5. துரத்தும் நிழல்கள்

0
489
துரத்தும் நிழல்கள்

அத்தியாயம் 5

Rifel: மரைகுழல் துப்பாக்கி அல்லது புரிகுழல் துமுக்கி (rifle) என்பது ஒரு சுடுகலன் ஆகும். இது தோளில் வைத்துச் சுடுவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டதும், அதன் குழலில் சுருளை வடிவில் புரி குடையப்பட்டிருக்கும். சுருக்கமாக, நீளமான குழாயும், அதன் உள்ளே சுருளை வடிவப் புரி குடையப்பட்டது மரைகுழல் துப்பாக்கி எனப்படும்.

அறிவில்ல உனக்கு? ஒதுங்கி நிக்காம ஓடி வர்ற, என் பின்னால அத்தனை பேரும் ஓடி வந்துட்டு இருக்காங்க… நான் என் உயிர காப்பாத்துறதா? இல்லை உன்னைப் பார்க்குறதா? இந்தப் பொண்ணுங்களுக்கே யாராவது ஹீரோ வந்து காப்பாத்தணும்னு நினப்பு.

ஆம்பளைங்க முன்னேறாம போறதுக்குக் காரணமே இவங்கதான்… விடாமல் பொறிந்துக் கொண்டிருந்தவனை ஆத்திரம் மிக முறைத்துக் கொண்டிருந்தாள் ரிஷா.

தன் முன் நின்றுக் கொண்டு… விடாமல் பொறிந்துக் கொண்டிருந்தவனை வெட்டவா குத்தவா? என ஆத்திரம் மிக முறைத்துக் கொண்டிருந்தாள் ரிஷா.

சட்டென்று அவளுக்குப் பேச்சு எழவில்லை. இப்போது அவள் மனதிற்குள்ளாகப் பயம் எழுந்திருந்தது. ரயிலில் இருக்கும் போது ஷாரதாவுக்கும் அந்த முரடர்களுக்கும் நிகழ்ந்த அந்த வாக்கு வாதமும், ஷாரதாவின் தாக்குதல்களும் அதில் ஷாரதா தப்பிச் செல்லுவதையும் அவள் பார்த்திருக்க, இனி எதுவும் ஆபத்து இல்லை என்று அவள் எண்ணியிருந்தாள்.

தன்னை நெருங்கி சட்டென்று பாய்ந்த அந்தத் தோட்டா குறித்து எண்ணுகையிலேயே அவள் உடல் சிலிர்த்து அடங்கியது.

யார் சுடுகின்றார்கள்? என்று எதிர்த்து நின்று பாராமல் மனதில் எழுந்த பயத்தைத் தாண்டி, இரண்டு பைகளையும் தூக்கிக் கொண்டு அவள் ரயில்வே போலீசாரை நோக்கி ஓடி வந்ததே அவளைப் பொருத்தவரையில் மிகப் பெரிய விஷயம்.

அது தனக்கான ஆபத்து என்று ரிஷா எண்ணியிருக்க இந்தக் குள்ள கத்தரிக்கா தன்னைத் தர தரவென இழுத்துக் கொண்டு வந்து மும்பை லோக்கல் இரயிலில் ஏற்றி விட்டதோடு நில்லாமல், இவளிடம் வளவளவென்று அர்த்தமற்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, எதிரில் நின்று அர்த்தமற்று பேசுகின்றவனை ரப் ரப்பென ஐந்தாறு அறைகள் விட்டால்தான் என்ன? எனக் கை துறுதுறுத்தது. தன் நிலை புரிந்து தன்னை அவள் அடக்கிக் கொண்டாள்.

பதில் பேசாமல் தன்னை முறைத்துக் கொண்டிருப்பவளைப் பார்த்திருந்தவன் ஒன்றும் குள்ள கத்தரிக்காய் எனும் அளவு இல்லை. ஐந்தேகால் அடியில் இருந்தான். மாநிறமும், உருண்டு திரண்ட புஜங்களும் கொண்டவனாய் சுருங்கச் சொல்லப் போனால் நீளமாக இல்லாமல் அகலமாக இருந்தான். இன்னும் சுருங்கச் சொல்லப் போனால் செவ்வகமாக இல்லாமல் சதுரமாக இருந்தான்.

