15. துரத்தும் நிழல்கள்

0
515
துரத்தும் நிழல்கள்

அத்தியாயம் 15

அதே மின்மயானத்தின் மற்றொரு பக்கத்தில் சண்முகம் தனியராய் அமர்ந்திருந்தார். ஆண்மகன் அழக்கூடாதாமே? ஆகவே பொழிய முயன்ற கண்ணீரை அடக்கி, அடக்கி அவர் கண்கள் சிவந்து இருந்தன. கடந்த சில மணி நேரங்கள் அவர்கள் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போட்டிருந்ததே?

சற்று முன்பு நிகழ்ந்தவையெல்லாம் கனவாக இருக்கக் கூடாதா? என அவரது மனதில் ஏக்கம் எழுந்தது. தன் தமக்கைக் குடும்பத்திற்காகத் தான் செய்த அனைத்தும் இப்போது மறைந்து, தான் செய்த ஒரே ஒரு செயல் மட்டுமே விமர்சிக்கப் படும் என்பதை அவர் உணராதவர் அல்லவே?

அன்று அவர் சற்று நேரம் முன்னதாகவே வீட்டுக்கு வந்து இருந்தார். அலுப்பில் கண்கள் மூடி படுத்திருந்தார். அதனால் தான் கார்மெண்ட் கணக்குகளை, சில விபரங்களைத் தெரிவிக்க அவரைச் சந்திப்பதற்காக அரங்க நாயகமும், சந்திரனும் அவர் வீட்டிற்கு வந்து திரும்பினர்.

அதன் பின்னர்க் கடந்த மணித் துளிகளில் நிகழ்ந்தவை அவருக்கும் கூட மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது. பல மாதங்களாக வீட்டுப்பக்கமே வந்திராத தன்னுடைய அக்காவின் மகன் சுந்தர், சற்று முன்பு தனது வீட்டின் எதிரே, அண்ணன்களால் அடையாளம் காணப்பட்டு, ஏதோ அவசரமாக மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு செல்லப்பட்டபோது, அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அனைவருடைய கவனமும் அங்கே திரும்பி இருந்தது.

அவர்கள் சென்றதும்தான் சண்முகமும் எழுந்து புறப்பட்டுச் சென்றார். பொதுவாகவே தன் வாழ்வில் ஏராளமான ஏற்ற இறக்கங்களைக் கண்டதால், எதற்கும் அலட்டிக் கொள்ளாத சுபாவம் அவருடையது. அதனால் தான் சுந்தர் இத்தனை மோசமாகத் தன் மகள் விஷயத்தில் நடந்தும், சரியாகிவிடும் எனப் பெரிது படுத்தாமல் அவரால் இருக்க முடிந்தது.

சுந்தர் முன்பைப் போலக் குடிவெறியில் அந்தத் திண்டில் அமர்ந்து இருந்திருப்பான், குடிபோதை தீர்ந்ததும் சரியாகி விடும், இதற்காகவா இத்தனை அவசரமாய் அவனை மருத்துவமனை அழைத்துச் செல்ல வேண்டும்? எனும் அலட்சியமான சிந்தனையே முதலில் அவர் மனதில் இருந்தது. ஆனாலும் கூடத் தன் அக்கா மகன்களுக்குத் துணையாகச் செல்ல வேண்டும் என எண்ணியதாலேயே அவர் புறப்பட்டது.

போகும் வழியில் ஏனோ அவருக்குச் சுந்தர் அமர்ந்திருந்த திண்டை எட்டிப் பார்க்க தோன்றியது. அந்த மங்கலான வெளிச்சத்தில் திண்டில் ஏதோ ஒன்று இருப்பதை அவர் கண்டு கொண்டார். நல்ல வேளை அதுவரையிலும் யாருக்கும் கிடைக்காதிருந்த அந்தக் கத்தி அவர் கையில் கிடைத்தது. பார்த்ததும் கத்தியின் விளிம்பில் இருக்கும் ரத்தத் துளிகள் அவரை மிகவே கலவரப்படுத்தியது.

