2. TKSN

0
1076

தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!

அத்தியாயம் 2

ஆலிஸ் பணிபுரிவது ஐடி கம்பெனிகளுள் ஒன்றாகும். இப்போது தனியளாக இருந்தாலும் அவள் நல்லதொரு அன்பின் அரவணைப்பில் இனிமையானதொரு குடும்பத்தின் ஒற்றை வாரிசாக திகழ்ந்தவள்தான். அவர்கள் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்கள். அவர்களது கிராமம் மெது மெதுவாக கிராமிய அடையாளங்களை இழந்துக் கொண்டு நகரத்தின் மாற்றங்கள் தரிக்க ஆரம்பித்த நிலையில் இருந்தது.

ஆலிஸின் தந்தை பீட்டருக்கோ மிகச் சாதாரணமானதொரு வேலை, அதில் கிடைக்கும் சம்பளம் கைக்கும் வாய்க்கும் பற்றாது. அம்மா மெர்ஸியோ வீட்டில் இருந்தவாறே தையல் வேலை இன்னும் சிறு சிறு வேலைகள் பல செய்து பணம் ஈட்டுவார்.

பிற்காலத்தில் தங்கள் செல்ல மகளுக்கு தாங்கள் துணையிருப்போமோ இல்லையோ, படிப்பு நிச்சயம் துணை இருக்கும் என்று நினைத்திருப்பார்கள் போலும். தங்கள் குறைந்த வருமானத்திலும் சிக்கனமாக வாழ்ந்து, ஆலிஸூக்கு பெற்றோர்கள் படிப்பை கொடுத்தனர்.

படிப்பை நிறைவு செய்த பின்னர் சில மாதங்கள் கழித்து வேலைக்காக மற்றொரு முறை நேர்முகத் தேர்வு எதிர்கொள்ள சென்னைக்கு ஆலிஸ் சென்றிருந்தாள்.

முதலிரண்டு முறைகள் அப்பாவோடு அவள் சென்னைக்கு பயணித்து இருக்க, இம்முறை ஏனோ தனியாகவே வர நேர்ந்தது. அப்பாவோடு சென்னைக்கு வந்த இரு முறைகளும் தேர்வு தவிர்த்த மற்ற நேரங்களில் ஹாஸ்டல் விபரங்கள், போக்குவரத்து விபரங்கள், பயணம் எவ்வாறு செய்வது என எல்லாவற்றையும் பழகி இருந்தாலும் கூட அப்போது வேலை கிடைக்கவில்லை.

இந்த முறையோ எதிர்பாராமல் வேலை கிடைத்து விட்டிருந்தது, அலைபேசியில் தகவல் தெரிவிக்காமல் நேரில் பார்த்து சொல்லிக் கொள்ளலாம் என உடனே ஊர் திரும்பியவளுக்கு என்னவோ பெற்றோர்களின் கரிக்கட்டையான உடல்களைத்தான் பார்க்க கிடைத்தது.

மின் கசிவு என்றார்கள், சிலிண்டர் வெடித்து விட்டது என்றார்கள். தூக்க கலக்கத்தில் எவ்வளவாக போராடினார்களோ? இனிமையான கலகலப்பு கொண்ட அந்த தம்பதியர் ஒன்று போலவே உயிரை இழந்திருந்தார்கள்.

ஆலிஸ் விக்கித்து நின்றாள்… அவள் உலகம் தன் இயக்கத்தை நிறுத்தி விட்டிருந்தது. அந்த குடிசையில் எரியாத பொருளாக மிஞ்சியது ஒன்றும் இல்லை … ஒன்றுமே இல்லை.

அவளது உலகம் அவளிடம் இருக்கும் சான்றிதழ்கள், கொஞ்சம் பணம், சில செட் உடைகள் என பையளவில் சுருங்கிவிட்டிருந்தது. ஊரே கூடி “ஐயோ இப்படி ஆகிற்றே?” என உச்சுக் கொட்டினாலும் கூட, அடுத்து செய்ய வேண்டியவைகள் எல்லாவற்றையும் தான் மட்டுமே முன்னெடுத்து செய்ய வேண்டும் என்று ஆலிஸீக்கு புரிந்தது.

வருடங்களாய் பெற்றோர் ஆசையாய் தனக்காக சேர்த்திருந்த சொற்ப நகைகளை தன் கையில், காதில் இருந்து கழற்றினாள். அவற்றை தானாகவே நகைக்கடைக்குச் சென்று விற்று பணமாக்கினாள். மரித்தவர்களின் உடலை பெற்றுக் கொள்ள போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறை விசாரணைகளுக்கு அலைந்தாள்.

