12. துரத்தும் நிழல்கள்

0
512
துரத்தும் நிழல்கள்

அத்தியாயம் 12

மயங்கிச் சரிந்தவளை, ‘ஏய் ஏய் அவளைப் பிடி’ என யாரோ விழாதபடி பார்த்துக் கொள்ளச் சொல்வதைச் செவி வழி கேட்டு மூளை உணரும் முன்னதாக… தன்னைச் சுற்றிய சத்தங்கள் அத்தனையும் கொஞ்ச கொஞ்சமாய் மங்கி, சுய நினைவினின்று நழுவி கொண்டு இருந்தவள் மனதில் சிறுவயது ஞாபகங்கள் நிழலாடின.

பிடிப்பின்றிப் பின்புறம் சாய்ந்துக் கொண்டிருந்தவள் தொம்மென எதன் மேலோ மோதி விழுந்து மயக்கமடைந்தாள்.

ரிஷாவின் மனக்கண்ணில் 8 வருடங்கள் முன்னதான அவர்கள் வீடு தோன்றியது. சுற்றிலும் பலவகை மரங்களிருக்க, சென்னையின் அந்தப் பகுதியில் சில வீடுகளை வாங்கிப் போட்டிருந்தார் சண்முகம்.

ரிஷாவின் தாய் செல்வி எல்லோருடனும் மிகவும் அன்பாகப் பழகுபவர் அதனால் அக்கம் பக்கம் இருந்த வீடுகளில் இருந்தவர்களோடு அவர்களுக்கு நல்ல சினேகிதம் ஏற்பட்டிருந்தது. ஒருவருக்கொருவர் பேசுவது தான் அப்போது இருந்த ஒரே ஒரு மிகப் பெரிய நேரப் போக்கு. பேச்சு பேச்சு, எந்நேரமும் பேச்சுக்கள் தான்.

வருடங்கள் கடந்து அக்கா மல்லிகாவின் மகன்களான அரங்கநாதன் மற்றும் சந்திரன் இருவரும் திருமணம் முடிந்து மாமா இருக்கும் இடத்திலேயே தங்கள் குடும்பத்தோடு குடி வந்து விட்டனர்.

அவர்களோடு கூட அவர்கள் சகோதரி லலிதாவும் தன் குடும்பத்தோடு குடியேறினாள்.

சண்முகத்தின் அக்கா மல்லிகாவின் கணவர் பொம்பளை பொறுக்கியாகவும், பொறுப்பற்றவராகவும் இருந்தும் கூட அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்த உதவிய சண்முகத்தை ஊரில் மிகவும் உயர்வாக மதித்தனர்.

ரிஷாவின் ஆழ்மனதில் தன் அத்தான்களின் பிள்ளைகளோடு அந்தப் பெரிய வீடு காம்பவுண்டு நடுவில் உள்ள மரங்கள் அருகே சொப்பு வைத்து விளையாடிக் கொண்டிருந்த தருணங்கள் அத்தனையும் நினைவிற்கு வந்தன.

சொந்தக்காரர்கள் எல்லோருமாய் ஒன்றாய் கூடி இருக்கும்போது அங்கே மகிழ்வுக்கு என்ன குறைவு? எப்பொழுதும் அரட்டையும், ஊர் பேச்சுக்களும், கிண்டல், விளையாட்டாய் வம்பிழுப்பது என்று கலகலப்பாக அந்த நாட்கள் கடந்து கொண்டிருந்தன.

அப்போது ரிஷா ஏழாம் வகுப்பில் இருந்தாள். அவளுக்கு 12 வயது நடந்து கொண்டிருந்தது. குடும்பத்தினர் சூழ இருந்ததாலும், ஒற்றைப் பெண் என்பதால் செல்வி தன் மகளைக் கண்ணுக்கு கண்ணாக வைத்துப் பார்த்துக் கொண்டு மற்ற யாருடனும் அதிகமாகப் பழக விடாமல் வீட்டுக்குள்ளேயே வைத்து வளர்த்து வந்தார். அதனால் அவளுக்குப் பள்ளித் தோழர்கள் தவிர, வெளியில் விளையாட்டுத் தோழர்கள் கிடையாது.

