16. காதலும் வசப்படும்

0
521
Kadhalum Vasapadum

அத்தியாயம் 16

அன்று………

[center]நீ திட்டுகையில் எல்லாம்[/center]
[center]மூக்கின் நுனியில் நிற்கும் (?!)[/center]
[center]எந்தன் கோபம்[/center]


[center]இப்போது நான் வரட்டுமா?[/center]
[center]என்று கேட்கத்தான் செய்கின்றது.[/center]

[center]நானோ புறங்கையால் அசைத்து[/center]
[center]அலட்சியமாய்த் தடுத்து விடுகின்றேன்.[/center]

[center]அதெப்படி என்னை நானே[/center]
[center]கோபித்துக் கொள்வதாம்?[/center]மேலும் ஒரு வாரம் ஆகிவிட்டிருந்தது கதிரும் சத்யாவும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துச் சந்தித்துக் கொள்ளும் படி சந்தர்ப்பம் அமையவில்லை. ஆனால், இருவரும் ஒவ்வொரு விதமாகப் பாதிக்கப்பட்டிருந்தது என்னவோ நிஜம்.

சத்யாவுக்கு அன்றைய தினம் தான் மன அழுத்தத்தின் வெளிப்பாடாக வெடித்துச் சிதறியது குறித்து வெகுவாக அவமானமாக உணர்ந்தாள். கதிர் ஒருவேளை அவளைச் சந்திக்க வராதிருந்தால் எப்படியாவது வீட்டிற்கு வந்து தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டிருந்திருப்பாளாக இருக்கும். ஆனால், காலை முதலாக அவள் எதிர்பார்த்த ஒன்றும் நிகழாமல் ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பிரச்சனை வரிசைக் கட்டி வரவும் மன அழுத்தம் கூடிப் போய் உள்ளுக்குள் பொங்கிக் கொண்டிருந்தவளை வலிய பேசி கதிர் தான் சீண்டி விட்டு விட்டான்.

அதற்கடுத்த நாள் அவள் வெட்கமுற்று தலை குனிந்தே வரவும் அவள் எதிர்பார்த்த வண்ணம் எதுவும் நிகழாமல் எல்லோரும் சகஜமாகப் பேசவும் உள்ளுக்குள் எழுந்த ஆச்சர்யத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

ஆர்த்தியும் கூட அவள் மன நிலை அறிந்து அன்றைய நிகழ்வு எதையும் பேசவில்லை. ஆனால், அவள் கதிரை திட்டித் தீர்க்கும் போது உணவகத்திலிருந்த ஊழியர்களும், சில மாணவர்களும், கல்லூரி வாயில் செக்யூரிடியும் குறித்து இன்னும் மனதில் நெருடிக் கொண்டிருக்கச் சில நாட்கள் அங்கு வருகையில், செல்கையில் தலைக் குனிந்தே சென்று வருவாள்.

அவளைப் பொறுத்தவரையில் தான் அநாகரீகமாக நடந்து கொண்டோம் என்கின்ற உணர்வே அன்றிக் கதிரை அவ்வாறு திட்டியது தவறு என்றே தோன்றவில்லை. அவனைப் பற்றித் தான் அறிந்துக் கொண்டவையெல்லாம் அவனைக் கயவனாகவே காட்டியிருந்ததே.

கதிராம் கதிர் பேரைப் பாரு. தன் இஷ்டம் போல அலையுறவன், சின்னப் பிள்ளைன்னு கூடப் பார்க்காதவன் இவனுக்கு இவ்வளவு நல்ல பேரா? அவனுக்கு உடம்பெல்லாம் கெட்டப் புத்தி இல்லன்னா அந்தக் காட்டுக்குள்ள போய் ஒரு பொண்ணு கூடச் சில்மிஷம் பண்ணுவானா? எனத் தன் மனதிற்குள்ளாகப் பொருமிக் கொண்டாள். அவனைக் குறித்து எண்ணும் போதே அருவருப்பாக உணர்ந்தாள்.

