14. காதலும் வசப்படும்

0
508
Kadhalum Vasapadum

அத்தியாயம் 14

அன்று…

[center]காலை முதல்[/center]

[center]மாலை வரை,[/center]

[center]உன் நினைவுகள்தான்[/center]

[center]கருவாயா…[/center]

[center]பொங்கி வழியும்[/center]

[center]காதலால் அல்ல.[/center]

[center]குமுறிக் கொண்டிருக்கும்[/center]

[center]கொலை வெறியால்.[/center]

என்னதான் ஆர்த்தி மற்றும் கிஷோருடன் உணவு உண்டு கொண்டிருந்தாலும் சத்யாவின் மனதில் பெரும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. இதுவரை தன் மனதின் உணர்வுகளை யாரிடமும் பகிர்ந்துக் கொண்டிராதவள் தன்னைச் சுற்றி நிகழும் ஒவ்வொன்றையும் அலட்சியமாய் எதிர்கொள்வதாகக் காட்டிக் கொண்டிருந்தாலும் காலையிலிருந்து எத்தனை அதிர்ச்சிகளைத்தான் தாங்குவது?

காலையிலேயே கண்ணகி வெகுண்டு எழுந்தது போலக் கதிரிடம் சென்று நீதி, நேர்மை, நியாயம் பற்றிப் பேசப் போக, அவனோ இதற்கும் அவனுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி ஒரு நிமிடத்தில் பாலாய் பொங்க்கியவளை தண்ணீர் தெளித்து அடக்கி விட்டானே? அந்த அவமானம் போதாதென்று அவன் மேலேயே விழுந்து வைத்து, தானாக எழுந்து நிற்க முடியாமல் அவன் உதவியை நாடி எழுந்து நின்றது தான் சத்யாவுக்கு வெகு அவமானமாக இருந்தது.

அத்தோடு போயிற்றா இல்லையே? சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாய் அவள் அவனிடம் தன்னை அவன் பெயர் சொல்லி கிண்டல் செய்பவர்களைப் பற்றிச் சொல்லி வைத்ததன் விளைவு… அதை நினைத்தாலே சத்யாவுக்குத் தன் தலையிலேயே மடேர் மடேர் என நாலு போட கைகள் துறு துறுத்தன. அருகில் ஆர்த்தியும், கிஷோரும் இருந்ததால் தன் அறைக்குச் சென்று அந்தப் புண்ணியக் காரியத்தைச் செய்ய ஒத்திப் போட்டாள்.

வழக்கம் போல அவள் அந்த வழியைக் கடந்து செல்லும் போதெல்லாம் கதிர் கதிர் எனக் கூவும் அந்தப் பொறுக்கி மாணவர்களின் கிண்டலுக்குத் தலையைக் கவிழ்ந்து நகர்ந்து விடுவது போல அன்றும் நகர்ந்துச் செல்ல “ரஃப்ப் எனக் காற்றின் வேகத்தில் ஒலி கேட்க அது அறைதான் , யார் யாரை அறைந்தது எனத் திரும்பிப் பார்த்து அது அந்தக் கிண்டல அடித்த குழுவின் தலைவன் சதீஷ் தான் அவனை அறைந்தது கதிர் என்றறிந்து, அடுத்து என்னவோ? என விதிர்த்து நிற்க ஆகிருதியாய், உயரமாய், கன்னங்கருமை முகத்தில் கடுமையும் சேர்ந்திருக்க விகாரமாய்த் தெரிய அவன் ஆங்கார ரூபத்தில் விதிர் விதிர்த்து நின்று விட்டிருந்தாள் சத்யா.

கன்னம் கன்னமாய் அவன் சத்யாவை கிண்டல் செய்து கொண்டிருந்தவனை அறைய, அதைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு உள்ளுக்குள்ளாக நடுக்கம் ஓடிக் கொண்டிருந்தது.

என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றான் இவன்? அதெப்படி யாரையும் இப்படி அறையலாம்? அவ்வளவு திமிரா? என்று சம்பந்தமே இல்லாமல் அவள் சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவள் தான் இந்தக் குற்றச் சாட்டைக் கதிர் வரையிலும் கொண்டு சென்றாள் என்பதையும், அவளுக்காகத்தான் அவன் அங்குச் சண்டையிடுகிறான் என்பதையும் வசதியாக மறந்துப் போனாள்.