தாங்கள் எதுவும் செலவழிக்க தேவையில்லை எல்லாவற்றையும் அவளே பார்த்துக் கொள்வாள் என்று புரிந்ததும் சில சொந்தங்கள் அவளுக்கு உதவ முன் வந்தன. என்ன செய்வது? எப்படி செய்வது? என உரிமையாக துணை நின்று, வழி நடத்தி, மீதி வேலைகளுக்கு உதவினர்.

விசாரணைகள் முடிந்து பொட்டலமாக கிடைத்த பெற்றோரை கட்டி அழவும் முடியாத மனம் மரத்த நிலையில் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையுடனான விடை கொடுத்தாள். அதன் பின்னர் ஓரிரு நாட்கள் கழிந்த பின் யோசிக்கலானாள். மிகப்பெரிய துக்கம்தான் எனினும் சொந்த வீடு எரிந்து சாம்பலாகி கிடக்க, உறவினர் வீட்டில் அவர்களை சார்ந்து தொடர்ந்து எத்தனை நாட்கள் தான் இருப்பது? எனும் உணர்வு மேலெழுந்தது. மறு நாளே ஊரிலிருந்து புறப்பட்டவள் உறவினருக்கு நன்றிகள் கூறி, தொடர்பு கொள்வதாக கூறி விடைப்பெற்றாள். தான் வேலைக்கு சேர்வதற்கு இன்னும் பல நாட்கள் இருந்த போதும் கூட, முன்பாக வந்து சென்னை வந்து ஹாஸ்டலில் சேர்ந்தாள். இந்த துயரத்திலும் கூட தான் நடுத்தெருவில் நில்லாதவாறு தாங்கிப் பிடிக்க தகுந்த நேரத்தில் வேலையாவது கிட்டியதே எனும் ஆசுவாசம் தோன்றியது.

நகைகளை விற்ற பணத்தில் மீதியாக இருந்த சொற்ப பணத்தைக் கொண்டுதான் ஹாஸ்டலில் சேர்ந்தாள். அது முதல் வேலைக்கு சென்று முதல் சம்பளம் வாங்கும் வரையிலான நாட்களில் இருக்கும் மிகுதியான பணம் கொண்டு எவ்வாறெல்லாம் சமாளிக்க இயலுமோ அத்தனையும் செய்தாள். நடக்க முடியும் தூரம் வரையும் வாகனம் நாடாமல் நடந்தாள். டீ, காஃபி என இனிப்பை தேடும் போது ஒற்றை ரூபாய் காஃபி சாக்லேட்டுக்களில் திருப்தி கொண்டாள். ஒற்றைத்துண்டு சோப்பு வெகு நாளைக்கு பாதுகாத்துக் கொண்டாள் இன்னும் எத்தனை எத்தனையோ. ஹாஸ்டலில் கட்டிய பணத்திற்குள்ளாக உணவும் கொடுக்கப்பட்டதால் பட்டினி கிடக்கும் நிலை மட்டும் அவளுக்கு வரவில்லை.

குறிப்பிட்ட தேதியில் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தாள். ஊரில் அத்தனை துணிகளும் பெற்றோரோடு எரிந்துப் போயிருக்க தன்னிடம் இருந்த சொற்ப உடைகளை மாற்றி மாற்றி அணிந்து சமாளித்தாள். முதல் சம்பளம் வந்த பின்னரே கூடுதலாக சில உடைகளை வாங்கி உடுத்திக் கொண்டாள். பகல் முழுக்க வேலைகளில் நாட்களை கடத்தினாலும் கூட இரவு முழுவதும் தனிமையின் பிடியில் துவண்டு, சத்தமில்லாமல் அழுது முடித்து தூங்குவாள். இருப்பினும் மறுநாள் ஒன்றுமே ஆகாதது போல புறப்பட்டு அலுவலுக்கு செல்வாள். இப்படியே ஒரு சில மாதங்கள் கழிந்திருந்தன.

