25. காதலும் வசப்படும்

0
681
Kadhalum Vasapadum

அத்தியாயம் 25

இன்னும் இரண்டு மாதங்களானால் கதிர் மற்றும் சத்யாவின் முதல் திருமண நாள் வந்து விடும். தினம் தோறும் இருவரும் அவரவர் பணிக்கு சென்று திரும்புவதில் மிகவும் மும்முரமாக இருப்பார்கள் என்பதால், வாரநாட்கள் வேகமாக ஓடிவிடும். வார இறுதிகளில் தான் ஒருவரிடம் ஒருவர் பேச , நேரம் செலவழிக்க வாய்ப்பு கிடைக்கும். பல வார இறுதிகளில் அவளுக்கு ஓய்விருந்தாலும் கூட அவனுக்கோ சொந்தமாய்ச் செய்யும் தொழில் ஆதலால் வார விடுமுறை நாள் அன்றும் கூடத் தன் வேலைகளில் ஏதாவதொன்றில் ஆழ்ந்திருப்பான்.

வார நாட்களில் அவள் ஜீனியராகப் பணி புரியும் பிரபல வழக்கறிஞர் அலுவலகத்தில் அவளைக் கொண்டு விடுவதும், திரும்ப அழைத்து வருவதுமாகக் கதிர் தன் கணவன் ப்ளஸ் டிரைவர் வேலையைச் செவ்வனே செய்வான்.

அவன் அழைக்கச் செல்கையில் அவனைத் தேடி வரும் அவள் முகத்தில் ஜ்வலிப்பு சற்று அதிகமாகவே இருக்கும். அவளது அலுவலகத்தில் கணவன் அழைக்க வருவதைக் கொண்டு அவளைக் கிண்டல் செய்வார்கள் போலும் என எண்ணிக் கொள்வான், வெளி இடங்களில் அதிகமாய் அவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. தொழிலதிபர் தோரணை வந்து விட்டிருந்தது. அவனையே ஆசையாய் வருடும் அவள் கண்களையும் தான் சட்டென்று சந்திக்க மாட்டான்.

கணவன் தன்னைக் கவனிக்கிறானா இல்லையா? என்றெல்லாம் அவளுக்கு அதனை முக்கியத்துவப் படுத்தும் எண்ணம் இருந்ததில்லை. அவன் அவளை உடனே கவனிக்காமல் அரை மணி நேரம் கழித்துக் கவனித்தாலும் பூவாய் மலர்ந்து விடும் அவளது முகம்.

திருமணமாகி சில மாதங்களில் வார இறுதிகளில் வெளிவேலைகளை வெகுவாய் குறைத்துக் கொண்டு வீட்டிலிருந்து செய்யும் வேலைகளைக் கொண்டு வந்து செய்யப் பழகினான். ஒரு வகையில் வீட்டையே ஆபீஸாக்கி கொண்டாலும் மனைவியைத் தனிமையில் விடக் கூடாது என்கின்ற எண்ணமே அதன் காரணம்.

நானும் என் கணவனுமான இந்த வீடு தான் எனக்கான அழகான பாதுகாப்பான கூடு எனும் நிறைவு சத்யாவிற்கு வெகுவாக உண்டு.

கதிர் வேலையின் நிமித்தம் சென்னையிலேயே மிக வசதியான இடத்தில் வாங்கியிருந்த அபார்ட்மெண்ட் அது, அதைப் பார்த்து பார்த்து அலங்கரிப்பதில் சத்யாவுக்கு மிகவும் விருப்பம். சனி, ஞாயிறுகளில் கணவன் வீட்டில் இருந்தால் போதும் அவசர அவசரமாகச் சமையலை முடித்து விட்டுப் பூனைக் குட்டியாய் கதிரையே அவள் சுற்றி வருவாள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மால், கடற்கரை என்று தம்பதிகள் சுற்றி வருவார்கள். மாதமொருமுறை ஊருக்கு செல்வதையும் அவர்கள் மறப்பதில்லை.

