10. TKSN

0
924

தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!

அத்தியாயம் 10

“நான் நான் இப்ப வீட்டுக்கு போகட்டுமா?” சிறுபிள்ளையாய தடுமாறியவளை வாஞ்சையாய் பார்த்தவன். “உனக்கு எதுவும் யோசிக்கணுமா?” ஆம் என தலையாட்டினாள். ‘வீட்டிற்குச் சென்று அம்மா அப்பாவிடம் சொல்ல வேண்டும், இந்த மகிழ்ச்சியை துளித்துளியாக அனுபவிக்க வேண்டும்’ அவள் மனம் துள்ளாட்டம் போட்டது.

“சரி, மனசுக்குள்ள எதையும் போட்டுக் குழப்பிக்காதே, வீட்டுக்கு பத்திரமா போ, நாளைக்கு பேசலாம்” என்றதும் அவன் திரும்பச் செல்வது நினைவுக்கு வர கலங்கினாள்.

“உன்னை அழைச்சுட்டுதான் நான் ஊருக்குப் போவேன், அது எத்தனை நாளா இருந்தாலும் சரி… புரியுதா? ஒரு மாதிரி ஷாக்கில் இருக்க அதனால இன்றைக்கு ஒரு நாள் தான் உனக்கு யோசிக்க டைம் ஓகேவா ஆலிஸ்?” கேட்டவனுக்கு தலையாட்டினாள்.

“நேரமாச்சு ஆட்டோவிலேயே வீட்டுக்குப் போ” சொன்னவன் ஆட்டோக்காரரை நிறுத்தி “அண்ணா…. அட்ரஸ் போகணும்” என்றான். தனது அட்ரஸ் எப்படித் தெரியும்? என அவள் சிந்திக்கவே இல்லை.

அன்றைய நாளின் மயக்கத்திலேயே வீட்டிற்குச் சென்றவள் வழக்கத்திற்கு மாறாக கதவை உள்ளே தாழிட மறந்தாள். அம்மா அப்பாவின் புகைப்படத்தை மடியில் எடுத்து வைத்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவளுக்கு இன்னமும் நடந்தவற்றை நம்ப முடியவில்லை. மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தாள்… மனம் நிறைந்துப் போக வாயினின்று வார்த்தைகள் எழாமல் மனதிற்குள்ளாக பெற்றோரின் புகைப்படம் பார்த்து பேசிக்கொண்டிருந்தாள்.

சற்று நேரம் கழிய, ஏதோ சப்தம் எழவே நிமிர்ந்துப் பார்த்தாள். அங்கே குமரேஷ் அவள் அறையினுள் நுழைந்து சேரில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்ததைக் கண்டாள். மனதில் இருந்த அத்தனை மகிழ்ச்சியும் வடிந்துப் போக தற்போதைய ஆபத்தை உணர்ந்தாள். கதவைத் தாழிடாத தன்னுடைய மடத்தனத்தை நொந்துக் கொண்டாள். அவனது அதிகார தோரணையை பார்த்து ஆலிஸின் ரத்தம் கொதித்தது. கடந்த நாட்களில் அவன் பேசியவைகள் எண்ணி மனம் கொதித்தது.

‘இவ்வளவு கேவலமான பிறவியை அவள் பார்த்ததே இல்லை. என்ன திண்ணக்கம் இருந்தால் இவன் என் வீட்டிற்கு உள்ளேயே வந்து அமர்ந்திருப்பான்?’ கோபத்தில் அவனைப் பார்த்தவள் அவனைப் போகச் சொல்லி திட்டினாள். அவனோ அவளை சட்டையே செய்யாமல் திமிராக அமர்ந்திருக்க, சட்டென்று சமையல் டேபிளை அடைந்து அருகிலிருந்த ஸ்டாண்டிலிருந்து கத்தியை கைப்பற்றிய வண்ணம் அவனை நோக்கி அப்படியே திரும்பினாள்.

அக்கினி பார்வையோடு அவனை சுட்டெரிக்க முயன்றாள். சத்தம் எழுப்பி, பிரச்சனை உண்டாக்கி, அனைவர் கவனத்தை ஈர்க்க அவளால் இயலும். ஆனால், தற்போதைய நிலையில் அவள் அதை செய்ய முயலவில்லை.அதன் பின்னால் எழும் பிரச்சனைகளை அவள் ஏற்கெனவே கண்டிருந்ததால் பிரச்சனை இல்லாமல் பயமுறுத்தி அவனை எப்படி தன்னுடைய அறையில் இருந்து வெளியேற்றுவது என்ற சிந்தனையில் இறுகிப் போனாள்.

