2. துரத்தும் நிழல்கள்

0
511
துரத்தும் நிழல்கள்

அத்தியாயம் 2

துப்பாக்கிகளில் இரண்டு வகைகள் உள்ளன. அவை கையடக்கமான கைத்துப்பாக்கிகள் மற்றும் அளவில் பெரிதான குழல் துப்பாக்கிகளுமே (long guns). பொதுவாக எல்லாக் கைத்துப்பாக்கிகளுமே பிஸ்டல் என அழைக்கப் பட்டாலும் பிஸ்டல் என்பது கைத்துப்பாக்கியின் ஒரு வகை மட்டுமே. கைத்துப்பாக்கிகளில் இன்னும் பல வகைகளும் உள்ளன. அவை revolvers , Derringers, Semi-automatic pistols, single shot pistols, machine pistols மற்றும் pepperboxes.

கைத்துப்பாக்கி பயனாளர்களைப் பொறுத்தவரையில் சினிமாவில் காண்பிக்கப் படுவது போலத் துப்பாக்கியை ஒரு கையால் அனாயாசமாகப் பயன்படுத்துதல் சாத்தியப்படாத ஒன்றாகும். பிஸ்டல்களை விடவும் ரிவால்வர்களைக் கையாள்வது எளிதென்றும் குறிப்பிடுகின்றனர்.

அரங்கநாதன் அத்தானா போன் செய்தது?….

யாரு ரிஷாவா பேசுவது? என்ற ஒற்றைக் கேள்வியிலேயே அவரது குரலை அவள் உள்ளம் அறிந்து கொண்டிருந்தது. இத்தனை வருடங்கள் பாராமலிருந்தும் அவரது குரலின் பரிச்சயம் மறவாததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

வெள்ளந்தியான மல்லிகா என்கின்ற தாய்க்கும் விவகாரமான செல்லத்துரை எனும் அப்பாவுக்கும் பிறந்தவர்கள் அவர்கள் அரங்கநாதனோடு கூட இரண்டு இளைய சகோதரர்களும், ஒரு சகோதரியும் உண்டு. செல்லத்துரைக்கோ காதலிகள் ஏராளம். குழந்தைகள் பெற்றுப் போட்டதோடு கடமைகள் முடிந்ததென அவ்வப்போது சில வருடங்கள் மிகவும் பிடித்த ஏதாவதொரு காதலியோடு போய்க் குடும்பம் நடத்த அவர் சென்று விடுவார்.
மல்லிகாவிற்குக் கணவனே கண்கண்ட தெய்வம், கண்ணகி வாழ்ந்த தாய் தமிழகப் பெண்ணின் மறு உரு அவர். கணவன் இல்லாத நேரத்தில் இருப்பவற்றைக் கொண்டு பசியும் பட்டினியுமாய்க் காலம் கடத்துபவர். திரும்ப வந்ததும் அதைப் பெரிது படுத்தாமல் கணவனே கண்கண்ட தெய்வமாகப் பூசிப்பவர்.

ஒரு முறை சண்முகம் தன் தமக்கையைச் சந்திக்கச் சென்றிருக்க, 18 வயது அரங்க நாதனும், 15 வயது சந்திரனும் பிழைப்பிற்கு வழி தெரியாமல் கிடைக்கும் கூலி வேலைகளுக்குச் சென்று கொண்டிருப்பதைக் கண்டு இரங்கி அவர்களைத் தன்னோடு கூடச் சென்னைக்கு அழைத்துச் சென்றார். பிள்ளைகளுக்கு விடிவுகாலம் வந்துவிட்டதென மல்லிகாவிற்குப் பேரானந்தம். இனி தன் 16 வயது மகளுக்கு நகைச் சேர்த்துத் திருமணம் செய்து விடலாமென்றும் 10 வயது மகன் சுந்தரை மற்ற இருவரின் சம்பளத்தில் படிக்க வைத்து விடலாமென்று அவரது கண்களில் நம்பிக்கை பரவியிருந்தது.
சண்முகம் தன் மருமகன்களோடு சென்னை வந்ததும் அப்போதுதான் தான் தன் நண்பர்களோடு இணைந்து ஆரம்பித்திருந்த கார்மெண்டில் அவர்களுக்கு வேலையைப் பயிற்றுவித்தார்.