தான் லேப்டாப்பில் எதையாவது செய்து கொண்டிருக்கத் தன் அருகாமையில் எப்போதும் அமர்கின்றவள் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறாள்? என்று ஆரம்பக் காலத்தில் கதிருக்கும் ஒன்றும் புரியவில்லைதான். சில வாரங்கள் இவ்வாறே கழிய அன்றும் முக்கியமான கோப்பு ஒன்றை சரிபார்த்து விட்டு விரல்களை நெட்டி முறித்தவன் அருகில் அமர்ந்திருந்தவளைக் கவனித்தான்.

எப்போதும் போலவே புத்துணர்வோடு இருந்தவள் தோற்றம் அவனை இப்போதும் கவர்ந்தது. முன்பொரு முறை பயமும் , அதிர்ச்சியும் கண்ட கண்களில் இப்போது நம்பிக்கையும், மகிழ்ச்சியும் மட்டுமே இருந்தது. தலையை அவள் புறம் சரித்து லேசாய் முட்டியவன்.

என்னாச்சு சூப்பர் உமன், இவ்ளோ பாஸ்டா சமையல் முடிச்சாச்சு.

ஒன்றுமில்லை என்பவள் போல அவள் தலையாட்டி வைக்க,

அப்படியா ஒன்னுமில்லையா? என அவள் இடக்கையைத் தன் கரத்துக்குக் கொண்டு வந்தவன் கரத்தில் முத்தமிட அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள் சத்யா.

ஓ தன்னிடம் நெருங்கி வருவதற்குத் தான் இத்தனை கூச்சமா?

எனப் புரிந்துக் கொண்டபின் கதிர் அவளைத் தனியாக இருக்கவிட்டதில்லை. போகப் போக வார இறுதிகள் வருவதே அவன் தோள் சாய்வதற்கே எனச் சத்யாவுக்கு அதன் பின்னர் மாறி விட்டதால். முதலில் அவ்வளவு கூச்சத்தோடு இருந்தவள் தான் இப்போது திகட்ட திகட்ட முத்தம் தரும் அளவிற்கு முன்னேறி விட்டாள் என்று எண்ணி கதிர் முறுவலித்துக் கொண்டான்.

அவனுக்கும் அவளுக்கும் இத்தனை மாதங்களில் பிரச்சனை என்று ஒன்று வருவதாக இருந்தால் அது ஊருக்குச் செல்லும் நாட்களகத்தான் இருக்கும். மற்ற நாட்களில் கதிர் ஒருவனைத் தவிர இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லவே இல்லை என்பது போல நடந்து கொள்பவள் ஊருக்கு சென்ற நிமிடம் முதல் அத்தம்மாவின் புடவை நுனி பற்றிக் கொண்டு தவமிருப்பாள்.

உணவு வேளைகளில் வந்து சரியாகச் சாப்பாடு பரிமாறுவதோடு சரி இரவில் தான் கணவனின் அறைக்கே திரும்புவாள்.

“ஏன் இப்பவும் அங்கயே படுத்துக்க வேண்டியதுதானே?” கடுப்படிப்பான் கதிர். உனக்கு என்னை விட என் அம்மாதான் உசத்தி இல்ல? என்பதின் வெளிப்பாடாக அவன் கோபங்கள் இருக்கும்.

அப்படியில்ல அத்தான் என அவனிடம் , கொஞ்சி மிஞ்சி சமாதானப்படுத்துவதே அவளது வேலையாக இருக்கும். மறுபடி அடுத்த நாள் கதிர் தேடும் போது, அத்தம்மா அத்தம்மா என்று அவருக்கு உதவி செய்து கொண்டு சமையலறையிலோ, இல்லை அத்தம்மாவிடம் தலைப் பின்னிக் கொண்டிருக்கக் கொடுத்து விட்டு அவரிடம் ஏதாவது கதைப் பேசிக் கொண்டு இருப்பாள்.

சந்திராம்மா மகன் மருமகளைத் தேடுவதை உணர்ந்ததும் அவளை விரட்டி அனுப்பி விடுவார். அவளும் போய் அவனுக்கு என்ன தேவையோ அதையெல்லாம் பார்த்துக் கொடுத்துக் கொஞ்சம் பேசிக் கொண்டிருப்பாள். சுந்தரம் மகனை அழைத்ததும், அல்லது ஊர் வேலைக்காக அவன் அங்கிருந்து நகர்ந்ததும் மறுபடி அத்தம்மாவுடன் ஒன்றி விடுவாள்.

