14. துரத்தும் நிழல்கள்

0
522
துரத்தும் நிழல்கள்

அத்தியாயம் 14

இருவர் பேசிக் கொள்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ரிஷா தான் முன்பு அறிந்திராத செய்திகளோடு கூடத் தான் அறிந்த விஷயங்களையும் கோர்க்க முயன்றாள். அவளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகச் சில விபரங்கள் இப்போது புரிய வந்து கொண்டிருந்தன.

சுந்தர் ரிஷாவை தாறுமாறாக அடித்த அந்த நாளில், தான் ஒரு போதும் அதட்டியும் இராத தன் செல்வ மகளை இவன் அடித்து விட்டானே? எனும் பொருமல் மனதில் இருந்தாலும் கூடச் சண்முகம் அந்தப் பிரச்சனையைச் சுமூகமாகவே முடிக்க எண்ணினார்.

இந்த வயதில் இப்படிப்பட்ட சலனங்கள், தீவிரங்கள் வருவது தான் என எண்ணியவராக, அவனிடம் சரியாகப் பேசி புரிய வைத்துவிடும் எண்ணத்தில் ஏற்கெனவே இருந்தார். அவனிடம் பலமுறை பேசவும் முயற்சித்து இருந்தார். ஆனால், அவர் சொல்வதைக் கேட்டும் கேளாமல் இருப்பவனிடம் அவரால் ஒன்றும் வலியுறுத்தி பேச முடியவில்லை. இது பெண் பிள்ளை விஷயம் என்று பெரும்பாலும் யாருமே வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெளிப்படையாக அணுகவில்லை. எல்லாம் சரியாகிவிடும் எனும் பொத்தாம் பொதுவான சிந்தனை எல்லோரிடமுமே இருந்தது.

செல்வி தான் அவனிடம், ரிஷாவுக்கு 18 வயதாவது ஆகட்டும், அதன் பின்னர் அவள் விரும்பினால் உனக்குக் கட்டித் தருகிறோம் எனச் சொன்னதாகக் கணவரிடம் சொல்லி இருக்க, தான் பேசுவதைக் கேட்காவிட்டாலும், தன் மனைவி சரியாகவே பேசியிருக்கிறாள், அதை அவனும் கேட்டிருக்கிறான் என அறிந்து அவர் திருப்தியோடு இருந்தார்.
அவருக்கும் தன் தமக்கையின் பிள்ளைகள் எல்லோரையுமே மிகவும் பிடிக்கும். சந்திரன் தன் தமக்கைக்கு முன்பே காதலித்துத் திருமணம் செய்து கொண்டிருந்தாலும் அவனையும் ஆதரித்தவர் தானே அவர். அவருக்கும் கூட உரிய காலத்தில் எல்லாம் சரியாக அமைந்தால் மகளை அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தால் தான் என்ன? என்கிற எண்ணம் இருந்தது.

ஆதலால், செல்வி பேசிய பின்னர்த் தற்போதைக்குப் பிரச்சனை தீர்ந்ததென்று அவர்கள் எல்லோரும் இருக்க, அவன் தங்கள் கண் முன்பாகவே தன் மகளை அடிக்கும் வரை போவான் என்று அவரும் எண்ணி இருக்கவில்லை.

பொதுவாகவே பல நேரங்களில் எதிர்பாராமல் வரும் ஏதேனும் ஒரு பிரச்சனையை ஆண்கள் அணுகும் விதம் வேறாகவும், பெண்கள் அணுகும் விதம் வேறாகவும் இருக்கும். பெண் உணர்ச்சிகரமாகச் சிந்திப்பாள், முடிவுகள் எடுப்பாள். ஆனால், ஆணோ சற்று நிதானமாகச் சிந்தித்துச் செயல்படுவான்.

இங்கோ அது போலவே சண்முகம் தலையிடும் முன்னதாகவே மைதிலி சுந்தரை தன் இஷ்டம் போலவே தரக்குறைவாகப் பேசி, இனி இந்த வீட்டிற்குள் வரக்கூடாது எனச் சொல்லி விட்டிருக்க, சண்முகம் அங்கே செயலற்றுப் போனார்.

