5. TKSN

4
1358

தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!

அத்தியாயம் 5

அடுத்த நாள் புது ப்ரொஜெக்டின் புது குழுவை தலைமை ஏற்கப் போகும் நாள். அவளது புது டீம் மெம்பர்களுடன் அறிமுகம் செய்து, வேலை குறித்த விபரங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்தாள். ப்ரொஜெக்ட் குறித்த எதிர்பார்ப்புகள், பொதுவான நடைமுறைகள் எல்லாம் அனைவரோடும் ஆலிஸ் பகிர்ந்த பின்  அன்றைய வேலையை ஆரம்பித்தனர். அவர்கள் டீமின் மேனேஜர் மணிவண்ணனும் அன்று வேலையின் முதல் நாள் ஆதலின் காலையிலேயே வந்து இருக்க, அன்றைய தின வேலையானது திட்டமிட்டாற் போல அக்குழுவிற்கு ஒரு சோதனை ஓட்டம் போலவே நடைப்பெற்றது.

கிளையன்டின் எதிர்பார்ப்புகள் எவை? தேவையானவை என்னென்ன? தடைகள் என்ன? அவற்றை நீக்க செய்ய வேண்டியவைகள் என்ன? என்பதைக் குறித்து அறிய உதவும் வண்ணம் அன்றைய தினம் வேலை அமைந்தது.

மெது மெதுவாக அவளை வேலை உள்ளே இழுக்க ஆரம்பித்தது. காலை உணவிற்கான நேரம் அவளுடைய புது டீம் மெம்பர்கள் அனைவரும் சாப்பிட புறப்பட்டுச் சென்று இருக்க, ஆலிஸ் தன்னுடைய வேலை காரணமாக அங்கிருந்து நகர முடியாதவளாக இருந்தாள்.

சட்டென்று யோசனை வரவும் இந்நேரம் அவர்களும் காஃபேடேரியாவில் இருக்க வேண்டும் என்று எண்ணியவளாகத் தன்னுடைய முந்தைய டீமின் வாட்ஸ் அப் குழுவிற்குச் செய்தியை தட்டிவிட்டாள்.

“டேய் யாராவது அக்காவுக்கு ஒரு டீயும், ரிசப்ஷன்லருந்து ஒரு தலைவலி மாத்திரையும் வாங்கிட்டு வாங்கடா”

கதிர் கலாய்த்தான், “யார்டா யார் இந்த அக்கா? டீ ஆர்டர் எல்லாம் கொடுக்குது. நாம ஏதாச்சும் டீ பிஸினஸ் ஆரம்பிச்சிருக்கோமா என்ன?”

ஆலிஸ், “இதோ வரேண்டா ” எனத் துப்பாக்கி ஸ்மைலிகளாக அனுப்பி முறைக்க,

எதிரில் இருந்து வெடிகுண்டுகள் பறந்து வர,

கத்தி, கடப்பாரை, வாள், அம்பு எனத் தீவிரமாகச் சண்டை போட்டுக் கொண்டிருக்க,

அவள் நெற்றியை இதமாய் நீவி விட்டதொரு கரம். மற்றொரு நபர் அவள் டெஸ்கில் டீயையும், சாண்ட்விச்சையும், வலி மாத்திரையையும் வைக்க ஆலிஸோ வெகு தீவிரமாய் வாட்சப் சண்டையில் இறங்கி இருந்தாள்.

“அக்கா போதும்” தலையை நீவி விட்ட வருணா மொபைலை பிடுங்கி தன் கையில் வைத்துக் கொண்டாள்.

“சாப்பிடுக்கா …” டீ கொண்டு வந்த சுதிர் ஆலிஸை கண்டித்தான். அவளோ தன் பசி புரிய, வழக்கமான அதே கள்ளத்தனத்தோடு டெஸ்கில் அவசரமாய்ச் சாப்பிட்டு முடித்தாள்.

“கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கா”

சொல்லி சென்றவர்களுக்குத் தலையசைத்தவள் வாட்சப் க்ரூப்பில் எட்டிப் பார்க்க,

“இவிங்க பெரிய ட்ரம்பு…காஃபேடேரியா வந்து சாப்பிட கூட நேரம் கிடையாதாம் தினம் டெஸ்க்ல தான் சாப்பிடுவாய்ங்களாம்…இன்னிக்கு வீடியோ எடுத்து அட்மின் கிட்ட போட்டுக் கொடுக்கப் போறேன் ” எனக் கேமரா ஸ்மைலியுடன் மறுபடி ஒருவள் கலாய்க்க….கத்தியும் துப்பாக்கியும் இருபக்கமும் பறந்தன.