மகனின் உணர்வை புரிந்துக் கொண்டிருப்பார் போலும் சந்திராம்மா. ஒரு நாள் கதிரை அழைத்துத் தனிமையில் அவனுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்து விட்டார்.

“கதிரு, நான் உனக்கு மட்டும் அம்மான்னு இல்லை, சக்தி புள்ளயும் என்னதான் அம்மான்னு மனசில நினைச்சு வச்சிருக்கு. அதான் ஒட்டிக்கிட்டே திரியுது போலிருக்கு. அதுக்காகவெல்லாம் புள்ளய திட்டாத என்ன?” எனச் சொல்ல

அதுக்குள்ள என்னைப் போட்டுக் கொடுத்துட்டாளா? என மனைவியைக் கோபமாய்த் தேடுபவனிடம்,

அட உனக்கு எதுக்கு அவ்வளவு கோபம், என் மருமவளை அப்படித் தேடுற? அவ ஒன்னும் உன்னைப் பத்தி என் கிட்ட சொல்லலை. இதை உன் முகத்தைப் பார்த்தாலே புரியுதே இதை நான் வேற கேட்டு தெரிஞ்சுக்கணுமாக்கும்”

அதட்டியவரிடம் அவன் கோபம் செல்லாமல் போகவே சிரித்து விட்டான்.

அப்படின்னா நம்ம வீட்ல மாமியார், மருமக சண்டை பார்க்க முடியாதுங்கிறீங்க?

தாயின் பேச்சை வெற்றிகரமாய்த் திசை திருப்பினான் அவன்.

போடா போடா இன்னிக்கு உன்னை நினைச்சு எங்க ரெண்டு பேருக்கும் கண்ணு சுத்திப் போடணும் என்று சிரித்தவாறே நகர்ந்து விட்டார் சந்திராம்மா.

தான் கதிரை சோதனை சுண்டெலியாய் பாவித்துச் சமைத்து பழகிய அத்தனை பதார்த்தங்களையும், இருக்கும் சில நாட்களில் ஊரில் தன் மாமனார், மாமியாருக்கு சமைத்துப் பரிமாறுவாள்.

சுவை முன்னே பின்னே இருந்தாலும், நல்லாயிருக்கு என்று சொல்லி சுந்தரம் ஐஸ் கட்டியையே மருமகள் தலையில் வைத்து விடுவார். நல்லாயில்லைடி, உப்பு குறைச்சல், உரப்பு அதிகம் என்று காட்டுக் கத்தலாய் கனைக்கும் கணவன் பேச்சுக்கு ஊரிலோ சற்றும் மதிப்பிருக்காது.

“என் அம்மா, அப்பாவை கைக்குள் போட்டுக் கொண்டாள் ராட்சசி’ எனப் பெருமிதமாய் மனதிற்குள் அவனும் பொருமிக் கொள்வதுண்டு.

தான் கராத்தே கற்றுக் கொடுத்த பள்ளியின் மாணவர்களை ஊருக்குச் செல்கையிலெல்லாம் அவ்வப்போது சந்தித்து வருவாள். சில நேரங்களில் தங்கள் டீச்சர் வந்தது அறிந்ததும் அவர்களும் வந்து சந்தித்துச் செல்வர்.

எப்போதாவது நேரம் கிடைக்கும் போது கணவனின் அலுவலகம் பக்கம் எட்டிப் பார்த்து சில சில மாற்றம் செய்து வருவாள். அவனது தோழர்கள் அவ்வப்போது வீடு வந்து செல்வார்கள். சில வார இறுதிகளில் நட்புக்கள் தங்கள் குடும்பங்களோடு ஒன்று சேர்ந்து யாராவது ஒருவரின் வீட்டில் கொட்டமடிப்பதுவும் உண்டு. சத்யா அவளது தோழி ஆர்த்தியோடு அலைப் பேசி தொடர்பில் இருக்கிறாள். ஆர்த்திக் கல்லூரி படிப்பு நிறைவுற்ற உடனேயே திருமணம் முடிந்து அவளுக்குத் தற்போது 2 வயது ஆண் குழந்தை இருக்கிறது.