அங்கிருந்து புறப்பட்டுக் கோபத்தில் சென்றவனை அவர்களும் தேடவில்லை. எங்கே சென்று விடுவான்? தன் அறையில் தானே இருப்பான் என இவர்கள் அவனைக் கண்டு கொள்ளாமல் விட, அவன் தான் தங்கியிருந்த அறையையும் காலி செய்து விட்டு அன்றே காற்றாய் மறைந்து போயிருந்தான்.

அவனது உடன் பிறப்புகள் அவன் இவ்வாறு நடந்து கொள்வான் என எதிர்பார்க்காததால் அவனைக் காண முடியாமல் திகைத்துப் போயினர். சண்முகமும் செல்வியும் கூட அவனது இந்தச் செயலை எதிர்பார்க்கவில்லை. பல்வேறு முறையில் அவனை அவர்கள் கண்டுபிடிக்க முயற்சி செய்தும் அவனைக் குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை.

ரிஷாவின் மனதில் சுந்தரின் செயல்கள் காரணமாக ஆண்கள் மீதான வெறுப்புணர்வு வேர் பிடிக்க ஆரம்பித்து இருந்தது.சுந்தர் காணமல் போனதை எண்ணி அவள் பெரிது படுத்திக் கொள்ளவில்லை. நம்மைக் கண்ட கண்ட இடத்தில் தொடுபவன், கடிதம் கொடுப்பவன், அடிப்பவன் தொலைந்து போனான். தொல்லை விட்டது, நல்லதாகிப் போயிற்று எனத் தன் பள்ளிப் படிப்பிலும், பென்சில் டிராயிங்குகளிலும் அவள் ஆழ்ந்துப் போனாள். அவள் வயதிற்கு அவளிடம் இதைவிட அதி
கமாகவும் எதிர்பார்க்கவும் எதுவும் இல்லையே.
அரங்கநாதனும், சந்திரனும், மைதிலியும் அவர்கள் குடும்பத்தினரும் முன் போல இல்லாவிடினும் அவ்வப்போது மாமாவின் வீட்டிற்கு வருவதும் போவதுமாகத் தங்கள் போக்குவரத்தை வைத்திருந்தார்கள். குழந்தைகள் இப்போதெல்லாம் அடிக்கடி ரிஷாவுடன் விளையாட வருவதில்லை.

தங்கள் தம்பியை காணவில்லையே? இதற்குக் காரணம் இந்த மாமா வீட்டினர் தானே? மாமா மகள் தானே? என அவர்கள் மனதில் வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்து இருந்தன.

வெளிப்படையாக இல்லாவிடினும் பெரிதளவில் உறவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. முன் போல வெளிப்படையான பகிர்தலும், கலகலப்பும் அவர்களிடம் காணப் படவில்லை. மாமாவிடம் காட்டும் பவ்யம், பயம் மற்றும் பணிவையும் இருவரும் வேலை இடத்தில் தொடர்ந்து காட்டி வந்தனர்.

ரிஷாவோ சுந்தர் செய்து வைத்த செயல்களால், வெறுப்பில் தானாகவே எல்லா ஆண்களிடமும் விலகி இருக்க, அதில் அரங்கநாதனும் சந்திரனும் அவளிடம் காட்டிய ஒதுக்கத்தை அவளுக்குப் பிரித்துப் பார்க்கவோ, உணரவோ தெரியவில்லை.

சுந்தர் வீட்டை விட்டு சென்று நாட்கள் கடந்து மாதங்கள் ஆகின. அவன் எங்கே சென்றான்? என்பது யாருக்குமே தெரியவில்லை. மல்லிகா ஊரிலிருந்து சென்னை வந்து ஒருபாட்டம் அழுது தீர்த்துவிட்டு சென்றார். மற்றவர்களோ அழாமல் அத்தனையையும் தங்கள் மனதில் சேமித்து வைத்தனர்.

