1. TKSN

2
1322

அத்தியாயம் 1

சென்னை

வழக்கம் போல அன்று சூரியன் காலையிலேயே தன்னுடைய வேலையில் மும்முரமாக இருக்க, வெயில் சுள்ளென்று அடித்தது. அது நடுத்தர குடும்பங்கள் வாழும் இருப்பிடம், கீழும் மேலுமாக ஐந்தைந்து அறைகள் எனக் கட்டப்பட்டு வாடகைக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

மேல் மாடியில் சில வீடுகளில் பள்ளி, வேலை என காலை நேர பரபரப்பில் ஆட்கள் இருக்க, ஓரத்தில் அமைந்திருந்த அந்த ஐந்தாவது வீட்டினின்று தோளில் மாட்டிக்கொண்ட பை சகிதம் அவசரமாய் வெளியே வந்து கதவை பூட்டிக் கொண்டு இருந்த பெண்ணுக்கு ஏதோ நினைவில் நிரடியது. உடனே பூட்டியக் கதவைத் திறந்து உள்ளே ஓடினாள்.

அங்கே, அவள் தேடிய மொபைலின் சார்ஜர் சுவற்றில் ஸ்விட்ச் போர்டில் சமர்த்தாய் காற்றில் அசைவாடிக் கொண்டு இருந்தது.

“ஹ்ப்பாடா, நீ ரொம்ப நல்ல பையன்டா வச்ச இடத்திலயே இருந்திருக்க பாரு… உம்மாடா உம்மா” கையால் முத்தங்களை எடுத்து சார்ஜரை நோக்கி பறக்க விட்டவள் அதனோடு பேசியவாறே அதை சுருட்டி தன் பெரிய பையினுள் திணித்தாள்.

‘சரி எதுக்கும் சரிப் பார்த்துக்கிறேனே’… என தனக்குள் பேசிக் கொண்டவளாக தனது பையை திறந்து சோதிக்கலானாள். அதனுள் சின்னதும் பெரியதுமான டிஃபன் பாக்ஸீகள் கண்ணை பறித்தன.

“ம்ம்… இந்த பாக்ஸ்ல மிக்சர், இதில ஸ்னாக்ஸ், இதில் காலை சாப்பாடு இட்லி, அந்த டப்பால சாதம், சாம்பார். இனி சமைக்கணும்னா காய் வாங்கணும் நோட் பண்ணு ஆலிஸ் நோட் பண்ணு…”

தனக்குள்ளேயே பேசிக் கொண்டவள் அதை உடனே தனது குட்டி நோட்டில் எழுதி வைத்து விட்டு தனது தோளையே தட்டிக் கொண்டாள்.

“நீ குட் கர்ள் டி”

………..

“ஓ உனக்கு 29 வயசாகப் போகுதோ? அப்படின்னா நீ கர்ள் இல்லையோ? பரவால்ல பரவால்ல உனக்கு 50 வயசே ஆனாலும், நீ எனக்கு கர்ள் தான்”

வீட்டிற்குள்ளாக வந்த வேலையை மறந்து கண்ணாடி முன் நின்று, “என் செல்லம்டி நீ, என் கண்ணுடி நீ” என தன்னைக் கொஞ்சிக் கொண்டு இருந்தவளை அலைபேசி அலாரம் அடித்து நினைவூட்டியது.

“அச்சோ ஆபீஸிக்கு லேட்டாச்சு, வேலையை விட்டுட்டு உன் கூட பேசிட்டு இருந்துட்டேனே?”

“தேங்க்ஸ்டா அம்மு” அலாரம் அடித்து தனக்கு நினைவூட்டிய மொபைலுக்கு நன்றி சொல்லி முத்தமிட்டாள். ஏற்கெனவே வணங்கி இருந்தாலும் கூட மறுபடியும் அவசரமாய் அங்கிருந்த அன்னை மரியாள் படத்திற்கு முன் நின்று “பை மம்மா… டாட்டா” என்றுச் சொல்லி பறக்கும் முத்தம் கொடுத்து, வீட்டை மறுபடியும் சுற்றி முற்றிப் பார்த்து,

“இத்தனூண்டு வீட்டுல என்னத்த மறந்து வைக்கப் போறேன்? … நீ நிம்மதியா பொறப்படு ஆலிஸீ” என தன்னை உற்சாகப் படுத்திக் கொண்டவளாக வெளியேறி தன் வீட்டை பூட்டிக் கொண்டு அடுத்த நான்கு வீடுகளை தாண்டி அதற்கடுத்து வந்த படிகளில் சடசடவென்று இறங்கினாள்.

