4. TKSN

5
1436

தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!

அத்தியாயம் 4

Sing in the rain…

I’m swoing in the rain…

பாடலை ஹம்மிங் செய்தவாறு

கண்களை சுழற்றி விரல்களை பரதம் ஆடுவது போல அபிநயம் காட்டியவாறு கம்ப்யூட்டரில் கண்ணை பதித்து தன் வேலையில் ஆழ்ந்திருந்தாள் ஆலிஸ்.

புது ப்ரொஜெக்டில் அவளுக்கு இன்று முதல் நாள். கடந்த இரண்டு நாட்கள் அமித்தின் அணுகுமுறை மற்றும் தன் டீமை பிரிவது குறித்த மனக்கிலேசங்கள் இருந்திருக்க வழக்கம் போல அதனை விட்டெறிந்து அதன் சுவடே அறியாதவளாக அந்த புது ப்ரொடக்‌ஷன் ஃப்ளோரில் தனியாக அமர்ந்திருந்தாள்.

புது ப்ரொஜெக்டிற்கான வேலைகள் இன்னும் ஆரம்பித்து இருக்கவில்லை. அன்று மதியம் நிகழ இருக்கின்ற டீம் மீட்டிங்கில் புது ப்ரொஜெக்டிற்கான டீம் மெம்பர்ஸ் குறித்த விவரம் தெரிவிக்கப்படும் என கூறி இருந்தனர். அதனால் அன்று காலை முதல் மீட்டிங்கிற்காக தயாரித்து கொண்டு இருந்தாள்.

புதிய ப்ராஜெக்ட் குறித்த தகவல்கள் கொண்ட நிறைய டாகுமெண்டுகள் அவளுக்கு கொடுக்கப்பட்டு இருந்தன. அதனை உன்னிப்பாக கவனித்து குறிப்பு எடுத்து கொண்டிருந்தாள். அத்தோடு கூட தன்னுடைய டீமின் பொறுப்பை முன் தினம் ஏற்றுக்கொண்ட விஷாலுக்கு இவளது உதவி அடிக்கடி தேவை பட்டது. எனவே, அவனுக்கும் அவ்வப்போது போய் உதவி செய்துகொண்டு இருந்தாள்.

இத்தனை வேலைக்கு மத்தியில் தான் அவளது இந்த பாடலும் அபிநயங்களும், அமர்ந்த இடத்திலேயே நடனமும்… நாய் வாலை….ம்ம் அதே அதே…

காலை உணவு சாப்பிட அவளது டீம் மெம்பர்ஸ் வந்து அழைத்த போது அவளால் செல்ல இயலவில்லை. இன்னும் அவள் காலை உணவை எடுத்துக்கொள்ளவும் இல்லை. வேலையின் தீவிரத்தில் பசியும் அவளுக்கு புரியவில்லை. திடீரென அவள் முன்னால் சுடச்சுட ஒரு டீயும் பிஸ்கட் பாக்கெட்டும் வைக்கப்பட்டது. திடுக்கிட்டுத் திரும்பியவள் எதிரில் நின்ற ராபர்ட்டை பார்த்து சிரித்தாள்.

“ஹலோ ஆலிஸ் அக்கா என்ன இப்படி சாப்பிடாம வேலைப் பார்க்கிறீங்க?”அதட்டினான்.

தனது இடக்கையைத் திருப்பி கடிகாரத்தில் நேரம் பார்த்தவள்

“அடடா 11 மணி ஆயிடுச்சு” என்றாள்.

“இங்கேயே மறைத்தது போல நில்லுடா…”

என அவனை அங்கேயே நிற்க வைத்து படபடவென பிஸ்கட் பாக்கெட் பிரித்து டீயுடன் சாப்பிட்டு முடித்தாள். மறுபடியும் முதுகில் ஏதோ குறுகுறுப்பு உணர்வு…

“ராபர்ட்டு அக்கம் பக்கம் யாரும் இருக்காங்களா பாருடா…”

“இல்லியே அக்கா யாரும் இல்ல, அட்மின் டீம் இப்பதான் கேஃபேடேரியால கதை விட்டுட்டு இருக்கு அதை பார்த்துட்டு தான் உங்களுக்கு டீ கொண்டு வந்தேன்.”

ப்ரொடக்‌ஷன் ஃப்ளோரில் சாப்பிடக் கூடாது என்பது அலுவலக விதிமுறை அதனால் தான் இத்தனை கள்ளத்தனமும்.

