3. TKSN

3
2036

தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!

அத்தியாயம் 3

ஆலிஸிற்குத் தன் காதை தன்னாலேயே நம்ப முடியவில்லை. இது அமித் தானா? சாதாரண அமித் அல்ல தொந்தி அமித்…அதுவும் கூட அவளைத் திட்டி திட்டியே காதை செவிடாக்கும் அமித். இன்றைக்கு இவனுக்கு என்னவாகிற்றாம்?

பொதுவாகத் தனக்குக் கீழ் பணிபுரிபவர்கள் அலுவலுக்குத் தாமதமாக வருவதைச் சுத்தமாய் வெறுப்பவன் அவன்.எதிலும் எல்லாவற்றிலும் டிசிப்ளின் அதுவே அவன் எதிர்பார்ப்பு… அவன் அவன் என்று குறிப்பிடும் அவன் என்றால் யார்? என்று தானே கேட்கிறீர்கள்?

அமித் தான் ஆலிசின் மேனேஜர், அவன் கண்டிப்பான குணம் கொண்டவன். அவளது வருகைப் பதிவை வாரத்திற்கு ஒரு முறையாவது பார்த்து ஒவ்வொரு நிமிட தாமதத்திற்கும் ஒரு மணி நேரம் அவளைத் திட்டுவது அவனது வழக்கம்.

‘சூப்பர்வைசர் ஆகிய நீயே தாமதமாக வந்தால் மற்றவர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவாய்? எனச் சினந்து கொள்வான்.

வழக்கமாக மதியம் வரக்கூடிய அவன் இன்று காலையில் வந்ததும், அவள் வந்த உடனே அவளை மீட்டிங்கிற்கு அழைத்ததும், மீட்டிங்கில் எதிரில் இருப்பவரிடம் அவளைப் புகழ்ந்து பேசியதும் அவளை ஆச்சரியத்தில் அமிழ்த்தியது.

எதிரில் இருந்த அடையாளம் தெரியாத நபரை அமித் அறிமுகப்படுத்தினான்.

“மீட் மிஸ்டர் ராகவன் ஃப்ரம் டெல்லி ஆஃபீஸ்”

ஆலிஸீக்கு உயர் அதிகாரியான அவரைக் குறித்துத் தெரியும் என்றாலும் நேரில் பார்ப்பது இதுவே முதல் முறை. பரஸ்பர மரியாதை நிமித்தமாக இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.

அடிக்கடி ராகவனிடமிருந்து இவர்கள் குழுவிற்கு மின்னஞ்சல் செய்திகள் வருவது உண்டு. அவரே இப்போது சென்னைக்கு வந்து இருப்பதைக் குறித்து யோசித்தால் நிச்சயமாக அடுத்ததாக வரவிருக்கும் ப்ரொஜக்ட் எத்தனை பெரியதாக இருக்கும் என உணர முடிந்தது.

தங்கள் அலுவலகத்தில் புதியதாக ப்ரொஜக்ட் வருவதை அவள் அறிந்திருந்தாள். அதற்காக ராகவனே சென்னைக்கு அழைத்து இருக்கிறார்கள் என்றும் இப்போது அவளால் ஓரளவு யூகிக்க முடிந்தது. ஆனால், எதற்காக அந்த ராகவன் முன்பாக அவளை அழைத்துப் பேசி அமித் புகழ்ந்து கொண்டு இருக்கிறான்? என்று அவளுக்குப் புரியவில்லை.

அலுவலகத்திற்கு வந்ததும் மின்னஞ்சல்கள் எதையும் வாசிக்காமல் மீட்டிங்கிற்கு வந்த தன்னுடைய மடத்தனத்தை அவள் அறவே வெறுத்தாள். இப்போது அவள் தனக்கு அனுப்பப்பட்ட எந்தச் செய்தியையும் வாசிக்கவில்லை என்று காட்டிக் கொண்டால் பிரளயமே வெடிக்க வாய்ப்பு இருந்தது.

எப்போதுமே அமித்திற்கு ஆலிஸின் விளையாட்டுத்தனங்கள் பிடிக்காது. அவனைப் பொறுத்தவரையில் சூப்பர்வைசர் என்பவர் ஒரு ஆசிரியரைப் போலக் கண்டிப்பானவராக இருக்க வேண்டும், தனது கீழ் வேலை செய்வோருக்குச் சமமாக இல்லாமல் இடைவெளி பேண வேண்டும். ஆனால் ஆலிஸோ தன்னுடைய டீம் மெம்பர்ஸ் உடன் நட்பாகப் பழகுவதும், அரட்டை அடிப்பதும், தானும் இருந்த இடத்தில் இருந்து எதையாவது தின்று கொண்டு, கூட இருப்பவருக்கும் தின்ன கொடுத்துப் பணியிடத்தை சுற்றுலாத் தலம் போல மாற்றி வைத்து இருப்பதும், சத்தமாய்ப் பேசி சிரிப்பதும், என்று வெகுவாக அமித்தின் பொறுமையைச் சோதித்துக் கொண்டு இருந்தாள்.