வீட்டிலும் அவளின் உற்ற தோழர்கள் அரங்கநாதன் மற்றும் சந்திரனின் குழந்தைகளே. தன்னை விட மிகவும் சிறியவர்களான அவர்களோடு விளையாடுவதால் ரிஷா அவர்களைப் போலவே குறும்பாக நடந்து கொள்வாள். அவளது குறும்புகள் ரசிக்கும் படியே இருப்பதனால், அவளை யாருமே அதிகமாய்க் கண்டிப்பதில்லை. பெண்கள் பேசுவதை வாய்ப் பார்த்து, வாய்ப்பார்த்து அதிகமாய்ப் பேசும் பழக்கமும் அவளுக்கு வந்து விட்டிருந்தது. தாயைப் போலத்தானே பிள்ளை இருக்குமாம். அதில் விதி விலக்கு என்ன இருக்கப் போகிறது?

அரங்கநாதன் மற்றும் சந்திரனின் மனைவியரான சுந்தரி மற்றும் மங்கா இவர்களும் கூட ரிஷாவுடன் மிகவும் அன்பாக இருப்பார்கள். மைதிலியின் திருமணம் முடிந்த அந்த வேளையில்தான் மல்லிகா தன்னுடைய இளைய மகனான 19 வயதான சுந்தரை சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

மல்லிகா முன் போலெல்லாம் இப்போது வருத்த படுவது இல்லை. இரண்டு மகன்களும் சேர்ந்து உழைத்ததில் குடும்பம் தலையெடுத்து இருந்தது. ஊரிலேயே முதன் முதல் மச்சு வீடு கட்டி இருந்தார்கள். இரண்டு மகன்களும் தாய்க்கு சில நகைகள் செய்து போட்டிருந்தார்கள்.

ஊர் மேய்ந்து, ஓய்ந்து வீட்டிற்கு அடங்கிப் போன கணவர் மட்டிலும் இப்போது திருப்தியே. ஆக இப்போது கொஞ்சம் பெருமிதமாகவே மல்லிகா ஊரில் வலம் வரலானார்.

இவளுக்கு வந்த வாழ்வைப் பாரேன்? என ஊர் மக்கள் அவள் நிலை மாறியது குறித்து வியக்காமல் இல்லை. சுந்தருக்கு அவ்வளவாய் படிப்பு வரவில்லை ஏழாவதோ எட்டாவதோ முடித்து விட்டு அக்கம் பக்கம் கிடைக்கும் வேலைகளைச் செய்து கொண்டு இருந்தான்.

சென்னையில் நிறுவனம் நடத்தி வரும் மாமா மீது அவனுக்கு ஏகத்திற்கும் மதிப்பும் பிரேமையும் உண்டு. சண்முகத்திற்கோ தன் அக்கா மகன்கள் அரங்க நாதனும், சந்திரனும் தான் சொல்லும் விதத்தில் நடந்து பல வழிகளில் வாழ்வில் முன்னேறி நன்றாக இருப்பது குறித்து மிகவும் பெருமையாக இருந்தது. ஆதலால், மற்ற இருவருக்கும் போலவே சுந்தரின் வேலைக்கும் அவரே ஏற்பாடு செய்தார்.

தன் நிறுவனத்தில் அல்லாது தெரிந்தவரிடத்தில் முதலில் வேலைக் கற்றுக் கொள்ள அனுப்பி வைத்ததோடு அல்லாமல் பேச்சிலர்கள் ரூமில் அவனுக்குத் தங்க இடம் பார்த்துக் கொடுத்தார்.

சாப்பாடு மட்டும் அவன் தன்னுடைய அக்கா மைதிலி, அல்லது அண்ணன்கள் வீட்டில் பார்த்துக் கொள்வான். தன்னுடைய அண்ணன்களைப் போலவே தானும் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் அவனிடம் இருந்தது அவனும் உற்சாகமாக வேலை செய்து கொண்டிருந்தான்.

பொதுவாகவே தன் மனதில் உள்ளதை அதிகம் வெளிப்படுத்திக் கொள்ளாத குணம் அவனுடையது. மாநிறமும், வளர்த்தியுமாய், அரும்பு மீசையுடன் இருப்பான். கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்ததன் காரணத்தால் முதலில் அவனால் எல்லோருடனும் சகஜமாகப் பழக முடியவில்லை.

