1. துரத்தும் நிழல்கள்

0
643
துரத்தும் நிழல்கள்

கைத்துப்பாக்கி (Handgun) ஒரு கையினால் பிடித்துச் சுட பயன்படும் ஒரு சுடுகலனாகும். கைத்துப்பாக்கிகளில் பல வகைகள் உள்ளன. சிறு கைத்துப்பாக்கி, சுழல் கைத்துப்பாக்கி ஆகியன முக்கியக் கைத்துப்பாக்கி வகைகளாகும். சிறு கைத்துப்பாக்கியில் துப்பாக்கிக் குண்டுகள் துப்பாக்கியினுள் இருக்கும். சுழல் கைத்துப்பாக்கியில் சுழலும் நீள் உருளையின் துளைகளுள் குண்டுகள் இடப்படும்.

அதிகாலை நேரத்தின் குளுமையும் இதமான காற்றும், பதமான வெயிலும் மறைந்து சற்றே சுள்ளென்ற சூரியனின் நேரம் அது. வழக்கமாகக் குளிர் வாட்டும் அந்த டார்ஜிலிங்க் பகுதியில் அப்போது வேனிற்காலம். ஆதலால், சூரியன் மந்தகாசமாகத் தலையைக் காட்டியிருந்தான். மாணவர்கள் வழக்கமாக அணியும் உடைகளுக்கு மேலாகக் குளிர் உடையையும் அணிந்து இருந்தனர். அந்தப் படிப்பிற்கும், ஒழுங்கிற்கும், பாதுகாப்பிற்கும், பெயர் போன பிரபலமான கல்லூரியின் வகுப்பறை ஒன்றில் அமர்ந்திருந்தாள் ரிஷா.
இந்தியாவில் ஏற்றுமதி வர்த்தகத்தில் வளர்ந்து வரும் SKR Garments & Exports ன் பங்குதாரரில் ஒருவரான சண்முகம், செல்வியம்மாள் இவர்களின் தவப்புதல்விதான் இந்த ரிஷா.

தன் இறுதி வருட படிப்பில் இருப்பவளை வருணிப்பதானால் முதலில் அவளது சருமத்திலிருந்தே ஆரம்பித்தாக வேண்டும். ரோஜாப்பூவும் மஞ்சளும் குழைத்தால் போன்ற பிறர் பார்வைக்கே மென்மை புலப்படும் நிறம் கொண்ட சருமம் அவளுடையது. இந்தியப் பெண்களின் சராசரி உயரம் கொண்டவள். மேற்கத்திய வகையோ, இந்திய பராம்பர்ய உடைகளோ எந்த ஒரு உடை அணிந்தாலும் வனப்பாய் தெரியும் நளினமான உடல் அமைப்புக் கொண்டவள். ஒல்லி, குண்டு என்கிற வகையறாக்களில் சிக்கிக் கொள்ளாத சரியான உடல்வாகு அவளுடையது.

குணத்தைப் பொறுத்தமட்டில் எதையும் தர்க்க ரீதியாக அணுகுபவள். அதிகமதிகமாய் வாசிப்பதன் வெளிப்பாடுதான் அவளது அந்த அதீத சிந்தனைகள். சட்டென்று மனதிலிருப்பதை வெளியிடுமளவு பலபேருடன் பேசிப் பழகி வளர வாய்ப்புக் கிட்டாதவள். சொல்லப் போனால் அறிவு நிறைந்திருந்தாலும், வெளியுலகத்தினின்று விலகியே இருந்ததால் எதையும் சட்டென்று தீர்மானிக்க இயலாமல் தடுமாறுவதும், தயங்குவதுமே அவளின் பலவீனம்.
அன்று வழக்கம் போலவே கல்லூரியிலும் தன் சிந்தனையில் ஆழ்ந்துப் போயிருந்தாள் ரிஷா.

காலை நேர பரபரப்பு முடிந்ததுமே ஆரம்பப் பாட வேளைகள் அவளின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தது. தற்போது அதிகாலை எழும்பியதன் உடல் சோர்வோ, இல்லை வழக்கமான மனச் சோர்வோ, அவளைத் தாய் தந்தை குறித்த சிந்தனையில் ஆழ்த்தி விட்டிருந்தது.

பப்பும்மா சாப்பிடுவியாம் அப்புறமா பழம் எல்லாம் சாப்பிட்டுக்கலாம்………

செல்வி, பிள்ள சாப்புடும்போது தடுக்காத, அதுவும் சத்துத் தானே?
ரிஷாக்குட்டி பழம் சாப்பிட்டாலும், அதுக்கப்புறம் சோறு சாப்பிடணும் என்ன?

