11. துரத்தும் நிழல்கள்

0
525
துரத்தும் நிழல்கள்

அத்தியாயம் 11

AK 103 என்பது AK47 ந் மேம்படுத்தப்பட்ட ரைஃபில் ஆகும்.இது 40 மி.மி அளவு கொண்ட கிரனெடை நிறுவும் அளவு திறன் கொண்டது. இராணுவம் மற்றும் போலீஸ் பயன்படுத்தும் துப்பாக்கி வகையில் இதுவும் ஒன்றாகும்.

அது ஒரு அடர்ந்த கானகம், அதன நடுவில் அக்கம் பக்கம் அதிக ஜன சந்தடியில்லாத, வெகு நாளாகப் பராமரிக்கப் படாத ஒரு கட்டிடம். எந்த வனத்துறை அலுவலரும் அடிக்கடி போய் வராத பகுதி அது. கவனிப்பாரற்ற அந்த இடத்தைத் தான் அவர்கள் தேர்ந்தெடுத்து இருந்தார்கள் போலும்.

சற்றே இடிந்த நிலையில் இருந்தாலும், முன்னறையும் படுக்கையறையுமாய், கழிவறையோடு சிதிலமாய் இருந்தது அந்த வீடு.

அதன் தூசு தும்புகள் நிறைந்த உள் அறையின் ஓரத்தில் ஒடுங்கி மயங்கிக் கிடந்தாள் ரிஷா. கண்ணுக்குள் உருளும் அவள் கண்மணிகள் அவள் கண்களைத் திறக்க முயற்சிக்கிறாள் என்று சொல்லியது. ஆனால், முன் தினம் இரவு மயங்கி தற்போது அடுத்த நாள் காலையை அடைந்து, மயக்க மருந்து கொடுத்து பல மணி நேரங்களாகியும் அவளால் அந்த மயக்க மருந்தின் வீரியத்தினின்று வெளியே வர முடியவில்லை.

அந்த மயக்கத்திலும் அவள் உதடுகள் வறண்டு தண்ணீருக்காக ஏங்கின. வாய்க்குள்ளாக எச்சிலை உறிஞ்சி உட்கொண்டாள். இரைப்பையோ உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் கதறியது. எதையோ சொல்ல எண்ணினாள். ஆனால், முடியவில்லை, மரத்துப் போன அவள் நாவும் ஒத்துழைக்கவில்லை.

அந்த முன் தினம் உடுத்தி இருந்த வெளிர் ஜீன்ஸீம், பச்சை நிற டாப்புமாக மயக்கத்தில் இருந்தவளருகே அவளோடு வந்திருந்த கைப்பை தலைகீழாகக் கவிழ்த்துக் கொட்டி சரிபார்க்கப் பட்டிருந்தது. சந்தேகப் படும்படி ஒன்றுமில்லையெனத் தெரிந்ததும் அப்படியே அத்தனை பொருட்களும் விசிறிவிட்ட வண்ணமாய் அங்கேயே அவளருகிலேயே கிடந்தன.

காற்றில்லாத அந்த அறையில் அவளது தலை முதல் கால் வரையிலும், புழுக்கத்தில் அணிந்திருந்த உடை தெப்பலாய் நனைந்து போயிருக்க, அவ்வெம்மையில் அவளது முடிகள் முகத்தில் ஒட்டிக் கொண்டு பரிதாபத்திற்குரிய விதமாய்த் தெரிந்தாள்.

அங்கே ஆளற்ற அத்துவான காட்டில் அவள் அநாதரவாகக் கிடந்தாள். பிறந்தது முதல் தரையில் தவழ விடாமல் கரத்திலும், தோளிலும் போட்டு வளர்க்கப் பட்ட தாய்க்கும் தந்தைக்கும் செல்லப் பிள்ளையாகிய அவள், தன் வாழ்வில் இப்படி ஒரு நாளை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

முன்னிரவில் ரிஷி எவ்வளவு அழகாகத் திட்டங்கள் தீட்டினான். அவர்கள் ஏற்பாட்டின் படியே எல்லாம் சரியாய் நடந்திருந்தால், நேற்றிரவே தான் ஹோட்டலில் சென்று பாதுகாப்பாகத் தங்கிய பின்னர் ரிஷியின் உதவியால் அம்மா, அப்பாவை கண்டு பிடித்திருக்கலாம்.

போச்சு, போச்சு எல்லாம் போச்சு, தன் கனவுகள் கண்ட வேகத்திலேயே முறிந்துப் போனதை எண்ணி அவள் நெஞ்சம் வெதும்பி விம்மியது.

