13. துரத்தும் நிழல்கள்

0
501
துரத்தும் நிழல்கள்

அத்தியாயம் 13

சுந்தர் தன் கைகளில் மாற்றி மாற்றிக் கரண்ட் ஷாக் கொடுத்துக் கொண்டு இருந்ததும், அப்போது அவளைப் பார்த்த பார்வையும் கண்ட ரிஷாவுக்கு அதுவரையிலும் அவள் அறிந்திராத சுந்தரின் மற்றொரு ரூபம் நடு நடுக்கத்தையே ஏற்படுத்தியது.

ஐயோ வேண்டாம் அத்தான் கரண்ட்லருந்து கையை எடுங்க எடுங்க?
கரண்ட் அவனுக்குப் பாய்ந்து விடும் என்கிற பயத்தில் அவள் குரல் கொடுத்துக் கொண்டிருக்க, அவனோ சிரிக்கிறான், அது ஒரு வகையான குரூரச் சிரிப்பு, கனவிலும் கூட அவளை அவன் சிரிப்பு மிரட்டியது…

சுந்தருக்கு வேண்டுமென்றால் அது அவன் காதலின் தீவிரம், அதனால் ஏற்பட்ட மாற்றமாக இருக்கலாம். ஆனால், தன்னுடைய நடவடிக்கைகள் எதிரில் இருப்பவருக்கு, அதுவும் காதலென்று வந்த பின்னரும் கூடத் தன்னை மட்டுமல்லாமல் தான் நேசிக்கும் நபர், அவரின் மனநிலை என்னவென்று அறிவதை அவன் முக்கியமாக எண்ணவில்லை.

இருபது வயதை தொடப் போகும் தன்னுடைய மன முதிர்ச்சிக்கு ஏற்ப சிந்தித்ததைப் போலவே, 12 வயது பெண் ரிஷாவும் சிந்திக்க வேண்டும் என அவன் எதிர்பார்த்ததைத் தான் என்னவென்று சொல்வது?

சுந்தர் மற்றும் ரிஷா தனித்திருந்த நேரத்தில் அந்தக் கரண்ட் ஷாக் விஷயம் நிகழ்ந்தது என்றதாலோ என்னமோ இது குறித்துச் செல்வி அறியாமல் போனார். ரிஷாவும் தனக்குள்ளே குழம்பிப் போய் அதனை யாரிடமும் சொல்லவில்லை. வீட்டில் கூடிய விரைவில் ஒரு சுனாமி வருவதற்கான முன்னோட்டங்கள் செல்விக்குப் புரியாமலேயே போயின.

நாட்கள் கடந்தன, தனக்கு ஒன்று என்றால் மாமன் மகளுக்குத் துடிக்கின்றதே? இந்தத் துடிப்பிற்குப் பெயர் காதல் தான் எனச் சுந்தர் ரிஷாவின் மன நிலையை வரித்துக் கொண்டான். ஆனால், ரிஷாவின் துடிப்பு மிகவும் சாதாரணமானது என்பதையும், இவன் இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும் அவர்களுக்கும் கூட ஷாக் அடித்து விடக் கூடாதென அவள் இப்படியே துடித்திருப்பாள் என்பதையும் உணராமல் போனான்.

அவன் வளர்ந்த கிராமத்தின் பார்வையில் அவனைப் பொறுத்தவரையில் திருமணமாவதற்குப் பெண்களுக்கான தகுதி வயதுக்கு வருவது அந்தத் தகுதியை ரிஷா அடைந்து விட்டாள். திருமணமாவதற்காக ஆண்களுக்கான தகுதி வேலைக்குச் செல்வது அதன் தகுதியை தானும் ஏற்கெனவே அடைந்துக் கொண்டாயிற்று.

சுந்தரைப் பொருத்த மட்டில் அவனும் ரிஷாவும் ஒருவரை ஒருவர் விரும்பவும் செய்கிறார்கள், இனி அவர்கள் திருமணத்திற்குத் தடையாய் எதுவுமே இருக்க வாய்ப்பில்லையே?

எனவே, ஊருக்குச் செல்லும்போது அம்மா அப்பாவிடம் பேசி, மாமாவிடம் பெண் கேட்டு, ரிஷாவை உடனே திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மனதிற்குள்ளாகத் தீர்மானித்தான்.