அவசரமாகத் தன்னுடைய கைகுட்டையை அதன் மேல் போட்டு மறைத்தார். அதை ஒளித்தவாறு எடுத்துக்கொண்டு சென்று, தங்கள் வீட்டில் மரத்தின் கீழே வைத்து, சிறிது மண்ணால் மூடிய வண்ணம் வைத்துவிட்டு ஹாஸ்பிடல் நோக்கி விரைந்தார்.

அத்தனை பெரிய கத்தி, அது நிச்சயமாய்ச் சுந்தர் கொண்டு வந்ததாகத்தான் இருக்கும், அது யாருக்காக இருக்கக் கூடும்? என யோசிக்கையில் தன்னுடைய மகள் ரிஷாவைத் தவிர அவன் ஆத்திரம் கொள்ளும் யாரும் அவருக்கு நினைவுக்கு வரவில்லை. அடப்பாவி, அந்தப் பச்சப்புள்ளையை அன்றைக்குத்தான் அடிச்ச, இன்றைக்குக் கொல்லவே துணிஞ்சிட்டியா? தகப்பனாய் அவர் இரத்தம் கொதித்தது.

‘பாம்பிற்கு எத்தனை தான் பால் ஊற்றினாலும், தன் விஷக் கொடுக்கை காட்டாமலிராது, கொத்தாமல் இராது’ எனும் உண்மையை அவர் புரிந்து கொண்டார். முதன் முறையாகச் சுந்தர் மீது அவருக்கு அடங்காத கோபம் எழுந்தது. அவன் சரியாகி வரட்டும், மறுபடி ஊருக்கு அனுப்பி வைத்து விடுகிறேன், எனச் சுந்தரைக் குறித்து எண்ணினாரே தவிரத் தானும் தன் குடும்பமும் தான் இன்றைய நாளுக்குப் பின்னர் ஊர் ஊராக அலையப் போவதை அவர் உணரவில்லை.

முன்தினம் செல்விக்குக் காலில் ஏதோ லேசாக அடிப்பட்டிருந்தது. இப்போதெல்லாம் மனைவி துணை இல்லாமல் ரிஷா எங்குமே செல்ல சண்முகம் அனுமதிப்பல்லை என்பதால் ரிஷாவை அன்று ட்யூஷனுக்குப் போக வேண்டாமெனச் சண்முகம் தடுத்திருந்தார். அது மிகவும் நல்லதாகப் போயிற்று இல்லை என்றால் அவர் இந்நேரம் தன்னுடைய அருமை மகளை இழந்திருப்பார் அல்லவா? கற்பனை செய்தவர் உடல் ஒருமுறை அச்சத்தில் சிலிர்த்து, குலுங்கி அடங்கியது.

இவ்வாறு பலவிதமாய் யோசித்துக்கொண்டு மருத்துவமனையை அவர் அடைந்த பொழுது, சுந்தர் ஏற்கனவே இறந்து விட்டதாய் சொல்லி இருந்தனர். அவர் கண்முன் அரங்க நாயகமும் சந்திரனும் தன் தம்பியின் இறப்புச் செய்தியைக் கேட்டு, அழுகையில் திக்கு தெரியாதவர்களாய் நின்றதைக் கண்டார். முதலில் அவர் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி தேற்றி, உள்ளே சுந்தரின் பிணத்தைப் பார்க்க சென்றவருக்கு அவன் முகமே முதலில் அடையாளம் தெரியவில்லை.

முற்றிலும் தோற்றத்தை மாற்றி இருந்த அவன் முடி வெட்டும், வித்தியாசமாக அணிந்திருந்த சட்டையும், அந்தச் சட்டை அதில் என்ன ரத்தக் கறை? அதைத் திறந்து எடுத்துப் பார்த்த போது, தன் நெஞ்சில் அவன் ‘ரிஷா’ வென எழுதியிருந்த மகளின் பெயர் கண்டு அந்தத் தகப்பன் ஆடிப் போனார். இது சின்னப் பிரச்சனை அல்ல… அவர் மனதில் எச்சரிக்கை மணி அடித்தது.

அவன் உயிரோடு இருந்தாலாவது எப்படியாவது அவனைப் பேசி சரி செய்து விடலாம் ஆனால் இப்போது இறந்துவிட்டான் என்ன செய்வது? முறையாகச் சுந்தரின் இறுதி யாத்திரைக்கு ஏற்பாடு செய்தால் என்னவாகும்? அவர் மனதிற்குள்ளாகக் காட்சிகள் ஓடியது. அவன் நெஞ்சில் இருக்கும் அந்த அடையாளம், இதுவரை தெரியாத அனைவருக்கும் அவன் சாவின் காரணத்தைத் தெரிவித்து விடும் அல்லவா?