ஏனோ தன் மனதில் இருப்பதைத் தோழி ஆர்த்தியிடம் கூடச் சொல்லவில்லை. தான் ஆசிரமத்தில் வளர்ந்தவள் என்று சற்று மேலோட்டமாகச் சொல்லியதோடு சரி ஆர்த்தியிடம் கூடத் தன் மனம் திறந்து தன் பயங்கள், வேதனைகள் குறித்துப் பகிர்ந்திருக்கவில்லை அப்படியான அழுத்தமான குணம் அவளுடையது. அது போலவே கதிர் விஷயத்தையும் மனதிற்குள்ளே வைத்துக் கொண்டாள்.

அவளுக்குள்ளாக வியாபித்திருந்தது எல்லாம் பயம், பயம் பயம் மட்டுமே. தன்னைக் கார்டியனாக இருந்து பாதுகாக்கும் ஹரீஷ் அங்கிளிடம் கூட அவள் ஒரு இடைவெளி விட்டே பழகுவாள். ஒவ்வொரு நாளும் தன் கண்ணில் கதிர் பட்டுவிடக் கூடாது என்று இறைவனிடம் வேண்டுதல் வைத்துவிட்டே வீட்டை விட்டு புறப்படுவாள்.

கெட்டதிலும் நல்லதாக அந்தச் சண்டைக்குப் பிறகு யாரும் சத்யாவை கிண்டலடிக்கத் துணியவில்லை. அதனால் ஆசுவாசமாக உணர்ந்தாள். ஆண், பெண் உறவு எந்த அளவுக்கு நம் நாட்டில் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்று வைத்திருக்கின்றனரோ அதற்கு மாறாகவே அந்த விஷயத்தைக் குறித்துச் சுவாரஸ்யமாகப் பேசவும் தவறுவதில்லை.

வாழ்வில் சாதிக்க எத்தனையோ இருக்க, காதல் காதல் என்று ஊடகங்களும், கலைத்துறையும், புத்தகங்களும் இளம் வயதிலேயே மக்களைக் கற்பனை உலகில் அமிழ்த்தி விடுகின்றது. என்னவோ காதலை தவிர்த்து உலகில் ஒன்றுமே இல்லையென்பது போலப் பெரும்பாலான மக்கள் வழி பிறழ்வது நிகழ்கின்றதென்றால், ஒரு சிலர் காதல் என்பதே காமம் தான் என முடிவுக்கே வந்து தவறான வழிகளில் எல்லாம் ஈடுபட்டு விடுகின்றனர்.

இவற்றையெல்லாம் தாண்டி வருகின்றவரே வாழ்வில் வெற்றிக் கொள்கின்றார்கள் என்று பலவிதமான எண்ணங்கள் அலை மோத அன்று ஆர்த்தி வகுப்பிற்கு வராததால் தனிமையில் அந்த மரத்தின் கீழ் நின்று கொண்டிருந்த சத்யாவின் அருகில் தன் நண்பனோடு கூட வந்து பேச ஆரம்பித்தான் கிஷோர்.

சிரிக்க, சிரிக்க அவனோடு பேசியதில் மனதின் சஞ்சலங்கள் காணாமல் போவதை உணர்ந்தாள். கிஷோரும் அவன் நண்பன் துஷாரும் மிகக் கலகலப்பானவர்களாக இருந்தனர். சத்யாவின் வகுப்புத்தோழிகளும் அங்கு இணைந்து கொள்ளச் சில நேரம் பேசி விட்டு கிஷோர் மற்றும் துஷார் விடைப் பெற்றுச் சென்றனர்.

கதிருக்குச் சத்யா தன்னை அனைவர் முன்னாலும் திட்டிக் கொண்டு சென்றது குறித்து ஸ்தம்பித்துப் போயிருந்தான். மனதில் தோன்றியதைக் கூறி அந்தப் பெண்ணை எச்சரிக்க வேண்டும் என்று தோன்றியதே தவிர அவன் தவறாக எதுவும் சொல்லியிருக்கவில்லை. அவளது தோழி சத்யா சத்யா என்று அவளைக் கட்டுப்படுத்த எண்ணுகையில் தான் அவள் பெயர் சத்யா என்றே அவன் அறிந்து கொண்டான்.