பக்கத்து வீட்டு பொடியன் இன்னும் பள்ளி செல்லவில்லை போலும், “ஓய் அக்கா… படி உடைஞ்ச்சிரப் போகுது அமைதியா இறங்குங்க” என குரல் கொடுக்க

“அடிங்க’ என பதில் கொடுத்தவள் திரும்பியும் பார்க்காமல், “வரேன் டா பாய்” என்றவாறு இறங்கினாள்.

இந்த குடியிருப்பில் மேலும் கீழுமாக மற்றும் அடுத்தடுத்து இருக்கும் வீடுகள் அவளுக்கு எப்போதும் தனிமை உணர்வை கொடுக்காமல் அக்கம் பக்கம் எல்லாம் ஏதேனும் வேலைகள், அரட்டைகள் நிகழ்ந்துக் கொண்டிருக்க வெறிச்சென்றிருக்காமல் எப்போதும் எங்கேயாவது வேலையோ, பேச்சோ ஏதாவது நிகழ்ந்துக் கொண்டிருக்கும் அந்த சூழல் அவளுக்கு மிகவும் பிடித்தமானது.

பெரும்பாலான வருடங்களை பெண்கள் ஹாஸ்டலில் கழித்தவளுக்கு அங்கிருந்த இயந்திரத்தனம் சலித்துப் போயிருந்தது. அதனால் தான் இங்கு சில வருடங்களாக குடியேறி இருக்கின்றாள்.

தனது விருப்பம் போல சமைக்கவும், விரும்பும் நேரம் சாப்பிடவும், நட்புக்களோடு ஊர் சுற்றிப் பார்க்கவும், அக்கம் பக்கம் வாயடிக்கவும் என அவளுக்கு இங்கே எல்லாவிதத்திலும் மிகவும் பிடித்த வாழ்க்கைதான் …. ம்ம் ஒரு சிலவற்றைத் தவிர்த்து….

ஆரம்ப காலத்தில் தனியாக அறையெடுத்து தங்கிய போது பெண் தனியாக குடி இருக்கிறாள் என இரவுகளில் வந்து இவளது வீட்டின் கதவை தட்டிய காவாலிகள் ஏராளம் பேர்.

அவள் உள்ளுக்குள்ளாக பயந்து நடுங்கினாலும் கூட துணிவாக எதிர்த்தாள். அவசர போலீஸ் நூறை அழைத்ததும் சிலரது கொட்டம் அடங்கியது என்றால் எல்லாவிடமும் அதையே செய்ய இயலாமல் ஒரு சிலரை கண்டும் காணாமல் போய் கொண்டு இருக்கின்றாள்.

பெண் தெய்வங்களை வணங்கும் இந்த நாட்டில் ஒரு பெண் தனியாக வாழ்வதென்பது அத்தனை சுலபமா என்ன? ஏராளமான பிரச்சனைகளினின்று தப்பித்துக் கொள்ளவே இரவு வேலை இல்லாமல் பகல் வேலையாக அமைத்துக் கொண்டாள்.

தற்போது இந்த குடியிருப்பில் பாதுகாப்பு அதிகமே, வெளியாட்கள் வந்து வாலாட்ட இயலாது… எனினும் கூட…?

ஆலிஸ் எப்போதுமே பகல் ஷிப்ட் வேலை முடிந்து வந்த பின்னர் தனது வேலைகள் அனைத்தையும் முடித்து, துணிகளை துவைத்து காயப் போட்டு, சமைத்து, அக்கம் பக்கம் சற்று அளவளாவி, படுக்க செல்லும் முன்பாக துணிகள் காய்ந்திருக்கின்றனவோ இல்லையோ எல்லாவற்றையும் எடுத்து உள்ளே காயப் போட்டு விட்டு, பொருட்களை பத்திரப்படுத்தி, கதவை இறுக்கப் பூட்டிக் கொண்டு விடுவாள். அதன் பின் என்ன? தன் அறையில் இருந்து ஒரு சுவர் விடாமல் பேசுவதும், பாத்திரங்களோடு கூட அரட்டை அடிப்பதும், மனதில் உள்ளவைகளை எல்லாம் பகிர்ந்துக் கொள்வதும் அவளது வழமை.

