16. துரத்தும் நிழல்கள்

0
595
துரத்தும் நிழல்கள்

அத்தியாயம் 16

அரங்கநாதனும், சந்திரனும் உள்ளே செல்வதா? வெளியே செல்வதா எனத் திகைத்து விழித்தனர். குண்டுச் சத்தத்தில் எழுந்து ஓடிய புரோகிதரின் கால் பட்டு சுந்தரின் போட்டோவும், அஸ்தியும் திசைக்கொன்றாகக் கிடந்தன. உள்ளே இருந்த வேலைக்கார பெண்ணும் வெடவெட என்று நடுங்கியவளாக உள்ளறைக்குள் சென்று மறைந்தாள்.

கீழே விழுந்திருந்த ரிஷா ,தட்டுத் தடுமாறி எழுந்து அமர்ந்தாள். குண்டு சப்தம், அரங்கநாதன் மற்றும் சந்திரனின் தடுமாற்றம் எல்லாம் பார்த்தால் அவர்களுக்கு எதிராக, அதாவது தனக்கு உதவுவதற்காக யாரோ வந்திருக்கிறார்கள் போலும், எழும்பி நிற்க முயன்றாள். தலைச்சுற்றியது சுவரைப் பற்றிக் கொண்டாள்.

அவளைப் பிடிச்சு இருத்துடா… தம்பியிடம் சொல்லி விட்டு அரங்கநாதன் வெளிவாசலுக்கு என்ன சப்தம் எனப் பார்க்க ஓட,

ம்ம்… என உறுமியவனாகச் சந்திரன் எதிரில் நின்றான்,

அது யார் வந்தாலும் சரி, உன்னை இன்னிக்கு பொலி போடறது என்னவோ உண்மைதான். உக்காருடி…. என் தம்பியைக் கட்டிட்டுப் பரலோகம் போ…. மிருகமாய் இரைந்தான்.

உன்னைக் கொல்லுறதுக்கு எவ்வளவு நேரமாகும்னு நினைச்ச? குட்டி குருவி மாதிரி இருந்துட்டு எங்க கிட்டயே பாச்சா காண்பிக்கிறியா?

பாந்திரா ஸ்டேஷன்லயே உன்னைத் தூக்கிருக்க வேண்டியது, கால்ல சுட்டு முடமாவாவது தூக்கிட்டு வாங்கடா, கொன்னுராதீங்க. செய்ய வேண்டிய சாங்கியம் மீதி இருக்குன்னு சொல்லி அனுப்பிச்சிருந்தோம் இல்லைன்னா அன்னிக்கே நீ காலி…. நீ பெரிய ####…@@@ கெட்ட வார்த்தைகள் தொடர்ந்தன…

சந்திரன் ரிஷாவை அந்த ஹோம குண்டத்தின் முன் அவளைக் கட்டாயமாக அமர்த்தினான். அவனது பலத்திற்கு முன்பாகத் தான் ஒன்றுமே செய்ய மாட்டாதவளாக அமர்ந்தவள் உக்கிரமாக

‘நன்றிக் கெட்ட நாய்ங்களா, நான் ஏண்டா சாகணும், நீங்க சாவுங்கடா’

என்றவளாக உக்கிரமாக அந்த ஹோமக் குண்டத்தைச் சந்திரனின் மேல் தள்ளி விட்டாள். எதிர்பாராத நேரம் நிகழ்ந்த அந்தத் தாக்குதலில் தீக்கங்குகள் உடலெங்கும் பரவ, குனிந்திருந்ததால் முகத்திலும் பட்டிருக்க வலியில் துடித்தான் சந்திரன்.

அம்மா…. தீனமாய் அவன் அலற, அரங்க நாயகத்தைப் பின்னால் இருந்து கைகளை முறுக்கியவராக இழுத்துக் கொண்டு உள்ளே வந்தான் அந்தச் சீருடை அணிந்தவன். ஜீஹீ பீச்சில் பார்த்த அந்த வாட்ட சாட்டமான ஐவருள் ஒருவன்.

இவன் எங்கே இப்போது? என ரிஷா எண்ணும் போதே அவள் கண் முன்னே சந்திரனை வந்து பாய்ந்து இன்னொருவன் பற்றிக் கொண்டான். மற்றொருவன் வந்து உள்ளே சென்று வேலைக்கார பெண்ணையும், புரோகிதரையும் இழுத்து வந்தான்.

வெளியே வா மகளே…

கனிவான அந்தக் குரலின் ஈர்ப்பில் மெதுவாக அங்கிருந்து வெளியெ நோக்கி நடந்தாள் அவள்.

ஏய் உன்னையைக் கொல்லாம விட மாட்டேண்டி, அரங்கநாதன் கையில் கிடைத்தும் தவற விட்ட இரையைப் பார்த்துக் கர்ஜிப்பது போல ரிஷாவைப் பார்த்து இரைய, அவன் முகத்திலேயே தடியன் ஒரு குத்து விட மயங்கிச் சரிந்தான். சந்திரனோ தீக்கங்குகள் கொடுத்த வலியில் தொடர்ந்து அலறிக் கொண்டு இருந்தான்.

வெளியே வந்தாள் ரிஷா, அங்குக் காவலுக்கு இருந்த சில தடியன்கள் பின்னால் கைகள் கட்டப் பட்டு, குப்பைப் போலத் துவைத்துப் போட பட்டிருந்தனர். அவர்கள் முனகல் தீனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தது.

‘பயப்படாதே, இங்கே வாம்மா’ என்று கை விரித்து வாத்சல்யத்துடன் அழைத்துக் கொண்டு இருந்தவர் ருத்ரபாண்டி. இவரையா தவறாக எண்ணினோம்? மனம் உடல் அயர்ந்து இருக்க, சோர்வாகவே நடந்து சென்று அவரிடம் போய் நின்றாள்.

வா மகளே, உனக்கொன்னும் இல்லையே? கேட்டவருக்குத் தலையை அசைத்து இல்லையெனப் பதில் கூற, அவள் தலையை வருடினார்.

நீ அன்னிக்கே அந்தேரியில் என் கூட வந்திருந்தால் இத்தனை பிரச்சனை இருந்திருக்காது இல்லையா? எனக் கேட்க, பதில் சொல்லாமல் அவர் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

வெளியில் போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து அவசரமாய் இறங்கியவர்கள் ரிஷியும், இந்தரும்.

அவர்களைக் கண்டதும் அவள் மனதிற்குள் மகிழ்ச்சி…

இந்தர் … நான் இன்னும் உயிரோட இருக்கேன்டா …

ரிஷா உற்சாகத்தில் கூவினாள். தான் முதல் நாள் பார்த்ததை விடவும் சோர்ந்துப் போய் இருந்தவளைப் பார்த்துக் கொண்டிருந்த இந்தர் அவனைக் கண்டதும் அவள் எழுப்பிய உற்சாகக் குரலுக்குப் புன்னகைத்தான்.

போலீஸ் உள்ளே சென்று ஒவ்வொருவராக இழுத்துக் கொண்டு வந்து வண்டியில் ஏற்றினர். ரிஷி போலீஸிடம் ஏதோ சொல்ல, அரங்கநாதனிடமும், சந்திரனிடமும் தேடி வித்தியாசமான போனை மீட்டெடுத்தனர். அது சாடிலைட் போன்.