அவன் நெஞ்சில மாமா மகள் பேர் எழுதி இருக்கிறான்பா?

அப்படினா அவளால தான் அவன் இறந்திருக்கணும்.

ஒருவேளை காதலிச்சுட்டு ஏமாத்தி இருப்பாளோ?

இருக்கும் இருக்கும்…யார் கண்டா எந்தப் புத்துல எந்தப் பாம்போ?

யாரு ரொம்ப அமைதியா இருக்குமே அந்தப் பொண்ணா?

ஆமாம்கா, ஊமை ஊரைக் கெடுக்கும்னு சும்மாவா சொன்னாங்க?

ஒழுங்கா பிள்ளையயை வளர்க்கணும், இல்லைன்னா இப்படித்தான் எல்லோர் வாயிலயும் கிடந்து அரைப் படணும், பொட்டப் பிள்ளையா அடக்கமா இல்லாம இந்தப் பிள்ளை என்ன வேலை செஞ்சு வச்சிருக்கு பார்த்தியா?

இந்த வயசிலயே இந்தப் பிள்ளை இந்த விவரமா இருக்குதே, இதுவே வாலிப வயசானா என்னா வரத்து வருமோ?

அதான் என் மனசு ஆறவே இல்லை, இப்படி ஒருத்தனை கொன்னுட்டாளே? படுபாவி, அவ விளங்குவாளா? உருப்படுவாளா?

நிஜமாக இல்லாவிடினும், இப்படியெல்லாம் நிகழ்ந்து விட வாய்ப்புள்ளதே எனத் தன் காதுக்குள் ஒலித்த ஊராரின் வசவுகளைக் குறித்து எண்ணவும் இயலாமல் காதுகளைப் பொத்திக் கொண்டார்.

இவனை முறையாகத் தகனம் செய்ய அனுமதித்தால் ஒரு பாவமும் அறியாத தன் மகளின் வாழ்வை அல்லவா அது பாதித்து விடும். தன் மகளின் தகப்பனாக அந்தச் சூழ் நிலையில் மிகவும் கலங்கினார்.
அவருக்கு இப்போது தன்னுடைய மகளின் மானத்தையும் வாழ்க்கையும் தவிர வேறு எதுவும் ஞாபகம் இல்லை. இத்தனையாகத் திட்டமிட்டு, தன் தோற்றத்தையே மாற்றி மகளைக் கொல்ல வந்தவன் இப்போதோ இறந்தும் அவள் வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருக்கிறான். எப்பாடுபட்டாவது என் மகள் அவள் வாழ்க்கை, எதிர்காலம் அதை நான் காக்க வேண்டும் எனத் தீர்மானம் எடுத்தார்.

வழக்கமாகச் சாவு கேசுகளில் போஸ்ட்மார்ட்டம் என ஆரம்பித்து அதன்பின் யாரால் விஷம் குடித்தது? என்ன பிரச்சனை? எனப் போலீஸ் வரை செல்லும், இது போலவே ஆகி சுந்தரின் இறப்பு விஷயம் ஊருக்கே தெரிவதில் அவருக்கு விருப்பமில்லை. அதனால் அங்குத் தனக்குத் தெரிந்த சிலரின் உதவியோடு, எல்லாவிடமும் அநாயாசமாய்ப் பணத்தை வீசியெறிந்து, தற்கொலையைச் சாதாரணச் சாவாக மாற்றி, இறப்புச் சான்றிதழ் வாங்கிக்கொண்டு அத்தனையிலும் அவன் அண்ணன்களின் கையொப்பத்தைப் பெற்று, அடுத்தடுத்து தன்னுடைய தீர்மானத்திற்கு ஏற்ப செயல்படத் தொடங்கினார்.