கால் போன போக்கில் சென்ற சுந்தர் தன்னைத் தரக்குறைவாகப் பேசிய பேசிய தமக்கையையும், அவ்வாறு அவள் பேசும் போது அங்கிருந்தும் கூட அவளைத் தடுத்து பேசாத அண்ணன்களையும் முற்றிலும் வெறுத்தான்.

தனக்குத் தெரிந்த வேலைகளை எங்கெங்கோ அலைந்து திரிந்து செய்து கொண்டு உணவு உண்டு வந்தான். நாடோடி போன்ற தன் வாழ்வில் மனதிற்குள்ளாக நாளுக்கு நாள் ரிஷா மீது வெறுப்பு படர்ந்து கொண்டிருந்தது. ரிஷா வீட்டினர் அவளைத் தனக்குத் தராமல் வேறு யாருக்கும் திருமணம் செய்து கொடுத்துவிடுவார்கள் என்பதே அவனுடைய சிந்தனையாக இருந்தது. தான் கிராமத்தான் இவர்கள் நகரத்தை சார்ந்தவர்கள் என்கின்ற ஆரம்பக் காலத் தாழ்வு மனப்பான்மை மறுபடியும் மனதில் குடியேறி விட்டிருந்தது. ஒருவேளை அதனால் தான் பெண் தர மறுக்கிறார்களோ? எனத் தான் எண்ணிக் கொண்டிருந்த தப்பிதங்களில் இவற்றையும் சேர்த்துக் கொண்டான்.

அவளை என்னுடைய மனைவியாக மனதில் வரித்துக் கொண்டு நான் அவளோடு வாழ்ந்து கொண்டிருக்க, இவர்கள் அவளைப் படிக்கவைக்கவேண்டும். 18 வயதான பெரிய பெண்ணாக வேண்டும் எனப் பல காரணங்கள் சொல்லி என்னிடமிருந்து பிரித்து மற்றொருவனுக்குத் திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார்கள். இதனை நான் எவ்வாறு அனுமதிக்க முடியும்? என்று மனதிற்குள் வெகுண்டான்.

ரிஷா மீது இருந்த காதல் அனைத்தும் இப்போது வெறுப்பாக மாறி இருந்தன. அவனுடைய வெறித்தனமான எண்ணங்கள் அவனைக் கண்மூடித்தனமாக நடந்து கொள்ளச் செய்தது. அவனால் ரிஷாவை மற்றொருவனோடு சேர்த்துக் கற்பனை செய்து பார்க்கவும் இயலவில்லை.

அவள் என்னுடையவள், அவனை இன்னொருவன் தீண்டவும் நான் எப்படி விட முடியும்? ஒன்று அவள் என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது அவள் யாருக்குமே கிடைக்காமல் போக வேண்டும், என்ற எண்ணம் அவனுள் வலுப்பெற்றது.

செல்வி கூறிய வார்த்தைகளை அதாவது 18 வயதானதும் அவள் விருப்பத்திற்கு ஏற்ப கேட்டு அவளை அவனுக்கு மணமுடித்துத் தருவதாக அவர் சொன்ன வார்த்தைகளை அவன் முற்றிலுமாக நம்பவே இல்லை அவர் தன்னை ஏமாற்றுவதற்காக அப்படிப் பேசுகிறார் என்று எண்ணிக் கொண்டான். மற்றவரைப் பற்றி எண்ணாமல் தான் தோன்றித்தனமாகத் தன்னுடைய சிந்தனைக்கு ஏற்பவே ஆரம்பம் முதலே செயல்பட்டுக் கொண்டிருந்த அவனுக்கு வழி நடத்துவார் எவரும் இல்லை. யாரும் வழி நடத்தினாலும் அவர்கள் மீது நம்பிக்கை கொண்டு கேட்கும் நிலையிலும் அவன் இல்லை.

