11. TKSN

0
930

தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!

அத்தியாயம் 11

போலீஸ் ஸ்டேஷன்:

வெளியே மஞ்சு மட்டும் வந்திருந்தாள், உறவினர்களை அழைத்து வரவில்லை. பிரனீத் அவரைப் பார்த்து தலையசைத்துக் கொண்டான்.

“ஆலீஸ் பாப்பா” அவளருகே வந்து நின்ற மஞ்சு… அவள் கையைப் பற்றி கட்டைப் பார்த்து “ஹாஸ்பிடல்ல இருந்து வந்துட்டியாமா? இதெல்லாம் எனக்கு தெரியாது பாப்பா… நீ சொல்லியிருந்தா நான் கண்டிச்சிருப்பேன்மா” அவர் பேசியிருந்த விதத்தில் முன் தின சம்பவங்கள் நினைவிற்கு வர ஆலிஸ் கண்களினின்று கண்ணீர் இறங்க பிரனீத்தின் கோபம் கரைத் தொட்டது.

“நீங்க அமைதியா இருந்தீங்கன்னா நான் அடுத்து என்ன செய்யணும்னு யோசிப்பேன், இல்லைனா நடப்பது நடக்கட்டும்னு கேஸ் நடக்க விட்டுட்டு இங்கிருந்தே திரும்பப் போயிடுவேன்”

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இருந்த ஆலிஸ், “பாவம் இந்த அக்கா என்ன செய்வாங்க?” என எண்ணியதோடு மஞ்சுவிடம் கண்டிப்பாய் பேசிய பிரனீத்தை கோபமாய் முறைத்தாள்.

அவன் அவளை நோக்கி வாயில் கை வைத்து காட்டினான். ‘பேசக் கூடாதாமே?’ அவனைக் காணாதது போல முகத்தை திருப்பிக் கொண்டாள்.

மஞ்சு பரிதவித்தவளாய் இவர்கள் முன்செல்ல பின்தொடர்ந்து வர தங்களது நேரம் வருமளவும் வரிசையில் காத்திருந்தனர். போலீஸ் அவர்களிடம்,

“சமாதானமா போறீங்களா சார்? பாவம் இந்த லேடி காலையிலருந்து அலையுறாங்க. ஏன் மேடம் மிசஸ் ஆலிஸ் பிரனீத் நீங்க என்ன சொல்றீங்க?” தனது பெயரை புதிதாய் கேட்டவளுக்கு உள்ளூர பரவசம். பிரனீத் போலீசிடம்,

“அந்தாளை கொஞ்சம் அனுப்புங்க சார், அவர் கிட்டதான் எனக்குப் பேச்சு, அதுக்கப்புறம் என் முடிவைச் சொல்லுறேன்” எதிரில் இருந்த குமரேஷைப் பார்க்க ஏனோ ஆலிஸுக்கு இப்போது நடுக்கம் எழவில்லை.

பிரனீத் ஆலீஸை தள்ளியே நிற்க வைத்து அவனருகே சென்றான். “நேத்து நீ குடிபோதையில் இருந்த அதான் உன்னை அடிக்கலை. முதல் முறை இருட்டுல கல்லெறிஞ்சு மண்டைய உடைச்சும் உனக்கு எதுக்குன்னு புரியலில்ல. மறுபடியும் அதே தப்பைத்தானே செஞ்ச? அதான் போதை தெளிஞ்ச பின்னாடி அடிக்கலாம்னு விட்டு வச்சிருந்தேன். யார் அடிக்கிறா? எதுக்கு அடிக்கிறா? ஏன் அடிக்கிறான்னு புரிஞ்சதுன்னா அடுத்த முறை இந்த தப்பு செய்யவே மாட்ட சரிதானே? எல்லோருக்கும் திருந்த வாய்ப்புக் கிடைக்கணும்னு நான் நினைக்கிறேன்” இடியென தன் கையை அவன் கன்னத்தில் இறக்கினான். குமரேஷின் உதட்டிலிருந்து இரத்தம் வழிந்தது. சப்பு சப்பென்று அவன் கன்னத்தை பதம் பார்த்தன இவன் கரங்கள்.

“எந்தப் பொண்ணையாவது தொட நினைச்சாலும் உனக்கு இந்த அடிதான் ஞாபகம் வரணும். உன் மனைவிக்காக மட்டும்தான் உன்னை விட்டு வச்சிருக்கேன், இல்லை நேத்தே கொன்னுருப்பேன்” உக்கிரமாய் நின்றவனிடம் போலீஸ் விரைந்து வர, “கேஸை வாபஸ் வாங்கிக்கிறேன் சார்” எனச் சொன்னவன் குமரேஷிடமிருந்து விலகினான். ஆலிஸிடம் சொல்லி கேஸை திரும்பப் பெறச் சொன்னான்.