ஏனென்றால், அதை விடுத்தால் அப்போது அவருக்கு வேறு வாய்ப்பும் இல்லை. இப்போது செயல்படாவிட்டால் வாழ்நாள் முழுக்கத் தன் மகளுக்காக அவர் வருத்தப்பட வேண்டியது தான். எனவே, பிரேதத்தை வீட்டிற்குக் கொண்டு வராமல் உடனே சாம்பலாக்க திட்டமிட்டார். மின் மயானத்திற்குக் கொண்டு சென்று அவனுடைய அண்ணன்கள் என்ன நடக்கின்றது என உணரும் முன்பே, சுந்தரின் சடலத்தைச் சாம்பலாக்கி அவன் கையில் ஒப்படைத்து விட்டனர்.

சண்முகம் தன்னுடைய அக்கா பிள்ளைகளைத் தன்னுடைய பிள்ளைகள் போலவே நடத்தியவர், அவர்கள் பசியும், பட்டினியுமாய்க் கிராமத்திலிருந்து சிரமப்படக்கூடாது என்பதற்காக அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் பெரும்பான்மையான பங்கு வகித்தவர். ஆனால் தன்னுடைய எத்தனையோ பெருந்தன்மையான செயல்கள் கடந்தும், தன் மகளுக்கு ஒரு தீங்கு நிகழ்கையில் தகப்பனாக அவர் என்ன செய்யவேண்டுமோ அதையே செய்தார்.

சுந்தர் விஷம் குடித்து இறந்தது தன்னுடைய மகளுக்குக் கெட்ட பெயர் வர வாய்ப்பு அளித்து விடும் என அஞ்சினார். தன் மகளைக் கொல்ல கத்தி எடுத்து வந்த அவனை அவரால் மன்னிக்க முடியவில்லை. தன்னுடைய குடும்பத்தில் ஒருவன் என்கின்ற வகையில் சுந்தரின் மரணத்தால் மனம் வலித்ததுதான், ஆனால், தன் வீட்டின் தலைவனாகத் தகப்பனாகத் தான் சரியான முடிவு எடுத்து எடுத்து நடந்துகொண்டதாக அவருக்குத் திருப்தியே.

தான் செய்தது சரிதான் என்று கலங்கிய தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, வருந்திய தன் மனதை தேற்றிக் கொண்டு எழுந்தார் அந்த இரும்பு மனிதர். அங்குப் பிணத்தை எரியூட்டுவதற்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து, செய்ய வேண்டிய மீதி வழி முறைகளை நிறைவு செய்து விட்டு ஏனோ நேர் வழியாக வராமல் பின்புறமாகச் சுற்றி வெளியில் வந்து கொண்டிருந்தார்.

துயரத்தின் காரணமாக மிக மெதுவாக நடை பயின்று வந்தார். அப்படி வந்தபோது தான் தான் வளர்த்து விட்ட இரு நயவஞ்சக நரிகள் பேசுவதை அவர் கேட்க நேரிட்டது. முன் வாயில் வழி வந்திருந்தால் ஒருவேளை அப்பேச்சை தவற விட்டிருப்பாரோ?

அங்குக் கையில் தம்பியை சாம்பலாய் ஏந்திக் கொண்டிருந்த அரங்க நாயமும், சந்திரனும் பேசிக் கொண்டிருந்தனர்.

முறையா தகனம் செய்யக் கூட விடலியே அண்ணா, இவருக்கு நாம இத்தனை காலம் உழைச்சதுக்கு இதுதானா பலன்? கொதித்துக் கொண்டிருந்தான் சந்திரன்.

‘தம்பி கொஞ்ச நேரம் முன்னாடி என் மடியில படுத்துக்கிட்டு, இதோ இந்த மடியிலதான் வேகமாய்த் தன் தொடைகளை அறைந்தவன், நம்ம கிட்டே என்ன சொன்னான் உனக்கு ஞாபகம் இருக்கு இல்ல சந்திரா?’ தளுதளுத்துக் கேட்டான் அரங்கநாதன்.

‘ஆமான்னா அவனுக்கு வாழனும்னு சொன்னான், ஆனா செத்துப் போயிட்டான்’ சந்திரனின் கண்களிலிருந்து கண்ணீர் ஓடியது, துடைத்துக் கொண்டான்.

நீ கூடக் கொஞ்சம் பெரிய பையன், பசி பொறுத்துப்ப. ஆனா, அவன் பசியில அழுதுட்டே இருப்பான். அவனை மார்லயும், தோளில தூக்கிக்கிட்டே அலைவேன்டா நான்.