என்னதான் துயரத்தில் இருந்தாலும் கூட வாழ்வை முடித்துக் கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணமெல்லாம் அவளுக்கு ஒருபோதும் வரவில்லை. அது போலவே அவளிடம் எதிர்காலத்தை குறித்த எந்த கனவுகளும் கூட இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அத்தனை இழப்பிலும் பிறர் தயவில் வாழாமல் சுயசார்புடைய வாழ்க்கை வாழ வேண்டுமெனும் உத்வேகம் அவளை உந்தி தள்ளிக் கொண்டு இருந்தது. ஆரம்ப காலத்தில் பயிற்சி ஊழியராக இருந்த போது குறைவான சம்பளமே கிடைக்கின்ற துறை. ஒரு வருடம் கழித்து வேலை மாற்றம் செய்வதை பொறுத்து தான் சம்பள உயர்வுகள் அமையும்.

இப்போதெல்லாம் அவளது அழுகைகள் குறைந்து விட்டிருந்தன. சொல்லப் போனால் அவளுக்கு அழவும் பிடிக்காது. குறிப்பாய் அவள் பெற்றோருக்கு அவள் அழுவது சுத்தமாக பிடிக்காது. இப்போதென்னவாம்? ஊரில் பெற்றோர் இருப்பதாகவும் தான் வேலைக்காக சென்னைக்கு வந்ததாகவும் இருக்கட்டுமே? என்ன? இது நிஜமாக இருந்தால் மாதமொரு முறையாவது பெற்றோரை சந்தித்து இருக்கலாம். இப்போதோ அது சாத்தியமில்லை. தாயை அழைத்து வந்து, சென்னையை சுற்றி காண்பிக்க வேண்டும் என்கின்ற ஆசை நிறைவேறாமல் போய்விட்டதே எனத் தோன்றவும் கண்ணில் வழிந்த நீரை துடைத்தாள். அவளது மூக்கும் தன் பாட்டிற்கு கண்ணோடு துயரத்தில் பங்குக் கொள்ள ஆரம்பித்தது. அழுது முடித்தவள் இனி அழுவதில்லை எனும் முடிவிற்கு வந்திருந்தாள்.

“தூங்கி எழும்புறவனுக்கும், உழைக்கிறவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாம 24 மணி நேரமும் ஒன்று போலத்தான் கழியும் நாம உழைக்கிறவனா இருக்கனுமா இல்லை சோம்பேறியா இருக்கணுமா? என்று நாமத்தான் முடிவு செய்யணும்” தந்தையின் பேச்சுக்கள் ஞாபகத்தில் இடறின.

“வாழ்க்கையில் துன்பங்கள் வரத்தான் செய்யும். அதை அழுதுகிட்டே கடக்கிறதும் சிரிச்சுக்கிட்டே கடக்கிறதும் நம்ம கையில் தான் இருக்கு” அம்மாவின் பேச்சுகள் மனதில் அறைந்தன.

ஏற்கெனவே அம்மா அப்பா கூறியவைகள்தான் ஆனால் அவை உரிய நேரத்தில் மனதில் நிரட, தனது நிலையினின்று கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தாள். தன் துயரத்திலிருந்து வெளி வர முயற்சித்தாள். அருகாமையில் இருப்போரிடம் நட்பு பாராட்ட ஆரம்பித்தாள். இயன்றவரையில் எல்லோரோடும் கலந்து பேச, அல்லது பேச ஒன்றுமில்லாத போதிலும் குழுவில் ஒருவளாய் இருந்து தனிமையின் வெம்மையை குறைக்க முயன்றாள்.

தூக்கம் வரும் வரையிலும் தன்னை ஏதேனும் வேலையில் ஈடுபடுத்திக் கொள்பவள் தூங்க மட்டும் படுக்கைக்கு வருவாள். பெற்றோர்கள் கற்றுத்தந்த ஜெபிக்கும் பழக்கமும் தனிமையை வெல்ல அவளுக்கு உதவியது. ஞாயிறு ஆலய வழிபாடுகள் எதையுமே தவிர்ப்பதில்லை. தன்னுடைய நிலைக்கு ஏற்ப வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டாள். இவ்வாறு இரண்டு மூன்று வருடங்களை கடந்திருந்தாள்.

தற்போது முதல் வேலையை விட்டு இரண்டாவதாக கிடைத்த வேலையில் சேர்ந்திருந்தாள். முன்பிற்கு இப்போது சம்பளம் கூடி இருந்தது, அவளது கடுமையான வேலை தனிமைக்கு மருந்தாக மாறி இருந்தது. அலுவலில் வெறித்தனமான ஈடுபாட்டோடு உழைத்தாள். வார இறுதியில் வேலை இருக்கும் நாட்களில் குழுவை சேர்ந்த மற்றவர்கள் சலித்துக் கொண்டிருக்க ஆலிஸோ ஆர்வமாய் அலுவலுக்கு வந்து விட்டிருப்பாள்.