கத்தியோடு எதிரில் தன்னை பயமுறுத்த எண்ணி நின்று கொண்டிருந்தவளை இகழ்ச்சியாக பார்த்த குமரேஷ்,

“என்ன எனக்கு நீ கத்தி எடுத்து பயம் காட்டுறியா? இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நானில்ல. இப்போ நீ ஒருவேளை சத்தம் போட்டேன்னா நீதான் என்னை உன் ரூமுக்கு அழைச்சேன்னு நான் அடிச்சுச் சொல்லுவேன். இந்த ஊரும் என்னை தான் நம்பும், என் பொண்டாட்டியும் என் பேச்சை தான் கேட்பா… ஏன்னா அவளுக்கு நான் உசுரு”.

…..

“என்னவோ கடைசில கேவலப்படுறது நீயாதான் இருப்ப யோசிச்சுக்கோ”

அசராமல் பேசுகின்றவனுக்கு என்ன பதிலளிப்பது? இந்த இக்கட்டிலிருந்து எப்படி வெளிவருவது? என செய்வதறியாமல் ஒரு நிமிடம் திகைத்து நின்றவளிடம்,

“இங்க பாரு ரொம்ப பத்தினி மாதிரி வேஷம் போடாதே…உன்னை மாதிரி பொண்ணுங்களைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். ஆஃபீஸ்ல யார் கூட எல்லாம் பழக்கம் வச்சிருக்கிறியோ? ஞாயித்துக் கிழமை யார் கூட கூத்தடிக்க போறியோ? மத்தவங்க கூடச் சுத்துறவ கொஞ்சம் என் கூடவும் சுத்துறது?” வழக்கம் போல தன்னுடைய நாராச கற்பனையில் வார்த்தைகளை உதிர்த்தான்.

ஆலிஸின் கரத்தில் கத்தியின் கைப்பிடி இறுகியது.

“நான் பத்தினியோ இல்லையோ, நான் யார் கூடவும் எங்கேயும் சுத்துறேன்னு நீ நினைச்சா அப்படியே சுத்திட்டு போறேன்… இப்ப உனக்கு என்னடா பிரச்சனை? என் வீட்டுக்கு வந்து உட்கார உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? எழுந்து போடா நாயே…”

குரலை எழுப்பாமல் உறுமினாள்.

“ரொம்ப பிகு செய்யாதடி…நானும் வந்த நாள் முதலா பேச்சுக் கொடுத்து பார்த்தாச்சு மசிய மாட்டேங்குற…என் பொண்டாட்டி ஊருக்கு போன நேரம் உன்னை கரெக்ட் செஞ்சாகணும்னு எத்தனை நாளா போட்ட திட்டம்… வீணா போக விட முடியுமா?…பொட்டச்சி உனக்கு அவ்வளவு திமிரா?”

“டேய்…”

“அனாத நாயி… இங்க பாரு இன்னிக்கு ராத்திரி வரைக்கும் தான் உனக்கு டைம் தாரேன்…நல்லா யோசிச்சுக்கோ… வெளியே தெரியாமல் என்கூட நீ குடும்பம் நடத்துற…இல்ல உன்னை என்ன சொல்லி நாறடிப்பேன்னு தெரியாது. இங்கே இருந்து எங்கே போனாலும் உன்னை தேடி வருவேன், விட மாட்டேன்.”

“…டேய் போடா நாயே …நான் செத்தாலும் சாவேனே தவிர உன் ஆசைக்கு பலியாக மாட்டேன்…எழும்பி போடா…” ஆலிஸின் குரல் நடுங்கியது.

“ரொம்ப துள்ளாதடி…உனக்கெல்லாம் இப்படி ஆம்பளைங்க அமைஞ்சா தான் உண்டு. இப்ப எனக்கு என்ன குறைனு எதிர்த்து பேசி ஆடுற? …நாம குடும்பம் நடத்த ஆரம்பிச்ச பின்னால உன் சம்பளத்துல பாதி தந்தா கூட போதும் அட்ஜஸ்ட் செஞ்சுப்பேன். ஆம்பள துணையில்லாத உனக்கு துணையும் ஆச்சு…மத்ததும் தான்…நீ வேணும்னா …இஷ்டம் போல வேற யாரையும் கூட சேர்த்துக்க நான் ஒன்னியும் சொல்ல மாட்டேன்… அழகா வேற இருக்க உனக்கு பாதுகாப்புக்கு செக்யூரிட்டி மாதிரியும் ஆச்சு, ஆசைக்கு ஆசையும் ஆச்சு… எப்படி என் யோசனை?”

அவன் பேசிக் கொண்டே செல்ல …ஏதோ ஒரு உக்கிரத்தில் கத்தியை தன்னை நோக்கி அவள் திருப்பிய கணம் அந்த சத்தம் கேட்டது.

ஆலீஸின் வீட்டிற்குள் வந்திருந்தனர் ஓனரும் அவர் மனைவியும். “குடும்பஸ்தன்னு தானே உனக்கு வீடு கொடுத்தேன், என்னடா செஞ்சு வச்சிருக்க குடிகாரப் பயலே” வீட்டு ஓனர் அவனை ஓங்கி அறைந்தார் அவன் நிலைத் தடுமாறி கீழே விழுந்திருந்தான்.