தனக்கு மட்டும் ஏன் இந்த நிலை?

அம்மா… அரை முழிப்பில் தீனமாய் முனகினாள், அப்பா… முனகியவள் கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வெளிப்பட்டு வடிந்தது.

சிறகொடிக்கப் பட்ட அந்தப் பறவையிடம் இப்போதோ எதையும் எதிர்கொள்ளும் உத்வேகமோ, ஆர்வமோ இல்லை.

எதற்காகவோ துரத்தப் பட்டோம், எவ்வளவு முயன்றும் மாட்டிக் கொண்டோம். நம் எதிரி நம்மை விட வலுவானவன், இன்னும் இன்னுமாய் ஓடி ஓடி நான் எங்கே போகப் போகிறேன்?
எப்படிச் செல்லப் போகிறேன்? எனும் ஆயாசம் எண்ணம் வடிவில் உடலெங்கும் படிந்து மூளையை மழுங்கடித்து, அவள் உடலெல்லாம் வியாபித்து இருந்தது.
உடல் பலவீனம், மனச்சோர்வு, பசிப் பட்டினி எல்லாமே அவளை முற்றிலுமாய்ச் சோர்வடையச் செய்திருந்தது.

அறிஞர் ஒருவர் ஆய்வுக் கூற்றின் படி மனிதன் வாழ்வதற்காக மிகத் தேவையானவை மூன்று காரியங்களாம்.ஒன்று வாழ்வுக்கான அசைக்க முடியாததொரு நோக்கம், இன்னொன்று வாழ்க்கைக்கு ஆதாரமானவர்கள் எனும் உறவுகள், மற்றொன்று மனிதனை இயக்கும் அன்பு, காதல் போன்றதொரு உன்னத உணர்வு.
இப்போதோ, ரிஷாவிடம் இந்த மூன்றில் ஒன்றும் இல்லாமல் தனித்து இருக்கிறாளே. அவளிடம் வாழ்வை எதிர் நோக்கி போராடும் நிலை எதிர்பார்ப்பது வீணாகுமோ?

அவளது முன் தினம் ஆரம்பித்த ஓட்டம் நின்று மயக்கத்தில் கிடப்பதுவும் கூட அவளுக்குத் தேவைப் படும் ஓய்வை இப்போது நல்குகின்றதோ? என்னமோ?

நெற்றிச் சுருங்க மயக்கத்தில் உருளுகிறாள். ஆம் எத்தனையோ கேள்விகள் மனதில் குழப்பங்களால் மனதே சுருங்குகையில், நெற்றிச் சுருங்காதா என்ன?

அவளைச் சுற்றி சின்னச் சின்னச் சத்தங்கள், கண்கள் மெதுவாய் விழிக்கின்றன. அவளைக் கடத்திய மகாபனுவர்களைக் காணோம். வெளியில் காவல் நிற்கின்றார்களோ? என்னமோ?

அவளருகே வந்து நின்ற ஒரு பெண்ணை மட்டும் கண்டாள் படுத்துக் கொண்டு எதிரில் நிற்பவளை பார்க்கையில் தலைச் சுற்றிக் கொண்டு வந்த வண்ணம் பார்க்க இயலாமல் திணறினாள்.

எதிரில் இருந்த பெண் தன் எதிரில் தரையில் தரையில் போடப்பட்ட மீனாய் அசைவற்றுக் கிடந்தவளைப் பார்த்து எந்த உணர்வும் எழவில்லை. அவளிடம் பரிவோ, கோபமோ எந்த உணர்வும் இல்லை.
கிராமிய மொழியில் ஏதோ பேசிக் கொண்டு வந்தவள் தனக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றும் அவசர எண்ணத்தில் மட்டுமிருந்தாள்.