ஊரிலிருந்து சென்னைக்கு வந்து சிலப்பல மாதங்கள் கடந்திருந்ததால் அவனது மன நிலையில் மிகவும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன, முன்பை விடத் தன்னம்பிக்கை கூடியிருந்தது. சமீபத்தில் அவனுடைய அலுவலில் அவனுடைய திறமை காரணமாகச் சம்பளம் மிகக் கூடி இருந்தது அதனால் இன்னும் அதிகமாய்த் தைரியம் கூடியது.

அதுதான் பெரிய ஆளாக ஆகி விட்டோமே? எனத் தன்னோடு பணிபுரிபவர்களொடு சேர்ந்து குடிப் பழக்கத்தைக் கற்றுக் கொண்டான்.

பேச்சிலர்களோடு தங்கி இருந்ததால், அவன் வழக்கமாகக் குடித்து வருவது அண்ணன்களுக்குக் கூடத் தெரியாமல் போயிற்று. நாட்கள் கடந்தன, அவனைப் பற்றிப் பிறர் அறிந்துக் கொள்ளவும் ஒரு நாள் வந்தது.

அன்று தீபாவளிக்கு முன் தினம், தீபாவளி போனஸோடு கூட ஸ்வீட் பாக்ஸீம் கொடுத்திருந்தார்கள். வேலையிலிருந்து திரும்பும் போதே போதை ஏற்றிக் கொண்டவனுக்கு அன்று ரிஷாவை பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருந்தது.

என் மாமன் மகளிடம் நான் காதல் சொல்ல வேண்டும், கட்டித் தழுவ வேண்டும், அவளை அணுஅணுவாக நான் ரசிக்க வேண்டும் என அவனது இரத்தத்தில் சூடு ஏறியது. குடியின் மப்பு ஏற ஏற தாபம் கூடியது.

அவன் அண்ணன்மார்களுக்கும் கூடக் குடி பழக்கங்கள் இருந்தன தான், ஆனால் யாருமே தாம் குடித்திருக்கையில் மாமா வீட்டுப் பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை. மாமா மீது அவ்வளவு மரியாதை. அவர்கள் கட்டி வைத்திருந்த மரியாதையை ஒருவன் கப்பலேற்ற போகிறான் என அன்று அவர்களுக்குத் தெரிந்து இருக்கவில்லை.

புறப்பட்ட வேகத்திலேயே சண்முகத்தின் வீட்டை அடைந்தான் சுந்தர். கையிலிருக்கும் ஸ்வீட் பாக்ஸோடு பெருமிதத்தில் உள்ளே நுழைந்தான்.

அவன் யாரைத் தேடி வந்தானோ? அவள் தன் அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு தன் பள்ளிக் கூடத்துக் கதை எதையோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

அடர் பிங்க் நிறம் கொண்ட வெல்வெட் துணியில் பாவாடை சட்டை அணிந்திருந்தாள். அவளுக்காகத் தீபாவளியை கொண்டாட அவளுடைய பெற்றோர் வாங்கியிருந்த பல புதுத் துணிகளில் அதுவும் ஒன்று,

அவள் முகம் கழுவி சின்னப் பொட்டுடன், இரட்டைச் சடையில் இருந்தாலும் கூடப் பார்க்கவே மிகவும் அழகாக இருந்தாள். அம்மாவின் மோவாயை பிடித்துக் கொண்டு, கண்கள் விரிய கைகளை அசைத்து, அசைத்து ஏதோ மிகச் சுவாரஸ்யமான பகுதியை விவரித்துக் கொண்டிருந்தாள். செல்வியோ மகளின் கதையில் லயித்திருந்தார்.

அத்தை… என்றவாறு வந்தான் சுந்தர், அவன் குடித்திருந்தது தெரியாதவாறு சாதாரணமாக நடந்து கொண்டான். அவனைக் கண்டதும் சற்று மிரட்சி இருந்தாலும் வெளிக்காட்டாமல் எழுந்து அமர்ந்தாள் ரிஷா. ஏதோ ஒரு பெருமையில் தன் கையிலிருந்த ஸ்வீட் பாக்ஸை நின்றவண்ணம் ரிஷாவின் மடியில் போட்டான் சுந்தர். அவன் வந்ததுமே எழுந்து அமர்ந்திருந்தவள் அந்த ஸ்வீட் பாக்ஸை அவள் மடியில் போட்ட அவனது நடவடிக்கை புரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள். செல்வியோ சுந்தரின் அண்ணன்கள் ரிஷாவிடம் விளையாடுவது போலவே அவனும் விளையாடுவதாக எண்ணி சிரித்து நகர்ந்தார்.

