16. TKSN

0
784

தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!

அத்தியாயம் 16

திருமணத்திற்கு அடுத்த சில நாட்கள் ஓய்வு, ஊர் சுற்றல் எனக் கழிய ஐந்தாவது நாள் எங்கோ புறப்பட்டார்கள். ஃப்ளைட்டில் வந்து கார்ப்பயணம் முடிந்து அவள் பார்த்துக் கொண்டு இருந்த போதே தமிழகத்திற்கு வந்துச் சேர்ந்திருந்தார்கள்.

‘எதற்காக இங்கே வந்திருக்கின்றோம்? எனச் சொல்வானா?’ என அடிக்கடி கணவன் முகம் பார்த்தாள். அந்தக் கள்வன் அவளிடம் அது தவிர்த்து எல்லாமும் பேசினான்.

மாமனார், மாமியார், நாத்தனார் என குடும்பம் சூழ பயணிக்கையில் அவனிடம் அவளால் வெளிப்படையாக பேசவும் முடியவில்லை.எல்லோர் முன்னும் தயக்கம் உடைத்து பேசும் உண்மையான ஆலிஸ் இன்னும் வெளிவரவில்லையோ?

“இங்கே பக்கத்தில தான் எங்க ஊர் இருக்கு?” சொல்லலாமா என நினைத்தவளின் குரல் எழாமல் தொண்டையிலேயே அழுந்தியது.

ஹோட்டலில் அறை ஒன்று முன்பதிவு செய்திருந்தான்.

“கல்யாணத்துக்கு போகணும் புறப்படு” புதிய பட்டுப் புடவை ஒன்றைத் தந்தான். அவனது சூட்டும் புதிதாக இருந்தது.

தாருணி கண்களில் ஏதோ மின்னல், வாயாடியான அவளே வாயை மூடி இருக்கிறாளென்றால் ஏதோ பெரிய திட்டம் தான் போலிருக்கிறது.

“அம்மா, அப்பா” அழைத்து நிறுத்தினான் திருமணத்தன்றுப் போலவே தம்பதியர் பெற்றோரை பணிந்து எழுந்தனர்.

அடுத்த அரை மணி நேரத்தில் அவளது ஊரின் ஆலயத்தில் இருந்தார்கள்.

“முயற்சி செய்தேன் ஆலிஸ், மதம் மாறாமல் சர்ச் உள்ளே திருமணம் செஞ்சுக்க அனுமதி இல்லையாம். அதனால் குறைந்த பட்சம் உன் ஊர் சர்சில் மோதிரம் மாத்திக்க நினைச்சேன்”

எல்லாம் உனக்காக என அவன் பார்வை எடுத்துச் சொல்ல எங்கோ அடைத்து நின்ற அத்தனை உணர்வும் பிரவகித்துக் கொண்டு கண்ணில் கட்டியது. தன்னை அவன் ஒருபோதும் மதம் மாற சொல்லாமலிருக்க, அவனிடம் தான் எதிர்பார்ப்பது எப்படி? மாட்டாள். அது போக அவர்கள் உறவிற்கு மதம் எந்த விதத்திலும் இடையில் வரப் போவதில்லை.

அவளது பிறந்து வளர்ந்த ஊர், அவள் உணர்வு ரீதியாக ஒன்றிய அந்த ஆலயம் என அந்த இடத்தில் நின்றவள் முகம் முன்னிலும் மிளிர்ந்தது.

“பிரனீத்”கணவனைப் பார்த்தவளுக்கு கண்கள் ஏற்கெனவே மசமசத்திருக்க, குரலும் காணாமல் போய் காற்றுத்தான் வந்தது. அவனருகில் நின்று அவனைப் பற்றுக் கோலாய் பாவித்து, சாய்ந்தவள் பரிதவித்து அவன் முகம் பார்த்தாள். அவன் புன்னகையால் அவளை ஆற்றுப் படுத்தினான்.

“அத்தை, மாமா, தாருணிமா” அவர்களிடம் சென்று தன் மகிழ்ச்சியை உணர்த்த கன்னம் வருடிய சரஸ்வதி, கட்டிக் கொண்ட தாருணி என அணைப்பில் நின்றாள்.

“நல்லாயிருக்கியா ஆலிஸ்?” திரும்பிப் பார்க்க அவள் உறவினர்கள் கூடியிருந்தனர்.