தன் மாரிலேயும் ஓங்கி அறைந்தான். எத்தனை காலம் வாழ வேண்டியவன்டா அவனை இப்படிச் சாம்பலா பார்ப்பேன்னு நான் நினைக்கலியேடா? ஏன்டா தன் மனசில இருக்கிறதை ஒரு தடவையாவது அவன் நம்ம கிட்ட சொல்லி இருக்க வேண்டாமா? நானே அந்தப் பிள்ளையைக் கடத்தி வந்து கட்டி வச்சிருக்க மாட்டேனா? ஏன் நம்ம ஆத்தா, பாட்டில்லாம் சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கலை? இவங்க சென்னைல வந்ததும் பெரிய ### ஆகிட்டானுங்களாமா? கெட்ட வார்த்தைகள் சராமறியாகப் பொழிந்தான்.

அவனுக்குத்தான் பிடிச்சிருக்குன்னு சொன்னானே, உடனே கட்டி வச்சிருந்தா என்னவாம், இப்ப இவனுங்க சின்னத்தனத்தாலே அவன் உசிரே போச்சேடா…

தலையில் அறைந்து கொண்டான்.

‘சுந்தர் ரிஷாவைக் கொல்ல வந்தானாம் அண்ணா, ஆனா அவ அகப்படலியாம்’ வெறித்தவாறு கூறியவன் தொடர்ந்தான்.

‘அவ இன்னைக்கு அவன் கையில மாட்டாம போயிட்டாளே? இன்னிக்கு நம்ம தம்பி செத்த அதே நேரம் அவளும் செத்துப் போயிருந்தா மனசுக்கு கொஞ்சமாவது திருப்தியா இருந்திருக்கும்’ வன்மமாய்ச் சந்திரன் சொல்ல,

அதுக்கென்னடா அவ இன்னிக்கு சாகலைன்னாலும், என்னிக்கும் அவளுக்கு நம்ம கையாலதான் சாவு.

நம்ம தம்பி ஆசைப்படுறதை செய்யறது தானே அண்ணன்களுக்கு அழகு என்ன சொல்லுற?, ஒரு நிமிஷத்துல நம்ம தம்பியை சாம்பலாக்கி தந்தானே அவ அப்பன். அது போல அந்த அவ அப்பன் கையில் அவளைக் கொன்னு சாம்பலாக்கிக் கொடுத்தா தான் என் ஆத்திரம் தீரும்… உறுமினான் அரங்கநாதன்.

அந்தப் பொட்டக் கழுதையை என் தம்பிக்கே கட்டி வச்சு பொலி போட்டுற வேண்டியதுதான்.

ஆமாடா, மாமா மாமான்னு உழைச்சதுக்கு நல்ல பரிசு கொடுத்திட்டான் இந்த மாமா பைய… தன் தம்பியின் அஸ்தியை வெறித்தவாறு வெறித்தனமாய்ப் பேசினான்.

என் தம்பியோட ஆசையைத் தீர்த்து வைக்கிறதுதான் முதல் வேலை, எங்கே அந்தக் கத்தியை எடுத்து வச்சியா சந்திரா?

இல்லைன்னா அது அங்கேயே தான் இருந்துச்சு, நாம போயி எடுத்துக்கலாம்.

அதே கத்தியால அவளை அப்படியே குத்திக் குத்திக் கொன்னு, கண்டந்துண்டமா ஆக்கலை என் வெறி அடங்காதுடா……

இன்னும் பல அவர்கள் பேசிக் கொண்டிருக்க அதைக் கேட்டுக் கொண்டிருந்த சண்முகம் கிடுகிடுவென நடுங்கினார். தான் தன் செயலுக்கு உரிய விளக்கம் கொடுத்தால் அவர்கள் புரிந்துக் கொள்வார்கள் என அவர் எண்ணி இருந்தார். ஆனால், அவர்களுக்கு அந்தக் கத்தி முதலாக விபரம் தெரிந்து இருக்கிறது என்பதே அவருக்கு அப்போதுதான் புரிந்தது.

