10. துரத்தும் நிழல்கள்

0
549
துரத்தும் நிழல்கள்

அத்தியாயம் 10

மேற்காணும் பிஸ்டலின் பெயர் ‘Pistol Auto 9mm 1A’ இந்த வகைப் பிஸ்டல்கள் நமது இந்திய இராணுவம்,மத்திய ஆயுதக் காவல் படை மற்றும் மாநில போலிஸார்களால் அதிகம் பயன்படுத்த படுபவை ஆகும்.
செமி ஆட்டோமேடிக் மற்றும் செல்ஃப் லோடிங் வகையைச் சேர்ந்த இந்தப் பிஸ்டல் இவை 13 சுற்று திறன் கொண்டது.

அந்தப் பழைய கட்டிடத்திற்கு முன்னால் நின்றது டாக்ஸி. அவசரமாய் ரிஷாவின் மற்றொரு பையைக் கையில் எடுத்துக் கொண்டான்.

கைப்பையோடு இறங்கிய ரிஷா டாக்ஸிக்குப் பணம் கொடுக்கப் பர்ஸ் எடுக்கும் முன் அவளைத் தடுத்து ரூபாயை கொடுத்து டாக்ஸியை கட் செய்து அனுப்பி விட்டான்.

அக்கம் பக்கம் பார்வையைச் சுழற்றிக் கொண்டவனாக, சரி வா என்றவனாய் தனக்குச் சமமாய் அவளை நடத்திக் கொண்டே நகர்ந்தான். அந்தச் சாலை கொஞ்சம் ஜன நெருக்கடியானதாகவே இருந்தது.

இந்தரின் கண்கள் இங்குமங்குமாகச் சுழன்ற வண்ணமாகவே இருந்தது. அவசரமாய் லிப்ட் இல்லாத அந்தப் பில்டிங்கின் குறுகிய படியில் அவளை மூன்றாம் மாடிக்கு அழைத்துச் சென்றான். அந்தப் பில்டிங்கின் மற்ற எல்லாப் பகுதியும் அலுவலகமாகப் பயன்படுத்த பட்டு வந்தது புரிந்தது. மேல்மாடியில் ஏதோ ஒரு திருமண விழா நடைபெறுவதற்கான பாடல் சப்தங்கள் கேட்டன.

காலம்… வழக்கம் போலவே அன்றைய நாளும் தன் பணியில் அயராது செயல்பட்டதால் அப்போது நேரம் இரவு மணி ஒன்பதரையை நெருங்கிக் கொண்டு இருந்தது.

அந்தக் குறுகிய படிகள் ஏறி மேலே வர ரிஷியின் ஆபீஸ் கண்ணில் பட்டது. கண்ணாடிக் கதவை திறந்து இருவரும் உள்ளே நுழைந்தனர். கதவு தானாகவே அடைக்கப்படவும், மேல் மாடியின் பாடல் சப்தம் அடங்கி அமைதி நிலவியது. ஏசியின் காற்று இருவரின் முகத்தில் அறைந்து, அவர்கள் மூச்சில் மேலும் ஆக்ஸிஜன் சேர்த்தது.

முன்னறையில் ரிசப்ஷன் போல அமைந்திருந்த இருக்கையில் இருவரும் அமர்ந்தனர், ஏறத்தாழ சாவின் விளிம்பிற்கு மற்றொரு முறை சென்று வந்த உணர்வில் இருவருக்குமே பெருமூச்செழுந்தது.

‘ப்ளீஸ் கம்’
என்று கதவை சற்றே திறந்து உள்ளே இருந்து ஒரு நவநாகரீக தோற்றமுடைய வாலிபன் கதவை திறந்து எதிர் கொண்டான்.
குறுகலான அந்த இடத்திலும் கூட இண்டீரியரின் தயவில் தாராளமாக அந்த அறையின் தோற்றம் காணப் பட்டது. வெகுவான புத்தகங்கள் சுவற்றின் அலமாரியில் காணப்பட்டன.