இயல்பாகவே தனிமையிலும் துயரிலும் வளர்ந்தவள் அவள். என்னதான் கராத்தே கற்றுப் புன்னகை அமைப்பில் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தாலும், ஒரு அவசர நேரத்தில் சட்டென்று முடிவெடுத்துத் துணிச்சலாய்ச் செயல்படும் மன உறுதி அவளுக்கில்லை. இதுவே அவளது பலகீனம்.

அந்த துணிவு இருந்தால் எதற்காகத் தன்னைக் கிண்டல் செய்கின்றவர்களைத் தன் கராத்தே கலையால் அடித்துத் துவைக்காமல் கதிரிடம் பேச செல்ல வேண்டும்? அவளாகவே சமாளித்திருப்பாள் அல்லவா?

கூண்டுக்குள் ஒளிந்து கொள்ளும் நத்தைப் போல் அவள் மனம் பிரச்சனைகளில்லாத வாழ்வை நோக்கி மட்டும் பயணிக்க நினைத்ததே அன்றி, பிரச்சனைகளை எதிர்கொண்டு வெல்ல வேண்டும் என்பதை அவள் கற்றுக் கொள்ளவில்லை. அவளுக்குக் கற்றுக் கொடுப்பாரும் யாருமில்லையே?
அங்கு நடந்திருந்த கைகலப்பில் பயந்து நடுங்கியவளாக அங்கிருந்து விரைந்துச் சென்று விட, அவளுடைய வகுப்புத் தோழிகள் அவளை விசித்திரமாகப் பார்க்கலாகினர்.

“உனக்கும் அந்தக் கதிர்க்கும் எத்தனை நாளா பழக்கம்? என்று ஒருத்தி வாய் விட்டே கேட்டு விட்டாள்.

‘இதென்ன அபாண்டமான பேச்சு?” எனப் பதறியவள் பதில் சொல்லாமல் திணற ஆர்த்திதான் கேட்டவளை அதட்டினாள்.

“அனாவசியமா பேசாதீங்கடி, சத்யா என்னிக்காவது யார் கிட்டேயாவது தேவையில்லாம பேசி பார்த்திருக்கீங்களா? அதுவும் அவங்க வேற டிபார்ட்மெண்ட் அந்தப் பக்கம் நாம போனதே இல்ல”. எனப் பலவாறாக வாதாடி அந்தப் பேச்சை அடக்கிய நேரம் மற்றொருவள் பதற்றமாக ஓடி வந்து ,

“ஐய்யோ, அடிதடியோட நிக்காம விஷயம் பெரிய வம்பா போச்சே” என நிற்கவும்

என்னவெனச் சத்யா பதறினாள்.

“சண்டைப் போட்ட கதிரையும் அந்தச் சதீஷையும் பிரின்ஸி கூப்பிட்டு விட்டுருக்காராம். நிச்சயமா விசாரணை செய்யும் போது சத்யாவை கூப்பிட்டு விடுவாங்க பாருங்க” எனப் பொதுவில் கூறியவள், சத்யாவைப் பார்த்து

“எதுக்கும் நீ ரெடியா இருடி” எனச் சத்யாவின் வயிற்றில் புளியைக் கரைத்தாள்.

“நான்……நான் எதுக்குப் போகணும், நான் என்ன தப்பு செஞ்சேன்? நான்லாம் அங்க போக மாட்டேன்”

வீம்பாய் பதிலளித்தவளின் மன பயம் புரிந்தவளாக ஆர்த்தி அவள் கையைப் பற்றிக் கொண்டாள்.

“அப்படிக் கூப்பிட்டா நானும் உன் கூட வரேன் பயப்படாத” என்றவளின் ஆதரவு அப்போது அவளுக்கு மிகவும் தேவையானதொன்றாக இருந்தது.

ஏற்கெனவே இருந்த வெறுப்போடு கூடக் கதிர் தனக்கு மென்மேலும் துன்பம் தருவதாக எண்ணி அவன் மேல் இன்னும் அதிகமாய் வெறுப்பை வளர்த்துக் கொண்டாள் சத்யா.

வம்பு பேசிக் கொண்டிருந்தவர்கள் சில நேரத்தில் கலைந்துச் செல்ல, மற்ற டிபார்ட்மெண்ட்டிலிருந்து கதிர் சண்டையிட்டது எந்தச் சத்யாவுக்காக?, அவள் எப்படி இருப்பாள்? என அறிய அவளை அடையாளம் காண வந்து சென்ற சிலரைக் கண்டு மனதிற்குள்ளாகப் பயந்தாள். இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவளை இந்த அளவிற்குக் கொண்டு வந்து விட்டு விட்டானே எனும் பொருமல் கதிர் மேல் எழுந்தது.