சகோதர பாசம் இப்படியா கண்களை மறைக்கும்? தன்னுடைய செயல் அவர்களுடைய இத்தனை நாள் பணிவையும், பயத்தையும் விரட்டி கோபத்தையும், வன்மத்தையும் வெளிக்கொணர்ந்து இருக்கிறது என்று அப்போது தான் முழுமையாய் உணர்ந்தார்.

இவர்கள் வன்மத்தையும், வேகத்தையும் பார்த்த பொழுது எப்படியாவது தன் மகளை அவர்களிடமிருந்து பாதுகாத்து விட வேண்டும் என்பதே அவருடைய எண்ணமாக இருந்தது. உடனே அவர்கள் கண்ணில் படாதவாறு அவசரமாய்ப் பின்பக்கமாக வெளியேறினார்.

வீட்டுக்கு வந்து மகளை, மனைவியோடு கையில் ஏராளமான பணத்தோடு தனக்குத் தெரிந்த குறிப்பிட்ட இடத்திற்குப் போக வழியனுப்பினார். நடு இரவில் தூங்கிக் கொண்டிருந்த ரிஷாவை எழுப்பி அவளுடைய துணிகளை எல்லாம் பெட்டியில் பூட்டி, தனக்கும் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு பின்வாசல் வழியாக வெளியேறி இருந்தனர். ரிஷா அன்று ட்யூசன் இல்லையென்று சீக்கிரமே சாப்பிட்டு உறங்கி விட்டிருந்ததால் அவளுக்கு நிகழ்ந்தவை எதுவுமே தெரியாமல் போயிற்று.

தன் அக்கா மகன் இறந்த இந்தத் தருணத்தில் சண்முகம் அங்கே இருக்க வேண்டிய சூழல் இருந்ததால், தன் மகளை மனைவியோடு அனுப்பி வைத்தார். தன் அக்கா மகன்களின் கோபமும், வன்மமும் அவர் அறியாதது போல, அவர் நடந்து கொள்ள வேண்டியதிருந்தது. அப்படி நடந்து கொள்ளும் வரைதான் அவரது மகளுக்குப் பாதுகாப்பு என அவர் உணர்ந்து இருந்தார்.

வெறிக் கொண்டு அலைபவர்களிடம் போய் உண்மையோ, சித்தாந்தமோ பேசுவது சரிவராது எனப் புரிந்து கொண்டிருந்தார். அவர்களோடு சேர்ந்து அவரும் சுந்தரின் மரணத்திற்குத் துக்கம் கொண்டாடினார். செல்வியை, ரிஷாவை தேடியவர்களிடம் செல்வியின் ஊரில் ஒரு துக்கம் நிகழ்ந்துள்ளதால் செல்வி ஊருக்குச் செல்ல, ரிஷாவும் அம்மாவோடு அங்கே சென்று விட்டதாகக் கூறிவிட்டார்.

அரங்கநாதனும், சந்திரனும் மட்டுமன்றி அவர்கள் மனைவியரும் தங்கள் சுந்தரின் மரணத்திற்கு ரிஷாவை பழி தீர்க்க வெறியோடு காத்திருந்தனர்.

தன்னுடைய தொழில் முதலாக எல்லாவற்றையுமே சென்னையில் வைத்துக் கொண்டு உடனடியாக அந்த நகரை விட்டுச் செல்ல முடியாத சூழலில் சண்முகம் இருந்தார். முன்பு எப்போதும் தனியாக எதையும் சமாளித்து இராத செல்வி தன்னுடைய மகளுக்காகத் தெரியாத இடங்களில் பயணித்தார். மகளைக் காக்கும் தாய்ப்பறவையாகத் துணிந்து முன்னெடுத்தார்.

அப்போது அவர்களிடம் வேறு எந்த வாய்ப்புமே மிச்சமில்லை. தன்னுடைய மகளை உயிரோடு காத்துக் கொள்ள வேண்டுமானால், அவளை அந்தக் கொடியவர்கள் கண்முன் இருந்து பாதுகாப்பது தவிர வேறு எந்த வழியுமே அவள் பெற்றோருக்கு தென்படவில்லை.

மொழி தெரியாத பல பல மாநிலங்கள் கடந்து, இறுதியாகச் சண்முகத்தின் நண்பர் ஒருவரின் துணையால் டார்ஜிலிங்கில் ஸ்கூலில் ரிஷாவிற்கு அட்மிஷன் பெற்றார்கள்.