ஆலீஸருகே வந்து நின்ற பிரனீத்தை அவள் எதிர்பார்த்து இருக்கவில்லை.அதுவரை நடந்தவை அனைத்தையும் ரெகார்ட் செய்துக் கொண்டிருந்ததை துண்டித்து, காணொளியை சேமித்து, தனது மொபைலை பேண்ட் பையில் வைத்த பிரனீத் சமையல் டேபிளில் ஒடுங்கி உறைந்து நின்றவளின் கையை ஏந்தினான்.

கத்தியை தன் போக்கில் இன்னும் இறுக்கப் பிடித்திருந்தவளின் கைப்பிடியை ஒவ்வொரு விரல்களாக நீக்கி அந்தக் கத்தியை அகற்றினான். ஏற்கெனவே, அவள் கையில் காயம் ஏற்பட்டிருந்ததை அவள் உணரவில்லை. அவன் வாய் தன் பாட்டில் peddhu (முட்டாள்) என முனகியது.

அவள் கை முட்டைத் தாண்டி கோடாய் வழிந்த இரத்தத்தை தண்ணீர் விட்டு கழுவியவன் அவளது உள்ளங்கையில் காயம்பட்டிருந்த இடத்தை தன் கர்ச்சீப்பால் கட்டிப்போட்டான்.

“யார் தம்பி நீங்க?” ஓனரம்மாள் பிரனீத்தை அக்கறையாய் விசாரித்தார்.

“இவ புருஷன்மா” இறுகி சிலையாய் நின்றவளை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

சற்று நேரத்தில் போலீஸ் அவ்வறையில் வந்து நின்றது.

“இந்த தம்பி சொன்னதும் ஓடி வந்து பார்த்தா அந்த பொண்ணை மிரட்டிட்டு இருந்தான் சார்” பிரனீத் அழைத்ததைச் சொல்லி குமரேஷ் குறித்து தான் பார்த்ததைச் சொன்னார்.

வீட்டில் நிகழ்ந்திருந்த களேபரம் ஆலீஸின் கையிலிருந்து விழுந்திருந்த இரத்தத் துளிகள், குடிப் போதையில் வீட்டு ஓனரின் பிடியில் ஓடிச் செல்ல இயலாமல் இருந்த குமரேஷ் குறிப்பாக பிரனீத் ரெக்கார்ட் செய்திருந்த அந்த காணொளி அதை போலீஸிற்கு காட்டினான். அவன் பேசியதை மறுபடி கேட்கவும் ஆலீஸ் கதறி அழுதாள். அவளைத் தேற்ற தன்னோடு இறுக்கிக் கொண்டான் பிரனீத். அவன் தான் போலீஸிற்கு தகவல் கொடுத்திருந்தான். குமரேஷை போலீஸ் அழைத்துச் சென்றனர்.

இன்னும் கூட அழுதவளை “போதும், போதும்… அழாதே” தண்ணீர் பருக வைத்து அவளை சமாதானப் படுத்தியவன் “வா போலீஸ் ஸ்டேஷன் போகலாம், கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டு வருவோம்” என்றான்.

“எதுக்கு தம்பி பகை? உங்க பொண்டாட்டிக்குத்தான் சிரமம்.” என்றார் அந்தப் பெண்மணி.

“டிரான்ஸ்ஃபர் கிடைச்சுட்டுமா? இனி அவ தனியா இருக்க மாட்டா?”

“அப்படின்னா வீடு காலியாக போகுதா?” தனது கவலை அவருக்கு…

“நாளைக்கு வந்து பேசுரேன்மா”

“சரி” என்றவராக அவர் செல்ல அவளை அமர வைத்து விட்டு, தரையில் இருந்த அவளது இரத்தக்கறையை நீர் விட்டு துடைத்து துணியை குப்பையில் எறிந்தவன். அவளை வெளியே அழைத்து வந்து தானே வீட்டின் பூட்டுச் சாவியை எடுத்து வீட்டைப் பூட்டினான்.

போலீஸ் ஸ்டேஷன் சென்று ஆலிஸை கம்ப்ளெயிண்ட் கொடுக்க வைத்தவன் அடுத்த வாரம் தாங்கள் ஊருக்கு திரும்ப இருக்கும் விபரத்தைக் கூறி என்ன செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டான்.

லாக்கப்பில் அடைப்பட்ட குமரேஷ் இன்னும் போதையில் எதையோ உளறிக் கொண்டு இருக்க அங்கிருந்து ஆலிஸை அழைத்துக் கொண்டு உணவகத்தை அடைந்தான்.

