15. காதலும் வசப்படும்

0
536
Kadhalum Vasapadum

அத்தியாயம் 15

இன்று…

[center]போகிற போக்கைப்[/center]

[center]பார்த்தால்,[/center]

[center]சூரியனைச் சுற்றி வரும்[/center]

[center]விண்துகள்களையும் கூட[/center]

[center]விரைவில்[/center]

[center]கைகளால் எண்ணி விடுவேன் போலும்[/center]

[center]கருவாயா!![/center]

[center]உந்தன் காதலிகளின் எண்ணிக்கை மட்டும்- என்னால்[/center]

[center]கணக்கிட முடியாதென்றே தோன்றுதடா[/center]

கதிரின் ஊருக்கு சத்யா வந்து (கடத்தி வரப்பட்டு என்று குறிப்பிட வேண்டுமோ?) பல வாரங்கள் கடந்திருந்தன. இன்னும் சில வாரங்களில் கல்லூரி லீவுகள் முடிய உள்ளதால் சென்னைக்கு அவள் திரும்பச் செல்ல வேண்டும். கதிர் தன் பெற்றோரோடு போனில் பேசுவதோடு சரி சத்யாவுக்கும் அவனுக்கும் இத்தனை நாட்களில் எந்தப் பேச்சு வார்த்தையும் இருக்கவில்லை. அப்படி அவன் என்ன சொல்லி இருப்பான் என்று அறிந்து கொள்ள அவள் மெனக்கெட வேண்டியும் இருந்ததில்லை. அவன் தொழில் முறை ஏற்பாடு முதல் உடல் நலம் வரையாகக் கதிரிடம் பேசிய எல்லாவற்றையும் சந்திராம்மா தான் சத்யாவிடம் ஒப்பித்து விடுவாரே?

எல்லா தாயைப் போலவும் தான் அவரும், மகனை உயர்ந்த நிலைமையில் பார்க்கும் ஆவல் ஒரு புறம் என்றால் கண்ணுக்கு முன்னால் வைத்து, வயிற்றுக்கு வஞ்சகமில்லாமல் சாப்பிட வைத்து பார்க்க வேண்டும் என்கின்ற ஆசை மறுபுறம்.

அவன் அப்பாருக்கு இருக்கிற சொத்துப் பத்துல்லாம் காப்பாத்துனாலே போதும் சக்திம்மா, ஆனா அவனுக்குத் தான் சொந்த கால்ல நிக்கணும்னு ஆசை. அதை எதுக்குக் கெடுக்கணும் இல்லியா? என்று கதிர் குறித்துப் பேசும் போதெல்லாம் நிறைவுறும் அவரது உரையாடல்கள்.

அவனுடைய அலுவலக வேலைகள் சிறப்பாக நடப்பதாக ஒரு முறை சென்னை சென்று வந்த சுந்தரம் கூறினார். மகனைப் பார்க்க தன்னை அழைத்துச் செல்லாதது குறித்துச் சந்திரா கொஞ்ச நேரத்திற்குக் கணவரிடம் கோபம் கொண்டிருந்தார்.

சத்யாவிற்கு அவை அனைத்தும் காணக் கிடைக்காத ஒன்றை கண்டாற் போலவே இருந்தது. இன்னும் கூட அவள் கதிரின் தந்தையிடம் சகஜமாகப் பழகாவிட்டாலும் தூர இருந்து அந்தத் தம்பதிகளின் செல்லச் சண்டைகள், வாக்குவாதங்கள் பார்த்து ரசிப்பாள். எவ்வளவு இனிமையான குடும்பம் என்று தோன்றும் போதெல்லாம் கதிரை அங்குப் பொருத்திப் பார்க்கவியலாமல் முரணாகத் தோன்றும்.

இவர்கள் நன்றாகத் தான் வளர்த்திருக்க வேண்டும் கதிர் ஒருவேளை நகரத்திற்கு வந்து கெட்டுப் போயிருப்பானாக இருக்கும் என்று தனக்குள் சமாதானம் செய்து கொள்வாள் அந்த அளவிற்கு அந்தத் தம்பதியர் மீது உயர்ந்த அபிமானம் தோன்றி விட்டிருந்தது.

