23. காதலும் வசப்படும்

0
701
Kadhalum Vasapadum

அத்தியாயம் 23

சத்யாவின் சுடிதார் இளம்பச்சை நிறத்தில் இருந்தது. அது அவளது நிறத்திற்கு வெகுவாகப் பொருந்திப் போய்க் கொடிப் போலவே அவளைக் காட்டியது. சந்திராம்மாவின் கவனிப்பிலும், ஊரின் இயற்கை செழுமையான காற்றிலும், நீரிலும், உணவிலும் சத்யா வெகுவாக அழகாய் மாறி இருந்தாள்.முகத்தில் புன் முறுவலும், தன்னம்பிக்கையும் அவளது அழகுக்கு மேலும் அழகு சேர்த்தன.

அவள் முன்பிருந்த சத்யா இல்லை. இப்போது யாராவது அவளிடம் வாலாட்டினால் பயத்தைக் கேடயமாகக் கொள்ள வேண்டிய தேவை அவளுக்கு இல்லை. நேர் கொண்ட பார்வையாலேயே எதிர்கொள்ளும் திறன் பெற்றிருந்தாள்.

பச்சைக் கிளியே தான்… அவளைப் பார்த்தவாறு காரை இயக்கிக் கொண்டிருந்தவன் மனதிற்குள் எண்ணிக் கொண்டான். தன் வாழ்க்கைக்குள்ளாக வர இயலாத அந்தப் பச்சைக் கிளியை நினைத்து பெருமூச்சு எழுந்தது. இப்போது அவள் பின் சீட்டில் அமர்ந்து சொகுசாக வர அவன் அவளுக்குக் காரோட்டி போலத் தெரிந்தது,

கதிர், கதிர்… குரலெழுப்பினாள்.

அதென்ன கதிர் குதிர், நான்கைந்து வயது பெரியவன் என்பதற்காகவாவது ஒரு மரியாதை வேண்டாமா? மனதுக்குள்ளாகச் சிடுசிடுத்துக் கொண்டான்.

சொல்லு சத்யா?

இல்ல நீ அன்னிக்கு…

ம்ம்…

காபேடேரியால……

ம்ம்…

என் கிட்ட கேட்டில்ல?

என்ன கேட்டேன்?

நான் செட்டிலானதும் என்னை மேரேஜ் பண்ணிக்கிறியான்னு கேட்டல்ல?..…

இவ எதுக்கு இந்தக் கதையை எடுக்கிறா? மனதிற்குள்ளாக நெருடலாய் உணர்ந்தாலும் உம்… கொட்ட மறுக்கவில்லை அவன்.

அப்படின்னா நான் நீ அன்னிக்கு கேட்ட கேள்விக்கு இப்ப ஓகேன்னு சொல்லட்டுமா?

என்ன்ன்ன்ன்னது…?? அதிர்ந்து விழித்தவன் ஸ்டீயரிங்கில் கவனம் சிதற, பின்னோக்கி பார்த்தவன் காரை ஒரு வழியாக ஒடித்துத் திருப்பி ஓரத்தில் நிறுத்தினான்.

உனக்கு இந்த விஷயம் பேச இந்த நேரம் தான் கிடைச்சுதா? பாரு இப்ப மட்டும் எதிர்ல ஏதாச்சும் வண்டி வந்திருந்தா நாம ரெண்டு பேரும் பரலோகம் போய்ச் சேர்ந்திருப்போம்.

ஸாரி கதிர்……. அவளும் பயந்திருப்பாள் போலும்,

சரி கீழே இறங்கு, இப்ப உடனே எல்லாம் என்னால கார் எடுக்க முடியாது கதவை திறந்து இறங்கியவன் சத்யாவும் இறங்க காத்திருந்தான்.

வா, கொஞ்ச நேரம் இங்கே நடக்கலாம்.

இணைந்து நடக்கும் போதும் பச்சை பசும் வெளிக்கும், பச்சை உடை அணிந்து தன்னருகே நடக்கும் அவளுக்கும் அவனுக்கு வித்தியாசமே தெரியவில்லை. அவளும் தன்னோடு நடந்து வருகின்றவன் நேர்த்தியான உடையிலும், சில நாட்களாய் அறிந்து கொண்ட அவன் நேர்மையிலும் அவனைக் குறித்துச் சிந்தித்தவளாய் கவனிக்கலானாள்.

“வா டீ குடிக்கிறியா?” கதிரின் கேள்விக்கு

“வீட்டிலதான் குடிச்சுட்டு வந்தேன்ல வேணாம்.”

“சரி வேணான்னா போ, அண்ணன் எனக்கு ஒரு டீ” என்றவனாய் அந்தச் சின்ன டீக்கடையில் அமர,

“எனக்கொரு காஃபி” என்றவளாய் அவனருகே அவளும் அமர்ந்தாள்.

“ஷப்பா, முடியலைடா சாமி” என்றவனாய் அவளைக் குறித்து மனதுக்குள் அலுத்துக் கொண்டாலும், அவளைக் கண்டு கொள்ளாமல் டீ வாங்கிக் குடிக்கலானான்.