ரிஷாவிடம் வந்த ரிஷி…. ருத்ரபாண்டியிடம்…

நீங்க அனுமதி தரணும் என ஆங்கிலத்தில் இயம்பியவனாக, அவள் பின்னாகச் சென்று அவன் ஒட்டி வைத்திருந்த (அப்படியே ரீவைண்ட் போனீங்கன்னா ரிஷி ஆபீஸ்லருந்து புறப்படுறப்போ காதல் வசனம் பேசி ரிஷி ரிஷா மேல பாய்ந்த சீன் உங்களுக்கு நியாபகம் வருதா? இது அப்ப ஒட்டினது) அந்தத் தாள் போன்ற மெல்லிய கருவியை எடுத்தான்.

ஒன்றும் புரியாதவளாக ரிஷா பார்த்துக் கொண்டிருக்க, வா முதல்ல நாம எல்லோரும் இங்கே இருந்து முதலில் போகலாம், அப்புறம் விபரம் சொல்லுறேன். உன் அம்மா, அப்பாவை மீட்க வேணாமா?

அவசரமாகத் தலையை ஆட்டி ஆமென்றாள் ரிஷா. ஒவ்வொரு வண்டியாகப் புறப்பட்டுச் சென்றது

அந்த அத்துவான காட்டிலே, ஆளண்டா வீட்டிலே, அறையினுள்ளே அநாதரவாகக் கிடந்தது சுந்தரின் அஸ்தியும், மாலையிட்ட புகைப்படமும்.

சில நாட்கள் கழித்துச் சென்னையில் ….

அந்த பங்களாவில் மணக்க, மணக்க சாப்பாடு தயாராகிக் கொண்டு இருந்தது.

அம்மாவின் வால் பிடித்துக் கொண்டு திரிந்தாள் ரிஷா… அம்மா இன்னிக்கு என் பிரெண்ட் இந்தர் வரான், ரிஷி வராங்க… இறுக்க அணைத்து செல்விக்கு முத்தமிட்டாள் ரிஷா.

அப்பாக்கு கண்ணம்மா…

இதோ… என்றவளாக ஓடிச் சென்று அப்பாவின் அருகில் அமர்ந்து அவர் கன்னங்களில் முத்தமிட்டாள். ரிஷாவுக்கு அடுத்தே அமர்ந்தார் செல்வி.
தொலைக்கவிருந்த பொக்கிஷத்தைக் கண்டது போல மூவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்ள, மனதிலிருந்து எழுந்த நிம்மதியின் வெளிப்பாடாக அங்கு மூவர் கண்களில் இருந்தும் கண்ணீர் சுரந்தது.

அடடே இங்கே நம்மை வரவேற்க யாரும் இல்லைப்பா, நாம திரும்பப் போயிடலாம்…… குரல் கேட்க …

உள்ளே வாங்க மாமா… அழைத்தவளாய் முன்னே சென்றவள் அப்படியே நின்றாள். ஏனென்றால், அவள் கேட்ட குரலோ ருத்ரபாண்டி அங்கிள் உடையது. ஆனால், அங்கே அவர் மட்டுமல்லாது அவரோடு கூடக் கனகவேல் அங்கிளும் வந்திருந்தார். இருவரும் சிரித்துக் கொண்டு நின்றிருந்தனர்.

வாங்க, வாங்க இருவரையும் உள்ளே அழைத்தாள்.

அதே நேரம் வெளியில் ஏதோ சப்தம் கேட்க அவர்களைத் தாண்டி முன்னே வந்தவள் வாயிலுக்கு ஓடினாள்.

‘வாடா இந்தர், வாங்க ரிஷி சர்’

தோழியின் அழைப்பில் மகிழ்ந்தவன் அவளோடு பல கதைகள் பேசி முன் செல்ல ரிஷி அமைதியாய் பின் தொடர்ந்தான்.

உள்ளே அவர்கள் சோபாக்களில் அமர, பணியாள் ஒருவன் வந்து அனைவருக்கும் குளிர்பானம் வழங்கிச் சென்றான். ரிஷா அமர செல்வியும் அருகில் அமர்ந்தார்.

‘எல்லா பிரச்சனைகளும் நல்லபடியா தீர்ந்தது நம்ம ரிஷி தம்பியாலத்தான்’ ருத்ரபாண்டி சொல்ல,

கைக்கூப்பி வணங்கியவன், நான் என் கடமையைத்தான் செஞ்சேன் சார், இதுக்கெல்லாம் பாராட்டாதீங்க என்றான் பணிவாக.

செல்வியும், சண்முகமும் ஏதோ கண்களால் பேசிக் கொண்டதை ரிஷா கவனித்தாள்.

அப்புறம் எப்படி விஷயம் தெரிஞ்சது தம்பி? எனக் கேட்க ரிஷி சொல்ல ஆரம்பித்தான்.

நான் ரிஷாவை அவங்க கடத்திட்டுப் போகாமலிருக்க எல்லா முயற்சியும் செஞ்சு பார்த்தேன். ஆனால், முடியலை, அதனாலத்தான் அவ எங்கே போனாலும் அந்த இடத்தைக் கண்டுபிடிக்கிற அந்த டிவைஸை அவ முதுகில ஒட்டிட்டேன்.

அனைவரும் ஆவென வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தனர். என்னதான் டிவைஸ் மூலமா இடம் எங்கே இருக்குன்னு தெரிஞ்சாலும் கூட, போலீஸ் மூலமா போனா தான் நல்லதுன்னு நினைச்சதால அவங்க உதவி கேட்டு விபரம் சொல்லி, மேலிடத்திலிருந்து அனுமதி கிடைச்சு வர்றதுக்கு முன்னாடி முணு நாளாகிடுச்சு.

என்னமோ ஏதோன்னு பதறிட்டு வந்தா நீங்க எங்களுக்கு முன்னாடி நிக்கிறீங்க, ரிஷா பத்திரமா உங்க பக்கத்தில நிக்கிறாங்க… அவங்களை முழுசா பார்த்ததும் தான் மனசே சரியாச்சு.

மறுபடியும் செல்வி, சண்முகம் இருவரின் கண்களும் சந்தித்து மீண்டன.

ம்ம்… நீங்க எப்படிச் சார் அவ்வளவு சீக்கிரமா அங்கே வந்து சேர்ந்தீங்க? இப்போது பதில் சொல்வது ருத்ரபாண்டியின் முறையானது.

தொண்டையைச் செருமிக் கொண்டவர்… சண்முகத்துக்கும் அவனோட அக்கா பையனுங்களுக்கும் இடையே இருக்கிற இந்தப் பிரச்சனை தெரிஞ்ச மூணாவது ஆளு நான். அதாவது செல்வி, சண்முகம் தவிர்த்து இந்த விஷயம் வெளியாளான எனக்கு மட்டும் தான் தெரியும்.

அந்த இக்கட்டான சுந்தர் இறந்த நாளுக்கடுத்து நடந்த பெரும்பாலான விஷயத்துல ரிஷாப்பிள்ள டார்ஜிலிங்க்ல ஸ்கூல் சேருறதுக்கும், ஷாரதா என்கிற கார்ட் ஏற்பாடு செய்யறதுக்கும் நான் தான் ஏற்பாடு பண்ணினேன்.