அதன் பின்னர்ச் சற்றுநேரம் அலுவலகத்தை ஒட்டியிருந்த கார்டனில் காற்று வாங்கி வந்தவளின் தலைவலி குறைந்து இருந்தது. இப்போது சற்று நிதானமாகவும் யோசிக்க முடிந்தது. நேற்றைய குமரேஷின் அதிரடி வருகை மற்றும் அநாகரிக பேச்சு எண்ணும்போது அவளது உடலும், மனமும் பற்றி எரிகின்றார் போல இருந்தது. தீர்வை யோசிக்கலானாள்.

யாரிடமும் தன்னைத் தன் பிரச்சனைகளை வெளிப்படுத்தி உதவி கேட்பதில் அவளுக்கு எப்போதும் உடன்பாடு இல்லை. ஏனென்றால், இன்றைய காலக் கட்டத்தில் எந்தப் பெண்ணுக்கும் எவரும் எதுவும் உள்ளர்த்தம் இன்றி உதவி செய்வது இல்லை.

ஒருவரிடம் உதவி பெற்றுக் கொண்டு, அவருக்குக் கடன் பட்டவளாகப் பிணையாளியாக மாறுவதில் அவளுக்கு என்றுமே விருப்பமும் இருந்ததில்லை. போலீஸ் கேஸ் என்று அலைய அவளுக்குத் துணைக்கு வரும்படி எவரும் இல்லை. ஏதேனும், ஒரு பிரச்சினை என்று கேள்விப்பட்டால் அதனைப் பெரிதாக்கி அதில் குளிர்காயும் மக்களே இன்றைய காலக்கட்டத்தில் அதிகமாக இருக்க, அவள் சத்தம் இன்றி இந்தப் பிரச்சினையில் இருந்து எவ்வாறு வெளிவருவது? என்று சிந்தித்துக் கொண்டு இருந்தாள்.

வழக்கம்போலத் தன்னுடைய எண்ணங்களைச் சிறு சிறு குறிப்பாகத் தன்னிடமிருந்த வெற்றுத் தாள்களில் எழுதியவள் தனக்குப் புது டீமிற்கான ஃப்ளோரில் கொடுக்கப் பட்டிருந்த ட்ராவில் (draw) அதனை வைத்துவிட்டு மூடினாள். அந்த டிராவின் சாவி அவளுக்கு இன்னும் கொடுக்கப்பட்டு இருக்கவில்லை.

மதியம் தன்னுடைய பழைய டீம் மெம்பர்களோடு சேர்ந்து கலகலப்பாக உணவு உண்டு வந்தாள். மாலை இருந்த மீட்டிங்கில் காலை முதல் செய்ய ஆரம்பித்த வேலைகள் குறித்த ரிப்போர்ட் சமர்ப்பிக்க வேண்டியது இருந்தது. கூடவே அவரவர் டீம்கள் அன்றைய முதல் நாள் வேலையில் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்தும் விவாதித்தனர்.

அவள் வழக்கம் போலத் தன்னுடைய கருத்துக்களைக் கணீர் கணீர் குரலில் முன்வைக்க, அவள் கூறிய பிரச்சனைகள் மற்றும் தீர்வுகளை ராகவன் பரிசீலித்து அவற்றுள் எவற்றைச் செய்வது சரிவரும் என்று ஆலோசனைகள் கூறிக் கொண்டு இருந்தார். என்னதான் ஆலிஸிற்குக் குறிப்பிட்ட சூழ்நிலைகளின் போது எடுக்க வேண்டிய தீர்வுகள் ஏற்கனவே தெரிந்து இருந்தாலும் உயர் அதிகாரிகள் ஒப்புதல் பெறாமல் அவற்றைச் செயல்ப்படுத்த முடியாது என்பதால் அவற்றை மின்னஞ்சலில் அனுப்பியதோடு நில்லாமல் இந்த மீட்டிங்கில் விவாதிக்க அவைகளின் குறிப்புக்களையும் டைரியில் எழுதி எடுத்து வந்திருந்தாள்.

