21. காதலும் வசப்படும்

0
529
Kadhalum Vasapadum

அத்தியாயம் 21

அந்தக் கிஷோர் அவன் ப்ரெண்ட் துஷார் இவங்க ரெண்டு பேருக்கும் எத்தன வயசு இருக்கும்னு நீ நினைக்கிற?

கிஷோரை அடித்தது நீ தானா? என்ற கேள்விக்கு ஆம் என்று சொல்வான் அல்லது இல்லையென்று மழுப்புவான் என்று எண்ணியிருக்க, சம்பந்தமே இல்லாமல் அவன் கேள்வி கேட்க ஒன்றும் புரியாது திருத் திருவென முழித்தாள் சத்யா.

பதில் சொல்லு… அவன் ஊக்குவிக்க,

இடையில ரெண்டு மூணு வருஷம் வீட்டுல ஏதோ பிரச்சனையால படிக்கலைன்னு சொன்னான் அப்படின்னா 20 இல்லன்னா 21 வயசு இருக்கும் என்றாள் ஏதோ மனக்கணக்கு போட்டபடி…

ம்ம்ம்….

தன் பதிலுக்காகவே தன் முகத்தை நோக்கிக் கொண்டிருப்பவளையே பார்த்தவன், கிஷோருக்கு வயசு 32, துஷாருக்கு 30 எனவும் சத்யாவின் முகம் அஷ்ட கோணலாக மாறிற்று.

அந்த மைதாமாவு முகமும், வளர்த்தியாய் இருந்தாலும் மெலிந்த உடல்வாகும் வயது 20க்கு மேல் இருவரையும் எண்ண விடவில்லையே என்றவளாய் புருவம் நெரிக்க,

“அது சரி அவர்கள் வயது என்னவானால் இவனுக்கு என்ன? அதற்கு எதற்கு இவன் கிஷோரை அடிக்க வேண்டும்?, துஷார் எங்கே என்று தகவலே இல்லையாம். அவனை எங்கே இவர்கள் காணாமல் ஆக்கினார்களோ தெரியவில்லையே?” எனக் கேள்வி எழுந்தது.

அவளது சிந்தனையைக் கவனிக்காதவனாகக் கதிர் தொடர்ந்தான்.

உனக்கு இந்தியாவின் மிகப் பெரிய கள்ள மார்க்கெட் அல்லது வணிகம் என்னன்னு தெரியுமா சத்யா?

என்ன?

Human trafficking அதாவது மனித கடத்தல். ஒரு பொருளைப் போலக் குழந்தைகளும், பெண்களும் விற்கப்படும் வாங்கப்படும் வணிகம் தான் இந்தியாவின் மிகப் பெரிய கள்ள வணிகம்.

திகைப்பில் விழி விரித்தவளை பார்த்தவாறு தொடர்ந்தான்.

உன்னால் இதனை நம்ப முடியவில்லை இல்லையா?

இல்லை எனத் தலையை அசைத்தாள்.

இதுதான் உண்மை சத்யா. நாமெல்லாம் பொருளாதாரத்தில், அறிவியலில், வளர்ந்துட்டோம்னு பெருமை பேசிக் கொண்டாலும் நமக்குத் தெரியாத ஒரு உலகம் இருக்கிறது. அது மிகவும் வக்கிரம் நிறைந்ததாக, மனித தன்மை அற்றதாக இருக்கிறது. மனித கடத்தல் எனும் இந்த வணிகத்தின் நோக்கங்கள் ஏராளம். ஒருவரின் உடல் உறுப்புக்கள் அதாவது கிட்னி, லீவர் போன்ற பல உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்காகவோ, அல்லது ஒரு வீட்டின் அல்லது தொழிலின் வேலைகள் அனைத்தும் செய்து கொடுக்கப் பணியாளராகவோ, அல்லது விபச்சாரத்திற்காகவோ, அல்லது பிச்சை எடுப்பதற்காகவோ இந்த அடிமைகள் தேவைப் படுகின்றார்கள்.

ஏற்கெனவே வாழ்க்கையின் சில கருப்புப் பக்கங்களைப் பார்த்தவளாகினும் சத்யாவிற்கு இந்த உண்மைகள் அதிர்ச்சியே… கதிர் தொடர்ந்தான்.

இந்த வியாபாரத்தின் மூலப் பொருட்களை அதாவது குழந்தைகள், ஆண்கள் மற்றும் பெண்களைக் கடத்திச் செல்வதற்கு எத்தனையோ முறைகள், எத்தனையோ வழிகள் வைத்திருக்கிறார்கள். சிறு சிறு குழுக்களாகச் செயல் படுகிறார்கள். நம் மக்களோடு மக்களாய் இருக்கும் அவர்களைக் கண்டு பிடிப்பது மிகவும் கடினம்.

