12. TKSN

0
934

தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!

அத்தியாயம் 12

ஆயிற்று மாலை 7 மணி, பிரனீத் ஆலீஸை அவள் வீட்டில் கொண்டு வந்து விட்டான். அவன் கூறியிருந்த படி சில நாட்களுக்கு ஆலிஸ் அங்கு இருக்கும் வரையிலும் குமரேஷ் அங்கே வர மாட்டான் அ.கா வரக் கூடாது.

வீட்டு ஓனர் குமரேஷ் குடும்பத்தை வீட்டைக் காலிச் செய்யச் சொன்னார்.ஆனால், அவன் மனைவியின் வேண்டுதலால் அது தவிர்க்கப்பட்டது. எல்லோரும் மஞ்சுவின் முகத்திற்காக குமரேஷை மன்னிக்க நேரிட்டது.

வீட்டிற்குள்ளாக அழைத்துச் சென்றவன் அந்த கதவுகளை முழுக்க திறந்து வைத்தான். இனி வீட்டில் அடைச்சுக் கிடக்கக் கூடாது புரியுதா? வீட்டில் நல்ல வெளிக்காத்து வரட்டும்…” “ம்ம்” மறுபடி ஒரு தலையசைப்பு அவளிடத்தில்… மனதிற்குள்,”தான் கதவடைத்து இருந்தது எப்படித் தெரியும்?” எனும் கேள்வியும்.

“நேத்திலிருந்து நிறைய மனக்கஷ்டம் உனக்கு…” ஃபேன் காற்றில் பறந்த அவளது முடிகளை ஒதுக்கினான். மனம் குழப்பமா இருக்கும், நிறைய யோசிக்க வேண்டி இருக்கும் எனக்குப் புரியுது அதனால் இன்றைக்கு நான் எதையும் விவாதிக்கிறதா இல்லை, புரியுதா?”

மறுபடி தலையசைப்பு…

“என்ன யோசிச்சாலும் நாம இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறதும், நாம திருமணம் செஞ்சுக்கப் போறதும் சத்தியமான உண்மை இதை மட்டும் எந்த காரணம் கொண்டும் மறுக்க நினைக்காம மத்ததெல்லாம் யோசி”

“…”

“நான் பேசுறது, செய்யறது டாமினேடிங்கா இருக்கிறதா தோணும். உன்னோட முடிவெல்லாம் நானே எடுக்கிறதாக கோபம் வரும் எனக்குப் புரியுது. நீ ரொம்ப குழம்பிப் போயிருக்க, நீ தெளிவாகுற வரைக்கும் உன் முடிவுகளை நான் எடுக்கிறேன். அப்புறமா நீ எடுத்துக்கோ சரியா? ஆஃபீஸ் விஷயம் உன்னைக் கேட்காமல் நிறைய செஞ்சு வச்சிருக்கேன் உனக்கு அது கூட மனசு நெருடலாம்… ஆனால், நீ வாயையே திறக்கப் போறதில்லை, மனசை பூட்டி வச்சிக்குவன்னு புரிஞ்சதுக்கு அப்புறம் நான் எப்படி சும்மா இருக்க முடியும்?”

“….”

“எப்படியும் நம்ம திருமணம் அதற்கப்புறமான வாழ்க்கை சேர்ந்து வாழணும் என்பதாக இருக்க, நான் அம்மா அப்பா எல்லாரும் இருக்கிறது பெங்களூர் என்பதால் நீ அங்கே வந்துதான் ஆக வேண்டி இருக்கும். தெரிஞ்ச ஊரை விட்டு போகணுமேன்னு உனக்கு மனச் சஞ்சலம் இருக்கும் என்றும் புரியுது. நல்லா யோசி, நேரம் எடுத்துக்க, எதுக்கும் கட்டாயப்படுத்த மாட்டேன். ஒரு மனதா யோசி, முடிவெடு. நீ முழு மனதாகச் சரி சொல்லுகின்ற வரைக்கும் நான் காத்திருப்பேன்.”

அணைத்து மென்மையாய் உச்சந்தலையில் முத்தமிட்டு விடைப் பெற உறைந்து நின்றாள். அவனது கைச்சந்தில் தன் கையை விட்டுக் கோர்த்தவள் போக விடாமல் அவன் தோளில் சாய்ந்தாள்.

“என்னமா?”

“வாங்க…” தான் தினமும் வழிபடும் அந்தப் பீடத்தின் முன்பு நின்றாள். என்னவோ அந்த ஏசுவுக்கும், அன்னை மரியாளுக்கும் அவனை அறிமுகப் படுத்தும் சிறுப்பிள்ளை தோரணை அவளிடம் இருந்தது.