“பசிக்கலயே” மறுத்தவளுக்கு உணவை ஊட்ட கையை நீட்ட, அந்த ஃபேமிலி ரூமில் இருந்தாலும் பொதுவிடம் என உணர்ந்தவள் அவன் கையிலிருந்த உணவை தன் கையில் பெற்று உண்டாள். அவள் கண்களினின்று கண்ணீர் சரசரவென இறங்கியது. அவசரமாய் அங்கிருந்த டிஷ்யூவை எடுத்து அவள் கண்ணீரை துடைத்தவன் அவளை அதட்டினான். அவனது அதட்டலுக்காக உண்ணலானாள் ஒவ்வொரு கவளமும் அவள் தொண்டையில் விக்கிக் கொள்ள கொஞ்சம் கொஞ்சமாய் நீர் அருந்தி விழுங்கிக் கொண்டு இருந்தாள். இரண்டு இட்லிகள் விழுங்கி வைக்கவும் சரி மீதி சாப்பிட முடியலைனா விட்ரு… இப்ப குடிக்க என்ன கொண்டு வரச் சொல்லட்டும்? என்றவன் பதிலளிக்காமல் இருந்தவளுக்கு அவனாகவே காஃபியை வரவழைத்துக் கொடுத்தான்.

தான் உண்டு முடிக்கும் வரை அவனது இடது கரம் அடிக்கடி அவள் கையை பற்றிக் கொண்டு இருந்தது. அவனது கரம், அதன் வெம்மை அது கொடுக்கும் ஆறுதல், அவனது அதட்டல், தன்னை உரிமையானவளாக பிறர் முன் சொன்னது ஒவ்வொன்றாக நினைவிற்கு வர கெடுதலான அனைத்தினின்றும் மனம் ஆறுதல் அடைந்து அவனை கண்ணில் உயிர் தேக்கிப் பார்த்திருந்தாள். ‘இவையெல்லாம் உண்மைதானா? தான் கண்ணை சிமிட்டினால் எல்லாம் மாறிவிடுமோ?” என்பதாக அவனை இமைக்காமல் பார்த்திருந்தாள்.

அவளைக் கண்டுக் கொள்ளாமல் தன் உணவை முடித்தவன் பில்லிற்கு பணம் செலுத்தி இன்னும் ஐந்து நிமிடத்தில் புறப்பட்டு விடுவதாகக் கூறவும் சர்வர் அகன்றுச் சென்றார்.

அவர் கரங்களை ஒன்றிணைத்தவன் தன் கைகளுக்குள் பொதிந்துக் கொண்டான்.

“நான் ஒரு விஷயம் சொன்னா கேட்பியா?” பொம்மை போல தலையசைத்தாள்.

“இன்றைக்கு உன்னை தனியா விட மனம் வரலை, நான் உன் அறைக்கு வரலாம். ஆனால், அங்க இப்ப இந்நேரம் என்ன பிரச்சனையா இருக்குமோ தெரியலை. நீ என்னோட ஹோட்டலுக்கு வரியா? அதுக்கப்புறம் என்ன செய்யறதுன்னு முடிவு செய்யலாம்?

……..அமைதியாக இருந்தவளிடம்…

“நீ என்னை நம்புறல்ல?” என்றான்.

… தன்னைப் போல அவள் தலை ஆம் என ஆடியது… ஏதோ பரிதவிப்பில் இருந்தவன் அவள் பதிலில் மெலிதாய் புன்னகைத்தான்.

“போகலாமா?”

“ம்ம்”

தனக்கு அலுவலகம் மூலமாக தங்க எற்பாடு செய்யப்பட்ட ஹோட்டலுக்கு தொடர்புக் கொண்டு ட்வின் ரூம் ஒன்று புக் செய்தான். என்னோடது சிங்கிள் பெட் வசதி காணாது என புன்னகைத்தான். “ம்ம்” புரிந்தாற்போல தலையசைத்தாள்.

ஹோட்டலை நெருங்கி சாவியை பெற்றுக் கொண்டவன் அவளையும் அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றான். அவளை சுத்தம் செய்து வரச் சொன்னவன், தானும் சுத்தம் செய்து வந்தான். மருத்துவர் கைக்காயத்திற்கு கட்டுப் போட்டு மாத்திரைகளும் வாங்கிக் கொடுத்து இருந்தார். அறைக்குள் வந்ததும் மாத்திரைகள் அவள் எடுத்துக் கொள்ளச் செய்தான்.

“தூங்கு, நான் இங்கேயே தான் இருப்பேன்” ஆறுதலாகச் சொல்ல, ம்ம் என்று படுத்தவள் ஏதேதோ யோசனையில் உழன்றாள். அவளது போர்வையை இழுத்து முழுக்கப் போர்த்தியவன் முதுகை தட்டி விட்டான். அவனது பரிவில் அவள் கண்கள் தூக்கத்திற்கு இறுக்க மூடிக் கொண்டன.