“என் தங்கம்டா நீயி…”

“போதும் போதும் தடமே தெரியக் கூடாது…க்ளீன் பண்ணுங்க…”

உடனே டீ கப்பில் பிஸ்கட் கவரை திணித்தவள் தன் பையில் இருந்து டிஸ்யூவை உருவி டேபிளை துடைத்து அதையும் கப்பில் திணித்தாள்.ட்ராவிலிருந்து ஒரு எழுதி கிறுக்கிய தாளை உருவி டீ கப்பை அதனுள் பொதிந்தாள்.

அதனை வாங்கிய ராபர்ட் பொதிந்த பின்னரும் தாளின் மேல் எழுதி இருந்தது தெரிய சற்று சரித்து வாசித்தான்.

டேய் அமித்து…

உனக்கெல்லாம் ஆண்டவன்

சீக்கிரம் வைப்பான்டா ஆப்பு

“ஆஹா …அக்கா உங்க புதுக்கவிதை அபாரம்…” சிரித்தான்.

“டேய் அந்த தாளாடா இது?… சும்மா கிறுக்கினதுடா அதை இங்க தா…வேற தாளால சுத்துறேன்.”

“ஹா ஹா ஹா இதை மட்டும் அவன் பார்த்தான் நீ நல்லா மாட்டுன அக்கா…”

வழக்கமாக தனக்கு தோன்றுவதை வரைந்தோ, எழுதியோ தீர்க்கின்ற பழக்கத்தில் அதையும் எழுதி இருந்தாள்.

“டேய்…”

“சரி சரி ….”

பேனாவை எடுத்து அவன் கையில் இருந்த தாளின் மேல் எழுதி இருந்த கவிதை (??!) மேல் கிறுக்கி  எழுதி அதை மறைத்தாள்.

“விடுக்கா அந்த ஹிந்திக்காரனுக்கு என்ன தமிழ் தெரிஞ்சிக்கப் போகுது?”

“நம்ப முடியாதுடா…சும்மாவே என்னை கண்டா எண்ணையில் போட்ட சிக்கன் கணக்கா குதிப்பான்.”

“அக்கா அவன் வெஜிடேரியன்…”

“சரி சரி உவமை மாத்திடுறேன்….சும்மாவே எண்ணையில் போட்ட அப்பளம் மாதிரி பொரிவான்…”

ஹா ஹா வென ராபர்ட் சிரித்துக் கொண்டிருக்க

“என் கவிதை வாசிச்சான்னா கதை கந்தல்…கழுத்தில் கை வைத்து ஷ்க்க்…”ஆக்ட் கொடுத்தாள்.

“ரொம்ப ஆக்ட் கொடுக்காதக்கா…நீயாவது பயப்படறதாவது…”

முறைக்கிறவளை பொருட்படுத்தாது தொடர்ந்தான்…

“ஒன்னும் நம்பற மாதிரி இல்ல”

என்றவனுக்கு தலையை சரித்து நாக்கை நீட்டி பழிப்பு காட்டினாள். புறப்பட்டவன் கையில் தன் பையிலிருந்து ஒரு ஸ்னாக்ஸ் டப்பா எடுத்து நீட்டினாள். சிரித்துக் கொண்டே வாங்கியவன் அங்கிருந்தது சென்றான்.

கணிணியில் கவனம் செலுத்தவே இப்போது இயற்கை அழைப்பிற்காக சென்று வந்தாள். முதுகின் குறுகுறுப்பு அளவு அதிகமாக கூடிப்போய் இருந்ததை உணர்ந்தாள். ஆனால், தன்னை கவனிப்பது யார்? என்று சுத்தமாக அவளுக்கு புரியவில்லை.

மதிய மீட்டிங் நேரம் அந்த கான்ஃபரன்ஸ் அறையில் ஒருவர் பின் ஒருவராக தத்தம் மடிக்கணிணியோடு வந்து அமர்ந்தனர். ஆலிஸ் தன்னுடைய டைரியில் காலையில் முதல் தான் சேர்த்த குறிப்புகளை சரி பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். அலுவலக மடிக்கணினிகள் மேனேஜர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு இருந்தன.