“இங்கே நில்லுங்க” அங்கே நிறுத்தி இருகரம் கோர்த்து கண்களை மூடி வேண்டினாள். கண்களில் நீர் கோர்த்து மூடிய கண்களினின்று கண்ணீர் பொழிந்தது.

“ஷ் ஷ் எதுக்கு இத்தனை அழுகை?” தோள் சேர்த்தணைத்தவன் கண்டித்தான். குரல் கரகரக்க “இல்லை நேத்து நீங்க என் கிட்ட காதல் சொன்னதும், நெஞ்சு முழுக்க சந்தோஷத்தில் உடனே, அம்மா அப்பாக்கிட்ட சொல்லணும், மதர் மேரிட்ட என் சந்தோஷத்தை பகிர்ந்துக்கணும்னு தான் வீட்டுக்கு வந்தேன். வந்த பரவசத்தில் கதவை அடைக்க மறந்துட்டேன் அதுதான் அதுதான் என் தப்பு. அப்புறம் அவனை அவனை பார்த்தேனா? பயந்துட்டேன்.

“பயந்ததும் மறந்துட்டேன், எல்லாம் மறந்துட்டேன். ஏற்கெனவே. ஒரு தடவை… அது வேற இடம்… எதையோ நினைவுக் கூர்ந்தவளாக…. போலீஸ் நான் அழைச்சு… அங்க… என்னைய…என்னைய ரொம்ப கேவலப் படுத்திட்டாங்களா? அதான் யார் ஞாபகமும் வரலை எனக்கு, சத்தியமா வேணும்னு உங்களை மறக்கலை பிரனீத்”

“அதை விடுமா…., அப்ப உன்னை தெரியாம திட்டிட்டேன், நான் உன்னை திட்டக் கூடாதா, விடுடா?”

விசும்பியவளை இப்போது அதட்டினான்… கெஞ்சலை விட அதட்டல் பயனளித்தது.

“மறுபடியும் அழுற… நீ இங்கே தனியா இருந்துப்பியா? இல்லை நேற்றுப் போல ஹோட்டல் போகலாமா?”, உடனடியாக பதில் வந்தது, “வேணாம் இங்கேயே இருந்துப்பேன்” மறுத்து தலையாட்டினாள்.

“தலையை மட்டும் நல்லா ஆட்டுற?” பிடித்து அவனும் ஆட்டினான்… சிரித்தாள்.

“இங்கே வாங்க” சுவற்றில் பதித்திருந்த அந்த முழு நீளக்கண்ணாடி முன் நிறுத்தினாள். கண்ணாடியை ஆசையாய் பார்த்திருந்தாள். “இதுதான் என் ஃப்ரெண்ட், நான் உங்களைப் பத்தி அடிக்கடி இவளோட பேசிட்டு இருப்பேன்” அவள் மனநிலை புரிந்து புன்னகைத்தான்.

அவள் தோளில் கைப் போட்டு கண்ணாடி முன் அவள் உயரத்திற்கு குனிந்து முகத்தோடு முகம் வைத்து கண்ணாடியைப் பார்த்தான். “இப்ப ஹாப்பியா?” வினவினான்.

“ம்ம்” தலையசைத்தவளிடம் விடைப்பெற்று புறப்பட்டான். மாடியில் பால்கனியில் வந்து நின்றவளிடம் தென்றல் புதுக்கதை பேசிச் சென்றது. மேலடுக்கில் மற்ற நான்கு வீடுகளிலும் ஆட்கள் இல்லாதபோதும் கூட அவளால் பயமில்லாமல் அங்கு நிற்க முடிந்தது. சுதந்திரக் காற்று அவளது முடியைத் தொட்டு, சுழற்றி விளையாடியது.

கீழே சென்றவன் வீட்டு ஓனரிடம் எதையோ பேசிக் கொண்டிருந்தான். இப்போது பிரனீத்தின் செயல்கள் அதிகாரமாய் தெரியவில்லை. அவன் எல்லாம் சரியாகத்தான் செய்வான் என உறுதியாய் நம்பினாள்.

கேட்டைத் தாண்டிச் செல்லுகையில் கீழிருந்து கை ஆட்டி விடைப்பெற்றான் அவளும் மேலிருந்து கையாட்டினாள். தனக்கென ஒரு சொந்தம் அவனோடு தான்… மனம் விகசிக்க நின்றவள், தன்னைத் திரும்பிப் பார்த்தவனின் புன்னகையை அந்த இருட்டிலும் உணர்ந்து இரசித்தாள்.