முட்டைக் கண்களும், சின்ன மீசையுமாய், வீராவேசமாய்ப் பேசினாலும் அவன் முகமே, “ நீ அதுக்குச் சரிப்பட்டு வர மாட்ட” எனும் விதமாய் அவனைக் காலை வாரி விட்டுக் கொண்டிருந்ததை அவன் உணரவில்லையோ, என்னவோ?!

என்ன நான் பேச பேச பதில் சொல்ல மாட்டேங்கிற? திமிரா?

மறுபடி மறுபடி அவளிடம் எகிறினான். அமைதியாய் இருந்தால் அடங்கிப் போவார்கள் என்று பயப்புள்ளைக்கு யாரோ தப்புத் தப்பா சொல்லிருப்பாங்க போலிருக்கு. “வொய் ப்ளட்? சேம் ப்ளட்” வடிவேலாக மாறி மாத்து வாங்க போறது அவனுக்குத் தெரியாமல் போயிற்று.

ரிஷாவிற்கு எப்போதுமே ஸ்டார்டிங்க் ப்ராப்ளம் மட்டும் தான், ஆரம்பித்து விட்டாளென்றால் அவளை நிறுத்தவே முடியாது. இது அவனுக்குப் புரியவில்லை.

ஏய் …

என்னாது ஏயா?.. ஜெர்க் ஆனான் அந்தக் குள்ள கத்திரிக்கா.

ஏண்டா டேய், எனக்கு அறிவில்லையான்னு கேட்டியே? உனக்கு அறிவிருக்காடா டால்டா?

??

உன் பின்னால அத்தனை பேரும் ஓடி வந்தா நீ ஏண்டா என் கையைப் பிடிச்சி இழுக்கணும்?

“என்ன கைய பிடிச்சு இழுத்தியா?”

அவள் சொன்ன டயலாகை கேட்டதும் உடனே ஆஜராகி வடிவேலு மண்டைக்குள் மைண்ட் வாய்ஸில் அலட்டிக் கொண்டிருந்தார்.

அவன் தன் மண்டையை ஒரே உதறு உதறி, வடிவேலை தூக்கி எறிந்தான். எங்கே போனாலும், என்ன வேலை செஞ்சாலும் இவரு முன்னாடி வந்து நிப்பாரு. ஒரு சிச்சுவேஷனை விட்டு வச்சுருக்கிறீங்களா வடிவேலு சார்? எங்க போனாலும் பின்னாடியே வந்துகிட்டு ஹ்க்கும்… மனதிற்குள்ளாகப் பொருமி தீர்த்தான்.

ரிஷா எங்கே அவனை விட்டால் தானே? அவளது அர்ச்சனைகள் விடாமல் தொடர்ந்தன.

என்னது பொண்ணுங்களுக்கெல்லாம் ஹீரோ வந்து காப்பத்தணுமா? ஏன் நான் உன் கிட்ட என்னைக் காப்பாத்த சொல்லி கேட்டேனா? இல்ல நீ தான் ஹீரோவா? காமெடியன் மாதிரி இருந்திட்டு பேசற பேச்சப் பாரு.

கேட்டவன் முகம் சுருங்கினான்.

அதுக்கப்புறம் என்ன சொன்ன ஆம்பளைங்க முன்னேறாம போறதுக்கு நாங்கதான் காரணமா? ஏன் நீங்க முன்னேறாம இருக்க நாங்க எல்லோரும் உங்க காலை பிடிச்சோமா? இல்ல கையப் பிடிச்சோமா? நீயா வந்து என்னைக் கையப் பிடிச்சு இழுத்துட்டு வந்து பேசற பேச்சப் பாரு.

விட்டால் அடித்து விடுவாளோ? என ரிஷாவைக் குறித்து அவன் எண்ணிக் கொண்டிருக்கையில் பெருமளவில் நெருக்கடி இல்லாவிட்டாலும் இருந்த ரயில்வே பெட்டியில் சிலர் இவர்களைச் சுற்றி வந்து என்ன நிகழ்கின்றது? எனக் காண கூட்டமாகச் சேர்ந்து விட்டனர்.

க்யா ஹுவா பெஹன்? (என்னாச்சுமா தங்கச்சி?)