லீவு நாட்களில் மாமாவின் வீட்டுக்கு வருவதுண்டு. பாவாடைச் சட்டையில் ரிஷாவும் குழந்தைகளும் விளையாடிக் கொண்டு இருப்பதைப் பார்ப்பான். ரிஷா மிகவும் குறும்புக் காரியாக இருந்தாள்.
அவளுடைய விளையாட்டு அவனையும் மிகவும் கவர்ந்தது.
அரங்கநாதனுக்கும், சந்திரனுக்கும் 3 வயதான ரிஷாவை பார்த்த போது என்ன உணர்வோ இப்போதும் கூட அதுவே தான். எப்போதாவது தங்கள் குழந்தைகளைப் போல அவளையும் அவர்கள் சிறு பிள்ளையாய் தூக்கி விளையாடுவதுண்டு.

அத்தனை பேராலும் சின்னப் பிள்ளையாகவே செல்லம் கொஞ்சப் படுகிறவள், கொஞ்சம் பழகியதும் சுந்தரிடமும் அப்படியேத்தான் விளையாட ஆரம்பித்தாள். அதிகம் பழகாமலிருந்த காரணத்தால் ஆரம்பத்தில் சுந்தரிடம் விளையாட முதலில் தயங்கினாலும், அவனின் அப்பாவித்தனத்தையும், அமைதியான குணத்தைப் பார்த்து அவனைச் சீண்டி விளையாடுவது ரிஷாவிற்குத் தற்போது வாடிக்கையாகிற்று.

அவள் சேட்டைகள் மரியாதைக் குறைவான செயலாக இல்லாமல் விளையாட்டாகவே இருக்க அவளின் சீண்டலை யாரும் பெரிதாக அங்கே கண்டு கொள்ளவில்லை. மற்ற பிள்ளைகளோடு கூட விளையாடுவதைப் போலவே சுந்தரையும் அடித்து விளையாடுவதும், தள்ளுவதுமாக இருப்பாள். சுந்தரும் அதனை ஒன்றும் சொல்லுவதில்லை.

ஒருமுறை தன்னோடு வேலை செய்யும் ஒருவன் யாரோ குறித்து ‘அவன் ஒரு டுபாகூர்’ என்று சொல்லவும், சுந்தருக்கு அந்த அர்த்தம் புரியாமல் பெரிய அண்ணன் பிள்ளைகளான கணேஷ் மற்றும் பிரேமா இருக்கும் போது ரிஷாவிடம் வந்து கேட்க அனைவரும் சேர்ந்து அவனை ஓட்டி எடுத்தனர்.

டுபாகூர்னா அறிவாளின்னு அர்த்தம் உங்களுக்குத் தெரியாதா அத்தான்? எனக் கிக்கிக்கீ யெனச் சிரித்து வைப்பாள்.

எப்போது பார்த்தாலும் அவனுக்குத் தெரியாத மெட்ராஸ் பாஷையைக் கொண்டு அவனைச் சீண்டுவதைக் கண்டு சந்திரனின் மகளான கீர்த்தியும் கூட இப்போது தன் சித்தப்பாவை கிண்டலடிக்க ஆரம்பித்து இருந்தாள்.

செல்விக்குத் தன் மகளின் பேச்சுக்கள் பிடிப்பதில்லை, தன் கணவர் முன்னால் அவளைத் திட்ட முடியாது என்பதால் அவர் வீட்டில் இல்லாத நேரங்களில் அவளை நன்கு கண்டித்து வைப்பார்.

அவன் உன் வயசுப் பையனா? பெரிய ஆளு வேலைக்குப் போகிற பையன் அவனைப் போயி கிண்டலடிக்கிற? ஆளு வளர்ந்தா போதாது அறிவும் வளரணும். அம்மாவிடம் எத்தனை கொட்டு வாங்கினாலும் அவளது இயல்பான துடுக்குத்தனத்தால் அவள் வாயை கட்டுப் படுத்த இயலாமல் இருந்தது.

மாமன் மகளைப் பேச விட்டுக் கொண்டு, அமைதியாகக் கேட்டுக் கொண்டு சுந்தர் இருப்பான். அவளது செயல்கள் அவனுக்கு மிகவும் பிடிக்கும். தன்னிடம் உரிமையாய் அவள் விளையாடுவது அவனது மனதிற்குப் பிடித்த ஒன்று.

தான் சிறுபிள்ளையாக இருப்பினும், அப்படித்தான் எல்லோரும் நினைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற கட்டாயம் எதுவும் இல்லை. தன்னுடைய துடுக்குத்தனமே தனக்கு ஆபத்து வரவழைக்கத் தக்கது என்பதை உணராமல் போனாள் ரிஷா.