ஹரீஷ் அங்கிளிடம் வாரத்திற்கொரு முறையாவது வழக்கமாய்ப் பேசி நலம் விசாரிப்பதும் சத்யாவின் வழக்கமாய் இருக்கிறது.

வாழ்க்கை தெள்ளிய நீரோடையாய் சென்று கொண்டிருந்த போது அன்றொரு நாள் வெகு பதட்டத்தோடு கதிருக்கு போன் செய்தாள் சத்யா.

என்னம்மா?

நீங்க என்னைய இப்பவே நம்ம ஊருக்கு கூட்டிப் போவீங்களா? எனக்கு அத்தம்மாவை பார்க்கணும் போலிருக்கு… குரலில் ஏகத்திற்குப் பயம்.

ஏ சத்யா என்னாச்சுடா? ஏன் இப்ப உடனேயே போகணும்?

ப்ளீஸ் அத்தான்…

அதற்கு மேலும் அவனால் இருக்க முடியுமா என்ன?

அரக்க பரக்க தன் வேலைகளை மேனேஜரிடம் ஒப்படைத்து ஓடிவந்தவனுக்குக் கலங்கிய முகத்தோடு இருந்தவள் தான் கண்ணில் பட்டாள்.

உடனேயே காரை எடுத்தாலும் இரவுதான் வீடு போய்ச் சேருவோம் என்று அவனுக்குத் தெரியும். என்ன செய்கிறது எனச் சொல்லாமல் இப்படிப் பயப்படுத்திக் கொல்கிறாளே? என எரிச்சல் மண்டியது அவனுக்கு.

தான் இப்படி அவன் வேலையைச் செய்யவிடாமல் அழைத்ததில் கோபமாய் இருப்பான் என அறிந்ததாலோ என்னவோ அவள் பக்கத்துச் சீட்டில் அந்த ஓரத்தில் கதவை ஒட்டி அமர்ந்திருந்தாள்.

சற்று நேரத்தில் தன் மற்ற சிந்தனைகளெல்லாம் பின் தள்ளிச் செல்ல, எதற்காக அழைத்தாளோ? நாம் வேறு கடுமையாய் நடந்து கொள்கிறோமோ? என்று மனது ஒருபக்கம் சொல்ல,

அதென்ன? எப்போது பார்த்தாலும் இவளுக்கு அத்தம்மா, அத்தம்மா, பக்கத்தில் இருக்கும் என்னிடம் அவளால் தன் மனதில் உள்ளதை பகிர முடியாதா? என ஆற்றாமையால் கதிர் மனம் தத்தளித்தது.

கார் சீராக அந்தச் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது.

எட்டி மனைவியின் கையைப் பற்றினான் அவன்.

என்னடா?

கேட்டவனின் கேள்விக்குக் கண்களிலிருந்து நீர்மணிகள் இப்போது விழவா? இல்லை சற்று நேரம் கழித்தா? எனக் கேட்டவாறு கண்ணின் ஓரம் கோர்த்திருந்தது தெரிந்தது. சட்டென்று ஒரு துளி சிதறி விழுந்து கன்னத்தில் கோடாய் இறங்கியது.

இனிமேல் இப்படிப் பயணிப்பது சரி வராது என எண்ணியவன், நிதானமாகக் காரை ரோட்டின் ஓரத்தில் நிறுத்தியவன் அவளை இழுத்து, தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

என்னம்மா? நீ எதுவும் சொன்னாதானே எனக்குத் தெரியும்? இப்படி இருந்தா எனக்கும் பயமா இருக்கில்ல?

எனக்கு என்னன்னு தெரியலியே? மலங்க விழித்தவளை மேலும் படுத்தக் கூடாது எனத் தாமதித்தான்.