செல்வி ரிஷாவிற்கான சில ஏற்பாடுகள் செய்து முடித்ததும், சண்முகம் அவர்களைத் தேடி வந்தார். செல்வியோ விருப்பமே இல்லாதவராகத் தன் கைக்குள் பொத்தி வைத்து வளர்த்த மகளைத் தகப்பன் பொறுப்பில் விட்டுவிட்டு ஊர் திரும்பினார். அதன் பின்னர்ச் சண்முகம் அங்கிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உறுதிப்படுத்தி விட்டு, தேவையானவை செய்து விட்டு ஷாரதாவின் பொறுப்பில் மகளை விட்டுவிட்டு அவரும் சென்னை திரும்பினார்.

எல்லோரிடமும் மகளை வெளி நாட்டில் படிக்க வைப்பதாகச் சொல்லி பரப்பினர்.

ரிஷா இப்போது……

தன் முன் கதையை இப்போது புரிந்துக் கொண்டிருந்தவளின் உடல் இப்போது பயத்தில் சில்லிட்டு இருந்தது. அதற்குத் தன்னைக் கடத்தியவர்களின் கோர முகம் வெளிப்பட்டதே காரணம். இத்தனை காலம் அவள் அறியத் துடித்தது இதுவா? தன்னிடம் அன்பும் பாசமும் கொட்டியவர்கள்தான் தன்னைக் கொல்ல தேடி இருக்கிறார்கள் என அறிந்தபோது எப்படி உணர்ந்தாள் என்றே சொல்ல முடியவில்லை.

அதுவும் அந்தச் சுந்தர், ஆண்களென்றாலே தனக்கு வெறுப்பு வருமளவும் தன்னை அசிங்கமாய் நடத்திய சுந்தர் அவன் இறந்து விட்டானா? அவன் இறப்பை ஏதோ தியாகம் போல உருவகித்துக் கோண்டு இருக்கும் அவன் அண்ணன்களைக் கண்டு அவள் மனம் அருவருத்தது.

உங்களுக்கெல்லாம் பெண்கள் என்றால் அவ்வளவு இளக்காரமாய்ப் போயிற்று இல்லையா? ஒன்று பதின் வயது பெண்கள் இவர்கள் சொன்னதும் காதலுக்குத் தலையசைக்க வேண்டும், இல்லையென்றால் வெட்ட வரும் போது இதோ வெட்டிக் கொள் என்று கழுத்தைக் கொடுக்க வேண்டுமா ச்சீய் ஈனப் பிறவிகள்… மனதிற்குள்ளாகச் சீறினாள்.

தான் புதுப் பட்டுப்புடவை சரசரக்க அங்கு வந்த போது அவள் கண்டவை என்ன? ஒரு கலசத்தில் அஸ்தியும், பக்கத்தில் பெரிதாய் துருப்பிடித்ததொரு கத்தியும், பெரிதாய் ப்ரேமிட்ட சுந்தரின் புகைப்படமும், அதற்கு இட்டிருந்த மாலையும்தான். தான் மிக வெறுத்த ஒருவனாகினும், அவன் இறந்திருப்பான் என்று அவள் எண்ணி இருந்திருக்கவில்லை, அப்படியே இருந்தாலும் இறந்துப் போன ஒருவனோடு நமக்குத் திருமணமா? அந்த அதிர்ச்சியில் தான் அவள் அப்போது மயங்கிச் சரிந்தது.

இப்போதோ தன்னைத் துரத்திய உண்மைகள் தெரிந்த பின்னர் ரிஷா முன்பைவிடச் சற்று தெளிவாகி இருந்தாள், உடல் சோர்வு தந்த களைப்பு ஒருபுறம் இருந்தாலும் கூட, மயக்கம் சிறிது சிறிதாகத் தெளிந்து கொண்டிருந்தது.

தன் மகளைக் காத்துக் கொள்ளவும் வேண்டும், அதே நேரம், அவளை அழிக்கத் துடிக்கும் தன் அக்கா மகன்கள் நடவடிக்கை என்ன என்று அறிந்துக் கொள்ளவும் வேண்டும் என்பதால் நட்பு பாராட்டி, அவர்களைத் தன் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அம்மாவும், அப்பாவும் அதே இடத்தில் இத்தனை வருடங்களாக இருந்திருக்கிறார்கள் எனப் புரிந்தது.