கதிர் அவளிடம் சொன்ன மாதிரி எப்போதுமே கதிரின் பெற்றோர்கள் இந்தப் பெண்ணைதான் என் மகனுக்காகப் பார்த்திருக்கிறோம் என்று இங்கு வந்த நாள் யாரிடமும் கூறியதில்லை. கதிர் சும்மாவேணும் அவளைப் பயமுறுத்த சொல்லியிருப்பான் என்று எண்ணிக் கொண்டாள். ஏனென்றால், அந்தக் கிராமத்தில் முறைப்பையன் முறைப்பெண் என்று ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக் கொள்வதைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள்.

அத்தை, மாமன் முறை வரும் பிள்ளைகள் சிறு வயதாக இருந்தாலும் அவ உன்னைக் கட்டிக்கப் போறவதானே? நீ அவனைத் தானே கட்டிக்கப் போறே? என்று கிண்டலடித்துப் பேசுவது அந்தக் கிராமத்தின் சாதாரண வழக்கமாகவே இருந்தது.

அவளுக்கு அந்த அனாவசிய பேச்சுக்கள் எப்போதுமே மிகவும் எரிச்சலை மூட்டும். பள்ளிப் படிக்கும் குழந்தைகள் இந்தப் பேச்சு பேசுவது சரிதானா? திருமணம் புரிவது மட்டுமே வாழ்நாள் சாதனைப் போல எப்போதும் இதுவென்ன பேச்சு? என மனதிற்குள்ளாகப் பொருமினாலும், அவ்வூரில் விருந்தாளியாக வந்துவிட்டு வம்பை விலைக்கு வாங்க வேண்டாமென்று கண்டு கொள்ளாமல் சென்று விடுவாள்.

அதே நேரம் கராத்தே க்ளாஸில் அவள் முன்பாக யாராவது இப்படிக் கிண்டலடிப்பதை பார்த்தாளென்றால், அவர்களைத் தன் கண்களாலேயே எரித்துப் பஸ்பமாக்கி விடுவாள் என்பதால் இவளைக் கண்டாலே அப்படிப்பட்ட பேச்சுப் பேசாமல் அனைவரும் அமைதி ஆகி விடுவார்கள்.

கராத்தே க்ளாஸ் காரணமாகக் கிராமத்தில் நிறையப் பேருடனான நட்பு கிடைத்தாலும் வெளியூரிலிருந்து வந்திருக்கும் ஒரு பெண் கதிரின் வீட்டில் தங்கி இருக்கிறாள் என்பதிலேயே நிறையப் பேருக்கு பொறாமையும் உண்டு என்பதையும் சத்யா அறிந்துக் கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்தது.

நீ தான கதிர் மச்சான் வீட்டுக்கு வந்திருக்கிற மெட்ராஸ் பொண்ணு? என்று ஒரு நாள் வழி மறித்தனர் அந்தப் பெண்கள். மூவருமே அவளைப் போலவே பதின்வயது பெண்கள் தான் இயற்கை அழகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மிளிர்ந்துக் கொண்டிருந்தனர்.

ஆமாம் என்றவளாக இவள் தலையசைத்து பதிலளிக்க,

இங்க பாரு, நாங்க எல்லோரும் தான் அவங்களுக்கு முறைப் பொண்ணுங்க, என் பேர் ரதி, இவ சிவானி, அவ பேரு கருணா எங்க அத்தான் எங்க மூணு பேர்ல ஒருத்தங்களைத் தான் கட்டிப்பாங்க தெரியுதா? புதுசா சொந்தக்காரின்னு வந்திருக்க இதை உன் காதுல போட்டுட்டு போகணும்னு வந்தோம் என்று சொல்லி மிடுக்காகச் சென்று விட்டனர்.