“அழக்கூடாது” என்றவனாய் அவள் கண்ணீரை தன் கைக்குட்டையில் ஒற்றி சேமித்தவன். சரி பின்னாடி சாஞ்சு தூங்கிக்கோ வசதி செய்து கொடுத்தான்.

சொல்லாமல் கொள்ளாமல் சாயுங்கால நேரம் வீட்டிற்கு வந்து சேர்ந்த மகனையும் , மருமகளையும் பார்த்த பெரியவர்களுக்கு மகிழ்ச்சியும், ஏனென்ற கேள்வியும் எழுந்தது.

அம்மா, அவளுக்கு என்னவோ தெரியலைம்மா ஒரு மாதிரி பயந்திருக்கா, என்னன்னு கேளுங்க. உங்களைப் பார்க்கணும்னு சொன்னது தவிர வேறொன்னும் சொல்லவே தயாரில்ல.

மருமகளோடு தனி அறைக்குச் சென்று வந்தவர்,

“வா கதிரு, பக்கத்து தெருவில ஒரு டாக்டர் இருக்காங்கள்ல அங்க போகலாம் வண்டிய எடு”

என்றார். சுந்தரத்தை வீட்டிலே இருக்கச் சொல்லிவிட்டு மூவரும் புறப்பட்டுச் சென்றனர்.

புதிராகவே மனைவியையும், அம்மாவையும் அந்தக் கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றவன் டாக்டர் கிறுக்கலாய் எழுதி தந்ததைக் கெமிஸ்டிடம் வாங்கும் வரையிலும் ஒன்றும் புரியாமல் தான் இருந்தான். அதைக் கண்டதும் அவன் ரோமங்கள் சிலிர்த்தெழுந்தன.

கர்ப்பமா? இல்லையா? எனப் பரிசோதிக்க உதவும் சாதனம் அது. அதுவரையில் இருந்த வேலை பரபரப்பு, தன்னிடம் ஒன்றும் சொல்லாமல் அவசரமாய் ஊருக்கு அழைத்து வந்த மனைவியின் மீதிருந்த கோபம், எப்போதும் எதுவும் இருந்தால் கணவனான தன்னை விட்டு விட்டு அத்தம்மாவை நாடும் மனைவியின் செயல் தரும் சிடுசிடுப்பு எல்லாம் மறைய ஏதோ ஒரு உல்லாச மன நிலைக்கு வந்திருந்தான் அவன்.

கையிலிருந்த அந்தச் சாதனத்தை மென்மையாய் வருடிக் கொண்டிருந்தான். க்ளினிக் கொண்டு சென்று அதை அம்மாவின் கையில் கொடுக்கவும் அவர் அதை உள்ளே கொண்டு சென்றார்.

சத்யாவை இப்போதே பார்க்க மனம் ஆசைப்பட்டது. எங்கே சென்று விடுவாள்?, என்னிடம் தானே வந்தாக வேண்டும். மனதை சாந்தப் படுத்திக் கொண்டான்.

அம்மா வெளியே வந்து , கதிர் உள்ளே வருவியாம். என அழைக்க உள்ளே சென்றான்.

சத்யா கதிரைப் பார்த்த பார்வையில் ஆயிரம் உணர்வுகள் இருந்தன. வெகு உணர்ச்சிவசப்பட்டிருக்கிறாள் எனப் புரிந்து கொண்டான்.

கர்ப்ப காலத்து நடைமுறைகள், சாப்பாட்டு பழக்க வழக்கங்கள் எல்லாம் சொல்ல கவனமாகக் கேட்டுக் கொண்டான். அவர் எழுதிக் கொடுத்த அத்தனை மாத்திரைகளையும் வாங்கிக் கொண்டு அவர்களை வீட்டில் விட்டவன் உடனேயே காரை ஒடித்துத் திருப்பி எங்கேயோ புறப்பட்டுச் சென்றான்.

சத்யா கதிர் தன்னிடம் வந்து எதையாவது சொல்வான் எனக் காத்திருக்க அவன் எதையும் சொல்லாமல் திரும்பிச் செல்லவும் மனதிற்குச் சங்கடமாக ஆகிற்று.