ம்ம்…

மனிதாபிமானமே இல்லையா? என எண்ணும் அளவுக்கு நம் நாட்டில் ஏராளமான விஷயங்கள் நடக்கின்றது என்பதை நானும் இப்போது தான் அறிந்து கொண்டேன்.

நான் கிஷோர், துஷார் பற்றிக் கேட்டால் இவன் வேறெதுவோ கதை சொல்கிறானே? அத்தம்மா மகனும் அவங்களைப் போலவே லூஸ் டாக் தான் என்று அவள் கடுப்பாக எண்ணிக் கொண்டிருப்பதை அறியாதவனாகத் தான் தெரிந்து கொண்டது அனைத்தும் சொல்லி முடிக்கும் வண்ணம் அவன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

பெண் சிசு கொலைகள் அதிகமாய் நடந்து திருமணத்திற்குப் பெண்கள் இல்லாமல் திண்டாடும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் சமைக்க, பெருக்கப் போன்ற வீட்டின் வேலைகளைச் செய்யவும், ஒருவருக்கும் மேலான வீட்டின் அனைத்து ஆண் மக்களின் பாலியல் தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்காகவும் மலர்ந்தும் மலராத பல பதின் வயது பெண்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடத்தப் படுகின்றார்கள்.

தன் சிந்தனைகளிலிருந்து விலகி, கதிரின் பேச்சைக் கேட்டவளுக்கு அதைக் கேட்கவே நாராசமாக இருக்கத் தலையைக் குனிந்துக் கொண்டாள். கலாச்சாரம், கலாச்சாரம் என்று கூவும் இந்தியாவின் மறுபக்கம் வெகு அழுக்கானது என்று அருவருத்தாள். ஒரு சிறு பெண் ஒரு வீட்டின் அனைத்து ஆண்களின் பாலியல் தேவைக்கா? உவ்வேக் மனதில் எழுந்த அருவருப்பை என்ன சொல்வது?

ராஜஸ்தானில் அப்படிப்பட்ட சிறு பெண்களுக்கான வருடாந்திர ஒப்பந்தங்கள் லட்சங்களில் ஆரம்பிக்கின்றது சத்யா. அந்தச் சிறு பெண்கள் தங்களை லட்சங்கள் கொடுத்து விலைக்கு வாங்கியவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப வேலைகளிலும், அவர்களது உடல் இச்சை தீர்ப்பதிலும் திருப்திகரமானவர்களாக இல்லாமல் இருந்தால் அடித்துத் துன்புறுத்த படுகிறார்கள்.

சத்யாவிடமிருந்து கனத்த இருண்ட மௌனம் அங்கே… தொண்டையைச் செருமிக் கொண்டவன் தொடர்ந்தான்.

அத்தோடு நில்லாமல் சில இலட்சங்கள் கொடுத்து வாங்கியவனுக்கு எப்போது அந்தப் பெண் மீது அதிருப்தி நிலவுகின்றதோ அவன் அந்தப் பெண்ணை அடுத்த நபருக்கு விலை வாங்கிக் கொண்டு விற்று விடுகிறான், புது அடிமையை வாங்கிக் கொள்கிறான். சொல்லவே கூச்சப் பட்ட போதும் கதிர் தான் நின்றிருந்த நிலையினின்று திரும்பி முதுகை காட்டியவனாய் அதனைச் சத்யாவுக்குச் சொல்லிக் கொண்டிருந்தான். சத்யா அவன் சொல்ல வருவதன் தீவிரத்தை உணர வேண்டும் என்பதே அவனின் நோக்கமாக இருந்தது.

அவன் கூறிய தகவல்களைக் கேட்டு உடலெல்லாம் கூசிப் போனவளாக நின்றிருந்தாள் சத்யா. கதிர் அத்தோடு நிறுத்தினான் இல்லை… தொடர்ந்தான்.

மனிதக் கடத்தலில் முக்கிய அம்சம் என்ன தெரியுமா சத்யா?

இதுவே தாங்க முடியவில்லை. இன்னும் என்ன சொல்லப் போகிறானோ? எனும் கனத்த உணர்வில் அவனை நோக்கினாள் சத்யா.

இந்த மனிதக் கடத்தல் என்பது ஒன்றுக்கொன்று தொடர்பே இராத தனிப்பட்ட குழுக்கள் கொண்டது. ஒரு குழுவிற்கும் இன்னொரு குழுவிற்கும் அதிகமான தொடர்போ, அடுத்து என்ன என்ற தகவலோ இருக்காது.

ம்ம்…

ஒரு குழு தான் கடத்தியவர்களை மற்றொரு குழுவிற்குச் சேர்ப்பித்த உடன் பணத்தை வாங்கிக் கொண்டு விடைப் பெற்று விடும். தான் கடத்திய நபர்கள் அடுத்து எங்கே செல்வார்கள் என்று முதல் குழுவிற்குத் தெரிய வாய்ப்பில்லை.