கனகவேலுக்கும், எனக்கும் இருந்த பிணக்கு எல்லாம் தீர்ந்ததும் நாங்க மூணு பேருமே மறுபடி சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்திருந்தோம். ஆனால், கூடவே வேலை செய்து கொண்டிருந்த அரங்கநாதனையும், சந்திரனையும் கண்காணிச்சுக்கிட்டே இருந்தோம்.

நாளாவட்டத்தில் எங்களுக்கு வரவேண்டிய சில ஆர்டர்களை அரங்கநாதனே போய்ப் பேசி, வாங்கி, தனியா கார்மெண்ட் நடத்தினாங்க. அதனால எங்களுக்கு நஷ்டம் தான். ஆனாலும், அப்படியாவது அவங்க கோபமும், வெறியும் தீரட்டும்னு சண்முகம் சொன்னதனால நாங்களும் பெரிது படுத்தாம விட்டுட்டோம். அவங்களும் நல்ல நிலைமைக்கு வந்தாங்க, அவங்க நினைச்சிருந்தா அந்தப் பணம் கொண்டு வாழ்க்கையில் முன்னேறி இருக்கலாம், பழி உணர்ச்சியால அவங்க அடைந்தது ஒன்னுமில்லை. ரிஷாவை தேடி அழிக்கணும் என்கிறதுக்காகவே அவர்கள் செலவழித்த தொகை கோடியைத் தாண்டும்…

ஓ… ஆச்சரியத்தில் விரிந்தன சில கண்கள்.

சரி அதை விடுங்க, அன்னிக்கு என்ன நடந்தது அதை மட்டும் முதலில் சொல்லிடறேன். சில நாட்கள் முன்பு திடீரெனச் சண்முகம் கார்மெண்டுக்கு வரவில்லை, போன் தகவலும் இல்லை. ஓரிரண்டு நாட்கள் ஆகவும் நான் வீட்டில் நலம் விசாரிக்க வந்தேன். வீடும் பூட்டி இருந்தது, ஏதோ தவறாக மனதிற்குத் தோன்றிச்சு. சற்று தள்ளி இருந்த அரங்கநாதனின் வீட்டுக்குச் சென்று அவன் மனைவியிடம் விசாரித்தேன். அந்தப் பெண் அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்று முகத்தை வெட்டியவாறு பதில் சொன்னாள்.

அவள் முகத்தில் இருந்த மிரட்சி, பயம் அவர்களைக் காட்டிக் கொடுத்தது என்றாலும் என்னவென்று கணிக்க முடியவில்லை. முதலில் ஏதோ தவறாக நடந்திருக்கும் என்று நினைத்தேன் தான் ஆனாலும், சண்முகம் முன்பொரு முறை என்னிடம், ’மும்பையில் ரிஷாவிற்காகப் பார்த்திருக்கும் மாப்பிள்ளையை ஒருமுறை சந்தித்து வரவேண்டும்’ எனச் சொன்னதை நினைவில் கொண்டேன்.

எனக்குச் சண்முகம் எங்கே சென்றிருப்பான் என்று உடனே அறிந்து கொள்ளத் தோன்றியது. உடனே மும்பை புறப்பட்டேன். அந்தப் பிரபாகர் விலாசம் சென்று பார்த்தால் அதிர்ச்சியாக இருந்தது. அப்படி யாரும் இல்லை எனச் சொல்லி விட்டனர், திரும்ப வந்து ஊருக்கு வண்டி ஏற வரும் போதுதான் ரிஷா பாப்பாவை பார்த்தேன்.

அவளோ என்னைப் பார்த்து ஓடி ஒரு பஸ்ஸில் ஏறி விட்டாள்.

ருத்ரபாண்டி சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த ரிஷாவிற்குத் தன்னுடைய அந்த நாள் பதட்டம் ஞாபகம் வந்தது, அம்மாவின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு தொடர்ந்து கேட்டாள்.

வேறு வழியில்லாமல் எனக்குத் தெரிந்த செக்யூரிட்டி கார்டுகளிடம் உடனே தகவல் தெரிவித்து அந்தப் பஸ் எந்த ஸ்டாப்பிங்க் எல்லாம் நிற்குமோ அங்கே எல்லாம் சென்று தேடச் சொல்லி ரிஷா சின்னப் பிள்ளையாக இருந்த போது என்னிடமிருந்த போட்டோவை அவர்களிடம் பகிர்ந்து இருந்தேன்.

ஓ…இதுதான் அந்த ஐந்து தடியர்கள் தன்னைச் சுற்றி நின்றதன் காரணமோ?
ரிஷாவின் கண்கள் விரிந்தன. ரிஷாவை ஜீஹீ பீச்சில் கண்டு பிடித்து இருந்தாலும் கூட அது அவள்தானா என்று நான் அடையாளம் காட்ட வரும் வரை அவளைச் சுற்றி இவர்கள் நிற்க, போலீஸ் வந்து ஏன்னு கேட்டிருக்காங்க. விபரம் சொல்ல முடியாம செக்யூரிட்டிகள் போலீஸ் கிட்டே பேசிட்டு இருக்க, ரிஷா இந்தர் கூடப் போய்ச் சாப்பிட்டு, டாக்ஸி பிடிச்சு அங்கிருந்து புறப்பட்டுட்டா…

ஓ அந்தத் துப்பாக்கிச் சூடு…. என முனகியவன் ஞாபகம் வந்ததும் இந்தர் கதி கலங்கினான்.

அந்தக் கன் ஷீட் அங்கிள்…

அது உங்க டாக்ஸியை நிறுத்தறதுக்காகத்தான், உங்களைச் சுடறதுக்காக இல்லை என்றார்.

நெஞ்சில் கை வைத்து பின்னே சாய்ந்தான் இந்தர், அவனது பாவனைப் பார்த்து மற்றவர்கள் சிரித்தனர்.

நீங்க அங்கிருந்து புரப்படவும் தான் நான் அங்கே வந்திருந்தேன், பிரதாப் அட்ரஸ் போய்ப் பார்க்க போவீங்கன்னு மனசுக்கு தோணுச்சு, அதனால செக்யூரிட்டிகளிடம் அந்த அட்ரஸ் கொடுத்து விட்டேன், ஆனால் அங்கே இருந்தும் கூட நீங்க புறப்பட்டுட்டீங்க…

‘மறுபடியும் உங்களுக்குப் பயந்து தான் அங்கிள் அங்கிருந்து புறப்பட்டோம்’ சொல்லிவிட்டு முகத்தை அம்மாவின் தோளில் புதைத்துக் கொண்டாள் ரிஷா.

அதுக்கப்புறம் எங்கே போனீங்கன்னு கண்டு பிடிக்க முடியலை…

அப்புறம் எப்படி? வியப்பாய் நோக்கிய ரிஷியை

சண்முகம் என் கிட்டே சில நாட்களா, ‘அரங்கநாதனும், சந்திரனும் இப்போ எல்லாம் முன்னே மாதிரி இல்லைடா முன்னை விட மாறிட்டாங்க, என் கிட்டே முன் போல அன்பா பேசறாங்க அப்படிச் சொல்லிட்டு இருந்தான். இதையெல்லாம் நம்பிடாதேன்னு அவன் கிட்டே நானும் சொல்லி இருந்தேன். அவங்களோட திடீர் மாற்றம் எனக்குக் கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது.