மற்றவர்களும் தத்தமக்கு தோன்றிய தீர்வுகளைக் கூறினர். குறிப்பிட்ட சிலவற்றில் முடிவு காணப்படாததால் அனைவரும் விவாதித்துத் தத்தம் கருத்தை கூறிக்கொண்டு இருந்தனர்.

ஒரு சில தீர்வுகள் நடைமுறைக்குச் சரிப்பட்டு வராது என்று தோன்றிய போதெல்லாம் அதற்கான மறு கேள்விகளை ஆலிஸ் தொடுத்துக் கொண்டு இருந்தாள்.

அப்படிபட்ட ஒரு கலந்தாய்வில் முடிவு எட்டப்படாத பிரச்சனை ஒன்றிற்காக அதுவரை அமைதியாக இருந்த பிரனீத் தன்னுடைய தீர்வை முன்வைத்தான். அது எவ்வாறு உதவும் என்று திறம்பட விளக்கி கூறினான். அவருடைய தீர்வு மிகவும் சரியாகத் தோன்றியது ஆயினும் அதனைச் செயல்படுத்திப் பார்த்த பின்னரே உறுதியாகக் கூற முடியும் என்று எண்ணியவளின் கவனம் தானாகவே அவன் மேல் படிந்தது.

பிரனீத்தின் அந்த அமைதியான சுபாவம் மறுபடியும் அவளை அவன் பால் ஈர்த்தது. அமைதியும், ஆளுமையும் கலந்த பிரனீத்தை வைத்த கண் எடுக்காமல் பார்க்க ஆரம்பித்தாள். சதைப்பற்று அதிகம் தெரியாத அவனது கன்னங்கள், சரும நிறம் வெளிர் நிறம் தான். ஒல்லி போலத் தெரிந்தாலும் மெலிவானவன் அல்ல. அவன் அலட்சியமாய் நிற்பதிலேயே ஒரு கம்பீரம் தெரிந்தது.

இவன் ஒல்லியாய் இருக்கிறதுனால வளர்த்தியாகத் தெரிகிறான் போல? என்று அவனை ஆழ்ந்து கவனித்தவளாய் ஆலிஸ் முதலில் நினைக்க, அவன் அருகாமையில் நிற்கும் மற்ற ஆண்களை விடவும் உயரமாய் இருப்பது அவளின் கண்களில் பட்டது.

தன்னையும் அவனையும் ஒப்பிட ஆரம்பித்தவள் மறுபடி அவனது அமைதியான குணத்தில் வந்தே நின்றாள்.

அவளுக்கோ அமைதியாகப் பேசவே தெரியாது.விளையாட்டோ வேலையோ மற்றவரிடம் பேசும்போது எல்லாம் மட்டும் எட்டூருக்கு கேட்கும் அளவிற்கு அவளது வாய் கிழியும். எதுவும் வேலையில் ஆழ்ந்திருந்தாலோ, தூங்கும் போதோ மட்டுமே அவள் அமைதியாக இருப்பது. வீட்டிலும் தனியாகப் பேச முடியாது என்பதால் தன்னுடைய தனிமை போக்க ஒன்று மொபைலை அலற விடுவாள் அல்லது அவளே எதையாவது பாடிக் கொண்டு இருப்பாள். ஒப்பீட்டின் முடிவில் பிரனீத்தை விடத் தான் மிகவும் வாயாடியாக இருப்பதாகவே அவளுக்குத் தோன்றியது.

“சேச்சே ஒரு நிமிடத்தில் இவனால் நான் என்னையே வாயாடி என நினைக்கும்படி ஆயிற்றே?” எனத் தன்னையே நொந்து கொண்டாள்.

“சரி இப்போ எதுக்கு அவனையும் உன்னையும் ஒப்பிட்டு பார்க்கிற? உன்னை அவனுக்குப் பெண்ணா பார்க்க வந்திருக்காங்க…புது ப்ரொஜெக்டு முத நாள் முத மீட்டிங்ல நீயும் அந்தத் தறுதலை மைண்ட் வாய்ஸீம் செஞ்சிட்டு இருக்கிற வேலையைப் பாரு…. அவள் மனசாட்சி அவளையே காரித் துப்ப… முகத்தைத் துடைத்து நிமிர்ந்தவள் எதிரில் நின்றவன்.

