22. காதலும் வசப்படும்

0
489
Kadhalum Vasapadum

அத்தியாயம் 22
அன்று பகலில் மறுபடி கதிரை பார்க்க முடியாத அளவிற்கு அவன் தன் நண்பனோடு நேரம் செலவழிப்பதிலும், கணக்கு வழக்குகளைத் தந்தையிடம் விவாதிப்பதிலும் அவனை விசாரித்து வரும் உறவினர்களிடம் அளவளாவுவதிலுமாக இருந்தான்.

அவனது வீட்டிலும், உறவுகளிடத்தும் அவனுக்குண்டான மரியாதை மற்றும் முக்கியத்துவம் சத்யாவுக்குப் புரிந்தது. இப்போதைய அவனுடைய செய்கைகளோடு கல்லூரியில் இருக்கும் போது அவனது நடவடிக்கைகளை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது வயதிற்கு மீறின முதிர்ச்சியை உணர்ந்தாள்.

கல்லூரியில் எப்போதும் அவளைப் பின் தொடர்ந்து வருவானாகிலும் அவளை ஒரு போதும் உடல் கூசுமளவு உற்றுப் பார்த்ததில்லை. காதலுக்கு என்றல்லாமல் திருமணத்திற்குக் கேட்டானாகிலும், அன்று அவளது கண்ணோடு கண் பார்த்து அதைக் கேட்டதில் அவனிடம் ஒரு நேர்மை இருந்தது.

அது வரை அவனைத் தவறானவனாகச் சித்தரித்துப் பார்த்ததாலோ என்னமோ அவனின் எல்லாச் செய்கையிலும் அவளுக்குத் தவறுகளே தெரிந்தன. இப்போது பற்பல சந்தேக மேகங்கள் விலகி மனம் நிர்மலமாகி இருக்க அவனது உண்மைக் குணங்கள் வெளிச்சத்திற்கு வரலாகின.

தான் பெண் எனத் தவறாக எண்ணி கதிர் குறித்துத் தவறாகச் சிந்திக்கக் காரணமான அந்த நீள முடி நண்பன் பெயர் வினய் என்று பின்னர்த் தெரிந்துக் கொண்டாள். மதியம் சாப்பிடும் போது சந்திராம்மா, சுந்தரம் நடுவில் அவள் அமர்ந்து கொள்ளச் சாப்பாட்டு வேளை கலகலவெனக் களைக் கட்டியது.வினய் மற்றும் கதிருடன் சற்று இலகுவாக அவளால் சில வார்த்தைகள் பேசிக் கொள்ளவும் முடிந்தது.

தன்னிடம் ஒன்றும் வெளிப்படுத்தாமல் தனது பாதுகாப்பிற்காக அரவணைத்துக் கொண்ட அந்தப் பெரியவர்களை எண்ணி மனம் கனிந்தது, அதே நேரம் தான் மாட்டிக் கொள்ளவிருந்த ஆபத்தை நினைத்து கலக்கமாகவும் இருந்தது.

தாங்கள் அறிந்து கொண்ட உண்மைகளை வெளிப்படுத்தாமல், அதே நேரம் நாங்கள் தான் உனக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறோம் பார் என்ரு மார் தட்டாமல் இருந்த அந்தப் பெரியவர்களைக் கதிரின் பெற்றோர்களைத் தனக்கும் எதுவும் தெரியாது எனும் விதத்திலேயே முன் போல நடந்து கொண்டாள். சாயுங்காலம் வரை சந்திராம்மாவை ஒட்டிக் கொண்டே அலைந்தவள், மனதை வேறு இடத்தில் செலுத்த முயன்று ஒன்று மாற்றி ஒன்றாக வேலைகள் செய்ய, அதில் வெற்றியும் பெற்றாள். சந்திராம்மா அவளது உணர்வுகளை அறிந்தாற் போலவே தன் அருகே அவளை வைத்துக் கொண்டார்.

இரவில் களைத்து உறங்கியவள் காலையில் வெகு புத்துணர்ச்சியோடு விழித்தாள். அடுத்த நாள் சென்னை புறப்பட வேண்டும் என்றெண்ணியவளுக்கு மனதில் சந்திராம்மாவை பிரிவது குறித்து மிகவும் துன்பமாக உணர்ந்தாள். முன்பு தனக்குப் பழக்கமான அந்த ஹாஸ்டல் தனிமை வாழ்க்கைமுறை இப்போது ஒவ்வாமல் நெருஞ்சி முள்ளாய்க் குத்தியது. இந்தக் குடும்பச் சூழலை எண்ணி தாம் வெகுவாக ஏக்கம் கொள்ளப் போகிறோம் என எண்ணிக் கொண்டாள்.