அதனால, உங்களைப் பின் தொடர எனக்கு வாய்ப்பில்லாத போதும், அவங்க போன்களை ட்ரேஸ் செய்ய ஆரம்பித்தேன். அது மூலமாதான் எனக்கு எல்லாத் தகவலும் கிடைச்சது.

ரிஷாவை அந்தப் பாழடைஞ்ச பங்களாவில் நாங்க கண்டு பிடிக்கிற நாளுக்கு முன் தினம் சாயந்திரம் தான் அவனுங்க மஹாராஷ்டிரா வந்திருக்கானுங்க. அவன் மஹாராஷ்டிரா வந்து, அந்தக் காட்டு வீட்டுக்கு ராத்திரியே வரவும், ஏற்கெனவே அவங்களைப் பின்பற்றிட்டு இருந்த நாங்களும் மொபைல் லொகேஷன் படி பின்பற்றி வர அவ்வளவு சிரமமா இல்லை. உடனே புறப்பட்டு வந்துட்டோம்.

உங்களுக்குப் போலீஸ்லாம் அவ்வளவு பழக்கமா சார்?

ம்ம் என்னோட நெருங்கிய உறவினன் ஒருத்தன் போலீஸ் உயர் பதவியில் இருப்பதால் அது சாத்தியமாச்சு.

பெருமூச்செறிந்தார் சண்முகம்…. மகளின் கைப்பற்றிப் பல முத்தங்களிட்டார். ‘ரொம்ப நன்றிடா ருத்ரா, உன் உதவியை நான் என்னிக்கும் மறக்க மாட்டேன், நண்பனை நோக்கி கை கூப்பினார்.

ச்சே கையைக் கீழே போடு, அவ எனக்கும் மக மாதிரி தானேடா,
இதுக்கெல்லாம் நன்றி சொல்லுவியா, கையைத் தட்டி விட்டார்.

சமையல் ஆகி விட்டதாய் வந்து சமையல்காரர் சொல்ல, விடைத் தெரியாத இன்னும் பல கேள்விகளோடு அனைவரும் ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.

கூச்சமாய் உணர்ந்த இந்தரையும், ரிஷியையும் பேச்சில் இழுத்தவாறு, சகஜமாக்கி சாப்பிட வைத்துக் கொண்டிருந்தாள் ரிஷா. விளையாட்டுப் பேச்சுக்கள் கலகலத்தன.

சாப்பிட்டு இனிப்புக்களோடு வந்து மறுபடி சோபாவில் அனைவரும் வந்து அமர,

அடுத்தது சண்முகம் தான் சொல்லணும், என்னாச்சு எப்படி அவங்க கிட்டே போய் மாட்டின? கேட்டார் கனகவேல். தன் நண்பர்கள் இருவரும் தனக்குத் தெரியாமல் ஒரு விஷயம் செய்திருக்கிறார்களே என்று எண்ணினாலும், அதற்கும் ஏதாவது காரணம் இருக்கும் என உணர்ந்ததால் அவர் பெரிது படுத்தவில்லை.

அனைவரும் அவர்கள் மேல் கவனம் பதித்தனர். ஏற்கெனவே பலமுறை கேட்டு வருந்தி இருந்தாலும், கண்ணில் சேர்ந்த கண்ணீரை இமைகள் தட்டி தடுத்தவளாக மறுபடி கேட்க தயாரானாள் ரிஷா.

அன்னிக்கு அரங்கநாதன் ரொம்ப வருந்தி வருந்தி சாப்பிட அழைக்க வந்தான். உங்க கம்பெனி ஆர்டர்லாம் பறிச்சது எல்லாம் ரொம்பத் தப்புதான். நாங்க செஞ்சது துரோகம், எங்களை மன்னிச்சுடுங்கன்னு கதறினான். என்னடா இது நாம வளர்த்தப் பையன் இவ்வளவு கெஞ்சியும் எப்படிக் கல்லு போல இருக்கிறதுன்னு தோணுச்சு.

சரி சாப்பிட வர்றோம்னு சொல்லி வீட்டை எல்லாம் பூட்டிவிட்டு புறப்பட்டோம். போகும் போது உன் கிட்ட சொல்ல கூட எனக்குத் தோணலை பாரு… என ருத்ரபாண்டியனை நோக்கி சொன்னவர் தொடர்ந்தார்,

அங்கே போய்ச் சாப்பிட்டதுதான் தெரியும், அதற்கப்புறம் ஒரு இருட்டறையில தான் விழிச்சோம். எங்களைச் சேர்ல உட்கார வைச்சு, எங்களோட கை எல்லாம் கட்டிப் போட்டிருந்தான்.

‘ரொம்பச் சாமார்த்தியமா நடந்துக்கிறதா நினைச்சியோ? அவ இருக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சாச்சு, உன் மகளைக் கொன்னுட்டுத்தான் உன் கிட்ட மறுபடி பேச்சு’ ன்னு வந்து உறுமினான். அப்புறம் தான் அவனுங்க ரெண்டு பேர் கூட, அவங்க பொண்டாட்டிகளும் ஏன் மைதிலியும் கூடக் கூட்டுன்னு புரிஞ்சது’ அதுக்கப்புறம் என்ன? போலீஸ் வந்து எங்களை மீட்டாங்க…

துக்கத்தில் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டார்.

‘விடுரா, நீ செய்த நன்மைக்கு ரொம்ப நல்லா பிரதி உபகாரம் செஞ்சுட்டாங்க, நன்றி கெட்டவங்க’ அவரைத் தேற்றினார் கனகவேல்.

அப்புறம் ரிஷி சார், போலீஸ் விசாரணையில் என்ன தெரிய வந்தது?

தொண்டையைச் செருமிக் கொண்டு ரிஷி பேசினான். அவன் மீது மறுபடியும் சண்முகம் & செல்வி பார்வை படிந்து மீண்டது.

ரொம்ப நாளாகவே அவங்க ரிஷாவை கண்டுபிடிக்க முயற்சி செய்து முடியாமத்தான் இருந்திருக்காங்க சார். அப்பத்தான் சண்முகம் சார் ரிஷாக்கு மாப்பிள்ளை தேடற விஷயம் எப்படியோ தெரிய வந்திருக்கு.

ம்ம்…

அதனால இன்னொருத்தர் மூலமா இவங்க எதிர்பார்க்கிற எல்லாத் தகுதிகளும் நிறைஞ்ச பிரபாகர் என்கிற ஒரு போலியான நபரை உருவாக்கி, பார்க்க திருத்தமா இருக்கிற யாரோட போட்டோவையோ அதுக்குக் கொடுத்து இருக்கிறாங்க. இங்கே தமிழ் நாட்டு அட்ரஸா இருந்தா பேசி தெரிஞ்சுக்குவாங்கன்னு, மும்பை அட்ரஸ் கொடுத்து குழப்பி இருக்காங்க. போனிலேயே பேசி எல்லாமும் இவங்களும் நிச்சயம் செஞ்சாச்சு…

உனக்கு அறிவிருக்கா? எனும் கேள்வி தன் நண்பன் ருத்ராவின் பார்வையில் தொக்கி நிற்க, தலை குனிந்தார் சண்முகம்.