தன்னுடைய கடத்தலுக்கான தொகையை வாங்கியதும் அவர்கள் அடுத்தக் கடத்தலுக்கான செயல்பாட்டில் இறங்கி விடுவார்களே தவிர முன்னைய கடத்தல் குறித்த எந்தத் தகவலும் அவர்களிடத்தில் இராது.
….

கடத்தப்பட்ட நபர்கள் பற்பல கைகள் மாறிச் செல்வதால் ஒரு சிக்கல் இருக்கிறது?

என்ன?

போலீசார் கடத்திய நபர்களைப் பிடித்தாலும் முழுவதுமாகப் பயன் இருப்பதில்லை. தாங்கள் இறுதியாகச் சேர்ப்பித்த இடம் வரை மட்டுமே அவர்களால் அடையாளம் காட்ட முடியும். அதன் பின்னால் அந்த நபர்கள் எந்த மாநிலத்திற்கு, எந்த நாட்டிற்குக் கடத்தப் பட்டார்கள்? என்ற தகவல்கள் அறிவது மிக, மிகக் கடினம். இதனால் தான் பெரும்பாலும் கடத்தப் பட்டவர்கள் கண்டுபிடிக்கப் படுவதே இல்லை. ஒரு குழந்தையோ, பெண்ணோ கடத்தி சில மணி நேரங்களுக்குள்ளாக அந்த மாநிலத்தின் எல்லையைக் கடந்திருப்பார்கள், அடுத்த ஏதாவதொரு மாநிலத்தை அடைந்திருப்பார்கள்.

ஓ… அதிர்ச்சியில் அவளுக்குப் பேச்செழவில்லை

கிஷோர், துஷார் அவள் மனதிலிருந்து விலகிப் போக, சத்யாவின் கவனம் இப்போது கதிர் சொல்வதிலேயே நிலைத்து விட்டது. கதிர் சொல்வது போல உடல் உறுப்புகளுக்காக, முடமாக்கி பிச்சை எடுக்க வைக்கப் படுவதற்காக, விபச்சாரத்திற்காக, வேலைக்காகக் கடத்தப் படுவோரின் வாழ்வு எவ்வளவு கொடூரமாக இருக்கும், நினைக்கவே அவள் மனம் பதறிற்று. கதிரோ தான் அறிந்ததை எல்லாம் சொல்லும் முனைப்பில் தொடர்ந்தான்.

குழந்தைகள் கடத்தலில் கடத்துபவர்களுக்குச் சாதகமான ஒரு விஷயம் இருக்கிறது சத்யா? என்னவென்று யோசிக்க முடிகின்றதா? எனக் கேட்க,
இவனோடு இயல்பாக உரையாடுவது இதுவே முதன் முறை. இவனோ நம்மிடம் இத்தனை பேசுகிறானே? என்றெண்ணியவளாய் இல்லை எனத் தலை அசைத்தாள்.

ஒருவேளை பிறந்த குழந்தையைக் கடத்தப் பட்டிருந்தால் ஒரு வருடம் கழித்து அந்தக் குழந்தையைப் பார்க்க நேருமாகில், ஒரு வருடம் என்பதை விடு, சில மாதங்கள் கழித்துப் பார்க்க நேர்ந்தாலும் பெற்றோர்களால் இது நம் குழந்தைதான் என நிச்சயமாகப் பார்த்த மாத்திரத்தில் சொல்ல இயலுமா? இல்லை அந்தக் குழந்தைகள் தான் இது நம் பெற்றோர் எனக் கண்டு பிடிக்க முடியுமா?

அதெப்படி முடியும். குழந்தைகள் வளர வளர அவர்கள் முக அமைப்பு மாறிக் கொண்டே வருமே. அடையாளம் காண்பது மிகவும் சிரமம் தான். குழந்தைகளுக்கும் கூட ஒன்றும் தெரியாதே, எவ்வாறு கண்டு பிடிக்க முடியும்? சிந்தனையினூடாகப் பதிலளித்தாள் அவள்.

சரியாகச் சொன்னாய் சத்யா. பிறந்த குழந்தைகளோ, சிறு வயது குழந்தைகளோ சில மாதங்களில் முக அமைப்பு மாறிக் கொண்டே இருக்கும், பெற்றோருக்கே குழந்தைகளை அடையாளம் காண்பது கடினம். அது மட்டுமா குழந்தைகளுக்குப் பெற்றோரை கண்டு கொள்ளும் அல்லது தானாகச் சூழ்நிலையினின்று தப்பித்துக் கொள்ளும் திறனும் கிடையாதே. தான் யார் கையில் இருக்கிறோமோ , எந்தச் சூழ்நிலையில் வளர்கிறோமோ அதில் தான் அவர்கள் தொடர்ந்தாக வேண்டும். வேறு வழியே இல்லை உதட்டை பிதுக்கினான்.

