப்படிக் கதைக் கட்டி விட்டது யார்? இது எப்போது நடந்தது? ஏன் இப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்கள்? என்று எதுவும் புரியவேயில்லை.

அதே நேரம் இன்னும் அவளிடம் பேசிக் கொண்டிருக்க அது சரியான நேரமுமில்லை என்பதை உணர்ந்தவனாக,

இங்க பாரு பொண்ணு….

ஏய் அதென்ன பொண்ணு, கிண்ணு ன்னுட்டு மரியாதையா பேச மாட்டியா? என அவள் சீறியதும் கதிருக்கு காலையிலேயே இதென்ன தலைவலி? எனத் தோன்றியது. பெயர் தெரியாமல் இவளை எப்படிக் கூப்பிடுவது எனத் திகைத்தவன்.

இங்க பாருங்க மேடம், நான் உங்களைப் பற்றி இப்படில்லாம் யார் கிட்டயும் சொல்லலை… யாரோ கதை கட்டி விட்டிருக்காங்கன்னு நினைக்கிறேன்… உங்களை என் பேர் வச்சு யாரும் கிண்டல் பண்ணுறாங்கன்னு சொன்னீங்கள்ல அப்புறமா அவங்க வரட்டும் நான் அவங்களைக் கேட்டு கண்டிச்சு வைக்கிறேன். இப்ப நீங்க என் கிட்ட பேசிட்டு இருக்கிறதை யாரும் பார்த்தாங்கன்னா அதையும் கூடத் தப்பா பேச வாய்ப்பிருக்கு. இந்தப் பிரச்சினையை என் கிட்ட விட்டுடுங்க நான் பார்த்துக்கிறேன் என்றான்.

அவன் இவ்வாறு பேசவும் இவனை நம்பலாமா வேண்டாமா? என யோசித்தாலும் இன்னுமாய் அவனிடம் சண்டைப் போடவோ, அதட்டவோ இயலாத படி இருந்தது அவனது பேச்சு. ஒட்டு மொத்தமாய் அவள் கேள்விகள், கோபங்கள், முறையிடலுக்குப் பதில் கூறியிருந்தான் அவன். ஆனாலும், கெத்தாக வந்து விட்டுச் சத்தம் காட்டாமல் திரும்புவதுவும் கூச்சமாய் இருந்தது அவளுக்கு.

சண்டைப் போடவென்று அவள் வந்த வேகம் என்ன? அவன் பேசிய விதம் என்ன? முற்றிலும் சம்பந்தம் இல்லாதவன் போலப் பேசுகின்றவனிடம் மறுபடி எப்படிப் போய்ச் சண்டையிடுவது? அந்தக் கதிர் என்பவன் எடக்கு மடக்காகப் பேசினால் ஒன்றிரண்டு ஓங்கிக் கொடுத்து விட்டு வர வேண்டும் என்று எண்ணியிருந்தேனே?

இப்போது அவன் உயரத்தையும், உடல்வாகையும் கவனித்தவள் தான் கை ஓங்கினால் பதிலுக்கு வாங்கிக் கட்டிக் கொள்ளாமல் பத்திரமாய்த் திரும்ப வருவது சாத்தியமில்லை என உணர்ந்தவளாய் பம்மினாள். தனியாய் வந்து மாட்டிக் கொண்டேனோ? என்னும் பய உணர்வும் வராமலில்லை.

தன்னிடம் வார்த்தைக்கு வார்த்தை “மேடம், மேடம்” என்று மரியாதையாகப் பேசுபவனை “இவன் என்னைக் கிண்டலடிக்கிறானோ?” என்கின்ற சந்தேகத்தில் அவனைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே சென்றவள் அங்குத் தரையில் பூச்செடிகளுக்கு ஊற்றியிருந்த தண்ணீரால் சகதியாய் ஆகியிருந்த தரையில் காலை வைத்ததும் தான் வழுக்கினாள்… பிடிமானம் இல்லாதவளாக அப்படியே பின்னால் சாய்ந்தாள்.