அவனிடம் நான் கர்ப்பத்தைக் குறித்துப் பகிர்ந்துக் கொள்ளவில்லை எனக் கோபப் படுகின்றானோ? ஆனால், எனக்கே இந்த விபரம் ஒன்றும் தெரிந்திருக்கவில்லையே. அத்தம்மாவிடம் நான் சொன்ன விபரங்களைக் கதிரிடம் சொல்லி இருக்க வேண்டுமோ? எனத் திரும்பி திரும்பி பார்த்தவளை கைப்பற்றி வீட்டினுள்ளே அழைத்துச் சென்றார் சந்திராம்மா.

ஏங்க, நீங்க தாத்தா ஆகப் போறீங்களாம். டாக்டர் சொன்னாங்க முகம் விகசிக்கச் சொன்னவர் மருமகளை முன்னறையில் அமர வைத்து விட்டு சமையலறைக்கு விரைந்தார்.

சுந்தரம் மருமகளிடம் வாஞ்சையாக, “வாழ்த்துகள்மா, உடம்பை நல்லா கவனிச்சுக்கோ” எனச் சொல்லிக் கொண்டு நிற்க உள்ளே சமையலறையிலிருந்து ஏலக்காய் மணம் பரவப் பாயாசம் ரெடி ஆகிக் கொண்டிருப்பதை உணர்த்தியது.

சரேலெனக் காரில் வந்து இறங்கிய கதிரின் கைகளில் இனிப்புப் பொட்டலங்கள் இருந்தன.

உள்ளே வந்ததும் அம்மாவையும், அப்பாவையும் அழைத்து அவர்களிடம் இனிப்பைக் கொடுத்துத் தங்கள் இருவரையும் ஆசீர்வதிக்கக் கேட்டுக் கொண்டான்.

தனி அறையில் மனைவியைச் சந்தித்த போது தாள முடியாதவனாக இறுக்கக் கட்டிக் கொண்டு இடைவிடாமல் முத்தங்கள் பதித்தான். தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவனுக்கு வேறு வழிவகை எதுவும் தெரியவில்லை.

“ஸாரி அத்தான், எனக்கு ஒரு வாரமா தலைச் சுத்தலா இருந்துச்சா? ஏதோ ட்யூமர் இருக்குமோ? நாம சாகப் போறோமோன்னு தோணிடுச்சு அதான் அத்தம்மா கிட்ட வந்திடலாம்னு உங்க கிட்டே சொன்னா பயந்திடுவீங்கன்னு சொல்லலை” என்றவளை

“உன்னை என்னதான் செய்வது?” எனும் பார்வை பார்த்தவன் கோபம் மறைந்தவனாக மறுபடி கட்டிக் கொண்டான்.

அந்த வீடே திருவிழா கோலம் பூண்டது போலப் பளீரென ஆகியிருந்தது. தொடர்ந்த கவனிப்புகளால் சத்யாவுக்கு உண்பதையும் ஓய்வெடுப்பதையும் தவிர வேறு வேலை இல்லாதது போலவே ஆகிற்று.

அலுவலிலும் இயன்றவரை செய்துவிட்டு திரும்ப வந்து விடுவாள். முடிகின்ற வரை செய் என்று கதிர் அவளது வேலையைக் குறித்து அவளிடமே முடிவை விட்டு விட்டான். புன்னகை அமைப்பின் வேலைகளையும் சற்று குறைத்துக் கொண்டாள் அவள்.

மனைவியின் தாய்மை மாதங்களின் பொழிவை பார்க்க, பார்க்க திகட்டவில்லை கதிருக்கு. இரவில் தினமும் குழந்தையோடு பேசுவதும், குழந்தை ஐந்து மாதம் முதலாகத் தன் அசைவுகளால் அவர்களுக்குப் பதிலளிப்பதையும் உணர்ந்து ஆனந்தமாக நாட்கள் கடந்திருந்தன.

வளைகாப்பு ஒன்பதாம் மாதம் ஊர் முழுக்க அழைத்து விசேஷமாய்ச் செய்யவும் தாய் வீடும் அதுவே, மாமியார் வீடும் அதுவே என்றானதால் ஒரு நாள் மட்டும் சம்பிரதாயத்திற்காக உள்ளூரில் இருந்த சந்திராம்மா தம்பியின் வீட்டில் அழைத்துச் சென்று இருந்து விட்டுத் திரும்பத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார் சந்திரா.

