14. TKSN

0
863

தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!

அத்தியாயம் 14

அடுத்த வாரமே பிரனீத் வசதியான ஒரு ஹாஸ்டல் பார்த்து அவளைச் சேர்த்தான். தினம் தோறும் அலுவலகத்தில் சந்தித்ததில், ஹாஸ்டலில் இருந்து அழைத்து வர, அழைத்துக் கொண்டு விட என அவர்கள் உறவில் வெவ்வேறு இடங்களில் இருப்பதற்கான அவ்வளவான வித்தியாசம் தோன்றவில்லை. வார இறுதிகளில் மட்டும் வீட்டிற்கு வந்து விடுவாள் அந்த நாட்களில் தாருணியுடன் ஊர் சுற்றவே அவளுக்கு சரியாக இருக்கும்.

திருமண நாட்கள் நெருங்கவே இப்போது தினமும் ஒவ்வொரு வேலையாக அலைவதற்கே நேரம் கழிந்தது.  

அன்று அலுவலகத்தினின்று வீட்டிற்கு வந்திருந்தாள். திருமண கார்டுகள் வந்திருந்தன. அதில் மஞ்சள் தடவும் அரிய பெரிய பணியை தாருணி எடுத்திருக்க அவளது அறையில் அமர்ந்து அவற்றில் ஒன்றை எடுத்து, அதனை தடவிக் கொடுத்தபடி அமர்ந்திருந்தாள். இவையெல்லாம் வாழ்நாளில் கற்பனை செய்யாத நிகழ்வுகள் அல்லவா?

பிரனீத்தின் பெற்றோர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இருந்ததைப் போலவே பீட்டர், மெர்ஸி என இவளது பெற்றோர்கள் பெயரையும் குறிப்பிட்டு இருக்கவே அம்மா அப்பா பெயர்களை வருடினாள்.

அவளது மன நிலை புரிந்துக் கொண்டார் போல, தாருணி அருகில் வந்து பேச்சுக் கொடுக்க, “ஆலிஸ் கார்ட் நல்லாயிருக்காம்மா?” அவள் மாமியாரும் வந்து அமர்ந்தார். சுதாரித்தவள்…

“ரொம்ப அழகாயிருக்கு அத்தை…” ம் ம் மற்ற விபரங்களை ஏறெடுத்தவள் “அவங்க பெயர் ஏன் முழுசா போடலை?” என்றாள்.

“யார் பிரனீத் பெயரா?” கேட்டவருக்கு “ஆமா அத்தை அன்னிக்கு அவங்க மத்த பெயர்லாம் சொன்னாங்க அப்பரஞ்சி, முத்துன்னு…”

புரியாதவர்களாக முழிக்க சின்னவளின் மூளை விழித்துக் கொள்ள, “என்ன சொன்னான் அண்ணன்? சொல்லுங்க சொல்லுங்க”

‘தான் எதையோ தவறாக புரிந்துக்கொண்டோமோ என்றவளாய் அவன் சொன்னதை கிளிப் பிள்ளையாய்ச் சொல்ல’ சரஸ்வதியம்மா அங்கிருந்து எழுந்துச் சென்று விட்டார். சிரிப்பை அடக்கிக் கொண்டு போகிறாரோ? அவளுக்குப் புரியவில்லை. திரும்பி பார்த்தவளுக்கு தாருணி விழுந்து விழுந்துச் சிரிப்பது கண்ணில் பட்டது.

ரஜினி படத்தில், “இறுக்கி அணைச்சு ஒரு உம்ம கொடு” என்று மொழித் தெரியாமல் பேசி வாங்கிக் கட்டிக் கொள்வது ஞாபகம் வந்தது. கலவரமாய் கூகிளில் அவ்வார்த்தைகளின் அர்த்தம் தேட அது ஆயிரம் அர்த்தத்தை சொல்லியது. அவளால் முடிவுக்கு வர முடியவில்லை.

தங்கை சிரிக்க்கையில் பிரனீத் வீட்டிற்கு வந்திருந்தான், தங்கையின் அறையில் ‘வழக்கமான சிரிப்பு போல’ என எண்ணியவனாய் தன் அறைக்குச் சென்று விட்டிருந்தான்.

பாவம் போல அண்ணி முழித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்த தாருணி கருணைக் கூர்ந்து, “இங்கே வாங்க?” என்றழைத்து ஆலிஸ் காதில் அர்த்தத்தை சொல்ல அவள் சட்டென்று எழுந்து விட்டாள். ஒரு மாதிரி உள்ளூர வெப்பம் பரவ அவள் முகம் சிவந்து போய் விட்டிருந்தது.

“என்ன பாப்பு, அவளை எதுவும் டீஸ் செய்றியா?” கேட்டவாறு பிரனீத் உள்ளே நுழைய,

“மூக்கு வேர்த்துடுச்சா உங்களுக்கு, டீஸ் தான் செஞ்சேன், ஆனா ஆரம்பிச்சது நீதான் அண்ணா” என்றவளாக அறையை விட்டு வெளியே சென்றாள்.இன்னும் அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டு தான் இருந்தாள்.

தங்கைச் சொன்னது புரியாததால் வந்த வேலையைப் பார்த்தான்“ஆலிஸ் கார்ட் நல்லா இருக்கா? பார்த்தியா?” திருமணக் கார்டை இரசித்தான்.

திரும்பாமல் நின்றுக் கொண்டிருந்தவளிடம் கார்டை தூக்கிக் கொண்டு வந்தவன் “என்னாச்சு?”

“உங்களால என் மானம் கப்பலேறிடுச்சு” அவன் தோளில் இரண்டு அடிப் போட்டாள். நடந்ததை சொல்லவும் அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.

“செல்லுவா” நாடிப் பிடித்துக் கொஞ்சினான்…

“போங்க போங்க, எப்படி என்னை ஏமாத்திருக்கீங்க? ஆலிஸ் அப்பரஞ்சி தான்னு வேற சொன்னீங்க”

“மறுபடியும் சொல்றேன் ஆலிஸ் அப்பரஞ்சி தான்.ஆனால், பெயர் மட்டும் எப்பவும் ஆலிஸ் பிரனீத்.  நீ சொக்கத் தங்கம், எனக்கு எப்பவும் விலைமதிப்பில்லாதவ”

நெடு நாளாக கிடைக்காத தனிமை கிட்டியிருக்க அவன் தோள் தேடி அவள் தஞ்சமடைந்தாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here