அரை மயக்கத்தில் இருந்த ரிஷாவை, பலம் கொடுத்து, எழுப்பி அமர வைத்தாள். உட்கார இயலாதவளாக ரிஷாவின் தலை சரியவும், மறுபடி தரையில் சாய்ந்து தூங்கி விடும் அபாயம் இருந்ததால், ரிஷாவை அந்தப் பெண் சுவற்றை ஒட்டி சாய்மானமாக அமர வைத்து விட்டு, தன் அருகே சில பாக்ராவும், மசாலாவும், வெங்காயமும் இருந்த உணவை அவளுக்கு ஊட்டி விட முயன்றாள். (நம் ஊர் கஞ்சியும் வெங்காயமும் போல அது மராத்தியருக்கான எளிய உணவு)

எதிர்ப்பே காட்டாமல், அல்லது காட்ட முடியாமல் மூக்கில் நீர் வடிய வடிய கொஞ்ச கொஞ்சமாய் அதனை ரிஷா உண்டாள். அரை ரொட்டிக்கு மேல் அவளுக்கு இறங்கவில்லை. அந்தப் பெண்ணிடம் எதையும் கேட்டுப் பிரயோசனம் இல்லை எனப் புரிந்தது, ரிஷாவின் உடல் நிலை எதுவும் விபரம் கேட்கவும் கூடத் தெம்பில்லாததாக இருந்தது, தள்ளாடினாள்.

இயற்கை உபாதை கழிக்கத் தள்ளாடி, தடுமாறி எழுந்த போது அந்தப் பெண்ணும் கூடவே வந்தாள். அப்போது சுற்றிலும் கண்களை மலர்த்திப் பார்க்க சுற்றிலும் காடு காடு காடு மட்டுமே, காணவும் பயமுறுத்தியது. பெரிய கேட் போட்டிருந்த அந்த வீட்டின் வாயிலிலும் வெகுவாகப் புதர் மண்டிக் கிடந்தது.உள்ளே எத்தனை பாம்பு பூச்சிகளோ? மனம் திடுக்கிட்டது.

தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள் சுவரோரம் ஒட்டிக் கொண்டு நடு நடுங்கியவளாய் பசைப் போட்டாற் போல அப்படியே இருந்து கொண்டாள்.

துப்பாக்கியோடு துரத்தினார்களே? நேற்றே என்னைக் கொன்றிருக்கலாமே? நம்மை இன்னும் கொல்லவில்லையா? சாப்பாடு எல்லாம் கொடுத்தார்களே? அப்படியென்றால் சாப்பாட்டில் விஷம் இருந்திருக்குமோ? இல்லையே? நான் சாப்பிட்டும் கூட அரை மணி நேரம் ஆகப் போகின்றதே? நான் இன்னும் சாகவில்லையே?

என்னை எதற்குக் கடத்தினார்கள்? ஏன்? யோசித்து யோசித்துத் தலை வலிக்கவே மயக்க மருந்தின் வீரியம் இன்னும் இருக்க, அமர்ந்தவாறே அயர்ந்து உறங்கிப் போனாள்.

அடுத்த நாள் அதே பெண்மணி, அதே உணவு, பசியில் இன்று கூடுதலாய் உணவு உண்டாள். அவளுக்கு யாரையும் எதையும் எதிர்த்துப் போராடும் எண்ணம் அற்றுப் போயிருந்தது.

எதிரி யாரென்று தெரிந்தால் யூகம் வகுக்கலாம், திட்டமிடலாம், எதிர்த்து நிற்கலாம், போராடலாம். ஆனால், தன்னைத் துரத்தும் எதிரி யாரென்றே தெரியாமல், எதற்காக என்றும் புரியாமல் வருடக் கணக்காய் பெற்றோரைப் பிரிந்து அனாதைப் போலொரு வாழ்வு.
தாயும், தந்தையும் போற்ற வாழ வேண்டிய பதின்ம வயதில் கிட்டிய கொடுமையான பிரிவு, ஷாரதாவின் கண்டிப்பில் கைதி போலொரு வாழ்க்கை, வாசிப்பது மட்டும் இல்லையென்றால் என்றோ இறந்து பட்டிருப்பாள். அவளும் அவள் கற்பனையுமான உலகம் ஒன்றே அவள் மட்டில் உயிர்ப்பு தந்த நிஜம் அல்லவா?

தனக்கு ஒரு பிரச்சனை இருக்கின்றது எனத் தெரிந்தும் அதற்குத் தன்னை ஆயத்தப் படுத்தாமல், எதிர்கொள்ளும் விதம் கற்றுத் தராமல், இப்படி அநாதரவாய் நிற்க வைத்து விட்டார்களே? எனப் பெற்றோரைக் குறித்து எண்ணியதும், தன் மீது தன் இயலாமை மீது முதன் முதலாக எழுந்த கழிவிரக்கத்தின் காரணமாய் அது வரையிலும் சுரக்காத கண்ணீர் சுரப்பிகள் சட்டென்று தங்கள் வேலையைத் துரிதப் படுத்திச் சுரந்தன.