அங்கு வந்திருந்த பலரும் அவளுக்கு அறிமுகம் ஆகாதவர்கள் ப்ராஜெக்ட் சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு கிளை அலுவலகங்களில் இருந்தும் சிறந்தவர்களை அனுப்பி வைத்திருந்தனர். ஒவ்வொருவரும் “ஹாய்” என்று சொல்லி வந்து அமர, சிலர் வெகு பிஸியாக போனில் பேசிக் கொண்டு வந்து அமர்ந்தனர்.

பெரும்பான்மை ஆட்கள் குழுமியதும் இன்னும் சிலர் வரவிருக்கின்றனர். நேரமாவதால் நாம் இப்போது ஆரம்பிக்கலாம் என ராகவன் அறிமுக பேச்சை ஆரம்பித்தார். ப்ரொஜெக்டரில் கணக்கீடுகள் விபரங்கள் எல்லாம் திரையிடப்பட அனைவர் கவனமும் அங்கே திரும்பியது.

ஆளுமையான அவர் குரல் முன்பாக அனைவரும் சட்டென்று அமைதியானார்கள். புது ப்ரொஜெக்ட் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது. தாங்கள் இதனை சிறப்பாக செய்து முடித்தால் தங்களுக்கு இதன் மூலம் வரவிருக்கும் புதிய வாய்ப்புகள் எத்தகையவை என அனைவருக்கும் ப்ரொஜெக்டரின் ஸ்லைடுகளில் இருந்த விபரங்களை மிக விளக்கமாக கூறலானார்.

தன்னுடைய இருபது நிமிடத்திற்கு மேலான உரைக்கு பின்னர் தாம் கூறியவற்றில் யாருக்கேனும் ஏதாவது கேள்விகள் இருந்தால் கேட்கலாம் என்று ராகவன் சொல்லவும் அங்கிருந்த பலரும் சில பல கேள்விகள் கேட்க அவர் உரிய பதில் கொடுத்தார்.தனது குறிப்புகளிலிருந்தும் ஆலிஸ் ஒரு சில கேள்விகள் கேட்டு தெளிந்தாள்.

அடுத்ததாக வரவிருந்த அனைவரும் வந்து விட்டிருந்ததால் இணைந்து செயல்பட இருக்கும் அனைவரும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தனர்.

அனைவரும் தத்தம் பெயர்களும் தங்களது பொறுப்புக்களையும் கூற, ராகவன் புது ப்ரொஜெக்டில் அவர்கள் செய்யப் போகும் பணி என்ன?, யார் அந்தக் குழுவை தலைமை ஏற்கப் போகிறார் என்பதை சிறு விளக்கத்துடன் இணைத்து கூறலானார்.

அனைவரது விபரங்களை ஆலிஸ் தனக்கு ஞாபகப் படுத்திக் கொள்ளும் வண்ணமாக சிறுசிறு குறிப்புகள் எடுத்துக் கொண்டாள். தனது முறை வந்தபோது கணீரென்ற குரலில் தன்னைக் குறித்த சிறு குறிப்பொன்றைக் கூற, அவளது பொறுப்பை கூறிய ராகவனின் அறிமுகத்திற்கு அப்பால் அவளை புதுக்குழுவிற்கு உற்சாகமாக வரவேற்றனர்.

அப்போதுதான் தன்னை தாண்டி இடது புறத்தில் இருப்பவர்கள் தம்மை அறிமுகப்படுத்த ஆரம்பிக்க அவர்களை கவனிக்க ஆரம்பித்தாள். அது சின்ன கான்ஃபெரன்ஸ் அறையாக இருந்ததால் அமர இடம் கிடைக்காமல் ஓரிருவர் நின்றுக் கொண்டும் இருந்தனர்.

தனக்கு அடுத்து அமர்ந்து இருப்பது மணிவண்ணன் ஏற்கெனவே சென்னை பிராஞ்சில் வேறொரு டீமை மேனேஜ் செய்கின்றவன் அவன் தான் தன்னுடைய பாஸ் அதாவது புது ப்ரொஜெக்டின் குறிப்பிட்ட துறையின் மேனேஜர் என புரிந்துக் கொண்டாள். இருவரும் புன்முறுவல் பறிமாறிக் கொண்டனர்.