மற்றவர்களுக்கு எல்லாம் பதின் வயது குழந்தையாகத் தெரியும் ரிஷா அவனுக்கு அவனுடைய மனைவியே எதிரில் அமர்ந்து இருந்தார் போலப் பெரியவளாகத் தோன்றியது. அந்த நேரம் கார்மெண்டிலிருந்து ஏதோ ஒன்று கேட்டு வீட்டிற்கு ஆள் விட்டிருந்தார் சண்முகம்.

சுந்தருக்குக் கையில் காஃபியை கொடுத்து விட்டு, சாம்பிள் துணி பண்டல் ஒன்றை தேடச் சென்றார் செல்வி. கணேஷீம், பிரேமா, மற்றும் கீர்த்தி வரவும், அங்கிருந்து நகர்ந்துச் செல்ல கிடைத்தது வாய்ப்பென்று வாயிலுக்குச் சென்று விட்டாள் ரிஷா.

வீடு தீபாவளியின் ஒளி வெள்ளத்தில் மினு மினுத்துக் கொண்டிருந்தது.

சிறுவர்களோடு மத்தாப்பு சுற்றுவதும், துப்பாக்கியில் ரோல் நிரப்பிக் கொடுப்பதுமாக ரிஷா இருந்தாள். உள்ளூர ஏனோ மிகவும் படபடப்பாக இருந்தது. அங்கும் அவளை நிம்மதியாக இருக்க விடாமல் சுந்தர் பிள்ளைகளோடு சேர்ந்து அவளின் எதிரில் அமர்ந்து கொண்டான்.

ஏண்டா கணேஷ், என் கிட்ட கேட்டா நான் நிரப்பித் தரமாட்டேனா?
என்ற வாறு ரிஷாவின் கையிலிருந்து பட்டாசை வாங்குகிறதைப் போல அவள் கை முழுவதையும் சுந்தர் பற்றிக் கொண்டான், அவனுக்குள்ளாக ஹார்மோன்கள் ஏராளமாகச் சுரந்து தீப்பற்றிக் கொண்டிருந்தது.

இன்றே இவளை தன்னவளாக ஆக்கிக் கொண்டால்தான் என்ன?

எனச் சாத்தான் அவன் காதுக்குள் வெகுவாய் ஓதிக் கொண்டிருந்தான். அவளை அவன் கண்கள் செருக பார்த்துக் கொண்டிருக்க, அவனுக்கேற்ற காமப் பண்டமாய்த் தெரிந்தாள் ரிஷா. அதை உண்டு புசிக்கும் தவிப்பில் இருந்தான் சுந்தர்.

சித்தப்பா என் துப்பாக்கி…. ஊஊ… கணேஷ் அழுத பின்னரே அவன் கையினின்று ரிஷாவின் கைகளும் துப்பாக்கியும் விடைப் பெற்றன. ரிஷாவின் கைகளோ அதற்குள்ளாகக் கன்றிப் போயிருந்தன.

ரிஷாவைப் பொறுத்தவரைக்கும் சுந்தரிடம் முன்பு விளையாடுவாள் தான், கொட்டமடிப்பாள் தான் ஆனாலும் சுந்தரைக் குறித்து அவள் எண்ணம் எல்லாம் தனக்கு நன்கு தெரிந்த உறவினன் என்பது மட்டும் தான். அப்படியாகப் பட்ட உறவினன், முன்பெல்லாம் அனாவசியமாகப் பேசி இராத உறவினன், சமீபத்திய காலத்தில் வித்தியாசமாக மாறி இருப்பது அவளை மிகவும் கலவரப்படுத்தியது.

யாரிடம் சொல்வதெனத் தெரியவில்லை? அதுவும் என்னவென்று சொல்வது? ஆவன் இவளின் கைகளைப் பிடித்துக் கொண்டானென்றா? அவன் செய்கைகளில் ஏதோ தவறு என்று புரிகின்றது ஆனால் என்ன தவறு என்று சொல்ல தெரியவில்லை, புரியாமல் தவித்தாள்.