அந்த அறைக்குப் பின்னால் ஒரு மறைவான அறை இருக்கும் போலும் இடையில் திரை ஒன்று மறைந்து இருந்தது. டேபிளில் சில நவீன எலெக்ட்ரானிக் சாதனங்களோடு கூட லேப்டாப் ஒன்றும் காணப்பட்டது. அருகில் சமீபத்திய மாடல் ப்ரிண்டர் ஒன்றும் அதன் அருகில் சமீபத்தில் எடுக்கப் பட்ட ப்ரிண்டுகள் நாங்கள் இன்னும் பைல் செய்யப் படவில்லை எனக் காட்டுவனவாய் பைலின் வெளியே நீட்டிக் கொண்டு, மெல்லிய ஏசிக் காற்றில் அசைவாடிக் கொண்டும் இருந்தன.

டேபிளில் லேப்டாப் அருகில் ஒரு டைரியும், பென் ஹோல்டரில் சில பென்களும் இருந்தன. சுவற்றில் பிண்ணனியில் இருள் சூழ் நீல வானமிருக்க, நிலவொன்று ஒளி பரப்ப, தங்கள் கால் குளம்புகள் காற்றில் மிதக்க ஓடிக் கொண்டிருக்கும் குதிரைகள் படமொன்று விஸ்தாரமாய் அலங்கரித்தது.

இப்படிப்பட்ட குதிரைப் படங்கள் அதாவது ஓடிக் கொண்டிருப்பன போன்றவை தங்கள் பார்வையில் படும்படி வைத்திருப்பது எல்லாம் உளவியல் ரீதியாக உத்வேகம் தருவன, நேர்மறை சிந்தனை கொண்டு வருவன எனத் தான் அறிந்திருந்த உளவியல் விபரம் ஒன்று ரிஷாவிற்கு மனதிற்குள் உலா வந்து போனது.

வாயிலில் ஒன்றுமே சொல்லாவிட்டாலும், அறைக்கு உள்ளே வந்ததும் தான் இந்தரோடு ரிஷி கைக்குலுக்கிக் கொண்டான்.

ஹாய் இந்தர், ஹவ் ஆர் யூ டூயிங்க்… லாங்க் டைம் நோ சீ…

தோளில் இருந்த பையைக் கக்கத்தில் இடுக்கியவளாய் ரிஷா அவர்களைப் பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தாள்.

அழகாய் குறும்தாடியோடு இருந்தான் ரிஷி. பார்மலாய் உடை அணிந்திருந்தவனின் தோற்றம் வெகுவாய் கவர்வதாய் இருந்தது.
யூ ப்ளீஸ் ஹேவ் யுவர் சீட் மேம், இந்தருடன் வந்த அழகான யுவதியை ரிஷி உபசரிக்க மறக்கவில்லை. அவளோ முன் பின் தெரியாத அந்த இடத்தில் தயங்கியவளாக அமர்ந்தாள்.

இந்தரும் டேபிளுக்குக் கீழான அந்த இடத்தில் அவளின் பெரிய பையைத் தள்ளி விட்டு ஆசுவாசமாய் ரோலிங்க் சேரில் அமர்ந்தான்.
பொதுவான சில விசாரிப்புகள், கீழீ இருந்த ஹோட்டலினின்று குளிர்பானம் தருவித்துப் பறிமாறல் நடந்து முடியவும் கேஸை கேட்க ஆர்வமானான்.

ரிஷா பாத் ரூமை உபயோகிக்கவா? என அனுமதி கேட்டு முகம் கழுவி வந்ததும் கொஞ்சம் இலகுவாய் உணர்ந்தாள்.

இந்தரிடம் ஏற்கெனவே தன் வாழ்வின் நிகழ்வுகளைப் பகிர்ந்திருந்ததால் ரிஷியிடம் தன்னைப் பற்றிய விபரங்கள் கூறுவதற்கு அவளுக்கு அவ்வளவு சங்கோஜமாய் இல்லை.
முதலில் தன்னுடைய இந்த இக்கட்டான நிலைமையிலிருந்து தப்பிப் பிழைத்து, தாய் தந்தையைக் கான வேண்டும் எனும் ஒரே விஷயம் தான் இப்போது அவளைச் செலுத்திக் கொண்டிருந்தது எனலாம்.
ஆரம்பிக்கும் முன் ரிஷா தயங்கினாள்…

அழகாய் முறுவலித்து, என்ன ரிஷா? என்ன யோசனை?