என் மக வாழ்க்கை பத்திரமா இருக்கணும்னு நினைச்சேன்டா, அதுக்கு என் மக கொஞ்சம் தூரமாக இருந்தாலும் பரவாயில்லைன்னு தோணுச்சு, அவங்க பேசினது ரொம்ப டீசெண்டா இருக்கவும் நானும் ஒத்துக்கிட்டேன்.

ரிஷி தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த அந்த நண்பர்களைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்தான். அவங்க அப்படி விபரம் பறிமாறிக்கவும் தான் ரிஷாவோட போட்டோ மற்றும் டார்ஜிலிங் காலேஜ் போன் நம்பர் எப்படியோ அவங்க கையில கிடைச்சிருக்கு.

அவங்க உடனே செயல்படலை, அங்கே ஸ்கூலில் தொடர்புகள் ஏற்படுத்தி இருக்கிறாங்க, வர்ஷானு ஒரு நேப்பாளி பொண்ணு அந்தப் பொண்ணுக்குப் பணம் கொடுத்து ரிஷாவுக்கு ஒரு மாலை கொடுத்து அணியச் சொல்லி இருந்திருக்கிறானுங்க.

ரிஷா தன்னிச்சையாகத் தன் கழுத்தை தடவிப் பார்த்தாள்.

‘வர்ஷா துரோகி இப்படியாச் செய்வ?, உன்னை நம்பி அந்த மாலையை நானும் கழுத்தில் போட்டிருந்தேனே? என மனதிற்குள் எண்ணிக் கொண்டாள். மாலையை எப்போதோ கழற்றி மும்பை போலீஸ் வசம் ஒப்படைத்திருந்தாள்.

அந்த மாலையில் இவ எங்கே போனாலும் அந்த இடத்தைக் காட்டும் குட்டியான கருவி ஒன்னு இருந்திருக்கு.

ஓ… அனைவரின் குரலும் ஒலிக்க,

அந்த கருவி உதவியாலத்தான் அவ மும்பைக்கு வர்ற டிரெயின்ல இருக்கிறதை ட்ரேஸ் செஞ்சிருக்காங்க…

ரிஷாவின் கண்முன் தனக்காகச் சண்டையிட்டு, நடுக்காட்டில் மறைந்துப் போன ஷாரதா வந்து போனார்.

அப்புறமா பாந்திரா ஸ்டேஷன்ல இவள் அந்த ப்ளாட்பாரத்தில் அரை மணி நேரத்துக்கு அதிகமா இருக்கவும் அதே டிவைஸ் வழியா இடம் கண்டு பிடிச்சு வந்து சுட்டிருக்காங்க,

ஓ மை கடவுளே… இந்தர் முணுமுணுத்தான்.

அந்த டிவைஸ் குறிப்பிட்ட லொகேஷன் வரைத்தான் காட்டும், எங்கேயாவது அரை மணி நேரத்துக்கு அதிகமா தங்கினா கண்டுபிடிக்க ஈஸி, இல்லைன்னா கஷ்டம் தான்.

ஜீஹீ கடற்கரை மற்றும் அந்தப் பிரபாகரோட அபார்ட்மெண்ட்டுக்கு ரிஷாவும் இந்தரும் போயிருந்தது அந்த மாலை மூலமா அவங்களுக்குத் தெரிஞ்சு இருந்திருக்கு. ஆனா என்ன? இவங்க அவங்க கையில அகப்படாம அதுக்கு முன்னாடியே வந்திட்டாங்க.

ம்ம் பயங்கர மாலைதான் ரிஷா… உன் கழுத்திலேயே டிவைஸ் வச்சு அவங்களுக்குத் திசை காட்டியிருக்க நீ…இந்தர் சலித்துக் கொண்டான்…

போடா எனக்குத் தெரிஞ்சு வேணும்னா நான் செஞ்சேன்? செல்லமாய்க் கடிந்துக் கொண்டாள்.

ரிஷி தொடர்ந்தான்… அவங்க ஆளுங்க ரிஷாவை அந்த ரெண்டு இடத்தில தவற விட்டிருந்தாலும், இவங்க ரெண்டு பேரும் என் ஆபீஸ்ல இருந்து போகும் முன்னே இடம் கண்டுபிடிச்சு வந்துட்டாங்க.

அந்நேரம் இரவில் அந்தப் பில்டிங்கில் மற்ற ஆபீஸ்கள் எல்லாம் வெளியே பூட்டி இருக்க, என் ஆபீஸ் மட்டும் உள்ளே பூட்டி இருந்ததும் அதையே க்ளுவா வச்சு, ரிஷா இங்கே தான் இருக்கணும்னு அங்கே காத்திட்டு இருந்திருக்காங்க.

நான் தான் அஜாக்கிரதையால ரிஷாவை அங்கே இருந்து தப்பிக்க விட்டுட்டேன். மனம் வருந்தியவனாகக் குனிந்து அமர்ந்து இருந்தான் ரிஷி. அப்புறம் என்ன? போலீஸ்கு தகவல் சொல்லி, என்னோட டிவைஸை ரிஷா உடலில் பொருத்தி இருந்ததால் ஈஸியா இடம் கண்டு பிடிச்சு வந்துட்டோம். ரிஷா சேப் (safe), thank god (நன்றி கடவுளே)

சண்முகமும், செல்வியும் மறுபடி ஒருமுறை தமக்குள் பார்த்துக் கொள்ள ரிஷா அவர்களைப் பார்த்து, தனக்குள் நமுட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டாள்.

அனைவரும் பல கதைகள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க, அடுத்து என்ன தம்பி? என்றார் சண்முகம்…

அவர் எண்ணம் புரிந்ததனால் இடைமறித்தார் செல்வி,

இவர் எப்பவும் இப்படித்தான் தம்பி, தன் அக்கா பிள்ளைங்கன்னு உயிரையே விட்டுருவார். இப்ப இவ்வளவு நடந்தும் அவங்களோட நலம் விசாரிக்கிறதை பார்த்தீங்களா?

அந்த தீபாவளி அன்னிக்கு சுந்தர் நடந்துக்கிட்ட முறையைப் பார்த்து அப்பவே ஊருக்கு அனுப்பி வைச்சிடச் சொன்னேன், இவர் கேட்கவே இல்லை. அதுக்கப்புறமும் எத்தனை முறை சொல்லி இருப்பேன் சரி ஆகிடும், சரி ஆகிடும்னு சொல்லி, கடைசில அவன் செத்து, கொலைப்பழியில தான் வந்து நின்னுச்சு.