அதே நேரம் அதே வழியாய் வெளியேற வேண்டும் என்பதால் அவள் பின்னாகச் சற்று இடைவெளி விட்டு வந்து கொண்டிருந்த கதிர் அதை எதிர்பார்க்கவில்லை. அவள் விழுந்த வேகத்தில் அவன் நெஞ்சோடு முதுகு அழுந்த விழ, அந்த வேகத்தை எதிர்பாராதவன் அப்படியே சாய அவன் அமர்ந்திருந்த அந்தத் திண்டைத் தாண்டி இருவரும் புதருக்குள்ளாக விழுந்தார்கள். இப்போது முற்றுமாய்ச் சத்யா அவன் மார்பில் இருந்தாள்.

எழ முயற்சித்தவன் தன் மேல் முழுவதும் பாரமாய்க் கிடக்கின்றவளை எப்படி அகற்றுவது? என்றறியாமல் அவளைக் கவனித்தான். அவளோ அவனிடமிருந்து எழ முயற்சித்தும் முடியாமல் அவன் உதவியைக் கேட்டால் திட்டுவானோ? இவ்வளவு நெருக்கத்தில் இருப்பதால் அவன் அவளை எதுவும் செய்து விடுவானோ? எனக் குழந்தையாய் பயம் முகத்தில் அப்பிக் கிடக்க மிரண்ட பார்வையில் இருந்தாள்.

அவளைப் பார்த்தவனது முகம் தானாகக் கனிந்தது, கொஞ்சம் முன்பு வீரம் காட்டியவள் இவள்தானா? என மனதுக்குள் அவள் குறித்து விளையாட்டாய் தோன்றினாலும் அவளை நோகடிக்கும் விதம் அதை வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஏனோ அப்போது அவள் மீதிருந்த எரிச்சலும் சிடுசிடுப்பும் மறந்து அவளை ரசிக்கத் தோன்றியது.

என்னையும் இவளையும் ஜோடிச் சேர்த்தது யாரென்று தெரியவில்லையே? எண்ணியவன் மனதில் முன்பிருந்த கோபம் இப்போது இல்லை, புதிதாய் அவன் இதயத்தில் மென் உணர்வுகள் பூத்திருந்தன. குட்டியாய் காம்பேக்ட் சைஸில் இருக்கிறாள். இந்தக் குட்டிக் கண்கள் என்னவெல்லாம் பேசுகின்றன? அவள் ஸ்பரிசத்தை ரசித்தவன் மென்மையாய் பூவைப் போல இருக்கிறாள் என எண்ணி சிலிர்த்தான். அவள் மிரளாதவாறு அவளை அதிகம் சோதிக்காமல் பட்டும் படாமலுமாய் ஒருவாறு தானும் எழுந்து எழுப்பி விட்டான்.

அந்த எதிர்பாராத சம்பவம் சில நிமிடங்களில் நடந்து முடிந்து விட்டிருந்தது. தான் தன்னுடைய பல்வேறு உணர்வு வெளிப்படுகளால் ஒருவன் மனதில் ஆழமாய்ப் பதிந்து போய் விட்டோம் என்பதை உணராதவளாக வெகு அவமானமான உணர்வில் இருந்தாள் சத்யா.

அவனை அதட்டிப் பேச வந்து விட்டு, அவன் மீதே விழுந்து, தானாக எழவும் முடியாமல் அவனிடமே உதவிக் கேட்க நேரிட்டது குறித்து மிகவும் அவமானமாக உணரவே முகம் கருக்க அவனிடம் தான் விழுந்து வைத்ததற்கு ஸாரி ஸாரி என்று மன்னிப்பு கேட்டவாறு சத்யா அங்கிருந்து விரைந்து சென்று விட்டாள்.

அவளது முகக் குன்றலை கவனித்தாலும் கதிர் அதனைப் பெரிது படுத்தவில்லை. எதற்காக இவள் இத்தனையாய் வருந்துகின்றாள்? என்றே அவனுக்குத் தோன்றிற்று. அவள் விழுந்ததாலல்லவா அவளது அந்தக் குழந்தை முகம் பார்த்தேன். காதலில் விழுந்தேன்.அதனால், அவளுடைய மன்னிப்பு வேண்டுதலும் அவனுக்கு அர்த்தமற்றதாகத் தோன்றிற்று…

[center]பெண்ணே[/center]

[center]களங்கமுள்ள அந்த[/center]

[center]நிலவின் முகமூடி களற்று[/center]

[center]உந்தன் களங்கமற்ற[/center]

[center]முகவடிவு மட்டும் போதுமெனக்கு[/center]

உடனடியாய் மனம் கவிதை புனைய தோன்றிய புதிய உணர்வுகளை ரசித்தவனாக அவளையே கண்ணிமைக்காமல் பார்த்திருந்தான் அவன்.