காலைக் கடன்கள் முடித்துச் சென்னைப் புறப்பட ஆயத்தமாவது குறித்து யோசித்தாள். அப்போது கதிர் அவளது அறை வாசலில் நின்று கொண்டிருந்தான்.

வா கதிர்

வாசலில் நின்றவனை அழைக்க உள்ளே நுழைந்தான்.

முன் தினம் தன்னிடம் கதிர் ஏதோ சொல்ல வந்தது அவளுக்கு நினைவுக்கு வர அவனை உற்று நோக்கினாள்.

அவனோ ஒரு பர்ஸ்-ஐ கையை நீட்டி அவளிடம் கொடுத்தான். அது சத்யாவின் பர்ஸ் அதில் அவளுடைய மொபைல் இருந்தது. யாரும் இவளை தொடர்பு கொண்டு விடக் கூடாதென்பதால் அதை அவன் அவள் கையில் வராமல் பார்த்துக் கொண்டான் போலும்.

உனக்கு கிஷோர் விஷயமா போன் செய்தது ஆர்த்தியா?

அது எப்படி இவனுக்குத் தெரியும்? எனும் பாவனையில் சத்யா அவனைப் பார்க்க, ஹாஸ்டலில் ஆர்த்தித் தவிர யாருக்கும் இந்த நம்பர் கொடுக்க வேண்டாம்னு சொல்லி இருந்தோம் அதனாலத்தான்.

ம்ம்… ஆமோதித்தாள்.

நான் சொன்னதை எல்லாம் நீ ஆர்த்திக் கிட்டே சொல்லலியே?

எங்கே சொல்வது? நேற்று முழுக்கவும் தான் கேள்வி பட்ட அத்தனை விஷயங்களும் தன்னை வேரோடு அசைத்திருக்க, யாரிடமும் பேச தோன்றவில்லையே. அதிலிருந்து வெளிவருவதற்காக வெறிப்பிடித்தவளாக வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தவளை சந்திராம்மா தான்

“போ போய்த் தூங்கு, வேலை செய்தது போதும்” எனத் தூங்கும் படி விரட்டியிருந்தார்.

அவ அதான் ஆர்த்தி எப்பவும் போல ஒரு வாரம் முன்னாடியே ஊரிலருந்து திரும்ப ஹாஸ்டலுக்கு வந்திருக்கா. கிஷோர் விஷயம் கேள்விப்பட்டதும் நான் கிஷோரோட கூட வேலைக்குப் போகறதா இருந்தது ஞாபகம் வரவே என் ஹாஸ்டல்ல போய் இங்க உள்ள நம்பர் வாங்கினாளாம். என்னோட நலன் விசாரிக்கவும், கிஷோர், துஷார் விபரம் சொல்லவும் தான் அவள் போன் செஞ்சதே. அவ கிட்ட கைப்பேசி கிடையாது அதான் எது பேசணும்னாலும், கல்லூரியில் சந்திச்சு நேர்ல போய்ப் பேசிக்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன்.

ம்ம்……. கேட்டுக் கொண்டிருந்த கதிர் சத்யாவிடம்,

“நான் நேற்று உன் கிட்டே கிஷோர், துஷார் பற்றிச் சொன்னதெல்லாம் யார் கிட்டேயும் சொல்ல தேவை இல்லை என்ன? ஆர்த்திக் கிட்டேயும் தான்”

ஏன் ? என்ற கேள்வி தொக்கி நிற்க அவனைப் பார்த்தாள் அவள்.