இவரோட அக்கா பிள்ளைங்க, அக்கா பிள்ளைங்கன்னு பார்த்து தன்னோட பிள்ளையைக் கண்காணாத இடத்தில விட்டுட்டு, இரவும் பகலும் கண்ணீர் வடிச்சிட்டு இருந்தது எனக்குத்தான் தெரியும், அதுக்கப்புறமாவது அவனுங்க வெறி அடங்குச்சா? இல்லியே என் பிள்ளை உயிரையே இழக்கப் பார்த்தாச்சு… ஒவ்வொரு நாளும் அந்த இருட்டறையில வந்து, உங்க மகளைக் கண்டந்துண்டமா வெட்டி உன் முன்னால போடுறேன்னு தான் மிரட்டிட்டுப் போவான். அப்படி இருந்தும் இவர் அவங்க எல்லோர் நலத்தையும் விசாரிக்கிறதை பார்க்கிறீங்கள்ல…

நீர் போவும் ஐயா அவங்களையே கட்டிட்டு அழும். நான் போறேன் என் மகளைக் கூட்டிட்டு எங்க ஊருக்கு, உம்ம கூடக் குடும்பம் நடத்த என்னால முடியாது…

செல்வி கட்டுப்பாடின்றி வெடித்துச் சிதறிவிட்டார், சண்முகம் மனைவியின் கோபத்தில் ஆடிப் போய் விட்டார். நான் அப்படிக் கேட்கலை செல்வி, என்னென்னவோ சொல்லிப் பார்த்தார்.

அம்மா நம்ம விஷயம் எல்லாம் அப்புறம் பேசிக்கலாம், அம்மாவின் கண்ணீரை துடைத்தவாறு அவரை அமரச் செய்தாள் ரிஷா.

சற்று நேரம் அமைதியில் கழிந்தது. ரிஷி தொடர்ந்தான்…. உங்களை எங்கே மறைச்சு வச்சிருக்காங்கன்னு தெரிஞ்சுக்க மும்பை போலீஸ் அவங்க மேல தர்ட் டிகிரி வரைக்கும் யூஸ் செய்ய வேண்டியதாச்சு, அதுக்கப்புறம் இங்கே அரங்கநாதன் வீட்டு அண்டர் கிரவுண்டில் உங்களைக் கண்டு பிடிச்சோம்.

உண்மையிலேயே அந்த வீட்டில் இப்படி ஒரு அமைப்பு இருக்கும்னு யாருமே நம்ப முடியாது. அவ்வளவு கனகச்சிதமாக அறை கட்டி இருந்தாங்க. போலீஸே வியந்து போயிட்டாங்கன்னு பாருங்களேன். அரங்கநாதன், சந்திரன் மனைவிகளும் மைதிலியும் இதில் கூட்டு என்பதால் அவங்களும் கஸ்டடியில் எடுத்து இருக்காங்க. அவங்க பிள்ளைகளை ஊரில் உள்ள தாத்தா பாட்டி வசம் ஒப்படைச்சாச்சு.

இனி கேஸ் நடக்கும், எல்லா ஆதாரங்களும் இருப்பதால் அவங்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும்னு நம்பறோம்.

அப்படியெல்லாம் தண்டனை கிடைக்க விட மாட்டார் தம்பி, இவரே ஜாமீன் எடுத்திடுவார்… கணவனை முறைத்தார் செல்வி.

செல்விம்மா அண்ணன் பேச்சை கேட்பல்ல, ருத்ரபாண்டி இடையில் தலையிடவும் செல்வி அமைதியானார். இப்போது அவர் சண்முகத்திடம் திரும்பினார்.

‘நல்லவனா இருக்கிறதுக்கும் ஒரு அளவு இருக்குச் சண்முகம், நீ உன்னோட கடமைகளைச் செய்த, அவங்களை உயர்த்தி விட்ட, ஆனா அவங்க செஞ்ச பழி பாவங்களுக்கும் நீ முன்னால நின்னு உதவணும்னு நினைக்கிறது ரொம்பத் தப்பு…

நான் அப்படி நினைக்கலடா ருத்ரா…

நீ அப்படி நினைக்கலைன்னா சரிதான், நினைச்சிறக் கூடாதுன்னுதான் நான் அறிவுரை சொல்றேன்.

உன்னோட இரக்க சுபாவத்தினாலத்தான் உன் மகளை ஏழெட்டு வருஷமாய்ப் பிரிஞ்சு இருந்த, அன்னிக்கு நாங்க அங்கே போகலைன்னா திக்கு தெரியாம நின்ன உன் பொண்ணு அவனுங்க திட்டம் போட்ட மாதிரியே கண்டந்துண்டமா தான் கிடந்திருப்பா… அதை மட்டும் மனசில வச்சுக்க. என்ன புரியுதா?

சரி நாங்க போய் வர்றோம், கொஞ்சம் தூங்கி எழும்பணும்…

என்றவாறு கனகவேலையும் அழைத்துக் கொண்டு சென்றவர் வாயிலில் நின்று ரிஷாவை அழைத்தார்.

கனகவேல் காருக்குச் செல்ல, இதோ வரேன்டா எனக் கையைக் காட்டிவிட்டு ரிஷாவிடம் பேசலானார்.

நீ என்னைக் கண்டு எதுக்குப் பயந்தன்னு எனக்கு அப்புறமாதான் புரிஞ்சது ரிஷாமா. கனகவேல் மகன் இறந்தது ஏதேச்சையாத்தான், அவனை நான் கொல்லலை, ஆழம் தெரியாம அந்தக் குட்டையில் விழுந்திருக்கான். அக்கம் பக்கம் யாரும் இல்லாததால் அவனைக் காப்பாத்த முடியலை.

அப்ப என் நேரம் சரியில்லாம கம்பெனி பணத்தில நான் கை வைக்க வேண்டியதா போச்சு. நான் பணத்தைப் பார்ட்னர்கள் கிட்டே சொல்லி எடுத்திருக்கணும், அதைச் செய்யலை அதுதான் நான் செஞ்ச ஒரே தப்பு. நாம திரும்பப் போட்டிருவோமேன்னு அலட்சியத்தில் எடுத்தது என்னோட பேரை நாசமாக்கிடுச்சு. அந்தப் பிரச்சனைக்கு அப்புறமா நான் பணத்தைக் கட்டிட்டேன். கனகவேலும் என்னைப் பற்றிப் புரிஞ்சுக்கிட்டான். கேஸை வாபஸ் வாங்கிட்டான். நாங்க எல்லாம் பல கால நண்பர்கள்மா. ஒருத்தர் பிள்ளையை இன்னொருத்தர் கொல்ல மனசு வருமா? அதுவும் பாழாப்போன அந்தப் பணத்துக்காக? மாமாவை நம்பறீல்ல,

கேட்டவரிடம் ஆமாம் எனத் தலையசைத்தாள், புன்னகைத்தவாறு விடைப்பெற்றுச் சென்று விட்டார்.

தம்பி… உங்களுக்கான பீஸ் எவ்வளவுன்னு நான் சொல்லறது முறை இல்லை. என் உயிரையே காப்பாத்திக் கொண்டு வந்திருக்கீங்க என்றவாறு வெற்றுச் செக்கில் கையொப்பமிட்டுக் கொடுக்க,

அவர் எதிர்பார்த்தவாறு ‘எதற்குப் பணம்?” என்றெல்லாம் சொல்லாமல் தன்னிடம் ஏற்கெனவே இருந்த பில்லை அவருக்குக் கொடுத்தான் ரிஷி. அதில் இருந்த பெரும் தொகையைச் செக்கில் நிரப்பி அவருக்குக் காட்டினான். என்னோட சார்ஜ் மட்டும் தான் சார். என் வேலையைத் திருப்திகரமா முடிச்சது எனக்குத் திருப்தி. நன்றிங்க சார் சாயங்காலம் ப்ளைட், இப்ப புறப்பட்டாதான் சரியா இருக்கும் என்று விடைப்பெற்றுச் சென்றான்.