அளவுக்கதிகமான பாசம், அக்கறை, தன்னை அம்மாவைக் கூடக் கண்டிக்க விடாத அப்பாவின் அதிகப்படியான செல்லம் இவற்றால் ரிஷா தன்னிஷ்டம் பொலவே நடந்து கொள்வாள். அவள் விளையாட்டிலும், பேச்சிலும் விகல்பம் இல்லையென்றாலும், உலகத்திற்கேற்ப சூதானமாகப் பெண்பிள்ளைகள் நடந்து கொள்வது எக்காலத்திலும் மிகவும் தேவையன்றோ?

பெரிய பெண்ணாகினாள் ரிஷா. மிக விமரிசையாக விழா எடுத்தார் சண்முகம். ஊரிலிருந்து உறவினர்கள் அனைவரும் வந்திருந்தனர். விழா களைக் கட்டியது. தன்னிடம் எப்போதும் சீண்டி விளையாடும் தன் மாமன் மகளைப் பெரியவளான பின் சில நாட்களுக்குப் பின் விழா மேடையில் சேலையில், முழு அலங்காரத்தில் பார்த்த சுந்தர் மனது பித்தானது.

அன்றிலிருந்து சுந்தரின் மனதில் பல்வேறு வண்ணக் கனவுகள் எழுந்தன. அவன் உள்ளத்தில் எழுந்த புதுமையான உணர்வுகளோடு கூட ஊரிலிருந்து வந்த உறவினர்களும், பெரியவர்களும் அவனிடம் வந்து ‘உனக்கென்னப்பா மச்சக்காரன்டா நீயி, சென்னையிலே இவ்வளவு அழகான மாமன் மகள், உனக்குத்தானே கட்டி வைக்கப் போறாங்க’ என வித விதமாய்க் கற்பனைக் கோட்டைகளை அவன் மனதில் கட்டிச் சென்றனர்.

இருபது வயதைக் கூட நெருங்காத அந்தக் கிராமத்து வாலிபனின் மனதில் மனைவியாகவே வேரூன்றினாள் ரிஷா. அந்த வேர் விருட்சமாகி பலர் வாழ்வை கேள்விக்குரியதாக மாற்றப் போவதை அறியாமல் விழாவின் களைப்பில் அம்மாவின் மேல் கால்களைப் போட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டு இருந்தாள் ரிஷா.

பூப்புனித நீராட்டு விழா முடிந்ததும் வழக்கம் போலப் பள்ளிச் செல்ல ஆரம்பித்தாள் ரிஷா. நடந்த நிகழ்வுகளில் தானாகவே கூச்சம் வந்து சேர்ந்தது. யாரையும் முன் போலச் சகஜமாகப் பழகவே அவளுக்கு மிக நாட்கள் எடுத்தன.

பெரியவள் ஆனதும் அவளுக்கு வீட்டில் கிடைத்த கவனிப்பில், விசேஷமான சாப்பாட்டில் இன்னும் மெருகேறினாள். பதின்ம வயதின் அழகில் அவள் தேகம் பொன்னென மின்னிக் கொண்டிருந்தது. முன்பை விட அதிகமாக அவள் எங்கே சென்றாலும் கட்டுப்பாடு விதிக்கப் பட்டது. சேட்டையையும், துறுதுறுப்பையும் கூடத் தானாகவே அவள் குறைத்துக் கொண்டாள்.

அப்பாவின் மடியிலெல்லாம் அமர இப்போது அவளுக்கு அனுமதி இல்லை. கிராப்பாக இருந்த முடி வளர்ந்து, ரெட்டைச் சடை மடிப்பு நீண்டு தோளைத் தாண்டியது கூட இப்போது அவளுக்கு மகிழ்ச்சி தந்தது. முன்பு போலல்லாமல் அம்மாவின் கட்டுப்பாடுகளுக்கு அவள் உடன் பட்டாள். மரங்களின் கீழே விளையாடுவதை விட்டு விட்டாள். இப்போது அவளோடு விளையாட வீட்டிற்குக் கணேஷ், பிரேமா, கீர்த்தி வந்து செல்வார்கள்.

