9. துரத்தும் நிழல்கள்

0
525
துரத்தும் நிழல்கள்

அத்தியாயம் 9

ரிஷாவும், இந்தரும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். இந்தர் ரிஷா கூறியவற்றை அசைப் போட்டவாறு இருந்தான். அவன் மனதில் ஒருவிதமான பயம் சூழ்ந்திருந்தது. தனக்கு ஒரு ஆபத்து என்று இருந்த போது கூட அவனுக்கு அத்தகைய ஒரு எண்ணம் தோன்றி இருக்கவில்லை. எதுவானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவில்தான் இருந்தான். ஆனால், தன் எதிரில் ஒருவளின் உயிரைப் பறிக்க இத்தனை பேர் துரத்துகிறார்கள் என்ற போது அவனால் அதனைச் சுலபமாய் எடுத்துக் கொள்ள முடியவில்லை.

அவனுள் இருந்த மனிதாபிமானம் அவளை இந்த இக்கட்டினின்று விடுவிக்கச் சொல்லிக் கொண்டிருந்தது. அவள் கூறியவற்றை அசைப் போட்டவனுக்கு மனதில் சில கேள்விகள் எழுந்தன.

ஏன் ரிஷா அப்படின்னா அந்த ருத்ரபாண்டி தான் உன்னைக் கொல்ல ஆள் விட்டுருப்பார்னு நினைக்கிறியா?

ம்ம்ம்… அப்படித்தான் நினைக்கிறேன் இந்தர், அவர் பணத்துக்காக அந்தச் சின்னப் பையனை கொன்னுட்டார். என்னையும் கொன்னுடுவார். இத்தனை பேர் என்னைக் கொல்ல துரத்துராங்கன்னா… அதற்குக் காரணம் அவரா தான் இருக்கணும். குனிந்து தலையை மடியில் ஊன்றி இருந்த கைகளுக்குள் புதைத்துக் கொண்டாள்.

அவர் உன்னைக் கொல்லுறதானா அதுக்கு என்ன மோடிவா இருக்கும்?
வேறென்ன காரணம் இந்தர். SKR Garments பார்ட்னர்ஸ் 3 பேர். அதில் எங்க அப்பாவுக்கும், அந்தக் கனகவேல் அங்கிளுக்கும் ஒவ்வொரு பிள்ளைங்க. கனகவேல் அங்கிள் பையனை கொன்னாச்சு, அதுக்கப்புறம் என்னையும் தீர்த்துக் கட்டிட்டா அந்தக் கார்மெண்ட்ஸ் முழுவதுமே அவர் கைக்குள்ள வந்திடும்ல.

எனக்கு இதில் ஒரு சில கேள்விகள், சந்தேகங்கள் இருக்கு ரிஷா.அந்த பையனை கொன்னது ருத்ரபாண்டியா இருந்தா இந்நேரம் அவர் ஜெயிலில் இருந்திருக்கணுமே?

அது என்ன ஆச்சு என்று எனக்கு விபரம் தெரியாது இந்தர்? என்னைத் தான் அந்தச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே டார்ஜிலிங்க் அனுப்பிச்சிட்டாங்களே. ஒருவேளை அவர் அந்தச் சின்னப் பையனை சாமார்த்தியமா சாட்சிகள் இல்லாம கொலை செய்து விட்டு, தான் அதில் மாட்டிக்காம தப்பிச்சிருப்பாராக இருக்கும்.

ஒருவேளை சட்டத்தின் முன் மாட்டிக் கொள்ளாத அந்தக் கொலையாளி பார்வையில் நான் இருந்தால் என்னைப் பாதுகாக்க முடியாது என்பதற்காக என்னைப் பாதுகாக்க, என் பெற்றோர் என்னை அவர் பார்வையில் படாமல் தலைமறைவாக வைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

என்ன இருந்தாலும், ஒருவேளை ஒருவேளை என்று நீ சொல்வதெல்லாமே எல்லாமே உந்தன் யூகத்தின் அடிப்படையில்தான் என்று நான் சொல்கிறேன், உண்மையா இல்லையா?

ம்ம்ம்… தயங்கியவள் உண்மைதான் ஒத்துக் கொண்டாள்.

எப்போதுமே ஒரே திக்கில் சிந்திக்கக் கூடாது ரிஷா. நாம் யோசிக்காத கோணத்திலும் சில உண்மைகள் கிட்டலாம் இல்லையா?