அடுத்தடுத்து நபர்கள் அறிமுகம் ஆக நின்றுக் கொண்டிருந்த நெடியவர்களில் ஒருவன்

“ஐயாம் பிரனீத்….’ என்று பேச ஆரம்பித்தான். வாய் திறந்தான் மூடினான் என்பது போல இருந்ததே தவிர சத்தமே இல்லாத மிக மென்மையான பேச்சு அவனுடையது.ஆனால், பேசிய நொடிகளில் தன்னுடைய பேச்சை அனைவரையும் கவனிக்க வைத்தான். ராகவன் பிரனீத் பெங்களூர் ஆஃபீசிலிருந்து சில மாதங்கள் புது ப்ரொஜெக்டிற்காக வருகை தந்ததாகவும் சீனியர் மேனேஜர் பதவி வகிக்கும் அவனது திறமைகளை பட்டியலிட்டு பாராட்டவும் அவனை பிறர் உற்சாகமாக வரவேற்றனர்.

அவன் பேச ஆரம்பித்ததிலிருந்து மற்றெதுவும் ஆலிஸ் மூளைக்குள் செல்லாமல் தடைப்பட்டது. அவள் பார்த்த வரையில் யாருமே குறிப்பாக ஆண்கள் தன்னுடைய இருப்பை வெளிப்படுத்துவதில், சுயதம்பட்டம் அடிப்பதில் முனைப்பாக இருப்பார்கள்.

சத்தமாய் அலட்டலாய் பேசுவது என்று பிறர் கவனம் கவரவே முயலுவார்கள். ஆனால், இந்த பிரனீத் எனும் பிரதினிதி…ச்சே தன் மைண்ட் வாய்ஸீம் இவனைப் பார்த்து உளறுகின்றதே மனதில் தலையை குட்டிக் கொண்டவள் பிரனீத் என்கிற பிரகிருதி கடந்த அரை மணி நேரமாக மீட்டிங்கில் இருந்தாலும் இருந்த இடமே தெரியாதது போல கலந்துரையாடலில் பங்கு கொள்ளாமல் ஊமையாய் இருந்ததென்ன?

அறிமுகப்படலத்தில் அத்தனை அமைதியாய் சுருக்கமாய் தன்னை அறிமுகப்படுத்தி கைக்கட்டி மிக இலேசாக தலையை அசைத்து பேசி முடித்ததென்ன?

ஆலிஸ் தன் மனதில் வகுத்திருந்த ஆண்களுக்கான வரையறைகளில் அவன் மாறுபட்டவனாக இருந்த காரணத்தால் அவளது கவனம் ஈர்த்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. மீட்டிங்கிற்கு பிறகும் அவன் தன்னை பெரிதாய் காட்டிக்கொள்ளாமல் ஓரமாகவே நின்று கொண்டு அனைவரும் கலைந்ததும் அமைதியாக அங்கிருந்து நகர்ந்தான்.

மீட்டிங் முடியவும் பசி தாங்காமல் ஆலிஸ் காஃபேடேரியா நோக்கி வேக எட்டுக்கள் வைத்து நடந்தாள்.இரண்டு நாட்களாக அதிக வேலைப் பளுவால் சமைக்க நேரமில்லாமல் காஃபேடேரியாவில் வாங்கி தான் சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றாள்.மீட்டிங் முடிய நேரம் மூன்று மணியை நெருங்கி விட்டதால் உணவு தீர்ந்துப் போக மிச்சம் மீதி இருந்த சாப்பாடு தான் அவளுக்கு கிடைத்தது.

‘அதாவது கிடைத்ததே’ என அவசரமாய் உண்டு தன்னுடைய இடத்திற்கு வந்தாள் அவள். ஏனென்றால், அடுத்து அவள் கலந்துக் கொள்ள வேண்டிய மற்றோர் மீட்டிங்கும் இருந்தது.

உணவு உண்டு தங்களது இரண்டாவது மீட்டிங்கிற்கு பத்து நிமிடங்கள் முன்பு வந்து விட்டிருந்தவள் தன்னுடைய மின்னஞ்சலில் வந்த புது டீம் விபரத்தை பார்த்துக்கொண்டிருந்தாள். அதில் பலர் ஏற்கனவே அவளுக்கு தெரிந்தவர்களாக இருந்தனர். சில புதிய ஆட்களும் இருந்தனர்.

அடுத்த நாள் காலை எவ்வாறு வேலை செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு கொண்டாள்.தன் புது மேனேஜர் மணிவண்ணன் உடனான மீட்டிங்கில் தாங்கள் செய்ய வேண்டிய வேலை குறித்து உரையாடி முடிவுகள் எடுத்துக் கொண்டனர்.