காலை எழுந்தவன் அடுத்த படுக்கையில் ஆலிஸைக் கண்டு முகம் கனிந்தான். மணி பார்க்க அது ஒன்பதரை என்றது. இனி எங்கே அவள் அலுவலகம் செல்வது? கைக் காயத்தை வைத்துக் கொண்டு வேலைச் செய்வதும் சிரமம். ஓய்வெடுக்கட்டும் என எண்ணியவனாக, மணிவண்ணனுக்கு அவள் இன்று வர முடியாது என தகவலை அனுப்பி வைத்தான். அவன் தான் பார்த்துக் கொள்வதாக பதிலளித்தான். புனிதா அன்றைய தினம் ஆலிஸின் டீமை பார்த்துக் கொள்வதாக முடிவானது. இவை எதுவும் அறியாமல் ஆலிஸ் உறங்கிக் கொண்டு இருந்தாள்.

களைப்பில் உறங்குகின்றவளின் உடையை கவனித்தான். நேற்று அலுவலகத்திற்கு உடுத்த உடை. அவளிடம் தான் காதல் சொன்ன போது அவள் உடுத்திருந்த உடை. பச்சை நிறப் பிண்ணனியில் சிகப்பு பூக்கள் சிதறி இருந்த அந்த சல்வார் கமீஸில் முன் தினம் நிகழ்ந்த பிரச்சனையில் அவள் இரத்தம் சிதறி இருந்ததை கவனித்தால் மட்டும் கண்டுக்கொள்ள முடிந்தது.  

நேற்றைய இனிமை தோய்ந்த அதே நாளில் இந்த வேண்டாத நினைவுகள் இணைந்திருக்க வேண்டாம் என்று எண்ணினாலும் அடுத்து என்னச் செய்வது? என்று சிந்திக்க ஆரம்பித்தான். அவளுக்கு புதிய உடைகளை வாங்கி விடலாம். ஆனால், உள்ளுடைகள்? வேறு வழியில்லாமல் அவள் வீட்டை நோக்கிப் புறப்பட்டான்.

பையில் அவள் வீட்டின் சாவி இருந்ததை சரிப் பார்த்துக் கொண்டான். அவன் எண்ணியது போலவே அந்த குடியிருப்பை அவன் அடையும் போது சற்று கூட்டம் சேர்ந்து இருந்தது மிகவும் சலசலப்பாக இருந்தது. மக்களுக்கு ஊர்வம்பு பேசுவதில் எத்தனை இன்பம்.

அவசரமாக குழந்தைகளை ஊரில் விட்டு விட்டு மஞ்சு இரவோடு இரவாக புறப்பட்டு வந்திருந்தாள். புறப்பட்டு, பயணித்து பிரனீத் அங்கே போய் சேர பதினோரு மணி ஆகி விட்டிருந்தது. “ஆலீஸ் எங்கே எங்கே?” என அனைவரும் அவனிடம் கேட்டனர். “அவள் கையில் கத்திப் பட்டு விட்டதால் அவளுக்கு காய்ச்சல் வந்து விட்டது. ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து இருக்கிறேன்” என்று கூறவும் கூட்டமே உச்சுக் கொட்டியது.

அவனது பேச்சுத் தோரணையில் கண்டிப்பு கண்டு மற்றவர்கள் பயந்து விலகி நிற்க, மஞ்சு அழுதுக் கொண்டிருந்தாள். “இந்தாள் இப்படி செய்வார்னு தெரியாதே? ஆலிஸ் பாப்பா முதல்லயே சொல்லிருந்தா நான் அவரை தட்டிக் கேட்டிருப்பேன்” என புலம்பினாள்.

“உங்க புருஷன் இலட்சணத்தை உங்களுக்கு காட்டட்டுமா? தனது மொபைலில் இருந்த வீடியோவை எடுக்க முயல, வேண்டாம் தம்பி அதுதான் ஊரெல்லாம் பரவி நாறிட்டு இருக்கே? என் பொழப்பு வீணா போச்சுதே” ஒப்பாரி வைத்தாள்.

“ஏதோ குடிபோதையில் புத்திக் கெட்டு செஞ்சுட்டான் போலிருக்கு… அந்த வீடியோவில் உங்க பொண்டாட்டியும் இருக்காப்ல, அதனால இந்த விஷயம் தெரிஞ்சா உங்களுக்கும் தான் மானக்கேடு. இதை வெளிய தெரியாம மறைச்சுடலாம் தம்பி” குமரேஷ் உறவினர் ஒருவர் நயமாக பேசுவதாக எண்ணி எதையோ பேச,

“எங்கே அந்த வீடியோவில் என் பொண்டாட்டி எங்கே இருக்கான்னு எனக்கு காண்பிங்களேன்?” இகழ்ச்சி முறுவலோடு பிரனீத் அவரிடம் கேட்டான். அதன் பின் தான் அந்தப் பெரியவர் மறுபடி காணொளியைப் பார்த்தார் போலும். அதில் குமரேஷின் முகம் மற்றும் குரல் மட்டுமே தெரியும் வண்ணம் அவன் படம் பிடித்திருந்தான்.