அவள் பிரனீத்தின் செயலில் அதிர்ந்திருக்க, அவன் சொன்னபடியே செய்தாள். அவள் நடைமுறைகளை செய்து வரும் முன்பாக பிரனீத் மஞ்சுவிடம் சிலவற்றை கூறி ஒப்புதல் வாங்கினான்.

அங்கே டேபிளில் சவக்களையோடு குமரேஷ் அமர்ந்திருந்தான் வாயில் வடியும் இரத்தத்தை துடைத்தான். இரவு அவனை போலீஸ் அடித்து விடுவார்களோ என்றுப் பயந்து போலீஸிற்கு அவன் உறவினர் மறைமுகமாக பணம் கொடுத்து சென்றிருக்க, கன்னங்கள் வீங்க வாங்க வேண்டியதை, வாங்க வேண்டியவனிடம் வாங்கியே ஆக வேண்டும் என்பதுதான் விதி என்பதை புரிந்துக் கொண்டான்.

“எங்கிருந்து வந்தான் இவன்? கல்லெறிந்ததும் இவன் தானாமே?” தன் போக்கில் நெற்றியை தடவினான். இப்போது கிடைத்த கொடையில் தலையிலிருந்த புண்ணிலிருந்தும் இரத்தம் கசிந்திருந்தது. மறைவாக செய்ததில் பலன்களை வெளியரங்கமாக பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதே விதி அல்லவா? நல்லவன் வேஷம் கலைந்து போலீஸ் ஸ்டேஷன் வர நேர்ந்ததும், அனைவர் முன்பும் அடிப்பட்டதும் அவமானத்தில் குறுகி நின்றான். அதுவும் மஞ்சுவின் பார்வையில் அவன் பாதாளம் வரை இறங்கி நிற்பது கொத்தித் தின்றது. வீடியோ எல்லா இடமும் பரவி விட்டதாமே? ஊர் பக்கம் தலைக்காட்டவும் முடியாது. ‘செத்து விடலாமா?’ என எண்ணினான், மனம் துணியவில்லை.

போலீஸ் நடைமுறைகள் முடிய வெளியே வரவும், “தம்பி இனி பாப்பாவை பார்க்க கிடைக்காது, கூட பொறந்தவ மாதிரி பழகிருக்கேன். கொஞ்ச நேரம் பேசிக்கட்டுமா?” மஞ்சு தன்னிடம் கெஞ்சவும் இப்போது பேச விடாவிட்டால் ஆலிஸ் தன்னை என்னமாய் முறைப்பாள் என எண்ணியவனுக்கு முறுவல் எழுந்தது. தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ஆலீஸைப் பார்த்தான்.

“போ, பேசு ஆனா இங்கே தான் நானும் இருப்பேன்.”

“என்னை மன்னிச்சுடு பாப்பா”

‘எதற்காக இந்த மன்னிப்பு?’ என நோக்கியவளிடம், “நானா சொல்லாமலிருந்தா இந்த மனுஷனுக்கு உன்னைப் பத்தி தெரிஞ்சிருக்காது பாப்பா. உனக்கு நல்லது செய்யறதா நம்பி, குறிப்பா அந்த மனுஷனை நல்லவன்னு நம்பி உன்னைப் பத்தி சொன்னேன். அன்னிலருந்து தான் இந்தாளுக்கு புத்தி மாறிடுச்சுன்னு நினைக்கிறேன்.”

……..

“அழகான பொண்ணு, நல்ல வேலையில இருக்கு அம்மா அப்பா இருந்திருந்தா இந்நேரம் குழந்தைக் குட்டின்னு குடும்பமா இருந்திருக்கும், நாம வேணா மாப்பிள்ளை பார்த்து கட்டி வைப்போமான்னு கேட்டேன் பாப்பா”

………………… மஞ்சுவின் குணம் தெரிந்து இருந்தவள் உருகினாள்.

“என் ஒன்னுவிட்ட தம்பியக் கூட உனக்காகப் பார்க்கிறதா இருந்தேன்.” முகம் தெரியாத அந்த மஞ்சுவின் தம்பி பிரனீத்திற்கு எதிரியானான். பற்களை கடித்துக் கொண்டு இருக்கின்றவனை கவனியாமல் ஆலிஸ் கதைக் கேட்டாள்.

“இந்த மனுஷன் தான் அந்த பொண்ணு கிறிஸ்டியன், நம்ம சொந்தத்தில எப்படி கட்டிக்கும், நல்ல வேலை வேற பார்க்குது கிராமத்தில கட்டிக்க விருப்பப் படாதுன்னு முடிச்சிட்டார். போன மாசம் வரை போராடிப் பார்த்துட்டு போன மாசம்தான் பொண்ணு பார்த்து இப்ப கொஞ்ச நாள் முன்னாடி அவனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சேன்” பிரனீத்தின் மூச்சு சீரானது.

