8. துரத்தும் நிழல்கள்

0
486
துரத்தும் நிழல்கள்

அத்தியாயம் 8

யார் நீ?

தன்னிடம் கேட்டவனிடம் வழி தெரியாமல் தொலைந்த பிள்ளைப் போலத் திருத் திருவென முழித்தாள் ரிஷா.

அவளிடம் தன் அடையாள அட்டையை நீட்டினான் இந்தர். அவனா இவன்? எனும் வியப்பு ஓங்க அவனைப் பார்த்தாள்.

நீ லாயரா இந்தர்?

ம்ம்… என்றான் அமர்த்தலாய்

வெறித்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தவளை அவன் குரல் அசைத்தது.

நீ யார்னு சொல்லவே இல்லியே?

நான்… நான் ரிஷா, ரிஷா சண்முகம் என்றாள் பதட்டமாக,
ம்ம்…. என்றவன் அவள் பேச தயங்குவதைப் பார்த்து அந்த டிரைவருக்குத் தமிழ் தெரியாதுன்னு நினைக்கிறேன். நீ பேசுவதற்குத் தயங்காதே என்றவன், சரி நான் முதலில் என்னைப் பற்றிச் சொல்லுறேன். அப்பதான் உனக்கு என் மேல் நம்பிக்கை வரும்.

நான் ஒரு லீடிங்க் லாயர் கிட்டே ஜீனியரா பணி புரிகிறேன். என்னோட லாயர் எனக்கு முதன் முதலா சக்ஸேனா கேஸை எனக்குத் தந்தார். தன் கீழே வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ஓரு ஸ்டாஃபை பல முறை வலுக்கட்டாயமாக வல்லுறவு செய்ததான அந்தக் கேஸ் எத்தனையோ பேர் எடுக்காமல் விட்டிருக்க, உண்மைக்குக் குரல் கொடுக்கிறதாக நினைத்து சவாலாகவே அந்தக் கேஸை எடுத்துக் கொண்டேன்.

நான் அந்தக் கேஸ் எடுத்ததிலிருந்து தன்னோட பணப் பலத்தால எத்தனையோ முறை அந்தக் கேஸ் சரியான முறையில் நடத்த விடாம அவர் முயற்சி செஞ்சாலும் அவரால என்னைத் தடுக்க முடியலை. அந்தக் கேஸ் என் முதல் கேஸ் ஆனதால் என்னிடம் இருந்த அதீத ஆர்வமோ? நீதியின் பால் நான் கொண்டிருந்த தணியாத தாகமோ என்னமோ? நான் ரொம்பவே முயற்சி செய்து சக்ஸேனாவிற்குத் தண்டனை வாங்கிக் கொடுத்திட்டேன்

என்றவனைப் பாராட்டுதலாகப் பார்த்திருந்தாள் ரிஷா.

ஆனால், என்னிக்கு அந்தச் சக்ஸேனா ஜெயிலுக்குப் போனானோ அன்னியிலிருந்து எனக்கு எம கண்டம், ராகு காலம் இன்னும் என்னென்ன கெட்டதோ அத்தனையும் ஆரம்பிச்சிடுச்சு. எங்கே போனாலும் ஆட்கள் அடிக்கத் துரத்தினானுங்க.

ஒரு தடவை என் வீட்டிலயே தாக்குதல் நடந்துச்சு. என் கூட இருந்த மத்த ரூம் மேட்ஸ் நீ வேற இடத்துக்குப் போன்னு கையெடுத்து கும்பிடற அளவுக்கு ஆகிடுச்சு. என்னோட பாஸ் அதான் அந்த லீடிங்க் லாயர் நம்ம வாழ்க்கையில இதெல்லாம் சகஜம் தான். முதல் கேஸே நல்ல பரபரப்பான கேஸா அமைஞ்சிடுச்சு, வாழ்த்துகள்னு சொல்லி எனக்கு லீவும், கையில பணமும் தந்து ஒரு மாதத்துக்கு எங்கேயாச்சும் கண்ணுல படாம ஒளிஞ்சிருன்னு சொன்னார்.

அதற்காக நான் இரயில் நிலையம் வந்த போது தான் அந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தது. அந்தத் துப்பாக்கிச் சூடு உன் உயிரை போக்குறதுக்காக உனக்கெதிராக நடந்ததுன்னு இப்பதான் எனக்குப் புரியுது, ஆனால் அப்ப எனக்கு இருந்த பயத்தில நான் ஓடிட்டு இருக்கிற பாதையில நீ நடுவில வர்றேன்னு எரிச்சலா தோணுச்சு அதான் உன்னை இழுத்திட்டு கூடவே கொண்டு போயிட்டேன்.
அப்போது எனக்கு வந்த ஆபத்தில் நீ மாட்டிக்கக் கூடாதுன்னு தோணுச்சு. ஆனால், இப்போ புரிந்த உண்மை என்னன்னா உன்னோட ஆபத்தில் நானே வாண்டடா தலையைக் கொடுத்திருந்து இருக்கிறேன்.