குட்டி குட்டி வேலைகள் அனைத்தும் முடித்து சுத்தப்படுத்திக் கொண்டு, தூங்கச் செல்லும் முன்பாக சிறிய வயதிலிருந்து பெற்றோர்கள் பழக்கிய வண்ணம் பைபிள் வாசித்து, ஜெபமாலை ஜெபித்து உலகத்தின் எந்த கவலையும் அற்றவள் போல ஆழ்ந்த தூக்கத்தில் அமிழ்ந்து விடுவாள். இவை அனைத்தும்தான் அவளது அனுதின செயல்பாடுகள்.

பக்கத்து வீட்டு பையனுக்கு உற்சாகமாய் பதிலிருத்து இருந்தவள் இப்போது அந்த பெரிய படிகளில் இறங்கலானாள். இருவர் தாராளமாக கடந்து செல்லும் வண்ணம் பெரிய படிதான் அது. ஆலிஸ் எதிர்பாராத தருணம் எதிரில் குடியிருப்பின் கீழ் பகுதியில் குடும்பத்தோடு வாடகைக்கு இருக்கும் அந்த இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பன் ஈயென இளித்தவாறு வந்தான்.அவனது செய்கை எலும்புத் துண்டைப் பார்த்து எச்சில் ஒழுக்கும் தெரு நாயைப் போலவே இருந்தது.

ஆலிஸின் கைகள் அவனைக் கண்டதும் தன்னிச்சையாக தனது சுடிதாரின் துப்பட்டாவை சரி செய்தது. முன்பே சரியாக உடுத்தி இருந்தாலும் கூட இப்போது அதனை முழுக்க விரித்து போர்வை போல போர்த்திக் கொண்டது, எதிரில் நிற்பவனது லேசர் பார்வைகள் அப்படிப் பட்டதாயிற்றே?

“என்னம்மா ஆலிஸீ, ஆஃபீஸீக்கு புறப்படுறியா என்ன? நான் வேணும்னா என் பைக்ல உன்னை கொண்டு போய் விட்டு வரவா?” அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் குரல் மாற்றிப் பேசினான்,

அவளோ தனக்கு காது எனும் உறுப்பு உடலில் இல்லாததைப் போலவே பாவித்து, தலையை குனிந்தே அவனைக் கடந்தாள்.

“என்ன இப்ப எல்லாம் துணிகளை இராத்திரி நேரங்களில் வெளியே காயப் போட மாட்டேங்கிறியே? என்ன விஷயம்?”

வெட்கமற்றவனாக அவன் கேட்டாலும் இவளுக்கோ உள்ளூர கூசிப் போயிற்று. ஒரு நாள் நள்ளிரவில் ஏதோ சப்தம் எழ தூக்கம் கலைந்து என்னவென்று கதவின் ஓட்டையின் வழியில் பார்த்த போது அவன் இவளது உடைகளை இவளாகவே பாவித்தவனாக உன்மத்தம் பிடித்தவன் போல வெறித்துக் கொண்டு ஏதேதோ அருவருப்பாக செய்ததை கண்டாளே?

அந்த உடையை, உள்ளாடைகளை அதன் பின்னர் அணியவும் கூட அவளுக்கு மனம் துணியவில்லை. அதற்கப்புறமாக துணிகள் காய்கின்றனவோ இல்லையோ தான் தூங்க உள்ளறைக்கு வரும்போது அத்தனையையும் அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து விடுவாள். உள்ளறையிலேயே காய வைத்துக் கொள்வாள்.

நாய் குலைத்தால் திருப்பியா குலைக்கிறோம் எனும் எண்ணத்துடன் அவனது இத்தனை சீண்டலுக்குப் பின்னரும் ஆலிஸ் படிகளை கவனமாய் தாண்டிக் கொண்டிருந்தாள். இங்கிருந்து அவசரமாக கீழே சென்று பயணித்து அலுவலகத்திற்கு சென்று விட வேண்டும் இதுவே அவளது தற்போதைய ஒரே நோக்கம்.