அவளுக்கு ஏன் தன்னைக் கண்டாலே வெறுப்பாக இருக்கிறது? என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் தன்னைத் திட்டியது தெரிந்தாலும் கூட அவள் மேல் ஏனோ அவனுக்குக் கோபம் வரவில்லை. காலையில் அத்தனை வீராப்பாய் தன்னிடம் பேச வந்தவள் தானும் அவளும் அந்தப் புதரில் விழ நேர்ந்த போது காட்டிய முகப் பாவமே அவன் மனதில் நின்றது.

அந்த குழந்தை முகம் அதில் தெரிந்த பயம் அதை அவன் புரிந்து கொண்டான். என்ன அவளுக்கு ஒரு 18 வயது இருக்குமா? அவள் பேச்சை எல்லாம் தான் பெரிது படுத்துவதா? என எண்ணினான். மற்ற மாணவர்கள் தன் பெயரைச் சொல்லி கிண்டலடித்தது குறித்து அவளுக்குத் தன் மேல் வெறுப்பு என்று எண்ணிக் கொண்டான். அவனே கூட அவர்கள் ஊர் பெண்களை யாராவது கிண்டலடித்தால் எத்தனையோ முறை பக்கத்து ஊர் பையனே ஆனாலும் சென்று முகரையைப் பெயர்த்து விட்டு வந்திருக்கிறானே.

சுந்தரம் இந்த அடிதடி விஷயத்தை எப்போதுமே அங்கீகரிக்க மாட்டார். அவரைப் பொருத்தவரை பேச்சு வார்த்தையில் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு என்பார். அப்பா அஹிம்சாவாதி என்றால் அம்மா தீவிரவாதி, ‘என் பையன் சரியா தான் செஞ்சிருக்கான் கூப்பிட்டு பேச்சு வார்த்தை நடத்த இதென்ன சொத்து பிரச்சனையா? பொண்ணு பிரச்சனை’ என்று நொடித்தவாறே கணவனிடம் திட்டு வாங்கும் மகனை அழைத்துச் சென்று விடுவார்.

‘ரொம்பவெல்லாம் அடிக்கக் கூடாது மகனே, பயம் வர்ற வரைக்கும் தான் அடிக்கணும். எந்தப் பொண்ணையாவது தப்பா பார்த்தா பேசினா அடி விழுகும்னு புரியுர மாதிரி இருக்கணும் அப்போதான் அடுத்தத் தடவை அந்தத் தப்பை செய்ய மாட்டான்’ என்பார் சந்திரா.

ஒரு வாரம் அவனும் அவள் பக்கமே போகாமல் இருந்தான் அப்போது தான் அன்று தனியாகச் சத்யா அந்த மரத்தடியில் நிற்பதைக் கவனித்தான். தன்னைத் தானே தனிமைச் சிறையில் அடைத்துக் கொண்டிருக்கும் அவளைப் பார்க்க அவனுக்கு வினோதமாகத் தான் இருந்தது. அவளை முதன் முறையாகக் கவனிக்க ஆரம்பித்தான்.

எளிமையான உடை, எந்த அலங்காரமும் இல்லாமல் கூட அந்தக் கண்மணிகள் வைரங்களாக ஜொலித்துக் கொண்டிருந்ததை ரசித்தான். ஒருவர் கண்களைப் பார்த்தாலே அவரது குணத்தை மதிப்பிட்டு விடலாமாம் ஏனென்றால் கண்கள் தான் ஒரு மனிதன் குணத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள். அவள் கண்கள் கதிருக்கு வெள்ளந்தியான ஒரு குழந்தையை நினைவு படுத்தியது. அந்த அழகிய பெரிய கண்களில் வெளியே தெரியாத அளவில் தவிப்பும், மிரட்சியும் கலந்திருந்தன, சின்னஞ்ச்சிறு அந்த முகத்தில் குட்டி மூக்கும், செப்பு வாயும் வெகு வசீகரமாய் இருந்தன. தனிமையில் என்ன செய்வது எனப் புரியாமல் அவள் நின்று கொண்டிருக்க, வெறுமையான அவளது முகத்தில் முறுவல் வந்து சேர்ந்ததைக் கவனித்தான்.