“அக்கா, தம்பி, பெரியம்மா, சித்தி என அனைவரையும் காணக் காண மகிழ்ச்சி எல்லைத் தொட்டது. என்னதான் வாழ்வின் சுழலில் அகப்பட்ட துரும்பாக மனிதன் திசைகள் தாண்டி பயணித்தாலும் தன் வேர்கள் தரும் மகிழ்ச்சியை வேறு எங்கும் அடைய முடியாது தானே?

“நீ என்னை அடக்கியாளுகின்றாய், you are bossy” என அடிக்கடி அவளை புலம்ப வைத்தவன் தான் அவளை வேர் வரை மறுபடி பயணிக்கச் செய்து இருக்கிறான். குழந்தைப் போல மனம் ஆர்ப்பரித்திருக்க, மறுபடி திரும்பி கணவனை காதலாய் பார்த்தவளுக்கு கனிவாய் புன்னகைக் கொடுத்தான்.

“அத்தான்” அருகே வந்த ஆலிஸ் தம்பி ஜேம்ஸிற்க்கு கைக் கொடுத்த பிரனீத் தோழமையாய் அவன் தோளில் கைப் போட்டான்.அவர்களுக்குள்ளாக கடந்த மாதங்களில் நட்புணர்வு வளர்ந்திருந்தது.

ஆலிஸை அழைத்துச் சென்றவர்கள் அவளது தலைக்கு நெட், வெய்ல் அணிவித்து அழைத்து வர ஆலயம் முன்பாக மோதிரம் மாற்றிக் கொண்டனர். பாதிரியார் வந்து தம்பதியரை ஆசீர்வதித்து, வாழ்த்துச் சொல்லிச் சென்றார். அங்கிருந்து மதிய உணவிற்கு அனைவரும் ஹாலிற்கு செல்ல, இவர்கள் வண்டி சற்று தூரம் சென்று நின்றது.

புரியாமல் வெளியில் வந்து நின்றவளிடம்,”உன் வீட்டுக்கு கூப்பிட மாட்டியா ஆலிஸ்?” என்றான்.அக்கம் பக்கம் அடையாளம் பார்க்க, பல வருடங்கள் கழித்து வந்ததால் மாற்றங்கள் மனதில் பதிய நேரம் எடுத்தது.

‘அது எரிந்து சாம்பலாய் கிடந்த அவளது வீடா?’ ஏதோ உணர்வில் அவளுக்கு நெஞ்சடைத்தது. உன் தம்பிதான் எல்லா உதவியும்…” கூடவே வந்துக் கொண்டிருந்த அவள் ஒன்று விட்ட சித்தி மகன் ஜேம்ஸை முன்னிருத்தினான்.

“தம்பி, கல்யாணத்துக்கு நான் அழைச்சப்பக் கூட சொல்லவே இல்லையேடா?” உணர்ச்சிவசப்பட்டிருந்தாள்.

“அதென்ன என் வீடு அப்ப இது நம்ம வீடு இல்லையா?” கணவனை கடிந்தாள்.

“எல்லோரும் வாங்க போவோம்” அனைவரோடு இணைந்து உள்ளே நுழைந்தாள்.

அளவான வீடு, வீட்டின் வேலைகள் இன்னும் நிறைவுற்றிருக்கவில்லை. முன்னறை அடுத்து மற்றொரு அறை அது பூட்டப்பட்டு இருந்தது. அவைகளை மட்டும் அவசரமாக முடித்திருந்தார்கள் போலும் அங்கங்கே பூச்சுக்கள் பூசப் படாமல் இருந்தன.

“தேங்க்ஸ்டாமா” தம்பி கையைப் பிடித்துச் சொன்னாள்.

“உனக்கு கல்யாணம் ஆனது எனக்கு ரொம்ப சந்தோஷம்கா, உங்க வீட்ல எல்லோரும் ரொம்ப நல்லவங்க.”

“ஆமாம்டா” தலையசைத்தவள் ஜேம்ஸின் மனைவி பின்னோடு வந்து நிற்க அவளிடமிருந்த குழந்தையை வாங்கிக் கொஞ்சினாள்.

“மதினி அடுத்த மாசம் குழந்தைக்கு பிறந்தநாள், கட்டாயம் வாங்க” சரி என தலையசைத்தாள்.

கணவன், மாமியார், மாமனார், நாத்தனார் எல்லோரும் அங்கிருந்த இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர். அவள் அன்று அங்கு வருவதே அவளுக்குத் தெரியாமல் இருக்க, எதை செய்வது? எதை செய்யாமலிருப்பது? உபசரிப்பது எப்படி? என ஒன்றும் புரியாமல் திருதிருத்தாள். உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து சந்தித்து சென்றனர். பிரனீத் ஏற்பாடு செய்தபடியே வருகின்றவர்களுக்கு உபச்சாரம் குறைவில்லாமல் நடந்தது.அவளது உறவுமுறை அக்காக்கள் வந்து அவளுக்கு உதவினர்.