அதொன்றுமில்லை, பொதுவாக டிடெக்டிவ்களுக்கு அசிஸ்டெண்ட் இருப்பார்களே? நோட்ஸ் எடுக்க… எனவும் ரிஷி சன்னமாய்ச் சிரித்தான்.

அதற்கெதற்கு அசிஸ்டெண்ட் அதுதான் ரெகார்டர்கள் ஏராளம் வந்துவிட்டனவே mp3 அளவில் இருந்த ஒரு கையடக்கக் கருவியைக் காண்பித்தான். உன் உரையாடல் இதில் பதிவாகிவிடும், நீ கவலைப் படாதே. மறுபடி முறுவலித்தான் அறையே பிரகாசித்து அடங்கியது.

தனக்குத் தெரிந்தவற்றைச் சொல்லிக் கொண்டு இருந்தாள், பல்வேறு கேள்விகள் அதற்கான பதில்கள் என மணித்துளிகள் கரைந்தன.
அவள் சொன்னவற்றில் இருந்து சில குறிப்புகளை டைரியில் குறித்துக் கொண்டிருந்தவன் இடை இடையே தீவிர சிந்தனையோடு தலையில் பேனாவை தட்டிக் கொண்டிருந்தான்.

அந்த அறையில் இரண்டு ஆண்களோடு கூட இருந்தாலும் ஏனோ அவளுக்கு எந்த ஒரு பாதுகாப்பின்மை உணர்வும் வரவில்லை. மனதிற்குள்ளாகக் கண்ணியமான இருவரின் நடவடிக்கைகளை மெச்சிக் கொண்டாள்.

பாதி பேச்சில் இருக்கும் போதே இவர்களைத் துரத்திக் கொண்டு வந்த துப்பாக்கி சூழ் மனிதர்களைக் குறித்து அறிந்தவன் இங்கே எதுவும் பிரச்சனை இராது. ஆனாலும், பாதுகாப்பிற்காக உள்ளாகப் பூட்டிக் கொள்வோமே என அவர்களிடம்அனுமதிக் கேட்டு முன் கதவை பூட்டி வந்த பின்னர் அவனது கேள்வி பதில்கள் தொடர்ந்தன.

அத்தனையும் அவள் சொல்லி முடித்ததும், ரிஷி சிறிது நேரம் சிந்தித்தவாறு அமர்ந்திருந்தான். தன்னுடைய குறிப்புகளில் புரியாத விஷயங்கள் இருக்க அவற்றையும் அவளிடம் கேட்டுத் தெளிவு படுத்திக் கொண்டான்.

சரி நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பார்ப்போம். ரிஷாவை நோக்கி,

ம்ம்… முதலில் உன் பெற்றோர் எங்கே எனக் கண்டு பிடிக்க வேண்டும்.

ம்ம்… தலையசைத்தாள் ரிஷா.

கூடவே இப்போது உன்னைத் துரத்திக் கொண்டு இருப்பவர்களிடமிருந்து உன்னை முதலில் பாதுகாக்க வேண்டும்.

‘அதுதான் முதலில் செய்ய வேண்டியது ரிஷி, இந்தர் முந்திக் கொண்டு சொன்னான்.

முக்கியமானவை இரண்டுமே தான் பதிலளித்தான் ரிஷி.

என்னால் மறக்கவே முடியாது ரிஷி, அந்தக் கூட்டமான இடத்திலும் எப்படித்தான் இவளை அடையாளம் கொண்டு வந்தார்களோ?
பாந்திரா மற்றும் ஜூஹீவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இவள் மயிரிழையில் தப்பினாள். பாந்திராவில் முதலில் துப்பாக்கிச் சூடு நடைப் பெறுகையில் நானும் கூட என்னைத்தான் தேடுகிறார்கள் போலும் என்று அவளை நடுவில் வந்ததாகத் திட்டினேன்…. இந்தர் கூற, ரிஷா முறுவலித்தாள்.