இஸ்னே குச் கந்தி ஹர்கத் கீ க்யா? (இவன் எதுவும் தப்பா நடந்துகிட்டானா?)

போலோ மை இஸ்கோ தோட் கே ரக் தேதா ஹீ ( நீ சொல்லும்மா நான் இவனை ஒரு வழி பண்ணிடுறேன்?)

கேட்டவாறு டர்பன் அணிந்த பஞ்சாபி ஒருவர் அருகில் வரவே தான் அதுவரை இந்தக் கு. க அதுதான் குள்ள கத்தரிக்காவிடம் இவ்வளவு நேரமும் தமிழில் பேசிக் கொண்டிருந்தது ரிஷாவுக்குப் புரிய வந்தது. அப்படின்னா இவன் தமிழா? அதுவரை பேசிக் கொண்டிருந்ததை மறந்து அவனிடம் கேட்டு வைத்தாள்.

ஏன்டா நீ தமிழா?

ஏற்கெனவே வாட்டசாட்டமான அந்தப் பஞ்சாபி இவனது எலும்புகளை எண்ணும் நோக்கத்தோடு “தோட்கே ரக் தே தா ஹீ” என்று சொனதிலிருந்தே அவனுக்குக் குளிர்காய்ச்சல் வந்த மாதிரி இருக்க, ரிஷா “ஏண்டா” என ஏக வசனத்தில் பேசவும் இன்னுமாய்க் கடுப்பானான். ஆனால், வாயைத் திறந்து ஒன்றும் சொல்லவில்லை. சொல்லும் நிலையிலும் அவன் இருக்கவில்லை.

ரிஷாவிற்குத் திடீரெனத் தமிழன் ஒருவனைக் கண்ட மாத்திரம் மொழிப் பற்று, இனப் பாசம் ஏகத்திற்கும் பீறிட்டு எழ, தன்னிடம் பதில் எதிர்பார்த்திருந்த அந்தச் சர்தார்ஜியிடம்,

நஹி பாய்சாப் யே தோ மேரா தோஸ்த் ஹை. இஸ்ஸே மை கபி பீ ஐசே ஹி பாத் கர்த்தி ரெஹ்தீ ஹூ. (இல்ல அண்ணா, இவன் என்னோட நண்பன். நான் எப்பவுமே இவன் கிட்டே இப்படித்தான் அதட்டி உருட்டி பேசிட்டு இருப்பேன்) எனச் சொல்லவும் நம்பாத பார்வை பார்த்து வைத்தார்.

அப்படித்தானே சொல்லுடா? நண்பா?

என்னாது நண்பனா? குட்டியா இருந்துட்டு இந்தப் பொண்ணு என்ன போடு போடுதுடா சாமி? வாயைப் பிளந்தான் அவன்.

அவன் காதுக்குள் “டேய் அடி வாங்கணுமா? ஆமான்னு தலையை ஆட்டுறியா மாட்டியா? குசுகுசுத்தாள்.

ஹா சர்தார்ஜி ஹம் தோனோ தோஸ்த் ஹை (நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் சர்தார்ஜி) எனச் சொன்னவன் தன் வயமில்லாமல் “நண்பேண்டா” என்றபடி அவளைத் தோளோடு இழுத்தணைக்க வரவும்,

10 ரூபாய்க்கு நடிக்கச் சொன்னா ஆயிரம் ரூபாய்க்கு நடிக்குது பாரு பக்கி , பக்கி”

என அவனை மனதிற்குள்ளாகத் திட்டிக் கொண்டு கடினமாய் முறைத்தாள் ரிஷா.

தன் ஓவர் ஆக்டிங்கின் தவறு புரிந்து ஹி ஹி என அவன் விலகவும், அவர்களைச் சுற்றி இருந்தவர்கள் விலகிச் சென்றனர்.

தேங்க்ஸ் என்றான் அவன்.

ம்ம் ச்சூ ச்சூ எனக் காக்கையை விரட்டுவது போல விரட்டினாள் அவள்.