அன்றைய தினம் முழுவதும் திட்டமிடலில் கழிந்திருக்க, மிக இலகுவாக முடிவுற்றது. அன்று நேரமே வீட்டிற்கு வந்தவள் மூன்று நாட்களாக துவைக்கப்படாமல் இருந்த தனது உடைகளை துவைத்து காயப்போட்டு விட்டு, கதவை காற்றோட்டமாக திறந்து வைத்தவாறு பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தாள்.

ஸ்டவ் எரியாமல் மக்கர் செய்தது, “ஏன் ஸ்வீட்டி, என்னாச்சு உனக்கு? காலையில வர நீலக்கலர்ல தானே எரிஞ்சிட்டு இருந்த? இந்த சிலிண்டர் தடியன் இந்த தடவை என்ன சீக்கிரமா என்ன முடிஞ்சுட்டான்? சிலிண்டருக்கு ஒரு எத்துக் கொடுத்தவள் கேஸ் ஸ்டவ் பர்னரிடம் அன்பொழுக பேசிக் கொண்டு இருந்தாள்.

சிலிண்டருக்கு சொல்லி வைத்து விட்டு தான் இல்லாத நேரம் வீட்டு உரிமையாளரிடம் சென்று தனது சிலிண்டர் வந்தால் வாங்கி வைக்க சொல்ல வேண்டும் என எண்ணியவாறு தனது போனை எடுத்து சிலிண்டர் ஆர்டர் கொடுக்க நினைத்தவள் திரும்பி கட்டிலில் இருந்த மொபைலை எடுத்து காற்றாட வெளியில் நின்று அழைக்கலாம் என்று வாசல் நோக்கி நகர்ந்தாள்.

அதுவரை தனக்குள்ளாக உரையாடி சுற்றுப் புறம் அறியாதவளாக விரைந்தவள் வாசலில் குமரேஷை பார்த்து திடுக்கிட்டாள். ‘என் வீட்டின் வாசலுக்கு வரும் மட்டும் இத்தனை தைரியம் இவனுக்கு எவ்வாறு வந்தது?’ எனக் கோபம் எழுந்தது. அப்போதுதான் மேல்மாடி குடித்தனக்காரர்கள் இரண்டு குடும்பங்களும் அங்கு இல்லை என்பது அவளது எண்ணத்தில் இடறியது.பரீட்சைகள் முடிந்ததும் அடுத்த நாளே அதாவது முன் தினமே இரண்டு குடும்பங்களும் மே மாத லீவில் சில வாரங்களுக்கு தங்களது ஊர் சென்றிருந்தனர். மற்ற இரண்டு வீட்டிலும் இரவு வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கியிருந்தனர். வார இறுதியில் தான் இவள் அவர்களை பார்ப்பதே.

‘மேல்மாடியில் இவள் தனியாக இருக்கிறாள் என்றதும் இவ்வளவு துணிவா இந்த குமரேஷீக்கு? குறைந்த பட்சம் அவனது மனைவிக்கு கூடவா பயமில்லை.’

“என் வாசலில் எதுக்கு வந்து நிக்கிறீங்க? உங்களுக்கு என்ன வேணும்?”

இதுவரை அவனிடம் நேரில் எதையும் பேசியதில்லை என்றாலும் துணிவை வரவழைத்துக் கொண்டு கேட்டாள். அவளது மனதின் உள்ளே பயம் மத்தளம் வாசித்தது அவனுக்கு தெரிந்து விட்டது போலும்… கேவலமான ஒரு இளிப்பை சிதற விட்டவன்

“நீ தனியா இருப்பன்னு துணைக்கு வந்தேன்” என்றான்.

“எனக்கு துணை எல்லாம் தேவையில்லை, நீங்க மரியாதையா இங்கேயிருந்து போங்க” அவளது பற்கள் நெறிப்பட்டது.

“நிஜம்மா உனக்கு துணை தேவையில்லையா இல்லை வெளியில் துணை தேடிக்கிட்டியா குட்டி?” இரட்டை அர்த்தமாய் பேச, மிகை அழுத்தத்தில் இவளது பற்கள் தெறிக்காதது ஒன்றே மிச்சம்.