எனச் சண்முகம் மகள் சார்பாக வழக்கம் போலப் பேச, எங்கே கணவனின் செல்லத்தால் மகள் உடலுக்குத் தேவையான சத்துக் கிடைக்காதோ எனக் கணவரை முறைப்பார் செல்வி.
இரண்டு பேரையும் சமாதானப்படுத்த வேண்டியே சாப்பிட முடியாவிட்டாலும் வயிற்றுக்குள் உணவை திணிப்பாள் ரிஷா.
மொத்தத்தில் அவளுக்காக அவள் பெற்றோரும் அவள் பெற்றோருக்காக அவளும் என்று வாழ்ந்த நாட்கள் அவை. யார் கண் பட்டதோ? அம்மா, அப்பாவை பார்க்க கூடத் தவியாய் தவிக்க நேரிடும் என்று அவள் எப்போதுமே கனவிலும் நினைத்திருக்கவில்லை.

ஊரை விட்டு இவ்வளவு தள்ளி டார்ஜிலிங்கிற்கு வந்து இந்தப் பள்ளி மற்றும் கல்லூரியில் படிப்பாளென்றோ? தன்னோடு வந்து பள்ளியில் சேர்த்து பாதுகாப்பான இடத்தில் வீட்டிற்க்கு ஏற்பாடு செய்து, போக வர வாகனத்திற்கு ஏற்பாடு செய்து, அதை ஓட்டி வர பெண் ஓட்டுனராக ஷாரதாவை ஏற்பாடு செய்து அவரது கண்காணிப்பிலேயே தன்னை ஒப்படைத்து விட்டு சென்ற அன்னையின் சிந்தனையில் என்ன இருந்தது என்று இன்னும் வரை அவளுக்குப் புரியவில்லை. கேட்டாலும் அவர் சொல்வதில்லை. தந்தையும் நீண்ட நெடிய மௌனத்தில் ஆழ்ந்து விடுவார் குரல் தளுதளுக்கும். எதற்கு அவர்களை வேதனைப் படுத்த வேண்டும்? என்று இப்போதெல்லாம் அவள் அந்தக் கேள்விகளைக் கேட்பதை விட்டு விட்டாள்.

அந்த ஷாரதாவின் உடை கஞ்சி போட்ட காட்டன் சேலைதான், ஆறடி உயரமான. தன்னை விட்டுப் பிரியாமல் எப்போதும் தன்னோடு இருக்கும், தனக்குச் சமையல் முதல் எல்லா வேலைகளிலும் துணையாக இருக்கும், தன்னுடைய கார்டியன் என்று அறியப்படும் ஷாரதா எப்படிப்பட்டவர்? என்பது பலவருடங்கள் கழிந்தும் இன்னும் ரிஷாவால் கணிக்க முடியவில்லை. இப்போது மட்டும் என்ன? இனியும் ஷாரதாவை தன்னால் கணிக்க முடியாது என்றும் கூட இத்தனை வருடங்களில் அவர் அவளுக்கு அழுத்தமான நம்பிக்கை ஏற்படுத்தி விட்டார்.

பல நேரங்களில் அவரது இடையூறு அவளால் தாங்க முடியாததாக இருக்கும். இளம் வயதில் பெற்றோர் இதைச் செய்யாதே? இப்படி இருக்காதே? எனச் சொல்வதே பிள்ளைகளுக்குச் சுதந்திரத்திற்கு இடையூறாகத் தோன்றும் நிலை இருக்க, யாரோ? எவரோ? எனத் தெரியாத ஷாரதாவின் கண்டிப்பு அவளுக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லை.

“ஷாரதா சொல்லுறதை தான் கேட்கணும்”

என்று வருடத்திற்கு ஒரு முறை ஷாரதா விடுப்பு எடுக்கும் போதெல்லாம் சில நாட்கள் தனித் தனியாக வந்து செல்லும் தாயும் தகப்பனும் மந்திரமாக ஓதிச் சென்றிருக்க அதை மீறும் எண்ணம் ஒரு போதும் அவளுக்கு வந்ததில்லை. எப்போதுமே விரைத்த உடல்மொழியோடு இருப்பவரிடம் அவளால் மனம் விட்டு பேச முடியாது, இரவு முழுக்கத் தூங்க மாட்டாரோ என அவர் குறித்து எண்ணியிருக்கிறாள்.

பிறருடன் நட்பு பாராட்டவோ, அவர்கள் வீட்டுக்கு செல்லவோ வரவோ விடாதபடிக்கு ஒரு பக்கம் அவரது கண்டிப்பு இருக்கும் என்றால். இன்னொரு பக்கம் தன் அம்மா அப்பாவிற்க்கு அவள் நினைத்த நேரம் பேச முடியாத நிலை. வீட்டிலிருக்கும் தொலைப் பேசியில் வெளியே யாருக்கும் தொடர்பு கொள்ள முடியாது. இன்கமிங்க் அழைப்புக்கள் மட்டுமே எடுக்க அனுமதி. அதையும் கூட ஷாரதா தான் முதலில் எடுத்துப் பேசி உறுதிப் படுத்திவிட்டு தருவார்.

