15. TKSN

0
893

தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!

அத்தியாயம் 15

திருமண உடை, அலங்காரம் என நாட்கள் ஜெட் வேகத்தில் பறந்துக் கொண்டு இருந்தன. திருமணத்திற்கு இரண்டு வாரங்கள் முன்பு ஆலிஸை ஹாஸ்டலை விட்டு வரும் படி செய்தான் பிரனீத். அடுத்த வாரத்திலிருந்து அலுவலக விடுப்பு இருவருக்கும் ஆரம்பமாக இருந்தது.

“இதுக்காகவா ஹாஸ்டல் போனீங்க, நான் அதெல்லாம் உங்களை எப்பவும் தப்பா நினைக்க மாட்டேன் அண்ணி” கட்டிக் கொண்டாள்.

“ரொம்ப தொணதொணத்து கேட்கவும் சொல்ல வேண்டியதாப் போச்சு” அருகிருந்தவனை அவள் ஒன்றும் சொல்லவில்லை.

“இதுக்காகவெல்லாம் நீ ஹாஸ்டல் போயிருக்க தேவையில்லமா, நீயும் என் மகள் தான்” அமைதியான மாமனாரிடமிருந்து அவளுக்கான பதில் வந்தது.

“அத்தை…” தயக்கமாக அவரைப் பார்க்க அவர் முகத்தில் கலவையான உணர்வு, அவள் புரிதல் குறித்து அவருக்குச் சற்று பெருமிதமே.

மாமியாராக தனிமையில் மட்டுமே ஆலிஸிற்கான அறிவுரையைச் சொன்னார்.

“நீ யோசிச்ச விதம் உன் மனமுதிர்ச்சியைக் காட்டுது, இதுவரை எப்படியோ இனி அதுவும் திருமணத்துக்கு அப்புறம் இப்படி இருக்கக் கூடாது. உன் உரிமையை, வாழ்க்கையை எப்பவும் மத்தவங்களுக்காக விட்டுக் கொடுக்கக் கூடாது. மற்றவங்க போலில்லாம உங்க இரண்டு பேருக்குமே தாமதமான திருமணம். எனக்கெல்லாம் உன் கிட்ட ஒரே ஒரு எதிர்பார்ப்புத்தான் நீயும் அவனும் சந்தோஷமா நிறைவா வாழணும். யாருக்காகவும் எதையும் சமரசம் பண்ணிக்கக் கூடாது. என்னப் புரியுதா?”

இத்தனை அக்கறையான கருத்தில் அவள் பதிலென்னச் சொல்ல தேவையிருந்தது? தலையசைத்து அவர் கூறியதை அப்படியே ஏற்றுக் கொண்டாள். வெகு மகிழ்ச்சியாக வலம் வந்தாள்.

ஏனோ, திருமணத்திற்கு முந்தைய சில நாட்கள் ஆழ்ந்த அமைதியிலிருந்தாள் அடிக்கடி எதையாவது கொரிப்பது, பதட்டம் எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டுவது என இருக்க சரஸ்வதியம்மாள் மகனை அழைத்தார்.

“அவ சரியில்லடா, மனசுக்குள்ள எதையும் போட்டு குழப்பிக்கிறா போல… என்னன்னு கேளு?”

“என்னம்மா? என்னாச்சுமா?”

“என் கிட்ட கேட்டா? எங்களுக்காகப் பார்த்து அவளை தனிமையில் விடாதே. மனசுக்குள்ள என்ன இருக்கோ? போய் பேசு, இல்லை வெளியில் அழைச்சுட்டுப் போ”

“அவ கூட தான்மா இருந்தேன், ஷாப்பிங்க்லாம் சேர்ந்து தான் போனோம்.”

“ஊர் சுத்துறதும் மனசு விட்டு பேசுறதும் வேற வேற.அவ உன் பொறுப்பு யார் என்ன நினைப்பாங்கன்னு மத்தவங்களுக்காக பார்த்து அவளை தவிர்க்காதே. நாங்க இருக்கிறோம்தான் ஆனால், உணர்வு ரீதியா அவள் உன் கிட்ட தான் எதையும் பகிர்ந்துக்க முடியும். புரிஞ்சு நடந்துக்கோ. திருமணம் முடிவு இல்லை ஆரம்பம். அவளை எப்பவும் தவிக்க விட்டுறாதே. எப்பவும் நீ அவளுக்கு பக்கத்திலயே இருக்கேங்கிற நம்பிக்கையை கொடுக்கணும்…போ”

இந்த தலைமுறைகளுக்கு அவ்வப்போது அறிவுரைகள் தேவைப்படுகின்றனதான்.