இன்னும் என்னென்ன பேசியிருப்பானோ? கீழே ஏதோ சப்தம் கேட்க வந்த சுவடு தெரியாமல் அங்கிருந்து குமரேஷ் நீங்கினான். அக்கம் பக்கம் வீடுகளில் ஆட்கள் இல்லாதபோது இத்தனை தைரியம் என்றால் அவனது குடும்பம் நாளையே ஊருக்கு பயணப் படுகின்றது என்று இருக்க, அவனது மனைவியும் பிள்ளைகளும் இல்லாத நாட்களில் அவனது தொல்லைகள் எப்படிப்பட்டதாக இருக்கும்? நினைக்கவே அவளுக்கு உள்ளூர பதறியது,

கதவை அடைத்தவள் அவசரமாய் சமைத்து முடித்து கீழிறங்கி சென்றாள். அந்த வீடுகளின் சொந்தக்காரர் இல்லத்தின் வாயிலில் நின்றுக் கொண்டிருந்தாள். கதவு முற்றிலும் சாத்தப்பட்டு இருக்க, கதவை தட்டியவள் உள்ளேயிருந்து ஆள் வெளிவரும் மட்டும் காத்திருந்தாள். ஓனரம்மாள்தான் வந்து கதவை விலக்கி எட்டிப் பார்த்தார். ‘வாடகை கொடுக்கும் நாளில்லையே? எதற்காக வந்திருக்கிறாள்?’ எனும் கேள்வியை ஆலிஸை நோக்கியிருந்த அவரது பார்வை தாங்கியிருந்தது.

“சாரை பார்க்கணும்” என தயங்கியவாறு அவள் கேட்க,

“வாம்மா உள்ளே வா” என அழைத்தவர் முன் அறையில் இருந்த சேரில் அமர வைத்து விட்டு சென்றார். சிறிது நேரத்தில் உண்ட வாயை துண்டால் துடைத்தவாறே எதிரில் வந்து அமர்ந்தார் அந்த பெரியவர்.

“சார், கீழே இருக்கிற ஏதாச்சும் அறை காலியானா எனக்கு மாத்திக்க தருவீங்களா?”

தயக்கத்துடன் கேட்டாள். அவர் ஏனென்று கேட்டிருக்கலாம், அல்லது இவளாவது காரணத்தை சொல்லியிருக்கலாம். தயக்கத்தில் ஆலிஸ் பிரச்சனையை சொல்லாமல் விட, தனது வணிக புத்தியில் வீட்டு ஓனர் அவளது கோரிக்கை எதற்கு என கேளாமலே முடியாதென்று சொல்ல சட்டென்று சிலிண்டர் குறித்த ஞாபகம் வரவும் பகலில் அவளுக்கு வரும் சிலிண்டரை வாங்கி வைக்க கேட்டுக் கொண்டு வந்த காரியம் நிகழாத தோல்வி மனப்பான்மையுடன் தன் அறைக்கு சென்றாள்.

‘இந்த பொறுக்கி தனது வாசல் வரை வந்துவிட்டானே? எதுவும் பெரிய பிரச்சனைகள் வந்துவிடுமோ?’ மனதிற்குள்ளாக கலக்கம் சூழ வேண்டாவெறுப்பாக உண்டு முடித்தாள்.

கண்ணாடி முன் நின்றவள் சிக்கு எடுத்து இரண்டு பின்னல்களாக பின்னி தோள்களில் போட்டு பார்த்துக் கொண்டாள். இரட்டை ஜடையில் பார்வைக்கு சில வயதுகள் குறைந்திருந்தாள்.

“ம்ம்… இந்த அங்கிள் வீடு மாத்தி தர மாட்டேன்னு சொல்லிட்டாரே?”

…. கண்ணாடியைப் பார்த்து தனக்குத்தானே பேச்சு தொடர்ந்தது.

“அந்த கீழ் ரூம் காலியாகப் பொகுதுன்னு தான் நான் கேட்டேன்”

……….

“ஆமா கீழ் ரூம்ல இருந்தா யாரும் சட்டுன்னு வர போக முடியாது, அந்த பொறுக்கி தொல்ல இருக்காதுன்னு நினைச்ச… நீ நினைச்சது சரிதான் பேபி”

……….

“ம்ம்ம்… என்ன செய்ய சொல்லு? குழந்த குட்டி இருக்கிறவங்க சின்னப்பிள்ளைங்க படியில விழுந்துடக் கூடாதுன்னு மேல்மாடிக்கு குடி வர பயப்படுவாங்களாம். நான் ஒண்டிக் கட்டை, ஒழுங்கா வாடகை தரேன்னு தான் என்னை மேல்மாடியிலயாவது இருக்க விட்டிருக்காங்களாமாம்” உதட்டை பிதுக்கினாள்.