அவள் தான் சென்றிருந்த வேலையை முடித்து விட்டு வீட்டை அடைந்த போது அதே மூவரும் சந்திராம்மா, சுந்தரம் அவர்களோடு முன்னறையில் வாயடித்தபடி அமர்ந்திருந்தனர். வாய் ஓயாமல் பேசும் அவர்களைப் பார்த்து ஆச்சரியத்தில் நகர்ந்தவளை தடுத்து, தன்னருகே அமர்த்திக் கொண்டார் சந்திரா. விடைப் பெறும் போது அவளருகில் வந்து ,

நான் சொன்னது நினைவிருக்கில்ல? என ரதி சத்யாவிடம் மிரட்டலாய் வாயசைவில் கேட்டு விட்டு நகர்ந்தாள்.

சந்திராம்மா மற்றவர்களிடம் பேசிக் கோண்டிருக்க அவர் கண்ணிலிருந்து இந்தச் சைகை மொழி தப்பி விட்டது. சத்யாவிற்குத் தன் சிரிப்பை அடக்க அவசரமாக வீட்டிற்க்கு உள்ளே போக வேண்டியதாயிற்று.

உள்ளறைக்குச் சென்று ஹ ஹா வெனச் சற்று நேரம் கண்ணில் நீர் வரச் சிரித்தவள்,

“கருவாயா உனக்கு மச்சம்டா… லட்டு லட்டா பொண்ணுங்க சொந்தத்தில இருக்காங்க……அதிலயும் அவங்க உனக்காக க்யூல நிப்பாங்க போலியே, ஹய்யோ ஹய்யோ”

என ஆசைத் தீர சிரித்து முடித்தவள் மறு நேரமே அவர்களுக்காக வருத்த பட்டாள்.

அவனுக்கு எத்தனை கர்ள் ப்ரண்டோ எண்ணிக்கை தெரியலை, அதில இதுங்க மூணும் லைன்ல நிக்குதுங்க சலித்துக் கொண்டவளுக்கு மனக்கண்ணில் கதிர் குறித்த சம்பவங்கள் பல ஞாபகம் வர எரிச்சல் மூண்டது.

அவனின் கள்ளத்தனங்களை எல்லாம் கண்டு பிடித்துக் கொடுத்து அவனை அவன் பெற்றோர் முன்பாக வெளிப்படுத்தித் தண்டனை வாங்க்கிக் கொடுக்க வேண்டுமென்ற ஆசை இன்னும் கூட இருந்தது. அதனால் தான் எப்போதாவது கதிரின் அறையைத் திறந்து ஏதாகிலும் வைக்கச் செல்லும் போதெல்லாம் ஒவ்வொன்றாக ஆராய்ந்துப் பார்ப்பாள். ஒன்றும் அகப்படாததால் அவனுடைய மடிக்கணிணியை ஆராய்ந்தால் நிறைய விபரம் கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால், அதுவரை அதற்கு மட்டும் அவளுக்கு வாய்ப்புக் கிடைக்காமல் இருந்தது.

அன்று ஒரு அவசர வேலையாக வந்த சுந்தரம் சத்யாவிடம் கதிரின் மடிக்கணினியை இயக்கி தனக்குத் தேவையான ஒர் விபரம் தரச் சொல்லிக் கேட்டார்.

இதுதான் சந்தர்ப்பம் என்றெண்ணியவளாக மடிக்கணிணியை இயக்கியவளுக்கு உள்ளுக்குள் ஏராளமான ஃபைல்கள் இருக்க, தான் தேடிய விபரம் எந்த ஃபைலில் இருக்கும் என அறியாமல் விழித்தாள். சுந்தரம் அப்போதே தன் மகனிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு அது குறித்து விபரம் கேட்க, சத்யா கதிர் தன்னிடம் பேசி விபரம் தெரிவிப்பானென்று எண்ணிக் கொண்டாள். அவனோ தான் விபரத்தை தந்தைக்கு மெசேஜ் மூலமாக அளிப்பதாகச் சொல்லி அழைப்பை துண்டித்தான்.

தன்னிடம் பேச விருப்பமில்லாமல் தான் அவன் அப்படிச் செய்திருக்க வேண்டும் என்று எண்ணியவளுக்கு அது வேதனையாக இருந்தது. தன்னையே ஆராய்ந்துக் கொண்டிருந்தவளுக்குத் தான் எதற்காகக் கதிரிடம் பேச ஆசைப்படுகிறோம்? அவன் தன்னிடம் பேசாததும் வேதனைக் கொள்கின்றோம் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.

