13. TKSN

0
1249

தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!

அத்தியாயம் 13

சென்னை அலுவலகத்தில் ஆலிஸிற்கும் பிரனீத்திற்குமான பிரியாவிடை களைக்கட்டியது. அலுவலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகள் புனிதாவிற்கு விஷயம் முதலில் தெரியாமலிருக்க, தெரிந்ததும் ஆச்சரியப்பட்டாள் மகிழ்ச்சியோடு வந்து வாழ்த்தினாள். அவளைப் போலவே சிலர் இருக்க, சிலருக்கு இத்தனை வயதிற்குப் பின்னர் இவளுக்கு வந்த வாழ்வைப் பாரேன் என்பது போல இருந்தது. கைக்குலுக்கலும் வாழ்த்துக்களும் இருந்தாலும் கூட அவர்களின் கண்களே பொறாமைத்தனத்தை வெளிப்படுத்தியது.

அவளது டிபார்ட்மென்ட் ஹெட், மற்ற தலைமைகள் இருவரையும் அழைத்து பேசி வாழ்த்துகள் தெரிவித்தனர். “என்னய்யா எங்க ப்ராஞ்ச் டாப் பர்ஃபாமரை பெங்களுர் ப்ராஞ்சுக்கு தூக்கிட்டுப் போற? கொஞ்சம் கூட நல்லாயில்லை” சிரித்தார். மணிவண்ணன் உட்பட மற்ற மேனேஜர்களும் வந்து கைக்குலுக்கி வாழ்த்துகள் தெரிவித்தனர். அமித்தும் கூட நறுவிசாக வாழ்த்திச் சென்றான். அரசியலில் மட்டுமல்ல அலுவலகத்திலும் நிரந்த நட்பும் இல்லை எதிரியும் இல்லை.

பிரனீத்தின் காரணமாகவே தனக்கு மேலதிகாரிகளின் இத்தனை வாழ்த்துகள் என அவளுக்கு புரியாமலில்லை. தனது டீமை ஒப்படைத்து விட்டு சென்னை அலுவலகத்தினின்று விடைப்பெற்று பெங்களூருக்கு புறப்பட ஆயத்தமானாள்.

சென்னையிலுள்ள வேலைகள் எல்லாவற்றையும் முடிக்க அவளிடம் ஒரு வாரகாலம் மீதம் இருந்தது அதன் பின்னர் அவள் பெங்களூர் அலுவலகத்தில் தன் வேலைகளை பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். பிரனீத்தின் சில வேலைகள் அவர்களை சென்னையில் கட்டிப் போட்டிருந்தன.

அந்த ஒரு வாரத்தையும் தனக்கு நெருக்கமான நட்புக்களை சந்திப்பதில் செலவிட்டாள். ஊருக்கு புறப்படுவதற்கான ஆயத்தங்களை ஏற்கெனவே முடித்து விட்டிருந்தாள். அலுவல் முடிந்து வருகின்றவனோடு சூரியன் சாயும் வேளைகளை கைக் கோர்த்துக் கடந்தாள் அவர்கள் பேசத்தான் ஏராளம் இருந்தனவே. ஆனால், அவனிடம் அவனது காதல் கதை குறித்துக் கேட்டால் மட்டும் ஒருபோதும் பதில் கிடைக்காது.

“எதை செஞ்சாலும் ப்ளானோட செய்யணும், இப்ப உன் கிட்ட என் லவ் ஸ்டோரி சொன்னா என்ன கிடைக்கும்? ஒன்னும் கிடைக்காது.அதனால், தகுந்த நேரத்தில் சொல்லப்படும்” கண்ணடிப்பான். “அப்புறம் மட்டும் இவருக்கு என்ன கிடைக்கப் போகுதாம்?” அவன் பேச்சு அவளுக்கு புரிவதில்லை அதனால் விட்டு விட்டாள்.

வார இறுதியில் பிரனீத் இவளது நட்புக்களையும், அலுவலகத்தில் நெருக்கமானவர்களையும், குறிப்பாக இவளது முந்தைய டீமையும் ஒன்றாக அழைத்து மதிய விருந்தளித்தான். “அக்கா மாம்ஸ் சூப்பர்” அவளது வாழ்வின் வைபவத்தை அவளை நேசிப்பவர்கள் அனைவரும் அவ்வளவாய் கொண்டாடினர். வேண்டாம் என மறுத்தும் பரிசுப் பொருள்கள் குவிந்தன. ஒவ்வொருவரும் அவளோடு இழைந்ததில், குறிப்பாக அக்கா அக்காவென பெண்கள் முத்தம் வைத்ததில் காட்டிக் கொள்ளாவிடினும் பிரனீத்தின் பொறுமை கரைக் கடக்கவிருந்தது.