ஞாயிறுகளில் தன் வீடு வரும் சுந்தரிடம் மற்றவர்களைப் போலவே பேசுவாள். அம்மா இல்லாத தருணத்தில் டீயோ, சாப்பாடோ பரிமாறுவாள். சுந்தருக்கோ அவள் முன் போல இல்லாவிட்டாலும் அவளில் உருவத்தில் மற்றும் பழக்க வழக்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மென்மேலும் பிடித்தது. மனதில் அவளோடு கணவனாகவே குடும்பம் நடத்த ஆரம்பித்தான் அவன்.

அவளை குழந்தை என்ற மனப் பான்மையோடு மற்றவர்கள் பார்த்தவண்ணம் அவனால் ஒரு போதும் பார்க்க முடியவில்லை. சில மாதங்கள் கழித்து ஒரு நாள் அவனுக்கு மனதிற்குள்ளாக ஒரு உந்துதல் எழுந்தது. தான் அவளை நேசிப்பது போலவே அவளும் தன்னை நேசிக்கிறாளா? இல்லையா? எனச் சோதித்துப் பார்க்க விரும்பினான்.
அன்று தன் வேலை முடிந்ததும் மாமா வீட்டிற்குள் சென்றான். அங்கு ரிஷா தன் பூனைக் குட்டிகளோடு விளையாடிக் கோண்டு ஹோம் வொர்க் செய்து கோண்டிருந்தாள்.

டிவி ரிப்பேர் செய்யும் ஆள் வந்து சரி செய்து கொண்டிருந்தார் எல்லா வயர்களும் பிரிந்துக் கிடந்தன. செல்வி மகளுக்கு அந்தப் பக்கம் போக வேண்டாமென அறிவுறுத்திச் சென்றிருந்தார்.

டிவி மெக்கானிக் தான் முக்கியமான எதையோ எடுத்து வருவதாகவும், அதுவரை இங்கே யாரும் வராமல் பார்த்துக் கொள் எனச் சொல்லி அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
சுந்தரைக் கண்டதும் ரிஷா முறுவலித்து விட்டு எழுதுவதைத் தொடர்ந்தாள். அவன் அவளொடு பேச மிகவும் ஆவலோடு வந்திருந்ததால் ஏதேதோ கேள்விகள் கேட்க, அவனுக்கு உரிய பதிலும் சொல்லி வைத்தாள்.

அவனுக்கு டீ கொடுக்க வந்த செல்வி, வெளியே ஏதோ வேலையாய் சென்று விட்டார், வாசலில் யாரோ வந்து விபரம் கேட்க, அம்மா வெளியே சென்றதால் தன் புத்தகங்களை விலக்கி வைத்து விட்டு, வாயிலுக்குச் சென்று பதில் சொல்லி விட்டு வீட்டிற்குள் வந்தாள் ரிஷா.
அதுவரை டீ குடித்துக் கொண்டிருந்த சுந்தருக்கு அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளத் தோன்றியது. டீ டம்ப்ளரை டேபிளில் வைத்து விட்டு எழுந்தவன் மின்சார இணைப்புப் பெற்ற வயர்கள் இரண்டை கையில் வைத்துக் கொண்டு ரிஷா பார்க்க நின்றான்.

அத்தான் அங்கே எதுக்குப் போனீங்க?, இங்கே வாங்க… ஷாக் அடிக்கும்.

அவளது அழைப்பில் சுந்தருக்கு உள்ளம் குளிர்ந்தது … ஆனால், இது மட்டும் போதாதே…

இரண்டு வயர்களும் சேர்த்து தன் விரல்களில் வைத்தான் அவன், ரிஷா அவனுக்குக் கரண்ட் ஷாக் அடிப்பதைக் கண்டு துடித்தாள்.

ஐயோ வேண்டாம் அத்தான் எடுங்க… எடுங்க?

அவளது துடிப்பைக் கண்டு குரூரமாய் விரிந்தன சுந்தரின் அதரங்கள், காதல் எனும் பெயர் கொண்ட ராட்சசன் வன்மையாகச் சுந்தரின் மனதில் தடம் பதித்து இருந்தான்.

அந்த அரக்கனுக்குத் தனக்காகத் தன் மாமன் மகள் துடிப்பது மிகவும் பிடித்திருந்தது. மீண்டும் மீண்டும் தனக்குக் குட்டி குட்டியாய் ஷாக் வைத்துக் கொண்டே இருந்தான்.

ரிஷாவின் துடிப்பு ஒவ்வொன்றும் அவன் மனதிற்கு இதம் பாய்ச்சி கொண்டே இருந்தது. கண்களில் விபரீதமான ஒளி கூடியது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here