இந்தரை இன்று சந்தித்தது என் பெற்றோர் செய்த புண்ணியமாக இருக்க வேண்டும் ரிஷி. இல்லையென்றால் நான் பாந்திராவிலேயே சமாதி ஆகி இருக்க வேண்டியது தான்…

எனக் கூறியவளை நோக்கி இந்தர் புன்னகைத்தான்,
அவர்களுக்கிடையிலான நட்பும் கூடவே புன்னகைத்தது.

சரி நான் உங்கள் சென்னை வீடு மற்றும் அலுவலகத்திலிருந்து தான் முதலில் விசாரணையை ஆரம்பிக்க வேண்டும், அதுவரையிலும் உங்கள் பாதுகாப்பு மிகவும் முக்கியம். எனக்குத் தெரிந்த செக்யூரிட்டி கார்ட்களிடம் பேசி ஏற்பாடு செய்து விடுகிறேன் என ரிஷாவிடம் கூறியவன்,

இப்போது நாம் செய்ய வேண்டிய முதல் வேலை ரிஷாவை பாதுகாப்பாக ஏதாவது நல்ல ஹோட்டலில் தங்க வைப்பதுதான்… இந்தரிடம் சொன்னான்.

பேச்சினூடே தன் ஆபீஸின் வாயில் பக்கம் கேமராவில் எட்டிப் பார்த்தான். தன் பில்டிங்கிற்குக் கீழே இருந்த கேமராக்களைக் கண்காணித்தான். கீழே செக்யூரிட்டியிடம் போனில் பேசி உள்ளே யாரும் அநாவசியமாக வரவில்லையே எனக் கேட்டு உறுதி செய்தான்.

தனக்குத் தெரிந்த செக்யூரிட்டி பாதுகாப்பு தரும் அலுவலகத் தலைமை ஒருவருக்குப் போன் செய்து நாளை முதல் ரிஷாவை பாதுகாக்க வேண்டிய தேவையை எடுத்துச் சொன்னான். அதற்கான தொகை எவ்வளவு என்பதையும் போனின் எதிர்முனை சொல்லச் சொல்ல தன் டைரியில் குறித்துக் கொண்டான்.

ரிஷா இந்தரையும், ரிஷியையும் மாறி மாறி கவனித்துக் கொண்டு அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

போனிலிருந்து நிமிர்ந்தவன், தேவைப்பட்டால் நாளையே மும்பை போலீசிலும் ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுத்து விடுவோம் என்றான்.
ரிஷாவும், இந்தரும் தலையசைத்தனர்.

அதுசரி இத்தனை நடந்திருக்கின்றதே? நீங்கள் இருவரும் முதலில் போலீசில் போக வேண்டும் என்று எண்ணவில்லையா? ஆச்சரியமாய்க் கேட்டான்.

ரிஷாவும், இந்தரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ரிஷா தான் பதிலளித்தாள்.

இல்லை ரிஷி எனக்கு இன்றைக்குத் தான் இப்படி ஒரு இக்கட்டான சூழலை அனுபவித்து இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும்? என்றே புரியாத நிலை, இந்தர் சொன்னதும் உங்களை நாடி வந்தோம்.

ஓ, அதற்கென்ன பரவாயில்லை, பொதுவாக எல்லோரும் போலீஸிடம் அல்லவா செல்வார்கள் அதனால் கேட்டேன்.

தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தவன், ‘சரி வாருங்கள் இருவரும், போகிற வழியில் உங்களை ஹோட்டலில் விட்டு விட்டு இவனை என்னோடு அழைத்துச் செல்கிறேன். மணி பத்தே முக்கால் ஆயிற்று.
முடிந்தால் செல்லும் வழியில் நாம் இரவு உணவை முடித்துக் கொள்ளலாம். கார் சாவியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

நான் அக்கம் பக்கம் கேமராவை அலசிப் பார்த்தேன், செக்யூரிட்டியிடமும் கேட்டுவிட்டேன் இந்தப் பக்கம் யாரும் வித்தியாசமாக வரவில்லை என்றார். ஒன்றும் பயமில்லை பாதுகாப்பாகச் சென்று விடலாம் என்று அறையைத் தாண்டி, கதவைத் திறந்து ரிசப்ஷனுக்கு வந்தான்.

டேபிளுக்குக் கீழே இருந்த ரிஷாவின் பெரிய பையைக் குனிந்து எடுத்துக் கொண்டு சற்றுப் பின்னாக இந்தர் ரிஷியைத் தொடர்ந்தான்.
அவனைத் தொடர்ந்து ரிஷா பின்னே வந்தாள்.

பீஸ் எவ்வளவுன்னு கேளு இந்தர்’

இருவரும் பேசிக் கொண்டு பின்னால் நின்றனர்.

‘கேஸ் முடிந்ததும் பீஸ் கேட்டு வாங்கிக்கிறேன் ரிஷா’, முன்னால் சென்ற ரிஷி பதில் கூறினான்.

‘உன் ப்ரெண்டுக்குப் பாம்புக் காது’ என இந்தரிடம் முணுமுணுத்தாள் ரிஷா… இந்தர் புன்னகைக்க,

‘ஆமாம், எல்லோரும் அப்படித்தான் சொல்லிக்குவாங்க ரிஷா’,

பின் திரும்பி அவர்களைப் பார்க்காமலேயே ரிஷாவிற்குப் பதிலளித்தான் ரிஷி.

ஆவென வாயைப் பிளந்தவள் இனி தான் பேசப் போவதில்லை எனக் கைகளால் சைகைக் காட்டி, தலையில் அடித்துக் கொண்டு, தன் வாய்க்கு பூட்டுப் போட்டுக் கொள்ளுவதாக இந்தரிடம் கையால் அபிநயம் பிடிக்க இந்தர் அவளைப் பார்த்துச் சன்னமாய்ச் சிரித்தான்.

முன் ரிசப்ஷன் அடைந்த ரிஷி தான் உள்பூட்டு போட்டிருந்ததை விடுவித்து, கைப்பிடி குமிழியைத் திருப்பித் திறக்கவும், சட்டென்று ‘குப்ப்ப்…’ எனக் காற்றில் ஒலி எழுந்து அடங்கியது.

தன் மீதான தாக்குதலினின்றித் தப்பிக்க அனிச்சையாய் ரிஷி பின்னால் சரிந்து நிமிர்ந்தான், நிமிர்ந்த வேகத்தில் கதவை மறுபடி அடைத்துக் கதவில் பின் நிற்க முயன்றான். அவனது ஐம்புலன்களும் விழிப்படைந்திருந்தது, வாயிலின் அந்தப் பக்கம் யாரோ இருக்கிறார்கள், ஒருவேளை ரிஷாவை தேடிக் கொண்டு வந்திருக்கலாம்.

அப்படியே கதவை அடைத்து, கிடைக்கும் வாய்ப்பில் போலீஸின் உதவி நாடுவது அவன் திட்டமாக இருந்தது. தன் கிளையண்டுக்கு ஆபத்து வருவதை அவன் விரும்பவில்லை.

நொடி வேகத்தில் மூளையைச் செயல்படுத்தியவன், அந்த மூன்றாம் மாடியில் இருந்த மற்ற அலுவலகங்கள் ஏற்கெனவே அடைக்கப் பட்டு இருந்ததால் உடனடி உதவி எதுவும் கிட்டாது என்பதை உணர்ந்தவனாக அவசரமாய் இந்தரை நோக்கி கத்தினான்.