இந்த கேஸ் விஷயத்தை வெளியே தெரியாம விசாரிச்சிட்டு இருக்கிறாங்க, ஒரு சிலர் பிடிபட்டிருக்காங்க, இன்னும் நிறையப் பேரை பிடிக்கிற நிலைமையில் இருக்கு. செய்திகள் பரவுறதுனால வீணா வம்பு வளர்க்கிறதும், இன்னும் இது போல எத்தனையோ இடங்களில் பெண்களைக் கடத்த திட்டம் போடுறவங்களைத் தப்பிச்சு போக அலர்ட் செய்கிற மாதிரியும் ஆகிடும். அதனால வேண்டாம், புரியுதா? உனக்கு இந்தக் கேஸ் பற்றி எதுவும் விபரம் வேணும்னா ஹரீஷ் சார் கிட்டே கேட்டுக்கோ, அவர் அடுத்த வாரம் ட்ரிப்லருந்து திரும்புறார்.

ம்ம்……

நீ இந்த லீவில் தங்கியிருந்தது என்னோட வீடுன்னு கூட யாருக்கும் தெரிய வேண்டாம், வீணான பிரச்சனைகளுக்கு அதுவே காரணமாகக் கூடும்.

சரி, கேள்விகளோடு தலை அசைத்தவளிடம்,

உன்னை தொடர்பு கொள்ளும் எண்-னு வீட்டு தொலைபேசி எண்ணொடு கூட அப்பாவோட பேருதான் அதாவது சுந்தரம்னுதான் ஹாஸ்டலில் பேர் கொடுக்க ஹரீஷ் சார் கிட்டே சொல்லி இருந்தேன்.அதனால, நீ என் வீட்டில தான் தங்கியிருந்தேன்னு ஆர்த்தியோ, வேற யாருமோ கண்டுபிடிக்க வாய்ப்பில்லை. அது மட்டுமல்ல மறுபடியும் யாராவது உன் கிட்டே வந்து கிஷோரை நான் அடிச்சது குறித்துச் சொல்லி விபரம் கேட்டா, நான் லீவில் வேலைக்கு ஒரு ஊருக்கு போயிட்டு வந்ததால எனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்லணும் புரியுதா?
……

நான் சொன்ன விபரங்களால உன்னை அறியாமல் கூட உன் முகத்தில கிஷோர் மேல வெறுப்பு, கோபம் போன்ற எந்த மாற்றமும் வராம நீ பார்த்துக்கணும். இன்னும் கூட அவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவங்க யாரும் அங்கே இருக்கலாம் இல்லையா? இன்னும் 2 வருடங்கள் அங்கு உனக்குப் படிப்பு இருக்கிறது வீணாகப் பிரச்சினைகள் வேண்டாம். உனக்கு வேறு எந்தப் பிரச்சனைகளும் வராமல் பார்த்துக் கொள்வதாக ஹரீஷ் சார் சொல்லி இருக்கிறார்.

தொடர்ந்த அவனை இடைமறித்து,

சரி ஆனா, இந்தக் கிஷோர் பிரச்சனையில் உன்னோட பெயர் அடிபடுறதுனால உனக்கு ஆபத்து தானே? என அவசரமாய்க் கேட்க முறுவலித்தவன்.

இல்ல உண்மையான விஷயம் எதுவுமே நாங்க வெளிவரவிடலை. ஏதோ வாய்ச்சண்டை பெரிசாகிடுச்சு அந்த அளவுக்குத் தான் எல்லாமே வெளியில் தகவல் போயிட்டு இருந்திருக்கு, யூ டோண்ட் வொர்ரி….என்றான்.

எத்தனை விஷயங்கள் எல்லாம் எனக்காக வியப்பு மறுபடியும் மறுபடியும் மனதில் மண்டியிட,

நீ எதுக்காக இத்தனையும் செஞ்ச கதிர்?

என்ற அவளது அடுத்தக் கேள்விக்குத்தான் உடனடியாக அவனிடம் பதில் எதுவும் இல்லை. சற்று தாமதித்தவன்

எதுக்காகன்னு கேட்டா நான் உனக்காகத்தான் இப்படிச் செஞ்சேன் சத்யா, அது தான் உண்மை. ஆனால், அதுக்குப் பதிலா நான் உன்னை என் காதல் விஷயத்தில கட்டாயப்படுத்துவேன்னு மட்டும் நினைச்சு கவலைப் பட வேண்டாம்.

அப்பா கிட்ட உன்னோட படிப்பு முடிஞ்சதும் நாம கல்யாணம் செஞ்சுக்கப் போறதா உன் கிட்ட சொன்னதெல்லாம் நீ இங்கேயிருந்து போய்ப் பிரச்சனையில மாட்டிக்குவியோன்னு சும்மா அந்த நேரத்துக்கு உன்னைப் பயமுறுத்தி வைக்கத்தான்.