இங்கே இத்தனை களேபரங்கள் நடந்திருக்க,

சற்று நேரம் முன்பு……….

செக்யூரிட்டியிடம் கதிர் வந்துட்டானா? எனச் சச்சின் கேட்டு உள்ளே வர, அவரோ

என்ன இன்னிக்கு எல்லோரும் வந்ததும் வராததுமா கதிர் தம்பியை தேடுறாங்க என்றவராகத் தனக்குள் பேசிக் கொள்ள, சச்சின் அவரிடம் மறுபடி போய்,

கதிரை யார் தேடினாங்க செக்யூரிட்டி அண்ணா எனக் கேட்க,

இப்பதான் ஒரு பாப்பா என் கிட்ட கேட்டுட்டுப் போச்சு எனக் கூறினார்.

அது யாராக இருக்கும்? என அவசரமாய்த் தேடி வந்தவன் கண்களுக்குப் புதருக்குள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து கிடந்த காட்சி கிடைக்க ஆவென வாய்ப் பிளந்தான்.

தெரிந்த பெண் என்ற விதத்தில் கதிர் சத்யாவைப் பார்த்து புன்னகைத்ததையே படமாகக் கல்லூரி முழுக்கக் காதல் என்று ஓட்டியவனுக்கு, கதிரும் சத்யாவும் புதருக்குள்ளாக ஒருவரை ஒருவர் அணைத்த விதமாகக் கிடைத்த காட்சியும், அவர்கள் எழும்பிய பின் சத்யா அவனிடம் ஏதோ சொல்லி தலைக் குனிந்துச் சென்றதுவும், அவள் சென்ற பின்னரும் கதிரின் கண்கள் விடாமல் அவளைத் தொடர்ந்ததையும் அவை சொன்ன காதல் மொழியையும் அவன் பார்வையில் இருந்த உரிமை உணர்வையும் கண்ட பின்னே ஒன்றும் செய்யாமலிருக்க முடியுமா?

:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:

இன்று…

[center]அறிவு[/center]

[center]ஞானம்[/center]

[center]எது உயர்ந்தது?[/center]

[center]எது தாழ்ந்தது?[/center]

[center]சுற்றியிருப்பதை அறிவது அறிவு[/center]

[center]எதை அறிதல் நலம்[/center]

[center]எதை அறியாதிருப்பது நலம்[/center]

[center]என்பது ஞானம்.[/center]

[center]மனிதனுக்கு[/center]

[center]எது தேவை?[/center]

[center]அறிவா?[/center]

[center]ஞானமா?[/center]

உக்கிரமாய்த் தன் முன் நின்ற மனைவியைச் சாந்தப் படுத்திக் கொண்டிருந்தார் சுந்தரம். அவர்கள் வீடே இப்போது பஞ்சாயத்து நடக்கும் இடமாக மாறிப் போயிருந்தது.

குழந்தையைக் கையில் தூக்கிக் கொண்டவாறு வீட்டிற்கு வந்த சத்யாவோடு ஊரிலிருந்த ஓரிருவரும் வீட்டுக்குள்ளாக நுழைந்தனர். அடிவாங்கி, முகம் கன்றி, வீட்டின் ஒரு ஓரமாக நின்றிருந்த அந்த இளைஞனை பார்த்தாள் சத்யா. பின்புறம் உருவத்தைப் பார்த்த போது 20 அல்லது 25 வயது இருக்குமோவென அவனைக் குறித்து அனுமானம் தோன்றியிருந்தது. இப்போதோ முகத்தைப் பார்த்த போது 18 அல்லது 19 வயது தான் இருக்கும் என்று தோன்றிற்று.

இந்தக் காலத்துக் இளைஞர்கள் உடல் வளர்த்தி அதிகம், உடல் மட்டுமா அறிவும் தான் வயதிற்கு மீறி வளர்ந்து கெட்டு குட்டிச் சுவராகிக் கிடக்கிறது என்ன செய்வது?