அம்மாவும், அப்பாவும் தனக்குச் சொல்லாமல் விட்டிருந்த விஷயங்கள் புரிந்தன. அவருக்குத் தன் அக்கா குடும்பம் எவ்வளவு மனதிற்கு நெருக்கமானது என்று அவள் அறிந்தே இருந்திருக்கிறாள். அவர்களை முன்னேற்ற இவர் என்னவெல்லாம் அவர் செய்தார் என்பதையும் அவள் அறிவாள்.

அதற்கு ஈடாக அவர்கள் தந்தது என்ன? ச்சீ இவர்கள் ஈனப்பிறவிகள். மறுபடியும், மறுபடியும் அவர்களை எண்ணி அருவெறுத்தாள். ஐந்தறிவு மிருகமாயினும் நாய் கூட இவர்களை விடப் பன்மடங்கு உயர்ந்தது, நாய் மட்டுமா சிறு புழுவினும் கேவலமானவர்கள் இவர்கள்.

அவள் அத்தனை நேரம் எதற்காக இந்த ஓட்டம்? என்று தெரியாமல் ஓடினாலும் கூட அம்மா, அப்பாவை எப்படியாவது பார்த்து விட வேண்டும் எனும் எண்ணம் மட்டுமே ஒவ்வொரு நேரமும் அவளை உந்தி தள்ளிக் கொண்டு இருந்தது. அது இப்போது இன்னும் வலுப் பெற்றது.

ஒரு தவறும் புரியாத தனக்கு இவர்கள் தண்டனை கொடுப்பதா? முடியவே முடியாது. அதை ஏற்றுக் கொள்ளவே முடியாது? ஒன்று இறக்கும் வரை போராட வேண்டும் இல்லையென்றால் தானாகத் தன் முடிவை தேர்ந்து கொள்ள வேண்டும். ஆனால், இவர்கள் கையால் மட்டும் மரணிக்கக் கூடாது. அது என் பிறப்பிற்கு அழகல்ல என மனதிற்குள் தீர்மானம் எடுத்தாள்.

தன்னைக் குறித்துத் தெரிந்து கொள்ள அவர்கள் என்னவெல்லாம் தகிடுதித்தம் செய்தார்களோ? அம்மா, அப்பா இப்போது என்ன நிலையில் இருக்கிறார்களோ? அவள் மனம் அவர்கள் நலமறிய தத்தளித்தது.

எவ்வளவு நாள் நமக்குத் தண்ணிக் காட்டுனான் இவ அப்பன், ஆனாலும் எப்படி நாம இவளை கண்டு பிடிச்சோம் பார்த்தியா? மீசையை முறுக்கினான் அரங்கநாதன்.

இவளை கூறு போட்டு அதை இவ அப்பனுக்குக் காட்டுனாதான் என் மனசு அடங்கும் ##@@@ சில கெட்டவார்த்தைகளைச் சொல்லி காரி உமிழ்ந்தான் சந்திரன்.

ஏய் எழும்பு….எழும்புடி… காலால் ரிஷாவை எட்டி உதைத்தவன், ஆங்காரமாய் அவளைப் பிடித்து எழுப்பி அமர வைத்தான். புரோகிதரை ம்ம்…எனச் சொல்ல அவர் அவசரமாய் மந்திரங்கள் சொல்ல ஆரம்பித்தார். வெளியே எதிர்பாராமல் ஏதோ சலசலப்புக் கேட்க ஆரம்பித்தது.

அதில் ரிஷாவின் எதிரில் இருந்த இருவரும் கவனம் திரும்பியதைப் பார்த்தவள் எழுந்து ஓட ஆரம்பித்தாள். சேலை ஒருபக்கம் அவள் ஓட்டத்தை நிறுத்த முயல, பளாரென அறைந்து அவளை வீழ்த்தினான் அரங்கநாதன்.

எங்கிருந்தோ வந்த துப்பாக்கியின் குண்டுகள் வீட்டினுள் பாய, சுவரில் இருந்த கண்ணாடி ஜன்னல்கள் சிலிங்கெனத் தெரித்து விழுந்தன.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here