தன்னுடைய முட்டாள்தனமான சிந்தனைகளில் ஊறிப்போய் இருந்தவன் அவன். அதனால் தான் செய்வது என்னவென்று அறியாத ஒரு மடமை தனத்தை அடைந்து இருந்ததால், அவனுக்குத் தான் செய்வது எல்லாமே சரியானதாகவே பட்டது.

அவனைப் பொறுத்தவரையில் அவனுடைய காதல் உண்மையானது. அது ஜெயிக்கவேண்டும். ஒன்று இருவரும் சேர்ந்து வாழ வேண்டும், அல்லது இருவரும் சேர்ந்து சாக வேண்டும், அப்படி இருந்தால் அதுவல்லவோ காவியக்காதல் ஆகும்?!

என்னோடு அவளுக்கு வாழ விருப்பம் இல்லை என்றால் என்னோடு சேர்ந்து சாவது அவளுக்கு விதியாக இருக்கட்டும் என்று அவன் தீர்மானித்தான். ஆனால் உலகத்தில் மனிதன் எண்ணுவது அனைத்தும் ஈடேறாது. அனைத்திற்கும் மேலானவன் ஒருவன் இருக்கிறான். அவனே அனைத்தையும் தன்னுடைய கண் அசைவிற்கேற்ப நடத்துகின்றான் என்பதை அவன் உணராமல் போனான்.

ஆரம்பம் முதல் தன்னுடைய உணர்வுகளுக்கு ஏற்ப மட்டுமே செயல் பட்டுக் கொண்டிருந்த சுந்தர் தான் எடுத்த அத்தனை முடிவுகளும் தவறானவை என்பதை உணர்ந்து கொள்ளவே இல்லை. தன்னுடைய செயல்களைச் சுய பரிசோதனை செய்து கொள்ளவும், தான் செய்வது சரியா? தவறா? என்று பரீட்சித்துப் பார்க்கவும் அவன் முயலவில்லை. கண்மூடித்தனமான அவன் செயல்கள் எங்குக் கொண்டு போய் விடுமோ?

இந்தப் பிரச்சனைகள் தீரும் முன்பே சண்முகத்தின் கார்மெண்டில் பார்ட்னர்களுக்குள்ளான பிரச்சனைகள் ஒவ்வொன்றாக ஆரம்பித்தன. அவருடைய பார்ட்னர் கனகவேல் தன் பங்குகளைப் பிரித்துக் கேட்டார். அவர் கேட்ட காரணம் நியாயமாக இருக்கவே அதற்காகத் தற்போதைய கணக்கு வழக்குகள் சரிபார்க்கப்பட்ட பொழுது ருத்ரபாண்டி பண விஷயத்தில் முறைகேடாக நடந்திருப்பது வெளிவந்தது. கனகவேலும், சண்முகமும் நிகழ்ந்த நம்பிக்கை துரோகம் கண்டு அதிர்ந்தனர்.

கனகவேல் அதை முற்றுமாய் எதிர்க்க, சண்முகமோ எங்கே இந்தப் பிரச்சனையை வளரவிட்டால் தங்களுடைய வருடக்கணக்கான உழைப்பான இந்தக் கார்மெண்ட் அழிந்து போய் விடுமோ? எனும் எண்ணத்துடன் ஒரு புறம் கனகவேலை சமாதானப் படுத்திக் கொண்டு இருந்தாரென்றால், மறுபுறம் ருத்ரபாண்டியிடம் பேசி அவர் கையாடல் செய்த பணத்தைத் திரும்ப வாங்க அலைந்து கொண்டு இருந்தார். ஏனென்றால், ருத்ர பாண்டி பணம் ஏற்பாடு செய்து தராதவரை கனகவேலின் பங்கை பிரிப்பது சாத்தியமில்லை.