மூக்கும் வடிய புறங்கையால் அதனைத் துடைத்து தள்ளினாள். மறுபடியும் உறங்கிப் போனாள். மூன்றாம் நாள் அவளைச் சுற்றி ஏதேதோ சப்தங்கள் எழுந்தன. அன்று அந்தப் பெண் மிகவும் பரபரப்பாய் இருந்தாள்.

முன்னறையில் எட்டிப் பார்க்க, ஏதோ ஹோமம் வளர்க்கப் பட்டுக் கொண்டு இருந்தது. புரோகிதர் ஒருவர் காணப் பட்டார். பூக்களும், பழங்களும் இன்னும் சில பொருட்களும் அந்த இடத்தை வித்தியாசப்படுத்திக் காட்டின.

அவசரமாய் அவளை அங்கிருந்த மறைவான பகுதிக்குக் கொண்டு சென்ற அந்தப் பெண், கடந்த மூன்று நாளாய் அவள் அணிந்திருந்த உடையைக் கழற்றவும், அவள் கையில் இருந்த உடையை அணியவும் அவளிடம் பேசியும், கூடவே சைகை மொழியாலும் சொன்னாள். அவளது நாட்டுப்புற மராத்தி மொழி இவளுக்குப் புரியவில்லை.
அவள் கையிலிருந்த உடையை வாங்கிப் பார்த்தாள் ரிஷா.

அது பட்டுப் புடவை சற்று விலை அதிகமான புடவை, நெற்றிச் சுருங்கியது. பட்டுப்புடவையா எனக்கா? ஏனாம்? யாராக இருக்கும்? எதற்காக?

மூளை மறத்தவள் போல இருந்தவளை, அந்தப் பெண் அவளை நடுவில் விட்டுத் தனக்குத் தெரிந்த வகையில், அவளைச் சுற்றி சுற்றி வந்து, அரைக் குறையாகச் சுற்றி அந்த உடை உடுக்க வைத்தாள்.
ரிஷாவிற்குக் குழப்பத்திற்கு மேலாகக் குழப்பம். உடலிலும் மனதிலும் வலுவற்றவளாய், எதிர்த்துப் போராடி எங்குச் செல்வது என்ற நிலையில் இருந்தாள்.

அம்மா, அப்பா உயிரோடு தான் இருக்கிறீங்களா? உங்களை நான் எப்போதாவது உயிரோடு பார்ப்பேனா? என்னோடு இங்கு என்ன நடக்கப் போகின்றதோ தெரியவில்லையே?

துப்பாக்கிகள், தோட்டாக்கள் எனும் போது உயிர் மட்டும் போகும் என்றவரை அவளுக்கு மற்ற கலக்கங்கள் ஏதுமில்லை. அப்போது கூட இந்தரோடு அவளால் சிரித்துப் பேச முடிந்ததே? நல்ல உடை உடுக்கச் செய்ததும் கரகரவென்று நீர் சுரந்து முகம் நனைத்தது.

தன்னந்தனியளாய் என்னை எந்தக் கொடுமைக்கு ஆளாக்க கொண்டு வந்திருக்கிறார்களோ? பெருமூச்செழுந்தது. என் உயிரை அதற்குள் நான் போக்கிக் கொள்ளவும் வழியில்லையே. அந்தப் பெண்மணி இழுத்த இழுப்பில் அவள் சென்று கொண்டிருந்தாள்.

முன்னறைக்கு வந்தனர், அவளைப் புரோகிதர் முன்பு அமர வைத்ததும் திகைத்து அமர்ந்தாள். அக்கம் பக்கம் பார்த்தாள் வேறு யாரும் இல்லையே?

ஏன்னடா தம்பி உனக்கு வெக்கமா? கல்யாணம்னாலே இந்தப் பசங்களுக்கு எப்படித்தான் வெக்கம் வந்திடுதோ? ஏற்கெனவே, அறிந்த குரல்கள் இரண்டும் அருகில் வரவும், அவள் கண்கள் தெரிக்கும் வண்ணம் விரிந்தன.

அவளருகில் மணமகன் இருக்க வேண்டிய இடத்தில் வைக்கப் பட்ட அதுகளைக் கண்டதும் வீலென அலறிச் சரிந்தாள். அவள் நினைவுத் தப்பியது…

அப்படின்னா? அது… ரிஷா எதையோ தன் நினைவில்… பல வருடங்களுக்கு முந்தைய தன் நினைவில் தேடிக் கொண்டிருந்தாள் சுய நினைவின்றி….

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here