அவளது இந்த அளவிற்கு மீறிய ஈடுபாடு அலுவலக வாழ்க்கையில் நுட்பமான புரிதலையும், மென்மேலும் பொறுப்புகளை ஈட்டித் தந்தது. ஆயினும், இன்னும் பெரிதான சம்பள உயர்வுகள் அவளை விட்டு தூரமாய் இருந்தன. நல்ல உடைகள், நல்ல உணவு வகைகள் எனும் நிலைக்கு வந்திருந்தாள். அவளின் வயதிற்கேற்ப இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்தவள் அழகு மிளிர்ந்தவளாக, பார்ப்பவர் கண்களை எல்லாம் கவரும் விதமாக இருந்தாள்.

பூவைக் கண்டு வண்டுகள் வட்டமிடுமாமே? … அவள் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன? இன்றைய காலத்தின் டேட்டிங்க், லிவிங்க் டுகெதர் தற்காலிக உறவாடும் எண்ணங்களோடு பலரும் அவளை அணுகிய போதெல்லாம் நெருப்பாய் நின்றாள்.

தாய் தகப்பன் இல்லாத நிலையில் யாரும் அவளைத் தட்டிக் கேட்க போவது இல்லை என்றிருந்தாலும் கூட, தனது சுயமரியாதையை யாரிடமும் அவள் அடகு வைக்க தயாராக இல்லை. சுய கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் தரும் மரியாதை அலாதியானது. அதனை அவள் இழக்க விரும்பவில்லை.

ஓரிருவர் திருமணத்திற்காகவும் அவளை அணுகினர்தான். அவர்களின் நோக்கம் நல்நோக்கமே என்றறிந்ததும் சந்தித்து தன்னுடைய நிலையினை அறிந்துக் கொள்ளும் வண்ணம் வெளிப்படையாக அவள் தெரிவித்து விடுவதுண்டு.

 ‘ஓ திருமணத்திற்கு எடுத்து செய்ய ஆளில்லாத பெண்ணா இவள்?’ எனும் அதிர்ச்சியில் அவள் அழகில் நெருங்கியவர்கள் அனைவரும் முன்பின் தெரியாதவர்கள் போல கடந்துச் சென்றதையும் அவள் கண்டுக் கொள்ளவே இல்லை.

நல்லக் குடும்பத்தை சேர்ந்த நேர்மையான ஆண்களின் திருமண விருப்பத்திற்கு ‘சரி இவர்கள் கேட்பதைப் போல அமைந்து விட்டாலும் சரிதானே?’ எனும் எண்ணத்தில் கஃபேடேரியாவில் அவர்களுடன் அமர்ந்து தன்னைக் குறித்த உண்மைகளை பேசினாள் என்றால், ஒரு மாதிரியான சுயநல கணக்கீடுகள் கொண்ட அதாவது இவளது சம்பாத்தியத்தில் தங்கள் வளத்தை பெருக்கவும், இருந்து உண்ணவும் விரும்பிய ஆண்களை இனம் கண்டு தூரத்திலேயே நிறுத்தினாள்.

தனியளான தன் சூழ்நிலையை உணர்ந்தவளாக எப்போதுமே பிரச்சனைகள் வராமல் கடக்க முயலுகின்றவள் யாரிடமும் அவள் வீண் பேச்சுக்களை வைத்துக் கொள்வதில்லை. வாக்குவாதங்களையும் மேற்கொள்வதில்லை எல்லாவற்றிலும் பிரச்சனைகளை தவிர்த்து விலகி நிற்பாள். வெளியிலிருந்து பார்க்க அவளது செய்கைகள் ஒரு வகையில் கோழைத்தனமாகவே இருந்தாலும் கூட அவையே அவளுக்கான தற்காப்பாகவும் அமைந்தது. ஏதேனும் பிரச்சனைகள் எழுந்தாலும் கூட அவளுக்காக பேசத்தான் யார் இருக்கிறார்கள்?

ஆரம்ப காலக் கட்டத்தில் எல்லோரிடம் ஒன்றுபோல பேசிக் கொண்டிருந்தவள் அனைவரும் ஒன்று போல இல்லை. பலரும் கலகலப்பாக பேசினாலும் கூட மனதில் வேறொரு எண்ணம் கொண்டவர்களாய், தன் உடலெனும் பண்டத்தை குறி வைப்பது புரிந்துக் கொண்டு ஆளுக்கேற்ற வண்ணம் கூட குறைய பேசவும் தொடங்கினாள். பெற்றோரில்லாத சில வருடங்களிலேயே வாழ்க்கை எனும் ஆசிரியரிடம் அவள் எக்கசக்கமாய் கற்றுக் கொண்டிருந்தாள்.

