3. துரத்தும் நிழல்கள்

0
553
துரத்தும் நிழல்கள்

அத்தியாயம் 3

ட்ரெயின் மெதுவாக நகரத் தொடங்கி விட்டிருந்தது. கம்பார்ட்மெண்டுக்குள்ளாகக் கூட்டமாய் ஆட்கள் அங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். டாய்லெட்டுக்குள்ளாக இருந்த போதிலும் எதனால் திடீரென இத்தனை நபர்கள் இரெயில் பெட்டியில் ஏறி ஓடிக் கொண்டு இருக்கின்றனர்? ஏன் இப்படி? என மனதில் எழுந்த கேள்விகளும், அதனால் எழுந்த பரபரப்பை ரிஷா எண்ணினாலும், அவள் அளவிற்குக் கூட ஷாரதா பதட்டம் அடையவில்லை. வெகு நிதானமாக ரிஷாவின் தலை முக்காட்டைச் சரி செய்து அட்ஜஸ்ட் செய்தவர். தன்னுடைய பையை எடுத்து அவளது தோளில் மாட்டினார்.

ரிஷா….என்றழைக்க

அவரது ஆழ்ந்த குரலில் ஆட்பட்டவளாய் அவரை நோக்கினாள்.
இப்ப நாம வெளியே போனதும் நீ நாம அமர்ந்திருந்த அதே சீட்டில் போய் உக்காருற ஓகே.

எனக்கு என்ன நடந்தாலும்…

அவளது முகவாயை நிமிர்த்தித் தன் கண்களை அவள் கண்களோடு சந்திக்க வைத்தார் ஷாரதா, அவரது கண்களை ரிஷா பார்த்த பொழுது அதில் அதே தீர்க்கமான பார்வையோடு, நெருப்பு கொழுந்து விட்டெரியும் கூர்மையும் கண்டாள். உடல் சில்லிட்டது போன்ற உணர்வு எழுந்து அடங்கியது.

நான் என்ன சொல்றேன்னா… எனக்கு என்ன நடந்தாலும் நீ வெறும் பார்வையாளரா மட்டும் தான் இருக்கப் போற, எனக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லாதது போலவே நடந்துக்கணும் சரியா?

ம்ம்… ரிஷாவின் தலை தானாகவே அசைந்து சம்மதம் தெரிவித்தது.
இன்றைக்கு உன்னை விட்டு நான் பிரிய நேர்ந்தாலும், இன்னும் சில மணி நேரங்களில் மும்பை வந்ததும் இந்தப் பையில் இருக்கிற விலாசத்துக்கு நீ போய்ச் சேர்ந்தாகணும். அதுவரைக்கும் உனக்குத் தேவையான அளவு பணம் பையில் வச்சிருக்கேன். டெபிட் கார்ட் இதில் இருக்குது பையைச் சுட்டிக் காட்டியவர் அதோட கூடவே பாஸ்வர்ட்-ம் இருக்குது, இதெல்லாமே இருந்தாலும் நீ அந்த விலாசத்துக்குப் போகிறவரைக்கும் டெபிட் கார்ட் உபயோக படுத்த கூடாது… என்ன புரியுதா?

ம்ம் மறுபடி தலையாட்டி சம்மதம் தெரிவிக்க,

எல்லாரோட போன் நம்பர்களும் டைரில இருக்கு ஆனா, வீட்டுக்குப் போய்ச் சேரும் வரை யாரையுமே நீ தொடர்பு கொள்ளக் கூடாது ஓகே.

ம்ம்… ஆடாய் தலையாட்டியவள் மீது சற்றே பரிவு வந்ததோ என்னமோ மெலிதாய் இளக்கம் வந்து போக அதைக் காட்டிக் கொள்ளாமல் ஷாரதா முகத்தைக் கடினமாக்கிக் கொண்டாள்.

சற்று நேரம் அக்கம் பக்கம் சத்தங்களை அவதானித்தவள் ஒலி எழுப்பாமல் டாய்லெட் கதவை திறந்து ரிஷாவை மட்டும் அனுப்பி வைத்தாள்.