அன்று அவள் சேலை அணிந்திருந்தாள், அவள் பொன்னிற மேனியை அந்த அடர் பிங்க் நிற அந்தச் சேலை அழகாய் தழுவியிருந்தது.வழக்கத்திற்கு அதிகமாக கவனமெடுத்து தன்னை அலங்கரித்து இருந்தாள்.எப்போதாவது அவள் முகத்தை அலங்கரிக்கும் நெற்றிப் பொட்டோடு கூட பெரிய காது ஜிமிக்கிகள், கை வளைகள் மற்றும் உதடு, கன்னங்கள் என அங்கங்கே மின்னிய சாயங்கள், எல்லாவற்றையும் விட அவள் முகத்தில் இருந்த பொலிவு. உணவு முடிந்து பலரும் விடைப் பெற்றுச் செல்ல அக்கா அக்காவென கூடவே கடற்கரை வரைக்கும் சிலர் வந்திருக்க, வாய் வலிக்க அரட்டை அடித்து அனைவரும் விடைபெற்றனர்.

பிரனீத்துடன் சற்று நேரம் கடற்கரையில் அமர்ந்திருக்க சேலை அது பாட்டிற்கு காற்றில் படபடத்து அவள் செல்லத் தொப்பையைக் காட்டி அவனைப் படுத்தியது.

“ட்ரீட் கொடுப்பீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை பிரனீத்… சூப்பர்”, முல்லைப் பற்கள் தெரிய சிரித்தாள்.

“அவங்க அக்காவை கடத்திட்டு போறேன்ல, அதுக்கு இலஞ்சம்” என்றவனிடம் மறுபடி சிரித்தாள்.

கண்ணெடுக்காமல் அவளைப் பார்த்தவன் தன்னையறியாமல் nanna aparanji (my precious) என்றான்.

அவன் அவ்வப்போது அவளிடம் கன்னடத்தில் எதையாவது சொல்லி வைப்பதுண்டு. அவள் அதை கவனித்ததில்லை. இன்றைக்கு அருகில் அமர்ந்ததும் இலகுவான மன நிலையில் இருந்ததும் கண்டுக் கொண்டாள்.

“என்னச் சொன்னீங்க நான் அபரஞ்சியா? அபரஞ்சி உங்களோட இன்னொரு பேரா?” அவளது கேள்வி இவனுக்கு விளையாட்டாக இருக்க “ஆமாம்” என தலையசைத்தான். அவன் பேச இப்போது தலையசைப்பது அவனது முறையோ?

“பேர் அழகாருக்கு ஆனா பொண்ணுங்க பேர் போல இருக்கே?” சிந்தித்தவள்… சூப்பர்ல ஆலிஸ் & அப்பரஞ்சி ரெண்டும் “A” அதாவது… “ஆலிஸ் அப்பரஞ்சி”… அவனிடம் சொல்ல,

“ஆமாம், ஆலிஸ் அப்பரஞ்சி தான் சந்தேகமே இல்லை” புன்னகைத்தான்.”ஆனால், பெயர் மட்டும் எப்பவும் ஆலிஸ் பிரனீத் ஓகே”

“ஓகே” அவனைப் போலவே வார்த்தையை பிரதியெடுத்தாள். வழக்கம் போல அவன் எதையாவது சொல்லி ஓகே சொல்லும் போதெல்லாம் கிளிப்பிள்ளையாகச் சொல்லும் “You are bossy” ஐச் சொல்லி நாக்கை துருத்தினாள். அவளால் உள்ளுக்குள் உணர்வலைகள் பேயாட்டம் போட, தன் முகபாவம் வித்தியாசம் காட்டாமல் எழுந்து நின்றான். அவளும் எழுந்து நிற்க தன்னிச்சையாய் கரங்கள் கோர்த்துக் கொண்டன.