தங்கையில் அறைக்குள் சென்றான், ஆலிஸ் மட்டுமாய் தன் பெற்றோரின் புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டு ஜன்னல் வழியே அறையைத் தாண்டி வெளியில் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.

“ஆலிஸ்” என்றதும் முதன் முறை சுற்றம் பார்க்காமல் அவனைக் கட்டிக் கொண்டாள்.

“என் வாழ்க்கையில இதெல்லாம் நடக்கும்னு நான் நினைச்சே பார்த்ததில்ல தெரியுமா?” அவன் கேட்காமலேயே மனதில் இருந்ததைக் கொட்டினாள்.

தலையை வருடி விட்டான்… ”தேங்க்ஸ் பிரனீத், லவ் யூ”

“தேங்க்ஸ் எதுக்கு? அப்படின்னா என்னைக் கட்டிக்கிடறதுக்கு நானும் தேங்க்ஸ் சொல்லணும் தானே?

“ஆ…அப்படி இல்லை” சிரித்தாள்.

“இந்தா உன் தேங்க்ஸை திருப்பி வாங்கிக்கோ” கொடுப்பதாக பாவனைச் செய்ய மேலும் சிரித்தாள்.

“எப்பவும் சொல்லுறதுதான் மறுபடிச் சொல்றேன். எல்லாத்தையும் மனசுக்குள்ள வச்சுக்காதே, பகிர்ந்துக்கோ. இனி நீ தனியில்ல நான் இருக்கிறேன்ல”

“ம்ம்” அவளது கைகள் அவனைச் சுற்றிக் கட்டிக்கொண்டன. தன் மன ஏக்கங்களை, பெற்றோரை மனம் தேடுவதை இன்னும் பலவற்றையும் பகிர்ந்துக் கொண்டிருந்தாள். பல நேரங்களில் தேவையாக இருப்பது நம் பேச்சை கேட்கும் ஒரு காது. நமக்குப் பிடித்த நாம் முக்கியமானவர்கள் எனக் கருதுவோரின் காது மட்டுமே.

திருமண நாளும் வந்தது மூன்று நாட்கள் அவர்கள் திருமணம் களைக்கட்டியது. ஊரிலிருந்து அவள் உறவினர்களும் வந்திருந்தனர். திருமணத்திற்கே உரிய புறம் பேசுதல், குறை பேசுதல் எல்லாம் சிறப்பே நடந்தன. குறிப்பாக வேற்று மொழி, வேற்றுமதம் என மணப்பெண் குறித்த அங்கலாய்ப்பு ஏகத்திற்கும் இருந்தன. மணமக்களோ குடும்பத்தினரோ அதைக் கண்டுக் கொள்ளவில்லை.

ஓய்வாக அமர்ந்திருந்தாள் ஆலிஸ் அது பிரனீத்தின் அறை. அன்று அவர்களது முதலிரவு. அந்தஅறையோ எளிமையாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பிரனீத் தனது நெருங்கிய நட்பு யாரையோ வழி அனுப்பச் சென்றிருந்தான். நேரத்தை நெட்டித் தள்ளியவளாய் தன் கழுத்தில் இருந்ததை பார்த்துக் கொண்டு இருந்தாள். இந்த தாலி டிசைன் நம்ம ஊர் டிசைன் போலவே இருக்கு பார்த்துக் கொண்டிருக்கையில் அவன் வந்துச் சேர்ந்தான்.

அத்தனை உற்சாகமாய் இருந்தான்… “ஏ ஆலிஸ் வா உனக்கு என் லவ் ஸ்டோரி சொல்லுறேன்”

“அதெல்லாம் நான் யூகிச்சுட்டேன், ஒன்னும் சொல்ல வேணா” உடைப்பட்ட மூக்கை தடவினான் பிரனீத். ஒவ்வொரு சீனுக்கும் ஒவ்வொரு முத்தம் கேட்குறதா இருந்தேனே… ஐயோ போச்சா” தலையில் கை வைத்தவன் அவள் சிரிப்பில் அருகில் வந்தான்.

“முதன் முதல்ல என்னிக்கு உன்னைப் பார்த்தேன் சொல்லு?” அருகில் அமர்ந்தான்.

“ராகவன் சார் எல்லாம் வந்தாங்கல்ல அன்னிக்குத்தான் ஆனால் இன்னும் வரை நீங்க எங்க இருந்து பார்த்தீங்கன்னு எனக்கு புரியலை ஊமைக் கோட்டான்” அவன் மூக்கை திருகினாள்.

“உன்னை எங்கே இருந்து பார்த்தேன்னு உனக்கு தெரியாதில்ல? அஞ்சு காசுக்கு பிரயோஜனம் இல்லாம அந்த சீக்ரெட் எல்லாம் சொல்ல முடியாது.