இருவரும் ஆபீஸ் அறைக்குள் செல்லுங்கள், உள்ளுக்குள் அடைத்துக் கொள்ளுங்கள் சொல்லும் போதே அவனை எதிர்த்து வாயிலில் வந்து நின்ற அந்த ஆஜானுபாகுவானவன் அவன் கதவை அடைக்கும் முயற்சியை முறியடித்தான். அலேக்காக ரிஷியை சட்டையைப் பிடித்துத் தூக்கி வெளியில் வீசினான், ரிஷி படிகளில் உருண்டு விழுந்தவன் சில படிகள் கடந்ததும் சட்டென்று வில்லாய் எழுந்து நின்றான்.

ரிசப்ஷனைத் தாண்டி உள்ளறைக்குச் செல்ல முயன்ற இந்தர் மற்றும் ரிஷாவை தபதபவென மேல் மாடியிலிருந்து பாய்ந்து இறங்கியவர்கள் தடுத்து அவர்களைச் சுற்றி வளைத்தனர். இந்தர் தாக்குதலை ஆரம்பிக்க இரண்டாவது முறை கைச் சுற்றும் போதே அவனை இருக்கப் பிடித்துக் கையை முறுக்கி கழுத்தோடு சேர்த்து அணைத்துப் பிடித்திருந்தான் ஒருவன்.

வெளியே படிகளில் உருண்டு எழுந்த ரிஷி தன்னைச் சமாளித்துக் கொண்டு குனிந்து எழும்பிய வண்ணமே தன்னைத் தாக்கியவனை நோக்கி பாய்ந்து வயிற்றில் தன் தலையை ஆயுதமாக்கி மோதினான்.

ரிஷியின் மோதலில் ‘கும்க்க்’ வினோத ஒலி எழுப்பியவன் வயிற்றைப் பிடித்த வண்ணம் பின் சாய்ந்து விழ, மேல் மாடியிலிருந்து ஒருவன் படிச்சுவற்றில் இருந்து தாவி ரிஷியின் பின்னதாய் படிக்கட்டில் சூறாவளி போல நொடியில் இடம் மாறி நின்று கொண்டு ரிஷியின் பின்னங்கழுத்தில் வலுவாகத் தன் கையைப் பாய்ச்சினான்.

ரிஷி அந்தத் தாக்குதலின்று தப்பிக்கத் தன்னை முன்பாக உந்தியவனாய் குனிந்து முன் நோக்கி நகர, அதற்குள் வயிற்றில் அடிப்பட்டவன் நிமிர்ந்து நின்று தன் இரண்டு கைகளால் ரிஷியின் தலையைப் பற்றிக் கொண்டு சுவற்றில் மோத முயன்றான். கால் ஒன்றை சுவற்றில் பதித்து உந்தி எழும்பி மற்றொரு காலால் தன் தலையைப் பிடித்திருந்தவனுக்கு ஒரு உதையைப் பரிசளித்தான் ரிஷி, பின்னாலிருந்தவனோடு இன்னொருவனும் வந்து சேர, மாற்றி மாற்றி அந்த மூவரோடு சுழன்று சுழன்று ரிஷி தாக்கிக் கொண்டே வர அவர்களுக்குள் சண்டை தீவிரமடைந்திருந்தது.

தன் வலதுக் கை தன் கழுத்தையே அழுத்தி இருக்க இன்னொரு கை பின்பக்கம் முறுக்கி இருக்க வலுவான பிடியில் திமிரிக் கோண்டு இருந்தான் இந்தர். ரிசப்ஷனுக்கடுத்த அறையின் உள்ளே செல்லாதவாறு தடுத்து நின்ற இரண்டு தடியர்கள் முன்னால் ரிஷா நின்று கொண்டு இருந்தாள். அவளது இரண்டு கைகளும் பின்னால் நின்றவனால் கைகளால் கட்டப் பட்டு இருந்தது.

இப்போது ரிஷி சண்டையிட்டவாறே தன் அலுவலகத்தின் வாயிலில் வந்து இருந்தான்.