இந்த மனிதக்கடத்தல் என்பது எளியவர்களின் அத்தனை பலவீனங்களையும் அறிந்து கொண்டு வலியவர்கள் ஆடும் ஆட்டம். வேறென்ன சொல்வது? நீளமாய்ப் பெருமூச்செறிந்தான்.

ஏதோ ஒன்று ஆட்கொண்டாற் போலச் சிலையாய் அவன் கூறியதெல்லாம் கேட்டுக் கொண்டு சமைந்திருந்தாள் சத்யா.

இங்கே வா, உட்காரு …

எதிரில் இருந்த கற்திண்டில் அமரச் சொல்லி விட்டு அவனும் அந்த மரத்தின் கீழிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

பற்பல விஷயங்கள் அவை அவளுக்குச் சம்பந்தப் படாதவையே ஆயினும் அவற்றைக் கேட்டதில் மனம் சோர்வுற்றிருக்க, அவளுக்கும் அந்த இளைப்பாறல் தேவையாக இருந்தது. அந்த அமைதியில் சுற்றிலும் சில பறவைகள் சப்தம் அல்லாமல் வேறு எதுவும் இல்லை.

இன்னும் ஏதோ சொல்லப் போகிறானோ?… என்று எதிர்பார்ப்பது போலக் கதிரின் முகம் பார்த்து அமர்ந்திருந்தாள் சத்யா.

நான் கிஷோரை முதலில் உன் கூடப் பார்த்த போது எனக்கு உள்ளுக்குள்ளாக ஏதோ நெருடல், அவனைப் பார்க்க சாதாரணமாக எனக்குத் தோன்றவில்லை. முதலில் நான் கவனித்த விஷயம் வெளிறின அவன் முகத் தோற்றம் அவன் ஏதோ ஒரு கெட்ட பழக்கத்துக்கு ஆளானவன்னு தோணுச்சு. ஏதாச்சும் போதைப் பழக்கம் அப்படி இருக்கும் அப்படித்தான் நினைச்சேன். அதனாலத்தான் முதல் தடவை உன் கிட்டே வந்து அவன் கிட்ட பேச வேணாம்னு எச்சரிச்சேன். அன்னிக்கு உனக்கு என் மேல என்ன கோபமோ தெரியலை என்னைத் திட்டி விட்டுட்ட.

சொன்னவன் சாதாரணமாகத்தான் சொன்னான், ஆனால் கேட்டவளுக்குச் சங்கடமாகப் போயிற்று. எப்போதும் கோபத்தை மட்டுமே தான் கேடயமாகப் பயன்படுத்தி வந்தாலும் சில சமயங்களில் அவற்றைத் தவிர்த்திருக்கலாமோ? எனும் எண்ணம் தற்போது தோன்றிற்று. என்ன செய்வது எல்லாவற்றையும் அறிந்துக் கொள்ளவும் ஒரு நேரம் வரவேண்டி இருக்கிறதே.

அதுக்கப்புறமும் நான் அவனைக் கவனிக்க ஆரம்பிச்சேன். அவன் குறிப்பிட்ட பெண்களோட மட்டுமே தனியா பேச முயலுவது எனக்குப் புரிஞ்சது. ஓரளவுக்குத் தான் எதிலயும் தலையிட முடியும் இல்லையா? உங்களோட கூட முன்ன பின்ன பழக்கம் இல்லை. ஒரே டிபார்ட்மெண்ட் கூடக் கிடையாது அதனால தான் கண்டுக்காம இருந்தேன்.

கிராமத்தில வளர்ந்ததாலயோ என்னவோ யாருக்கு என்ன நடந்தா எனக்கென்னன்னு யோசிக்காம, சுத்தி முத்தி நடக்கிறதை எல்லாம் கவனிக்கிற பழக்கம் எனக்கு உண்டு. அப்படிக் கவனிச்சதிலதான் இதெல்லாம் கண்ணிலப் பட்டது.

எனக்கு உன் மேல விருப்பம் வந்ததுக்கு அப்புறமாத்தான் உன்னைப் பாதுகாக்கிறதா நினைச்சு தினம் உன் பின்னாடியே வருவேன். என் நோக்கம் எல்லாம் கிஷோர் இருக்கிற நேரம் நீ தனியா இருக்கக் கூடாது என்கிறது மட்டும் தான்.

நீ உன்னோட ஹாஸ்டலுக்குத் திரும்பப் போகப் பஸ் ஏறும் வரைக்கும் நான் தினமும் உன் பின்னாடி தொடர்ந்து வந்திட்டு இருந்திருக்கேன். ஏறத்தாழ செக்யூரிட்டி செர்வீஸ் முறுவலித்தான்.