அவன் பெற்றோர்களை அறிந்த நாள் முதலாக அவன் மீதான நல்ல எண்ணங்கள் வந்திருப்பது குறித்துப் பயமாக உணர்ந்தாள். அவன் நல்லவனில்லை எனத் தன் மனதிற்குள்ளாக உரு போட்டவாறே இருந்த நேரத்தில் சுந்தரம் கதிர் அனுப்பிய தனது மொபைலின் செய்தியைக் காட்ட அதன் படி தேடி விபரத்தை ப்ரிண்ட் எடுத்துக் கொடுத்தாள்.

அவர் அந்தப் பக்கம் நகர்ந்ததும், சத்யா அந்த மடி கணினியை அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்து பார்த்துக் கதிருக்கு எதிரான ஆதாரம் தேடினாள். அவன் வேலைச் சார்ந்த தகவல்கள் மற்றும் வயல், தோட்டம் இவற்றின் வரவு செலவுகள் மட்டுமே இருக்க ஒன்றும் கிட்டாமல் சோர்ந்துப் போனாள்.

அவன் கைப்பேசியிலாவது அவள் புகைப்படம் இருந்தது. மடிக்கணினியில் தவறாகச் சொல்லும் படி ஒன்றும் கூட இல்லை, சாமார்த்தியமானவன் தான் என்று எண்ணிக் கொண்டாளே தவிர அணுவளவும் கூட அவன் தவறானவன் அல்ல என அவளுக்குத் தோன்றவில்லை. கதிர் மேல் அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை.

சக்திம்மா என்ற அழைப்பிற்குத் தாயைத் தேடும் கன்றாக மடிக்கணினியை பத்திரப்படுத்தி விட்டு ஓடிச் சென்றாள். அது அவளுக்குச் சந்திராம்மா தலைப் பின்னி விடும் நேரம். இவர்கள் பாசப் பிணைப்பு கூடிக் கொண்டு சென்றதே தவிரக் குறையவில்லை. அவ்வப்போது மனைவியையும் சத்யாவையும் நின்று பார்க்கும் சுந்தரம் புன்முறுவலோடு நகர்ந்து சென்று விடுவார்.

சுத்தமான நீரும், சுகாதாரமான சுற்றுப்புறமும் அதன் கூடவே பாசமான கவனிப்பும் அவளது மேனியில் பளபளப்பையும், முதுகு வரை இருந்த அவள் கூந்தல், இப்போது இடுப்பு வரையிலும் வளர்ந்திருந்தது. உயரமான திண்டில் அமர்ந்திருந்த சந்திராம்மாவின் முன் பலகையைப் போட்டு அமர்ந்துக் கொண்டவள் தன்னுடைய கருப்போ வெள்ளையோ அல்லாத புது நிறமெனச் சொல்லப்படும் சருமத்தை சந்திராம்மா கையைப் பிடித்து வைத்துப் பார்த்துத் திருப்தியில்லாமல் உதட்டை பிதுக்கிக் கொண்டாள்.

நீயும் சிவாஜி படத்தில வர்ற ரஜினி மாதிரி என்னவெல்லாமோ செஞ்சுப் பார்த்தாச்சு இல்ல சக்திபிள்ள… எனச் சந்திராம்மா கிண்டலடிக்கவும், பாலேடு, எலுமிச்சைப் பழம் எனக் கடந்த நாட்களில் எத்தனையோ செய்து தோல்வியைத் தழுவியிருந்த சத்யா சிணுங்கிக் கொண்டாள்.

அவள் தலையைப் படிய படிய எண்ணைத் தேய்த்து, சிக்கெடுத்துக் கொண்டிருந்தவர்,

“என் சக்திம்மாக்கு என்ன குறை, குண்டு குண்டா ரெண்டு கண்ணு, குட்டி மூக்கு, செப்பு வாய் அழகா இருக்கடா”

என்றவரிடம் அந்த ரதி வந்தாங்களே……

அவ உன் வயசுதான் என் ஒன்னுவிட்ட தம்பி மவ, ங்க்க போட்டு பேச வேணாம், வா போன்னே சொன்னா போதும்….சரி ரதிக்கென்ன?