எனக்கொரு சுசியம், இல்ல ரெண்டு பார்சல் வாங்கிக் கொண்டிருந்தாள்.

கேள்வியாய் பார்த்தவனுக்கு, “இல்ல வழியில பசிக்கும்ல அதான்“ அசடு வழிய பதில் கொடுத்தாள். பணம் செலுத்தி விட்டு வயல் வரப்புகளைப் பார்த்தவாறு காரை நோக்கி திரும்ப நடந்து கொண்டிருந்தனர்.

சத்யா நீ எதுக்கு என் கிட்ட கொஞ்சம் முன்னாடி அப்படிச் சொன்ன? என்னை மேரேஜ் செஞ்சுக்கிறதா?

‘எனக்குத் தோணுச்சு நான் சொன்னேன்’ சமாளித்தவளிடம் முறைத்தவன்,

“அடி பிச்சிருவேன் பார்த்துக்கோ, என் அம்மாகிட்ட நீ கொஞ்சனும்கிறதுக்காக என்னைக் கட்டிக்கிட நினைக்கிற, உன் கள்ளத்தனம் எனக்குப் புரியாதுன்னு நினைச்சியா?”

அப்ப முடியாதுங்கிறியா? அப்படின்னா உனக்கு ராக்கி கட்டி நான் உனக்குத் தங்கச்சி ஆகிடவா?

என்னைக் கொலைகாரனா ஆக்கிடாத நான் சொல்லிட்டேன் பார்த்துக்கோ’

முறைத்தவாறே கதிர் காரை எடுத்தான் அவளை ஹாஸ்டல் விடும் வரை திரும்பியும் பார்க்கவில்லை.

கதிர் தன் வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

அவ்வப்போது சந்திராம்மாவுடன் சத்யா போனில் வளவளப்பது வாடிக்கை ஆகிற்று. கதிர் ஊருக்கு போகும் போதெல்லாம் அவனுக்குக் கொடுத்து விடுவது போலவே சத்யாவுக்கும் ஊறுகாய், முறுக்கு, அதிரசம் எனப் பார்சல்கள் அனுப்பி விடுவார் சந்திரா.

முகத்தை எட்டூருக்கு நீளமாய் வைத்தபடி அவனும் பேருக்கு வந்து டெலிவரி கொடுத்துச் செல்வான்.

“அத்தம்மா, மாமா எப்படி இருக்காங்க” கேட்டால் முறைப்போடே பதில் தருவான். இரண்டாம் வருடப் படிப்பின் அரைவருட பரீட்சை அடுத்து வந்த விடுமுறையில் தானாகவே பயணம் செய்து இரண்டொரு நாட்கள் கதிரின் வீட்டிற்குச் சென்று அவள் தங்கி வந்தாள்.

அவ்வப்போது இப்படிப் பயணங்கள் இருந்து வந்தன. எப்போதுமே கதிரும் அவளும் சந்திக்கும் வாய்ப்பு மறுபடியும் கிட்டவில்லை. மூன்றாம் வருட படிப்பு முடிந்து அவளது கனவான வழக்கறிஞர் ( L L B) படிப்பிற்குச் சேர்ந்து அந்தப் படிப்பும் நிறைவுக்கு வரவிருந்தது. ஏறத்தாழ 4 வருடங்கள் அவளுக்கும், அவளது அத்தம்மா & மாமாவுக்குமிடையே நல்லதொரு குடும்பப் பிணைப்பு உண்டாகி விட்டிருந்தது.

அப்போதுதான் ஒரு நாள் கதிர் அவளை அலைபேசியில் தொடர்பு கொண்டு தான் அவளைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினான்.

எதற்காகக் கதிர் அழைக்கிறான்? எனத் தெரியவில்லையே என எண்ணியவளாக அவனைச் சந்திக்கச் சிம்பிளான ஒரு புடவை அணிந்து, எளிமையான அலங்காரத்தோடு காத்திருந்தாள்.

அது ஒரு ரெஸ்டாரெண்ட் எதிரெதிரே அமர்ந்தனர்.

கதிர் இப்போது இன்னும் பெரிய மனித தோரணையாடு மாறி விட்டிருந்தான். அவனது தொழில் சிறப்பாகச் செல்வதாக அத்தம்மா சொல்லி கேள்விப் பட்டிருந்தாள். அவனுக்காக அவள் உள்ளத்தில் எப்போதும் நன்றி உணர்ச்சியும், அவன் நலன் நாடும் பிரார்த்தனைகளும் உண்டல்லவா?

எவ்வளவு நல்லவன்? எப்போது சிந்தித்தாலும் அவனுடைய குணநலன்கள் அவளை ஆச்சரியப்படுத்தும். அத்தம்மா, மாமா ரெண்டு பேரோட பிள்ளை இப்படி இல்லைன்னாதான் ஆச்சரியப்படணும் என அடிக்கடி எண்ணிக் கொள்வாள்.