தான் நினைத்த படி போலீஸ் உதவியை நாட இயலாவிட்டாலும், எப்படியாவது இந்தர் மற்றும், ரிஷாவை அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைத்து விட வேண்டுமென்பதே அவன் நோக்கமாக இருந்தது, சடாரெனெ தன் அலுவலகத்தின் உள்ளே வந்து அவன் ரிஷாவை விடுவிக்க முயல, அங்கிருந்த தடியன் தன் கை முஷ்டியை ஓங்கி அவன் தலை மீது இறக்கினான், அது அடியல்ல இடி போலல்லவா இருந்தது.

ரிஷி நிலைக் குலைந்தான், தபதபவென அந்தக் குண்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக அவர்களைச் சூழ்ந்த வண்ணமே ரிஷியின் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். ரிஷியின் கைகள் முறுக்கப் பட்டு ஒருவன் அவனைப் பின்னாலிருந்து பிடித்துக் கொண்டான். ரிஷியும், இந்தரும் ரிஷாவும் இப்போது அவர்கள் பிடியில்.

தப்பித்துச் செல்ல மார்க்கமின்றிச் சுற்றிலும் அந்தத் தடியன்கள் நிற்க ரிஷாவின் மனம் அந்தக் களேபரத்திலும் இது ஜீஹீவில் துரத்தியதும், பிரபாவை தேடிச் சென்ற போது பின்வந்து பில்டிங்க் செக்யூரிட்டியிடம் விசாரித்ததுமான கோஷ்டி இல்லை எனப் புரிந்துக் கொண்டாள். அடுத்து என்ன செய்வது எனப் புரியாமல் அவள் மூளை ஏகத்திற்கும் மந்தமாகி இருந்தது.

ரிஷாவை கைப் பிடித்து இழுத்தான் ஒருவன் அவளை வெளியே அழைத்துச் செல்ல மற்றவர்கள் வழி ஏற்படுத்திக் கொண்டு முன்னே நகர்ந்தார்கள். ரிஷியை பிடித்துக் கொண்டிருந்த தடியன் வேலை முடிந்ததெனச் சற்றே அவன் பிடியை தளர்த்த வாயிலில் இழுபட்டுக் கொண்டிருந்த ரிஷா மீது பாய்ந்தான் ரிஷி.

அவளைத் தழுவிய ரிஷி புலம்பினான்,

‘ரிஷா மை லவ் உன்னைப் பாராமல் நான் எப்படி இருப்பேனோ? ஐ லவ் யூ மை டார்லிங்க்… இன்னும் ஏதேதோ பிதற்ற, ஏற்கெனவே கைகள் பின்னால் கட்டுண்டு இருக்க, இன்னொருவன் தோளோடு சேர்த்து அவள் கையைப் பிடித்திருக்கத் தன் மீது பாய்ந்து அணைத்து தன் உடலை தழுவிய ரிஷியின் செயலில் அதிர்ந்தாள், தடுமாறி நின்றாள்.

அவளைப் பற்றிக் கொண்டிருந்தவர்கள் இருவரும் தன் ஒற்றைக் கையால் ரிஷாவை பிடித்த வண்ணமே மற்றொரு கையால் ரிஷியை பிடித்துத் தள்ளினர். ரிஷியை தவறவிட்டவனை முறைத்தனர், அவசரமாய்ச் சில ஹிந்தி, மராட்டி கெட்டவார்த்தைகள் அவர்கள் வாயினின்று உற்பத்தியாகி சுற்றுப்புற சூழலை மாசுப்படுத்தி மறைந்தன.

ரிஷியை தவற விட்டவன் தனக்கு அது பெரிய அவமானம் எனும் மன நிலைக்கு வந்திருக்க மற்றவர்களால் தள்ளி விட்டதால் பின்பக்கமாய் விசையில் வந்தவனைப் பின்னாலிருந்து வேகமாய் உதைத்தான்.

அருகிலிருந்த மற்றொருவன் அவன் நெஞ்சில் தன் தன் கைகளைக் குவித்துத் தாக்கினான். வலியில் ம்ம்க்க் ஒலியெழுப்பியவாறு வயிற்றொடு மடங்கியவனாகக் கீழே விழுந்தான் ரிஷி.