“நான் சொன்ன விஷயத்தை இந்தாள் இப்படி தப்பா நடந்துக்க உபயோகிச்சிருப்பார்னு தெரியாது, ராமனா இருந்தாரே இப்ப இப்படி ஆகிப் போனாரே?” புலம்பவும்…

“ஆலிஸ் ராமகாவியம் கேட்டுட்டியா? இனி நாம போகலாமா?” பிரனீத்தின் முறைப்பில் மஞ்சு தன் புலம்பலை நிறுத்தி கப்பென்று வாயை மூடினாள். கணவனின் முகத்தில் அடிபடாத பகுதிகளை புண்ணாக்க அவள் விரும்பவில்லை.

“சாயங்காலம் 7 மணி வரைதான் உங்களுக்கு டைம். என்ன புரிஞ்சுதில்ல?” கேட்டவனுக்கு சரியென்றாள் மஞ்சு. அவளைப் பொறுத்தவரைக்கும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனால் சரிதான். போலீஸ் கேஸ் என்று கணவனை வேலையை விட்டு எடுத்து விட்டால் என்னாவது? கணவன் செய்த தவறுகளுக்கெல்லாம் ஆதாரம் இருக்க இனி அவன் வாழ்நாள் முழுக்க அதைச் சொல்லிக் காட்டி ஒருவழி ஆக்கிவிட மாட்டாளா என்ன? இதைவிட பெரியதான தண்டனை ஒன்றும் அவனுக்கு தேவைப்படாது.

ஆலீஸின் கையை பிடித்து போலீஸ் ஸ்டேஷனின் வெளியில் வந்தான்.

“பசிக்குதா? எதுவும் சாப்பிடுறியா?”

“இப்பதானே சாப்பிட்டேன் பசிக்கலை”

“ம்ம்…” என்றவன் “வா” தன்னோடு அதே ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான். அவர்களுக்கான ட்வின் ஷேரிங்க் அறையில் அவளை விட்டவன்.

“சாயங்காலம் 6 மணிக்கெல்லாம் புறப்பட்டு இரு, உன் வீட்டுக்கு போகலாம். நீ அங்கே இருக்கிற நாள் வரைக்கும் குமரேஷ் அந்த வீட்டுக்கு வர மாட்டான். அவங்க இப்ப ஊருக்கு புறப்பட்டுருவாங்க. இன்னிக்கு இராத்திரி வீட்ல தங்க பயம் இல்லையே?” கேட்டான்.

“இல்லை என தலையசைத்தவள் எதையோ கேட்க வர, ஆஃபீஸ் போய்ட்டு வரட்டுமா? நாம நிதானமா சாயங்காலம் பேசலாம்” என்றான். சரியென மறுபடி தலையசைக்க அவள் தலையை வருடியவன் nanna gombbey (என் பொம்மக் குட்டி) முனகினான்.

“ம்ம்..?” கேள்வியாய் முழித்தவளுக்கு பதில் தராமல் “வரட்டா?” விடைப்பெற்றவன் பின்னேயே வால் பிடித்துக் கொண்டுப் புறப்பட்டாள். தன் பின்னேயே வருகின்றவள் கையில் அவள் வீட்டின் சாவியையும், அந்த ஹோட்டல் அறையின் சாவியையும் கொடுத்து எப்படி பூட்ட வேண்டும், திறக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தான். இண்டர்காமில் சாப்பிட ஆர்டர் கொடுக்கவும் சொல்லிக் கொடுத்தான்.

வெளியேறவும் தன்னறையின் கதவைப் பூட்டிக்கொண்டு அவன் பின்னால் வருகின்றவளை திரும்பிப் பார்த்து சிரித்தான்.

லிஃப்டில் அவனோடு ஏறிக் கொண்டாள். அவன் தன் அலுவலகத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டிருந்த அந்த ஒற்றை அறையில் நுழைய பின்னேயே வந்தாள். தனது லேப்டாப் பையை எடுத்துக் கொண்டவன் வெளியே வந்து கதவைப் பூட்டி கீழே செல்லத் தொடங்கினான்.

லிஃப்டில் மறுபடியும் இவனை வால் பிடித்து அவள் தொடர, இப்போது இருவரும் தனியாக இருக்க அவள் கையைப் பற்றிக் கொண்டான். “நேரம் போகலைனா இங்கே ரிசப்ஷன்ல இருந்து மேகசின் வாசி, இல்லை போய் டி வி பாரு சரியா?” அவனுக்கு தலையாட்டியவள் வழியனுப்பினாள்.

ஏதோ நிறைவு மனமெங்கிலும்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here