வருடக்கணக்காக ஊர் பக்கம் வராதிருந்தவள் புதர் மண்டிப் போயிருந்த வீட்டை திடீரென எடுத்துக் கட்டவும் அவளைப் பார்க்க அனைவருமே ஆவலாக இருந்தனர். குறிப்பாக அவள் பெற்றோர்கள் அன்பால் கூட்டிச் சேர்த்த உறவுகள் அனைத்தும் அவளைப் பார்க்கத் திரள, ஒன்றிரண்டு மணி நேரம் அந்த தெரு அல்லோலப்பட்டது.

மூதாட்டிகள் பிரனீத்துடனும் அவன் பெற்றோருடனும் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்தனர். இவர்கள் திருமண வரவேற்பிற்கான அழைப்பிதழை ஏற்கெனவே ஜேம்ஸ் மூலமாக சொந்தங்களுக்கு கொடுத்திருக்க திருமண மண்டபம் களைக்கட்டி இருந்தது.

“பிரனீத் ஏதோ ப்ளான் வச்சிருக்கானாம்” அத்தைக் கூறும் முன்பு

“இன்னுமா?” ஆலிஸ் அதிர, தாருணி சிரித்தாள்.

“ஆமாம், அதனால நாங்க அப்படியே ஒரு சில இடங்களுக்கு ஊர் சுத்திட்டு இரண்டு நாளில் வீட்டுக்கு போயிடுவோம். நீங்க நல்லா சுத்திட்டு வாங்க”

“அண்ணி ஹனிமூன்…” காதில் கிசுகிசுத்தாள் சின்னவள்.

“போடி… “ முகம் சிவந்தே கிடந்த்து.

ரிசப்ஷன் முடிய ஹாலில் இருந்தே மாமனார், மாமியார் தாருணி மூவரும் விடைப் பெற்றனர்.

“நாம இனி எங்கே போறோம்?” ஹாலில் தனித்து இருக்கையில் விசாரித்தாள் வழக்கம் போல பதிலளிக்காமல் அவன் தவிர்க்க, எதிரில் ஜேம்ஸீம் மற்ற சகோதரர்களும் வந்துக் கொண்டு இருந்தனர்.

“மறுபடி இத்தனை கிஃப்டா?” மலைத்தாள்.

“உங்கம்மா அப்பா செய்தது எல்லாம் அவங்களும் திருப்பி கொடுக்கணும்ல?”

அம்மா அப்பா நினைவில் முகம் மலர்ந்தது. ‘இன்னிக்கு அம்மா அப்பா இருந்திருந்தா சந்தோஷப்பட்டு இருப்பாங்கள்ல?” “ம்ம்” பதிலளித்தான்.

மறுபடி காரில் ஏறி வீட்டிற்கு வர வாழை மரம் கட்டப் பட்டு இருந்த அந்த வீடு. சிற்சில அலங்கரிப்புகள் வாயிலில் நின்று சுவரை தடவிப் பார்த்தாள்.

“எல்லா பார்சலும் உள்ளே வச்சுட்டேன் அக்கோ, அப்பப்ப ஊருக்கு வந்துட்டு போகணும் சரியா?”

“சரிம்மா”

மற்றொரு தம்பி பிரனீத்திடம் கைக்குலுக்கினான்.

வந்து ஒவ்வொருவராய் விடைப்பெற இருவரும் உள்ளேச் சென்றனர். உள்ளறை திறந்திருந்தது. அங்கே அன்றைய வரவுகளான அந்த பரிசுப் பெட்டிகள் நிறைந்திருக்க சென்னையில் அவள் அறையில் இருந்த அத்தனைப் பொருளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அந்த பீடம் ஏசுவும் அன்னை மரியும் புகைப்படத்தில் இருக்க, அருகே அவள் அடிக்கடி பேசித் தீர்க்கும் கண்ணாடித் தோழி. ஒரு பொருளையும் அவன் அங்குக் கொண்டுச் சேர்க்காமல் இல்லை.

அன்பில் பொழிதலில் மூச்சு முட்டாமல் நனைந்து, சிலையாய் உறைதல் அவளுக்கு அப்போது சாத்தியமாயிற்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here