“என் வலதுக்கையில் பத்து விரல்… பத்து விரல்” பாடலை ஹம்ம் செய்தாள். அவர்கள் அவள் வீட்டிற்கு வந்துச் சேர்ந்தனர். வெயில் இன்னும் உள்ளூர ஊடுருவ, கதவை சாற்றி வைத்தவள் வாய் ஓயாமல் அவள் மட்டுமே அன்றைய தினத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்க அமைதியாக இருந்தான்.

“என்னாச்சு பிரனீத்? எதிரில் நின்றவள் விசாரிக்க…

“ரொம்ப டிஸ்டர்ப் ஆகுது?” என்றான். தள்ளி நின்றவள் நெருங்கி வந்து அவன் தலையை கோதி விட்டாள், “என்னாச்சு? வேலை டென்ஷனா?”

அவள் நெருங்கி தலைக் கோதி நிற்கவும் சட்டென்று எழுந்து நின்றான், “நான் வரேன் ஆலிஸ், நாளைக்கு நேரமே புறப்பட்டுரு. லக்கேஜ் நிறைய சேர்க்காதே, காலை பத்து மணிக்கெல்லாம் ஏர்போர்ட்ல இருக்கணும்.”

“என்னாச்சுன்னு சொல்ல மாட்டீங்களா?” தவிப்புடன் கேட்க, அந்த நாளின் இனிமையை கெடுக்க விரும்பாதவனாக செல்லாமல் நின்றான். இழுத்து அவளை இறுக்க அணைத்துக் கொண்டான் “Nanna mudhu (என் செல்லம்)” வாய் முணுமுணுக்க ‘உங்க பேர் அப்பரஞ்சியா, முத்துவா?” வினவியவளிடம்

“என்னை நல்லவனா இருக்கவே விட மாட்டியாடீ” கைகள் அத்து மீற அவன் இறுக்கியதில் தோளில் மடிப்பு வைத்திருந்த தோள் சேலைப் பின் தெரித்து விழுந்தது. புன்னகைத்து அவனைப் பித்தாக்கிய அவள் உதடுகள் களவு போயிருந்தன.

அவன் டி ஷர்ட் காலரைப் பற்றியிருந்தவள் அவன் ஏற்படுத்திய சுனாமியிலிருந்து விடுபட அவனுக்குள் தஞ்சம் புகுந்தாள். கலைந்த தலைமுடி விலக்கினான். தன் தோளில் சாய்ந்திருந்தவளின் கன்னம் தடவினான். கழுத்தூடாக பின்னங்கழுத்தில் பெருவிரல் பயணிக்க பெருமுயற்சியோடு தன்னை கட்டுப் படுத்தினான். வழக்கமான நெற்றி முத்தம், உச்சந்தலை முத்தம் அவளுள் பனிப்பொழிவாய் இறங்கியதும் உணரவும் தன்னவன் உணர்வுகளை வெற்றிகரமாக கைக்கொண்டு விட்டான் எனப் புரிந்தவள் அந்த சுழலினின்று மெதுவே வெளிவந்தாள். அவளிடமிருந்து சற்று விலகியவன் பின் கழன்று காணாமல் போனதால், தோளினின்று பெயர்ந்து கொத்தாய் அவள் கையில் விழுந்திருந்த முந்தானையை மேலே எடுத்துப் போட்டான்.

அவன் போக்கில் அவன் செயல்ப்பட அவளது கண்கள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது. சட்டென்று சில நொடிகள் இருவர் கண்களும் பின்னிக் கொண்டன. அவன் காலரை அவள் விடுவித்தாள், கை வைத்து தேய்த்தால் பரவி விடுமோ? என தனது உதட்டுச் சாயம் பட்டிருந்த அவன் உடையை கவலையாகப் பார்த்தாள்.

“ஒன்னும் பிரச்சனையில்லை” காதோரம் விளையாடிய அவன் விரல்களை கஷ்டப்பட்டு விடுவித்து புன்னகைத்து விடைப்பெற்று நகர்ந்தான்.

ஏற்கெனவே வீட்டு ஓனரிடம் சென்னையிலிருந்த வீட்டை உடனே காலி செய்யாமல் சில மாதங்கள் வரை இருக்கட்டும் எனச் சொல்லி சில மாத வாடகையை முன்பணமாக கொடுத்திருந்ததால், தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு அவளை அழைத்துச் சென்றான்.