அடுத்த நாள் தீபாவளி என்பதால் சண்முகம் கார்மெண்டிலிருந்து மாற்றி மாற்றி ஆட்கள் அனுப்பி, மனைவிக்கு ஏதாவதொரு வேலை வைத்துக் கொண்டிருந்தார்.கூடுதலாக வீட்டில் இருந்த வேலைகள் வேறு செல்வியை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது.

ஏதேச்சையாகச் செல்வி சற்று நேரம் ஓய்வாக இருக்கவும் தான் ரிஷா அவர் மடியில் போய்ப் படுத்து கொஞ்சிக் கொண்டிருந்தது. இப்போது மறுபடியும் அம்மா பரபரப்பாக வேலைகள் செய்து கொண்டிருக்க அவரைப் போய்த் தொல்லை செய்ய அவள் விரும்பவில்லை.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு, என்ற எண்ணத்தில் கேட்டிற்கு உள்ளாக வீட்டின் வெளிப்புறத்தில் சற்று இருட்டான பகுதியில் போய் நின்றது அவளுக்குப் பாதகமாயிற்று.

பின்னால் வந்து நின்றவன் விளையாட்டாய் நிற்பது போலவே நின்று கொண்டு, துணிச்சல் மிக அவளது மார்பகத்தைத் தொட்டே விட்டான். விதிர்த்து நிமிர்ந்தவளை பின்புறம் புட்டங்களை வருட, குழந்தையாயினும் பெண்ணாயிற்றே? அவன் தொடுகைகள் ஏதேச்சையானவை அல்ல, திட்டமிட்டு வக்கிர எண்ணங்களோடு செய்யப் படுபவை என உணர்ந்துக் கொண்டாள். நேரம் கூடக் கூட அவனுடைய முறையற்ற வருடல்கள் தொடர்ந்தன, சுவாசிக்கவும் முடியாமல் திணறிப் போனாள் அவள். அவன் கைகளை விலக்கப் பார்த்தாள் முடியவில்லை. திமிறினாள், அவன் பலத்தில் இவளால் அசையவும் முடியவில்லை.

“எனக்குக் கொடுக்காம யாருக்காக வச்சிருக்கியாம், எப்படி இருந்தாலும் நான் தான உன்னைக் கட்டிக்கப் போறவன், நான் தொடக் கூடாதாக்கும்”

தன்னை வக்கிரமாய்த் தொட்டுக் கொண்டு இருப்பவனை, அசிங்கமாய்ப் பேசிக் கொண்டு இருப்பவனை எதிர்த்து எதுவும் செய்ய இயலாத அந்தத் தருணத்தில் தான் அவன் மேல் அருவருப்பின் உச்சமான வெறுப்பு அவள் உள்ளத்தில் எழுந்தது.

பெண்ணின் வெறுப்பு நெருப்பினும் கடினமானது. பெண் மென்மையானவள், தியாகத்தின் திருவுருவம் எனப் பற்பலக் கதைகள் சூட்டி உலகம் அவளை ஏய்த்துக் கொண்டிருந்தாலும், என்று ஒரு நாள் அவள் ஆழ்மனதில் ஒரு மனிதனின் உண்மையான சுயரூபம் தெரிந்து வெறுப்பு சூழ்கின்றதோ, அதை அழிக்க எவராலும் இயலுவதில்லை.

தன்னுடைய சொந்த வீட்டிலேயே இப்படி ஒரு பாதுகாப்பின்மை உணர்வு ஏற்பட்டது இதுதான் முதல் முறை என்று அவள் உணர்ந்தாள். உள்ளுக்குள்ளாகப் பயம், அருவறுப்பு, வெறுப்பு என ஏராளமாய் உணர்வுகள் பெருக்கெடுத்தாலும் அதை அந்தச் சிறுமிக்கு வகைப் படுத்த தெரியவில்லை.

பயமும், மிரட்சியும், அருவருப்பும், வெறுப்பும் சூழ தன்னைக் காத்துக் கொள்ள வழி தெரியாமல், தனக்குப் பிடித்த வெடிகளை வெடிக்க இப்போது தனக்கு வாய்ப்பில்லை என உணர்ந்தவளாக, சுந்தர் தன்னைப் பின் தொடர்ந்து வரவே முடியாத இடம் எது என யோசித்து, அவன் பிடி தளர்ந்த நேரம் மாடி அறைக்குச் சென்று அமர்ந்துக் கொண்டாள்.