ம்ம்… நீ சொல்வது கூட உண்மைதான் இந்தர். தன் குரல் மெலிய பேசியவள், “கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஏன் எதற்கு என்றே புரியாமல் நான் சிறைவாசம் போலவே என் குடும்பத்தைப் பிரிந்து இருந்திருக்கிறேன் இந்தர். எனது 13 வயது முதலாக எனக்குத் தெரிந்த ஒரே காரணம் இது தான். நான் இதையே மனதிற்குள்ளாக உருவேற்றி வந்திருக்கிறேன். அதனால் இதைத் தாண்டி என்னால் சிந்திக்க முடியவில்லை.

ம்ம்ம்… உன் பெற்றோராவது காரணம் சொல்லி இருக்கலாம். இப்படி ஒரு இக்கட்டான நிலையில் மாட்டுவாய் என்று அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.

இந்தர் சொன்னதைக் கேட்டது பெற்றோரை எண்ணி ரிஷாவிற்குப் பெருமூச்செழுந்தது,

அவர்கள் சொல்லியிருந்தால் நான் எதற்கு இவ்வளவு குழப்பங்களோடு அலையப் போகிறேன்? எங்கே செல்ல வேண்டும்? ஏன் செல்கிறேன்? எதற்காக என் பின்னால் இத்தனை பேர் என் உயிரைப் பறிக்கத் தேடுகிறார்கள் ஒன்றும் புரியாமல் பைத்தியக்காரியைப் போல அலைந்து கொண்டிருக்கிறேன்.

வெகுவாக உணர்ச்சி வசப்பட்டிருந்தாள் ரிஷா.

நட்பாய் அவள் புறங்கையைத் தட்டிக் கொடுத்தான் இந்தர்.
நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் சுதாரித்துக் கொண்டாள். புன்னகைக்க முயன்று தோற்றாள். முகம் இறுகிக் கிடந்தது. கண்களுக்குள் கலக்கத்தின் மிச்சங்கள்.

இந்தப் பெண்ணின் மனக் கலக்கங்களைத் தீர்க்க வேண்டும் என்று இந்தர் மனதில் சந்தித்தது முதலாய் தோன்றுவது போலவே அதிகமான உந்துதல் எழுந்தது.

மனம் சோர்ந்து இருந்தவளை சகஜமாக்க முனைந்தான். டாக்ஸிக்காரர் வழி அங்கங்கே கேட்டுப் பயணித்துக் கொண்டிருந்தார்.

அதையெல்லாம் விடு ரிஷா. இப்ப உன்னோட உட்பி-யை பார்க்கப் போற, ரிலாக்ஸ்.

மிஸ்டர் பிரபாகர் இதோ உங்க வருங்கால மனைவி வராங்க பத்திரமா பார்த்துக்கோங்க… எனக் காற்றில் கூறியவனை முகம் சுளித்துத் தன் விருப்பமின்மையைத் தெரிவித்தாள் ரிஷா.

ஏன்மா ஏன்? உனக்குன்னு உங்க அம்மா, அப்பா ஒரு சிறந்த அடிமையைத் தான் தேர்ந்தெடுத்து இருப்பாங்க. எதுக்கு இந்த டென்ஷன்?

போடா… என்றவளின் முகம் சற்று இலகுவாகி இருந்தது.
இதோ நாம இப்போ இடத்தை நெருங்கிட்டோம். இனி பிரச்சனை எதுவும் இருக்காது ரிஷா பயப்பட வேணாம் ஓகே. என்னோட கார்ட் தரேன். நீ எப்ப வேண்டும்னாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம். எனக்கு ஒரு நண்பன் டிடெக்டிவா இருக்கான். அவனும் தமிழ்தான் முறுவலித்தவன். அவன் பெயர் ரிஷி. இன்னிக்கு உன்னை உன் மாமியார் வீட்டில பத்திரமா விட்டுடறேன்.

நாளைக்குப் பிரபாகரை அந்த அட்ரஸீக்கு வரச்சொல்லு, யார் பிரச்சனை செய்யுறான்னு பார்ப்போம். உன்னோட அம்மா அப்பா விபரம் எப்படியும் பிரபாகருக்குத் தெரிஞ்சிருக்கும். இதோ இப்போ கொஞ்ச நேரத்தில் உன்னோட பிரச்சனையெல்லாம் தீர்ந்து நீ பத்திரமா இருக்கப் போகிற, அதைப் பற்றி மட்டும் நினை. மத்ததை எல்லாம் தூக்கிப் போட்டுடு ஓகே.