சத்யாவிற்குப் பிரசவ வலி வரவும் அருகாமையிலிருந்த பெரிய மருத்துவமனைக்கு வீட்டினர் அழைத்து வந்திருந்தனர். கதிர் தன் மனைவியின் நிலைக் கண்டு ஏகத்திற்குக் கலங்கிப் போயிருந்தான்.

வலி வருவதும் போவதுமாக இருக்க, அருகாமையில் இருந்தவனின் கரத்தை இறுக்கப் பற்றி இருந்தாள் சத்யா. நகைகள் , கைவளைகள் எல்லாம் கழற்றி, நோயாளிக்குறிய அங்கி அணிந்து எந்நேரமும் பிரசவ அறைக்குக் கொண்டு செல்ல அவள் அப்போது ஆயத்தமாக இருந்தாள்.

உருண்டு திரண்டிருந்த வயிற்றில் தன் மற்றொரு கை வைத்திருந்தாள். மிகவும் பெருமிதமான உணர்வு அவள் முகத்தில் இருந்தது. தொடர்ந்த வலியால் கூட அதை மாற்ற முடியவில்லை. கர்ப்ப காலம் முழுவதிலுமே தினம் தன் குழந்தையிடம் வழக்கமாகப் பேசிக் கொண்டிருப்பவர்கள் அல்லவா?

குனிந்து தன் பிள்ளைக்கு முத்தமிட்டு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான் கதிர். சுற்றும் முற்றும் யார் குறித்தும் அவனுக்குப் பிரக்ஜை இல்லை. அவனும் அவன் மனைவியும் குழந்தையும் அவ்வளவுதான் அவன் சிந்தனையில்.

வேறு என்ன சொல்வானாக இருக்கும்? அம்மாவுக்குக் கஷ்டம் கொடுக்காம, பத்திரமா வந்திடுவியாம். இதைத்தானே அடிக்கடி சொல்வான். கணவனைக் குறித்து முறுவல் எழுந்தது அவளுக்கு. சற்று நேரத்தில் தாய்க்கும் சேய்க்குமான அந்தப் போராட்டம் தொடங்கியது.

உயிரின் மதிப்பென்ன? என அறிய வைக்கும் விதமான அந்தப் போராட்டத்தின் பலனாய், வெற்றியாய் ஜனித்தாள் கதிரின் மகவு,

[center]உயிருக்குள் உயிர் வைத்து[/center]

[center]உயிர் நோக உயிர் பெற்று[/center]

[center]உலகத்தின் இயக்கத்தை[/center]

[center]நடப்பிக்கும் ரகசியம்[/center]

[center]ஜனனம்[/center]

என்பது சரிதானே?

குழந்தை பிறந்ததும் மயக்கத்திற்குச் சென்று விட்டிருந்தாள் சத்யா. முதலில் குழந்தையைப் பார்த்தது கதிர். அவள் அப்படியே தகப்பனை உரித்து வைத்து பிறந்திருந்தாள். மனதில் எழுந்த மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தையில்லை.

உள்ளுக்குள்ளாக நிரடிக் கொண்டிருந்த முள் நேரம் பார்த்து வெளி வந்தது. கருப்பானவர்களை வெறுக்கின்றவள் என் மனைவி. அப்படி இருக்க எங்கள் குழந்தையை??

அவனை யோசிக்க விடாமல் குழந்தையை அழ, அழ சுத்தம் செய்யக் கொண்டு சென்றனர் செவிலியர். அவனுக்கு மகளின் குரல் தேவகானம் போல ஒலித்தது. தங்களைத் தாத்தா , பாட்டி ஆக்கிய பேத்தியைக் குறித்து அவனது பெற்றோருக்குப் பெருமிதம் தாளவில்லை.