அந்த ரதி, சிவானி, கருணா இவங்கெல்லாம் என்னா கலரு இல்ல அத்தம்மா?!! மாடல் அழகிகள் தோத்தாங்க போங்க…

“அழகெல்லாம் நிறத்தில இல்ல சக்திம்மா, அது மனசுல தான் இருக்கு” எனப் புரிய வைக்க முயல

ம்ம்ம்…என இழுத்தவள் நீங்களும் கூட வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கீங்க தெரியுமா அத்தம்மா? எனத் திரும்பி அவரது நாடியப் பிடித்துக் கொஞ்சினாள். சட்டென விட்டவள் அக்கம் பக்கம் பார்த்தவாறு கேலியாக,

“யாரது என் பொண்டாட்டியை கொஞ்சறதுன்னு மாமா திட்டுவாங்களோ ன்னு தான் விட்டேன்” என்று சொல்லி கண்ணடித்தாள்.

அட வாலு, என் கிட்ட எவ்வளவு வாய் பேசற. இதுவே உங்க மாமா பார்த்ததும் ஆமை ஓட்டுக்குள்ள நுழைஞ்சுக்கிற மாதிரி ஒளிஞ்சிக்கிற?! எனக் கேட்டவருக்கு மழுப்பலாகப் பதிலுரைத்தாள்.

பேச்சு தொடர்ந்து கொண்டிருக்கப் பழைய சம்பவம் குறித்துத் திரும்பியது.

சரி ரொம்ப நாளா உன் கிட்ட கேட்கிறதா இருந்தேன்…

முடியை இழுத்துப் பின்னுபவரிடமிருந்து கழுத்தைப் பாதுகாத்துக் கொண்டு,

“சொல்லுங்க அத்தம்மா. என்றாள்.

சரி அன்னிக்கு அந்தச் சின்னப் பிள்ளைய நாசமாக்க அந்தப் பையன் நிக்கிறான், எனக்கு முன்னாடியே நீ அதைப் பார்த்திட்ட தானே? போயி ரெண்டு போடு போட்டு ஆளை இழுத்துட்டு வருவன்னு பார்த்தா கல்லு மாதிரி சமைஞ்சு நிக்கிற. ஊருக்கே கராத்தே சொல்லிக் கொடுக்கிற பொண்ணு நீயி. துணிச்சலா நிக்க வேணாமா? இப்படியா பிடிச்சு வச்ச பிள்ளையாரு மாதிரி நிப்ப?

சொல்லிக் கொண்டே சென்றவர் பின்னலையும் பின்னி முடித்து விட்டு பதிலே வரவில்லையே எனக் குனிந்து சத்யாவின் முகம் பார்க்க அவள் வேர்த்து விறு விறுத்து, முகம் கருக்க ஒடுங்கி அமர்ந்திருந்தாள்.

சக்திம்மா… அழைத்தவரிடம் கேவலோடு மடியில் சாய்ந்தவள் இன்றே தன் மனத் துயரம் அனைத்தும் ஆற்றிக் கோள்பவளைப் போல அழவாரம்பித்தாள்.

எவரிடமும் பகிரப்படாத புரையோடிப் போயிருந்த காயங்கள் ஒவ்வொன்றாய் வெளிவரத் தொடங்க அவற்றின் வீச்சால் அதிர்ந்து போன சந்திராம்மா தேம்பி தேம்பி அழுதுக் கொண்டிருந்தவளை தாங்கிக் கொண்டு அத்தனையும் உள்வாங்கிக் கொண்டிருந்தார்.

தேடிய அன்னையின் மடியில் துயரங்கள் சமர்ப்பித்த பின்னராவது சத்யாவின் உள்ளத்தில் தன்னம்பிக்கை எனும் மாற்றம் வருமா? பார்க்கலாம்

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here