அந்த முறுவலின் காரணம் அறிந்த போது கதிரின் முகம் புன்னகையைத் தொலைத்தது. மனதிற்குள்ளாக எப்போதும் தோன்றாத அவஸ்தையொன்று ஏற்பட்டது. கிஷோரை அவளருகே நெருங்க விடக் கூடாது என்று அவன் மனம் முன் போலவே முரண்டு பிடித்தது. தான் எதற்காக அவ்வாறு எண்ணுகின்றோம்? தனக்கு அவளைப் பிடித்திருப்பதாலா? இல்லை தன்னிடம் சிடுசிடுப்பவள் மற்றொருவனிடம் சிரித்துச் சிரித்துப் பேசுவதா? என அவனால் வரையறுக்க முடியவில்லை.

தனக்கு ஏதோ நெருடலாகத் தோன்றுவது குறித்துச் சிந்தனையில் ஆழ்ந்தவன் சத்யாவிடம் சென்று அறிவுரைச் சொல்வது விழலுக்கு இறைத்த நீர்தான். சின்னப் பிள்ளைத்தனமாகத் தான் சொல்வதையெல்லாம் எதிர்ப்பதொன்றே வேலையாக வைத்திருக்கிறாள். அதை விடுத்து கிஷோரை கவனிக்க முடிவு செய்தான். அவனிடம் ஏதோ ஒரு செயற்கை தன்மை இருப்பதை உணர்ந்ததால் வந்த எண்ணம் அது.

தொடர்ந்து கவனித்ததில் எப்போதுமே கிஷோர் சத்யா தனித்திருக்கையில் மட்டுமே அவளருகே செல்வதைக் கவனித்தான். கிஷோர் சத்யாவிடம் வலிய நகைச்சுவையாகப் பேசுவதையும் அவளைச் சிரிக்க வைப்பதையும் உணர்ந்தான். சாதாரணக் கல்லூரி நண்பன் போல அவன் பழகவில்லை என்றே கதிருக்கு புரிய வந்தது. பெரும்பாலும் கலகலவெனப் பேசும் ஆண் நண்பர்களைப் பெண்களுக்கு மிகப் பிடிக்கும். நிறைய நேரங்களில் அவர்களின் கலகலப்பின் முகமூடிக்கு பின்னே இருக்கும் கசடுகளை அறிந்து கொள்ளாமல் அவர்கள் நம்பி ஏமாறுவதும் உண்டு,

மனிதன் குணத்தைக் கண்டு பிடிக்க வேண்டுமா? தன்னியல்பில் கோபம், வருத்தம், சிரிப்பு , அழுகை எனத் தன் எண்ணங்களுக்கு ஏற்ப இருப்பவனெ இயல்பான மனிதன். அதை விடுத்து எப்போதும் சிரிப்பை செயற்கையாகவேணும் முகமூடியாக அணிந்திருப்பவன் பெரும்பாலும் காயம் பட்டவனாகவோ, அல்லது காரியவாதியாகவோ இருக்க வாய்ப்பு அதிகம். விறைப்பாக எந்நேரமும் இருப்பவன் முன்னெச்சரிக்கை வாதி. குழைவாக இருப்பவன் சந்தர்ப்பவாதி, இன்னும் எத்தனையோ தொடர்ந்து சொல்லலாம்.

இவை அனைத்தும் தன் பட்டறிவால் அறிந்திருந்த கதிருக்கு கிஷோரை எவ்வளவு கவனித்தும் அவனது செயலின் காரணம் புரியவில்லை. அவனுக்கும் சத்யா, ஆர்த்திக்குமான நட்பு இறுகிக் கொண்டே சென்றது. துஷார் எப்போதாவது அவர்களோடு கலந்து கொள்வதும் உண்டு.