“அவன் ஆலிஸை கொஞ்ச நஞ்சமா படுத்தி வச்சிருக்கான். அவன் செஞ்சதுக்கு கொன்னு போடலாமான்னு தான் ஆத்திரம் வந்தது, ஆனால், யார் பேர் கெடும்? இப்ப ஆதாரம் இருந்தும் அவளை கூசாம இந்த பேச்சு பேசுற உங்களை மாதிரி வாய்கள் எல்லாம் அவளை கூறு கூறா பிரிச்சுப் போடாது? அதனாலத்தான் இத்தனை பொறுமையா இருக்கிறேன்.”

….பேச்சற்று அமைதியானர்.

“இதோ இந்தம்மாக்காக கேஸை வாபஸ் செய்யலாம்னு நினைச்சேன், ஆனால் நீங்க பேசுறது சரியா இல்லை”

என்றவன் ஆலிஸின் அறைக்குள் சென்று அவளுக்கு தேவையான உடையை தேடி எடுத்தான். கட்டிலில் அவளது பெற்றோரின் புகைப்படம் கண்டு அதனையும் எடுத்து வைத்தான். கைப்பை, மொபைல் ஃபோன், சார்ஜர் தேவையானவற்றை எடுத்து ஒரு பையில் போட்டவன் கதவைப் பூட்டி புறப்பட்டான்.

விறுவிறுவென்று அவன் கீழே இறங்கவும்,

“போலீஸ் ஒன்னும் செய்ய முடியாது, கேஸ் பலமா இருக்குன்னு சொல்லிட்டாங்க… நான் ஆலிஸ் பாப்பாவை பார்க்கணும் தம்பி” மஞ்சு பிரனீத்திடம் இறைஞ்சினாள்.

இடையில் பேச வந்த தன் உறவினரை தடுத்தாள். “நான் அந்த மனுசனை நம்பி இரண்டு புள்ளப் பெத்து வச்சிருக்கேன்… அதுங்களை வளர்த்துப் பொழைக்கணும், நீங்க எதையாவது பேசி என் வாழ்க்கையை கெடுத்துராதீங்க மாமா” கையெடுத்துக் கும்பிட்டாள்.

மஞ்சுவின் குரலில் நின்றவன் “ஆலிஸை அழைச்சுட்டு கொஞ்ச நேரத்தில் வரேன். போலீஸ் ஸ்டேஷன் வாங்க, நான் சொல்லுறதுக்கு கட்டுப் படுறதாக இருந்தால் மட்டும் பேசலாம்” என்றான்.

“சரி தம்பி” என கண்ணில் ஒளி சேர்ந்தவளாக தலையசைத்தாள் மஞ்சு தலைவிரிக் கோலமாக இருந்தவள் மறுபடி போலீஸ் ஸ்டேஷன் செல்ல புறப்பட்டாள். வாழ்க்கையில் தவறு செய்யாமலும் சிலர் தண்டிக்கப் படலாம் இந்த மஞ்சுவைப் போல…

பிரனீத் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றவன் ஹோட்டல் அறையை திறந்து உள்ளேச் செல்ல அப்போதுதான் எழுந்துக் கொண்டிருந்தாள் ஆலிஸ்.

கையில் ஃபோனும் இல்லாமல் அலுவலகம் செல்ல வழியும் புரியாமல் இருக்க, சிந்தித்தவாறு அமர்ந்திருந்தாள். இரவின் கலக்கம், பிரனீத்தின் உதவி அவர்களுக்குள்ளாக ஒரே நாளில் நெருங்கிய அந்த உணர்வு பந்தம் அவளுக்கு பகலில் சூரியனின் ஒளியில் சற்றுக் கூசியது. தன்னைக் குறித்து எதையும் நினைத்துக் கொள்வானோ? என்று எண்ணியவள் சங்கடமாக அமர்ந்திருக்க அவளிடம் அந்த பையை நீட்டினான்.

உள்ளாடை முதல்கொண்டு கொண்டு வந்தவன் முகம் பார்க்க வெட்கினாள். “துணி மாத்திட்டு வா வெளியில் போகணும்” அவளைக் கவர்ந்த அந்த மென்குரல் ஆனால் அதில் இருந்த ஆளுமை… தன்னைப் பார்த்தவளை Yen Nodthiya? (என்னப் பார்க்குற?) என்றான்.

ஆங்க்…

என்ன பார்க்குறன்னு கேட்டேன்?