அடுத்தடுத்த வகுப்புகளிலும் கூடச் சத்யா படிப்பில் கவனம் செலுத்த இயலாதவளாக எப்போது விசாரனைக்கு அழைப்பார்களோ? கல்லூரி முதல்வர் அறையினின்று எப்போது அழைப்பு வருமோவென மனம் திக், திக் என அடித்துக் கொள்ள, கைகள் குளிர்ந்து நடுங்கி பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் அமர்ந்திருந்தாள்.

பிரச்சனை நடந்த பின்பு மறுபடி வகுப்பறைக்கு வராமல் சில வகுப்புக்கள் போனால் போகிறது என்று வராமல் தவிர்த்திருக்கலாமோ? ஒருவேளை அழைத்து விசாரித்தால் என்ன சொல்வது? என மனதிற்குள்ளாகப் பல கற்பனைக் காட்சிகளோடு திகிலாய் அமர்ந்திருக்க, அவளது வகுப்பிற்கு ஒவ்வொரு முறையும் ப்யூன் ஏதாவது ஒரு வேலையாக வரும் போதெல்லாம் இவளது இதயத்துடிப்புக்கள் எகிறின.

ஒரு வழியாய் வகுப்புகள் முடிந்ததும் எல்லோரும் செல்வதற்காகக் காத்திருந்தது போல, இருந்த இடத்தினின்று நகராமல் அமர்ந்திருந்தாள். அவளை அன்று யாராவது சாதாரணமாகப் பார்த்தாலும் அவளுக்குத் தன்னைக் கதிரோடு இணைத்து விவகாரமாகப் பார்ப்பதாகவே தோன்றியது . உலகம் அறியாத பேதையாய் உள்ளுக்குள் மருண்டு கொண்டு, அதே நேரம் தன் மிரட்சியை வெளிக்காட்டாமல் தைரியமாய் வெளியே காட்டிக் கொண்டு நடிக்க வெகு சிரமப்பட்டாள்.

வகுப்பு மாணவர்கள் அனைவரும் சென்ற பின்னரும் சத்யா புறப்படத் தயாராகாமல் குனிந்தவாறே பையையே தலைகீழாகப் புரட்டி அடுக்கிக் கொண்டு இருந்தாள்.

“நேரமாச்சுப் போகலாம்” என்று பலமுறை ஆர்த்தி அழைத்தும் சத்யா வருவதாகத் தெரியவில்லை. ஆர்த்திக்கு இயற்கை உபாதை உந்தித் தள்ள, “நான் போறேன், சீக்கிரம் சாப்பிட வந்து சேரு” என்றவளாய் புறப்பட்டுச் சென்று விட்டாள்.

ஆர்த்தியும் வகுப்பறையிலிருந்து சென்று விட, இனியும் தாமதித்தால் உள்ளே வைத்து பூட்டினாலும் பூட்டி விடுவார்கள் என்ற பயத்தில் தயங்கி தயங்கி வாசல் வரை தன் பையை எடுத்து வந்து விட்டவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். அக்கம் பக்கம் யாரும் இல்லையென்றாலும் கூட, கல்லூரி வகுப்புகள் முடிந்த சில மணித்துளிகள் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் வளாகத்தில் நின்றுப் பேசுவது உண்டே?

வெளியே செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்க அவள் மனதோ

“இப்போ என்ன செய்யுவ? இப்போ என்ன செய்யுவ? என்று அவளைக் கேலி செய்வதைப் போல அச்சூழ்நிலை இருந்தது.

யாரும் தன்னைக் கேலியாக, கிண்டலாக, குத்தலாகப் பார்ப்பதை அவள் மனது விரும்பவில்லை. அதே நேரம் அவர்களைக் கடந்து சென்றாலன்றி அவள் டாய்லெட்டுக்கோ , உணவகத்துக்கோ செல்லவும் முடியாது. வயிற்றின் உந்துதல் சங்கடம் ஏற்படுத்த கண்ணீரே வந்து விடும் போலாயிற்று.