மூன்று வருடங்களுக்கப்பால் சென்னையில் வசிக்கும் அவளது ஊரைச் சார்ந்த ஒரு உறவினர் அவளுக்கு அலைபேசியில் அழைத்து சந்திக்க வருவதாக சொன்னபோது ஆலிஸ் மிகவும் அகமகிழ்ந்துப் போனாள். தனது அலைபேசி எண்ணை ஊரில் பகிர்ந்திருந்தது எவ்வளவு நல்லதாகிற்று என்று அளவற்ற மகிழ்ச்சி. அவள் தங்கியிருந்த ஹாஸ்டலில் சந்திக்க வசதி இல்லையென்று பொதுவிடத்தில் சந்திப்பை ஏற்பாடு செய்துக் கொண்டாள். அந்த உறவினர் தன்னை அவரது வீட்டிற்கு இதுவரையிலும் அழைத்ததே இல்லை என்பதெல்லாம் அவளுக்கு அப்போது தோன்றவே இல்லை.

சந்திக்க வந்திருந்தவர் அவளுக்கு பெரியம்மா உறவு முறை கொண்டவர். பேச்சிற்கு பேச்சு அவரது கேள்விகள் இவளது வருமானத்தை குறித்ததாகவே இருந்தது.

“எத்தனை பவுன் சேர்த்திருக்க ஆலிஸ்?” என்றார் அவளிடம்.

கழுத்திற்கும், காதிற்குமாய் குட்டி குட்டியாக சில நகைகளை அவள் வாங்கி அணிந்திருந்தாள். ஹாஸ்டல் கட்டணம், சாப்பாட்டு மற்றும் போக்கு வரத்து செலவுகள் போக கொஞ்சம் தொகை அவளது வங்கிக்கணக்கில் சேர்ந்தும் இருந்தது.

அவள் பணி புரிவது சமீபத்தில் உடனடி வேலை இழப்புகள் அதிகமாக அச்சம் கொள்ளப் படும் ஐ டி துறை என்பதால் அப்படி ஏதேனும் நிலை ஏற்படின் நான்கைந்து மாதங்கள் மற்றொரு வேலை கிடைக்கும் வரையிலும் தனது செலவுகளை சமாளிக்கவென அவள் எறும்பைப் போல சிறுக, சிறுக சேமித்து வைத்திருக்கும் தொகை அது. ஹாஸ்டலில் தங்குகின்ற சூழ்நிலையில், அறையை பிற பெண்களோடு பகிரும் தற்போதைய நிலையில் நகையாக அதனை மாற்றினாலும் கூட அதனை பாதுகாப்பது பெரும் கஷ்டம் என்பதால் நகையாக வாங்காமல் தவிர்த்திருந்தாள்.

‘இப்போது திடீரென எதற்காக இந்த நகைக் கேள்வி?’ என்று எண்ணினாலும் கூட, “இதோ நான் போட்டிருக்கிற நகைகள் தான் பெரியம்மா?” என்றாள். அதனை கேட்டவர் முகமோ அஷ்டகோணலாகியது.

“ஐ டி ல வேலை, நிறைய சம்பாதிப்பன்னு சொல்லிக்கிட்டாங்க… நீ என்னன்னா இப்படி இருக்கியே? ம்ஹீம் அவ்வளவு திறமை காணாது உனக்கு”

………

“எஞ்சினியர் மாப்பிள்ளை ஒருத்தன்…………..” என்று தனது ஏதோ ஒரு உறவு முறை சொன்னவர்… “ஊர்ல அவனுக்கு ஐந்து ஏக்கர் நிலமும், காரும் எண்பது பவுன் நகையும், பத்து இலட்சம் ரொக்கமும் கொடுக்கிறதுக்கு தயாரா பொண்ணு வீடெல்லாம் வந்துகிட்டு இருக்கு. அவனுக்கு பொண்ணு வெள்ளையா இருக்கணும் என்று ஆசை. அதனால் தான் உன் ஞாபகம் எனக்கு வந்தது, வந்து விசாரிச்சுட்டு போகலாமேன்னு வந்தேன்.”