இரவு அவள் மீது கருணை கூர்ந்து இருகரங்கள் நீட்டி அவளை அணைத்துக் கொண்டது, நிம்மதியானதொரு தூக்கம் அவளை ஆட்கொண்டது.

அடுத்த நாள்

அலுவலகத்தில் எப்படித்தான் தெரிந்ததோ? அவள் வானரக் கூட்டம் ரிசப்ஷனை கடக்கையிலேயே அவளை சூழ்ந்துக் கொண்டனர். கையில் இருந்த காயத்தை பார்த்து விசாரித்தவர்கள் அதற்கும் அவளை சீண்டினார்கள். அவர்களுள் ஒருவள், “காதல் கனாக் கண்டுட்டே கையில கத்தியால வெட்டிகிட்டாங்களோ?” என கிண்டலடிக்க மற்றவனோ “ஆஃபீஸ்ல யாரோ பார்க்குறாங்க, பார்க்குறாங்கன்னு சொன்னது இவரைத்தானாக்கா?”

‘அட ஆமாம் இல்ல இதை எப்படி மறந்தோம்?’ பிரனீத்திடம் கேட்க வேண்டிய கேள்விகளில் மற்றும் ஒன்று கூடிவிட்டிருந்தது. அவன் அவளுக்குப் பதில் சொல்வானா என்ன?

அவர்களை ஒருவாறு சமாளித்து தனது டீமிற்குச் செல்ல அங்கே வாழ்த்து மழையும் கைக்காயத்திற்கான விசாரிப்பும் தான் தொடர்ந்தது. வழக்கம் போல மதியம் பிரனீத் தனது டீமிடம் வர ஆர்ப்பரித்தது அந்த இடம்.

அதுவரையில் பிரனீத் டீம் ஆலீஸிடம் வராமல் இருக்க, இப்போது இருவருக்கும் வாழ்த்துக் கூற ஆரம்பித்தனர். மணிவண்ணன் புன்னகைப் பூத்த முகமாய் நிற்க, அவனது வித்தியாசமான புன்னகைக்கு அவளுக்கு அப்போதுதான் அர்த்தம் புரிந்தது.

“அடப்பாவிகளா, எல்லோர் கிட்டயும் சொல்லி மானத்த கப்பலேத்திட்டாங்க போலவே?” கூச்சமாய் உணர்ந்தாள். “ஏ ஆலிஸ் நான் ஹையர் மேனேஜ்மெண்ட் கிட்டதான் சொல்லிருந்தேன். இவங்களுக்கு நான் சொல்லலை” அருகில் வந்த பிரனீத் தன் கைகளை பரிதாபமாய் தூக்கினான்.

‘முன் தினம் ஆலீஸிற்காக பிரனீத் லீவ் சொல்லியிருக்க, அவர்களது கற்பனைச் சிறகுகள் விரியாமலா இருக்கும்?’  யூகித்தவள் நிலைமை புரிந்து அமைதியானாள்.

பல்வேறு பிரச்சனைகளில் அவர்கள் முன் தினம் உழன்றிருக்க, இவர்கள் ஊர் சுற்றி வந்ததாக கற்பனைக் கதைகள் ஜோடிக்கப்பட்டன. அதுவும் கூட இதமாகத்தான் இருந்தது. வழக்கமாய் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சைட் அடிக்கிறவள் இன்று அவனைக் காண துணியவில்லை, வெட்கம் பிடுங்கித் தின்றது.

அவன் வழக்கம் போலவே இருந்தான் எந்த மாற்றமும் இல்லை. இந்த ஊமைக் கோட்டான் தானா தன்னோடு கடந்த இரண்டு நாட்களாக துணை நின்றது? தனக்காக பிறரை எதிர்த்தது? தன்னை பார்த்ததே இல்லையே அல்லது அவன் பார்த்ததை நான் பார்த்தது இல்லையோ? கேள்விகள் ஒரு பக்கம் வரிசைக் கட்டி நிற்க, அதைத் தாண்டியும் அவனைக் குறித்த பல்வேறு எண்ணங்களில் மனம் விகசித்தது, அவன் மீது அளவிலாமல் காதல் பெருகியது.

அன்றைய நாளின் வேலைகள் முடிய அவளுக்காக காத்திருந்து கூடவே வந்தான். ஆஃபீஸ் கேம்பஸ் முடிந்து ரோட்டோரமாய் வந்ததும் அவள் கையை கேளாமலே பற்றிக் கொண்டான்.