அவர்கள் வகுப்பினின்று பின்பக்கம் ஒரு வாயில் உண்டு. கல்லூரி ஊழியர்களுக்கான வழி அது. தேவையான நேரத்தில் உதவி செய்யாமல் கிண்டலடித்த மனசாட்சியை முறைத்து விட்டு, பின்வழியை ஞாபகப் படுத்திய மூளைக்குச் சபாஷ் போட்டுவிட்டு அவ்வழியே அக்கம் பக்கம் பார்த்தவளாக வெளியேறினாள்.தற்போது அங்கு யாரும் வரப் போவதில்லை என்றறிந்ததால் “ஆபத்திற்குப் பாவமில்லை” என்று ஆசிரியர்கள் உபயோகிக்கும் கழிவறையை உபயோகித்து ஒரு கள்வனைப் போலத் தன்னைச் சரிசெய்தவளாக வெளியேறினாள்.

மொத்தத்தில் காட்டுக்குள்ளாக அமைந்திருப்பது போல மரங்களால் அடர்ந்திருக்கும் கல்லூரியின் பின் பகுதியில் யார் நடமாட்டமும் இல்லை. உணவகம் செல்ல ஒரு சுற்று சுற்றிச் செல்ல வேண்டும் நெடிய பாதை அது. அவள் அப்படிச் சுற்றிச் செல்வதற்குள்ளாக ஜன சந்தடியும் குறைந்து விடும், இன்றைய ஒரு நாளை கடந்து விட்டால் தனிமையில் சில நேரம் செலவழித்துத் தன்னைச் சுதாரித்துக் கொள்ளச் சந்தர்ப்பமும் அமையும். எப்படியாவது வயிற்றுக்கு உணவிட்டு விட்டு அங்கிருந்து தப்பித்து விடவேண்டும் எனத் தன் பின்னாலேயே உலகமே துரத்துவது போன்ற மாய உணர்வில் தத்தளித்திருந்தாள் அந்தப் பதின்வயது உடம்பிற்குள்ளாக ஒளிந்திருந்த பயந்தக் குழந்தை.

சற்று நகர்ந்து பாதி வழி வந்த பின்னே தூரத்தில் அவள் கண்ணில் பட்டனர் இருவர். பார்த்ததும் முதலில் கண்ணில் உறுத்தியது அவர்கள் இருவரின் நெருக்கம் தான். கல்லூரிக்குள்ளே அந்த அடர்ந்த காட்டுப் பகுதியான இடத்தில் தோளோடு தோள் சேர்த்து ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருக்கும் அந்த இருவரை கோபத்தோடு விழிகள் தெரிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள் சத்யா.

சற்றுத் தூரத்தில் இற்கும் இருவரின் முழு உருவமும் மரங்களூடே தெரியாவிடினும் நெருங்கிய இருவர் தோள்களும், ஒருவர் காதோடு மற்றவர் பேசுவதும் சிரிப்பதும், எலிவால் போன்ற ரப்பரில் கட்டப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் நீண்ட முடியும் எனக் கொஞ்ச கொஞ்சமாய் மட்டும் உருவம் தெரிய வர தான் வந்த வேலை மறந்தவளாய் துப்பறியும் சாம்புவின் ஆவி உடலில் ஏறியதைப் போலச் சிலிர்த்துக் கொண்டு அவர்கள் யாரென அடையாளம் தெரிந்து கொள்ளக் கவனிக்கலானாள்.

அப்போது தான் அந்த ஜோடியில் சிரித்து நிமிர்ந்த அந்த ஆடவன் தலையை ஸ்டைலாகப் பின்னாகச் சரித்துப் பேச அது வேறு யாருமல்ல கதிர்தான் என்றறிந்ததும் ச்சீய்… என அருவருத்துப் போனாள் சத்யா. இனி அங்கே ஒரு நொடியும் நிற்க கூடாதென மனதிற்க்குள் தீர்மானம் எடுத்தவளாய் விறு விறுவென நடந்து செல்ல, எதிரில் அவளைக் கண்டு கொண்ட ஆர்த்தியும் அவளோடு இணைய இருவரும் சென்று உணவிற்குச் சொல்லி அமர்ந்தனர். அப்போது தான் கிஷோரும் அவர்களோடு இணைந்து கொண்டிருந்தான்.

தான் மனதிற்குள்ளாகக் கரித்துக் கொட்டிக் கொண்டிருப்பவன் உணவகத்தின் வாயிலினின்று அவளையும், அவள் தோழமைகளையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பதை அவள் அறிந்துக் கொள்ளவில்லை.

ஏற்கெனவே தாமதமாகி விட்டதால் அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு புறப்படலானாள். கிஷோர் விடைப் பெற்றுக் கொண்டான். ஆர்த்தியும், சத்யாவும் இணைந்து வெளி வர புறப்பட ஆர்த்திச் சத்யாவை விலாவில் இடித்தாள்.