‘நல்லவைகள் எல்லாம் தாமதமாகத்தான் கிடைக்கும் போல’ பிரனீத்தின் குடும்பத்தின் அன்பை உணரும் போதெல்லாம் அவள் நினைத்துக் கொள்ளும் விஷயம் இது. பெங்களூர் வந்த நாள் முதல் அவளுக்கு கிடைத்த அன்பும் அரவணைப்பும் அத்தகையது.

தாருணிக்கும் பிரனீத்துக்கும் பதிமூன்று வயது வித்தியாசம் கல்லூரியின் இறுதி ஆண்டில் அவள் இருந்தாள். அவளோடு தான் அவளறையில் ஆலிஸ் தங்கிக் கொண்டாள். “அண்ணி, அண்ணி” என அவள் வால் பிடித்து திரிந்தாள்.

பிரனீத் எப்போதும் போலவே இலகுவாக இருந்தான். அதே அமைதிப் பேச்சுத்தான், அவனும் அப்பாவும் பேசும் போது வீட்டில் அமைதித் தென்றல் வீச, பெண்கள் பேசும் போது வீடு அதிர்ந்து கலகலத்தது.

பிரனீத் வேலைக்கு செல்லும் வரையில் பணிபுரிந்த அவன் அம்மா அதன் பின்னர்தான் வேலையை விட்டிருக்கிறார். கடந்த வருடம் அவன் அப்பா ரிடையர்ட் ஆகி இருக்கிறார் என அறிந்துக் கொண்டாள். நடுத்தரத்திற்கும் மேலான பொருளாதார நிலை கொண்டவர்கள். பெரிய வீடு, இரண்டு கார்கள் இருந்தன. தனது குட்டி வீட்டில் கட்டிலில் தன்னோடு அமர்ந்து உண்ட பிரனீத் அவளுக்கு ஞாபகம் வந்தான் காதலோடு அவள் அவனை ஏறிட்டுப் பார்க்க அவன் அவள் பார்வையை தவிர்க்கின்றானோ?!

அலுவலகத்தில் வழக்கம் போலவே பிரனீத் அடக்கி வாசிக்க, வீட்டிலும் விலகியே நின்றான். அலுவலகம் முடிந்து வருகையில் மனம் விட்டு பேசிக் கொள்வதுண்டு. அருகாமையில் இருக்கும் இடங்களுக்கு ஓரிரண்டு நாட்கள் அழைத்துச் சென்றான். சிரிப்பு விளையாட்டு சீண்டல் என அவளிடத்தில் அவன் அவனாக இருப்பது அப்போதுதான், அப்போது மட்டும் தான்.

தினமும் குடும்பமாய் அமர்ந்து இரவு பேசிக் கொள்வர். அந்த தருணங்கள் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தன. ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையான பேச்சுக்கள் சரஸ்வதியம்மா அதாவது பிரனீத்தின் அம்மாவினுடையது. அவர் இந்தக்காலத்து இளைஞர்களின் மனம் புரிந்த மாடர்ன் அம்மா வகையறா.

மோகன் அதாவது அவள் மாமனார் அமைதியான குணம் யோசித்துப் பேசுகின்றவர். தாருணி அவர்கள் வீட்டுப் பட்டாம்பூச்சி என அக் குடும்பமே அன்பெனும் வலையில் இணைந்த உயிர்களாக தோன்றியது. அந்த குடும்பத்தில் இனி தானும் ஒருத்தி எண்ணுகையிலேயே ஒரு பரவசம்.

அவளுக்கு இதுவரையிலும் அவர்கள் எந்த வகையிலும் கட்டுப்பாடும் விதிக்கவில்லை.அத்தைக்கு உதவிகள் செய்ய அவளாகவே போய் நிற்பாள். சொல்லச் சொல்ல சில வேலைகள் செய்வாள், தெரியாத பலவற்றை அவள் கற்றுக் கொண்டு இருந்தாள்.

அவர்கள் பின்பற்றும் எதையும் அவளிடம் அவர்கள் வலிந்து திணிக்கவில்லை அவள் அவளாகவே இருந்தாள். கூடு சேர்ந்த பரவசம் அவள் மனமெங்கிலும் தித்தித்தது. வழக்கமான ஒரு கலந்துரையாடலில் அப்பாவும் மகனும் எப்போதும் போல அமைதியை தரித்திருக்க,

“நான் வேலைக்கு போனதால இந்த புள்ளைங்களுக்கு அதிக நேரம் கொடுக்க முடியலைனு வருத்தம் உண்டு ஆலிஸ் பொண்ணே, அதனாலத்தான் நீ வேலைக்கு போகாமலிருந்தா நல்லாயிருக்கும்னு நினைச்சேன், மத்தபடி ஒன்னும் இல்லை. இப்ப என்ன? புள்ளைங்களை பார்க்க தான் நான் இருக்கேனே?” ஆலிஸ் வெட்கினாள், அமைதியாய் இருந்தாள்.