“வீட்டுக்கு போகலாமா? சமைச்சுப் போடுவியா? புன்னகைத்தான்.

“நான் சுமாராதான் சமைப்பேன்” தயங்கினாள். “எதுனாலும் பரவால்ல வா” அழைத்துச் சென்றான். வீட்டை திறந்ததும் தன்னை சுத்தம் செய்து வந்தவன் உள்ளே இருந்த ஒரு இருக்கையை எடுத்து மாடி பால்கனியில் போட்டு அமர்ந்தான்.

“நீ ஃப்ரெஷ் ஆகிக்க” தன் மொபைலை நோண்ட தொடங்கினான்.

கதவை உள்ளுக்குள் அடைத்தவள் கட்டிலில் இருந்த அவனது லேப்டாப் பையை பார்த்தாள். உரிமையாய் அவள் வாழ்வில் அவனவன் லாப்டாப்பை வருடியவள் அதன் முன்பு உடை மாற்ற கூசியவளாய் துணியால் மூடிப் போட்டாள். வாசலில் உரிமையாய் அவளவன் நினைக்கவே பரவசமாக இருக்க துள்ளலாகினாள். குளித்து, துணிகளை துவைத்துப் பிழிந்து வெளியில் கொடியில் காயப் போட்டாள். அவன் அவளுக்கு அதிகமாய் பழகி அறியாதவன் என்பது போன்ற உணர்வே ஏற்படவில்லை.

காலம் காலமாய் இருவரும் அதே வீட்டில் வாழ்வதைப் போல ஒரு உணர்வு. இலகுவான இரவு உடைக்கு மாறி இருந்தவள் சமைக்கத் தொடங்கினாள். அன்றைய உணவு மிக எளிமையானதுதான்… சமைக்கும் போது உதவி வேண்டுமா? எனக் கேட்டவன் அவள் மறுக்கவும், சமைத்து முடிக்கும் வரை பேச்சுக் கொடுத்துக் கொண்டு இருந்தான், சமைத்ததும் அவளோடு இணைந்து உண்டான். அவளது புன்னகையின் அளவில் அவள் மகிழ்ச்சியின் அளவை புரிந்துக் கொண்டான். கட்டிலில் மூடிப்போடப் பட்ட லாப்டாப் பையின் மீதிருந்த அவளது துப்பட்டாவை எடுத்து வைக்கையில் அவளது அசட்டுப் பார்வை எதையோ உணர்த்தினாலும் அவன் ஒன்றும் கேட்கவில்லை.

“அம்மாகிட்ட பேசலாமா?” கேட்டவன் போனை இணைக்க, தனது உடையை கவனித்தவள் ‘நல்ல வேளை வீடியோ கால் இல்லை’ என அவனருகே கட்டிலில் அமர்ந்தாள்.

“அம்மாவுக்கு இங்கே நடந்த பிரச்சனை எல்லாம் தெரியாது, பயந்திடுவாங்கன்னு சொல்லலை. நீயும் சொல்லாதே ஓகேவா?” வழக்கம் போல அவள் தலையசைந்ததைப் பார்த்து புன்னகைத்தான்.

“அம்மா… இதோ இங்க தான் இருக்காமா? என்னை விசாரிக்கலை எடுத்ததும் அவளை விசாரிக்கிறீங்க இது சரியில்ல” எதிர் தரப்பில் என்ன சொன்னார்களோ ஸ்பீக்கரில் போட்டவன் “இந்தா பேசு”

“ஆன்டி…” தயக்கமாக ஆலிஸ் பேச,

“அத்தை”னு சொல்லணும் கண்டிப்பாக குரல் ஒலிக்க… “அத்தை நல்லாயிருக்கீங்களா? மாமா…அப்புறம்…” அவன் தங்கை பெயர் தெரியாமல் திணற… “தாருணி” எடுத்துக் கொடுத்தான்.

“மாமா அப்புறம் தாருணிமா எல்லோரும் நல்லா இருக்காங்களா?”

“அண்ணி, இவன் இப்பதான் என் பேர் சொல்லித் தரானா? ஃப்ராடு ஃப்ராடு நீ இங்கே வா உன்னைப் பார்த்துக்கிறேன்” சண்டைப் பிடித்தாள்.

“ச்சே என்ன சத்தம், தள்ளிப் போடி, நான் பேசுறவரைக்கும் சும்மா இரு”

உருவம் அப்பா மாதிரி, ஆர்டர் போடுறதில் அம்மா மாதிரி அருகில் இருந்தவனை அளந்தாள் ஆலிஸ்.