சற்று நேரத்தில் வீட்டுக்குள் அந்த விஸ்தாரமான முன் அறையில் பெரும் கூட்டம் கூடி விட
“அமுதா உம் மக சக்திப் பொண்ணுகிட்ட இருக்கு போ”
எனச் சொல்லவும், ஒன்றும் புரியாதவளாகக் கூட்டத்தினூடாக வந்த பெண் ஒருவள் சத்யாவிடமிருந்து தன் மகளை வாங்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

அமுதா, இங்க வாம்மா என்றார் சுந்தரம்.

உன் குழந்தை எங்க இருந்தான்னு உனக்குத் தெரியுமா? எனக் கேட்க,

நான் வாசப்படில உக்கார்ந்து கதைப் பேசிட்டு இருந்தேன் ஐயா பக்கத்தில விளையாடிட்டு இருந்த பொண்ணு கொஞ்ச நேரமா காணலைன்னு தேடினேன், பாப்பா இங்க இருக்கான்னு சொன்னதும் வந்தேன் என்றாள்.

இங்க பாரும்மா இப்படிச் சொல்லுறேன்னு தப்பா நினைச்சுக்காத, இன்றைய காலத்துல சின்னப் பிள்ளைங்களை வளர்க்கிறது சுலபமில்லை.அவங்களைக் கவனிக்காம பெத்தவங்க ஏனோ தானோன்னு இருக்கக் கூடாது. ரொம்பவே கவனமா இருக்கணும். கண்பார்வைலயே வச்சுக்கணும். ஒரு காலத்தில மனுஷங்க வெள்ளந்தியா இருந்தாங்க. இப்பல்லாம் அப்படியா இருக்குது. பிறந்த பச்சக் குழந்தைகளைக் கூட வக்கிரமா பார்க்க கூடிய நிலை வந்திடுச்சு இன்னிக்கு உன் மக பெரிய விபரீதத்திலருந்து எப்படியோ தப்பிச்சிருக்கா? இனிமேலாவது கவனமா இருக்கப் பாரு. ராத்திரி உன் வீட்டுக்காரன் வந்ததும் ரெண்டு பேருமா வந்து என்னைப் பார்க்கணும் சரியா?

கண்ணில் நீர் வழிய சரிங்கைய்யா என்றவளாய் அமுதா நகர, சரி சரி எல்லோரும் அவரவர் சோலிய பார்க்க போங்க என்றவரின் சொல் கேட்டு அனைவரும் நகர வீட்டினுள் இருந்தவர்கள் சுந்தரம், சந்திராம்மா, சத்யா மற்றும் அந்த இளைஞனும் அவன் வீட்டினருமே

மிகவும் சிக்கலான சம்பவம் அது, யாரேனும் உணர்ச்சிவசப்பட்டிருந்தால் கிராமமே இரண்டு குழுவாகப் பிரிந்து மோதிக் கொள்ளும் படியான நிலையும் வரக் கூடும். அதனால் தான் சுந்தரம் எப்போதும் நிலையைத் தன் கட்டுக்குள் வைக்க மற்றவர்களை விசாரணை செய்கையில் அங்கிருக்க அனுமதிக்கவில்லை.

என்ன ராசதுரை இது உம் பையனா?

ஆமாய்யா………

பேரென்ன….

விஷால்

எங்க நம்ம ஊருல தம்பியை நான் பார்த்ததே இல்லியே….

வெளியூர்ல தங்கி படிச்சிட்டு இருந்தாங்கய்யா…

அப்படியா…சரி தம்பியைப் பார்த்தீங்களா……யாரோ அடிச்சிருக்காங்க……

ஆமாய்யா….யாருய்யா அது என் தம்பியை அடிச்சது துள்ளிக் கொண்டு வந்தான் விஷாலின் அண்ணன் சுதிர்.

மகனின் முகத்தில் இருந்த அறைகளையும், அவன் தலைக் குனிந்து இருப்பதையும் பார்த்து விம்மிக் கொண்டிருந்தார் அவனுடைய தாய் மரகதம்.

பொறுய்யா….அய்யா சொல்றாங்கள்ல சுதிரை அடக்கினார் ராசதுரை.