அவர்களின் சாப்பாட்டுப் பொறுப்பைச் செல்வி கவனித்துக் கொண்டார். கணவன் தேவையில்லாமல் 2 பேர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு தன் வேலைப் பளுவைக் கூட்டிவிட்டதாக அவர் சற்றும் சலித்துக் கொள்ளவில்லை.

அவர்கள் மகள் ரிஷா அப்போது 3 வயதாக இருக்க அரங்கநாதனும், சந்திரனும் அவளுக்கு விளையாட்டுத் தோழர்களானார்கள். வேலையிலிருந்து வந்ததும் அவள் எப்போதும் இருப்பது இவர்கள் இருவரின் தோளிலாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட நெருங்கிய உறவுகளைப் பிரிந்து இங்குத் தனிமையில் இருக்கின்றோம் என்பதே அவள் மனதிற்குப் பெரும் பாரமாக இருக்க, அவ்வேளையில் அவளுடன் பேசிக் கொண்டிருந்த அரங்கநாதன் அத்தான்.

‘ரிஷாம்மா அம்மாக்கும், அப்பாவுக்கும் கொஞ்சம் உடல் நிலை சரியில்லை, அதனால நீ சீக்கிரமா வீட்டுக்கு வரப்பாரு’

என்றவாறு சுருக்கமாய்ப் பேசி துண்டிக்க, அம்மாவிற்கும் அப்பாவிற்கும் என்னவாயிருக்கும்? அதனால் தான் கடந்த 2 வாரமா அவங்க போன் பண்ணலியா? திக்பிரமை பிடித்தவண்ணம் அங்கேயே நின்று விட்டவளை ப்யூன் அழைக்கக் கலைந்து ரிசீவரை அதன் இடத்தில் வைத்து புறப்பட்டாள்.

ப்ரின்ஸிபலின் அறைக்கு வர அங்கே அவளுக்கு முன்பாக முதுகு காட்டி அமர்ந்திருந்தது ஷாரதா. ஏன்? எதற்காக? மனதிற்குள்ளாகக் கேள்விகள் வரிசைக் கட்டி நிற்க,

‘டோண்ட் வொர்ரி ரிஷா? யூ கேன் ரைட் யுவர் எக்ஸாம்ஸ் வென் யூ கம் பேக் ஃப்ரம் யுவர் ஹோம்டவுன்? ஓகே’ (கவலைப் படாதே ரிஷா, உன் ஊர் சென்று திரும்பி வந்த பின்னால் உன் தேர்வை எழுதிக் கொள்ளலாம், சரியா?)

‘ஓகே மிஸ்’ தலையசைத்து வைத்தாள்.

தன் வகுப்பறைச் சென்று பையில் புத்தகங்கள் அடுக்கியவள் தனக்காக நின்று கொண்டிருக்கும் ஷாரதாவுடன் இணைந்து கார் நின்று கொண்டிருக்கும் இடத்திற்கு நடக்கலானாள்.

உங்களுக்கும் அரங்கநாதன் அத்தான் போன் வந்ததா மேம்?

ரிஷா கேட்க ஷாரதாவின் நடை ஒரு நொடி நின்று தொடர்ந்தது. அவளை நிமிர்ந்துப் பார்த்ததோடு சரி அவர் அவளிடம் ஒன்றுமே பேசவில்லை

‘அம்மா, அப்பாக்கு போன் பண்ணுங்க, நான் பேசணும்’

அவளது குரலின் பிடிவாதம் ஷாரதாவை அசைக்கவில்லை. காரை வீட்டிற்கு விரட்டினார். வீட்டில் சென்றவள் அம்மா அப்பாவின் குரலை சேர்ப்பிக்கும் அந்த லேண்ட்லைன் போனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க,

“இன்று மதியம் நாம் புறப்படுகிறோம், தயாராகு”

ஷாரதாவிடமிருந்து கட்டளை வர, ஜீன்ஸிம் டி ஷர்ட்டும் அணிந்துக் கொண்டாள்.அதன் மேல் குளிருக்கான உடையென்றாலும் வெகு நவீனமான ஸ்ரெக் வகைப் போன்றதை அணிந்து கொள்ள, அதை அம்மாவோடு இணைந்து வாங்கியது குறித்த நினைவு வர கண்கலங்கினாள்.