குரல் நடுங்கினாலும் கூட ‘அம்மா க்ரீட்டிங்க்ஸ் செய்யப் பொறேன்’ என்று அவள் சொல்லி மாடி அறைக்குச் செல்லவும், எப்போதும் பென்சில் டிராயிங்கில் மூழ்கி இருக்கும் மகளைப் பற்றித் தெரியுமாதலால் செல்வி அதனைப் பெரிது படுத்தவில்லை.

ரிஷாவின் மனதில் சுந்தர் குறித்த வெறுப்பின் வித்து விழுந்தது அன்றுதான், அது தினம் தோறும் பரவி படர்ந்து கிளைப் பரப்பி மரமாகிக் கொண்டிருந்தது.

தவறு செய்தது அவன், ஆனால், பயம் கொண்டது இவள்.

இதுதான் பாலுறவு அத்து மீறல்களில் நடக்கும் முரண்பாடான உளவியல். அடுத்தவர் உடலை அவர் அனுமதி இன்றி வருடவும், அசிங்கமாய் அணுகவும் துணியும் ஆண்களுக்கு அது தவறென்றே புரிவதில்லை.

பயத்தை விடவும், தன் ஆண்மையின், தைரியத்தின் வெளிப்பாடாகக் கருதி ஆண் தன் தவறில் கர்வம் கொள்கிறான், பெருமிதம் அடைகிறான்.

ஆனால், ஒரு தவறுமே செய்யாத பெண்ணின் மன நிலை என்னவாக மாறுகிறது?

முதலில் பயம் எழுகின்றது, தன் உடலை தானே காப்பாற்றிக் கொள்ள இயலாத கையாலாகாதத்தனம் கொண்டு வரும் பயம் அது, அதன் பின்னர்… ஒரு மூட ஆணின் தரம் தாழ்ந்த செயலால் தன் உடலின் மீதே எழும் வெறுப்பின் உச்சமாக எழும் அருவருப்பு உணர்வு, அதன் பின்னர்ச் சாதாரணமாக எதிர்க்கொள்ள வேண்டிய காதல் உணர்வும், திருமணத்திற்குப் பின்னதான இல்லறமும் இந்தப் பெண்களுக்குக் கசந்து போகின்றது.

எவனொருவன் தன் அகங்காரத்தினால் தவறு செய்கிறானோ அவன் நிம்மதியாக இருக்க, தவறே செய்யாதவளாக அத்தனை தண்டனைகளையும் அனுபவிப்பவள் பெண். இது முரண்பாடன்றி வேறு என்ன?

அதன் பின்னரும் சுந்தர் தன் அன்றைய தின லீலைகளை நிறுத்திக் கொண்டான் இல்லை, அல்லது அவனுக்குள்ளாக இருந்து இயக்கிக் கொண்டிருந்த மதுபானம் நிறுத்த விடவில்லை எனக் கூறவும் வேண்டுமோ?

வெளியே பெரிய பெரிய வெடிகளை அந்தத் தெருப் பிள்ளைகள் ஒரு திண்டில் வைத்து வெடித்துக் கொண்டிருக்கச் சுந்தர், அந்தத் திண்டில் சென்று அமர்ந்து கொண்டான். மறுபடி சென்று இரண்டு மூன்று முறை ஏற்றி இருந்த போதை அவனுக்கு ஏராளமான விஷயங்களைச் செய்யத் தைரியம் கொடுத்தது.

பெரிய வெடிகளை வெடிக்கும் போது அதன் அருகில் அமர்ந்து இருப்பது அவனுக்கு மிகவும் கெத்தாக இருந்தது. தயங்கிய சிறுவர்களை அங்கேயே வெடிகளை வெடிக்கச் சொல்லி ஊக்கப் படுத்தினான். அவனே வேண்டாம் எனச் சொல்லாத போது அவர்கள் எதற்காக நிறுத்த போகிறார்கள்?

அக்கம் பக்கத்தவர் வந்து செல்வியிடமும், சுந்தரின் அண்ணிகளிடமும் அவனைப் பற்றிச் சொல்லி செல்ல, எப்போதும் அமைதியாக இருப்பவனுக்கு இன்று என்னவாயிற்று? என ஒன்றும் புரியாதவராய் பெண்கள் விழித்துக் கொண்டிருந்தனர். குடி போதையில் மிகவும் வித்தியாசமாக நடந்து கொள்ளும் அவனருகே செல்லவும் எல்லோருக்கும் மிகவும் பயமாக இருந்தது. எனவே, ஆண்கள் வேலை முடிந்து வர அவர்கள் காத்திருந்தனர்.