லீவு ஆரம்பிச்சதும், கிஷோர் லீவுக்கு அவனோட ஊருக்கு போயிடுவான்னு நினைச்சேன், அதனால உனக்கு எதுவும் பாதுகாப்புக் குறைவு இருக்காதுன்னு தோணுச்சு. எனக்கு அதுவரைக்கும் , ஏன் உன்னை வீட்டுக்கு கூட்டிவந்த நாளுக்கு முன்னாடி சில நாட்கள் வரைக்கும் கிஷோர், துஷார் பின்புலம் தெரியாது. ஏதோ உன்னைத் தப்பா அணுகறாங்க அந்த அளவு மட்டும் தான் தெரியும்.

என்னோட பரீட்சை முடிஞ்சாலும் அடுத்ததா சில பிசினஸ் சம்பந்தப்பட்ட வேலைகள் இருந்ததால நான் உடனே ஊருக்கு போகலை. அப்ப தான் சச்சின் வந்தான், நீ கிஷோர் கூட மும்பை போற ப்ளான்ல இருக்கிறதா சொன்னான். தப்பா நினைச்சுக்காதே அவனைப் பொறுத்தவரை நீ என் லவ்வர், அதிலும் என்னுடன் உனக்கு ஏதோ பிரச்சனை அப்படி நினைத்து உன்னையும் என்னையும் சேர்த்து வைக்கிறதா நினைத்து இப்படி ஏதாவது செய்து வைப்பான். உன் தகவல்கள் தெரிந்தால் எனக்குச் சொல்வான் அவ்வளவு தான்.

ஏதோ ஒரு பெரிய விஷயம் வரப் போகிறது என்று எண்ணியவள் பதிலளிக்கவில்லை.

அவன் எப்போதும் அடுத்தவங்க கதையில் மூக்கு நுழைக்கிறது எனக்குப் பிடிக்காதுதான் ஆனா, அவனோட இந்தக் குணமே எனக்கு உன்னைப் பற்றித் தகவல் கிடைக்கக் காரணமா இருக்க நல்லதா போச்சு. நானும் நிரஞ்சனும் அதுக்கப்புறம் தான் கிஷோர், துஷாரோட பின்புலம் என்ன? நல்ல குடும்பமா? அப்படி அறிந்து கொள்ள அவர்களைப் பின் தொடர்ந்தோம்.

ஏன்னா என்னோட சேர்ந்து என் நண்பர்களுக்கும் நீ போகிற இடம் பாதுகாப்பா இருக்கணும்னு ஒரே நோக்கம். அப்பத்தான் அவங்க தங்கியிருந்த இடம் பார்த்து ஏதோ பொறித்தட்டுச்சு, ரொம்ப மறைவான இடம் அது. ஊருக்கு ஒதுக்குப் புறமா என்ன செய்றாங்க? அப்ப இவங்கல்லாம் சாதாரண ஸ்டூடண்ட் இல்லையா? அப்படி எங்களுக்கு முதன் முறையா சந்தேகம் வந்தது.

அந்த இடத்தைப் பத்தி யார் மூலமாவோ விசாரிச்ச ஒரு நண்பனுக்கு அந்த ஆட்கள் செய்ற பலவித மறைவான வேலைகள் பத்தி தெரிஞ்சிருக்கு. அப்பவும் கூட அவங்களோட பின்புலம் எங்களுக்கு முழுசா தெரியலை.

உன்னோட பரீட்சைகள் முடியப் போறதுக்கும், அவனோட புறப்படறதா சொல்லிட்டு இருந்த நாட்கள் வர்றதுக்கும் பத்து பதினைஞ்சு நாட்கள் தான் இருந்துச்சு. உன்னை அங்கிருந்து முதலில அப்புறப்படுத்தணும் அதுக்கப்புறமாத்தான் மற்ற பிரச்சனையைப் பார்த்துக்கணும்னு எங்களுக்குள்ள திட்டம். ஏன்னா எந்த வகையிலயும் நீ இந்த விஷயத்தில பாதிக்கப் படுறதில எனக்கு இஷ்டம் இல்லை.

முதலில் ஆர்த்திக் கிட்ட பேசி உன்னை அவளோட ஊருக்கு அனுப்பி வைக்கலாமான்னு யோசிச்சோம். எங்களோட க்ரூப்பைக் கண்டாலே அவ பயந்து, ஒளிஞ்சு மறைஞ்சுப் போனதில நீ என்னோட ப்ரபோசல் பத்திச் சொல்லிருப்பன்னு புரிஞ்சுகிட்டேன். உன்னைப் போலவே ஆர்த்திக்கும் என்னோட நண்பர்கள் முக்கியமா என் மேல நல்ல அபிப்ராயம் இல்லைன்னதும் ஆர்த்தியை சந்தித்துப் பேசற திட்டத்தைக் கைவிட்டோம்.