அமைதியாய் கடந்து செல்கின்றவளை அவனோ விடாது சீண்டினான்.

“என்னதான் சொல்லு… முன்பக்கம் மட்டுமா? பின்பக்கமும் அடி தூளு. நாளுக்கு நாள் …” என தன் எதையோ வாய்க்குள்ளாக அசிங்கமாக முனகினான். “முன்னே விட்டு பின்னே நடக்குறது கூட பார்க்க குஜாலா தான் இருக்கு…” இன்னும் என்னென்ன சொல்லியிருப்பானோ?

“மஞ்சு அக்கா” … தன் கணீர் குரலில் அழைத்தாள் ஆலிஸ்.

“என்ன ஆலிஸ் பாப்பா” என்றவாறு உருண்டு திரண்ட ஒரு உருவம் கீழ் வரிசை வீடுகளில் ஒன்றிலிருந்து வெளி வந்தது. அவள் வேறு யாரும் அல்ல, குமரேஷின் மனைவிதான்.தங்கள் குலத்தை செழிக்க வைக்க வாரிசுகளைப் பெற்று, தானும் உயிர் பிழைத்து வர தான் பட்ட உடல் சிரமங்களால் இரண்டு சிசேரியன்களால் கொடி இடையாளாக இருந்தவள் கொடி படரும் மர இடையாளாகிப் பருத்துப் போயிருந்தாள்.

காலை எழுந்து தினம் மஞ்சள் தேய்த்து குளித்து, வீட்டு வேலைகளை அரக்கப் பரக்க செய்து, பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கும், அலுவல் செல்லும் கணவனுக்கும் நாக்குக்கு ருசியாக சமைத்துப் போட்டு, மிச்சம் மீதிகளை வயிற்றுக்குப் போட்டு வாழ்கின்ற இந்திய நாட்டு தெய்வீக தியாகப் பெண்களுள் அவளும் ஒருவள்.

மஞ்சு அடுத்தவருக்கு ஒரு துன்பம் என்றால் முன்னால் வந்து உதவுகின்ற குணம் கொண்டவள். அக்கம் பக்கம் நட்பு பேணும் குணம் திருவிழா நாட்களில் எல்லாம் சமைத்து ஆலிஸீக்கு பிள்ளைகளிடம் சாப்பாடு அனுப்பி வைப்பாள்.

மஞ்சு அளவிற்கு மிக ருசியாக சமைக்கத் தெரியாத ஆலிஸ் பதிலுக்கு சமைத்துக் கொடுத்து கொடுமை செய்யாத நல்ல பிள்ளையாய் குளு குளு கூழ் (ஐஸ்க்ரீம் தானன்றோ) ஃபேமிலி பேக் வாங்கி கொடுத்து விடுவாள். இந்த குளு குளு கூழ் விஷயத்தாலேயே மஞ்சுவின் பிள்ளைகளுக்கு ஆலிஸ் மிகவும் பிடித்தமானவள்.

மஞ்சு வெளியே வந்து, “என்ன ஆலிஸ் பாப்பா?” என வந்து கேட்கவும் ஆலிஸ் திரும்பி பார்த்தாள். அங்கே அது நேரம் வரையில் ஆலிஸின் பின்னழகை வர்ணித்துக் கொண்டிருந்த மஞ்சுவின் கணவன் குமரேஷை காணவில்லை.

குமரேஷிடம் தப்பிப்பதற்காக அழைத்தாளெனினும் வந்து நின்றவளிடம், ‘கால்வலி பரவால்லியா மஞ்சுக்கா?” என விசாரித்தாள்.

எதிரில் நிற்கின்றவளின் அன்பான விசாரிப்பில் மஞ்சுவின் முகம் மலர்ந்து விட்டது. இரண்டு நிமிடங்கள் தொடர்ச்சியாக மஞ்சுவின் பிரச்சனைகளை காது கொடுத்துக் கேட்டவள் அங்கிருந்து புறப்பட்டு அவசரமாக பயணித்த போதும் கூட அலுவலகத்திற்கு பத்து நிமிடங்கள் தாமதமாகவே போய் சேர்ந்தாள்.

2. TKSN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here