அப்போதுதான் சண்முகம், அரங்கநாதன், சந்திரன் அங்கு வந்து சேர்ந்தனர். சண்முகம் சுந்தரின் செய்கைகளைப் பார்த்து வெறுப்பாக உள்ளே சென்று விட்டார். அண்ணன்களோ அவனிடம் போய்ப் பேசியும் அவன் அங்கிருந்து நகரவே தயாரில்லை. அத்தனை நாட்கள் சேர்த்த தன் நற்பெயரை ஒரே நாளில் குடியால் இழந்து, அக்கம் பக்கம் எல்லாம் தன்னைத் தானே அசிங்கப் படுத்திக் கொண்டு இருந்தவனை, இருவரும் திமிர திமிர, சண்முகத்தின் வீட்டுக்குள் உள்ளே இழுத்துப் போட்டனர்.

கீழே நடக்கும் அத்தனை களேபரங்களின் சப்தங்களையும் ரிஷா மேலிருந்து தடதடக்கும் மனத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாள். இன்று ஏதோ ஒன்று நடக்கப் போகின்றது என அவளுடைய மனது படபடவென அடித்துக் கொண்டது. தன்னருகே பயந்து அமர்ந்து கொண்டிருந்த பிள்ளைகளை அணைத்துக் கொண்டாள்.

கீழே சுந்தரோ சம்பந்தமே இல்லாமல் எதை எதையோ சொல்லி அவர்களிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். எதற்காக அவன் அப்படி நடந்து கொண்டிருக்கிறான்? எனப் புரியாதவர்களாக அவனிடம் பதில் வாங்கி விட வேண்டும் என்கிற எண்ணத்தில் அவன் பேசுகின்றதற்கெல்லாம் பதிலளித்துக் கொண்டும், கேள்விகள் கேட்டுக் கொண்டும் இருந்தனர்.

கடைசியில் வெடித்தே விட்டான்,
‘நான் இவர்கள் மகளை இவர்களை விட நன்றாகப் பார்த்துக் கொள்வேன், எனக்குக் கட்டித் தரச் சொல்’ என்று,

கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சி, அப்படியே சமைந்து விட்டனர். மாடியிலோ ரிஷா நடு நடுங்கிக் கொண்டிருந்தாள். சுந்தரின் அண்ணன்கள் வெகு சிரமப் பட்டு, எப்படியோ அவனது ரூம் வரைக்கும் அவனைக் கொண்டு சேர்த்து விட்டு வந்தனர்.

ஒருவர் ஒருவரோடு யாரும் இது குறித்துப் பேசிக் கொள்ளவில்லை, எல்லோருக்குமே சுந்தருக்கு ரிஷா மீது இப்படி ஒரு நோக்கம் இருக்கும் என்று ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.அந்த தீபாவளி அவர்களுக்கு மிகவும் தர்மசங்கடத்துடனே கடந்து சென்றது. ஊருக்கு சென்று திரும்ப வந்த மைதிலிக்கு தன் தம்பி இப்படி மானத்தை வாங்கி விட்டானே என வெகு அவமானமாக இருந்தது.

தன்னுடைய தகப்பன் சரியில்லாததால் மாமாவின் உதவி கொண்டே அனைவரின் வாழ்க்கை சிறந்திருக்க, எல்லோரும் அவரைப் புகழ்வது மைதிலிக்கு அவ்வளவாகப் பிடிக்காது. என் தம்பிகள் உழைப்பு தானே? இதற்கு எதற்கு இந்த மாமாவை ஊரில் எல்லோரும் புகழ வேண்டும் எனும் காய்மகாரம் அவள் உள்ளத்தில் உண்டு.