அலுவலகத்திற்கு ஏற்ற எந்த நாசூக்கான குணமும் இல்லாத ஆலிஸை கண்டாலே அவனுக்கு மிகவும் கடுப்பாக இருக்கும். ஆனால் என்ன செய்வது? எப்போதும் சென்னை டீம்களுக்குள் போட்டி என்று வருகையில் டீம் ஒர்க், வருகைப் பதிவு, மற்றும் அர்ப்பணிப்போடு வேலை செய்வது இவற்றில் அவளது குழுதான் முன்னிலை வகிக்கும். பொதுவாக அவளது குழுவினர் சட்டென்று வேலையை விட்டு செல்வதும் இல்லை. எனவே, அவளது குழுவின் அட்ரிஷன் ரேட் மிகக் குறைவு. அப்படி ஒரு உறவை அவர் அவர்களோடு பேணிக் கொண்டு இருந்தாள்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை வேலை செய்யும் திறன் பரிசீலிக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த டீம் எனும் பரிசையும் அடிக்கடி அவளது குழுவினரே வாங்கி வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்க, ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் அவளை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.

அவள் குறித்த பிரச்சனைகளை மேலிடத்திற்குக் கொண்டு சென்றாலும் அவளது பர்ஃபாமென்ஸின்படி அவளை அவன் அசைக்க முடியாமல் இருந்தான். இவன் அவளுக்கு எதிராக அளிக்கும் குற்றச்சாட்டுகளை எவரும் ஏற்றுக் கொள்வதுவும் இல்லை.

அவள் தன் டீமோடு நடந்து கொள்ளும் முறை குறித்து இவன் எத்தனை குற்றம் குறைகளைச் சொன்னாலும்,

“அதனால் என்ன? அவள் அனைவருடனும் ஜோவியல் ஆக இருப்பதால் தான் அதிகமான வேலைகள் இருக்கும் போதும், வார இறுதிகளில் லீவு நாட்களில் வரவேண்டியது இருந்தாலும் அவளுடைய குழுவினர் முகம் சுணங்காமல், உற்சாகத்தோடு செயல்பட்டு அதிகப்படியான வேலைகளைச் செய்து முடிக்கிறார்கள். நீ அவள் செயல்படும் முறையைக் குறித்துக் கவலை படாதே, ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வகையான அணுகுமுறை இருக்கும். நமக்குத் தேவையான ரிசல்ட் கிடைத்தால் போதும்.” என்று அவனுக்கு மேலிடத்திலிருந்து பதில் வந்துவிட்டிருந்தது.

இப்போது அவனுக்குக் கிடைத்த வாய்ப்பில் ஆலிஸை அவன்

தன்னுடைய டீமில் இருந்து வெளியே தூக்கிப் போட முழுமையாக முயன்றான். புதிய ப்ரொஜெக்டிற்க்கு அவனிற்குக் கீழ் வேலை செய்யும் ஏதோ ஒரு டீம் லீடர் அனுப்பி வைக்கும்படி மேலிடம் கேட்டிருக்க, இப்படிப்பட்ட வாய்ப்பை தவற விடுவது முட்டாள்தனம் அல்லவா? உடனே ஆலிஸை அனுப்பி வைக்க முடிவு எடுத்து விட்டான்.

கடினமான புதிய ப்ராஜெக்டில் அவள் வேலை செய்ய முடிந்தால் சரி, இல்லை அவருடைய வேலை செய்யும் விதம் மற்றவருக்குப் பிடிக்காமல் பொறுப்புக்களை சரி வர செய்ய இயலாமல் ஆகிவிட்டால் அவளை வேலையை விட்டு துரத்தினாலும் அவனுக்கு அது குறித்து ஒன்றும் இல்லை.

எனவேதான் டெல்லியில் இருந்து வந்த ராகவனிடம் ஆலிஸை குறித்து வெகுவாகப் புகழ்ந்து பேசிக்கொண்டு இருந்தான். ஒரு பொருளை விற்க வேண்டுமானால் அதை நல்லது என்று சொல்லித்தானே ஆகவேண்டும்.