………

“சரி இப்ப உன்னால எத்தனை பவுன் நகை செய்ய முடியும்? எவ்வளவு ரொக்கம் கொடுக்க முடியும் என்று சொல்லு, நான் உனக்காக பேசி பார்க்கிறேன்” என்றார் பெருந்தன்மையாய்.

ஆலிஸிற்கு யாரோ தன்னை பெரும் மலையினின்று உருட்டி பாதாளத்தில் கொண்டு வந்து நிறுத்திய உணர்வெழுந்தது. தான் தனது பெற்றவர்களது துணையில்லாமல் இத்தனை கொடுமையான நாட்களை கடந்து வந்து, அடைந்து இருக்கும் தூரமே தனக்கு பெரும் சாதனையாக இருக்க, தன்னை ஒன்றுக்கும் உதவாதவள் போல கீழிறக்கி பெரியம்மா பேசியது அவள் மனதை குடைந்தது.

“எனக்கு அதிக சம்பளமெல்லாம் கிடையாது பெரியம்மா, நான் இப்ப கல்யாணம் செய்துக்கிறதாகவும் எதுவும் நினைக்கவில்லை. நகை எல்லாம் சேர்த்துட்டு உங்களுக்கு சொல்லுறேன். உங்க சொந்தக்கார பையனுக்கு வேற ஒரு பொண்ணு நல்ல வெள்ளையா கிடைப்பாங்க பாருங்க” என்று இலகுவாக கூறியவள் மரியாதை குறையாமல் உபசரித்து அனுப்பினாள்.

அந்த பெரியம்மா அவரது பேச்சு வெகுவாக மனதை புண்படுத்தினாலும் கூட பெரும்பாலும் இத்தகைய மனிதர்கள் காரணமாகவே பல நேரங்களில் நமது வாழ்க்கையின் நிலையை உணர்த்தப்படுகின்றது என்பதனை உணர்ந்துக் கொண்டாள். இப்படிப்பட்ட நபர்களால் சில பல நல்ல எண்ணங்கள் எழவும் செய்கின்றது. வாழ்வின் இத்தகைய நிலையில் கசப்பை தவிர்த்து அது கூற விழையும் பாடத்தை மட்டும் கைக்கொள்ளுகின்றவர்க்கு தோல்விகள் இல்லையாமாம்?

அது நாள் வரையிலும் கண்கள் கட்டிய குதிரையாக ஓடிக் கொண்டிருந்த ஆலிஸ் தனது வாழ்க்கையைக் குறித்து அதன் பின்னர் சிந்திக்கலானாள். அவர்களது சமுதாயத்தில், குடும்பங்களில் இருக்கும் வரதட்சணை எதிர்பார்ப்புகள் அவள் ஏற்கெனவே அறிந்த ஒன்றுதான் என்ற போதிலும் பெரியம்மாவின் வருகை அவளுக்கு தன் வாழ்வின் நிதர்சனத்தை உணர்த்திச் சென்று விட்டிருந்தது.

அவளைப் பொருத்தவரையிலும் திருமணம் என்பது எட்டாக்கனி என புரிந்துக் கொண்டாள். இன்னும் சில வருடங்கள் கடினமாக உழைத்து பொன்னும், பொருளும் சேர்த்து மணவாளனை அவள் வாங்கி விடலாம்தான். அவளிடம் பொருள் வசதிகள் இருப்பின் அவளது உறவினர்களும் முன் வந்து எல்லாவற்றையும் செய்து கொடுப்பார்கள்தான் இல்லையென்று சொல்வதற்கில்லை.ஆனால், திருமண சந்தையில் தனக்கீடான மணமகனை வாங்க அவள் வருடக்கணக்காக கண்மண் தெரியாமல் உழைக்க ஓட வேண்டி இருக்கும். பொருளீட்டிய பின்னரோ பின்னிருபது அல்லது முப்பது வயதை அவள் தாண்டி விட்டிருப்பாள்.

அதன் பின்னர் திருமணம், குழந்தைப் பேறு இவையெல்லாம் எப்படிப்பட்டதாக அமையும்? தனது வாழ்நாள் சம்பாத்தியம் அனைத்தையும் அள்ளிக் கொடுத்து விட்டு அவர்கள் சொல்வதைப் போல அவள் வாழ வேண்டி இருக்கும். ‘ஒரு திருமண அமைப்பிற்குள்ளாக செல்வதற்காக நான் இவ்வளவு சிரமப்பட வேண்டுமா?’ என அவளது மனம் கேட்டது.

