6. TKSN

1
1368

தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!

அத்தியாயம் 6

கடந்து விட்டிருந்தது ஒரு மாத காலம், கருணா சொல்லவும் ஓரிரு வீடுகள் பார்த்து வந்தாள். சில இடங்களில் தண்ணீர் பிரச்சனை என்றால் சில வீடுகள் அவளது அலுவலகத்திற்கு வெகு தூரத்தில் இருந்தன.

குமரேஷ் எனும் பொறுக்கி ஊர் சென்று மனைவியை விட்டு ஒரு வார காலம் கழித்து வருகிற திட்டம் என தங்கள் விபரங்களையும் அவன் மனைவி அவர்களது வழக்கமான உரையாடலில் அவள் கேளாமலே சொல்லி இருந்தாள். அவன் இல்லாத முதல் வாரத்தில் கொஞ்சம் சாதாரணமாக நடமாடியவள், வார நாட்களில் பூட்டிய வீட்டுக்குள் சிறை இருந்தாள்.

வார இறுதிகளில் அக்கம் பக்கம் வீட்டினர் கதவை திறக்கும் சப்தம் கேட்ட பின் அவளும் கதவை திறந்துக் கொள்வாள். உள்ளேயே இருக்க முடியாதென தோன்றும் நாட்களில் காலையே எழுந்து வெளியில் புறப்பட்டு சென்று விடுவாள். வார நாட்களை அலுவலகத்தில் கழிக்க முடிந்ததால் அதனை விடவும் வார இறுதிகளை கழிக்க அவளுக்கு வெகு சிரமமாயிற்று.

புதுக் குழுவுடன் அத்தனை ஒட்டுதல் இன்னும் வரவில்லை, முந்தைய டீம் மக்கள் ஊர் சுற்ற எங்கும் கிளம்பவில்லை. எனவே, தனியே வார இறுதிகளில் சில நாட்கள் ஆலயங்கள் என சுற்றுவாள், அல்லது கடற்கரையில் ஒவ்வொரு சுற்றுலாத்தலங்கள் என அருகாமையிலிருந்த எல்லா இடத்திற்கும் சென்று வெளியிலேயே உண்டு உறங்க மட்டும் விட்டிற்குள் வருவாள்.

காற்று வாங்க கூட அவளுக்கு கதவை திறக்க பயமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக வாரத்திற்கு ஒருமுறை துணி துவைத்து, மொத்தமாக காய வைத்து, மீதி ஈரத்துணிகளை அந்த சின்ன அறையில் உலர்த்தியதில் ஒரு விதமான ஈர வாடையும் அவளது அறையில் இருந்துக் கொண்டே இருந்தது. உள்பக்கமாக பெரிய ஜன்னலோ உலர்த்த இடமோ இல்லாதது ஒரு குறையாகிற்று.

‘இதுவும் கடந்து போகும்’ மனதை சமாதானப் படுத்திக் கொண்டாள்.

அலுவலகத்தில் வழக்கம் போலவே வேலைகள் நடந்துக் கொண்டு இருந்தன.புதிய ப்ரொஜெக்ட் பிரச்சனைகள் தாண்டி இலகுவாக செயல்பட ஆரம்பித்து இருந்தது. முதல் முறை க்ளையண்டிடம் பாராட்டு வாங்கியதை குழுவாக ஆர்ப்பரித்துக் கொண்டாடினர். தினசரி மீட்டிங்குகள் தேவைப் படாததால் ஓரிரு வாரங்களாக இப்போது வாராந்திர மீட்டிங்குகள் நிகழ ஆரம்பித்து உள்ளன.

அந்த மீட்டிங்குகளில் தான் ஆலீஸ் பிரனீத்தை தொடர்ந்தார் போல அரை அல்லது ஒரு மணி நேரம் பார்க்க இயலும்.அவனது டீம் வேறு இடத்தில் இருப்பதால் மற்ற நேரங்களில் அவனை அவளுக்கு பார்க்க கிட்டாது. கஃபேடேரியாவில் அவனை மற்றவர்களோடு எப்போதாவது பார்ப்பாள். அவளும் அவர்களோடு இணைந்து அமரலாம் தான், ஆனால் அமர மாட்டாள். மிகவும் பழகியவர்களோடு அல்லது தனியாக கஃபெடேரியா செல்லும் அவளால் தனக்குத் தானே போட்டிருக்கும் இரும்பு வேலி தாண்டி போக முடியவில்லை. நெருங்கி பழகப் போக தன்னால் நேசிக்கப் படுகின்றவன் தன்னை தவறானவளாக கணித்து விடுவானோ? தான் அவன் முன்னால் சிறுமையாக நினைக்கப் படுவோமோ எனும் பயம் அவளை முடக்கிப் போட்டிருந்தது.