ரிஷாவின் முகம் மலர்ந்தது.

ம்ம்…. என்றவளாய் தலையை ஆட்டினாள்.

மும்பை ரொம்பப் பரபரப்பா இருக்கும்னு சொல்வாங்க, இங்கே என்னன்னா அமைதியா இருக்கு.

கொஞ்சம் போஷ் (posh) ஏரியால்லாம் இப்படி அமைதியாதான் இருக்கும் ரிஷா. மிடில் க்ளாஸ் மக்கள் இருக்கிற இடங்கள் தான் ஜன சந்தடியா இருக்கும். இங்கே ரோட்டில் பார்த்தியா கார் தவிர ஆள் நடமாட்டமே இல்ல. பையை எடுத்துக்கோ ரிஷா, உன்னை விட்டுட்டு இதே டாக்ஸில திரும்பப் போயிடுவேன். சட்டுன்னு திரும்பிப் போக வண்டி கிடைக்கா விட்டா அது ஒரு கஷ்டம்.

ம்ம் எனக் கேட்டுக் கொண்டாள்

சரி வா உன்னை விட்டுட்டு போறேன் எனத் தன் கையில் அவள் பையை எடுத்துக் கொண்டான். குனிந்து தான் வருவதாக டாக்ஸி ஓட்டுனருக்குச் சொன்னான்.

கைப்பையோடு இறங்கியவளை நின்று நிதானமாய்ப் பார்த்தான்.
என்ன? என்றாள் அவள்.

இவ்வளவு பெரிய கார்மெண்ட் ஓனர் பொண்ணு நீ. இவ்வளவு சிம்பிளா இருக்கியே. தங்கம், வைரம்னு மின்ன வேணாமா?

இப்ப நான் இருக்கிற டென்ஷன்ல இந்தக் கேள்வி ரொம்ப முக்கியம்…. போவியா…

அவனை அதட்டி விட்டு அவனோடு முன்னேறிச் சென்றாள்.

அந்த உயர்ந்த பல மாடிக் கட்டிடத்தின் செக்யூரிட்டி கேபினை இருவரும் அணுகினர். டாக்ஸி டிரைவர் திரும்பச் செல்ல வசதியாகத் திருப்பத்தில் எதிர்புறமாக வண்டியை எடுத்துச் சென்று இந்தர் வருவதற்காகக் காத்திருந்தார்.

அந்தப் பில்டிங்கின் நுழை வாயிலில் கார்கள் ஒவ்வொன்றாய் உள்ளே சென்று கொண்டிருந்தன.

ரிஷாவிடமிருந்த விசிட்டிங் கார்டை எடுத்துச் செக்யூரிடியிடம் நீட்டினான்.

மிஸ்டர் பிரபாகரன் சி விங்க் பிப்த் ப்ளோர். ஹமே வஹா ஜானா ஹை. ( C wing 5வது மாடியில் இருக்கும் மிஸ்டர் பிரபாகரனை சந்திக்க வந்திருக்கிறோம்?)

இவர்களை வினோத ஐந்து போலப் பார்த்த அந்தச் செக்யூரிட்டி விசிட்டிங் கார்டை வாங்கியவர் தானும் நன்றாகப் பார்த்து விட்டு. அருகாமையிலிருந்தவரை அழைத்தார்.

கோயீ பிரபாகரன் நாம் கா பந்தா அப்னே பில்டிங்க் மே ஹை க்யா? ( நம் பில்டிங்கில் பிரபாகரன் என்று யாராவது இருக்கிறார்களா என்ன?)

அடுத்தவன் கார்டை பார்த்துவிட்டு ,

‘ நஹி ஐசா கோயி நஹி ஹை ( அப்படி யாரும் இங்கு இல்லை) என்றான்.

இதென்னப்பா இப்படிச் சொல்றாங்க? ரிஷா சோர்ந்தாள்.

ரிஷா டோண்ட் வொர்ரி, ஒருவேளை அவங்க பேரண்ட்ஸ் பெயரில் வீடு இருக்கலாம், இவங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் இல்ல. எதுக்கு டென்ஷன் ஆகிற?