பல நாட்களாய் அம்மாவிடம் இப்படிப் பேச வேண்டும், இதைச் சொல்ல வேண்டும், அப்பாவிடம் இதைப் பகிர வேண்டும் என்பது மறந்துப் போக ஒருவர் மற்றவரின் குரலைக் கேட்டுக் கொண்டிருப்பதிலேயே நேரம் கழிந்து விடும்.

தனிமை, வெறுப்பு எனப் பற்பல சூழ்நிலைகள். பல நேரம் அதை எண்ணி அவள் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறாள். ஷாரதாவோ என்ன நடந்தாலும் அதைக் கண்டு கொள்வதே இல்லை.

சிறு பிள்ளைகள் முதலாய் கைப்பேசி வைத்திருக்க, இவளுக்கோ கைப்பேசி வைக்க அனுமதி இல்லை. இணையம் குறித்துப் பள்ளியில் கற்றுக் கொண்டது, தோழமைகளின் முகநூல், வாட்ஸப் தகவல்களை எட்டிப் பார்ப்பதோடு சரி. மற்றவைகளுக்கு அவளுக்கு அனுமதி இல்லை.

புத்தகங்கள், புத்தகங்கள் அவ்வளவு தான் அவளது உலகம். மூச்சு முட்டுகையில் மனதை விட்டுப் பேச அவளிடம் உள்ளவை அனைத்தும் ரகசியங்களைப் பாதுகாத்து வெளியே சொல்லத் தெரியாத, தன் கருத்திற்குப் பதில் கருத்துச் சொல்லாத, சிரிக்க வைக்கச் சீண்டி விளையாடாத, மௌனத் தோழிகளான டைரிகள் மட்டுமே.
அவற்றிலும் அவளது கனவான அம்மா அப்பாவோடு செல்லம் கொஞ்சி வாழும் வாழ்க்கைப் பற்றியதான விவரிப்புக்கள் மட்டுமே எழுதி வைத்திருப்பாள்… அது போகச் சின்னத் தோட்டம் ஒன்று வைத்து வளர்க்கிறாள். அவற்றில் பூக்கள் வளரும் போது கிடைக்கும் சந்தோஷம் அதை வார்த்தையால் சொல்ல முடியாது.
தோட்டவேலை செய்கையில் மனக்குமுறல்களை எல்லாம் மண்ணைக் கொத்துவதிலேயே வெளிப்படுத்துவாள். அதைக் கூட முகத்தில் இளக்கமே இல்லாமல் சற்றுத் தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பார் ஷாரதா.

இரவானதும் பின் வாசல் அமர்ந்து வானின் நட்சத்திரங்களோடு முணுமுணுவெனப் பேசிக் கொள்வாள். என்ன பேசுவாள்? என்பது அந்த நட்சத்திரங்களும், அவளும் மட்டுமே அறிவார்கள்.
இந்த தனிமை, முணுமுணுப்புகள், ஏக்கங்கள் இவையெல்லாம் வருடங்கள் பல கடந்து, அவளுக்கு மிகப் பழகி விட்டிருந்தன. ஆனால், இன்று ரிஷாவின் மனதை புதிதாக வாட்டுவது என்னவென்றால் சில நாட்களாக ஷாரதாவின் முகத்தில் தோன்றியிருக்கும் கலக்கமே?
வழக்கமான விரைப்பான கம்பீரம் அவரிடம் சில நாட்களாகக் குறைவுதான். காரணம் என்னவாக இருக்கும்? ம்க்கும் கேட்டுட்டாலும் சொல்லிட்டு தான் மறுவேலை பார்ப்பாங்க. ஜெயில் வார்டன் மாதிரி கெத்து காண்பிச்சுட்டு திரிய வேண்டியது. மூஞ்ச கல்லு மாதிரி வைக்க வேண்டியது.

ரிஷா நீ கெட்டிக்காரிதான் போ, அப்படியே ஷாரதா மேடம் பற்றி அழகா புட்டுப் புட்டு வைக்கிறியே? அவள் மனமே அவளைக் கிண்டல் செய்தது. அவளும் பதில் கொடுத்தாள் இந்த எஃகு மனுஷியைப் பத்தி நான் இவ்வளவு கவனிச்சு இருக்கேன்னா, நான் எந்த அளவுக்கு நேரம் போகாம, செய்யறதுக்கு வேற வேலை எதுவும் இல்லாம வெட்டியா இருக்கேன்னு சுலபமா கணிச்சிடலாம் ம்ம்க்கும்…
எனத் தன் சிந்தனையின் ஊடே தன்னையே நொந்துக் கொண்டாள். சிந்தனையின் வெளிப்பாடாகத் தன் கழுத்திலிருந்த மணிமாலையை வருடிக் கொண்டிருந்தாள் ரிஷா.