ஆனால், முதல் நாளே பார்த்தேனா குரங்குச் சேட்டை செஞ்சாலும் பொண்ணு நல்லா கும்முன்னு இருக்கான்னு நினைச்சேன்” முத்தத்திற்குப் பதிலாக இப்போது அவனுக்கு கடி கிடைத்தது.

“என்னடி?”

“இதுதான் குரங்குச் சேட்டை” கண்ணடித்தாள்.

“தினம் என்னை யாரோ பார்க்கிறது போலத் தோணும், யார்னு புரியாது. என்னை நல்லா மண்டை காய விட்டீங்க.”

“உன் டீம், அவங்க உன் மேல உயிரா இருந்தாங்க, அதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சது. உனக்கும் அவங்களுக்குமான (bonding) பாண்டிங்க்… அப்படியே பார்த்து இரசிச்சுட்டே இருப்பேன்”

“எங்கேருந்து?”

“உன்னோட ஃப்ளோருக்கு அடுத்த பக்கம் கண்ணாடிச் சுவர் தாண்டுனா என் கேபின். அங்கிருந்துதான்” பேச்சு வாக்கில் சொல்லி விட்டிருந்தான்.

“உங்களை நான் சொல்ல வச்சுட்டேனே?” இருந்த இடத்திலிருந்தே கைத்தட்டி ஆர்ப்பரித்தாள். “நீ கொடுக்காவிட்டால் என்ன? நான் எடுத்துக்கிறேன்” கன்னங்கள் செம்மையுறும் வண்ணம் சில இச்சுக்கள் இடம் மாறின. நாணியவள்,

“அச்சோ, அப்ப அங்கே இருந்து எல்லாம் பார்த்துட்டீங்களா?” கேட்டவளிடம் சிரித்தான்.

“அமித்துக்கு உன் மேல கொலைவெறி இதில் அடிக்கடி அவனுக்கு கவிதை வேற எழுதுவ பாரு” விடாமல் சிரித்தான்.

“சிரிக்கிறதிலயும் சத்தம் வரலை.. நீங்க ஒரு ஸ்பெஷல் பீஸ்” இரசித்தவாறே அவன் கழுத்தை நெரித்தவள் “அந்த கவிதை தாளெல்லாம் ஹவுஸ் கீப்பிங்க் கொண்டு போயிருப்பாங்கன்னு நினைச்சேன், நீங்கதானா அது? எங்கே வச்சிருக்கீங்க?” மிரட்டினாள்.

“ஆமாம் பெரிய ராணுவ இரகசியம்” முறைத்தவளை கண்டுக் கொள்ளாமல் தொடர்ந்தான்.

“அப்புறம் முதல் நாள் நாம நேரில் சந்திச்சப்ப என்னை ரொம்ப ஊன்றி

கவனிச்சுப் பார்த்த, இந்த காமெடி பீஸுக்கு நம்மை பிடிச்சிருக்கான்னு நினைச்சேன்.” கழுத்தை நெறித்த கைகளை எடுத்து முத்தமிட்டான்.

“அடுத்த நாள் ரொம்ப வித்தியாசமா தெரிஞ்ச எனக்கு… வழக்கமா கலகலன்னு இருக்கிறவ கவலையா இருக்கிறதைப் பார்த்தேன் ஏனோ மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. எதையோ கிறுக்குன, வழக்கம் போலத்தான் உன் ட்ராவில் வந்து பார்த்தேன்.என்னென்னவோ எழுதி இருந்த, கோர்வையா இல்லாவிட்டாலும் எதுவோ பிரச்சனையில் இருக்கிறன்னு புரிஞ்சுக்கிட்டேன்.

“எனக்குத் தெரியாம என்னை கவனிச்சிருக்கீங்க, என் ட்ராலருந்து பேப்பர்ஸ் களவாடி இருக்கீங்க… நோ மேனர்ஸ்” முகத்தைச் சுழித்தாள்.

“அத்தனையும் உன் கிட்ட மட்டும் தான் செய்தேன். ஏன் செய்தேன்னு கேட்டா அப்ப சத்தியமா தெரியலை அப்புறமா லவ்ஸ்னு புரிஞ்சது. உனக்கு என்னைப் பிடிக்குமான்னு யோசிச்சு உன்னைக் கவனிச்சேனா? … என்னை தேடி தேடிப் பார்த்த, கிடைக்கிற நேரம்லாம் சைட்டு”

“இப்படி ஒரு அமைதியின் உருவத்தைப் பார்த்ததில்லையா? அதான் மயங்கிட்டேன்” கூச்சத்தில் முகத்தை மூடிக் கொண்டாள்.