இன்றைய காலக் கட்டத்தில் நியாயமே இல்லாமல் பணத்தைக் கையாடல் செய்திருந்தாலும், பணத்திற்கு உரியவர் கெஞ்சி கூத்தாடி தான் வாங்க வேண்டிய நிலை. தர முடியாது என்று எடுத்தவர் முரண்பட்டால் பணத்தைப் பறிக் கொடுத்தவர் என்னதான் செய்ய முடியும்? அதிகபட்சம் போலீஸிடம் அடி வாங்கிக் கொடுப்பது வரைதான் போகும். இத்தனை காலம் நட்பு காரணமாய் அவரால் போலீஸ் அடிதடி பிரச்சனை எனும் விஷயத்திற்குள்ளேயே செல்ல முடியவில்லை.

இப்படி உள்ளுக்குள் பிரச்சனைகள் இருப்பது தெரிந்தால் வேலைக்கான ஆர்டர்கள் வருவதும் கூட நின்று விடலாம் எனும் பயமும் இருந்தது. பலத்த போட்டியாளர்கள் இருக்கும் சூழலில் மேலும் மேலும் பிரச்சனைகள் இல்லாமல் தங்கள் நிறுவனத்தைக் கொண்டு செல்லவே சண்முகம் முயன்றார்.

இந்தச் சூழலில் கனகவேலின் மகன் திடீரென்று காணாமல் போய்விட, பல்வேறு தேடல்களுக்கிடையில் தண்ணீர் குட்டையினுள் அவன் பிணமாய் மீட்கப்பட்டான். பிரச்சனை இன்னும் பெரிதாயிற்று. தன் மகனை கொன்றது ருத்ரபாண்டியாகத்தான் இருக்க வேண்டும் எனக் கனகவேல் போலீஸில் புகாரளித்தார். விசாரணை தொடர்ந்து கொண்டு இருந்தது. இவ்வாறு இரண்டு நண்பர்கள், அவர்களுடைய பிரச்சனைகள் என ஒற்றையாய் சண்முகம் அல்லல் பட்டுக் கொண்டிருந்த போது, அவர் வேலைகளைப் பகிர்ந்து கொண்டு அரங்க நாதனும், சந்திரனும் தூணாய் தாங்கிக் கொண்டனர்.

அப்படி ஒரு நாளில் தான் ரிஷா இரவோடு இரவாகச் சென்னையிலிருந்து மற்றொரு மாநிலத்திற்குக் கூட்டிக் கொண்டு செல்லப்பட்டு, இன்னும் சில சில இடங்களில் மாறி, டார்ஜிலிங்கிற்கு வந்து சேர்ந்தாள். அவள் கேட்ட ஏராளமான கேள்விகளுக்குப் பதில் அளிக்கப் படவில்லை.

முதலில் அவளோடு இருந்த அம்மா, அவளுக்காக அங்கேயே ஸ்கூல் முதலான ஏற்பாடுகளைச் செய்தார். அதனைத் தொடர்ந்து வந்த அப்பா ஷாரதாவை அவளுக்குத் துணைக்கு வைத்துவிட்டு, தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டுச் சென்றார்.

அதன்பின்னர் அவள் வாழ்வில் நடந்தது தான் நம் அனைவருக்கும் தெரிந்தவை ஆயிற்றே.

தன் சுய உணர்வு முழுவதுமாக இல்லாத போதிலும் அவர்கள் சொல்வதைக் கவனம் கொடுக்க முயன்றாள். காட்சிகள் கண் முன்னே படமாக விரிந்தன.

சுந்தரின் ஆத்திரம் எல்லை மீறிப் போயிருந்தது. எப்படியோ நாட்களைக் கடந்திருந்தான், இனியும் பொறுக்க முடியாது. தன் முடிவில் இன்னும் உறுதிக் கொண்டான்.