அடுத்ததா தேன்மொழி அக்கா கிட்ட கேட்டேன், அவங்களோ அடுத்த நாளே ஊருக்கு புறப்படுற நிலையில இருந்தாங்க, அவங்க கணவர் ஊரில் தான் அவங்க முதலில் போவாங்க. அவங்களுக்கே திருமணம் முடிஞ்சு சில வருஷங்கள் தான் ஆகிருக்கு அதனால கூட்டுக் குடும்பமா இருக்கிற தன்னோட மாமியார் வீட்டில் தெரியாத ஒரு பொண்ணை எப்படிக் கூட்டிட்டு போறதுன்னு யோசிச்சாங்க, அவங்களால முடியாத நிலைமை அதனால அங்கேயும் உன்னை அனுப்ப முடியவில்லை.

எல்லாவற்றையும் விடப் பெரிய விஷயம் என்னன்னா

“நீ கிஷோர் கூட மும்பை போகாதே இன்னார் வீட்டில் பத்திரமா இரு” என்று உன்னிடம் நான் சொல்லி இருந்தா நீ என்னை நம்பி இருக்க வாய்ப்பு இல்லை, நம்பவும் மாட்டாய் அந்த அளவுக்கு ஏனோ என் மேல உனக்கு அளவுக்கு அதிகமாகவே வெறுப்பு, கோபம். அப்படி இருக்கிறப்போ எப்படி நான் என் கிட்டே இருக்கிற அந்தக் குறைந்த நாட்கள்ல உன் கிட்ட நல்லபடி பேசி, விளக்கி உன்னைப் பாதுகாக்கிறது?

அடுத்ததா ஹரீஷ் சவுஹான் உன்னோட கார்டியன் அவங்களைத் தொடர்பு கொண்டேன்.

“ஹரீஷ் அங்கிளா அவரை இவனுக்கு எப்படித் தெரியும்?”

ஆச்சரியமாய் விழிவிரித்தவளிடம் சங்கடமாகவே அவளைப் பற்றிய விபரங்களைச் சச்சின் மூலம் சேகரித்ததாகக் கூறினான்.

நீ செய்தது நியாயமா? எனக் கேட்ட அவள் கண்களை எதிர்கொள்ள இயலாதவனாய் தலைக் குனிந்தவன் தொடர்ந்தான்.

ஹரீஷ் சாரும் அன்னிக்குதான் காஷ்மீர் புறப்படுற வேலையா இருந்தார். நான் சூழ்நிலையைச் சொன்னதும் என்னைப் பற்றி எல்லாம் சொன்னதும் அவர் யோசிக்க 2 நாள் கேட்டார்.

என்னைப் பற்றி விசாரிச்சிருக்கணும்னு நினைக்கிறேன். அடுத்த நாளே எனக்குப் போன் வந்தது. ஏற்கெனவே விஷயத்தை அம்மா, அப்பா கிட்ட தெரிவிச்சிருந்ததனால அவர் ஊர்ல இது விஷயமா விசாரிச்சு, என் குடும்பம் பற்றி விசாரிச்சு என் மேல நம்பிக்கை ஆனாரு போலிருக்கு.

உன்னைக் குழப்பறதுக்கு அவருக்கும் மனசு இல்ல, உன்னை இன்னிக்கு தேதி வரைக்கும் மருண்டு நிக்கிற ஒரு குழந்தைப் போலவே தான் அவர் நினைச்சுட்டு இருக்கார்.

என்னிக்குமே என் கிட்ட கூட நெருங்கி அவ பேசினதில்ல, என்னோட குடும்பத்தோட நெருங்கவோ, எங்காவது நான் அழைச்சிட்டுப் போக விரும்பினாலோ சத்யா வர விரும்பினதில்ல. வெளியில எவ்வளவு தைரியசாலியா காண்பிச்சுக்கிறாளோ அந்த அளவுக்கு அவளோட மனசில பயம் இருக்குன்னு உன்னைப் பற்றி அவர் என் கூடப் பகிர்ந்து கொண்டார்.

தன்னைப் பற்றி அவன் எந்த அளவிற்குத் தெரிந்து கொண்டான் எனத் தெரியாமல் அவள் திண்டாடினாள். தன் அந்தரங்கத்தை அவனுடன் பகிர்ந்து கொண்ட ஹரீஷ் அங்கிள் மீது எழுந்த அதிருப்தியில் அவள் முகம் வாடியது.

அதனாலத்தான் என்னோட திட்டங்களுக்கு அவர் உதவி செய்தார், அதற்கு மட்டுமல்ல கிஷோர் மற்றும் துஷார் உன் கூட நட்பு பாராட்டினதின் பிண்ணணி, அவர்களோட திட்டம் என்ன என்பதான அத்தனையும் அறிந்து கொள்ளப் போலீஸ் உதவியை எங்களுக்கு அளிக்கவும் அவர்தான் ஏற்பாடு செய்தார்.

என்னை முழுவதுமாக நம்பாமல் அப்பாவின் பேச்சை முன் வைத்தே அவர் உன்னை ஊருக்கு அனுப்ப ஒத்துக் கொண்டார்.