ராகவனுக்கு ஆலிஸ் குறித்து மிகவும் நன்றாகத் தெரியும். சென்னை அலுவலகத்தில் சிறந்த பணி புரியும் குழுக்களில் அவளது குழுவே எப்போதும் முன்னிலையில் இருக்க, அவளது பெயரும் குழுவும் அனைவர் கவனத்தையும் ஈர்த்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ராகவன் பல்வேறு விவரங்களைச் சொல்லி ஆலிஸிடன் பேசிக்கொண்டிருக்க, அவளோ எல்லாம் தெரிந்தது போல, “எஸ் எஸ் நோ நோ’, என்று தலையை ஆட்டிக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தாள். தங்கள் பேச்சினூடே எது குறித்து அவர் பேசுகிறார்? என்பதை அவ்வப்போது தனது மூளையில் பதிய வைத்துக்கொண்டாள். அத்தனையையும் தான் இன்னமும் வாசித்திராத தனக்கு அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சல்களின் செய்திகளோடு அவள் தொடர்புப்படுத்தி புரிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றதே?! மறுபடியும் மாதவனிடம் வந்து அதே விபரங்கள் குறித்துக் கேட்க முடியாது. அமித்தும் இப்போது மாதவன் முன்பாக இனிமையாகப் பேசுகின்றானே தவிர இவள் மறுபடியும் சந்தேகம் கேட்க சென்றால் அவளிடம் ‘நாய் போலக் குரைப்பான்’ என்பது நிச்சயமே.

மீட்டிங்கினின்று விடைபெற்று வந்த ஆலிஸ் தனது இருக்கையில் அமர்ந்து மின்னஞ்சல்களைப் பார்வையிட அவற்றின் செய்திகளை உள்வாங்க அவளுக்குச் சற்று நேரம் பிடித்தது. செய்தியின் சாராம்சம் என்னவென்றால், அவள் இரண்டு நாட்களில் புதிய குழுவை தலைமை ஏற்க வேண்டும் என்றும் அவளது பொறுப்புக்களை உடனே மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்த வேறொரு டீம் லீடருக்குக் கற்று கொடுக்க வேண்டும் என்பதுமே ஆகும்.

கடந்த ஒரு வருடமாகத் தனக்குக் கீழாகப் பணிபுரிந்து கொண்டிருந்த அந்த 20 பேரும் அவளது குடும்பமாகவே ஆகி இருந்திருக்க, அவளது அலுவல்களைப் பொறுப்பேற்க மற்றொரு டீம் லீட் விஷால் பணிக்கப்பட்டு இருந்தான். அவனுக்கு ஒரு நாள் முழுக்க இவள் செய்யும் வேலைகளைக் கற்றுக்கொடுத்தது பொறுப்பை ஒப்படைத்து விடை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது மின்னஞ்சலில் செய்தியாக இருந்தது. சட்டென்று ஒரே நாளில் தனது குடும்பத்தைப் பிரிவது போன்ற உணர்வில் அவள் மனம் சற்று அசைந்தது.

ஆலிஸ் மனம் கலங்கினாலும், தனக்குப் பிடித்தவர்களைப் பிரிவது இது முதல்முறை அல்லவே? என்று மனதை தேற்றிக் கொண்டாள். அனைவருக்கும் பிரியமான அக்காவாக இருந்தவள் விடை பெறுவது அறிந்ததும் அவளது குழுவினர் செயலற்று இருந்தனர். யாருக்குமே வேலை செய்யும் மனம் இல்லாமல் சோர்ந்து விட்டிருந்தனர். அவள் மீட்டிங் முடித்து வெளியே வரும் முன்னரே அந்தச் செய்தி கசிந்து விட்டிருக்க அனைவரின் முகங்களும் வாடிப்போய் இருந்தன.

தங்களுக்குக் கீழே பணிபுரிபவர்கள் தானே என்று அடக்குமுறை செய்யாமல், அவர்கள் உடல் நிலை அறிந்து, குடும்பப் பிரச்சினைகளை அறிந்து, விடுப்புகள் தருவதுவும், திறமையுள்ளவர்களைப் பாராட்டுவதுவும், ஊக்கப் படுத்துவதும் அவளால் மட்டுமே முடியும். வேலைக்கு வருகின்றோம் என்ற உணர்வே எழாத வண்ணம் இனிமையான சூழலை உருவாக்கி இருந்ததும் அவள் தானே? மற்ற டீம் மெம்பர்ஸ் அவர்களின் மேல் பொறாமை கொள்ளும் அளவிற்கு அவர்களது குழு இருந்தது.

தனது குழுவினர் செய்யவேண்டிய வேலைகளைப் பணித்து முடித்தவள் அவர்களை மீட்டிங்கிற்கு அழைத்துச் சென்று அஃபிஷியலாகத் தான் இரண்டு நாட்களில் மற்றொரு குழுவை தலைமையேற்க போவதாகவும், அவர்களது புது டீம் லீடாக விஷால் இருக்கப் போவதையும் அறிவித்தாள்.