இந்தர் அமர்ந்திருக்க, ‘அப்பா இப்ப சொல்லுங்க’ என்றாள் ரிஷா.

இந்தர் தம்பி திசை தெரியாத இடத்தில என் மகளுக்கு உதவியா இருந்திருக்கீங்க உங்களுக்கு முதல்ல நன்றியை சொல்லிக்கிறேன்.

நீங்க இப்ப வேலையில் இல்லைன்னு ரிஷாதான் சொன்னா, உங்களோட நேர்மை குறித்தும் கூடச் சொன்னா. உங்களுக்கு விருப்பம் இருந்தா என் கம்பெனில வேலைப் போட்டுத் தாரேன். எங்களுக்கும் கம்பெனிக்கு வக்கீல் ஒருத்தர் இப்ப தேவைதான்.

உங்களுக்கு உங்க பிரச்சனைகள் தீரும் மட்டும் அல்லது வேற வேலை கிடைக்கும் மட்டும் இங்கே வேலைப் பார்த்தா போதும். இங்கேயே தான் இருக்கணும்னு நான் கட்டாயப் படுத்த மாட்டேன். மத்த எம்ப்ளாயீஸ் மாதிரிதான் உங்களையும் நடத்துவேன். உங்களோட தன்மானத்தைப் பாதிக்கிற மாதிரி எதுவும் நடக்காதுன்னு உறுதி கொடுக்கிறேன், என்ன சொல்லுறீங்க?

ரிஷா இல்லைங்க சார், அது யாரா இருந்தாலும் அப்படித்தான் நடந்திருப்பேன். அதுக்காக வேலையெல்லாம் அதிகம், நீங்க சொல்லுறதைப் பார்த்தா எனக்கு இது ஒரு நல்ல ஆபர் தான். ஆனாலும், யோசிச்சு சொல்லுறேன் சார் பதிலிருத்தான் இந்தர்.

சிறிது நேரம் அளவளாவி விட்டு இந்தரும் விடைப்பெற்றுச் செல்ல அதுவரை அமைதியாக இருந்த செல்வி முகத்தைத் தூக்கிக் கொண்டு உள்ளறைக்குச் சென்றார்.

‘சாயங்காலம் ஒரு கெஸ்ட் வராங்க பாப்பா’ என்று மகளிடம் கூறிய சண்முகம் மனைவியைச் சமாதானப் படுத்த அவசரமாய்த் தன் அறைக்குள் நுழைந்தார்.

அம்மாவின் கோபம், ஊடலைப் பார்த்தவள் சிரித்தவாறு தன் அறைக்குச் சென்று படுக்கையில் சரிந்தாள். இரண்டு பேரும் சமாதானம் ஆனால் நம்ம கிட்ட தான் புதுசா பிரச்சனையைக் கொண்டுட்டு வருவாங்க, நாம இப்ப ரெஸ்ட் எடுப்போம், என்றவளாகக் கண் அயர்ந்தாள்.

சாயங்காலம் செல்வியும், சண்முகமும் மலர்ந்த முகமாக இருந்தனர். அப்பா, அம்மாவை சமாதானப் படுத்திட்டார் போலிருக்கே? வெளியே சொல்லாவிட்டாலும் மனதிற்குள்ளாக எண்ணி நகைத்துக் கொண்டாள்.

அப்பா சொன்னது போலச் சாயங்காலம் வந்த கெஸ்டைப் பார்த்தவள் அயர்ந்தாள், சிறுப்பெண் போல மாடர்ன் மங்கையாக ப்ரீ ஹேரில் ஸ்டைலாகத் தன் காரில் வந்து இறங்கியவர் வேறு யாருமல்ல ஷாரதாவே தான்.

வாங்க, திக்கினாள் ரிஷா…

என்ன பொண்ணே, திக்குது. முன்னை மாதிரி மனசில திட்டறது எல்லாம் இல்லையா என்ன? கண்ணடித்துச் சிரித்தார். .

இல்லை ஆண்டி, நான் அப்படிக் கூப்பிடலாம்ல… சந்தேகமாய்க் கேட்க…

கூப்பிடலாமே, உள்ளே வந்தவரை ரிஷாவின் பெற்றோர் இருவரும் வரவேற்க,

பொதுவா, க்ளையண்ட் வீடுகளுக்கு நாங்க போகிறது இல்லை. உன்னைப் பார்க்கணும்னே ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி வந்தேன், அவள் கன்னத்தில் தட்டினார்.

அருகில் அமர்ந்தவள் அவர் கைகளைப் பற்றிக் கொண்டாள். நிழலின் அருமை வெயிலில் தெரியும்னு சொன்னது எவ்வளவு சரி. அது போலத்தான் மும்பையில் ஒவ்வொரு இடமா தன்னந்தனிமையிலே என் உயிரைக் காப்பாத்திக்க நான் ஓடினபோது உங்களோட அருமையை உணர்ந்துக்கிட்டேன்.

‘பச்சக்’ என அவரது கன்னத்தில் முத்தமிட்டாள். ஷாரதாவின் இரும்பு முகத்திலும் புன்னகை விரிந்தது. இரவு சாப்பாடு அவரோடு கழிய விடைபெறும் போது குட்டியாக ஒரு பரிசை அவள் கையில் கொடுத்து விட்டுச் சென்றார்.

கையிலிருந்த அந்தக் குட்டி பொம்மையைப் பார்த்து ரசித்துக் கொண்டே பின் தொடர, மாடிக்கு படி ஏறினர் மூவரும். பாயை விரித்து அமர்ந்திருந்த அப்பாவின் மடியில் படுத்து வானத்தின் நட்சத்திரங்களை எண்ணினாள் ரிஷா.

டார்ஜிலிங்கில் இருக்கும் போதும் வானத்தைப் பார்த்து ஏங்கியவாறு இப்படித்தானே எண்ணிக் கொண்டிருப்பாள். தான் ஆசைப்பட்ட வாழ்க்கை, தன் பெற்றோரோடு கொண்டாடும் இவ்வாழ்க்கை கண்கள் மூடி இறைவனுக்கு நன்றிகள் சொன்னாள்.

பாப்பா… தயங்கியவாறு செல்வி அழைத்தார்….

இதை இதை இதைத்தானே எதிர்பார்த்தேன் என எண்ணியவளாய் புன்முறுவலோடு எழுந்து அமர்ந்தாள் ரிஷா.

என்னம்மா?

இல்லை உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நானும், அப்பாவும் பேசிக்கிட்டு இருந்தோம்…

எல்லோரும் ஒரு கல்யாணம் தான் செஞ்சுப்பாங்க, பின்ன 10 கல்யாணமா செஞ்சுப்பாங்க?