முதலில் தான் வாங்கி இருந்த புதுவிதமான சட்டைகளில் ஒன்றை அணிந்து கொண்டான். ஒரு சலூன் கடைக்குச் சென்று தன் தலை முடியை மாறுதலாக வெட்டிக் கொண்டான். அவன் முகத்தை இப்போது அவனாலேயே அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. நல்லதாகப் போயிற்று, மிக நல்லதாகப் போயிற்றுத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

தெருவோரக் கடையினின்று அந்த நீளக் கத்தி, கூர் பார்த்துக் கொண்டான். கையில் சட்டென்று இரத்தப் பூ பூத்து நிற்க திருப்தி, மிகவே திருப்தி. மெடிக்கல் ஸ்டோரில் சென்று சில பொருட்களை வாங்கிக் கொண்டான். மறுபடி தன் சொந்தங்கள் இருக்கும் இடத்திற்குப் பயணமானான். தன்னுடைய இலக்கு ஜெயிக்க வேண்டும் எனும் தீவிரத்தில் அவனது இதயம் வேகமாய்த் துடித்துக் கொண்டு இருந்தது.

இதோ வந்துவிட்டான், சண்முகத்தின் வீடு கண்ணுக்கெட்டிய தூரத்தில் தான் இருந்தது. இருட்டும் வரை காத்திருந்தான். டியூசன் முடித்து வழக்கமாக ரிஷா திரும்பும் போது மாலை ஏழு மணிக்குள்ளாகவே அங்கு இருள் படர்ந்து விடும். அந்த இருள் தான் அவனுக்கு வேண்டும். ஆம், இருளில் அவளைக் கண்டதும் ….மனதிற்குள்ளாகத் தான் எண்ணியவற்றை ஒருமுறை ஓட்டிப் பார்த்தான். ம்ம்… அவள் வரும் முன் செய்ய வேண்டியவை மனதிற்குள் தெளிவாகிற்று.

மறைவில் சென்று தான் எடுத்து வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து முடித்தான். சட்டையைத் திறந்து இதயத்தின் பக்கம் நீவினான். பல நாட்களாக ‘ரிஷா’ எனக் கத்தியால் தீட்டி தீட்டி வைத்திருந்த அவள் பெயர், அதனால் ஏற்பட்ட உடல் வலி அவனுக்குச் சுகமாக இருந்தது. கையில் இருந்த கத்தியால் மறுபடியும் தன் நெஞ்சில் கீறினான்.

ரிஷா… ஆஹா அந்த வலியும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்னும் பத்தே நிமிடத்தில் ரிஷா இந்த வழியாகக் கடந்து செல்வாள். அவளை அலேக்காகப் பிடித்துக் கழுத்தை ஒரே சீவு.

கழுதை என்னுடன் பேச முடியாதா அவளுக்கு, இனி எப்போதுமே பேச தேவையில்லை. அதுதான் என்னுடன் அவளை அழைத்துச் செல்லப் போகின்றேனே மனதில் எழுந்த மகிழ்ச்சி, திருப்தியில் இளித்தான்.

ஐந்து நிமிடம் கழிந்தது சண்முகத்தின் வீட்டருகே வந்து, எதிரில் இருந்த திண்டில் அமர்ந்தான். அது அவன் தீபாவளி அன்று போதையில் வெடி வெடிக்கும் போது அமர்ந்திருந்த திண்டு.

ஏ யார் நீ புதுசா? ஏன் இங்கே உக்காந்திருக்க? கேட்டவாறு சந்திரன் அவனைக் கடந்து சென்றான். அங்கே அமர்ந்திருப்பது தன் தம்பி என்றோ? அவன் ஏற்கெனவே விஷம் அருந்தி இருப்பதோ அவனுக்கு எங்கே தெரியும்? அதுதான் இவன் உருவத்தை முழுவதுமாக மாற்றி இருந்தானே.

தன்னை கடந்து சென்றவனையே இகழ்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தர்.

10 நிமிடம்

15 நிமிடம்

20 நிமிடம்

ரிஷா வரவே இல்லை. கத்தியை பிடிக்கவும் வலுவில்லாமல் அவனது கை நடுங்கத் தொடங்கிற்று. உடலின் கழிவுகள் உடலை விட்டு வெளியேற துடித்தன. கண்கள் கிறங்கி, உடலின் ஒவ்வொரு பகுதியும் இறுதி ஓய்வுக்குத் துடித்தன.