கடந்த வாரங்களில் தனிமையான நாட்களை பிரனீத்தின் நினைவுகள் கொண்டே கடந்திருந்தாள். திருமணத்திற்காக சில ஆண்கள் அணுகிய போதெல்லாம் இப்படிப்பட்ட சிந்தனைகள் அவளுக்கு வந்தது உண்டு. அவைகளில் ஆயுட்காலம் மிகக் குறைவுதான். முன் தினம் தன்னிடம் ஆர்வமாக பேசியவன் அடுத்த நாளோ, அடுத்த வாரமோ பட்டும் படாமல் பேசி சிரிப்பே வராமல் சிரித்து அவளை தவிர்க்கவும் கனவுகள் தானாகவே கலைந்து விடும் அல்லது அவள் கலைத்து விடுவாள்.

ஆனால், பிரனீத்துடனான தன்னுடைய விருப்பம் நிரந்தரமற்றது எனத் தெரிந்தாலும் அவன் மீது இருந்த கொண்டிருந்த அந்த ஈர்ப்பு குறையவேயில்லை.

அன்றைய தினம் வாராந்திர மீட்டிங்கிற்கான தினம், பிரதி வியாழக்கிழமை நிகழும் அந்த மீட்டிங்கிற்கு தன்னுடைய டீமின் வாராந்திர அறிக்கையை மின்னஞ்சலில் அனுப்பி வைத்து விட்டு அருகாமையிலுள்ள அந்த கான்ஃபெரன்ஸ் அறைக்கு சென்றாள். எல்லோரும் முகமன் சொல்லி புன்னகைத்துக் கொண்டனர். மணிவண்ணன் இவளது ரிப்போர்ட் குறித்து விளக்கினான், தேவை ஏற்பட்ட போதெல்லாம் கேள்விகளுக்கு அவள் பதில் அளித்துக் கொண்டு இருந்தாள்.

நிகழ்ந்த தவறுகள் சிலவற்றை குறிப்பிட்டு அதற்கு விளக்கங்கள், தீர்வுகள் கேட்க பதிலளித்தாள். திடீரென பிரனீத் சில குறுக்கு கேள்விகள் கேட்க, இவளும் மணிவண்ணனுமே பதிலளிக்க திணறினர்.ஏற்கெனவே ஒருமாதமாக நடைமுறைப்படுத்திய அதே செயல் திட்டம் தான் இன்றளவிலும் செயல்படுத்தி இருக்க பிரனீத் குறிப்பிட்ட அந்த குறிப்பிட்ட கோணத்தில் அவர்கள் யோசித்து இருக்கவில்லை.

“ஊமைக் கோட்டான் இன்னிக்கு என்ன இப்படி என்னை திணற அடிக்குறாங்க?” மனதிற்குள் இருந்தவனை வைதாள். அவன் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாமல் திணறியவர்களுக்கு அவனே என்ன செய்ய வேண்டுமென்றும் கற்றுக் கொடுத்தான்.

அவசரமாக அத்தனையையும் குறித்துக் கொண்டாள்.மணிவண்ணனும் கவனமாக விவரமாக அத்தனையும் தெரிந்துக் கொண்டான். ‘போச்சு, போச்சு மணிவண்ணன் நம்மை திட்டி தீர்க்க போறாங்க’ மனதிற்குள்ளாக ஆலிஸை பயம் சூழ்ந்தது.

அடுத்தடுத்து மற்ற டீம்களின் ப்ரெசெண்டேஷன்ஸ் நடக்க முடிவில் ஒன்றிரண்டு மாற்றங்களும் முன்னெடுக்கப்பட்டன. ஆலிஸ் டீம் வேலைகளை மற்றொரு டீம் லீடர் கற்றுக் கொள்ளப் போவதாகவும், சில வாரங்கள் ‘புனிதா’ எனும் அந்த டீம் லீடர் தனது டீம் வேலைகளை முடித்து விட்டு வந்து ஆலீசிடம் அவளது டீமின் வேலைகளை கற்றுக் கொள்ள இருப்பதாகவும் ராகவன் கூறினார். அது மட்டுமல்லாது ஓரளவு ப்ரொஜெக்ட் சமநிலை அடைந்து விட்டதால் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை இரவே தான் டெல்லிக்கு திரும்புவதாகவும் தெரிவித்தார். அடுத்த நாள் புது ப்ரொஜெக்டின் அனைவருக்கும் தனது சார்பாக டின்னருக்கு அழைப்பு விடுத்தார். இன்னும் சில முடிவுகள் எடுக்கப்பட்டன.ஆலீஸிற்கு தான் மனம் எதிலும் இலயிக்கவில்லை.

தன் வேலையை தான் சரியாக செய்யாததாலேயே இன்னொருவருக்கு வேலை கற்றுக் கொடுக்கச் சொல்கிறார்கள் எனும் தீர்மானத்திற்கு வந்தாள். பிறர் முன்பாக அவமதிக்கப்பட்டு விட்டதாக உணர்ந்தாள். தான் ஒரு உதவாக்கரை என்பதான எதிர்மறை எண்ணங்கள் சூழ முற்றிலும் தொய்வுற்றவளாக தனது இருப்பிடம் திரும்பினாள்.