போதும் போதும், நீ தமிழ் அதனாலதான் நான் உன்னைக் காப்பாத்தி விட்டேன். தமிழன் தனக்குள்ள சண்டை போட்டுக்குவான், மத்தவன் முன்னாடி விட்டுக் கொடுக்க மாட்டான்னு புரிய வைக்கிறதுக்குதான் இதெல்லாம் செய்ய வேண்டியதா போச்சு.

எதையோ பெரிதாய்ச் சாதித்தது போலக் கைகளைத் தட்டி விட்டுக் கொண்டாள் ரிஷா.

இப்போது முறைப்பது அவனது முறையாயிற்று.

உன்னைக் காப்பாத்துனதுக்கு எனக்கு இதெல்லாம் தேவைதான், இதுக்குத்தான் “பெண்புத்தி பின்புத்தி” ன்னு சொல்வாங்க.

ஏய்…. உறுமினாள் ரியா.

“க்யா ஹுவா பெஹன்ஜி” (என்னாச்சு தங்கச்சி?)

இப்போது இன்னொருவன் அவளருகில் வந்து அவர்களது வாக்கு வாதத்தில் அருகே வந்து கேட்க குள்ள கத்தரிக்காவோ கதறினான்.

“பின் புத்தி இல்ல? முன் புத்தி தான் முன் புத்திதான்” ரிஷாவைப் பார்த்துக் கதறினான், இப்போதோ அவள் வாயையே திறக்கவில்லை.

“ஹம் தோஸ்த் ஹை பாய்சாப்” ( நாங்கள் நண்பர்கள்) என்று அவனே சர்தாரிடம் சொல்லிக் கொண்டான்.

யே மதராஸி லோக் பீ ஹை நா? (இந்த மதராஸிகள் இருக்கிறார்களே?) என ஒருவன் கடந்து செல்லவும், இன்னொருவனும் “ஹா ரே சவுத் இண்டியன்ஸ் தோனோ பாத் கர் ரஹே ஹை.( தென்னிந்தியர்கள் பேசிக் கொள்கிறார்கள்) எனப் பேசிச் செல்ல அவர்களைத் தடுத்தான் நம் குள்ள கத்தரிக்கா…

வாட் மதராஸி மதராஸி? சவுத் இண்டியன் சவுத் இண்டியன்? வாட் டு யு மீன் பை மதராஸி ஆர் சவுத் இண்டியன்? தெர் ஆர் 4 டிஃபரன்ஸ் ஸ்டேட்ஸ் இன் சவுத் இண்டியா? ஆல் ஆப் தெம் ஹேஸ் டிபரெண்ட் லேங்குவேஜ் அண்ட் கல்ச்சர்.

கேரளா- மலையாளம்

ஆந்திரா- தெலுங்கு

கர்னாடகா- கன்னடா

தமிழ் நாடு – தமிழ்

அண்ட் அயாம் அத் தமிழியன் நாட் மதராஸி சம்ஜே?” எனப் பொரியவும் கேட்டுக் கொண்டு இருந்தவர்கள் தலையில் அடித்துக் கொண்டு விலகிச் சென்றனர்.

சற்று நேரம் முன்னர்த் தமிழின் புகழ் பரப்பிய ரிஷா தன்னைப் பாராட்டுவாள் என நினைத்து அவளருகில் செல்ல, அவள் இவனை ஒரு மார்க்கமாகவே பார்த்து வைத்தாள்.

உன் பேர் என்ன கு க?

கு க? அப்படின்னா?

அதை விடு உன் பேர் என்ன அதைச் சொல்லு?

ஏன் பேரு இந்தர்.

சரி இந்தர் நீ எப்பவுமே அப்படித்தானா? இல்ல இப்படித்தான் எப்பவுமேயா?

எப்படி?

இல்ல காரணமே இல்லாம சொற்பொழிவாற்றுறியே அதைக் கேட்டேன்.

சந்தித்த நேரம் முதலாய் கடுப்பேற்றிக் கொண்டிருப்பவளைப் பார்த்துப் பற்களை நற நறத்துக் கொண்டு நின்றான் இந்தர்.

அதைத் தெரிஞ்சுகிட்டு நீ என்ன செய்யப் போற?

இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே ட்ரெயின் அடுத்த ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டு இருந்தது.ஏற்கெனவே இவர்கள் வாக்குவாதத்தில் சில ஸ்டேஷன்கள் கடந்து சென்று விட்டிருக்க உள்ளே ஏறும் , வெளியே இறங்கும் வெகு ஜனக் கூட்டங்களைக் கண்டு கொள்ளாமல் வாக்குவாதம் செய்திருக்க,

சரி நான் இங்கேயே இறங்கிக்கிறேன். சம்பந்தமே இல்லாம இந்த ரயில்ல என்னை இழுத்து போட்டுகிட்ட, இல்லன்னா நான் இந்நேரம் பாதி வழி போயிருந்திருப்பேன்.

அவளது முறைப்பாடைக் கேட்டுக் கொள்ளாதவனாக,

நீ எங்கே போகணும்?

இவனிடம் எதற்காகச் சொல்ல வேண்டும் என்றெண்ணியவள் ஏதோ தோன்ற ‘அந்தேரி, சாத் பங்களா’ எனவும்,

அப்படின்னா இங்கே இறங்காதே, அடுத்த ஸ்டேஷன்தான் அந்தேரி. அங்கே இருந்து நீ செல்ல வேண்டிய இடம் கிட்டேதான்

சொன்னவனை ரிஷா நம்பாத பார்வை பார்க்கவும் இரயில் நிலையத்தில் நிற்க வெளியே எட்டிப் பார்த்தாள் ரிஷா. இந்த ஸ்டேஷன் பெயர் “வில்லே பார்லே“ என்றிருந்தது அடுத்த ஸ்டேஷன் தான் அந்தேரி எனத் தன் மொபைலை எடுத்து ரயில் நிலைய அட்டவணையைக் காண்பித்தான்.

இந்தர் காண்பித்த அட்டவணையைப் பார்த்து நம்பிக்கைக் கொண்டவள், கூட்டமே இல்லாத ரயில் குறித்து வியப்பாக இருந்தாள். இது சாயங்கால நேரம் அதான் சர்ச்கேட் போற ட்ரெயின்கள்லாம் கூட்டம் குறைவா இருக்கும். எனத் தானாகவே இந்தர் பேச,

லூஸ்டாக் ஆரம்பிச்சுட்டான்யா? என எண்ணிக் கொண்டாள் ரிஷா.

பழக்கமில்லாத ஊரில் தாய்மொழி பேசும் மனிதனைக் கண்டு கொண்டதாலோ என்னமோ? அல்லது அந்தத் துப்பாக்கி குண்டுகள் தன்னை நோக்கி வரவில்லை இந்த இந்தரை நோக்கியே வந்தன என்பதாலோ என்னவோ? அல்லது தான் செல்லவிருந்த இடத்திற்குப் போய்ச் சேர இன்னும் சில மணித்துளிகளே உள்ளன என்பதாலோ என்னவோ? அவள் மிகுந்த மன நிம்மதியோடு இருந்தாள். அவளது மன நிம்மதிக்கு ஆயுள் குறைவு என்பதை அவள் அப்போது அறிந்திருக்கவில்லை.

இந்தர்…

வெகு நாள் பழகியவளைப் போல அழைப்பவளை ஏறெடுத்துப் பார்த்தான் அவன். அவளது முகமும், அந்தப் பட்டுச் சருமமும், அழகும் அவனைத் தடுமாறச் செய்தது.

அவனும் ஆண்தானே? என்ன செய்வான்?

கூட்டத்திலும் வெகுவாகக் கதை கேட்கும் சுவாரசியத்தில் தன்னைக் கூப்பிட்டவளை அலட்சியமாகப் பார்த்தான்.

என்ன? எனக் கேட்டவனின் உதடுகள் எகத்தாளமாக வளைந்திருந்தன.

இல்ல உன்னை எதுக்கு அத்தனை பேரும் துரத்தி வந்தானுங்க? எதுக்குச் சுட்டானுங்க? ஹஸ்கி குரலில் மாறியிருந்தாள். கூட்ட நெருக்கடியில் தொலைத்து விடாதிருக்க, தன் இரண்டு பைகளையும் கையில் இறுக்கி பற்றிக் கொண்டாள்.

நீ இப்ப இந்தக் கூட்டத்தில ஊஞ்சலாடிட்டு இருக்கப்பவும் கதை கேட்கிற மூட்ல இருக்கிற போல?