ஐயோ நான் வாழ வேண்டும்… எனும் ஆசை அப்போது தான் அவனுக்குத் தோன்றியது.

எழுந்து தள்ளாடி தடுமாறி அண்ணன்கள் வீட்டிற்குச் சென்றால் பூட்டி இருந்தது. அக்கா வீட்டிற்குச் சென்றான், நிற்கவும் முடியாமல் கதவு திரையைப் பிடித்துத் தொங்கி நிற்க வீட்டை திறந்து போட்டவளாய் அவள் எங்கே சென்றாளோ?

தள்ளாடி, தடுமாறி அதே திண்டில் வந்து அமர்ந்தான். அதற்கு மேல் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சோர்ந்து சாய்ந்து விட்டான். அவனுக்கான வாழ்வின் வழிகள் அனைத்தும் ஒவ்வொன்றாய் அடைப்பட்டு விட்டன.

ஏதேச்சையாகச் சண்முகத்தின் வீட்டிலிருந்து வெளி வந்த அரங்க நாயகத்திற்குத் தன் உடன் பிறப்பின் உயிர் துடிப்பு புரிந்ததோ? அவனை அடையாளம் கண்டு ஓடி வந்து, ஏதோ தவறாக நடந்து விட்டது என் புரிந்து, அவனை அள்ளிப் போட்டுக் கொண்டு, சந்திரனையும் அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் நோக்கி ரிக்ஷாவில் விரைய,

எனக்கு வாழணும் அண்ணா…

ஆமாண்டா உனக்கு ஒன்னும் ஆகாது…பயப்படாதே…

எனக்கு ரிஷாவை கல்யாணம் பண்ணிக்கணும்னா…

உனக்குத்தான் அவ, கவலைப் படாதே சுந்தரு…

மாறி மாறி அதையே புலம்பினான்.

நீ பொழைச்சுப்பேடா… கண்ணீர் துளிகள் தெறித்தன.

உனக்குத்தான் அவளைக் கட்டி வைப்போம்டா… ஆண்கள் இருவரும் கதறினர்.

அவன் சட்டையில் இரத்தக் கறை பார்த்து திறக்க, அங்கே அவனின் நெஞ்சை துளைத்துக் கொண்டு அவளின் பெயர். தொடர்ந்த சுந்தரின் புலம்பல் சற்று நேரத்தில் நின்றுப் போக, ஹாஸ்பிடலில் தூக்கிக் கொண்டு ஓடோடிச் சென்றவர்களுக்குக் கிடைத்த பதில்,

ஏற்கெனவே இறந்து விட்டான்… என்பதே

பல மாதங்களாகத் தேடியும் கிடைக்காத உடன் பிறப்புக் கையில் கிடைத்தும் இழந்த நிலையில் அடுத்து என்ன செய்வது? பிணத்தை எங்குக் கொண்டு செல்வது? முறையாக எல்லாம் செய்ய வெண்டுமே? ஊரிலிருந்து பெற்றோரை அழைத்து வரவேண்டுமே?

செயலற்றவர்களாய் நின்றவர்களைச் சண்முகம் அழைத்துச் சென்றார். அவர் காட்டிய இடத்திலெல்லாம் அவர்கள் கையொப்பம் இட்டார்கள். ஏனென்றால், அது வரை அவர்களுக்கு அதுதானே பழக்கம்.

பிரேதத்தை வண்டியிலிட்டு ஏற்றினர், வீட்டிற்குச் செல்லத்தான் போல என எண்ணியவர்களாக அவர்களும் ஏறினர். மின்மயானத்திற்குச் சென்ற அந்த வண்டியிலிருந்து சுந்தரின் உடல் இறக்கப்பட்டது.

சரியாக ஒரே ஒரு மணி நேரத்தில் தேகம் விரைத்தவர்களாக, கையில் ஒரு பிடி சாம்பலாக மாறிய சுந்தரை ஏந்தியவர்களாக, பிரம்மையில் நின்றுக் கொண்டிருந்தனர் சகோதரர்கள் இருவரும்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here