அப்படியுமே ஒரு வாரம் ஊரில் இருந்து திரும்பி வந்து சென்னையில் என் வேலைகளைப் பார்க்கிறதா நான் இருந்தவன் தான். ஹரீஷ் சார் சொன்னபடி நீ ஊர்ல இருக்கும் நாட்களில் நான இல்லாதபடி பார்த்துக் கொண்டேன்.

உன்னை அன்றைக்கு இரவு கடத்தி ஊருக்கு அழைச்சிட்டு வர்றப்போ அதிகாலை ஆகிடுச்சு. நீ பிரச்சனை செய்வியோன்னு மனசு கிடந்து அடிச்சிக்கிட்டது எனக்குத்தான் தெரியும். அம்மா கூட நீ ஒன்றிப் போனதும், என் கிட்ட எப்போதும் சண்டைப் போடுறவ பெரியவங்களுக்கு மதிப்புக் கொடுத்து வேறெதுவும் பிரச்சனை செய்யாம என் கிட்ட தனியே மட்டும் பிரச்சனை செஞ்சதும் நானே எதிர்பாராத திருப்பம்.

கிஷோர் உன்னைத் தொடர்பு செய்யக் கூடாதபடிக்கு அவன் போனை கணாம ஆக்குறதுக்கான வழியை நான் நிரஞ்சன் கிட்டே சொல்லி உதவி கேட்டிருந்தேன். அதன் படியே போன் கால் ரீச் ஆகலைன்னதும் என் நண்பன் சொன்னதைச் செஞ்சுட்டான்னு எனக்குத் திருப்தியாக ஆச்சு.

அதுவும் அம்மா சொன்னதும் நீ உடனே ஊர்ல தங்கிக்கிறதுக்கு அப்படியே ஒத்துக் கொண்டது எல்லாம் என்னைப் பொருத்தவரை ரொம்பவே ஆசுவாசமா இருந்துச்சு. உடனே சென்னைப் போனதும் ஹரீஷ் சார் அனுப்பின உதவிகளோட துஷார் மற்றும் கிஷோர் இருப்பிடத்துக்குப் போனோம்.

உன்னை தவற விட்ட கொதிப்பில அங்க ஏதோ பிரச்சனை நடந்துட்டு இருந்தது. ஒருத்தரை ஒருத்தர் கோபிச்சுட்டு இருந்தாங்க. நாங்க அந்த இடத்தைக் காண்பிக்கிறதுக்காகப் போலீஸ் கூட அங்கே போனோம். விசாரணைக்கு அழைக்கிறோம் வரணும்னு போலீஸ் போய் அழைச்சதும் மிரண்டுட்டாங்க போலிருக்கு. நாங்க பார்த்துட்டு இருக்கிறப்பவே ரெண்டு பேரும் ஓட ஆரம்பிச்சாங்க.

அப்போ ஏறத்தாழ இரவு 11 மணி இருக்கணும். இருட்டில் ஓடினவங்களில் ஒருத்தனை அதாவது துஷாரை போலீஸ் பிடிச்சுட்டாங்க. அதே நேரம் ரோட்டை கடந்து போய் ஓடறதா நினைச்சு ஓடின கிஷோர் எதிர்ல வந்த கார் முன்னாடிப் பாயவே, எதிர்பாராத அந்தத் தாக்குதலில் தூரமா அடிச்சு விழுந்தவன் மோதினது ஒரு கல்லில். இப்ப வரைக்கும் அவன் ஐ சி யூ வில் தான் நினைவில்லாமல் இருக்கிறான்.

அவனைப் பார்க்க போலீஸோட கூட நாங்களும் அவன் விழுந்து கிடந்த இடத்துக்குப் போனப்போ நம்ம காலேஜ் பசங்க யாரோ பார்த்திருக்கணும்னு நினைக்கிறேன். காலேஜ் பசங்களுக்கிடையே முழுக்கவும் இதுவே பேச்சா மாறிடுச்சுன்னு நினைக்கிறேன்.

போலீஸ் வரைக்கும் போன இந்த விவகாரத்தில் சொந்தக் கருத்துச் சொல்லுற அதிகாரம் இல்லை என்பதால நான் அதைப் பற்றி யார் கிட்டேயும் எதுவும் சொல்லலை. என் கூட இருந்த நண்பனையும் சொல்ல விடலை. முக்கியமா சச்சினுக்கும் மற்ற ப்ரெண்ட்ஸ்கும் விபரங்கள் தெரியாம பார்த்துக் கிட்டோம்.

என்றவனைத் திடுக்கிடலோடு பார்த்தாள் சத்யா. அவர்கள் மோசமானவர்கள் என்றால் கதிருக்கும் கூட ஆபத்துதானே? அவள் சிந்தனையை அறியாதவனாகக் கதிர் பேசிக் கொண்டிருந்தான்.