ஆமாம் எனத் தலையசைத்தவளை அற்ப ஜந்துவே எனப் பார்த்தவன்.

ஆனா, நான் இப்ப கதை சொல்லுற மூட்ல இல்ல, எனக்கும் அந்தேரில தான் இறங்கணும், அதுக்கப்புறம் நீ யாரோ நான் யாரோ?

மிட்டாய் கேட்ட பள்ளித் தோழனிடம் முகம் திருப்புவதைப் போல ரிஷாவிடமிருந்து முகம் திருப்பி நின்று கொண்டான் இந்தர்.

சொல்லாட்டுப் போ. எனக்கென்ன?

ரிஷாவும் அவனைக் கண்டு கொள்ளவில்லை. அந்தேரி ஸ்டேஷன் வரவும் ஒருவர் முகத்தை ஒருவர் பாராமல் இறங்கினர். டாக்ஸி ஸ்டேண்ட் எங்கிருக்கிறது எனத் தேடி அந்த நெருக்கடியான இடத்தை விட்டு நகர்ந்துக் கொண்டிருந்தவளுக்கு,

நீ… நீ… ரிஷா பாப்பா தானே?

எனக் கேட்ட குரலை அடையாளம் கண்டு கொண்டவளாய் நிமிர்ந்தவள் சற்றுத் தொலைவில் தம்மையே பார்த்துக் கொண்டிருந்தவரைக் கண்டு உள்ளும் புறமும் கிடுகிடுவென நடுங்க, தான் வந்த வேலையை மறந்து இந்தர் சற்று முன்பு ஏறின பஸ் கண்ணுக்கெட்டிய தூரத்தில் நிற்க அதில் வெடுவெடுவென ஏறி அமர்ந்தாள்.

பஸ் கூட்டத்தின் நடுவே உர்ர் உர்ர் ரெனச் சப்தம் எழுப்பி ஆடி அசைந்து நகர்ந்து இரயில் நிலையத்தின் அருகிலிருந்த ஜன நெருக்கடி மிக்கப் பகுதியில் இருந்து விலகியதும் வேகம் எடுத்தது.


எங்கோ இருவர் அலைபேசி சம்பாஷனை

அவள தூக்கிட்டீங்களா?

பாஸ், எப்படியோ மிஸ் ஆகிட்டாங்க பாஸ்”

அதென்ன அந்த ####க்கு மருவாத வேண்டி கிடக்கு ஆகிட்டான்னு சொல்லு.

நீயெல்லாம் $$### சொன்ன வேலை கூடச் செய்ய முடியல த்தூ…

ஒரு அசிங்கமான கெட்ட வார்த்தையை மறுபடி உதிர்த்தவன். அவ எல்லாம் எப்பவே செத்துத் தொலைஞ்சிருக்க வேண்டிய பீடை. மூதேவி எத்தனை முறை முயற்சி செஞ்சும் பிழைச்சுடுறா? எப்படின்னு தெரியலியே?

ஏண்டா ###$$ கபோதிகளா? அதுதான் கத்த கத்தையா ரூபாய வாங்கித் தொலைச்சீங்கள்ல ஒரு பொம்பளைய உங்களால தூக்க முடில நீங்கல்லாம் $$###

இத்தனை செக்யூரிட்டிக்கு நடுவில நாங்க கன்(Gun)னோட ரயில்வே ஸ்டேஷனுக்குள்ளெ நுழைஞ்சு, சுட முயற்சி செஞ்சதே பெரிய விஷயம் சார். திடீர்னு யாரோ ஒருத்தன் வந்து அந்தப் பொண்ணை அந்த ஸ்பாட்லருந்து அழைச்சுட்டு போயிட்டான் பாஸ். கூட்டத்தில நாங்க போயிருந்தா மாட்டியிருப்போம், அதான் திரும்ப வந்துட்டோம். ட்ரேஸ் பண்ணிட்டிருக்கோம். இன்னிக்கு தூக்கிருவோம்.”

கதைய முடிக்கச் சொன்னா கதைச் சொல்லாதீங்க வெண்ணைகளா…

எதிர்முனை சட்டென்று துண்டிக்கப் பட்டதிலிருந்து ஆத்திரம் புலப்பட்டது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here