கான்ஃபெரன்ஸ் அறையிலிருந்து வெளியில் வரவும் எதிரில் நக்கலான சிரிப்போடு அமித் நின்றிருந்தான்.

“என்ன ஒரு மாசத்தில உன்னை புது டீமிலிருந்து தூக்குறாங்க போலிருக்கு, புனிதா நாளையிலிருந்து சாயங்காலம் 5-6 வருவாள், ஒழுங்கா வேலை கத்துக் கொடு” என்றுச் சொல்லிவிட்டு நகர்ந்தான். ‘ஆம் புனிதா இவன் கீழ் பணிபுரியும் டீம் லீட் அல்லவா?’ சிந்தனையின் பாரத்தில் மெதுவாக நகர்ந்தன கால்கள்.

மணிவண்ணன் வந்தான், அவளிடம் பேசினான் அவளை ஒன்றும் சொன்னானில்லை. அவளுக்கு இன்னும் குற்ற உணர்வாகியது.எதற்காகவோ பிரனீத்தை புகழ்ந்தான் அவளுக்கு முளையில் எதுவும் செல்லவில்லை. ‘இந்த ப்ரொஜெக்ட் வழக்கமானது போலல்ல ஏராளமான மாற்றங்கள் கொண்டது என ஆரம்பத்திலேயே அறிந்திருந்தும் எங்கே கோட்டை விட்டோம்? நமக்கு இவ்வளவு கவனக் குறைவா?’ மனம் நொந்தது.

வேலையும் முடிந்தது, வேலை நேரமும் முடிந்தது. ஆனால், அவள் உடனே வீடு செல்லவில்லை.மறுபடி ஒரு மாதம் முன்னால் பகிரப்பட்ட அத்தனை விபரங்களையும் வாசித்தாள். செய்த தவறுகளை பட்டியலிட்டாள். சரிசெய்யப் பட வேண்டிய வேலைகளை எப்படி செய்வதென திட்டமிட்டாள். தனது குழுவினருக்கு வேலைகளை எல்லாம் பிரித்து தனித்தனி மின்னஞ்சல்கள் அனுப்பி வைத்தாள். எந்த சூழ்நிலையிலும் ஒரு நொடியும் இனியும் தாமதம் ஆகக்கூடாது என்பதே அவளது சிந்தனையில் ஓடியது. பின்னங்கழுத்தின் குறுகுறுப்புகள் எல்லாம் அவளை இப்போது யோசிக்க வைப்பதில்லை. தினம் தினம் அது யாரென தேடி ஓய்ந்துப் போயிருந்தாள். ‘நோட்டமா விடுற? பார்த்தா பார்த்துட்டு போ’ எனும் நிலைக்கு வந்திருந்தாள்.

இரவு அலுவலக கான்டீனில் உணவருந்தி வீட்டிற்கு ரிக்ஷாவில் போய் இறங்க மணி பத்தை தாண்டி இருந்தது. சற்றுக் குறுகலான பாதை எனவே வீட்டின் இரண்டு நிமிட நடை தூரம் முன்பாக வரை மட்டுமெ ரிக்ஷா வரும். எனவே, வழக்கம் போல இறங்கியவள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

அந்த குமரேஷ் அந்நேரம் எங்கிருந்து வந்தானோ? அவளின் எதிரில் வந்து அவள் அருகில் நடந்து அவளை பச்சை பச்சையாக வருணிக்க ஆரம்பித்தான். மனைவி ஊருக்கு சென்றிருக்க இவனுக்கு இறக்கைகள் முளைத்திருந்தன போலும் “இரவு எங்கே சென்று வருகிறாய்? எவனோடு சுற்றப் போனாய்? என்னைப் போல ஆட்களோடு சுற்ற வர மாட்டாயா? பெரிய பணக்காரன் கிடைத்தால் மட்டும் சுற்றப் போவாயா?” என பின் தொடர்ந்தான். அவள் கவனிக்காதவள் போலும் அந்த குடியிருப்பின் வாயிலை திறக்கவும் வீட்டின் உரிமையாளர் எதிரில் வந்தார்.

“என்னம்மா இன்னிக்கு லேட்டா?” கேட்டவருக்கு,

“ஆமா சார்” பதிலளித்து முன்னேச் சென்றாள். வீட்டு உரிமையாளரைக் கண்டதும் குமரேஷ் அங்கிருந்து நகர்ந்து விட்டிருந்தான். அவன் பின்தொடரவில்லை என்றதை அறிந்துக் கொண்டதும் அவள் பேயிடமிருந்து தப்பித்ததைப் போல அவசரமாக படியேறி தனது அறையினுள் அடைத்துக் கொண்டாள்.

1 COMMENT

  1. Alice ithu illana innum perusa unakku etho kedaikkapoguthunu artham😌 no feelings… un hardworking ku you will reach heights😇

    Eagerly waiting for next epi sis😍😍😍

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here