தற்போது ஊர்மெச்ச திருமணம் செய்து தானும் பிறர் மதிக்க வாழ்வதால், நாங்கள் ஒன்றும் குறைந்தவர்கள் அல்ல என்பதான ஆணவ போக்குகளும் உண்டு. அதனால் தான் போயும் போயும் அந்த மாமா மகளுக்காகவா இவன் இத்தனை அசிங்கமாய் நடந்து கொண்டிருக்கிறான்? தன் வீட்டினர் மறுபடி அவர் காலில் விழுந்தது போல அவளுக்குக் கூசியது. நேரம் வரும் போது இதைச் சரிப்படுத்த எண்ணினாள். எல்லாவற்றையும் தான் தான் சிதறடிக்கப் போகிறோம் எனத் தெரியாதவளாக…

அத்தனை நிகழ்ந்த பின் முதலில் வெட்கப் பட்டுக் கொண்டு வராது இருந்த சுந்தர், பின்னர் மாமா வீட்டிற்கு அடிக்கடி வர ஆரம்பித்தான். இப்போது தன் காதலை ஊர் உலகம் அறிய சொன்ன பெருமை வேறு கூடிப் போயிருந்தது. ஆனால், அவன் வருவதையோ, போவதையோ ரிஷா கண்டு கொள்வதில்லை, முன்பை விட அதிகமாகப் படிப்பில் தீவிரமாய் ஆழ்ந்தாள்.

அவளுடைய பாராமுகத்தைக் கண்டு செல்வியிடமே போய் ‘அத்தை ரிஷா என்னிடம் இப்போதெல்லாம் பேசுவதில்லை, அவளை என் கூடப் பேசச் சொல்லுங்கள்’ என்று தைரியமாகக் கேட்டு நிற்க, ரிஷா எதற்காக அவனிடம் பேசுவதில்லை என்று அறியாதிருந்தாலும் என்னடா இவன் என்னிடமே வந்து இப்படிக் கேட்கிறான்? என்று செல்வி அதிர்ந்தார். ஆனாலும் கூடத் தன்மையாகச் சொல்லிப் பார்ப்போம் என்றவராக,

‘சுந்தர் இங்க பாருப்பா நீ ரிஷா மேல ஆசைப் படறது எல்லாம் சரிதான், ஆனா அவ இப்ப ஸ்கூல் போய்ப் படிச்சிட்டு இருக்கிற சின்னப் பொண்ணுப்பா,. அவளுக்குக் குறைஞ்சது 18 வயசாவது ஆகட்டும், அப்புறம் அவளுக்கு உன்னைப் பிடிச்சிருந்தா கட்டித் தரோம், இப்ப அவ ஏன் பேசலைன்னு தெரியலை, ஒருவேளை பயந்து இருப்பா, கொஞ்ச நாளைக்கு அவளைத் தொந்தரவு பண்ணாதேப்பா’ என்றார்.

உறவுக்குள்ளான இந்தச் சிக்கலை எப்படித் தீர்க்க என அவருக்குப் புரியவில்லை. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாகப் பேசி அவர் முடிவெடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். சுந்தருக்கு வாலிப வயசு, கோளாறு அதனால் இப்படிப் பேசுகிறான். சில வருடங்கள் போனால் எல்லாம் நன்றாகி விடும் என்று அவர் எண்ணினார். கணவனுடைய இரத்த உறவுகள் என்ற முறையில் அவர்களை அவரால் பகைத்துக் கொள்ள முடியவில்லை.

ஆனால், அவன் மனதிற்குள் என்ன இருந்ததோ? தன்னுடைய வரம்பு மீறிய செயல்களால் தான் அவளின் வெறுப்புக்கு ஆளாகி விட்டோம் என்பதை உணராமல் தன்னையே முக்கியப்படுத்தி, முன்வைத்து அவன் நடந்து கொண்டிருந்தான்.

அப்படியாவது ரிஷா தன்னிடம் முன் போலப் பேசிவிட வேண்டும் எனும் வைராக்கியம் அவனை வழி நடத்தியது. தான் என்கிற அல்லது ஆண் என்கிற ஏதோ ஒரு அகங்காரம் அவனைப் பிடித்தாட்கொண்டு இருந்தது.

பொதுவாகவே ஆண்களுக்குத் தாங்கள் விரும்பிய உடன் அந்தப் பெண்ணும் சரி என்று சொல்லி விட வேண்டும் எனும் அகங்காரம் உண்டே? இவனும் அது போலவே நடந்து கொண்டான்.

தன்னுடைய மனதிலுள்ள ஆசையெல்லாம் ஒரு கடிதத்தில் எழுதி தனியாக அவளைக் கண்ட போது அவளிடம் நீட்டினான். அவளோ அவன் மேல் இருந்த வெறுப்பில் அதைத் துண்டு துண்டாகக் கிழித்தாள். அவனைக் காணும் பொதெல்லாம் தேகம் எங்கும் அவன் அநாகரீகத் தீண்டல் தீயை மூட்டிச் சென்ற போது காட்ட முடியாத எதிர்ப்பை கடிதத்தில் காட்டினாள். அதை வாசிக்கவும் அவளுக்கு எண்ணமில்லை.