இந்தரையும் முகத்தில் குத்தி மற்றொருவன் மூர்ச்சையாக்கினான், அதுவரை திமிறிக் கொண்டிருந்தவன் சரியவே அவனைப் பிடித்துக் கொண்டிருந்தவன் தள்ளி விட்டான். ரிசப்ஷன் இருக்கையில் விழுந்து உருண்டு கதவிற்குப் பின்னால் மடிந்து சரிந்தான் இந்தர்.

வாயிலில் சுருண்டுக் கிடந்த ரிஷியை குப்பைப் போல உள்ளே இழுத்துத் தள்ளி, இருவரையும் டிடெக்டிவ் ஆபீஸீலேயே உள்ளே அடைத்துப் போட்டு அவர்களின் மொபைலை தேடி எடுத்துக் கொண்டு வெளியிலிருந்து பூட்டி க்ரில் கதவை சாத்தினர்.

ரிஷாவை ஒருவன் தோளோடு கைப்போட்டு பிடித்து இருந்தான். வெளியில் பார்க்க ரொம்ப நெருங்கிய நட்பு போலத் தோன்றும் வகையில் அவளை நோக்கி சிரித்தவாறே அப்படியே கீழ்த்தளம் வரை கொண்டு வந்தான்.

அவள் பேசாதவாறு, உதவிக்காகக் குரல் எழுப்பாதவாறு துப்பாக்கியின் குளிரான இரும்பு உலோகமுனை மற்றொருவனால் அவளது பின்னங்கழுத்தில் பதிக்க வைக்கப் பட்டு இருந்தது. அந்த மற்றவன் தான் ரிஷாவின் கழுத்தில் துப்பாக்கி வைத்திருப்பதை வெளியில் இருப்போர் அறியாத வண்ணம் அவன் பின்னால் வந்தவர்கள் அவனை நெருக்கி இடித்துக் கொண்டு மறைத்தவாறே படிகளில் இறங்கினர். அனைவரும் பிறர் கண்ணில் தவறாகத் தெரியாத வண்ணம் வெகு இயல்பாய் நடந்தனர்.

கீழே ரோடு ஜனசந்தடி அற்றுச் சற்றே அடங்கி இருந்தது, அந்த வயதான செக்யூரிட்டி தாத்தா தன் இடக்கையில் சுண்ணாம்பைத் தடவி, வலக்கையால் தம்பாக்கூவை (tobacco) அதில் தட்டி, சுண்ணாம்பையும் பாக்கையும் தன் வலது பெருவிரலால் லயத்தோடு சில நொடி தேய்த்து தன் கீழுதட்டுக்கும் பற்களுக்குமிடையிலான மென்மையான சருமப் பகுதியில் அடக்கி, சீக்கிரமே மவுத் கேன்சர் வரப் போவதை உணராமல் கண்கள் சொக்கி அதன் சாற்றை ருசித்துக் கொண்டிருக்கையில் அவர்கள் அவரைக் கடந்து சென்றிருந்தனர்.

வெளியில் இருந்து பார்ப்போருக்கு வித்தியாசமாகத் தெரியாத வண்ணம் ஏதோ ஒரு விழாவிலிருந்து திரும்ப வருவது போலக் கலகலவெனப் பேசி சிரித்து அவர்கள் அந்தச் செக்யூரிட்டியை கடந்தார்கள்.

இந்தர் மற்றும் ரிஷியின் மொபைலை அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டான் ஒருவன். ரிஷி தவழ்ந்து உள்ளறைக்குச் சென்று லேண்ட்லைனை அடைந்து கீழே செக்யூரிட்டிக்கு தொடர்பு கொண்ட போது அவர்கள் ஏற்கெனவே அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டிருந்தனர்.

பின் சீட்டில் ரிஷா மயக்கமாகி கிடக்க மும்பையின் ஒதுக்குப் புறமான இடத்திற்குப் பயணித்து, மும்பையைத் தாண்டியும் பயணித்துக் கும்மிருட்டில் மாயமாய் மறைந்தது அந்த ஸ்கார்பியோ.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here