“அம்மா, நான் அண்ணன் பாப்பாவை பார்த்துப்பேன்” முந்திரிக் கொட்டையாக தாருணி பதிலளிக்க சிரிப்பு எழுந்து ஓய்ந்தது.

“அண்ணன் பாப்பாவை மட்டுமா பார்த்துக்கப் போற? வேலைக்கு போக மாட்டியா தாரு?” அப்பா கேட்க, “இல்லை பிசினஸ் ஆரம்பிப்பேன், அப்பதான் இஷ்டத்துக்கு லீவு போட்டுக்கலாம், நான் வேலையும் பார்ப்பேன் பாப்பாவையும் பார்த்துப்பேன்.”

“பிசினஸ் ஆரம்பிச்சாதான் லீவு போடாம உழைக்கணும் தாரு, வேலைக்குப் போனா லீவு எடுக்கலாம்.” அண்ணன் சொல்ல, “அதெல்லாம் எனக்கேத்த மாதிரி பிசினஸ் கண்டு பிடிப்பேன்”

“நீ ஸ்மார்ட் கண்டுபிடிக்கத்தான் செய்வ… நோ டவுட்” நம்பிக்கையான வார்த்தைகளை அண்ணன் சொன்னதும் துள்ளிக் கொண்டு இருந்தாள். தன்னுடைய சில திட்டங்களைப் பகிர்ந்துக் கொண்டாள். ஒருவழியாக அண்ணன் பாப்பா கதை அங்கேயே நின்றுப் போக ஆலிஸிற்கு ஆசுவாசம். வெட்கமாய் அமர்ந்திருந்தவளை பிரனீத் காணாமல் கண்டுக் கொண்டிருந்ததை அவள் அறியவில்லை.

‘நான் பார்த்தால் மட்டும் என்னை பார்க்கவா போகிறான்?’ என எண்ணியவளாக பார்வையை தவிர்த்திருந்தாள். அடிக்கடி குடும்பமாய் நிகழும் உரையாடல்கள் அக்குடும்பத்தோடு அவளை உணர்வு ரீதியாக இணைத்து வைத்தன.

இப்படியே ஒரு வாரம் கழிந்து இருந்தது. அவர்களது திருமணம் சில மாதங்கள் கழித்து என்று முடிவானதும் தான் அதுவரையில் ஹாஸ்டல் சென்று தங்குவதாக ஆலிஸ் தன் அத்தையிடம் கூற எதற்கென்று புரியாவிடினும் அவள் மனம் நோக வேண்டாமென்று, “சரி பிரனீத்தை நல்ல ஹாஸ்டலா தேடிப் பார்க்கச் சொல்லுறேன், தெரியாத ஊரில் நீ எதையும் தேடாத” என்று கூறி விட்டார்.

அடுத்த நாள் சாயுங்கால நேரம் அலுவல் நேரம் முடிந்ததும் வழக்கம் போல அலுவலகத்திற்கு பின்புறம் இருந்த கார்டனில் பிரனீத்திற்காக காத்திருந்தாள். அலுவலகத்திற்கு அவளை தன்னோடு காரில் அழைத்து வந்து தன்னோடு வீட்டிற்கு திரும்ப அழைத்துச் செல்வதே அவன் வழக்கம்.

இன்னும் அவள் தலைமை ஏற்கும் குழு முடிவு செய்யப்படவில்லை என்பதால் அவளுக்கு அங்கே வேலைகள் குறைவே. முன்னிரவு அவள் ஹாஸ்டல் செல்ல விரும்புவதைச் சொன்னதும் தாருணிக்கு அவள் மீது கோபம், தனியாக சரஸ்வதியம்மா பேசினார் எனினும் பெரியவர்கள் இருவரும் மாறாக ஒன்றும் சொல்லவில்லை. பிரனீத் காலையில் ஏதோ யோசனையாக இருந்தான் ஆனாலும், இதுவரையிலும் அவளிடம் ஒன்றும் கேட்கவில்லை.