இல்லை வேண்டாம், “எண்ணங்கள் தான் நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பவை” நான் தவறானவற்றைச் சிந்திக்க மாட்டேன்” என் அம்மா, அப்பா நலமாக இருப்பார்கள். நான் அவர்களைப் பார்த்துப் பேச போகிறேன். கண்களை அடமாய்த் துடைத்துக் கொண்டாள். கண்ணாடிப் பார்த்து புன்னகைக்க முயன்றாள். ஒருவழியாய் சின்னப் புன்னகை துளிர்க்க, இவளைப் பார்த்துக் கொண்டிருந்த ஷாரதாவின் முகத்தில் மாறாத அதே இறுக்கம் தான்.

ஷாரதா லேண்ட் லைனின் வயரை அகற்றியவள். தன் கையில் என்றும் வைத்திருக்கும் மொபைலையும் அறையிலேயே வைத்துவிட்டு, தன்னையே விசித்திரமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் ரிஷாவை கண்டு கொள்ளாமல் அவளைச் சாப்பிட பணித்து விட்டு அவள் எடுத்து வைத்திருக்கும் பையை ஆராயலானாள்.

ரிஷாவின் கண்கள் நெருப்பைக் கக்கியது. இது இப்போதல்ல, எப்போதும் நடக்கும் நிகழ்வுதான். எப்போது ரிஷா வெளியே சென்று விட்டு வந்தாலும் அவள் பையைக் குடைந்து பார்த்து விட்டு தான் மறுவேலை.

ஷாரதாவும் சாப்பிட்டு முடிக்கத் தன் துணியை மாற்றி வந்தவர் முற்றிலுமாய் வேறு விதமாய் இருந்தார். அவரது உயரத்திற்கு அந்த முரட்டு ஜீன்ஸிம் டெனிம் ஷர்ட்-ம் பாந்தமாய்ப் பொருந்தி இருக்க, தன்னை விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருப்பவளை சட்டையே செய்யாமல்

“வா போகலாம்”

தங்கள் காரை விட்டு விட்டு எதற்காக வாடகைக் கார் எனப் புரியாவிட்டாலும் மந்தை ஆடு போலவே ஷாரதாவை பின் தொடர்ந்தாள் ரிஷா.

அவர்கள் பயணம் தொடர்ந்தது.

முதலில் டார்ஜிலிங்க் டிஸ்ட்ரிக்டின் பாக்டோக்ரா (bagdogra) நகரத்திற்குச் சென்றவர்கள் விமானம் மூலம் டெல்லியை அடைந்தனர். டெல்லி விமான நிலையத்திலிருந்து இரயில் நிலையத்திற்கு வரும் வரையிலும் ரிஷா ஷாரதாவின் விழி அசைவுகளுக்கேற்ப பின்பற்றும் சீடத்தியாய் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

இரயிலின் பெயர்ப்பலகை பார்த்த பின்னர்த் தான் அவள் வெகுவாகக் குழம்பிப் போனாள்.அது மும்பை செல்லும் ரயில்…

அவள் செல்ல வேண்டியது சென்னை, இப்போது சென்று கொண்டிருப்பதோ மும்பை. ஏன் அப்படி? எதற்காக மும்பை செல்ல வேண்டும்? ஒரு வேளை அம்மா அப்பா மும்பையில் எங்கும் இருக்கிறார்களோ?… அவளை மேலும் சிந்திக்க விடாது செலுத்திக் கொண்டிருந்தார் ஷாரதா.

ரயில் ப்ளாட்பாரத்திற்கு வந்து விட்டிருந்தது. ஏசி கோச் அத்தனையும் அவர்கள் நடந்தே கடந்து சென்றிருக்க, தான் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? ஏன் செல்கிறோம்? என்று புரியாமலேயே அவரோடு ரிஷா நடந்து கொண்டிருந்தாள்.

ஜெனரல் கம்பார்ட்மெண்ட் வந்ததும் ஷாரதா வை பின்பற்றி அவளும் உட் புக ஜெனரல் கம்பார்ட்மெண்டிலா? ஏன்? என்ற கேள்வி தொக்கி நிற்கும் ரிஷாவின் விழிகளை வழக்கம் போலவே சந்திக்காமல் அவள் முன்பாக விறு விறுவென்று நடந்து கொண்டிருந்தார் ஷாரதா.