அவள் பார்வை அவனையே மொய்த்திருக்கச் சங்கடமாய் அவளை ஏறிட்டவன்,

சத்யா, நாளைக்கு அம்மா உனக்குப் போன் பண்ணுறதா சொன்னாங்க?

அதுதான் அடிக்கடி பேசறோமே? நாளைக்கு என்ன புதுசா? என எண்ணியவள் புரியாமல் தன் குட்டிக் கண்களை மலர்த்த,

நாளுக்கு நாள் மிளிரும் அவளது அழகில் ஏற்கெனவே சொக்கிப் போய் இருப்பவனுக்கு அந்தப் பார்வை தாங்கவியலாததாக இருந்தது. என்னதான் அவள் மீது பலவித மனத்தாங்கல்கள் இருந்தாலும், அவன் காதல் கை கூடாது எனும் நிலைமை புரிந்தாலும் அவனால் அவளை ஒரு நாளும் பாராமல் இருக்க முடிந்ததில்லை.

அவளது வழக்கமான நடவடிக்கைகள் தெரியுமாதலால் கல்லூரியிலோ, செல்லும் வழியிலோ எங்காவது அவளை அவன் தினமும் தூர இருந்தே பார்த்து விடுவான்.

“அதாவது எனக்குத் திருமண விஷயமா வீட்டில பேசிட்டு இருந்தாங்க” இழுத்தவன் உன்னை எனக்கு ச்சே ச்சே அதாவது என்னை உனக்குக் கட்டிக்க விருப்பமா? ன்னு கேட்பாங்களா இருக்கும்…”

அவனின் பதட்டம் , கூச்சம், படபடப்பு மிகவும் ரசிப்பிற்குரியதாய் தோன்றியது அவளுக்கு,

அதுக்கு? அவளது குரலில் கேலி இருந்ததோ? புரியாமல் திண்டாடினான்.

“இல்லை நீ அவங்களுக்காக என்னைக் கட்டாயம் கல்யாணம் பண்ணிக்கனும், தியாகம் அது இதுன்னு யோசிக்க வேணாம், கல்யாணம் எல்லாம் யாரோட கட்டாயத்துக்காகச் செஞ்சுக்கக் கூடாது. அது மனசுக்கு பிடிச்சவங்க கூடத் தான் செஞ்சுக்கணும்”

ம்ம்ம்

அதனால?

அதனால?

அம்மா உன் கிட்டே கேட்டதும் கல்யாணத்துக்கு வேணான்னு சொல்லிடு.


கதிர் நம்ப முடியாமல் அமர்ந்திருந்தான். இன்று அவன் திருமணம் முடிந்து மனைவிக்காக முதலிரவில் காத்துக் கொண்டு இருக்கிறான். அதுவும் யார் அவன் மனைவி? வேறு யார்? அவனது சத்யாவே தான். தன்னை மறுபடி ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.

எத்தனை சொல்லியும் கேளாமல் அவன் கையால் தாலி வாங்கிக் கொண்டாளே, வழக்கத்துக்கு மாறாக அங்கே முதலிரவில் கணவனுக்குப் படபடப்பாக இருந்தது. என்ன ஆஜானுபாகுவாய் இருந்தென்ன? அவனுக்கும் இருப்பது கையளவு இதயம் தானே?

சக்திம்மா… எங்கோ குரல் கேட்டது.வேறு யார்? ஒன்றுமே தெரியாதது போல இருந்து கொண்டு அவன் மனம் விரும்பியவள் சத்யாதான் எனக் கண்டு கொண்டவராய் அவன் ஆசைக்கேற்ப அவளை மணம் முடிக்கச் செய்த அவன் தாய் தானே.

என்னதான் அவள் எனக்குப் பிடித்தவளானாலும் அவளுக்கென்று ஒரு மனம் இல்லையா? பிடிக்காமல் அவள் என்னோடு வாழ்வது எப்படிச் சரிவரும்? மனம் முரண்டியது.

இதோ வந்துவிட்டாள். வாசலை தாளிட முயன்று உயரம் சரிவராமல் நிற்பவளுக்கு உதவி செய்யச் சென்றான் கதிர் தாளிட்டும் விட்டான். தன் முதுகுக்குப் பின்னே நிற்பவனை அறிந்தவள், திரும்பி அவன் மார்பில் சாய்ந்து தன் சின்னக் கைகளால் அவனைக் கட்டி வைக்க முயல, அதன் பின்னால் கதிருக்கு வேறு சிந்தனைதான் ஏது?

வருடக்கணக்கான தன் காதலை உணர்த்த முயன்ற அவனது ஒவ்வொரு முத்த அச்சாரத்திலும் அவள் உருகி, கரைந்து அவனோடு ஒன்றிப் பிணைந்து விட்டாள். காலை வரும் வரையிலும் அவர்களுக்குள் காற்றும் புக இயலவில்லை. அவன் அவளைக் காலையில் விடுவித்த போதோ, அவளுக்கு அவன் நெஞ்சத்தில் மஞ்சம் கொள்ளும் எண்ணமின்றி வேறெதுவுமில்லை.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here