“நான் சொல்றதெல்லாம் ஞாபகம் வச்சுக்கோ ரிஷா”

மறுபடியும் நினைவூட்ட ஷாரதா மறக்கவில்லை.

டாய்லெட்டிலிருந்து வெளிவந்த ரிஷாவிற்குச் சட்டென்று வானிலை வெம்மையாய் மாறின உணர்வு, எல்லாம் புர்க்காவின் மகிமை.
கண்கள் மட்டும் தெரியும் முன் பின் பழக்கமில்லா அவ்வுடை அணிந்து அவளால் இயல்பாக நடக்கவும் இயலவில்லை.

ஒருவாறாக அடி மேல் அடி வைத்து அவள் முன்பு அமர்ந்திருந்த இடத்திலேயே வந்து சேர அங்கு ரயிலின் தாள லயத்தில் குட்டிப் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அவர்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் நெருங்கி வந்து விட்டது போலும். பெட்டிகளெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.

குழந்தைகளின் அழகு முகம் பார்த்து தன் நிலை மறந்து சற்று லயித்தாள்.ஆனால், தன்னுடைய நிலை மறக்க கூடியதா என்ன?
இப்போது எதற்கு இந்த வேஷம்?! இதற்காகத்தானா புர்கா அணிந்திருக்கும் இந்தப் பெண்களின் அருகே ஷாரதா தன்னை இடம் தேடி அமரச் செய்தது? யோசிக்கலானாள்.

மும்பை பெயரை இதுவரை கேட்டதோடு சரி, அங்கே முன்பெப்போதும் சென்றது இல்லை. இதுவரை அவளோடு கூடவே ஷாரதாவும் வந்ததால் எங்கே செல்கிறோம்? எதற்குச் செல்கிறோம்? என்று கேட்கவும் இயலாதவளாகப் பார்வையற்றவளைப் போல அவரைத் தொத்திக் கொண்டே இதுவரை பயணித்தாயிற்று.
இதுவரை என்ன? இப்போதும் கூடத் தாம் எதற்காக மும்பை செல்கிறோம் என்றே அவளுக்குத் தெரியாதே. மாலையில் இன்னும் சிறிது நேரம் கழித்து மும்பையை இரயில் அடையவிருக்கும் வேளையில் எதற்கு இந்தப் புதிய குழப்பம்?

இன்றைக்கு உன்னை விட்டு நான் பிரிய நேர்ந்தாலும்….

ஷாரதாவின் குரல் மனதில் ரீங்காரமிட்டது …எதற்காக அப்படிச் சொல்லி இருப்பார்?

இன்றைக்கு ஷாரதா என்னை விட்டு பிரிய போகிறாராமா? ஏறத்தாழ 7 முதல் 8 வருட துணை அவருடையது. சட்டென்று பிரியப் போவதாகச் சொல்லவும் மனதுக்குள் ஏதோ அசைந்த உணர்வு. பிரிவது என்றால், அடுத்த நிறுத்தத்தில் இறங்கிச் சென்று விடுவாராமா? அப்படிப் பாதி வழியில் சென்று விடவா இவ்வளவு நாளும் என்னை அடைத்து வைத்திருந்தார்கள்? எத்தனை கெடுபிடிகள்? எத்தனை கண்டிப்புகள்?
வெளி உலகை பார்க்காதவளை சட்டென்று தனியே எல்லாவற்றையும் சமாளித்துக் கொள் என்று சொன்னது போல ஆனதும் திகைத்தாள்.
நான் யார் வீட்டிற்குச் செல்ல வேண்டும்? எங்கே செல்ல வேண்டும்? யாராவது சொல்லுங்களேன்?

என் வாழ்க்கையில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது? என்று யாராவது சொல்லுங்களேன்”…

வீறிட துடித்த மனதை அடக்கினாள். அவளும் வேறென்னதான் செய்வாள்? ஒன்றும் புரியாத நிலை மாற அவளுக்கு வழி ஒன்றுமே புலப்படவில்லை.