ஒரு இடத்தில் அவ்வளவாகக் கூட்டம் இல்லாதிருக்கவும் தாங்கள் அங்குத் தான் அமரப் போகிறோம் என்று ரிஷா எண்ணிக் கொள்ள ஷாரதாவோ தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார். அவர்கள் நின்ற இடத்தில் நண்டும் சிண்டுமாக நிறைந்திருக்க, ஒரு முஸ்லிம் குடும்பம் அமர்ந்திருந்தது. ஓரமாக இடம் கிடைக்க இருவரும் எதிரெதிரில் அமர்ந்தனர்.

நேரம் கடந்து கொண்டு போக அந்த வசதியில்லாத சூழலிலும் ஒருவாறாகச் சாப்பிட்டுக் கண்கள் சொக்க தலையை இருந்த வாக்கிலேயே சாய்த்து உறங்க தொடங்கினர், இரவும் கடந்தது.

ஒரு நாள் இந்த அவஸ்தையில் கழியவே, தட்ப வெட்ப நிலைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறும் நிலையில், தங்கள் குளிருடைகளை ஏற்கெனவே இருவரும் பைக்குள் பத்திரமாக வைத்து விட்டிருந்தனர். இன்னும் சில மணி நேரத்தில் மும்பை வந்து விடும் யாரோ சொல்ல கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

இரயில் மிக விரைவாகக் குஜராத்தின் வடோதராவைக் கடந்து மும்பைக்குள் பிரவேசிக்கப் பயணித்துக் கொண்டிருந்தது.

இப்போது மும்பைச் செல்ல வேண்டிய தேவையென்ன? என முன் தினத்திலிருந்தே பல முறை கேட்க முயன்றும் ஷாரதாவின் பதில் தராத புறக்கணிப்பை தாங்க இயலாதவளாக, ரிஷா தன் தலையைப் பின்புறமாகச் சரித்துக் கண்களை மூடினாள்.

தொடர்ந்த பயணம், படுக்க வாகாக அமையாத இருக்கை அனைத்துமோடு தன் வாழ்வில் என்னதான் நடந்து கொண்டிருக்கின்றது என்று புரியாத நிலை. கூடவே தூங்கவும் முடியாத மனதை பிசையும் பெற்றோர் குறித்த கவலை உணர்வுகள். அவை அனைத்தும் அவளை முந்தைய நிகழ்வுகளுக்கு இட்டுச் சென்று விட்டன.

அந்தக் கொடிய நினைவுகள் மறக்க முடியுமா? அவைகள் தான் தன் பெற்றோரை பிரிவதற்குக் காரணமான நினைவுகளல்லவா?
என்னதான் அம்மா, அப்பாவும் காரணம் சொல்லாவிட்டாலும் கூட அப்பாவின் தொழில்முறை நண்பர்களின் பிரச்சனைகள் தான் தன்னுடைய பிரிவிற்கான காரணம் என்பது அவளால் புரிந்து கொள்ள முடியாதா என்ன?

அப்போது அவளுக்கு வயது 12 அல்லது 13 இருக்கும். ரிஷாவின் தந்தை சண்முகம், அவரது நண்பர்கள் கனகவேல் மற்றும் ருத்ரபாண்டி இவர்கள் சேர்ந்து நடத்தியது தான் அந்தப் பிரபலமான SKR கார்மெண்ட். ஆளுக்கொரு பொறுப்பைக் கையிலெடுத்துக் கொள்ள மிகவும் வேகத்தில் முன்னேறியது அவர்கள் நிறுவனம். ஆர்டர்கள் குவிய ஆரம்பித்தன அப்போது தான் அந்த விஷயம் நிகழ்ந்தது. நண்பர்களுக்குள்ளாக வேற்றுமையும் அதன் காரணமாகப் பிரிவும் ஏற்பட்டது. அவள் வயதிற்கு அது குறித்து வெகு விபரமாகத் தெரியாவிட்டாலும் மூன்று நண்பர்களில் கனகவேல் தான் தனியாக நிறுவனம் ஆரம்பிக்க விரும்புவதாகக் கூறவும்.