அப்படியே தாத்தா போல என் பேத்தி, தன் கணவனைப் போலவே பேத்தி இருப்பதாகச் சிலாகித்த அம்மாவை எண்ணி மனதிற்குள் சிரித்துக் கொண்டான் கதிர். தான் என்னைப் போல என என் மகள் எனக் குறித்து ஒரு நொடி எண்ணினேனே தவிர நானே அப்பாவின் பிரதி என்று மறந்துப் போனேனே என எண்ணிக் கொண்டான்.

சத்யா பிரசவ அறையினின்று பெட்டிற்குக் கொண்டு வரப் பட்டிருந்தாள். அவளைப் பரிசோதித்து நலமாக இருப்பதாக மருத்துவர் சொல்லிச் சென்றார். சற்று நேரத்தில் களைப்பில் விரிந்தன சத்யாவின் கண்கள், விரிந்ததும் சுற்றும் முற்றும் இருப்பவர்களைப் பார்த்து சோம்பலாய் புன்னகைத்தவள் குழந்தையைத் தேடினாள். அதே நேரம் குழந்தையைக் கையில் ஏந்தி வந்து கொண்டிருந்தார் அந்த நர்ஸ்.

“அத்தான்” தன்னிடம் குழந்தையைக் காட்டுமாறு சைகையால் உணர்த்தியவளிடம் நர்ஸிடம் குழந்தையை வாங்கி அருகில் கொண்டு சென்று காட்டினான்.

வியப்பில் விரிந்தன சத்யாவின் விழிகள் “வாவ்” அவள் சத்தமில்லாத வாயசைவை அனுமானித்துக் கொண்டிருந்தான் கதிர்.

அத்தம்மா, வழக்கம் போலவே உற்சாக மேலீட்டில் குரலெழும்பாத தன் குரலில் தன் அத்தையை அழைத்தாள் சத்யா. இந்த முறை கதிர் மனதில் கோபமோ, பொறாமையோ இல்லை, மாமா எனச் சுந்தரத்தையும் அழைத்தாள்.

பார்த்தீங்களா அத்தம்மா மாமா, பாப்பா அத்தான் போலவே இருக்கிறா? அவளது கண்கள் நிறைந்து விட்டிருந்தன. நான் எப்பவுமே வேண்டிப்பேன் என் அத்தான் மாதிரியே எனக்குப் பாப்பா வேணும்னு, அதான் அவங்களை எப்ப வீட்டில இருந்தாலும் பார்த்திட்டே இருப்பேன், நான் நினைச்சது மாதிரியே அவங்களை மாதிரியே பாப்பா இருக்கா.

தன்னை இவ்வளவு பிடிக்குமா இவளுக்கு இப்போது கதிருக்குக் கண்ணில் நீர் கோர்த்திருந்தது. அத்தனை வலியிலும் கதிர் உதவியோடு எழுந்து அமர்ந்தாள். அவளின் முதுகிற்குத் தலையணையை அணைவாகக் கொடுத்திருக்கக் குழந்தையைப் பாலூட்ட வாகாக அவளின் மடியில் தலையணை வைத்துக் கொடுத்தார் சந்திராம்மா.

சுந்தரம் ஏற்கெனவே தனிமைக் கொடுத்து அங்கிருந்து வெளியேறி இருந்தார். பின்னோடு வெளியே வந்து நின்றவனுக்கு மேகங்கள் விலகி பளீரென வெளிச்சம் தந்த வெண்ணிலவு காட்சியளித்தது.

அவ்வெண்ணிலவு அன்று தான் வானில் உள்ளதா? இல்லையே? அது போலவே அவனவளின் காதலும் முன்பிருந்தே இருந்துள்ளது. அவனுக்கு அது காட்சி அளிக்கத்தான் இத்தனை நாட்களாகி இருக்கின்றது.

அவன் தேடிய காதல் அவனுக்கு வசப்பட்டு விட்டதன் உண்மையை உரக்கச் சொல்லி அந்நிலவு அங்கிருந்து நகர்ந்து, மேகக் கூட்டத்தில் கலந்தது. அப்போது அங்குச் சுற்றிலும் பரவி இருந்த ஒளியை யாராலும் மறைக்க இயலவில்லை.

சுபம் சுபம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here