ஷாரதா தனக்குத் தந்த பையைத் துழாவினாள். எங்கேனும் நான் தேடும் வெளிச்சம் புலப்படாதா?

பையினுள் ஒரு சில காகிதங்கள் மடிக்கப் பட்டு இருந்தது. ஒரு பெரிய ஜிப் வைத்த மணிபர்ஸ் காணக் கிடைக்கப் பையினுள்ளேயே அதன் ஜிப்பை திறந்துப் பார்த்தாள். உள்ளே கட்டுக் கட்டாய் பிங்க், பச்சை, மஞ்சள், ஆகாய நீல நிற தாள்கள் அடுக்கி காணப்பட்டது. ‘ஹோலி கொண்டாடும் இந்தியர்கள் நாங்கதான் டோய்’ எனும் விதமாய். வண்ண வண்ணமாய் இந்தியன் கரன்ஸி காட்சியளித்தது.

ஜிப்பை இழுத்து மூடினாள். இன்னொரு சின்ன ப்ளாஸ்டிக் ஜிப்பரில் அவள் பெயரில் பிரபல வங்கி கணக்கு புத்தகமும், டெபிட் கார்டும் இருந்தது. எனக்குத் தேவையானது இவைதானா? மனம் கேள்வி கேட்க சலிப்பாக உணர்ந்தவள் அதனை அப்படியே வைத்து விட்டாள்.
அடுத்து ஒரு சின்ன டைரி, அதில் ஏராளம் தொலைபேசி எண்கள் மற்றும் விலாசங்கள். அதிலும் மனம் பதியாமல் போக, மறுபடி தான் முதலில் பார்த்த கற்றைத்தாள் கைக்குள் வரவே அதில் என்னதான் இருக்கிறது என்று எடுத்துப் பார்த்து மடிப்பை விரித்தாள்.

பைக்குள்ளாக இருப்பவற்றை முழுவதுமாக விரித்துப் பார்க்க இயலாததாக இருக்கக் கொஞ்சம் கொஞ்சமாய் அதனை விரிக்க முயன்றாள். முதலில் அவள் கையில் அகப்பட்டது புகைப்படமொன்று. அந்தப் புகைப்படம் மடித்து வைத்த தாள்களின் நடுவே இருந்திருக்க வேண்டும். கால்வாசிப் பகுதி மட்டும் அவள் முயலாமலே வெளியில் எட்டிப் பார்க்க தலையைச் சரித்து அதைக் கூர்ந்து நோக்கியவளுக்கு மிலிட்டரி வகை ஹேர்கட்டில் முன் நெற்றி முழுவதும் மட்டும் தெரிந்திருக்க அது ஒரு ஆண்மகனின் புகைப்படம் என்பது மட்டும் புரிய வந்தது.

அவன் நெற்றியும் அதன் வலது ஓரம் இருந்த பெரிய மச்சமும் வெளியே நீட்டிக் கொண்டிருந்த அந்தக் கால்வாசி பகுதி புகைப்படத்தில் புலப்பட்டது. தான் அந்தப் புகைப்படத்தை முழுவதையும் காணும் ஆர்வத்தில் அதை இழுக்க முயலும் தருணத்தில் தான் அந்தச் சப்தம் கேட்கலாயிற்று.

சிறிது நேரம் முன்பு இல்லாதிருந்த அந்தத் தபதப சப்தம் அந்த ஓடிக் கொண்டிருக்கும் இரயிலில் கேட்க தொடங்க, கையில் இருந்த புகைப்படத்தை முழுவதும் காணும் ஆசை தகர்ந்துப் போக மிரண்டு அதனைப் பைக்குள்ளேயே வைத்துவிட்டு என்ன சப்தம் என்று எல்லோரையும் போலவே பார்க்கலானாள்.