கணக்கு வழக்கை பார்த்து பங்கு பிரிக்க எண்ணுகையில் தான் அதுவரை வங்கி விபரங்களைக் கையாண்டு கொண்டிருந்த ருத்ரபாண்டி ஒரு சில தில்லு முல்லுக்களைச் செய்திருப்பது தெரிய வரவே நண்பர்களுக்குள்ளாகப் பிரச்சனைகள் எழுந்திருந்தன.
சில நாட்களாக நண்பர்களுக்குள்ளாக ஏற்பட்டிருந்த பிரச்சனைகளால் தடங்கல் பட்டிருந்த சில வேலைகளை முடித்து வர எப்போதும் நேரம் கழித்து வரும் சண்முகம், வாயிலை எட்டியதுமே தூங்கிக் கொண்டிருந்தாலும் ரிஷா தான் முதலில் எழும்பி அவருக்குக் கதவைத் திறப்பாள்.

அவர் வாங்கிக் கொண்டு வருகின்ற தின்பண்டங்களைக் கொறித்து விட்டு அவர் மடியில் படுத்து தூங்கி விடுவாள். அதனால் ரிஷாவுக்குத் தாயும் தந்தையும் பேசிக் கொள்ளும் கம்பெனி விவரங்கள் ஓரளவு புரியும்.

அந்த நாட்களில் தான் கனகவேலின் மகன் திடீரென்று காணாமல் போய்விட, நட்பாக இருந்தாலும் கூட உற்றாராய் பழகியவர்கள் என்பதால் இரவும் பகலுமாகப் பையனை தேடச் செல்ல, ரிஷாவும் தன் பள்ளி மற்றும் விளையாட்டுத் தோழன் எங்கே காணாமல் போனானோ? என்றெண்ணி கவலைக் கொண்டாள்.

பகல் முழுக்கத் தேடி ஓய்ந்து இருந்த போது இரவில் பெண்கள் அழுகை ஓலமும், பதட்டமும் தன் நண்பனுக்கு ஏதோ தவறாக நிகழ்ந்து விட்டதாக இவளுக்குப் புரிய வந்தது. தண்ணீரின் ஆழத்தில் உட்கார்ந்த வண்ணம் அவன் உடல் கிடைத்தது எனத் தெரிய வந்திருந்தது. சின்னப் பிள்ளைகள் அங்கே வரக் கூடாது என அம்மா ரிஷாவை தடுத்து விட்டார்.

அந்த மரணம் எல்லோரையும் வெகுவாக உலுக்கி விட்டிருந்தது. சில காலம் எல்லோருமே அதைக் குறித்தே பேசிக் கொண்டு இருந்தனர். ரிஷாவின் வீட்டில் வந்து, அவள் தாயிடம் வழக்கமாக ஊர்க்கதை பேசும் பெண்கள் இது நிச்சயமாகத் தொழில் முறை பிரச்சனையால் நேர்ந்த கொலையாகத்தான் இருக்க வேண்டும். என்னதான் தொழில் முறை பிரச்சனையானாலும் ருத்ரபாண்டி இப்படிச் செய்திருக்கக் கூடாது? என அங்கலாய்த்துச் சொல்வதை அப்போது கேட்டிருந்தாள்.
அதன் பின்னரே சில மாதங்களில் அவளை அம்மா டார்ஜிலிங்க் அழைத்து வந்ததும், ஷாரதாவுடனான இந்தத் தனிமை வாசமும்… ம்ம்ஹீம் எனச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தவளை யாரோ உலுக்கிய உணர்வு.

எதிரில் ஷாரதா நின்றிருந்தார். அவர் முன்னே செல்ல இவளை பின் தொடரச் வரச் சொன்னார். ட்ரெயின் நின்றிருந்ததை அப்போதுதான் கவனித்தாள். தான் கற்பனையில் ஆழ்வதைக் கொஞ்சம் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என எண்ணியவளாகப் பின் தொடர்ந்தாள்.
டாய்லெட்டுக்குள் நுழைந்தவர் அவளையும் உள்ளே இழுத்தார். ச்சீ இது என்ன என நினைக்கும் போதே தன் பையைத் திறந்து எடுத்த புர்க்காவை அவள் தலை வழியாக அணிவித்தார்.

அவள் கண்கள் மட்டும் தெரியும் வண்ணம் ஷாரதா அவ்வுடையை அட்ஜஸ்ட் செய்து கொண்டிருக்கையில்.இரயில் அதிர அதிர கம்பார்ட்மெண்டுக்குள்ளாக ஆட்கள் கூட்டமாய்த் தப தபவென இங்குமங்குமாய் ஓடிக் கொண்டிருப்பது கேட்டுக் கொண்டிருந்தது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here