17. TKSN ( Final Epi)

0
867

தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!

அத்தியாயம் 17

ஹோட்டலுக்கு முன்பாக வந்து கார் நிற்க அதிலிருந்து இறங்கினர். அன்றைய நாளின் கணக்கை முடித்து அனுப்பினான். தேவைப்பட்டால் அழைக்கச் சொல்லி டிரைவர் தனது எண்ணைக் கொடுக்க சேமித்துக் கொண்டான்.

இருவரும் காரிடாரில் நடந்துக் கொண்டிருக்க…

“ரொம்ப தப்புப் பண்ணிட்டேன்” எனவும் திரும்பிப் பார்த்தான்.

“ம்ம்” நெற்றிச் சுருங்கினானே ஒழிய பதில் சொன்னானில்லை. காலையிலிருந்து அவளுக்கு பதிலே சொல்லாமல் தண்ணிக் காட்டினான். இல்லையில்லை அவளுக்கு மாற்றி மாற்றி இன்ப அதிர்ச்சிகள் அல்லவா கொடுத்து வந்தான். இன்னும் என்னென்ன அதிர்ச்சிகள் அவளுக்காக வைத்திருக்கின்றானோ? எனும் படபடப்பு ஆலிஸிக்கு.

“ஊமைக் கோட்டானை ஊமைக்கோட்டானாக இருந்ததுக்காகப் பிடிச்சுப் போய் கல்யாணம் செஞ்சது எத்தனை தப்பு?”

கையில் கிடந்த திருமண மோதிரத்தை ஆசையாக உருட்டியபடியே அவனை திட்டிக் கொண்டு இருந்தாள்.

அலங்காரங்கள் வியர்வையில் கலைந்திருக்க அத்தனை அழகு அவளிடம் கொட்டிக் கிடந்தது.அவளை எப்போதும் போல பாராமல் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான்.

அறை வந்ததும் திறந்து உள்ளே நுழைய அதுவரையில் கோபத்தில் படபடத்துக் கொண்டு இருந்தவள் அறையின் அலங்கரிப்பைப் பார்த்து திகைத்தாள். காலையிலிருந்து பேசாமல் தன்னைப் படுத்திக் கொண்டு இருந்தவன் தரும் அதிர்ச்சிகளில் இதுவும் ஒன்றாமா? திகைத்து நின்றாள்.

பூக்களால் அலங்கரிக்கப் பட்ட அவர்கள் படுக்கையறை பெரும் கூச்சத்தை அவளுள் விதைக்க, அவசரமாக முகம் கழுவி வந்தாள். அவனும் அவளின் ஊமைக் கோட்டானும் அவள் பின்னே வந்து நின்றான்.

“ஹாப்பி ஃபர்ஸ்ட் ஈவினிங்க் பொண்டாட்டி”

“ஓ மை காட்” சிவந்த முகத்தை அவள் கரங்களால் மறைத்துக் கொண்டாள்.அவளைப் பார்க்க அவனுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது,

“சந்தோஷமா இருக்கியா ஆலிஸ்”

“ரொம்ப ரொம்ப…”

“…”

“எனக்குச் சொல்லத் தெரியாத அளவுக்கு சந்தோஷமா இருக்கிறேன்… நீங்க நன்ன அப்பரஞ்சி” அவன் மொழியில் அவனைக் கொஞ்ச,

கொஞ்சல்கள் மிஞ்ச, நிறைவான இல்லறம் தொடங்கியது.

அடுத்த நாள் கொடைக்கானல் ஊட்டி என மலையோரம் காதல் கிளிகள் கொஞ்சித் திரிந்தன.பெங்களூர் திரும்பச் சென்ற போது இன்னுமாய் ஒருவர் மற்றவரின் உணர்வுகளோடு நெருங்கி இருந்தார்கள்.