இவள் இருந்த ஓரமான இடத்திலிருந்து பார்த்தால் கம்பார்ட்மெண்டின் அந்த இறுதி ஓரம் வரை தெரியும். அவள் இருந்த இருக்கை ஏறத்தாழ கம்பார்ட்மெண்டின் நடு மத்தியில் இருக்க அவளின் கவனம் கம்பார்ட்மெண்ட் கதவு இருக்கும் பகுதியில் நின்று நிலைத்தது.

ஜீன்ஸிம், டக் இன் செய்ய்ப் பட்ட டெனிம் ஷர்ட்டும்,தன் முடி அனைத்தும் சேர்த்து, கொண்டையாய் சுருட்டி கட்டியிருந்தார் ஷாரதா. முன்பை விடவும் அதிகமாய்த் தன் விரைப்பான உடல்மொழியோடு ஷாரதா அங்கே நின்று கொண்டிருக்க, அவரைச் சுற்றிக் கொண்டு நான்கைந்து முரடர்கள் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

யாரோ ஒருவன் மற்றவனுக்குப் போனில்,

“இதோ இங்கே வாங்கடா, இங்கே தான் இருக்கிறா”

என்று சொல்வதுவும் நான்கைந்தாக இருந்தவர்கள் கூட்டம் இன்னும் ஒவ்வொருவராக, ஒன்றன் பின் ஒன்றாக வந்து சேரச் சேர கூடிக் கொண்டே வந்து சேர்ந்தது.

ஷாரதா ரிஷா இருந்த கம்பார்ட்மெண்டிற்கு வராமல் எதிர் திசையில் நடந்து கடக்க முயல,

“ஏய்…”

என்ற ஆங்காரத்தோடு ஒரு தடியன் அவள் சட்டையில் கை வைத்துப் பின் புறம் இழுக்கச் சட்டென்று எம்பி தன் கையைக் கையை விடுவித்து, காற்றில் சுழன்று, இடது கால் தரையில் பதிய வலது காலை அந்தத் தடியனின் முகத்தில் ஆக்ரோஷமாய் மோதினாள் ஷாரதா.

நிலைக் குலைந்து விழுந்தவன் நிச்சயம் கதவு திறந்திருந்தால் அந்நேரம் அந்த இரெயிலின் கதவிற்கு வெளியே விழுந்திருக்க வேண்டும்.

கண்கள் தெரிக்க ரிஷா ஷாரதாவின் இந்த அதிரடியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவரது கால் அவனது முகத்தின் நேர் வந்து நின்ற அந்த நேரம் ரிஷா உறைந்து விட்டாள் என்றே கூறவேண்டும். ஏதோ ஒரு படத்தின் குங்க்பூ சண்டை சீன் அவளுக்கு மனதிற்குள்ளாக ஞாபகம் வந்து சென்றது.

இட நெருக்கடியான அந்த அன்ரிஸர்வ்ட் கம்பார்ட்மெண்டில் நடந்த களேபரத்தால் அங்கும் இங்குமாய் இடம் கிடைக்காமல் வழி நெடுக உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள் சண்டையைக் கண்டு பயந்து மிரண்டு உள்ளுக்குள்ளாகப் போய் அமர வேறு இடம் தேட அந்தச் சண்டைப் பகுதி சட்டென்று வெறிச்சிட மற்ற இடங்கள் கூட்டத்தில் தத்தளித்தது. அடுத்தக் கம்பார்ட்மெண்டிற்கு அவசரமாய் மக்கள் ஓடிச் செல்ல துவங்கினர்.

ஷாரதாவும் மற்றவர்களும் சுற்றும் முற்றும் கவனிக்கும் நிலையில் இல்லை. ரிஷா இன்னும் கூட ஷாரதாவை கவனித்தவளாய், அதே நேரம் அவள் சொன்னது போலவே அவருக்கும், அவளுக்கும் சம்பந்தம் இல்லாதது போல நின்றிருந்தாள். அவளது உடை அவளது உணர்வுகளை மறைக்க வெகுவாக உதவி கொண்டிருந்தது.