அருகில் வந்து அமர்ந்தவனை பாராமலேயே அவன் என உணர்ந்தாள். “நேரமாயிடுச்சே ஸ்னாக்ஸ் எதுவும் சாப்பிட போவோமா?” வேண்டாமென தலையசைத்தவளைப் பார்த்து புன்னகைத்தான். அதிகமாய் யோசித்தால் மட்டும் இவள் மௌனமாவதை வழக்கமாக்கி இருக்கிறாள்… கடந்த நாட்களில் அவளைப் புரிந்துக் கொண்டு இருந்தான்.

“வீட்ல எதுவும் பிரச்சனையாமா? உனக்கு எதுவும் பிடிக்கலியா? தாருமா எதுவும் சொன்னாளா? எதுக்கு ஹாஸ்டல்? அவன் சொல்லி முடிக்கும் முன் “அச்சச்சோ…” ஆலிஸ் பதறினாள்.

“அதெல்லாம் ஒன்னுமில்ல பிரனீத்… அவன் கரத்தை எடுத்து தனது கரத்தோடு கோர்த்தாள். அவள் கரத்தை அவன் இறுக்கப் பற்றவே சுற்றுப் புறம் பார்த்து அவன் புறங்கையில் முத்தமிட்டாள்

“சாரி ரொம்ப ரொம்ப சாரி”

“எதுக்கு இப்ப?”

“உங்களை ஊமைக் கோட்டான்னு ரொம்ப திட்டிருக்கேன்… அதுக்குத்தான்” மென்மையாய் சிரித்தான்.

“வீட்ல மூத்தப்புள்ளயா இருக்கிறதுக்கு எவ்வளவு பொறுப்பா இருக்கணும்னு புரிஞ்சுக்கிட்டேன்”

“……..”

“நானும் இப்ப மூத்த மருமகள் இல்லையா? பொறுப்பா இருக்கணும் இல்லையா?”

“அதுக்கும் நீ ஹாஸ்டல் போகிறதுக்கும் என்ன சம்பந்தம்?”

“இன்னும் நமக்கு திருமணம் நடக்கலை இப்ப நான் இருக்கிறது தப்புன்னு பட்டது.”

“அதிலென்ன இருக்குமா? அது உன் வீடுதான்.”

“என் வீடு தான் அதனால உரிமையா வரேனே இப்ப கொஞ்சம் நாள் தனியா இருந்துக்கிறேன்”

“தாருணி இப்ப சின்னப்பிள்ள, ஒரு நாள் இல்லை ஒரு நாள் உங்களை தப்பா நினைச்சுக்க கூடாதில்ல, நாம தானே சின்னவங்களுக்கு நல்ல எடுத்துக்காட்டா இருக்கணும்.”

“……”

“நீங்க கூட கொஞ்சம் சங்கடமா உணர்ந்தீங்க தானே? உண்மையச் சொல்லுங்க?”

அம்மா, தங்கை முன்பு அவன் அவளிடம் சகஜமாய் பேசியதில்லை. உரிமை தரும் உறவை அவர்கள் இன்னும் அடைந்திராததால் சின்ன சங்கோஜம் இருந்தது உண்மைதான். பல நேரம் அதற்காகவே தயக்கத்தில் வீட்டில் தங்காமல் அலையும் தன்னை அவள் கண்டுக் கொண்டிருக்கிறாள் போலும்.

சொல்லாமல் தன்னைப் புரிந்துக்கொண்டவளைப் பார்த்தான் “உங்க மரியாதைக்காக, நம்ம மரியாதைக்காக கொஞ்சம் விலகி இருக்கிறேனே” மறுக்க இயலாமல் தலையசைத்தான்.

“ம்ம்” அவள் மனதைப் புரிந்துக் கொண்டவனாக கைப்பிடியில் இருந்த அவள் கையை திருப்பி புறங்கையில் ஆழ்ந்த முத்தமிட்டான்.

“இப்ப நீ சொல்லுறதை நான் கேட்குறேன்ல, அது போல நான் சொல்லுறப்ப ஹாஸ்டலை விட்டு வரணும், சாக்குப் போக்குச் சொல்லக் கூடாது, ஓகே”

முகம் மலர்ந்தாள், “You are bossy” நாக்கைத் துருத்தினாள், இருவரின் புன்னகையில் இருள் பரவிய அந்த இடம் பிரகாசித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here