“ஏய் சத்யா, அங்க … யாரு இருக்கான்னு பாரு?”

சட்டென்று கதிரைப் பார்த்த சத்யாவிற்க்கு உள்ளுக்குள்ளாக நடுங்கியது. ரஃப், ரஃப் சத்தங்கள் பிண்ணணியில் ஒலிக்க மனதிற்குள்ளாகக் கல்பனாம்மா சொல்லித்தந்த தன்னம்பிக்கை வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டு நான் பயப்படவில்லை எனும் விதமாகத் தன்னை நிமிர்வாய் காட்டிக் கொண்டு ஆர்த்தியின் கையைப் பற்றியவளாய் முன்னேறினாள்.

மேடம்… கதிர் அழைக்க,

ஆர்த்தி ஆச்சரியமாய் நோக்கினாள், சத்யாவை தானா இவ்வளவு மரியாதையாக அழைக்கிறான்?

எப்படிப் பதிலளிப்பது எனப் புரியாதவளாக, “நீ சொல்லு, நான் கேட்கிறேன்” எனும் விதமாகத் தலையசைத்தாள் சத்யா. கண்கள் தன்னைச் சுற்றியிருப்பவர்களை அளவெடுத்தது.

நாளை இந்தக் கதிருடனான சந்திப்பு குறித்து என்ன பேசுவார்களோ? என உள்ளுக்குள் கலவரம் மூண்டது.

“இனிமே உங்களை யாரும் கிண்டலடிக்க மாட்டாங்க, உங்க பிரச்சினை சரியாகிடுச்சு சரிதானே?” சொன்னவனை வெட்டவா குத்தவா என்று பார்த்து வைத்தாள் சத்யா.

“ஏற்கெனவே காலேஜ் முழுக்கப் பரப்பி விட்டுட்டு என்னமா பேசுறான்” என அவளுக்குக் கடுப்பாக இருந்தது.

‘சரி’ என்றவளாய் இன்னும் பேச்சை வளர்க்க கூடாது என்று அவள் அங்கிருந்து நகர முயல, வலிய போய் வம்பை விலைக்கு வாங்கி அவள் பெயரையும் தெரிந்து கொண்டான் கதிர்.

ஊர் பெரியவர் மகன் என்பதாலோ என்னவோ பிறருக்கு அறிவுரை சொல்வது கதிருக்குத் தண்ணிப்பட்ட பாடு. நாம் நல்லதுக்குத்தானே சொல்கிறோம் என்பதான சிந்தனை அவனது. அதில் தான் சத்யாவுக்கு அறிவுரை கூறினான்,

“உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன் மேடம், அந்தப் பையன் உங்க பிரண்ட் அவனைப் பார்த்தா சரியா தெரியல, எதுக்கும் கொஞ்சம் அவன் கிட்ட டிஸ்டன்ஸ் வச்சுப் பழகுங்க என்றதும் பொங்கி விட்டாள் சத்யா.

ஏய் நீ யாருடா எனக்கு அட்வைஸ் சொல்ல வரதுக்கு, எனக்கு எது நல்லது எது கெட்டதுன்னு தெரியும்.

நீ எல்லாம் எனக்கு அறிவுறை சொல்லணும்னு தேவையில்லை புரிஞ்சதா? நீ எவ்வளவு மோசமானவன்னு எனக்குத் தெரியும்?

நீ இன்னொருத்தனைப் பத்தி பேசுறியா? இன்னும் என்னென்ன சொல்லியிருப்பாளோ?… ஒரு நாளைக்கு எத்தனை கலவரம் தான் தாங்குவது எனப் புரியாமல் ஆர்த்தி அவளை

வா சத்யா, நாம போயிடலாம் சத்யா………எனப் பலவாறாகச் சமாதானம் கூறி, அவள் வாயை இனி மூடவே முடியாது என்றதும் தன் கையால் அவள் வாயை பொத்தி அரும்பாடு பட்டு அவளை அங்கிருந்து இழுத்துச் சென்றாள்.

கல்லூரி வாயில் வரை செல்லும் வரை அவள் கத்திக் கொண்டிருந்தது கேட்டு மிரண்டு போயிருந்தான் கதிர் அதில் அவள் பெயர் சத்யா என்று தான் அறிந்து கொண்டது கூட அவனுக்கு உரைக்கவில்லை.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here