“திமிரைப் பார்த்தியா?” கண்ணாடியில் அவளே பதில் பேச,

“விடு விடு இவர் கிட்ட சொந்த வீடு இருக்குன்னு தானே இந்த ஆட்டம் ஆடுறார். பாரு ஒரு நாள் இல்லை ஒரு நாள் இந்த சென்னையில…ம்ம் நோ நோ ஊர்ல வீடு கட்டுவேன். இங்க சென்னையிலதான் எனக்கு யாரு இருக்கா?

…ம்ம்ம் அப்புறம் ஊர்ல மட்டும் என்னவாம்? யார் இருக்காங்க உனக்கு? …………”

……..

“சரி இந்த டாபிக்க விடு அந்த பொறுக்கி ஃபேமிலி ஊர்லருந்து வர்ற வரைக்கும் தினமும் துவைக்காமல் வீக்கெண்ட் மட்டும் துணி துவைச்சு போடு. மத்த நாள் கதவை அடைச்சுட்டு உள்ளேயே இருந்துக்கோ. என்ன செய்யறது நம்ம வீட்டுலயே நமக்கு பாதுகாப்பில்ல?” கண்ணாடியிலிருந்த தன்னிடமிருந்து பதில் பெற்றவள்,

“இதைத்தான் செய்யப் போறேன்…. குட் ஐடியா”

“…… பின்னே எக்ஸ்பெர்ட் ஐடியாவாச்சே”

தனக்குத்தானே கண்ணாடி தொட்டு முத்தம் வைத்தவள், இல்லாத காலரை உயர்த்தினாள்.

“இப்ப இந்த டாபிக்கையும் விடு… அப்புறம் ஆஃபீஸ்ல அந்த பிரனீத்தை அப்படி உத்து உத்து பார்த்த நீ என்னவாம்?”

…..

“சட்டென்று கண்ணாடி விட்டு விலகி நின்றவள் தனக்கே பழிப்புக் காட்டி நகர்ந்தாள். மறுபடி கண்ணாடியில் தன்னைப் பார்த்து…..

“அவன் ரொம்ப அழகு இல்லியா?

“…. இல்லியே, நெட்ட கொக்கு மாதிரி இருந்தான், கன்னம் கூட இல்லை. உருவி விட்ட மாதிரி ஒல்லியா…. வளர்த்தியா…”

“ச்சே ச்சே உன் கிட்ட போய் கேட்டேனே நான் அழகுன்னு சொன்னது அவன் இயல்பை அலட்டலில்லாத அவன் அமைதியான குணம்…. நான் அப்படியே ஃப்ளாட் ஆகிட்டேன்ல”

……..

“நீ கேட்காட்டும் சொல்லுவேன்… ஒன்னுமே இல்லாம ஒவ்வொருத்தனுங்க எவ்வளவு சீன் போடுவானுங்க, ஆனா பிரனீத் பற்றி அறிமுகப்படுத்தினாங்க இல்லை……எவ்வளவு வேலை அனுபவம் தெரியுமா? எங்க ஆஃபீஸ்லயே அந்த குறிப்பிட்ட துறையில் அவர்தான் எக்ஸ்பர்ட், அத்தனை அத்தனை நுட்பமான அறிவு. இப்ப கூட பெங்களூர்ல அவரோட டீம் விட்டுட்டு இங்கே அவசர உதவிக்கு அழைச்சிருக்காங்க. மத்தவங்க எல்லோரும் எல்லாம் தெரிஞ்சது போல எத்தனை பேசினோம். ஆனா, அதுவரை சும்மா ஒரு வார்த்தை கூட வீணா உபயோகிக்கலை அந்த பிரனீத்.  I admire him (அவனைக் கண்டு நான் பிரமிக்கிறேன்)

“புது க்ரஷ் க்ரஷ் ஆகாமலிருக்க வாழ்த்துக்கள் மேடம்”

தன்னுடன் தானே கண்ணாடிப் பார்த்துப் பேசி, தன்னைத் தானே சமாதானப்படுத்தி விட்டு தூங்கினாள். இரவு தூக்கத்தில் சில முறைகள் புன்னகைக்கவும் செய்தாள். சரி அவளது கனவில் வந்தது யாராக இருக்கும்??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here