“ஒன்னுல்ல” அங்கிருந்துச் சென்றாள். அவள் வருவதற்கு முன்பாக மொபைலை சார்ஜிங்கில் போட்டான். மொபைல் ஒளிர்ந்ததும், வால் பேப்பரில் அவள் படம் இருக்க அதை வருடினான். லாக் போடப்படாத அவளது மொபைல் “ஜீ பூம்பா” எனத் திறந்துக் கொள்ள ஏதோ ஒரு அல்பத்தனத்தில் அவளது கேலரிக்குள் நுழைந்தான்.

அவளது புகைப்படங்களை காண்பதற்காக சென்றவனுக்கு அங்கே தன்னுடைய புகைப்படங்களைக் கண்டு ஒரு நொடி இன்ப அதிர்ச்சியே. சில புகைப்படங்களினின்று அவன் பகுதியை மட்டும் வெட்டி வைத்திருந்தாள். சொல்லொண்ணா உணர்வில் இருந்தவன் அவள் குளியலறையை திறக்கும் சப்தம் கேட்கவும் மொபைலை அங்கேயே வைத்து விட்டு அவளுக்கு தனிமைக் கொடுத்து பால்கனியில் நின்றான். சற்று நேரம் கழித்து,

“வரட்டுமா?” அவளிடம் கேட்டே உள்ளே வந்தான். “ஆஃபீஸ்க்கு நீ லீவுன்னு சொல்லிட்டேன் சரியா?” ‘நான் ஆஃபீஸிற்கு லீவு என்று என் சார்பாக இவன் சொன்னானா? என்ன நினைத்தார்களோ?’ என்றொரு பக்கம் எண்ணம் சுழன்றாலும் ‘நேற்றைய தினம் மட்டும் அந்த ஆபத்தான நேரம் அவன் வராவிட்டால் அந்த குமரேஷால் அங்கு என்ன நிகழ்ந்திருக்குமோ?’ எனவும் தோன்றியது.

“நேத்திலருந்து உங்களுக்கு நிறைய தொல்லை கொடுத்துட்டேன்ல?” அவளது முட்டைக் கண் பரிதவிப்பில் சுழன்றதை கவனித்தான்.

“ஆமாமா, நீதானே என்னை கூப்பிட்டு உதவி கேட்ட?” அவன் பற்கள் நொறுங்கினவோ? “வாயப் பிடுங்காத, உன் மேல ரொம்ப கோபத்தில் இருக்கிறேன். கொடுக்க நினைச்சிருக்கிறதை கொடுத்திருவேன்.”

அவனது கோப முகம் கண்டு மிரண்டவள், “என்ன கொடுக்கப் போறீங்க?”

“வேறென்ன நேத்து நீ செய்த முட்டாள்தனத்துக்கு அங்கேயே கன்னம் கன்னமா அறையுறதா நினைச்சேன்.”

…….

“ஒரு பைத்தியக்காரன் கல்யாணம் செஞ்சுப்போமான்னு கொஞ்ச நேரம் முன்னாடித்தான் நம் கிட்ட கேட்டானே? ‘அவனுக்கு யோசிக்கணும், நாளைக்கு சொல்லுறேன்னு’ பதில் சொல்லிட்டு வந்தோமே கத்தி எடுத்து நம்மை நாமே குத்திட்டு செத்துட்டா அவனுக்கு என்னப் பதில் சொல்லுவோம்னு நினைச்சியா? இல்லை என்கிட்ட ஏதாச்சும் உதவி கேட்கணும்னு உனக்கு தோணுச்சா? நான் எல்லாம் உனக்கு ஒரு பொருட்டே இல்லில்ல?”

அவன் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தலைக் குனிந்தாள்.

“அப்படின்னா நான் உன் வாழ்க்கையில எங்கேயுமே இல்லில்ல? ஒரு அவசரத்துக்கு கூட என்னை நினைக்கலை. இவன் ஏதோ பைத்தியக்காரன் சும்மா ப்ரபோஸ் பண்ணினான், நாம இல்லைனா எவளையோ கட்டிப்பான்னு தான நீ நினைச்சிருக்க?” அமைதியில் இத்தனை உக்கிரமா?

‘நேற்று அந்த நேரத்தில் பிரனீத்தின் நினைவே வரவில்லை தானே?’ அவனை நிமிர்ந்து பார்க்க இயலாமல் தலைக் குனிந்து நின்றாள்.

“பாவமா இருக்கியேன்னு விடுறேன், அது மட்டும் இல்ல இந்த போன் முழுக்க என் ஃபோட்டோவா வச்சுக்கிட்டு இருக்கிறதை பார்த்தேனா? இந்த பைத்தியக்காரியை ஒன்னும் சொல்லறதுக்கில்லைனு கொஞ்சம் கோபம் குறைஞ்சுடுச்சு.”