அதை அவள் எறியும் முன்னே கையில் ஏந்தியவன் மனமொடிந்தவனாக அங்கிருந்து சென்றான். இப்போது அவனுடைய மனம் வேறு விதமாகச் சிந்திக்கலாயிற்று.

அவள் தன்னை நேசிப்பது என்னவோ நிஜம், அதுதான் ஏற்கெனவே நிரூபணமாகி விட்டதே, ஆனால், அன்று தான் எல்லோர் முன்பும் சொன்னதற்குப் பின்னர் மாமாவும் அத்தையும் பேசி அவளுடைய மனதை மாற்றி விட்டிருக்கின்றனர். அதனால் தான் அவள் தன்னுடன் பேச மாட்டேன் என்கிறாள் என்று திட்டவட்டமாக நம்பினான். தான் அவளைத் தகாத இடங்களில் தொட்டது அவனுக்குத் தவறாகவே படவில்லை.

நாட்கள் கடந்தன, அவனுடைய தவிப்புக் கூடியது. மனதில் எந்நேரமும் ஒரே எண்ணம் ‘அவள் தன்னுடைய பெற்றோரின் பேச்சைக் கேட்டு மனம் மாறி விட்டாள் அவர்கள் என்னிடமிருந்து ரிஷாவை பிரித்து விடுவார்கள். கிறுக்கனாய் மாறாத குறையாக அவனை அந்த எண்ணங்கள் பாதித்தன.

இன்னும் சில நாட்கள் இதே எண்ணங்கள் சூழ வலம் வந்தவன் சாதரணமாக மாமா வீட்டிற்கு வருவது போல அன்றும் வந்தான். அங்கு மற்றவர்களும் இருக்க, ரிஷாவிடம்,

நீ ஏன் என்னிடம் பேசுவதில்லை, என்னை என்னவென்று நினைத்திருக்கிறாய்?’

என நேரடியாகக் கேட்டான். ஏற்கெனவெ கோபத்தில் இருந்தவளின் இயல்பான துடுக்குத்தனம் வெளிப்பட்டது. இவன் என்ன ஸ்பெஷலா ? இவன் சொன்னதும் உடனே பேசி விட வேண்டுமா? என்கின்ற எண்ணம் தான் பதிலாக வெளிப்பட்டது.

நான் உன்னை மனுசனாய் தான் நினைத்திருக்கிறேன், என்றாள்

அவள் பதிலில் என்ன எண்ணினானோ ரிஷாவை பாய்ந்து வந்து அடிக்கலானான். நீ என்னிடம் எப்படிப் பேசாமலிருக்கலாம்? என்பதே அவனுடைய வாதமாக இருந்தது.அத்தனை பேரும் சேர்ந்து அவளை அவனிடமிருந்து காப்பாற்றிக் கொண்டு தனித்து விட்டனர்.

மைதிலியோ அங்கு வந்தவள் தம்பியை கன்னம் கன்னமாய் அறைந்தாள். அவனால் தங்கள் குடும்ப மானமே போவதாக உணர்ந்ததால் மிகவும் தரக் குறைவாகப் பேசி, இனி ஒரு முறை இங்கு வந்து விடாதே என விரட்டினாள். அன்று சென்றவனை அதன் பின் யாரும் காணவே இல்லை. எங்குச் சென்றான்? என யாரும் அறியவும் இல்லை. இன்றோ இப்போது இப்படிக் காண்போம் என்றும், தன்னைத் துரத்தும் காரணியாக, தன் உயிரை பாதுகாக்கும் ஓட்டத்தின் பின்னால் இவனே இருப்பான் என்றும் அவள் அறிந்திருக்கவில்லையே?

ரிஷா அரைமயக்கத்தில் கண்விழிக்க முயலுகையில் அதன் பின் அவன் என்னவானான் என்பதை இருவர் பேசிக் கொள்வதைக் கேட்டுக் கொள்ள நேர்ந்தது….கண் விழிக்க முடியவில்லை…அவள் தலை மட்டும் பாரமாய் இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here