அனைவரும் சோகமாக இருப்பது மாற்ற சிரித்துப் பேசி நிலைமையை மாற்ற முயன்றாள். ஒருவர் மாற்றி ஒருவர் அவளை விட்டு அவர்களால் பிரிய முடியாதென்றும், தாங்களும் அவளது புது டீமில் வந்து சேர்ந்து கொள்வதாகச் சொல்ல அவர்களைச் சமாதானப்படுத்த அவளுக்கு நேரமாயிற்று.

“சரி சரி நான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன். வேறு டீம் என்றாலும் கூட நான் வேறு எங்கே சொல்ல போகிறேன்? இரண்டு ஜோன் ( zone) அடுத்து அந்த டீமில் இருக்கப் போகிறேன். நமது உணவு இடைவேளைகளில் நாம் சந்தித்துக் கொள்ளலாம். வார இறுதிகளில் பிக்னிக் ஏதேனும் ஏற்பாடு செய்தால் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்… சரியா? புது டீம் லீடரோடு பழகியதும் என்னை மறந்து விடாமல் இருந்தால் சரிதான்.” என்று சீண்ட அவளைக் கோபத்துடன் அவள் டீம் கழுவி ஊற்ற, திட்டி தீர்த்து அனைவரும் சிரிப்பு பாவனைக்கு வந்துவிட்டிருந்தனர்.

“சரி சரி வாங்க நான் காலை சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்… சாப்பிடலாம்”, என்றதும் ஒருவன், “நீங்க சமைச்சது இல்லைதானே?” எனக் கேட்டுக் கொட்டுக்கள் வாங்கிக் கொண்டான்.

“போடா அப்புறம் நான் எப்பதான் சமைக்கக் கத்துக்கிறது?” குழுவினரோடு கஃபேடேரியா நோக்கி சென்று கொண்டிருந்த அவள் சிணுங்க,

“நீங்க சமைங்க ஆலிஸ் அக்கா, பட் நாட் அட் த காஸ்ட் ஆஃப் அவர் லைஃப்” (எங்கள் உயிரை பணயம் வைத்து நீங்கள் சமையல் பழக வேண்டாம்) என்று இன்னொருத்தன் காலை வார அடிக்கத் துரத்தியவள் தன் பையில் இருந்தவற்றைக் கடை பரப்பினாள்.

இப்போது சாப்பிடும் சப்தம் மட்டுமே…ஒவ்வொருவரும் தங்கள் டிஃபன்களைத் திறந்து ஒருவர் மற்றவரோடு பகிர்ந்து கொள்ள, அனைவர் தட்டுகளிலும் கலவையாக உணவு வகைகள்.

“ஏன் அக்கா திரும்பி திரும்பிப் பார்க்கிறீங்க?” ஆலிஸை கவனித்த யோகேஷ் கேட்க,

“யாரோ என்னைக் கவனிக்கிறது மாதிரி தோணுதுடா”

“நாம செய்யுற கலாட்டால ஊரே நம்மைப் பார்க்குது, இதில் யாரோ நம்மைப் பார்க்குறாங்களா?, உங்களுக்கே இது ஓவரா இல்லையா?” எனச் சொல்லி கார்த்திக் வாயை விட அவனை நோக்கி பறந்த டிஃபன் மூடியை கேட்ச் பிடித்தான்.

இன்னும் அவள் முதுகில் குறுகுறுக்கும் உணர்வு அதிகரித்ததே ஒழிய குறையவில்லை. திரும்பி பார்த்தால் இந்தக் குரங்கு கூட்டமே அவளைக் கலாய்க்கும் வாய்ப்பு இருந்ததால் அடக்கி வாசித்தாள்.

அன்றே விஷாலுக்குக் குழுவை அறிமுகப் படுத்தி, வேலைகளைக் கற்றுக் கொடுத்து, சட்டென்று பொறுப்பை மாற்ற வேண்டியதால் வந்த வேலைப்பழுவிற்காக மூன்று மணி நேரங்கள் அதிகமாய்ப் பணி புரிந்து வீடு திரும்பினாள்.

அடுத்த நாள் அவள் குழுவினர் அவளுக்குப் பரிசு பொருட்களைக் குவித்து விட்டிருக்க, கேக் கட்டிங் பிரியா விடை கொடுத்தல் எனும் எல்லா நேரமும் அவளது மனதின் குறுகுறுப்பு அடங்கவே இல்லை.

‘யாரது? தொடர்ந்து என்னை நோட்டமிடுவது?’

3 COMMENTS

  1. Amitumthan enna pannuvar paavam.. avar attention ngumbothu intha pakkam ivanga giligilyana😂 kaduppugal agathane seyyum.. ana onnu ore stream ah poitu iruntha Alice oda life la intha inna turn periya change kondu vara pogutho?🤔

    Ithellam aniyayam sis antha kathaila than Risha va yaaro follow panranganu paraparapave vachuruntheengana ithulayuma😲

    Intha parvai Alice +ve ah? Illa Alice -ve ah?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here