சரி அது என்னவாகவும் இருந்து விட்டு போகட்டும். கண் முன்னாடி ஒருத்தருக்கு ஆபத்துன்னு தெரிந்தும் உன்னை விட்டு விட்டு போக எனக்கு மனதில்லை.

என்ன செய்யறது? தமிழச்சியா வேற போயிட்ட” அவளை இலகுவாக்க கிண்டலாய் பேசியவனின் குரலில் நட்பு பாவனை இருந்தது. மேலும் தொடர்ந்தான்.

நான் சில வருடங்களாதான் மும்பையில் இருக்கிறேன். என் குடும்பம் இருப்பது தமிழகத்தில். என்னைப் பற்றி நான் ஏறத்தாழ எல்லாமுமே சொல்லி விட்டேன். என் மேல் நம்பிக்கை இருந்தால் உன்னைப் பற்றி விபரங்களை இனியாவது சொல்வியா ரிஷா?

ம்ம்க்கும்… குரலை சரிப்படுத்திக் கொண்டாள் ரிஷா.

இப்பத்தான்… ம்க்கும்… இப்பதான் என்னைச் சுற்றி ஆபத்து இருக்குன்னு நான் முழுமையா புரிந்துக் கொண்டேன்னு சொல்லணும்.

இத்தனை நேரமும் நடந்தது எல்லாம் என்னைக் கொல்வதற்கான முயற்சியாக இருக்க அதை உணராமல் நான் இருந்தது குறித்து ரொம்பவே அவமானமாக உணர்கிறேன் இந்தர்.

முதல்ல உனக்கு நன்றி சொல்லிக்கிறேன் இந்தர், கூடவே ஸாரியும்.

யார் எவருன்னே தெரியாத போதும் என் உயிரை ரெண்டு தடவை காப்பாத்திருக்க அதுக்கு ரொம்பத் தேங்க்ஸ். அப்பப்போ விளையாட்டுக்குப் பேசியிருந்தாலும் அனாவசியமா நிறைய நேரம் உன்னைக் கிண்டலடிச்சிருக்கிறேன் மன்னிச்சுக்கோ… ப்ளீஸ்.

ம்ப்ச்ச்… இப்ப இதெல்லாம் எதுக்கு? நீ முதல்ல என்ன பிரச்சனைன்னு சொல்லு? அதற்கு என்ன செய்யலாம்னு பார்க்கலாம்?

உனக்கே இத்தனை பிரச்சனை இருக்கிற போது நீ என்னைப் பற்றி யோசிக்கிற பார்த்தியா? ரொம்ப நன்றி… துளிர்த்த கண்ணீரை துடைத்தெடுத்தாள்.

இந்தர் அவளது வார்த்தைகளுக்காகக் காத்திருப்பதை உணர்ந்து பேச தொடங்கினாள்.

என்ன விஷயம்னு நீ என் கிட்டே கேட்கிற? ஆனா என்ன விஷயம்னு எனக்கே தெரியாதுன்னு சொன்னா நீ நம்புவியா?

ம்ம்… இந்தரின் நெற்றிச் சுருங்கி மறுபடி சீரானது.

எதுக்குன்னே தெரியாம என்னை எங்க ஊர் விட்டுத் தூரமா தனியாகவே வச்சிருந்தாங்க என் பெற்றோர்கள். 13 வயதிலிருந்து இப்ப வரைக்கும் நான் ஷாரதான்னு ஒரு லேடியோடு கூடத் தனியா டார்ஜிலிங்கில் படித்து வந்தேன்.

எப்பவாச்சும் அம்மா இல்லன்னா அப்பா என்னைப் பார்க்க வந்துட்டு போவாங்க, அதுவும் அவங்க ரெண்டு பேரும் என்னை ஒன்னு போலப் பார்க்க வந்ததே கிடையாது. தனித் தனியேதான் வருவாங்க. என்ன பிரச்சனை? நான் எதுக்குத் தனியா இருக்கிறேன்னு நான் கேட்காத நாளில்லை. ஆனா, சத்தியமா சொல்றேன் இந்தர் இன்னிக்கு தேதி வரைக்கும் எனக்குக் காரணமே தெரியாது.

தன் மன வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ள அனுசரணையானதொரு உள்ளம் கிடைத்து விட்டது என்று எண்ணியதாலோ என்னமோ அவளைக் கேளாமலே கண்களினின்று சுரந்து, அவள் மடியில் இருந்த பையில் விழுந்து பட்டுத் தெரித்தது கண்ணீர் .

2 நாளைக்கு முன்னாடி எனக்கு என்னோட கஸின் பிரதர் கிட்டே இருந்து போன் வந்தது. அம்மா அப்பாவுக்கு உடல் நிலை சரி இல்லாததாகவும் உடனே சென்னை வரும் படியாகவும் சொன்னாங்க.