என்றதும் செல்வி முகம் வாட, சண்முகம்

என்ன பாப்பா? நாங்க உனக்கு நல்லதுக்குத்தான சொல்லுவோம், நீ இப்படிப் பேசினா எப்படி? அம்மா முகத்தைப் பாரு…

நீங்க தானே செய்வீங்க, செய்வீங்க… என் கல்லூரி படிப்பே இன்னும் முடியலை, அதுக்குள்ள எனக்கு மாப்பிள்ளைப் பார்த்து, கல்யாணம் கட்டி அனுப்பிச்சு வைக்க முயற்சி செஞ்சவங்க தானே நீங்க? நானே எப்ப உங்க கூட எல்லாம் சேர்ந்து இருக்கலாம்னு கனவு கண்டுட்டு இருந்தா, ஷாரதா ஆண்டிக்கு எனக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளை போட்டோ அனுப்பி வச்சிருக்கீங்க. நான் ஏற்கெனவே உங்க ரெண்டு பேர் மேலயும் கொலைவெறில இருக்கேன் சீண்டாதீங்க… பொருமினாள்.

அப்படி இல்ல பாப்பா, உனக்கொரு கெடுதல் நிகழாம பார்த்துக்கணும்னா பத்திரமான கைகள்ல ஒப்படைக்கணும்னு பார்த்தோம். மகளின் தலையை வருடினார் செல்வி.

எத்தனை முறை கேட்டிருப்பேன்? ஒரு முறையாவது பதில் சொல்லி இருப்பீங்களா? மும்பையில அந்தத் தெரியாத நகரத்தில என்னென்னே புரியாம ஓடின ஓட்டத்தில உங்களுக்கும் பங்கிருக்கு. ஒன்னு முதல்லயே எதையும் எதிர்கொள்ளுற மாதிரி என்னை வளர்த்திருக்கணும் இல்லை இதுதான் பிரச்சனைன்னு அப்ப ஆரம்பத்தில சொல்லா விட்டாலும் அதுக்கப்புறமாவது சொல்லி இருக்கணும். ஒன்னுமே செய்யலை…

செல்வி அமைதி காக்கவும்…

எனக்கு புரியுதும்மா, அப்பா வருத்த பட்டிறக் கூடாதுன்னு நீங்க அவங்க சொந்தங்களைக் குறைச்சுப் பேச விரும்பலை. ஆனா, அப்பா? அவங்களாவது சொன்னாங்களா? இல்லையே? அப்ப உங்களுக்கும் என்னை விட அவங்கதான் பெரிசா?

இல்லைடா இல்லவே இல்லை, நீ அப்படிப் பேசாதே மகளைத் தடுத்தார் சண்முகம்.

‘என்ன இருந்தாலும் நான் அவங்களைக் கேட்காமல் அவங்க உடன்பிறப்போட உடலை தகனம் செய்ய வைத்தது தவறு என்கிற குற்ற உணர்ச்சி தான்மா எல்லாத்துக்கும் காரணம்’
என உடைந்தவரை தேற்றினாள் ரிஷா.

அழகாக ஆரம்பித்த பேச்சு இப்படி மாறியது அவளுக்கும் விருப்பம் இல்லை.

அம்மா, அப்பா நான் என் மனசில இருந்த ஆதங்கத்தைக் கொட்டிட்டேன். உங்களைக் கஷ்டப் படுத்தினதுக்கு மன்னிச்சுக்கோங்க. இப்ப நீங்க என்ன சொல்ல வந்தீங்களோ அதை இப்ப சொல்லுங்க கேட்கிறேன்.

மறுபடி உற்சாகமான செல்வி ‘இல்ல பார்க்கிறதுக்கு லட்சணமாகவும் இருக்கு, வேலையும் திறமைசாலி, அந்த ரிஷி தம்பியை உனக்குக் கேட்கலாமான்னு நாங்க ரெண்டு பேரும் நினைச்சோம்’

ஓ அது ரொம்பக் கஷ்டம்…

ஏன் பாப்பா?

அனுமதி தர மாட்டாங்க அம்மா?

உனக்குப் பிடிச்சிருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லு, நாங்க உனக்காகப் போயி அவங்க அம்மா அப்பா கிட்ட போயி பேசறோம்.

நீங்க பேச வேண்டியது அவங்க அம்மா, அப்பாக்கிட்ட இல்ல.

பின்னே…

அவங்க மனைவி கிட்டே,

விழுந்து விழுந்து சிரித்தாள். அவள் தான் ரிஷி தன் மனைவியோடு இருந்த படத்தை அவன் டேபிளில் கண்டிருந்தாளே.

சண்முகமும், செல்வியும் அசடு வழிந்தனர்…

அடுதததா இந்தர் பேரை சொல்லிடாதீங்க என் தெய்வங்களே

கைக் கூப்பினாள்.

அவன் என் பிரெண்ட் மட்டும் தான், புரிஞ்சதா ஓகே…

சரி என இருவரும் சிரித்தவாறே தலையசைத்தனர்.

நான் நிச்சயமா கல்யாணம் செஞ்சுக்கத்தான் போறேன் ஆனா இப்ப இல்ல, முதல்ல படிப்பை முடிக்கணும், சுதந்திரமா வாழ்க்கையை அனுபவிக்கணும். கராத்தே, ஜீடோன்னு எல்லாம் கத்துக்கணும். வெளி உலகம் பார்த்து வாழ்க்கையை எப்படி வாழணும்னு புரிஞ்சிக்கணும். உலக நாடுகள் எல்லாம் சுத்திப் பார்க்கணும். உங்களோட வாழாத இத்தனை வருஷத்து வாழ்க்கையும், சேர்ந்து வாழ்ந்து ஈடுகட்டணும்… அதுக்கப்புறமா எந்த இளிச்சவாயன் மாட்டினாலும் சரி கட்டிக்க வேண்டியதுதான்.

அடிங்க வாயைப் பாரு…. அதட்டினார் செல்வி, நீ சும்மா இரு செல்வி மகளுக்குப் பரிந்து பேசினார் சண்முகம்.

உங்களுக்கு மகளுக்குச் செல்லம் கொஞ்சறதே வேலை, கண்டிக்க விட்டுறாதீங்க… சிணுங்கிக் கொண்டார் செல்வி.

அம்மா அப்பா மடியில் நீண்டு படுத்துக் கொண்டு வானை நோக்கி கத்தினாள் ரிஷா…

ஏ குட்டி நட்சத்திரம்… நான் அன்னிக்கு உன் கிட்ட சொன்னேன்ல… இதோ பாரு என் அம்மா, இதோ பாரு என் அப்பா … நான் இவங்க கூடத்தான் இனி இருக்கப் போறேன் யிப்பீ…. ஊ…வென உற்சாகக் குரல் எழுப்பினாள்.

அந்நட்சத்திரம் அவளை நோக்கி மின்னி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டது. மேகங்கள் அதனை மறைத்து நகர்ந்துச் செல்ல மறுபடியும் நட்சத்திரம் அவள் கண்களுக்குத் தென்பட்டது முத்தம் ஒன்றை அதற்கு அனுப்பி வைக்க அவள் மகிழ்ச்சியில் அந்நட்சத்திரம் மட்டுமல்ல பிரபஞ்சமே மகிழ்வு கொண்டது.

சுபம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here