அவனது அத்துமீறல்கள் அவளை சங்கடப் படுத்தின. ‘அதெப்படி அவள் அனுமதி இல்லாமல் அவள் ஃபோனை பார்க்கலாம்? ரொம்பவே ஆதிக்கம் செலுத்துகின்றானோ?’ மனம் நெருடியது.

“நானா நேத்து சொல்லலைன்னா நீ உன் மனசில் இருக்கிறதை சொல்லிருக்க மாட்டீல்ல?, சாகுற வரைக்கும் சொல்லிருக்க மாட்ட…” தங்களது காதலை எண்ணி எதையோ முணுமுணுத்தான் அவளுக்குப் புரியவில்லை.

‘இவனுக்கு நம்ம மொழி தெரியுது, நமக்குத் தெரியலை முதல்ல கன்னடம் கத்துக்கணும்’ மனம் அதன் போக்கில் சொல்ல அப்ப இந்த அதிகாரம் பிடிச்சவனை கட்டிக்க முடிவுக்கே வந்துட்டியா? உள்ளுக்குள் போராடினாள். அவன் உன் வாழ்க்கையில் இல்லைனு தானே ஒரு வாரமா சோகப் பாட்டு பாடின? இப்ப உனக்கு என்ன பிரச்சனை? அதட்டி அவளை மட்டுப் படுத்தியது மனது.

“ஏதோ நான் செஞ்ச புண்ணியம் உயிரோட இருக்க, நேத்து என்ன செய்யறதா இருந்தீங்க மேடம்?”

அவன் அன்னியமாய் அவளை மேடம் சொல்லவும் அதுவரை அவன் வேண்டுமா? வேண்டாமா? என போராடிக் கொண்டிருந்த மனது அதெப்படி அவன் என்னை இப்படிக் கூறலாம்? எனத் தவித்தது… அவள் கண்கள் சட்டென்று துளிர்த்து விட்டிருந்தன.

“ஒன்னு போட்டேன்னா?” கைகளை உயர்த்தியவன் அடிக்க முடியாமல் இறக்கினான்.

வித் யுவர் பர்மிஷன் அவளருகில் சென்று முகத்தை கையில் ஏந்தி கண்களிடம் சம்மதம் கேட்டான். அலைப்புறும் அவள் கண்களின் மொழி அவனுக்கு என்ன புரிந்ததோ?

அவள் உதடுகளை அளவு பார்ப்பது போல நிரடியது அவனது பெருவிரல் அடுத்த நொடி தன்னிதழ்களால் அவளது இதழ்களை கவ்விக் கொண்டான். கைகள் முன்னேறி அவள் இடுப்பை வளைக்க தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

நொடிகள் நீள அவனை விடுவித்தவன் கண்கள் சிவந்திருந்தன… பரிதவிப்பில் அவன் முகம் கசங்கியிருந்தது.

“இனி ஒரு முறை இப்படி செய்வ?” மாட்டேன் என தலையசைத்தாள். “கத்தி ஏந்துறியா தப்பே இல்லை. உன்னை வதை செய்ய வர்றவனை கொலை செஞ்சிடு அதற்கப்புறம் என்ன நடக்குதுன்னு பார்த்துக்கலாம். நீ சாக நினைக்கக் கூடாது புரியுதா?”

………..

“ஏன்னா நீ தனியில்ல, நானும் இருக்கேன் உனக்கொன்னுன்னா அது என்னையும் பாதிக்கும். ரொம்ப ரொம்ப மோசமா பாதிக்கும்” முகம் கசங்க அவன் சொன்னான்.

அவனது வார்த்தைகளை உள்வாங்கின மனது சமன்பட்டுப் போனது. கேளாமல் கிடைத்த ஒரு வரம் போல, தேடாமல் கிடைத்து விட்ட சொர்க்கம் போல அவன் அவளுக்குத் தோன்றினான்.

“Yen Nodthiya?” கேட்டவனிடம் ‘ஐயையோ ஓவரா ஓவரா பார்த்துட்டோமோ?” சுதாரித்தவள்… “ஒன்னுமில்ல சும்மாதான் பார்த்தேன்” என்றவளாக தரை நோக்கினாள். ‘பரவால்லியே இரண்டாவது தடவையிலேயே புரிஞ்சிடுச்சே?’ அவன் முகத்தில் மென்முறுவல் படர்ந்தது.

அவளை உண்ண வைத்து புறப்படும் போது, “போலீஸ் ஸ்டேஷன் போறோம், அங்க என் அனுமதி இல்லாம ஒரு வார்த்தை… ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது” மிரட்டினான்.

“நீங்க ஆஃபீஸ்ல இப்படி இல்ல, இப்ப ரொம்ப டாமினேட்டிங்கா இருக்கீங்க” குறை படித்தாள்.

“உன் கிட்ட இப்படி இருந்தாதான் வேலைக்கு ஆகும் சும்மா வா” அவன் பின்னாலேயே அவள் முகத்தை தூக்கிக் கொண்டு வந்தாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here