வழக்கமாக தனித்து சுயமாக வாழ பழகி விட்ட பெண்களுக்கே எழும் சிந்தனைகள் தான் இவை. சுயசார்பு அந்த வகையில் மென் உணர்வுகளை கொன்று விடும் ஒன்று. அதனால் தான் எப்போதுமே நமது சமுதாய அமைப்புக்களில் ஆணோ பெண்ணோ இருவருக்கும் சுய சிந்தனை எழும் முன்பே திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.

மாம்பூவில் அமரும் வண்டு தற்செயலாக அதற்குள்ளாக அகப்பட்டு விட்டாலும் கூட வெளியுலக தொடர்பற்று, அந்த பூ காய்த்து, பழுக்கும் நாள் வரையிலும் அதனுள்ளே உண்டு, உறங்கி, திளைத்து, தனக்கென உலகம் ஒன்றை சிருஷ்டித்துக் கொள்வதைப் போல, இளம் வயதில் ஒரு விதமான மயக்கத்தில் துவங்குகின்ற இல்வாழ்க்கை பின்னர் இதுதான் என் வாழ்க்கை என்று பழகிப் போய் அதன் இன்ப துன்பத்தில் திளைத்து என நிறைவுற்று விடுகின்றது.

எனவே ஆலிஸ் தனது வாழ்வில் திருமணம் என்பது சாத்தியமில்லாத ஒன்று என்கின்ற நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டாள். ‘தனது வாழ்வில் திருமணம் என்கின்ற நிகழ்வு ஒன்று இல்லை என்றானால் தாம் வாழும் விதம் எப்படியாக இருக்க வேண்டும்?’

சிந்தனையின் முடிவில் தான் இது நாள் வரையில் வாழ்ந்தது போலல்லாமல் தனது ஆசைக்கேற்ப வாழ முடிவெடுத்தாள்.அதில் முதலாவதாக ஹாஸ்டலில் அறையை பகிர்ந்து கொண்டு பிறருக்காக பல்வேறு விஷயங்களில் சமரசம் செய்யும் படி இருக்கும் தனது வாழ்க்கையை மாற்ற விழைந்தவள் சென்றதோ ஒற்றை ஃப்ளாட்டிற்கு.

கொஞ்சம் வாடகை அதிகம் என்றாலும் கூட அங்கே பாதுகாப்பு இருந்தது, எதிர்பார்த்த சுதந்திர உணர்வு கிடைத்தது. சுவையாக இருக்கின்றதோ இல்லையோ எதையாவது பசிக்கும் நேரம் சமைத்து உண்டுக் கொண்டாள். ஆனால், இத்தனையோடு கூட இலவச இணைப்பாக தவிர்க்க இயலாத தனிமை உணர்வும் எழவே திண்டாடிப் போனாள்.

‘இது நமக்கு சரி வராது’ என எண்ணியவள் ஆறே மாதங்களில் ப்ளாட்டிலிருந்து மாறி சின்னதொரு தனி வீட்டிற்கு குடி பெயர்ந்தாள். அக்கம் பக்கம் குடும்பங்கள் இருக்க, பேச பழக ஆரம்பத்தில் அது மிக நன்றாக இருந்தாலும் நாளாக நாளாக ‘தனித்து தங்கியிருக்கும் பெண்தானே?’ என இரவில் அவளை துங்க விடாமல் ஆண்களின் தொல்லைகள் அதிகரித்தன.

‘இதென்னடா வம்பாகப் போச்சு? எதற்காக நாம் சாதாரணமாக மற்றவர்கள் போல ஆசைப் பட்டோம்? தேவைதானா? மறுபடியும் ஹாஸ்டலுக்கே திரும்பி விடலாமா? என்றெண்ணிய போதுதான் ஆலிஸ் தற்போது தங்கியிருக்கும் பத்து குடும்பத்தினர் சேர்ந்து வசிக்கும்படியான அமைப்புக் கொண்ட இடத்தில் வீடொன்று காலியாக இருப்பது தெரிய வந்தது.உடனே அந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.

இப்போது அவள் தங்கியிருக்கும் வீடு வெளியிடத்தினர் உள்ளே வர முடியாத அளவிற்கு பாதுகாப்பு இருந்தது. வீட்டின் சொந்தக்காரர் மிகுந்த கண்டிப்பு கொண்ட கறார் பேர்வழியாக இருந்தார். தரைத்தளத்தில் ஒரு வீட்டில் அவரும் குடியிருக்க முன்பு சந்தித்த எந்த பிரச்சனைகளும் இல்லாமல் அவளது வாழ்க்கை தெள்ளிய நீரோடையாக சென்றுக் கொண்டிருந்தது.