அவனை அடிச்சது என் வீட்டுக்காரிதான்…

என்ன பெரியம்மாவா? என அவர்கள் ஸ்தம்பிக்கவும் அதுவரை அழுது கொண்டிருந்த மரகதம் தன் மகன் மேல் ஏதோ தவறு இருக்க வேண்டும் என்று உணர்ந்தவராக அழுகை நிறுத்தி தன் மகனை ஆராய்ச்சியாகப் பார்த்தார்.

நிகழ்ந்ததைச் சுந்தரம் அவர்களுக்குச் சொல்ல, சுதிர் தம்பியை அடிக்கவே பாய்ந்து விட்டான்.

நம்ம வீட்டுல இப்படி ஒரு தறுதலையாப்பா… என அவன் துள்ள அவனைச் சமாதானப் படுத்தியவர்.

கொஞ்சம் நில்லப்பா, பொறுமையா இரு இன்னிக்கு அந்த நேரத்துல எங்க வீட்டு புள்ளயை தேடி எங்க வீட்டுக்காரம்மா மட்டும் அந்நேரம் அங்க போயிருக்காட்டா… என்ன நடந்திருக்குமோ சொல்ல முடியாது.

அந்நேரத்தில் அந்தக் கலவர நிலையிலும் கதிரின் அப்பா தன்னை எங்க வீட்டு புள்ளையை என்று குறிப்பிட்டது சத்யாவிற்கு மனம் குளிர்ந்தது. தனக்கு இவ்வீடு, மனிதர்கள் ஒரு வரம் என மனதிற்குள்ளாக மகிழ்வாக எண்ணிக் கொண்டாள்

சுந்தரம் பேச பேச தலைகுனிந்து நின்றனர் விஷாலின் பெற்றோர்கள்………

சந்திரா மட்டும் இன்னிக்கு அந்நேரம் அங்க போயிருக்காட்டா அந்தக் குழந்தைய உயிரோட கூடப் பார்த்திருப்போமோ என்னவோ? சுந்தரத்தின் பின்னால் நின்றிருந்த சந்திராம்மா அக்கினியாய் ஆத்திரமாய் நின்றார்.

அந்தப் பையனை போலீஸில பிடிச்சு கொடுங்க, என்ன நீங்க வியாக்கியானம் பேசிக்கிட்டு கொதித்தார்.

பொறு சந்திரா… அமைதிப் படுத்தியவர்

நீங்க என்ன சொல்லுறீங்க…

பச்சப் புள்ளைய போயி, ஏலே ஈனப் பிறவியா நீயி…. மேலும் பேச்செழாதவராக நீங்க என்ன தண்டனைக் கொடுத்தாலும் சரிதான்யா அவமானத்தில் பணிந்தார் ராச துரை. சுதிர் பேச்செழாமல் எங்கோ சுவரைப் பார்த்துக் கோண்டு நின்றான்.

அம்மா, இவங்க சும்மா சொல்லுறாங்கம்மா நான் அந்தக் குழந்தைகிட்ட விளையாடிட்டு தான்மா இருந்தேன்… சொன்னவனுக்குப் பளாரென அறை விட்டார் மரகதம்

செய்யிறத செஞ்சுட்டு வாய் பேசுறியா? என்னிக்காவது அந்த அம்மா யாரையாவது பழிச்சு பேசி பார்த்திருக்கியா? உன்னை மட்டும் எதுக்குத் தப்பு சொல்லணும்? மூச்……… பேசாத மூச்… சொல்லிட்டேன்.

சுந்தரத்திடம் திரும்பியவர் ஒரு தாயாக இறைஞ்சினார்.

ஐயா, நல்லா படிச்சுக் குடும்பத்தைக் காப்பாத்துவான்னு தான் அவனை நாங்க தின்னும், தின்னாமலும் ரூவா சேர்த்து பெரிய படிப்பு படிக்க வச்சுகிட்டு இருக்கோம்யா.போலீஸு கேஸுன்னு ஆச்சுன்னாஅவன் வாழ்க்கையே வீணாப் போகும்யா.தயவு செஞ்சு போலீஸு வேணாம்யா மன்றாடினார்.