ஷாரதா ஆண்டியும் அதே நேரம் கல்லூரிக்கு வந்து லீவு கேட்டுட்டு என்னைப் புறப்படச் சொன்னாங்க. நானும் சென்னைப் போகப் போறதா நினைத்து தான் அவங்களோட புறப்பட்டேன். ஆனால், ஷாரதா ஆண்டி என்னை அழைச்சிட்டு வந்தது மும்பை இரயிலில். இப்பன்னு இல்ல எப்பவுமே ஷாரதா ஆண்டிகிட்டே நான் எந்தவொரு கேள்வி கேட்டாலும் அவங்க என் கிட்டே சரியான பதில் அல்லது காரணம் எதுவுமே சொல்லியது கிடையாது.

அதனால அவங்க அழைச்சிட்டு போகிற மாதிரியே போகலாம் எப்படியாவது அம்மா, அப்பாவை பார்த்தா சரிதான்னு தோணினதால அவங்க கிட்டே விபரம் கேட்கவில்லை.

ஆனால், ஷாரதா ஆண்டி பாதிப் பயணத்திலேயே என்னை விட்டு பிரிவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. இன்றைக்கு மதிய வேளை இரெயிலில் அதுவும் மும்பை வருவதற்குச் சில மணி நேரங்கள் முன்பாகச் சில கற்றைக் காகிதங்கள் கொடுத்து , கூடவே நான் என்ன செய்யணும்னு என்ன செய்யக் கூடாதுன்னு சிலவற்றைச் சொல்லிக் கொடுத்து, என்னை உடையவே மாற்றிப் புர்காவை உடுத்த வைத்து அப்புறப்படுத்திட்டு சம்பந்தப் படாதவங்க மாதிரி என்னை விட்டு தள்ளி நின்னாங்க.

எதற்காக இப்படி நடந்து கொள்ளுறாங்கன்னு எனக்கு ஒன்னுமே புரியவில்லை. ஆனால், என்னுடன் இத்தனை வருடங்கள் சாந்தமே உருவாக இருந்த ஷாரதா ஆண்டிக்கு குங்க்ஃபூ எல்லாம் தெரியும் என்பதே நான் அதற்கு அப்புறமாகத்தான் அறிந்து கொண்டேன்.

அப்போது நடந்த சண்டையில் தான் ஷாரதா ஆண்டி என்னை விட்டு பிரிஞ்சாங்க? என்று இரயிலில் நிகழ்ந்தவற்றைக் கூறியவள். அவங்க என்னுடைய பாதுகாப்பிற்காகத்தான் என்னை இந்த விலாசத்துக்குப் போகச் சொல்லிருக்கிறாங்கன்னு புரிந்ததால், நானும் அங்கே போகத்தான் முயற்சி செய்தேன்.

நீ என்னை ஸ்டேஷனில் இறக்கி விட்டதும் நானும் டாக்ஸி பிடித்துப் போயிருந்திருப்பேன் தான் ஆனால், நான் யார் காரணமா இத்தனை வருடங்களா சிறை வாழ்க்கை வாழ்ந்தேனோ? அந்த ருத்ரபாண்டி அங்கிளை ஸ்டேஷனில் பார்த்ததும் எனக்குக் கையும் ஓடலை காலும் ஓடலை. எனக்கு இந்த மும்பையில் தெரிந்த ஒரே நபர் நீதான். அதனால் நீ ஏறிய பஸ்ஸில் ஏறி நானும் உன் பின்னாடி வந்தேன்.

நீ அந்த இருட்டில் பாதுகாப்பிற்காக ஒதுங்கி உட்கார்ந்திருந்த போலிருக்கு. அதனால் நான் நீ என் பார்வையில் படுகிற மாதிரி இடம் பார்த்து உட்கார்ந்திருந்தேன். கொஞ்சம் நேரம் கழித்து உன்னிடம் வந்து உதவி கேட்கலாம்னு நினைச்சு இருந்தேன்.

பெருமூச்செழுந்தவளாய் தொடர்ந்தாள்.

எனக்கு என்னைப் பார்க்கவே கேவலமா இருக்கு, சட்டுன்னு என்ன செய்யணும் என்று என்னால தீர்மானிக்க முடியலை. உடனே பயந்து போய் இங்கேயும் அங்கேயுமா அலைஞ்சு நேரத்தை வீணாக்கினது மட்டும் இல்லாம உன்னையும் பிரச்சனையில் இழுத்து விட்டுட்டேன். என்னால உனக்குத் தொந்தரவு தான் மன்னிச்சிரு இந்தர்.

ம்ம்ம் அமைதியாக இருந்தவன்.

அதை விட்டிரு, நானும் தான் உன்னைப் பார்த்ததும் ஏதேதோ பேசிருந்தேன், விட்டிரு …அண்ட் டோண்ட் வொர்ரி ரிஷா இனி உன் பிரச்சனை உன் பிரச்சனை இல்ல, நம்ம பிரச்சனை.

ப்ரெண்ட்ஸ், அவன் நீட்டிய கையை ஆதூரமாக பற்றிக் கைக் குலுக்கிக் கொண்டாள்.

ப்ரெண்ட்ஸ் என அவனிடம் பதில் சொன்னவளின் முகம் வெகுவாய் மலர்ந்திருந்தது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here