இப்போது அவள் அலுவலகத்தில் மிக நல்ல சம்பளத்தோடு டீம் லீடராக பதவி உயர்வு பெற்றிருந்தாள்.அவளுக்கு கீழே 20 பேர் வேலை செய்தனர். தன் துன்பங்களை வெளிப்படுத்தாத கலகலப்பாகவே இருக்கும் குணம் என்பதால் அவளை அங்கு அனைவருக்கும் வெகுவாக பிடிக்கும்.

அவளைப் பொருத்தவரை தூங்க மட்டும் வரும் வீட்டை விட வாழ்வின் பெரும்பான்மையான நேரத்தை செலவிடும் அலுவலகமே அவள் உண்மையான வீடாயிற்று. அவள் மேல் பாசத்தை பொழியும் தன்னை விடவும் வயதில் இளைய டீம் மெம்பர்ஸ் அவள் உறவினர் போலாகினர். எல்லாரோடும் உணர்வு பூர்வமான உறவுகள் வளர்த்திருந்தாள்.

வார இறுதிகளில் அவர்களுள் யாரேனும் அழைத்தால் கூட சேர்ந்து, ஊர் சுற்றவும் பழகி இருந்தாள். மோசமான எண்ணத்தோடு இருப்பவர்களை தன் அருகிலும் வரவிடுவதில்லை. ஆண்கள் பலரையும் வேலைக்கு தேவையானது மட்டும் பேச அனுமதிப்பாள்.மற்ற நேரம் புன்னகையோடு கடந்து விடுவாள்.

அவளது கடந்த வருடங்கள் அலுவலகத்திலும், வாடகை வீட்டிலும் மிக பாதுகாப்பாக கடந்திருக்க ஒரு வருடம் முன்பு குடிவந்தது குமரேஷ் குடும்பம்.

சில மாதங்களில் அவளைக் குறித்து அறிந்துக் கொண்ட குமரேஷிற்கு அவள் அழகு மட்டுமல்லாது சம்பாத்தியமும் கண்ணை கவரவே தனியாக இருப்பவளுக்கு உடல் தேவை இருக்கும் தானே? எனும் பொது சேவை உணர்வோடு பலமுறை அணுகியும் அவளிடமிருந்து எதிர்ப்பையே பதிலாகப் பெற்றான்.

ஆனாலும் கூட அவளை பின் தொடர்வதையும், அசிங்கமாக பேசுவதையும், வருணிப்பதையும் அவன் விடவில்லை. ‘பெண்கள் இல்லையென்று சொன்னால் ஆமென்று புரிந்துக் கொள்ள வேண்டும்’ எவனோ ஒரு வடிக்கட்டிய முட்டாள் சொன்னதை உண்மை என நினைத்து கொண்டிருந்தான் போலும்.

ஆலிஸோ ‘இவன் ஒருவனுக்காக பாதுகாப்பான இந்த வீட்டை விட்டு செல்வதா?’ எனும் வைராக்கியத்தில் அவனை தவிர்த்துக் கொண்டிருந்தாள். இதற்கு முடிவு எப்போது வருமோ?

ஆலிஸ் வேலைக்கு புறப்படும் நேரம், குமரேஷ் தன் பின்னால் வந்து அசிங்கமாக பேசிக் கொண்டே வர மனம் கூசி குறுகியவள் அதனை தவிர்க்க அவன் மனைவி மஞ்சுவை அழைத்தாள்.

குமரேஷிற்கு ஆலிஸின் செயல் பயத்தை வரவழைக்க, தன் மனைவி ஆலிசின் குரலுக்கு வெளியே வருவதை கண்டதும் அங்கிருந்து விரைவாய் மறைந்தான்.

தன் பின்னால் வந்துக் கொண்டிருந்த குமரேசை இப்போது காணவில்லை என்றதும் அவசர அவசரமாக மஞ்சுவிடம் விடைப்பெற்று அலுவலகம் சென்று நிற்க உடனே மேனேஜரிடம் இருந்து அழைப்பு வந்தது.

இன்றைக்கு எத்தனை பேச்சு கேட்க வேண்டுமோ? என்றெண்ணியவள் மேனேஜர் பேசிய விதத்தில் அதிர்ந்தாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here