ஷாரதா அனுமதிக்காவிட்டாலும் கூட வகுப்பில் சில தோழிகள் அவளுக்கு உண்டு. அவற்றுள் புதிதாக நட்பாகி நெருங்கி இருந்த வர்ஷாவும் அடக்கம். அந்த வர்ஷாவின் உயரம் நாலே முக்காலடி அளவே தான் இருக்கும். அவள் பேசும் போது அக்கம் பக்கம் இருப்பவர்கள் சிரிப்பில் அதிர்வது நிச்சயமே, அவ்வளவு கலகலப்பானவள். பெரும்பான்மை மக்கள் பேசும் நேபாளி மொழி அவளது மொழி. அந்த வர்ஷா தந்த மாலைதான் அது. அதன் நிறக்கலவை மிக்க மணிகள் பிடித்துப் போக, இதை நீ கழற்றவே கூடாது என வர்ஷாவும் ஏகத்திற்கும் வற்புறுத்த சில நாட்களுக்கு முன்பு அணிந்ததை அவள் கழற்றவே இல்லை.

வருடக்கணக்காக அதே ஊரிலிருந்து வளர்ந்ததால் ரிஷாவுக்கு நேபாளி மொழியோடு கூடப் பெங்காளி மற்றும் ஹிந்தி மொழிகளும் சரளமாகத் தெரியும்.

தன் தோழி தந்த மாலையை ஷாரதா கண்டுக்கொண்டு கேள்விக் கேட்டு விடக் கூடாதென்று இங்கு ரிஷா தன் குளிர் உடைக்குள்ளாக ஒளித்தவாறு அதை அணிந்திருக்க, ஷாரதாவோ அதைக் கண்டு கொள்ளவே இல்லாமல் வேறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அதுதான் ரிஷாவின் அன்றைய வியப்பிற்குக் காரணம்.

ரிஷா ஷன்முக்கம்….

சற்று அழுத்தமான குரல் ஒலிக்கச் சிந்தனையினின்று விடுபட்டு திருதிருவென விழித்தாள் ரிஷா.

இந்த மிஸ் சும்மாவே ரொம்பப் பாசமாத்தான் நம்மளை பார்த்து வைக்கும். இப்ப கூப்பிடுறதைப் பார்த்தா ஒண்ணும் சரியா தெரியலியே? இப்படிப் பல்லைக் கடிச்சிட்டு கூப்பிடறதப் பார்த்தா நான் ரொம்ப நேரமா இவங்க கூப்பிட கூப்பிட கவனிக்காம இருந்திருப்பேன் போல…. ஆத்தாடி இன்னிக்கு என்ன ஆகப் போகுதோ?

“யெஸ் மிஸ்” தயங்கி எழுந்து நின்றாள்.

ஆள்காட்டி விரலை நீட்டி முதலில் ரிஷாவிடம் நிலைக்க விட்டு பின்னர் வாசலை சுட்டிக் காட்டியவரின் முகத்தில் வெகுவாகக் கடுப்பேறி இருந்தது.

“ஆக்ச்சுவலி மிஸ்…” தன்னை வகுப்பினின்றி வெளியேறச் சொல்கிறாரோ என்று அர்த்தப் படுத்திக் கொண்டவள் சாக்குப் போக்குச் சொல்ல காரணம் தேடியவளை இடையில் வெட்டினார்.

‘ஐ செட் கோ டூ ஆபீஸ் ரூம். சம் ஒன் காலிங்க் ஃபோர் யூ…

தனக்கா காலேஜிக்கு யார் அழைத்திருக்க முடியும்? குழப்ப ரேகைகள் சேர நெற்றிச் சுருங்க தன் இடத்தினின்று வெளி வந்து வாயிலில் தன்னை அழைத்துச் செல்ல வந்திருந்த ப்யூனோடு இணைந்து நடக்கலானாள்.

ஆபீஸ் ரூம் போன் ரிசீவர் வைக்கப் பட்டிருக்க எடுத்துக் காதில் பொருத்தினாள்.

யாரு ரிஷாவா பேசுறது?

பலவருடங்கள் கழித்துப் பேசிய அந்தக் கரகரப்பான குரலால் எழுந்த நெகிழ்வில் இளகி பதில் பேசும் முன்னே, எதிர் தரப்பில் அவளுக்குத் தெரியப்படுத்தப்பட்ட செய்தியால் திக்பிரமை பிடித்தார் போல வெகு நேரம் நின்றிருந்தாள் அவள்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here