தடியன்கள் ஷாரதாவை செல்ல விடாமல் தடுத்துக் கொண்டிருக்க, அவரின் எதிர்தாக்குதல்களோ நிற்கவில்லை, மற்ற கம்பார்ட்மெண்டிலிருந்து வர வேண்டி இருந்த நபர்கள் வர முடியாத நிலையில் ஆறேழு நபர்கள் மட்டுமே அங்கு ஷாரதாவை சுற்றி இருந்தனர். அவரைத் தடுத்து நிற்பாட்டுவதும் விசாரிப்பதுமே அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தனர். கைகள் விடுபடும் போதெல்லாம் அவர்கள் ஷாரதாவால் தாக்கப் பட்டுக் கோண்டிருந்தார்கள்.

அவர்கள் நோக்கம் அவரை அடிப்பதொன்றாகத் தெரியவில்லை. செல்பவரை தடுக்கவும், அங்கேயே நிறுத்தி வைத்து ஏதோ விளக்கம் கேட்பதுமாக இருந்தது. முடி கலைந்து ஆக்ரோஷமாக நின்று கொண்டிருந்தார் ஷாரதா.

ஷாரதாவின் மிதியால் தட்டு தடுமாறி விழுந்த முதலாமவன் எழுந்து வரவும், மறுபடி ஏதோ வாக்குவாதம் நடக்க அடுத்தத் தாக்குதல் ஆரம்பித்தது.

மறுபடியும் ஷாரதா அங்கிருந்து நகர முயல, அவரது கைகளிரண்டுக்கும் இடையே அக்குளில் தன் கைகளை விட்டுப் பின் மண்டைப் பகுதியில் கோர்த்துக் கொண்டான் ஒருவன். தலையை நிமிர்த்தவே இயலாமல் அவன் பிடிக்குள் அவர் மாட்டிக் கொள்ள அவரைத் தொட மற்றவன் அருகில் வர, ஷாரதா தன் இருகைகளையும் முன்னே நீட்டி ஒன்றையொன்று இறுக்கமாய்க் கட்டிக் கொண்டு, தன் நெற்றியை அழுத்தி பலமாய்ப் பின்பக்கம் இடித்து, இரு கைகளையும் அதே வேகத்தில் இருபுறமும் இறக்க அவரைப் பிடித்தவனின் கைகளினின்று விடுபட்டார்.

தரையில் ஓங்கி வலக்காலை மிதித்து, இன்னும் தன்னைப் பிடித்தவன் பின்னால் நிற்க அவன் காலுக்குள்ளாய் காலிட்டு இடறி விழச் செய்து தாக்க அவன் மண்டைக்குள் ஒரே நேரத்தில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தன.

சுழன்று, சுறன்று ஒவ்வொருவனாய் தாக்கிக் கொண்டு தற்காத்துக் கொண்டிருந்தவர் சட்டென்று இரெயில் நடுவழியில் நின்றிடவும் அனைவரையும் தள்ளிக் கொண்டு வெளியில் பாய்ந்தார்.

விடாதீங்கடா… வெறி பிடித்தவர்களாக அத்தனை பேரும் ஷாரதாவை துரத்திச் செல்ல, சற்று நேரத்தில் அந்தக் கம்பார்ட்மெண்டில் அமைதி சூழ்ந்தது. சண்டையைப் பார்த்து வாயடைத்துப் போன அத்தனை பேர்களும் உடனே சலசலக்க தொடங்கினர்.

வோ இதர் ஹீ தோ பைட்டி தீ (இங்கேதானே அவள் அமர்ந்திருந்தாள்) உஸ்கே சாத் ஏக் அவுர் லட்கீ பீ தீ (அவளோடு இன்னுமொரு பெண்ணும் இருந்தாள்)… ரிஷாவின் அருகில் இருந்தவர்கள் புர்காவில் இருந்தவளை அறிந்து கொள்ளாமல் பேசிக் கொண்டிருக்க, நடந்தவற்றின் பிரமிப்பு, அதிர்ச்சி அகலாமல் சண்டை நடைப் பெற்ற இடத்தையே வெறித்துப் பார்த்தவாறு இருந்தன ரிஷாவின் கண்கள்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here