நான் அந்த அளவுக்கு எல்லாம் எங்க அம்மா அப்பா கிட்டே பேச முடியாது. என் அப்பா தோலை உரிச்சு உப்புக் கண்டம் போட்டுடுவாரு. அம்மாவும் அப்படித்தான் குரல் தேய்ந்தவன்.

ஒரு பொண்ணுக்கு இப்படி உதவி தேவை, அவை என்னைக் கண்டாலே எரிஞ்சு விழுவா, சொல்லி புரிய வைக்க முடியாத நிலைமை. கூட்டிட்டு வரட்டுமான்னு கேட்டிருந்தேன். அம்மாவும், அப்பாவும் சரின்னு சொன்ன பிறகுதான் உன்னை நான் வீட்டுக்கு கூட்டி வந்ததே.

ம்ம்ம்

நான் என்னதான் நல்ல நோக்கத்தில இதெல்லாம் செஞ்சிருந்தாலும் நான் செஞ்சது எல்லாம் தப்புதான் மன்னிச்சுக்கோ சத்யா.

ஹரீஷ் அங்கிள்ட உன்னைக் கட்டாயமா அழைச்சிட்டுப் போறதா சொல்லி இருந்தேன். இங்கே அம்மா, அப்பா கிட்டேயும் அப்படித்தான் சொல்லி வச்சிருந்தேன். க்ளோராஃபார்ம் கொடுத்து அழைச்சிட்டு வந்ததெல்லாம் பக்கா வில்லத்தனமான வேலை. ஆனா, நான் அப்படிச் செய்யாமல் விட்டா வர வழியில, நீ கத்துற கத்துல நான் போலீஸ்ல தான் மாட்டி இருப்பேன். அதான் ஒன்னுக்கு மேல ஒன்னா ஏதோ எனக்குத் தோணினதெல்லாம் செஞ்சுட்டேன். உனக்கு ஒரு ஆபத்து, அதிலருந்து காப்பாத்தணும் இது மட்டும் தான் அப்போது என்னை வழி நடத்திட்டு இருந்துச்சு, ஆனால் அதைச் செஞ்சதுக்கு அப்புறமா மனசுக்குள்ள ஒரே குற்ற உணர்ச்சியா இருந்தது. ஸாரி சத்யா. அயாம் சோ ஸாரி.

காலேஜ்ல உன்னைத் தொந்தரவு பண்ணினதுக்கும், இப்ப செஞ்ச எல்லாத்துக்கும் உன்னை என்னால மன்னிக்க முடியறது கஷ்டம் தான் ஆனா, ப்ளீஸ் என்னை மன்னிச்சுக்கோ, சொன்னவன் சென்று விட்டான்.

அடுத்த நாள் காலை அழுகையை அடக்கிக் கொண்டு சந்திராம்மாவிடமிருந்து விடைப் பெற தத்தளித்துக் கொண்டிருந்தவளை கார் வரையில் கொண்டு சேர்க்கும் முன் ஒரு வழியாகிற்று.

“அதுதான் அடுத்த லீவுக்கும் நீ இங்கதான் வரப் போறியே, பின்னே எதுக்கு இவ்வளவு கவலை… ம்ம்” ஆறுதல் படுத்தியவரின் வார்த்தையில் ஏதோ ஒன்று அவளுக்குச் சட்டென்று தோன்ற பளீரிட்டவள் கலக்கம் நீங்கி அமைதி அடைந்தாள்.

அவருடைய வார்த்தைகளைக் கேட்ட அருமை மகனோ திடுக்கிட்டு அன்னையையே பார்த்தான்.

“அப்போ இது விடாது கருப்பு”

போலிருக்கே சத்யாவைக் குறித்துத் திகிலோடு எண்ணிக் கொண்டவாறே பெற்றோரிடம் விடைப் பெற்று காரை இயக்கியவன் போகிற வழியில் சத்யா கேட்ட கேள்வியில் திடுக்கிட்டு அவசரமாய் ப்ரேக் போட்டதில் எதிரில் வாகனங்கள் வராத காலை நேரமாகையால் விபத்தினின்று தப்பித்தான்.

அவள் கதிரிடம் அப்படி என்னதான் கேட்டிருப்பாள்?

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here