அவ்வப்போது அவன் வாயிலிருந்து சில முத்துக்கள் உதிரும், அவற்றில் ஒன்றுதான் அவள் அணிந்திருக்கும் தாலி டிசைன் அவளுடைய குடும்பத்தினர் அணியும் விதம் ஜேம்ஸிடம் விபரம் கேட்டுச் செய்தது எனச் சொன்ன விபரம். அவனது செயல் ஒவ்வொன்றும் அவளை காதல் மயக்கத்தில் ஆழ்த்திக் கொண்டே இருந்தன.

மயக்கம் தீர்ந்த பொழுதொன்றில் அவளது வீடு கட்ட ஆனச் செலவைக் கேட்க, அவன் அதே ஊமை அவதாரம் எடுத்தான். வீடு கட்ட தனது 5 லகரங்கள் எப்படி போதும்? அதை விடவும் கூடுதலான பணத்தை அவன் செலவழித்து இருப்பான் என அவளுக்கு தோன்றிக் கொண்டு இருந்தது.

திருமணச் செலவில் தனது பங்கு ஒன்றும் இல்லையே என்பதே அவள் வருத்தமாக இருந்தது.

 “அதெப்படி கல்யாண செலவுக்கு தந்ததை நீங்க வீடு கட்ட செலவழிச்சீங்க?”

என்று அன்றுக் கேட்கவும், “அப்ப அந்த வீட்டுல எனக்கு உரிமையில்லையா? இல்லை என் பணத்தில உனக்கு உரிமை இல்லையா? இன்னும் என் பணம் உன் பணம்னு பிரிச்சுத்தான் பார்க்கிறியா?” அவன் வாட்டிய வாட்டலில் அடுத்த முறை வாய் திறந்தாளில்லை.

ஊமைக் கோட்டான் பேசாத வரையில் தான் தனக்கு சேஃப்டி என புரிந்துக் கொண்டாள். வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டுவானேன்.

தம்பதியருக்கு ஒவ்வொரு நாட்களும் இனிதாய் கழிந்தன. மாதங்கள் தோறும் மாதவிடாய் வரும் நாட்களில் மட்டும் அவள் எப்போதும் துவண்டுப் போய் இருப்பாள்.

“என்னடி?  காலம் வரும் போது நம்ம ஜீனியர் வரட்டும். நீ கொஞ்சம் படுத்தாம அமைதியா இரு”

கணவன் அதட்டியே தேற்றுவான்.

ஆறேழு மாதம் கழித்து குழந்தை உண்டான போது அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. ‘பொன்னே பூவே’ என குழந்தைக்காக அவள் கவனமாக நடந்துக் கொண்டாள்.

குழந்தைப் பிறக்கும் என்றுச் சொல்லப்பட்ட தேதிக்கு முந்தைய வாரத்தில் லீவு எடுத்துக் கொண்டாள்.

பல்வேறு வேதனைகளைக் கடந்து குழந்தையைக் கண்டபோது அவளதுக் கண்கள் பனித்திருந்தன.

“இப்ப பரவால்லியாடா?” மென்மையாய் ஆலிஸை முகம் வருடினான்.மகனை இரசித்துக் கொண்டு பதில் சொல்லாதிருந்தவளிடம்,

“என்ன இப்ப பதில் சொல்லாம இருக்கிறது உன் டர்னா? மகன் இங்கதான் இருப்பான் அப்பனை கவனிடி”

புன்னகைத்தாள்…

“இவன் உங்களைப் போலங்க… இதுவரை சத்தமே இல்லை, எவ்வளவு அமைதி?” ஆச்சரியமாக மகனை வருடிக் கொண்டு இருக்க

எதிர்பாராத தருணம் சின்னவனோ யாரோ அடித்தது போல வீல் வீலென கத்தி அழ ஆரம்பித்தான்.

திகைத்தவள் கணவனைப் பார்க்க, அவனும் அந்நேரம் அவளையேப் பார்த்து வைக்க, உரக்கச் சிரித்தனர் இருவரும்.

நிறைவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here