அதுக்கப்புறம் தான் துஷார் கிட்ட விசாரணை செஞ்ச போது அவங்க உன்னைக் கடத்திட்டு போகிறதுக்கும், கொண்டு போய் விற்கிறதுக்கும் திட்டம் போட்டது தெரிய வந்தது.

ஆண்டவா… திடும் திடும் எனும் அதிரும் இதயத்தைக் கட்டுக்குள் வைக்க இயலாதவளாய் கதிரை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவங்களோட முக்கிய டார்கெட் ஆதரவில்லாம இருக்கிற பெண்கள் தான். அதாவது காணாமப் போனா அதிகம் யாராலும் தேடப் பட வாய்ப்பில்லாத பெண்கள். கிஷோரும், துஷாரும் போலி சர்டிபிகேட் கொடுத்து சில கல்லூரிகளில் சேர்ந்து இருக்காங்க.

இப்படி தனிமையா இருக்கிற பெண்களைப் பேசிப் பழகி கடத்துவதோட அல்லாம, பிள்ளைங்களை வீட்டுல விட்டுட்டு தாய்தந்தையர் வேலைக்குப் போற வீடுகளையும் குறி வச்சுக் கடத்திட்டு இருந்திருக்கிறாங்க. அவங்களுக்கு உன்னோட கார்டியன் ஹரீஷ் சார், அவரோட பவர் பத்தி தெரியலைனு நினைக்கிறேன் அதான் துணிஞ்சிருக்கானுங்க.

பேசிக் கொண்டிருந்தவனையே கண்ணில் நீர் மல்க பார்த்துக் கொண்டிருந்தாள் சத்யா.

“ஹரீஷ் அங்கிள் பவர் இருக்கட்டும் ஒரு பக்கம், அவர் ஏதோ ஒன்று இவளுக்குத் தவறாய் நிகழ்ந்த பின்னர்த் தானே இவளுக்கு உதவி செய்ய எண்ணியிருக்க முடியும்? இவனோ முன்னெச்சரிக்கையாக இத்தனையும் அவளுக்காகச் செய்திருக்கின்றானே? இந்த நன்மைக்கு நான் எவ்வாறு பதில் செய்வேன்”

….

ஹரீஷ் சார் தலையிட்டிருக்கிறதாலயும் அவன் சம்பந்தப்பட்ட தொடர்புகளை இன்னும் தீர விசாரிக்கிறதுக்காகவும் துஷாரை மறைவிடத்தில வச்சு மேலும் விசாரிச்சிட்டு இருக்காங்க.

ஆனால், ஹாஸ்பிடலில் இருக்கிற கிஷோர் பத்தின விபரங்கள் அவன் நினைவுக்கு வந்த சில நாட்களாகத்தான் தெரிய வந்துட்டு இருக்கு. ரமணியைக் கடத்தினதில் இவனோட பங்கு இருக்கு…

ரமணியா? அவ எங்கே இப்போ? நெஞ்சை பிடித்துக் கொண்டவளாகக் கேட்க,

எங்கேன்னு தெரியலை சத்யா? தேடிட்டு இருக்காங்க, இன்னும் கண்டு பிடிக்க முடியலை கதிரின் முகம் சோர்ந்தது.

தங்களோடு சேர்ந்துப் பழகி நண்பர்களாய் இருந்து கோவா ட்ரிப்பிற்காகக் கேட்ட கிஷோர், துஷாரின் பேச்சுக்கள் ஞாபகம் வந்தன. அவர்களோடு சுற்றுலாச் செல்ல அதீதமாய் ஆர்வம் காட்டிய ரமணி விடுமுறைக்குப் பின்னர்த் திரும்பாததையும், அவளுக்கு உடல் நலம் சரியில்லை அதனால் தான் வரவில்லை என்று சில நாட்கள் அனைவரும் லீவு முடிந்தும் வராத ரமணிக் குறித்துப் பேசிக் கொண்டதும், பின்னர்ச் சில நாட்கள் கழிய யாருமே அதிகமாய் அவளை நினைவு கூறாமல் அவளைக் குறித்த அந்தப் பேச்சுக்கள் அதற்குப் பின்னர் எடுக்கப் படாததையும் நினைவு கூர்ந்தாள்.

தானும் இவ்வாறு தானே காணாமல் போயிருந்திருப்போம், எங்கேயோ மாட்டி, சிக்கி சீரழிந்து என்று எண்ணுகையிலேயே உடல் தூக்கிப் போட,

எதிரில் அவளைக் கண்டு கொண்டிருந்தவன் ஏதோ சொல்ல வர,

‘கதிரு, சக்திம்மா ரெண்டு பேரும் சாப்பிட வாங்க , நேரமாகுதில்ல’

சந்திராவின் குரல் கேட்க இருவரும் அங்கிருந்து கனத்த மனதுடனே வீட்டை நோக்கி நகர்ந்தனர்.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here