அவளுக்குச் சொன்னவன், செக்யூரிட்டியிடம் திரும்பி,

“மை உன்கா பிதாஜி கா நாம் பூல் கயா ஹூ, சிர்ப் உன்கா நாம் யாத் தா, ஹம் ஜாகே மில் கே ஆஜாதே ஹை’ ( நான் பிரபாகரனின் தந்தையின் பெயரை மறந்து விட்டேன், ஆனால், இந்த விலாசம் தான். நாங்கள் போய்ப் பார்த்து வருகின்றோமே?)

இருவரின் பெயர், போன் நம்பர் எல்லாம் எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை உள்ளே அனுமதித்தனர்.

வெகு பிரமாதமாக இருந்தது அந்தக் கட்டிடம், சற்றுத் தூரம் நடந்ததும் லிப்ட் கண்ணில் படச் சொடுக்கி விட்டு அமைதியாக நின்றிருந்தார்கள்.

சற்றுக் கலக்கமாய்த் தன்னருகே நின்றவளை பார்த்தான் இந்தர்.
என்னாச்சு?

அந்த போர்ட்ல பார்த்தியா? எந்தத் தமிழ் பெயரும் இல்லை. நாம தவறான விலாசத்துக்கு வந்திட்டோமோ?

இல்லியே பில்டிங்க் பேரைப் பாரேன், இதுவே தான்.

ம்ம்…

லிப்ட் அரக்கனைப் போல வாயைப் பிளந்து இவர்களை விழுங்கி 5 வது மாடியில் துப்பிச் சென்றது.

இரண்டே குடும்பத்தினர் உபயோகிக்கும் தளம் அது.

முதலில், அனந்த ராவ் எனும் பெயர் கொண்ட வீட்டின் காலிங்க் பெல்லை தட்டினான்.

ஏ இந்தர் பேரை பார்த்தாலே தெரியலையா? இவங்க தமிழ் இல்லைனு போயிடலாம் வாடா…

சும்மா இரு…

கதவை திறந்தது நடுத்தர வயது பெண்மணி…

பாபி யஹான் பே பிரபாகரன் ரெஹதே ஹை க்யா? (அண்ணி இங்குப் பிரபாகரன் என்று யாராவது இருக்கிறார்களா?)

அவர்களை ஸ்நேகமற்ற பார்வை பார்த்தவர், “ நஹி” என்று சட்டென்று கதவை பூட்டிக் கொண்டார்.

சொன்னேன்ல… ரிஷாவுக்கு அந்தச் சடார் கதவடைப்பு முகத்தைக் கன்றச் செய்தது. அடுத்த வாயிலுக்குச் சென்றால் அது ஏற்கெனவே பூட்டி இருந்தது. சட்டென்று அந்த விசிட்டிங் கார்டை திருப்பிப் பார்த்தான்.

மறுபடி போன் நம்பரை டயல் செய்தான், இன்னும் போன் எடுக்கப் படவில்லை டூ டூ டூ…என இசைப் பாடி கடுப்பேற்றியது.

அவனோடு கூட அவளும் படிகளில் இறங்கலானாள்.

உன் கிட்ட போன் இல்லைன்னு சொன்னப்போ ரொம்பவே அதிர்ச்சியா இருந்தது ரிஷா. ஆனா உனக்குப் போனே கொடுக்கலைன்னா கூட உன் நன்மைக்காகத்தான் இருக்கணும். இப்போல்லாம் போன் இருந்தா அதை ட்ரேஸ் செஞ்சு ஒருத்தரை சுலபமா கண்டு பிடிச்சிடலாம்.

நாம எங்கே போறோம்? என்ன செய்யறோம்? எல்லாம் நாம போன் மூலமா ஈஸியா ஆக்ஸ்ஸ் ஆகிடும்.

அப்படியெல்லாம் கூட ஒருத்தரை கண்காணிக்க முடியுமா? ஆச்சரியத்தில் விழி விரித்தாள் ரிஷா.

ம்ம் புன்னகைத்தான் இந்தர், ஒருவேளை இதுக்காகவே உனக்குப் போன் கொடுக்காம வைத்திருக்கலாம். எல்லாம் உன் பாதுகாப்புக்காகத்தான் இருக்கணும்.

தான் வெகு நாட்கள் போனுக்காகக் கேட்டு அடம் பிடித்து இருந்ததையும் , பின்னர்க் கிடைக்காதென மனதை தேற்றிக் கொண்டதையும் நினைவில் கொண்டாள் ரிஷா. ஷாரதா ஆண்டியின் செயல்களின் உண்மையான அர்த்தங்கள் புரிந்து கொள்ள நமக்கு வெகு நாட்கள் ஆகும் போலவே என எண்ணிக் கொண்டாள். மதியம் வரை தன்னுடனே இருந்த அவரை மனம் தேடியது. அவர் பத்திரமாக இருப்பார் தானே? இருக்க வேண்டும் என மனம் வேண்டியது.