சத்யா ஹாஸ்டலில் தங்கியிருப்பது தவிர அவனுக்கு வேறு விபரங்கள் தெரியவில்லை. அவளது குடும்பத்தினர் எங்கே இருக்கின்றனர்? என்பதெல்லாம் விசாரிக்கும் எண்ணம் அவனுக்குத் தோன்றிற்று. ஒருவேளை தன் பேச்சை கேளாதவள் தன் குடும்பத்தினர் பேச்சைக் கேட்பாள் என்று எண்ணி விசாரிக்க எண்ணினான். ஆனால், யாரிடம் போய் விபரம் கேட்கவெனப் புரியவில்லை. இறுதியில் அவன் போய் நின்றது அவனது சனீஸ்வர நண்பனான சச்சினிடமே.

இப்போதெல்லாம் அவன் நண்பர்கள் அவனுக்கும், சத்யாவுக்கும் காதல் என்று எண்ணிக் கொள்வதை அவ்வப்போது சீண்டுவதை அவன் கண்டு கொள்வதில்லை. சொன்னால் சொல்லி விட்டுப் போகட்டும் என்று விட்டு விட்டான். கேட்கவும் சுகமாய் இருந்து தொலைக்கிறதே என்ன செய்வதாம்?

சத்யாவைப் பற்றி விபரம் கேட்டதும் சச்சின் அவனை மேலும் கீழுமாய் ஒரு பார்வைப் பார்த்தான். காதலியின் விபரத்தை அவளிடம் கேட்காமல் என்னிடம் இருந்து எதற்குக் கேட்டறிய முயலுகிறான்? என்று எண்ணினான் ஆனால் வெளிப்படுத்தவில்லை. கதிர் சதீஷை போட்ட போட்டிலிருந்து உள்ளுக்குள்ளாகக் கதிர் மீது எல்லோருக்கும் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை ஏற்பட்டு விட்டது.

அவளுக்குச் சொந்தமென்று யாருமில்லை. ஒரு கார்டியன் இருக்கிறார் அவர்தான் எல்லாம் பார்த்துக் கொள்கிறார். அவர் தற்போது இருப்பது புதுத் தில்லியில் என்று சச்சின் மூலம் வந்த தகவல் பார்த்து அவள் பால் இன்னும் கரிசனை கூடியது.

அவளுக்குப் பெற்றோர் இருந்தால் அவளது பிரச்சனைகளைச் சுமூகமாக முடிக்க அவர்கள் உடன் வருவார்கள். அவளோ மற்றவர் பாதுகாப்பில் வாழ்ந்து வருகிறாள். இந்த நேரத்தில் இவனாக எதையாவது செய்யப் போக அவளுக்கு அவள் படிப்பிற்கு, எதிர்காலத்திற்குப் பாதிப்பு வந்து விடக் கூடாதே என்றெண்ணியவன் எதற்கும் தன்னிடம் இருக்கட்டும் என்று ஹரீஷ் சவுஹான் அலைபேசி எண்ணை பிறகொரு நாள் அவரிடம் தான் பேசப் போகிறோம் என்றறியாமலே பதிந்து கொண்டான்.

தன்னவளின் தன் மீதான வெறுப்பையும் கண்டு கொள்ளாதவனாகத் தானே அவனுக்குக் காவலனாக முடிவு செய்து விட்டிருந்தான். அதற்கு ஆயத்தமாகத் தன்னுடைய மானம், வெட்கம் என்கின்ற அத்தனை தேவையில்லாத வஸ்துக்களையும் கழற்றி வைத்து விடத் தீர்மானித்து விட்டான்.

கோபமும் சுடுசொற்களுமே ஆயுதமாய் வைத்திருக்கும் சத்யாவை கதிர் தன் அக்கறையால் வெல்வானா? பார்க்கலாம்.


[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here