“சரி சரி விடுறாமா தாருணி… இங்க வந்ததும் சண்டை பிடி நல்லா சண்டை போட்டுட்டு சேர்ந்துக்கோங்க” பிரனீத்தின் அம்மா மகளிடம் சொன்னதில் இவளுக்கு சிரிப்பு வந்தது. “அண்ணி சிரிக்காதீங்க” பின்னால் தாருணியின் குரல் கேட்க இவள் பதில் பேசும் முன்,

“கல்யாணம் எப்ப வச்சுக்கிறதா முடிவு பண்ணிருக்கீங்க பொண்ணே?” கேட்டார்.

இங்கோ இவள் திருதிருக்க, “நாங்க இன்னும் தேதி முடிவு செய்யலைமா” பிரனீத் பதிலளித்தான்.

“அப்படின்னா இரண்டு நாளா என்னதான் பேசினீங்க? என் பேர் சொல்லிக் கொடுக்கலை, கல்யாண தேதி ஃபிக்ஸ் செய்யலை… போ அண்ணா. சரி சரி மாதாஜி முறைக்காதீங்க நான் போறேன்… அப்புறமா பேசுறேன்.”

“போறியா? சரி ரொம்ப நல்லதாப் போச்சு. இரண்டு பேரும் பேசி ஒரு தேதி சொல்லுங்க. இவனுக்கு வயசு கூடிட்டே போகுதுன்னு நாங்க கவலையில் இருக்க வேலை வேலைனு திரியுறான்.” மகனுக்கு கூடுதலாக நாலு திட்டுக்கள் கிடைக்க ஆலிஸ் முழி பிதுங்கினாள்.

“அம்மா போதும், இத்தோட நிறுத்திக்கோங்க, இங்கே டேமேஜ் ஆகுது. நான் நாளைக்கு எப்ப கல்யாணம் வச்சுக்கலாம்னு சொல்றேன்”

ஒரு வழியாக பேசி முடித்து, “எப்பன்னு சொல்லட்டும்?” கேட்டான்.

“எப்பன்னாலும் ஓகே தான்.”

“இடமாற்றத்தினால உனக்குத்தான் நிறைய விஷயம் மாறும் என்ன யோசிச்சு வச்சிருக்க?”

வீட்டைச் சுற்றிப் பார்த்தாள்… ஒவ்வொரு பொருளும் அவள் ஆசையாக வாங்கியது. தேவையானதை மட்டும் வச்சுட்டு மீதியை வித்துற வேண்டியதுதான்.

“ஒவ்வொன்னும் வாங்குறப்ப என்ன நினைச்சிருந்த?” அவளிடமிருந்து சில தகவல்கள் அவளறியாமல் வாங்கினான். ஊர்ல யார் யாருக்குச் சொல்லணும்? உனக்கு க்ளோஸ் யாரு?

பேச ஆள் கிடைத்த ஜோரில் மனம் விட்டு எல்லாம் பேசினாள். அவன் கேட்டவற்றை துளி கூட குறையாமல் பகிர்ந்துக் கொண்டாள்.

“நாளைக்கு எந்த தேதி சரிவரும்னு நான் சொல்றேன்? உனக்கு சரியான்னு பார்த்துக்கோ” ம்ம்ம் மறுபடி ஒரு தலையாட்டல்.

“பிரனீத், என் கிட்ட கொஞ்சம் ரூபா இருக்கு அதை உங்க அக்கவுண்ட்கு மாற்றி விடட்டுமா?”

“எதுக்கு?”

“நம்ம கல்யாணச் செலவுக்கு…”

“எவ்வளவு வச்சிருக்க?”

“5 லட்சம் இருக்கு”

“உன் லைஃப் டைம் சேவிங்க்…ஒருவேளை நான் அதை எடுத்துட்டு ஓடிப் போயிட்டா?”

“ஏன் அப்படி சொல்றீங்க?”

“அதென்ன உடனே பணம் அனுப்பி வைக்கிறேன்னு சொல்லுற? உனக்கு என் மேல எப்படி இவ்வளவு நம்பிக்கை?”

“உங்களை நம்பாம யாரை நம்புவேன்?” கண்ணில் அவ்வளவு திடம்.

………… நெருங்கி வந்து அணைத்துக் கொண்டான்.

“இனிமே இப்படி பேசாதீங்க, புடிக்கல”

“சரிமா… சும்மா கேட்டேன்” வாயில் அடித்தவளின் கையில் முத்தம் வைத்தான்.

“எவ்வளவு தேவைப்படும்னு நாளைக்கு சொல்றேன், அனுப்பு” விடைப்பெற்றான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here