கைகளை விலக்கி முகத்தைப் பார்த்தான். “தேடி வருவ, பேசுவன்னு நினைச்சா தள்ளித் தள்ளி நின்னியே தவிர கிட்ட வரக் காணோம், ஆயிரம் மொள்ளமாரித்தனம் செஞ்சு உன் ஃப்ளோர்ல என் டீமை மாத்தி வீக்லி மீட்டிங்குக்கு வந்தா உன் ப்ரசண்டேஷன்ல முக்கியமான விஷயம் மிஸ்ஸிங்… உன்னைக் காப்பாத்துறதுக்காக சம்பந்தமே இல்லாம அதில் மூக்கை நுழைச்சு, நீ கலங்கி…”

“அன்னிக்கு ரொம்ப பயந்துட்டேன், உங்க முன்னால அவமானமா போயிடுச்சுன்னு சங்கடமா இருந்தது”

“ம்ம்… ம்ம்…அன்றைக்கு அத்தனை மணி நேரம் நீ வேலைப் பார்த்தப்ப கஷ்டமா இருந்தது. லேட்டா வீட்டுக்கு போறியேன்னு உனக்கு துணைக்கு பின்னாலயே வந்தேன் …அந்த லோஃபர்…” கெட்ட வார்த்தைகளில் குமரேஷை அர்ச்சித்தான்.

“அச்சோ” காதுகளை மூடிக் கொண்டாள்… “அடுத்த நாளும் உன்னை அப்படியே டார்ச்சர் செய்தானா? பொறுக்கலை எனக்கு… ஒரு பெரிய கல் இருந்துச்சு எடுத்து குறி வச்சு தாக்கினேன் பாரு, அப்படியே விழுந்துக் கிடந்தான்.”

அவனை கட்டிக்கொண்டிருந்தாள் இப்போது…

“இத்தனை கோழையாவா இருக்கிறதுன்னு எனக்கு உன் மேலத்தான் கோபம்”

“ம்ம், உங்க கோபம் நியாயம் தான். ஆனால், நான் நிறைய அனுபவிச்சிருக்கேன். பிரச்சனைன்னு வரும் போது பெண்களே கூட பெண்களை ஆதரிக்க மாட்டாங்க… நிறைய பார்த்து வெறுத்துட்டேன்.அதான் நாய் நம்மைக் கடிச்சா நாம நாயையா திருப்பி கடிக்கிறோம்னு விலகிப் போனேன். வேற வீடு கிடைச்சா மாறுறதா இருந்தேன்.”

“ப்ரபோஸ் செஞ்ச அன்னிக்கு அது போலவே பின் தொடர்ந்து நீங்க வந்ததால் நான் பொழைச்சேன்” முறுவலித்தாள்.

“ம்ம்… வழக்கம் போல நீ பத்திரமா வீட்டுக்கு போயிட்டியான்னு பார்க்க பின் தொடர்ந்து வந்தேன். நீ வீட்டுக்கு போகவும் அந்த …. நாய் உன் ரூம் பக்கம் தடுமாறி போயிட்டு இருந்தான். ஏதோ மனசுக்கு தப்பா தோணுச்சு கேட் திறந்து உள்ளே வந்தா வீட்டு ஓனர் ஆயிரம் கேள்வி. அதைத்தாண்டி அவரை வரச்சொல்லிட்டு படபடன்னு வந்தா வீடியோ ரெகார்ட் செஞ்சா நல்லதுன்னு தோணுச்சு…அப்புறம்… சரி விடு ஃபர்ஸ்ட் நைட்ல பேசுற பேச்சா இது? மாத்துவோம் கொஞ்சம் ரொமான்ஸ் செய்வோம்.”

கிச்சுக்கிச்சு மூட்டி அவளை திணறடித்தான், குட்டி குட்டியாய் முத்தங்கள் வைத்தான்.ஆனால், கணவனாக நெருங்கினான் இல்லை.

‘இதுதான் இவர் ரோமான்ஸ் போல?”

‘அன்று சென்னை வீட்டில் அவள் சேலை அணிந்திருந்த போது அவளைப் பார்த்த பார்வையில் இருந்த மயக்கம், அவனிடம் இருந்த தவிப்பு, அன்றணைத்த அணைப்பு இன்றில்லையே? இன்று நான் அழகாயிருந்ததாக எல்லோரும் சொன்னார்களே பின் ஏன்?’ என புரியாமல் தவித்தாள்.

யோசிக்க விடாமல் அவளை இறுக்க அணைத்துக் கொண்டு உறங்கினான், உறங்கவும் வைத்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here