‘மேம் டிட் ஐ ஆன்ஸர்ட் யுவர் கொஸன் (உன் கேள்விக்குப் பதில் கிடைத்ததா மேடம்?) என்று கேட்டு வைக்க அவளோ திடீரென்று எதிரில் அவனைக் கண்டதில் திகைத்து நாலாபுறமும் தலையைத் திருப்பி ஆட்டி வைத்தாள்.

அதற்கடுத்து தொடர்ந்து அரை மணி நேரம் மற்ற டீம்களின் பிரச்சனைகளும் தீர்வுகளும் அலசி முடிக்க, அடுத்த நாளுக்கான முடிவுகளோடு அன்றைய மீட்டிங் நிறைவுற்றது.

தனது இருக்கைக்கு வந்து மீதி வேலைகளை முடித்தவள் மறுபடி குமரேஷ் பிரச்சனை மற்றும் அதற்கான நிரந்தர தீர்வு குறித்துத் தனக்குள் அலசிப் பார்த்தாள். அவனது சமீபத்திய தைரியம் இவளில் இருந்த தைரியத்தை குறைத்து விட்டிருந்தது என்பதே உண்மை. எத்தனை நாளைக்கு இரவுகளில் கதவை அடைத்துக் கொண்டு உள்ளேயே இருக்க முடியும்? என இரவு எடுத்த தீர்மானங்கள் நடைமுறைக்கு ஒத்து வராதென இப்போது மனம் முரண்டியதே காரணம்.

‘துஷ்டனைக் கண்டால் தூர விலகு’, என்று ஆலிஸ் தனக்குப் பிரச்சனை தரும் குமரேஷினிடம் இருந்து தப்பிக்கப் புது வீடு பார்த்து செல்வதே சரியான தீர்வு என்ற முடிவிற்கு தற்போது வந்து விட்டிருந்தாள்.

சற்று வாடகை அதிகம் என்றாலும் கூடப் பரவாயில்லை முன்பு போல நன்கு செக்யூரிட்டி சர்வீஸ் இருக்கும் பிளாட்டிற்கு இடம்பெயர முடிவெடுத்தாள். அங்கு இப்போது தங்கியிருக்கும் இடத்தைப் போல அல்லாமல் தனிமை உணர்வு எழும் என்றாலும் தனது பாதுகாப்பிற்குக் குறைவிருக்காது.

சாயுங்காலம் அவளது அன்றைய வேலைகள் அனைத்தும் முடிவு பெற்றிருக்க, சிஸ்டத்தை மின் இணைப்புத் துண்டித்துத் தற்காலிக தூக்கத்தில் ஆழ்த்தி பைனான்ஸ் டீமில் இருக்கும் தன் நண்பன் கருணாவை சந்திக்க அவனின் இருக்கையை நோக்கி எட்டுக்கள் போட்டாள். அவன் தன்னுடைய வேலை நேரம் போக மீதி நேரம் வாடகைக்கு வீடு பார்த்துக் கொடுக்கும் வேலையைச் செய்கிறான்.

அவனிடம் உதவி கேட்டாலும் கூட அதற்கான கமிஷன் கொடுத்து விடப் போவதால் அவனுக்குத் தனிப்பட்ட விதத்தில் எந்த வகையிலும் கடன் பட நேராது என்கிற ஆசுவாசம் அவனிடம் போய்ப் பேச செய்தது. அவனைச் சந்தித்து விபரம் சொல்ல, அதுவும் ஒரு வாரத்திற்குள்ளாக அவசரமாய் வீடு மாறி ஆக வேண்டும் என்று கேட்க அவனும் சரி என்று அவளுக்கு வீடு தேடி தருவதாக ஆமோதித்தான்.

அவளுக்கு ஏதோ பிரச்சனை என்று புரிந்தாலும் அதற்கு மேல் அவன் அவளிடம் எதுவும் தூண்டித் துருவி கேட்கவில்லை. ஒரு வார்த்தை அதிகமாய்ப் பேசினாலும் தனக்குள் சுருண்டு கொள்கின்ற அவளிடம், “உனக்கு எதுவும் பிரச்சனையா?” என்று கேட்க அவனுக்கு மனம் வரவில்லை. அங்கிருந்து அவள் திரும்புகையில் அதே ஃப்ளோரில் இருந்த மற்றொருவரோடு நின்று பேசிக்கொண்டிருக்கும் பிரனீத்தின் மீது அவள் கண்கள் படிந்தது. இவன் தான் எவ்வளவு அழகாய் இருக்கின்றான் என அவள் மனம் ஜொள்ளியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here