ஷாரதா ஆண்டி சொன்ன நபரைத் தேடி, அவர் சொன்ன விலாசம் வந்தும் அந்தப் பிரபாகரை கண்டு பிடிக்க இயலாமல் மறுபடி வழித் தெரியாத பயணியாய் நிற்க நேர்ந்தது குறித்து மனம் சோர்ந்தாள்
தன் சிந்தனைக் கூட்டுக்குள் சுருங்கிக் கொண்டவளை ஆதூரமாய்ப் பார்த்தான் இந்தர்.

செக்யூரிட்டி கேபினை நெருங்கி விட்டிருந்தனர்.

இப்ப என்ன செய்யறது இந்தர்?

உனக்கென்னம்மா கோடீஸ்வரி, பைவ் ஸ்டார் ஹோட்டல்ல கூடப் போய் ரூம் புக் பண்ணிக்கலாம். இதுக்கெல்லாமா மூஞ்சை இப்படி வச்சுப்ப?

ஹோட்டலா? முகம் சுளித்தாள்.

வேறு என்ன செய்யறது? இங்கே பக்கத்தில நல்லதா ஹோட்டல் பார்த்து உன்னைத் தங்க வச்சுட்டுப் போறேன். நாளைக்கு உன் அம்மா, அப்பாவை ரிஷி மூலமா தேடணும்னு பார்த்தேன். இப்ப என்னடான்னா உன்னோட பியான்ஸியையே காணோம். காலையில் எல்லோரையும் தேடுவோம். இப்ப போய் ரெஸ்ட் எடுத்துக்க.
எனக்கு என்னோட அம்மா அப்பாவை தேடுனா போதும் ஓகே. அந்தப் பிரபாகர் யாரோ எவரோ? அவரை நான் எதுக்குத் தேடணும்? முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

செக்யூரிட்டி கேபினில் Out time எழுதி வெளி வந்தனர்.

‘தாயே மன்னிச்சிடுமா. உங்க அம்மா அப்பாவை நாளைக்கே தேடி கண்டு பிடிச்சுக்கலாம். இப்ப மலை இறங்கிடு ஆத்தா’ அவளைப் பார்த்து விளையாட்டாய் கும்பிட்டவன். அவளோடு சாலையைக் கடந்து எதிரில் நின்ற டாக்ஸியை நோக்கி பயணிக்க முயல சட்டென்று அவன் கையைப் பிடித்துக் கொண்டு எதிரில் வந்த காருக்கு இடையே பாய்ந்து நுழைந்து, சாலைக்கு அந்தப் புறம் சென்று அவசரமாய் டாக்ஸியில் அமர்ந்து அவனையும் உள்ளே அமரச் செய்தாள் கதவை உடனே இழுத்து பூட்டினாள்.

ரிஷா என்ன லூசாகிட்டியா நீ? இன்னிக்கு நீ என்னை இழுத்துட்டு வந்த வேகத்தில நாம கார்ல மோதி இருந்தோம்னா இன்னிக்கு செத்து, செத்து, நாளைக்குப் பாலுதான்….

இல்லன்னாலும் இன்னிக்கு செத்தா நாளைக்குப் பாலுதான்டா அங்கே பாரு…

அவள் நீட்டிய இடத்தைப் பார்த்தான், அதே பில்டிங்க் செக்யூரிட்டி வாயிலில் சில தடியன்கள் நின்றுக் கொண்டிருந்தனர். அதே தடியன்கள் ஜுஹீ பீச்சில் இவர்களைத் துப்பாக்கியோடு துரத்தியவர்கள்.

கலவரமாக அவளை நோக்கியவன்.

வில்லே பார்லே ஜானா ஹை பாய் சாப். காடி நிகாலோ (வில்லே பார்லே செல்ல வேண்டும் அண்ணா, வண்டியை எடுங்கள்) என்றான்.
எங்கே போறோம் இந்தர்?

ரிஷி ஆபீஸ்க்கு போறோம், ப்ரைவேட் டிடெக்டிவ் ரிஷி…

வண்டி வேகம் பிடித்தது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here