அந்தக் குழந்தையோட அப்பனும் அம்மாவும் வரட்டும், அவங்கள்ட கேட்டுட்டுத்தான் முடிவுப் பண்ணனும் அதுவரைக்கும் உக்காருங்க என்றார். அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே தம்பியிடம் பாய்ந்தவன்,

எங்கடா உன் மொபைலு , எனத் தம்பியிடம் வினவினான். கையகல நவீன கைப்பேசியைப் பையினின்று எடுக்க அதன் லாக்கை திறக்கச் சொன்னான். தம்பி தயங்கவே,

மூஞ்சுலயே ஒன்னு போட்டேன்னா தெரியும் , திறன்னு சொன்னேன்ல எனவும் ஏதோ சில எண்களை அழுத்தி அதனைத் திறந்தான்.

பரபரவென்று அதன் உள்ளாகச் சென்று தேட அவன் கைக்கு அகப்பட்டன ஏராளமான நிர்வாணப் படங்களும், ஒளிப்பதிவுகளும்…

எப்ப பாரு இதிலயே மூழ்கி கிடக்கிறப்பவே எனக்கு ஒரே சந்தேகம் தான்

அப்படின்னா படிக்கிறேன், படிக்கிறேன்னு சொல்லிகிட்டு இத்தன நாளும் இதத்தான் செஞ்சுகிட்டு இருக்கிற நீ. மறுபடி சண்டை மூளும் அபாயம் ஏற்பட அனைவருமாகப் பிடித்து அவனை அமர்த்தினார்கள்.

அடி வாங்கியவனுக்கோ, அந்த நேர அவமானங்கள் தான் பெரிதாகத் தோன்றியதே தவிரத் தான் செய்தது இழிவான செயல் என்று மனதிற்குள் பட்டது போலவே தெரியவில்லை.

ஏதோ அவன் குடும்பத்தினர் அவனுக்காக, மன்னிப்பு கேட்பதுவும், இறைஞ்சுவதுவுமாக இருந்தார்களே ஒழிய அவன் தலையைக் குனிந்தவனாக அமர்ந்திருந்தான்.

அமுதாவும், அவள் கணவன் கணேசனும் வந்தனர். அவர்களைத் தனியறைக்கு அழைத்துச் சென்று முதலில் விபரம் கூற,

வழக்கமாகக் கணவர்கள் பிரச்சனை என்ற ஒன்று வரும் போது நடந்து கொள்வதைப் போலவே கணேசனும் கோபமாக எழுந்து ,

உனக்குப் பிள்ளையைக் கவனிக்கிறதை தவிர வேறென்ன வேலை?

என மனைவியை அடிக்கப் பாய்ந்தான்.

அடச் சும்மா இருய்யா, அவளே பயந்து அழுதுகிட்டு இருக்கா எனச் சந்திராம்மா குரல் கொடுக்கவும் தணிந்தான்.

ஒரு வழியாக இரு தரப்பினரையும், இன்னும் சில பெரியவர்களையும் வைத்து பேசினர். நான் தவறே செய்யவில்லை என்று அதுவரை பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தவன் கடைசியில் அவர்கள் சொனபடியே எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டான்.

இனி ஒருமுறை எதுவும் தவறான செயல் செய்தால் உடனே காவல்துறையில் ஒப்படைக்கப் படுவான் என்று எழுதி வாங்கிக் கொண்டார்கள்.

ஒரு தாயின் விண்ணப்பத்திற்காக அங்கிருந்தவர்கள் இறங்கிப் போனார்கள். அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த சத்யாவுக்குக் கதிரின் தாயும், தந்தையையும் குறித்துப் பிரமிப்பே ஏற்பட்டது.

மென்மையும், கனிவுமான இந்த மனிதர்கள் ஒரு தவறென்று வந்ததும் காட்டிய நேர்மை என்ன? அதிலும் அன்று தான் செயலற்று நின்றபோது சந்திராம்மா துணிந்து சென்று முன் பின் யோசிக்காமல் அவனை அடித்ததென்ன?

தன் வீட்டுக் குழந்தைக்கு நேர விருந்த கொடுமை போலவே பாவித்து அவனைத் தண்டிக்கச் சொல்லி துடித்ததென்ன? எண்ணி எண்ணி மாய்ந்தாள். இவர்கள் வீட்டுப் பையன் மட்டும் எப்படித் தவறானவனாக இருக்க முடியும்? என்று முதன் முறையாக யோசிக்கலானாள்.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here